வியாழன், 11 ஆகஸ்ட், 2011

கம்பனில் தோய்ந்த நீதிபதி மு.மு.இஸ்மாயில்!


முகமதிய மதத்தைச் சேர்ந்த பலர் தமிழ் அன்பர்களாய் வாழ்ந்து, தமிழைத் தங்கள் புலமைத் திறத்தால் வளப்படுத்தியிருக்கிறார்கள். அந்த அன்பர்களின் வரிசையில், அண்மைக்கால உதாரணம் 84 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்தவரும், வாழ்நாள் முழுவதும் கம்பராமாயணத்தில் தோய்ந்து வாழ்ந்தவருமான பெரும்புலமை படைத்த அறிஞர் நீதிபதி மு.மு.இஸ்மாயில். 1921-ஆம் ஆண்டு பிப்ரவரி 8-ஆம் தேதி பிறந்தார்.

அவர் தம்மைத் தாமே உருவாக்கிக்கொண்ட பெருமைக்குரியவர். ஒன்பது வயதில் தாயையும், பதிமூன்று வயதில் தந்தையையும் இழந்த அவரை வளர்த்தவர்கள் உறவினர்கள்தான். (""நான் கடவுளால் வளர்க்கப்பட்ட பிள்ளை தெரியுமோ?'' என்று சொல்லி இஸ்மாயில் நகைப்பதுண்டு) நிறைந்த கடவுள் பக்தியுடன் வாழ்ந்த பெருமகன். "அல்லாவுக்கு ஆயிரம் நாமங்கள்' என்ற குறிப்பிடத்தக்க நூலை எழுதியவரும்கூட.

அவரது இளமைக்காலமும் பள்ளி வாழ்வும் நாகூரில்தான் கழிந்தது. இளம் வயதிலேயே மிகுந்த புத்திசாலியாக இருந்தார். அதனால் பள்ளி அவரை மூன்றாம் வகுப்பிலிருந்து நேரடியாக ஐந்தாம் வகுப்புக்கு (இரட்டைத் தேர்ச்சி) அனுப்பியது.

பாடகர் ஏ.வி.ரமணனின் தந்தையான ஆராவமுது ஐயங்கார் என்ற பெரும் தமிழறிஞரிடம் எஸ்.எஸ்.எல்.சி.யில் பாடம் கேட்ட பெருமையும் இஸ்மாயிலுக்கு உண்டு. மிகப்பெரும் புலவரிடம், தமிழறிவுக்கான அஸ்திவாரம் பலமாகப் போடப்பட்டதால், அவருக்கு அது இறுதிவரை கைகொடுத்தது. சட்டப் படிப்புப் படித்த அவர், பழந்தமிழ் இலக்கியங்களைத் தம் சொந்த ஆர்வத்தால் நிறையப் படித்துத் தேர்ந்தார்.

பேராசிரியர் கே.சுவாமிநாதன் என்ற புகழ்பெற்ற காந்தியவாதியைத் தெரியாதவர்கள் இருக்க இயலாது. தனிமனித ஒழுக்கத்தின் சிகரமாக தொண்ணூறு வயதுக்குமேல் நிறைவாழ்வு வாழ்ந்தவர். மகாத்மா காந்தி நூல்களைத் தொகுத்தவர். கல்லூரி நாள்களில் இஸ்மாயில் தனது அறிவுக் கூர்மை காரணமாக பேராசிரியர் சுவாமிநாதனின் பெறாத பிள்ளைபோல் ஆகிவிட்டார்.

காந்தியச் சிந்தனைகள் பலவற்றை அவர் உள்வாங்கிக்கொண்டது பேராசிரியரிடமிருந்துதான். இஸ்மாயிலின் உறவினர்கள் எல்லாம் அசைவம்தான். ஆனால், பேராசிரியரின் காந்தியத் தாக்கம் இஸ்மாயிலை முழு சைவமாக மாற்றிவிட்டது. (இளம் வயதிலிருந்தே காந்தியின் "ஹரிஜன்' இதழ்களை வால்யூம் வால்யூமாக பைண்ட் செய்து வைத்துக்கொண்டு தம் வாழ்நாளின் இறுதிவரை பாதுகாத்து வந்தார் இஸ்மாயில்.)

உணவில் சைவத்தைப் பின்பற்றிய அவருக்கு, மிகவும் பிடித்தது வைணவக் காப்பியமான கம்பராமாயணம். கம்பர் அவரது முழுமனதையும் கொள்ளை கொண்டுவிட்டார் என்றுதான் கூறவேண்டும்.

இஸ்மாயிலின் கம்பராமாயணச் சொற்பொழிவைக் கேட்ட தமிழ் அன்பர்கள், ஆய்வுச்சுவை தோய்ந்த அந்த இனிய தமிழில் சொக்கிக் கிறங்கினார்கள். இஸ்மாயில், பல இடங்களில் மீண்டும் மீண்டும் கம்பன் குறித்துப்பேச அழைக்கப்பட்டார். பலர் அவர் பேசிய அதே கம்பன் கருத்தை அதே சொற்களில் மறுபடி மறுபடி அவரிடமிருந்தே "நேயர் விருப்பம்'போல் கேட்க ஆசைப்பட்டார்கள்.

சொற்பொழிவாளராக இருந்த இஸ்மாயில், புகழ்பெற்ற பல பத்திரிகைகளின் தீபாவளி மலர் உள்ளிட்ட சிறப்பிதழ்களில் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். அவர் எழுதிய முதல் புத்தகம், "மௌலானா அபுல்கலாம் ஆசாத்' பற்றியது. அதற்கு முன்னுரை தந்து பெருமைப்படுத்தியவர் மூதறிஞர் ராஜாஜி.

கம்பன் கண்ட ராமன், கம்பன் கண்ட சமரசம், செவிநுகர் கனிகள், வள்ளலின் வள்ளல், மும்மடங்கு பொலிந்தன, பழைய மன்றாடி - என அடுத்தடுத்து இவரது பழந்தமிழ் ஆய்வு நூல்கள் நிறைய வெளிவரலாயின.

வாலிவதை பற்றிய இவரது "மூன்று வினாக்கள்' என்ற நூல், உலகப் புகழ்பெற்ற ஓர் ஆன்மிகப் பெரியவரைப் பெரிதும் கவர்ந்தது. அந்த நூலுக்காகவே இவருக்குப் பொன்னாடை அணியச் செய்து, பாராட்டி மகிழ்ந்த அந்தத் துறவி நூறாண்டு வாழ்ந்த காஞ்சி மகாபெரியவர் பரமாச்சாரியார்.

இஸ்மாயிலுக்கும் பரமாச்சாரியார் மேல் மிகுந்த மரியாதை உண்டு. "ஒருவர் எந்த மதத்தில் பிறந்தாரோ, அந்த மதத்தின் ஆன்மிக நெறிகளை அனுசரித்து வாழவேண்டும்' என்ற பரமாச்சாரியாரின் கருத்தை இஸ்மாயில் பெரிதும் போற்றியவர்.

இயல் செல்வம், சேவா ரத்தினம், இராம ரத்தினம் முதலிய பல பட்டங்கள் இவரது இயல்புக்குப் பொருத்தமாக வழங்கப்பட்டன. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியாருக்கு இவர்மேல் அன்பும் மதிப்பும் உண்டு. இவருக்குக் கடிதங்கள் எழுதும்போது, "உலகம் போற்றும் உத்தம' என்று தொடங்கித்தான் கடிதம் எழுதுவாராம் அண்ணங்கராச்சாரியார்.

கம்பன் கழக நிறுவனர்களுள் ஒருவர் இஸ்மாயில். "தினமணி' முன்னாள் ஆசிரியர் ஏ.என்.சிவராமன், கம்பன் அடிப்பொடி சா.கணேசன், பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன், சி.எம்.அழகர்சாமி, பழ.பழனியப்பன் ஆகியோர் மற்ற நிறுவனர்கள். இப்போது கம்பன் கழகத்தின் தலைவராக இயங்குபவர் ஆர்.எம். வீரப்பன்.

கம்பராமாயண மூல நூலை, மெல்லிய உறுதியான தாளில் முழுமையான கையடக்க ஆராய்ச்சிப் பதிப்பாகப் பதிப்பித்த பெருமை இஸ்மாயிலுக்கு உண்டு. தெ.பொ.மீனாட்சிசுந்தரம், அ.ச.ஞானசம்பந்தன், தெ.ஞானசுந்தரம் முதலிய தமிழ் அறிஞர்கள் அந்தப் பதிப்புக் குழுவில் இடம்பெற்றிருந்தார்கள். இஸ்மாயிலின் மிகப்பெரிய சாதனை என்று இந்தப் பதிப்புப் பணியைச் சொல்லலாம்.

1976-இல் நடைபெற்ற கம்பன் விழாவில் அதன் முதல் பதிப்பு வெளியாயிற்று. ஆயிரத்துக்கும் மேலான கம்பன் அன்பர்கள் அந்தப் பதிப்பை விலைகொடுத்து வாங்க வரிசையில் நெடுநேரம் நின்றார்கள். வாங்குவதில் பெரும் போட்டி இருந்ததால், காவல்துறையினர் தலையிட்டு வரிசையை ஒழுங்கு செய்ய வேண்டியிருந்தது.

மூதறிஞர் ராஜாஜி, தீரர் சத்தியமூர்த்தி, பெருந்தலைவர் காமராஜ் ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் இஸ்மாயில். சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியாக விளங்கிய பெருமைக்குரியவர் இஸ்மாயில். 1980-இல், முந்தைய ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரிக்குப் பிறகு, தமிழகத்தின் தாற்காலிக ஆளுநராகவும் சிறிதுகாலம் பணியாற்றியிருக்கிறார்.

தமிழின் பக்தி இலக்கியம், மதங்கடந்து தமிழர்கள் அனைவரையும் ஒன்றாக இணைக்கும் ஆற்றல் பெற்றது என்பதற்கு இஸ்மாயிலின் கம்பராமாயணப் புலமை ஓர் எடுத்துக்காட்டு.

÷2005-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி இஸ்மாயில் காலமானார். அவர் நினைவைப் போற்றும் வகையில், பழ.பழனியப்பன் எழுதிய "இலக்கியமான நீதிபதி' என்ற தலைப்பில் 19.1.2005 அன்று "தினமணி' நாளிதழில் கட்டுரை வெளியானது குறிப்பிடத்தக்கது.


புதன், 6 ஜூலை, 2011

நபிகளாரின் இறுதிப் பேருரை

1417 ஆண்டுகளுக்கு முன் ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு பெருமானார்(ஸல்) அவர்கள் அரபாத் பெருவெளியில் உரை நிகழ்த்தினார்கள்: அதில் பத்து விஷயங்களை தமது அன்புக் கட்டளைகளாக உலகின் முன் வைத்தார்கள்.

1.  மக்களே! ) நன்றாகக் கவனத்துடன் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில், அடுத்த வருடம் இதே நாளில் இதே இடத்தில் உங்கள் மத்தியில் நான் இருப்பேனாவென்பது எனக்குத் தெரியாது. இந்த நாளும், இந்த மாதமும், இந்த நகரமும் பரிசுத்தமானவை. அதுபோலவே உங்களது உயிரும், உடைமையும்,கண்ணியமும் பரிசுத்தமானவையாகும். (இறுதிநாள்வரை அவை பரிசுத்தமாக இருக்க வேண்டும். யாரும் அவற்றில் தலையிடவோ, அபகரிக்கவோ கூடாது.) இறைவனின் சமூகத்திலே இவற்றிற்கெல்லாம் நீங்கள் கணக்களிக்க வேண்டியதிருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

2. ( மக்களே! ) ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவரது குடும்பத்தினருக்கல்ல, அவருக்கே வழங்கப்படும்.  தந்தை தன் பிள்ளைக்கோ,பிள்ளை தன் தந்தைக்கோ அநியாயம் செய்யவேண்டாம். தந்தையின் குற்றத்திற்காக பிள்ளையையோ, பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையையோ தண்டிக்கப்படமாட்டாது.

3. ( மக்களே! ) அஞ்ஞான காலத்தில் (இஸ்லாத்திற்கு முன்பு ஏற்பட்ட) கொலைகளுக்கும், கொடுஞ்செயல்களுக்கும், பழிவாங்கும் உரிமை இன்று முதல் ரத்து செய்யப்பட்டுவிட்டது. முதலாவது எனது குடும்பத்தைச்சார்ந்த ரபீஆ இப்னுல் ஹாரிதின் கொலைக்கு பழிவாங்குவதை நான் மனப்பூர்வமாக நிறுத்திவிட்டேன்.(அறியாமைக்காலத்தில் நிலவிய பழிக்குப்பழியும் உயிர்போக்கும் மடமையும் இனி கூடாது.)

4. ( மக்களே! ) வட்டி வாங்குதல் இனி உங்களுக்குத் தடுக்கப்படுகிறது. அஞ்ஞான காலத்தில் ஏற்பட்ட வட்டித் தொகையனைத்தும் இன்று முதல் ரத்து செய்யப்படுகின்றன. (கடன்பட்டவர்கள் முதலை மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டால் போதுமானது.) முதலாவது எனது பெரிய தந்தையார் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் அவர்களுக்கு வரவேண்டிய வட்டித் தொகையனைத்தும் தள்ளுபடி செய்துவிட்டேன்.

5. (மக்களே!) பெண்கள் குறித்து அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமை உள்ளது போல், உங்கள் மீதும் உங்கள் மனைவியருக்கு உரிமையுண்டு). அவர்கள் உங்கள் கைகளிலே ஒப்படைக்கப்பட்ட (அமானிதம்) அடைக்கலப் பொருள்களாவர். அல்லாஹ்வின் பெயரால் அவர்களை உங்கள் மனைவியராகப் பொறுப்பேற்றிருக்கிறீர்கள்.  அவர்களின் கடமை, நீங்கள் விரும்பாதவர்களை உங்கள் இல்லத்திற்குள் அனுமதிக்கலாகாது. மீறினால் படுக்கையை விட்டு சிறிது காலம் விலக்கிவைக்கவோ,காயம் ஏற்படாதவாறு அடிக்கவோ செய்யுங்கள். (அதுபோல) உங்களது கடமை நீங்கள் அவர்களுக்கு வேண்டிய உணவு,உடைகளை வழங்கி (அன்புடனும் கருணையுடனும் நடந்து கொள்ளுங்கள். இறைவனுக்குப் பயந்து அவர்களது) நன்மைகளைப் பேணி வாருங்கள்.

6. (மக்களே!) எனது வார்த்தைகளை கவனத்துடன் கேளுங்கள், கேட்டு நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். எல்லா முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் சகோதரரே என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரே சகோதரத்துவத்தைச் சேர்ந்தவர்கள் நீங்கள்!  ஒருவருடைய பொருளை அவர் மனப்பூர்வமாகக் கொடுத்தாலன்றி, மற்றவர் எடுப்பது (ஹராம்) தடுக்கப்படுகிறது. அநியாயம் செய்வதிலிருந்து கவனத்துடன் விலகிக் கொள்ளுங்கள். உங்களிடம் இரு பெரும் பொக்கிஷங்களை விட்டுச்செல்கிறேன். அவைகளை பின்பற்றும் வரையில் வழி தவறமாட்டீர்கள். முதலாவது, எனது திருவேதமான திருக்குர்ஆன்! இரண்டாவது, இறைவனது தூதரான எனது வாழ்கை நெறிகள் (ஸுன்னத்)!

7. (மக்களே!) எனக்குப்பிறகு எந்த ஒரு இறைதூதரும் (நபியும்) இல்லை. உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் வரப்போவதில்லை. தெரிந்து கொள்ளுங்கள்! உங்களைப் படைத்துக் காக்கும் உங்கள் இறைவனையே வணங்குங்கள். உங்களுக்குக் கடமையாக்கப்பட்ட ஐவேளைத் தொழுகைகளை சரிவர நிறைவேற்றி வாருங்கள். ரமளான் (என்னும் புனித) மாதத்தில் நோன்பு நோற்று வாருங்கள். உங்கள் செல்வத்துக்குரிய ஸகாத்தை (கணக்கிட்டு) உங்ளைப் பரிசுத்தப் படுத்துவதற்காக வழங்கி வாருங்கள். உங்கள் இறைவனின் இல்லத்திற்குச் சென்று ஹஜ்ஜுக் கடமையையை நிறைவேற்றி வாருங்கள். உங்களை ஆளும் தலைவர்களுக்குக் கட்டுப்படுங்கள். இவற்றால் நீங்கள் உங்களுக்காகச் சித்தப்படுத்தப்பட்டுள்ள சுவனத்திற்குச் செல்வீர்கள்.

8. (மக்களே!) உங்கள் இறைவனை மிக விரைவில் நீங்கள் சந்திப்பீர்கள். அவன் உங்கள் செயல்கள் அனைத்தையும் பற்றி விசாரணை செய்வான். எனக்குப்பிறகு நீங்கள் உங்ளுக்கிடையே கொலைக் குற்றம் புரிந்து வழிகேடர்களாக மாறிவிடவேண்டாம். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக சைத்தான் உங்களின் இந்த பூமியில் அவனை வணங்குவதைக் குறித்து (ஏமாற்றமடைந்து) முற்றிலும் நிராசையடைந்து விட்டான். ஆயினும் நீங்கள் மிக இலேசாகக் கருதும் செயல்களில் அல்லாஹ்வுக்கு மாறு செய்யவைத்து சைத்தானுக்கு (உடன்பட்டு) தலைவணங்குவீர்கள். அதன் மூலம் அவன் மகிழ்சியடைவான். ( எந்தவகையிலும் சைத்தானியச் செயல்களுக்கு இசைந்துவிடாதீர்கள்)

9. (மக்களே!) அறிந்து கொள்ளுங்கள!. உங்கள் இறைவன் ஒருவனே! உங்கள் தந்தையும் ஒருவரே! இறையச்சம் கொண்டோரைத்தவிர, 'அரபிகள் அஜமி (அரபியல்லாதார்)களை விட உயர்ந்தோருமல்ல. அதுபோல் அஜமிகள் அரபிகளைவிட உயர்ந்தோருமல்ல. வெள்ளை நிறத்தவர் கறுப்பு நிறத்தவரை விடவோ, கறுப்பு நிறத்தவர் வெள்ளை நிறத்தை விடவோ சிறந்தோருமல்ல. அனைவரும் ஆதமுடைய மக்களே! அந்த ஆதம் மண்ணால் படைக்கப்பட்டவரே. (ஜாதித்திமிர், நிறத்திமிர்,குலத்திமிர் அனைத்தையும் இதோ எனது காலின் போட்டு மிதிக்கிறேன்.)

சொற்பொழிவை முடித்த வள்ளல் பெருமானார்(ஸல்) வெள்ளம்போல் திரண்டிருந்த கூட்டத்தினரை நோக்கிக் கேட்டனர்.

10. ( மக்களே! ) இறைவனது கட்டளைகளை நான் உங்களுக்கு அறிவித்து விட்டேனா? இறைவன் எனக்களித்த தூதை நிறை வேற்றிவிட்டேனா? என என்னைப்பற்றி உங்களிடம் விசாரிக்கும் போது), இறுதித் தீர்ப்பு நாளில் என்ன பதில் கூறுவீர்கள்? 'நிச்சயமாக (இறைவனது கட்டளைகளை) எங்களுக்கு) அறிவித்துவிட்டீர்கள்! இறைவன் தங்களுக்கு வழங்கிய தூதுவத்தை (நபித்துவத்தை) முழுமையாக நிறைவேற்றிவிட்டீர்கள்! எங்கள் வாழ்வுக்குத் தேவையான அனைத்து அறிவுரைகளையும் வழங்கிவிட்டீர்கள். என்றும் சாட்சியம் கூறுவோம்.!' அந்த மாபெரும் மனிதக்கடலிலிருந்து ஒருமுகமாக வான்முட்ட எழுந்தது இந்தப் பேரொலி. இதைக்கேட்ட இறுதித்தூதர் (ஸல்) அவர்கள் வானத்தை நோக்கி தங்களது திருக்கரங்களை உயர்த்தி,' அல்லாஹும்மஷ்ஹது! அல்லாஹும்மஷ்ஹது!! அல்லாஹும்மஷ்ஹது!!!  இறைவா! நீயே இதற்கு சாட்சி! இறைவா! நீயே இதற்கு சாட்சி! இறைவா! நீயே இதற்கு சாட்சி! என்று மும்முறை முழங்கினார்கள்.மேலும் இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கும் என்னுடைய இந்தச் செய்திகளைத் தெரிவித்துவிடுங்கள். ஏனெனில் நேரில் கேட்போரைவிட கேள்விப்படுவோரில் சிலர் நன்கு விளக்கமுடையோராக இருப்பர்.

ஆதார நூற்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூது, திர்மிதி,முஸ்னது அஹ்மது, இப்னு ஜரீர்,இப்னுஹிஷhம்,ரஹமத்துன் லில் ஆலமீன்,முஹம்மது ரஸூலுல்லாஹ்

ஏழிசை மன்னர், இன்னிசை வேந்தர், தமிழிசை நாயகர் எம்.கே.டி.

ழிசை மன்னர், இன்னிசை வேந்தர், தமிழிசை நாயகர், வெண்கலக் குரலோன் எம் கே தியாகராஜபாகவதர். இசைத்துறையிலும், நாடகத் துறையிலும் திரைத்துறையிலும் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்தவர். மாயவரத்தில் ஒரு பொற்கொல்லரின் குடும்பத்தில் பிறந்த அவர் இளம் வயதிலேயே திருச்சிராப்பள்ளியில் தமது திறமையை வெளிப்படுத்தினார். படிப்பைவிட, பொற்கொல்லர் தொழிலைவிட அவருக்கு பாட்டில்தான் ஆர்வம் இருந்தது. தந்தையின் வற்புறுத்தலுக்கு இணங்காத அவர், வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார். அவரைத் தேடி வந்த தந்தை, சிறுவன் தியாகராஜன் கடப்பாவில் பெரிய ரசிகர் கூட்டத்திற்கு நடுவில் பாடிக் கொண்டிருப்பதை பார்த்தார். திருச்சிக்கு அழைத்து வந்தார்.

அமெச்சூர் நாடகக் கம்பெனி நடத்தி வந்த எஃப் ஜி நடேச ஐயர் பத்து வயது தியாகராஜனின் பாட்டினால் ஈர்க்கப்பட்டு ஹரிசந்திரா நாடகத்தில் அவருக்கு ஒரு வேடம் கொடுத்தார். நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே கர்நாடக இசையிலும் பயிற்சி பெற்றார். இளம் வயதிலேயே தியாகராஜ பாகவதர் எனும் பெயரையும் பெற்றார். 1926-ல் பவளக்கொடி மூலம் தலை சிறந்த நாடக நடிகரானார். நடிகர்களுள் அரசிளங்குமரன் என்றழைக்கப்பட்டார். தென்னிந்தியாவில் மட்டுமின்றி, பர்மா, மலேயா, இலங்கையிலும் இவரது புகழ் பரவியது.

பவளக்கொடி நாடகத்தை திரைப்படமாக்கியபோது பாகவதரும், எஸ் டி சுப்புலக்ஷ்மியும் நடித்தார்கள். இது 1934-ல் வெளிவந்தது. இந்த படம் ஒரு மாபெரும் வெற்றி. அதன் பிறகு பாகவதர் நடித்த அனைத்துமே வெற்றிப் படங்கள்தான். சிந்தாமணியும், அம்பிகாபதியும் ஒன்றுக்கொன்று போட்டிபோட்டன. சிந்தாமணி ஓராண்டுக்கு மேல் ஓடியது., வெளிநாடுகளிலும் ஓடியது. இதை முறியடித்தது, 1944-ல் வெளிவந்த பாகவதரின் ஹரிதாஸ்தான். இது சென்னை பிராட்வே தியேட்டரில் மட்டும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஓடியது.

நாத்திகத்தை பரப்பும் எந்த படத்திலும் நடிக்க அவர் மறுத்துவிட்டார். தமிழ் இசைக்காகவே தம்மை அர்ப்பணித்துக் கொண்டார். ஆதலால் தமிழிசைச் சங்கம் மட்டுமே அவருக்கு மேடை வாய்ப்பு கொடுத்தது. திருவையாறு தியாகராஜ ஆராதனையில்கூட அவர் பங்கெடுத்துக் கொள்ள இயலவில்லை.

1940-களில் அவர்தான் கொடிகட்டிப் பறந்த தமிழ் நடிகர். ஆனால், அப்போது விதி விளையாடியது. லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கில் அவரும் அன்றைய நகைச்சுவை மன்னரான என் எஸ் கிருஷ்ணனும் சிறை வைக்கப்பட்டார்கள். பின்னர் பிரிவி கவுன்சில் வரை சென்று மேல் முறையீட்டில் வெற்றி பெற்றார்கள். 1947-ல் சிறைச்சாலையிலிருந்து வெளியே வந்த பிறகும் பாகவதருக்கு திரைப்படத்துறை முந்தைய ஆதரவை தர மறுத்தது. தாமே சொந்த படங்கள் எடுக்கத் துவங்கினார். மற்றவர்களது ஒருசில படங்களில் தலை காட்டினார். அவற்றில் எதுவும் வெற்றி பெறவில்லை. ஒருவேளை தமிழ் திரைப்பட ரசிகர்கள் அவரைவிட அதிகமாக மற்ற திரைப்படங்களை ரசிக்கத் துவங்கிவிட்டார்களோ என்னமோ!

காரணம் என்னவாக இருந்தாலும் மன்னர்போல வாழ்ந்த தியாகராஜ பாகவதர் மனமுடைந்து, செல்வங்களை எல்லாம் இழந்து, ஆன்மீகப் பாதைக்கு திரும்பினார். யாத்திரை செல்லும் கோயில்களில் மட்டுமே பாடலானார். 1959 நவம்பர் முதல் தேதி அவர் மறைந்தார்.

இருப்பினும் உலகெங்கிலும் இன்றும் எம் கே தியாகராஜபாகவதருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கத்தான் செய்கிறது.

ஒருநாள் ஒருபொழுதாகிலும், சத்துவகுணபோதன், உனைக்கண்டு மயங்காத, தீன கருணாகரணே, பூமியில் மானிட, மனமே நீ!, தியானமே, சொப்பன வாழ்வில் மகிழ்ந்து, வள்ளலைப் பாடும் வாயால், ஞானக்கண் ஒன்று, வதனமே சந்திர பிம்பமோ, அம்மா மனம் கணிந்து, ராதே உனக்கு போன்ற அவரது பாடல்களின் ஒலிப்பேழைகள் இன்னமும் விற்கத்தான் செய்கின்றன. பல நெஞ்சங்களில் இன்றும் வாழ்கிறார் மாமேதை எம் கே டி.

நன்றி:

திரு. ஹெச். ராமகிருஷ்ணன்

சென்னை ஆன்லைன்



செவ்வாய், 12 ஏப்ரல், 2011

நவீன இலக்கியச் சிற்பி தி.ஜானகிராமன்

வீன இலக்கிய எழுத்தாளர்களுள் மிக அதிகமாகப் பேசப்பட்டவர் தி.ஜானகிராமன். அதிலும் "அம்மா வந்தாள்' எனும் நாவல் எழுதியதற்காக அவர், அவரது ஜாதியிலிருந்தே நீக்கப்பட்டார். ஏனெனில் தி.ஜா.வின் படைப்புகளில் வரும் பெண்கள் பெரும்பாலும் மரபு மீறியவர்களாகவே இருந்தனர். ஆனால், அவர்களின் பாத்திரப் படைப்பை நாம் சரியாக உள்வாங்கிக் கொண்டால் அப்பெண்கள் நம் அனுதாபத்துக்கு உரியவர்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள தேவக்குடி என்னும் சிற்றூரில் 1921-ஆம் ஆண்டு ஜூன் 18-ஆம் தேதி பிறந்தார். அவருடைய தந்தை மிகச்சிறந்த சொற்பொழிவாளரான தியாகராஜ சாஸ்திரிகள் என்பவர். அவர் குடும்பம், மரபு காப்பதில் ஆர்வமுள்ள பழமைப்பிடிப்புள்ள பொருளாதார வசதிகொண்ட குடும்பம்.

தி.ஜா. பிறந்த ஆறாவது மாதத்திலேயே அவருடைய குடும்பம் கும்பகோணத்துக்குக் குடிபெயர்ந்தது. இரண்டாண்டுகள் மட்டும் அங்கிருந்துவிட்டு பின்னர் தி.ஜா.வின் வாழ்வு தஞ்சைக்கு மாற்றலானது. தஞ்சாவூர் புனிதபீட்டர் தொடக்கப் பள்ளியிலும், சென்ட்ரல் பிரைமரி பள்ளியிலும் தொடக்கக்கல்வி கற்ற அவர், உயர்நிலைக் கல்வியை கல்யாணசுந்தரம் உயர்நிலைப் பள்ளியில் முடித்தார்.

பின்னர், கும்பகோணம் அரசினர் கல்லூரியில் இன்டர் மீடியட்டும், பி.ஏ.வும் படித்த அவர், எல்.டி. பட்டமும் பெற்றார். கல்லூரியில் படிக்கும்போதே தி.ஜா.வுக்கு, கு.ப.ராஜகோபாலன் கரிச்சான் குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம் ஆகியோருடன் தொடர்பு ஏற்பட்டது.

1943-44-இல் கும்பகோணம் நகர உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் ஓராண்டு சென்னை எழும்பூர் உயர்நிலைப் பள்ளியில் பணிபுரிந்தார். அதன்பிறகு, 1945 முதல் 1954 வரை தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த குத்தாலம் மற்றும் அய்யம்பேட்டை பள்ளிகளில் பணிபுரிந்தார்.

பின்னர், 1954 முதல் 14 ஆண்டுகள் சென்னை வானொலி நிலையத்தில் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகப் பணியாற்றிய தி.ஜா., தில்லி வானொலி நிலையத்தில் 1968 முதல் 1974 வரை உதவித் தலைமைக் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராக இருந்தார். பிறகு பதவி உயர்வு பெற்று, 1974 முதல் 1981 வரை தலைமைக் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

கல்லூரியில் படித்த காலத்திலேயே அவருக்குச் சுதந்திரப் போராட்ட உணர்வு மேலோங்கி இருந்தது. கும்பகோணத்தில் பெசண்ட் தெருவில் 1936-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் தேதி நடைபெற்ற நேரு பேசிய கூட்டத்தில் கலந்துகொள்ள கல்லூரியில் இசைவுபெறாத விடுப்பு எடுத்தமைக்கு தி.ஜா. எட்டணா அபராதம் கட்டினார். அந்த அபராதத்தை எதிர்த்து கல்லூரியில் வேலை நிறுத்தமும் நடந்தது. இவருடைய செம்பருத்தி, மோகமுள் ஆகிய நாவல்களில் சுதந்திர தாகம், அந்நியத்துணி எதிர்ப்பு, கள்ளுக்கடை மறியல் போன்றவற்றைக் காணமுடியும்.

தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகிய மும்மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார் தி.ஜா. கும்பகோணம் ஆங்கிலப் பேராசிரியர் சீதாராமையர் மூலம் ஆங்கில இலக்கியங்களை அறிந்தவர், கல்லூரிப் படிப்பை முடித்து, பணிக்குச் செல்லாமல் இருந்த இரண்டு ஆண்டுகளில் ஐரோப்பிய இலக்கியங்களைக் கற்றார்.

தந்தையோடு புராண இசைச் சொற்பொழிவுக்குச் சென்றதோடு அவருக்குப் பின்பாட்டுப் பாடியதால் தி.ஜா., இளம் பருவத்திலேயே இசையறிவு வாய்க்கப் பெற்றிருந்தார். உமையாள்புரம் சாமிநாதையர், மிருதங்கம் சுப்பையர், பத்தமடை சுந்தரம் ஐயர் ஆகியோரை இசைத்துறை ஆசிரியர்களாகக் கொண்டிருந்தார்.

வானொலி நிலையங்களில் பணியாற்றியபோது அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், மலேஷியா முதலிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். சமையற்கலையிலும் வல்லுநராகத் திகழ்ந்த தி.ஜா., இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம் முதலியவற்றிலும் ஈடுபாடு மிக்கவராக விளங்கினார்.

தி.ஜா. எழுதிய 85 சிறுகதைகள் ஏழு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. மோகமுள், அமிர்தம், அம்மா வந்தாள், மரப்பசு, நளபாகம், மலர்மஞ்சம், உயிர்த்தேன், அன்பே ஆரமுதே, செம்பருத்தி ஆகிய நாவல்களும்; பிடிகருணை, மனிதாபிமானம், யாதும் ஊரே, அக்பர் சாஸ்திரி, அடி, சிவப்பு ரிக்ஷா, சக்தி வைத்தியம், எருமைப் பொங்கல், கமலம், கொட்டுமேளம், சிவஞானம் முதலிய சிறுகதைகளும்; நாலுவேலி நிலம், வடிவேல் வாத்தியார் ஆகிய நாடகங்களும்; உதய சூரியன், (ஜப்பான் பயண நூல்), அடுத்த வீடு ஐம்பது மைல் (பயணக் கட்டுரை), கருங்கடலும் கலைக்கடலும் (பயணக் கட்டுரை), நடந்தாய் வாழி காவேரி (காவேரி கரை வழியாகப் பயணம்) ஆகிய கட்டுரை நூல்களையும் எழுதியுள்ளார். இலக்கியம் மற்றும் இசைக்கலை பற்றி பல கட்டுரைகளை எழுதியுள்ளார். தி.ஜா. சிறந்த இசை விமர்சகரும்கூட.

தி.ஜா., மொழிபெயர்ப்புத் துறையிலும் சிறந்து விளங்கினார். அறிவியல்துறை சார்ந்து, என்.டச் எழுதிய "அணு எங்கள் ஊழியன்; ஜார்ஜ் காமோ எழுதிய "பூமி என்னும் கிரகம்' ஆகிய நூல்களை மொழிபெயர்ப்பு செய்துள்ளார். மேலும், நோபல் பரிசுபெற்ற கிரேசியா டெலடாவின் அன்னை, டெல்மேஜரின் "கிரிஸ்கா' ஆகியவற்றை மொழிபெயர்த்துள்ளார்.

இவைதவிர, வில்லியம் ஃபாக்னரின் "12' எனும் பெயர்கொண்ட சிறுகதைத் தொகுதியும், பார் லாகர்க்விஸ்ட் எழுதிய "ட்வார்ப்' எனும் நாவலும் தி.ஜா.வால் "குள்ளன்' என எழுதப்பட்டு அச்சேறாமல் இருக்கின்றன.

தி.ஜா.வின் "அம்மா வந்தாள்' நாவல் ஆங்கிலத்திலும், குஜராத்தி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும் மரப்பசு, மோகமுள், அம்மா வந்தாள் ஆகியவை மலையாள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மோகமுள் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது. "சக்தி வைத்தியம்' என்ற சிறுகதைத் தொகுப்புக்காக தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது பெற்றார்.

தி.ஜா. என்றாலே அவருடைய நாவல்கள் பரபரப்பாகப் பேசப்பட்டதால் அவரைச் சிறந்த நாவலாசிரியராகக் கருதுவதே வழக்கமாகிவிட்டது. ஆனால், தி.ஜா.வின் எழுத்தழகும் ஆழ்மனமும் வெளிப்படுவது சிறுகதைகளில்தான் என்று துணிந்து கூறலாம்.

தி.ஜா.வின் எல்லா கதைகளிலுமே மனிதநேயம் அடி இழையாக ஓடுவதைக் காணலாம். பெரும்பாலான நாவல்கள் தஞ்சை மண்ணை அடிப்படையாக வைத்து எழுந்தவை. நகரங்களில் நடைபெறும் சம்பவங்களையும் கிராமத்தோடு இணைத்துக் காட்டுவதைக் காணமுடியும். அத்துடன் அவருடைய பாத்திரப்படைப்புகள் அனைத்தும் அவர் நேரில் கண்டவர்களே ஆவர்.

தி.ஜா.வின் எழுத்தைப் படித்து ஆதரித்தவர்களைவிட எதிர்த்தவர்கள்தாம் அதிகம். பாலியல் உணர்வுகளை குறிப்பாகப் பெண்களை ஒளிவு மறைவு இல்லாமல் அவர் எழுதியுள்ளார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது உண்டு. இதற்கெல்லாம் அவர் எந்தவித மறுப்பும் சொல்லாமல், என் கடன் எழுத்துப்பணியே என்றிருந்தார். ஓய்வு பெற்று சென்னையில் வசித்தபோது "கணையாழி' பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார்.

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், 1982-ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் தேதி காலமானார்.

"தமிழின் நெடும்பரப்பில் தி.ஜானகிராமன் ஓர் அற்புதம், பூரணமான ஓர் இலக்கிய அனுபவம் என்பது முழு உண்மையே'' என்று க.நா.சுப்பிரமணியம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தினமணி- தமிழ்மணி


வியாழன், 7 ஏப்ரல், 2011

கோபத்தை தவிர்த்தால் வாழ்க்கை அழகாகும்!

னதை கூலாக வைத்திருப்பது, வாழ்நாளை அதிகரித்து, வாழும் நாட்களை அழகாகவும், அமைதியாகவும் வைத்திருக்க உதவும். மனதை ஜெயித்தவர்கள், வாழ்க்கையை ஜெயித்தவர்கள் என்று சொல்லலாம்.

அந்த மனதை ஜெயிக்க, அதை எப்போதும் சமநிலையில் வைத்திருக்க வேண்டும். அப்போது தான், நம் உடல் இயக்கமும், செயல் இயக்கமும் பிரச்னையில்லாமல் சீராகப் போகும். மன அழுத்தம், மன பதற்றம், மன சோர்வு என்று மனதை இன்னும் சிக்கலாக்குவது, கோபம் தான். இன்றைய பரபரப்பு வாழ்க்கை முறையில், கோபம் வருவதற்கான காரணம், அளவுக்கு மீறிய வேலைச் சுமை தான். தினசரி வாழ்க்கையில், சில விஷயங்களை சரியாக கடைபிடித்தாலே, இந்த பிரச்னையிலிருந்து புத்திசாலித்தனமாக தப்பித்து விடலாம். அதிக வேலைப்பளு தான் பிரச்னைக்கு காரணம் என்றால், தினமும் குறைந்தது அரை மணி நேரம் பாட்டு கேட்பது, பிடித்த புத்தகம் படிப்பது போன்ற மனதிற்கு பிடித்த பொழுதுபோக்கு விஷயங்களை செய்வது நல்லது.

நினைத்தது நடக்கவில்லை என்றால் தான், மன அழுத்தம் அதிகமாகிறது. எந்த விஷயம் நடக்குமோ, அதற்கான எதிர்பார்ப்பை மட்டும் மனதிற்குள் வளர்த்து கொள்வது நல்லது. நமக்கு மன அழுத்தம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டால், பிரச்னையை ஒரு நல்ல தோழமையிடம் பகிர்ந்து கொள்வது, மனச்சுமையை குறைத்து, பிரச்னையை எதிர்கொள்வதற்கான வழிகளை சொல்லும்.

அதையும் மீறி பிரச்னை அதிகமானால், மனநல மருத்துவரை நாடுவதே சிறந்தது.



நன்றி: மனநல மருத்துவர் பத்மாவதி (தினமலர் கட்டுரை)







திங்கள், 7 மார்ச், 2011

"நம்மை விட்டு விலகாதது புத்தகங்கள் மட்டுமே" - குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

னித குலத்துக்கு வாழ்வியல் நெறிமுறைகளை வகுத்து கொடுத்துள்ள ஒரே நூல் திருக்குறளாகும். இதனை கற்பதன் மூலம் அதன்வழி நின்று மனதில் உள்ள அழுக்குகளை களையவும், ஐயங்களை போக்கவும் அனைவரும் முன்வரவேண்டும். உறவுகள், நட்புகள் கூட்டம் நம்மை விட்டு விலகலாம். ஆனால், நம்மை விட்டு என்றுமே விலகாதது புத்தகங்கள் மட்டும் தான்.

எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் அத்தனை நூற்றாண்டுகளிலும் ஜாதி, மத, இன, மொழிகளை தாண்டி மனிதர்களை மனிதர்களாக வழிநடத்துகின்ற ஆற்றல் பெற்ற ஒரே நூல் திருக்குறள் தான். எனவே திருக்குறளை அனைவரும் கற்கவேண்டும். நாம் கற்பதோடு மட்டுமின்றி நமது எதிர்கால சந்ததியினர் கற்பதற்கான வழிமுறைகளையும் நாம் உருவாக்கவேண்டும். இதன் மூலம் சிறந்த சமுதாயம் உருவாகும்.

நன்றி: தினமலர்

திங்கள், 28 பிப்ரவரி, 2011

ஆழ்நிலை தியானத்தை கொடுக்கும் ஆற்றல், புத்தகங்களுக்கு மட்டுமே உள்ளது: ரவி தமிழ்வாணன்

"மக்கள் தொகை எண்ணிக்கை பெருகிவிட்டது; மனிதர்கள் குறைந்து விட்டனர். இதற்கு, முக்கிய காரணம், இயந்திர வாழ்க்கையை பின்பற்றுவது தான். ஆரம்பத்தில், அச்சு துறையில், எழுத்துக்களை கையில் கோர்க்கும் முறை இருந்தது. கணினி வளர்ச்சியால், ஆயிரம் பக்கங்களை நான்கு நாட்களில் உருவாக்கும் அளவிற்கு, அச்சு துறை முன்னேற்றம் கண்டுள்ளது. புத்தகங்கள் தான், கற்பனை சக்தியை வளர்க்கும் மிகப் பெரிய கருவி.

கணினி வளர்ச்சியில், அனைத்து தகவலும் விரல் நுனியில் கிடைத்தாலும், புத்தகத்தை படித்து பெரும் அனுபவம் வேறு எதிலும் கிடைக்காது. புத்தகம் படிப்பதில் அதிக நேரம் செலவிடுவது போய், "டிவி' நிகழ்ச்சியில் அதிகம் நேரம் செலவிடுவது அதிகரித்து உள்ளது.புத்தகங்களை தொடர்ந்து படிக்கும் பழக்கம் மூலம், "டிவி' யில் அதிகம் நேரம் செலவிடுவது குறையும்.

ஒரு சில புத்தகங்கள், வாழ்க்கை மாற்றத்தை ஏற்படுத்தும். புத்தகங்களை தேடி படிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. துரோகம் செய்யாத, கைமாத்து கேட்காத, மிகச் சிறந்த தோழன் புத்தகங்கள்தான். குறைந்தது ஒரு நாளைக்கு அரை மணி நேரமாவது புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்த்து கொள்ள வேண்டும். புத்தக படிப்பில் உள்ள ஆர்வம் காரணமாக, பல வெளிநாடுகளில் உள்ள நூலகங்களுக்கு சென்றிருக்கிறேன். பதிப்பாளன் என்பதால், அரசை பாராட்டுவதாக எண்ண வேண்டாம். தமிழகத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் போல், வேறு எந்த நாட்டிலும் நூலகம் கிடையாது. புத்தகங்களுக்கு கொடுக்கப்பட்ட அங்கீகாரமாக, அண்ணா நூலகம் அமைந்துள்ளது.ஒரு முறையாவது, அந்த நூலகத்தை அனைவரும் பார்வையிட வேண்டும்.

இன்று, தாய்மொழி, புத்தகம் இந்த இரண்டிலும் இருந்து, இளைஞர்கள் விலகியுள்ளனர். ஆழ்நிலை தியானத்தை கொடுக்கும் ஆற்றல், புத்தகங்களுக்கு மட்டுமே உள்ளது. பெற்றோர்கள், அடுத்த தலைமுறைக்கு, புத்தகங்களை சொத்தாக கொடுக்க வேண்டும்".

நன்றி: தினமலர் 28.2.2011

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...