செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

எச்சரிக்கை: பெருகிவரும் சைபர் கிரைம்

பொறியியல் கல்லூரி மாணவியர் விடுதி குளியலறையில், ஆன் செய்யப்பட்ட நிலையில், கேமரா மொபைல்போன் சிக்கியது. சக மாணவியர் குளிப்பதை மொபைல்போன் கேமராவில் பதிவு செய்து, தன் காதலனுக்கு காண்பிக்கவே இவ்வாறு செய்ததாக மாணவி ஒப்புக்கொண்டுள்ளார்.

கேரள மாநிலம் கொல்லம் நகரில் இயங்கும் பொறியியல் கல்லூரி மாணவியர் விடுதி குளியலறையில், கடந்த 3ம் தேதி மாலை, விடுதியைச் சேர்ந்த மாணவி குளிக்கச் சென்றார். அப்போது அங்கு கண்ட காட்சி, அவரை அதிர்ச்சியுறச் செய்தது. குளியலறைக்குள், ஆன் செய்த நிலையில், கேமராவுடன் கூடிய மொபைல்போன் வைக்கப்பட்டிருந்தது. அம்மாணவி, விடுதி காப்பாளரிடம் புகார் செய்தார்.

போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், சைபர் பிரிவு போலீசார், மொபைல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், அங்கு தங்கி படிக்கும் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி சிக்கினார். போலீசார், அவரிடம் விசாரித்ததில், வயநாட்டில் இருக்கும் தன் காதலன் கண்டு ரசிக்கவே இவ்வாறு செய்ததாகவும், சக மாணவியர் குளிப்பதை படம் எடுப்பதற்காக தான் தனது கேமரா வசதி கொண்ட மொபைல்போனை அங்கு வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுபோன்று ஏற்கனவே செய்திருப்பதாகவும் தெரிவித்த அவர், அவற்றை, தன் காதலனுக்கு கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். இதை அடுத்து அவரது காதலனிடம் போலீசார் விரைவில் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். அப்பெண்ணின் அறையில் இருந்து லேப்-டாப் கருவியையும் போலீசார் கைப்பற்றினர். அம்மாணவியின் மொபைல்போன், லேப்-டாப் ஆகியவற்றில் வேறு ஏதாவது குளியல் மற்றும் அந்தரங்க காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய, திருவனந்தபுரத்தில் உள்ள சைபர் குற்றப்பிரிவு ஆய்வகத்திற்கு போலீசார் அவற்றை அனுப்பி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி: தினமலர் - 07.02.2011




திங்கள், 7 பிப்ரவரி, 2011

வாழும் வரலாறு: பி. சுசீலா

இயற் பெயர்: புலப்பாக்க சுசீலா

பிறப்பு: நவம்பர் 13 1935 (அகவை 75)

பிறந்த ஊர்: விஜயநகரம், ஆந்திரா

வசிப்பது: சென்னை

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்படப் பல இந்திய மொழிகளில் கடந்த 50 ஆண்டுகளில் 2500 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.
.
வாழ்க்கைச் சுருக்கம்:

சுசீலா ஆந்திரா மாநிலத்தில் உள்ள விஜயநகரத்தில் புலப்பாக்க முந்தராவ் கவுத்தாரம் என்பவர்களுக்கு பிறந்தார். சுசீலாவுக்கு 5 சகோதரிகளும் 3 சகோதரர்களும் உள்ளனர். தந்தை ஒரு வக்கீல். அங்குள்ள பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றவர். ஆந்திராவின் புகழ்பெற்ற இசை மேதை துவாரம் வெங்கடசாமி நாயுடுவிடம் முறையாக இசை பயின்றவர்.

பி.சுசீலா அம்மையாருடன்  நான்
19 பிப்,2010 அன்று - அபுதாபியில்

இசைத் துறையில்:

சுசீலா 1950 ஆம் ஆண்டில் சென்னை வானொலியில் பாப்பா மலர் நிகழ்ச்சியில் பாடத்தொடங்கினார். சுசீலாவின் இசைத்திறமையைக் கண்ட இயக்குநர் கே. எஸ். பிரகாஷ்ராவ் தனது 'பெற்ற தாய்' படத்தில் முதன் முதலில் பின்னணி பாட வைத்தார். 1953 ஆம் ஆண்டில் இப்படத்தில் ஏ. எம். ராஜாவுடன் இணைந்து 'பெண்டியாலா நாகேஸ்வரராவின்' இசையமைப்பில் 'எதுக்கு அழைத்தாய்?' என்ற பாடலைப் பாடினார். 1955 இல் வெளிவந்த கணவனே கண் கண்ட தெய்வம் படத்தில் இடம்பெற்ற எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும், உன்னைக் கண் தேடுதே என்ற பாடல்கள் சுசீலாவுக்குப் பெயரை வாங்கிக் கொடுத்தன. சுதர்சனம் இசையமைத்த "டொக்டர்" என்ற சிங்களப் படத்திலும் பாடியுள்ளார்.

பல பாடல்களுக்கு ஏராளமான விருதுகளை வாங்கியுள்ளார். 1969 ஆம் ஆண்டில் அகில இந்திய அளவில் சிறந்த பாடகிக்கான பரிசை முதல் முறையாகப் பெற்றார்.  பின்னர், தமிழக அரசால் கலைமாமணி பட்டம் வழங்கப்பெற்று கௌரவிக்கப்பட்டார். இவருக்கு மொத்தம் ஐந்து தடவைகள் தேசிய விருதுகள் கிடைத்தன. இவர் கடைசியாக 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த சில நேரங்களில் என்ற திரைப்படத்தில் பொட்டு வைத்த என்ற பாடலைப் பாடினார்.

1957 ஆம் ஆண்டில் டாக்டர் மோகன்ராவ் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ஜெய் கிருஷ்ணா என்ற மகன் உள்ளார்.

இசைக்குயில்:

கடந்த 60களிலும், 70களிலும் தென்னிந்தியாவின் பட்டி தொட்டிகளில் எல்லாம் இந்த குயிலின் இசையை கேட்காதவர்களே இல்லை; தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்ற நான்கு மொழிகளில் உள்ள இசை ரசிகர்களை தன் இனிய குரலினால் கட்டிப்போட்டு வைத்த பெருமை இவருக்கு உண்டு.

தென்னிந்திய லதாமங்கேஷ்கர் என்று அழைக்கப்படுபவர். அமைதியான தோற்றம்... கொஞ்சும் தமிழ் பேச்சு... போன்றவைகளுக்கு சொந்தக்காரர்.

இசை ஆர்வம் கொண்ட குடும்பத்தில் பிறந்ததாலோ என்னவோ இயற்கையிலே பி.சுசீலாவிற்கு இசையின் மேல் ஓர் ஆர்வம். இவரின் இசை ஆர்வத்தை கண்ட இவரது குடும்பத்தினர் அவருக்கு கர்நாடக சங்கீதத்தை கற்றுக் கொடுக்க முடிவு செய்தனர். இதன் விளைவு சிறுவயதிலேயே பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடும் வாய்ப்பு பெற்றார். அதில் வெற்றியும் பெற்று வந்தார். இந்நிலையில் விஜயநகரத்தில் உள்ள இசைக்கல்லூரியில் சேர்ந்த சுசீலா இசைக்கான டிப்ளமோ பட்டத்தில் முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.

இந்நிலையில் அகில இந்திய வானொலியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பாடுவதற்கான வாய்ப்புகள் சுசீலாவிற்கு கிடைக்க வானொலியில் சுசீலாவின் குரல் ஒலிக்கத் தொடங்கியது.

அன்றைய காலக்கட்டத்தில் தெலுங்கில் பிரபலமான இசையமைப்பளராக விளங்கிய நாகேஸ்வரராவ் அவர்கள் தன் இசையமைப்பில் பாடுவதற்கு புதிய குரல்களை தேடிக்கொண்டிருந்தார். புதிய குரலுக்காக அகில இந்திய வானொலியை அவர் அணுக, வானொலி நிலையத்தார் அவரிடம் ஐந்து நபர்களை அனுப்பினார்கள். அந்த ஐந்து நபர்களில் ஒருவர் பி.சுசீலா. பல்வேறு தேர்வுகளுக்கு பிறகு சுசீலாவின் குரல் தேர்வு செய்யப்பட்டது.

முதன் முதலாக சுசீலாவின் குரல் 1952ல் திரைக்கு வந்த 'பெற்றதாய்' படத்தின் மூலம் ஒலிக்கத் தொடங்கியது. இப்படம் தெலுங்கில் 'கன்னத்தலி' என்ற பெயரில் வெளிவந்தது. ஏ. நாகேஸ்வரராவ் மற்றும் ஜி. வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இப்படத்தில் எ.எம். ராஜாவுடன் இணைந்து சுசீலா பாடிய முதல் பாடல் 'எதுக்கு அழைத்தாய்...' என்பதாகும்.

இதன் பிறகு சுசீலா ஏவிஎம் நிறுவனத்தின் ஊழியராக சில ஆண்டுகள் பணியாற்றினார். ஏவிஎம் நிறுவனம் இதற்காக சுசீலாவிற்கு மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை சம்பளமாக அளித்தது. ஏவிஎம் நிறுவனர் ஏ.வி. மெய்யப்பச் செட்டியாருக்கு எப்போதுமே எல்லாம் நேர்த்தியாகவும், சுத்தமாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் அவர் சுசீலாவின் தமிழ் உச்சரிப்பும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். இதனால் சுசீலாவிற்கு தமிழ் உச்சரிப்பு சரியாக வருவதற்காக தமிழாசிரியர் ஒருவரை நியமித்தார். அந்தளவிற்கு வார்த்தை உச்சரிப்புகளுக்கு அந்த காலத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. சுத்தமான உச்சரிப்புடன் பாடுகின்ற போதுதான் அந்தப் பாடல் வரிகள் மக்கள் மனதை தொடும்.. வெற்றி பெறும் என்ற எண்ணமும் அன்றைய காலத்தில் நிலவி இருந்தது.

இதற்கிடையில் 1955ல் திரைக்கு வந்த 'கணவனே கண் கண்ட தெய்வம்' படத்தில் வரும் பாடல்கள் மூலம் சுசீலா தமிழகம் எங்கும் பிரபலமடைந்தார். குறிப்பாக அப்படத்தில் வரும் 'எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவது...', 'உன்னை கண் தேடுதே...' போன்ற பாடல்கள் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. இதன் பிறகு அதே வருடம் திரைக்கு வந்த 'மிஸ்ஸியம்மா' பாடல்களான 'பிருந்தாவனமும் நந்தகுமாரனும்...', 'அறிய பருவமடா...' போன்ற பாடல்கள் சுசீலாவிற்கு மேலும் புகழ் சேர்த்தன.

சுசீலா சினிமாவில் பாட வந்த காலத்தில் பி. லீலா, ஜிக்கி, எம்.எல். வசந்தகுமாரி என்று பல பிரபல பாடகிகள் கொடிக்கட்டி பறந்து கொண்டு இருந்தனர். இவர்கள் மத்தியில் சுசீலா தனக்கென ஒரு பாணியை ஏற்படுத்தி தன் இனிமையான குரலினால் தென்னந்தியா முழுவதும் ஓர் அதிர்வு அலையை ஏற்படுத்தினார் என்றால் அதுமிகையல்ல.

1955ல் தொடங்கிய இவரது நீண்ட இசை பயணத்தில் 1960 - 1970 வரை முக்கிய காலகட்டம் எனலாம். ஆம் இந்தக் காலக்கட்டத்தில் திரைக்கு வந்த அனைத்து படங்களிலும் சுசீலாவின் பாடல்கள் இல்லாமல் இருந்தது இல்லை. சுசீலாவின் கானகுரல் தென்னிந்திய மொழிகளில் ஒலிக்காத நாளே இல்லை எனலாம்.

பல்வேறு மாநில விருதுகளும், தேசிய விருதுகளும் சுசீலாவை தேடி வந்தன. தொடர்ந்து 1969, 1971, 1977, 1982 மற்றும் 1983 ஆகிய ஆண்டுகளில் சிறந்த பாடகிக்கான தேசிய விருது இவருக்கு வழங்கப்பட்டது. இதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் பல்வேறு விருதுகளை இவருக்கு வழங்கி கெளரவப்படுத்தியது.

உயர்ந்த மனிதன் படத்தில் வரும் 'நாளை இந்த வேளை பார்த்து...' பாடலின் மூலம் தமிழில் முதல் தேசிய விருது பெற்ற சுசீலா எண்ணற்ற நெஞ்சங்களில் இன்றும் நீங்கா இடம் பெற்றவர் என்றால் அதுமிகையல்ல. மேலும் சிவாஜிகணேசன், ஜெயலலிதா நடிப்பில் வெளிவந்த 'சவாலே சமாளி' படத்தில் வரும் 'சிட்டுக்குருவிக்கென...' என்ற பாட்டும் இவருக்கு தேசிய விருதினை வாங்கிக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

நாகேஸ்வரராவ், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, எம்.எஸ்.விஸ்வநாதன் என்று அன்றைய இசையமைப்பாளர்களின் இசையில் மட்டுமல்லாமல் இசைஞானி இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் இன்றைக்கு பிரபலமாக விளங்கும் இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடிய பெருமை சுசீலாவிற்கு உண்டு.

சினிமாவில் பி. சுசீலா பாட வந்து 50 வருடங்கள் உருண்டோ டிவிட்ட நிலையில் 2008ஆம் ஆண்டிற்கான பத்மபூஷன் விருதினை சுசீலாவிற்கு வழங்கி அவரை மேலும் கெளரபடுத்தியது மத்திய அரசு.

''இன்றைக்கு சினிமாவிற்கு பாடவரும் பாடகர்களும், பாடகிகளும் சினிமாவிற்கு பாட வருவதற்கு முன்பு ஒருமுறை சுசீலாவின் பாடல்களை கேளுங்கள். தமிழ் மொழியை எப்படி உச்சரிக்க வேண்டும்; எப்படி பாட வேண்டும் என்பதை சுசீலாவின் பாடல்கள் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.. அதன் பிறகு சினிமாவில் பாட வாருங்கள்.. ''என்று ஒரு நிகழ்ச்சியில் சுசீலாவைப் பற்றி கவிஞர் வைரமுத்து கூறியது இங்கு குறிப்பிடத்தக்கது.

காலங்கள் உருண்டோடி போனாலும்.. புதிய புதிய பாடல்கள்.. புதிய புதிய குரல்களில் வந்தாலும் இந்த குயிலின் 'மயங்குகிறாள் ஒரு மாது..', 'மாலைப் பொழுதின் மயக்கத்திலே..', 'சொன்னது நீதானா..' போன்ற நெஞ்சை வருடும், மயக்கும் குரல் உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் இல்லத்தில் நேற்றும், இன்றும், என்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

விருதுகள்:

இந்திய அரசின் பத்ம பூஷன் விருது - ஜனவரி 2008

தேசிய அளவில் மிகச்சிறந்த பின்னணிப் பாடகி விருது ஐந்து தடவைகள்

ஆந்திர மாநில அரசினரின் விருது ரகுபதி பெங்கையா விருது (2001)

சுசீலா அம்மையார் பாடிய, காலத்தால் அழியாத, அவசியம் கேட்டு ரசிக்க வேண்டிய,  புகழ் வாய்ந்த பாடல்கள் இவை:

ஆலயமணியின் ( பாலும் பழமும் )
யாருக்கு மாப்பிள்ளை ( பார்த்தால் பசி தீரும் )
பார்த்தால் பசி ( பார்த்தால் பசி தீரும் )
காவேரி ஓரம் ( ஆடிப்பெருக்கு )
இளமை கொலுவிருக்கும் ( ஹலோ மிஸ்டர் ஜமின்தார் )
தண்ணிலவு ( படித்தால் மட்டும் போதுமா )
முத்தான முத்தல்லவோ ( நெஞ்சில் ஓர் ஆலயம் )
அமுதைப் பொழியும் ( தங்கமலை ரகசியம் )
பருவம் எனது ( ஆயிரத்தில் ஒருவன் )
தூது செல்ல ( பச்சை விளக்கு )
பக்கத்து வீட்டு ( கற்பகம் )
நெஞ்சத்திலே நீ ( சாந்தி )
லவ்பேர்ட்ஸ் ( அன்பே வா )
அத்தான் என் அத்தான் ( பாவமன்னிப்பு )
சிட்டுக்குருவி ( புதியபறவை )
அத்தை மகனே ( பாத காணிக்கை )
கண்ணன் வருவான் ( பச்சை விளக்கு )
கொஞ்சி கொஞ்சி ( கைதி கண்ணாயிரம் )
ஆயிரம் பெண்மை ( வாழ்க்கைப் படகு )
ஆடாமல் ஆடுகிறேன் (ஆயிரத்தில் ஒருவன் )
நினைக்கத் தெரிந்த மனமே ( ஆனந்த ஜோதி )
நீ இல்லாத ( தெய்வத்தின் தெய்வம் )
அழகே வா ( ஆண்டவன் கட்டளை )
உன்னைக் காணாத ( இதய கமலம் )
என்னை மறந்ததேன் ( களங்கரை விளக்கம் )
இதுதான் உலகமா ( ஆடிப்பெருக்கு )
கண்ணிழந்த ( ஆடிப்பெருக்கு )
மாலைப் பொழுதின் ( பாக்கியலெட்சுமி )
மலரே மலரே ( தேன் நிலவு )
மன்னவனே ( கற்பகம் )
நாளை இந்த வேளை ( உயர்ந்த மனிதன் )
நான் உன்னை வாழத்தி பாடுகிறேன் ( நூற்றுக்கு நூறு )
காதல் சிறகை ( பாலும் பழமும் )
ஆண்டவனே உன் ( ஒளிவிளக்கு )
ராமன் எத்தனை ( லெட்சுமி கல்யாணம் )
தங்கத்திலே ஒரு ( பாகப்பிரிவினை )
சொன்னது நீ தானா ( நெஞ்சில் ஓர் ஆலயம் )
என்ன என்ன ( வெண்ணிற ஆடை )
அத்தானின் முத்தங்கள் ( உயர்ந்த மனிதன் )
காட்டுக்குள்ளே திருவிழா ( தாய் சொல்லைத் தட்டாதே )
அத்தை மகள் ( பணக்கார குடும்பம் )
பாலிருக்கும் ( பாவமன்னிப்பு )
பார்த்த ஞாபகம் ( புதிய பறவை )
உன்னை ஒன்று ( புதிய பறவை )
என்னை பாட வைத்தவன் ( அரசகட்டளை )
அம்மாம்மா காற்று வந்து ( வெண்ணிற ஆடை )
காண வந்த ( பாக்யலெட்சுமி )
மறைந்திருந்து ( தில்லானா மோகனாம்பாள் )
பச்சை மரம் ( ராமு )
தேடினேன் வந்தது ( ஊட்டி வரை உறவு )
சிட்டுக்குருவிக்கென்ன ( சவாளே சமாளி )
இரவுக்கு ஆயிரம் ( குலமகள் ராதை )
உனக்கு மட்டும் ( மணப்பந்தல் )
தமிழுக்கும் அமுதென்று ( பஞ்சவர்ணக்கிளி )
வெள்ளிக்கிழமை ( நீ )
ரோஜா மலரே ( வீரத்திருமகன் )
ஹலோ மிஸ்டர் ( ஹலோ மிஸ்டர் ஜமின்தார் )
தாமரை கன்னங்கள் ( எதிர்நிச்சல் )
காத்திருந்த கண்களே ( மோட்டார் சுந்தரம் பிள்ளை )
மதுரா நகரில் ( பார் மகளே பார் )
அனுபவம் புதுமை ( காதலிக்க நேரமில்லை )
என்னருகே நீ இருந்தால் ( திருடாதே )
காற்று வந்தால் ( காத்திருந்த கண்கள் )
மெளனமே பார்வையால் ( கொடி மலர் )
பால் வண்ணம் ( பாச மலர் )
போக போக தெரியும் ( சர்வர் சுந்தரம் )
வளர்ந்த கலை ( காத்திருந்த கண்கள் )
பார்த்தேன் சிரித்தேன் ( வீரத்திருமகள் )
ஒருத்தி ஒருவனை ( சாரதா )
ஒரே கேள்வி ( பனித்திரை )
நெஞ்சம் மறப்பதில்லை ( பனித்திரை )
இயற்கை என்னும் ( சாந்தி நிலையம் )
ஒரு காதல் தேவதை ( சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு )
யாதும் ஊரே ( நினைத்தாலே இனிக்கும் )
ஆயிரம் நிலவே வா ( அடிமைப் பெண் )
மாதமோ ஆவணி ( உத்தரவின்றி உள்ளே வா )
என் கண்மணி ( சிட்டுக்குருவி )
விழியே கதையெழுது ( உரிமைக் குரல் )
தங்கத் தோணியிலே ( உலகம் சுற்றும் வாலிபன் )
மஞ்சள் நிலவுக்கு ( முதல் இரவு )
பேசுவது கிளியா ( பணத்தோட்ட )
அன்று வந்ததும் ( பெரிய இடத்துப் பெண் )
அன்புள்ள மான்விழியே ( குழந்தையும் தெய்வமும் )
வாழ நினைத்தால் ( தாயில்லாமல் நானில்லை )
அடுத்தாத்து அம்புஜத்த ( எதிர் நீச்சல் )
அமைதியான நதியினிலே ( ஆண்டவன் கட்டளை )
நான் மலரோடு ( இரு வல்லவர்கள் )



நன்றி: விக்கிபீடியா


பூதேவர்களின் தெருக்களிலிருந்து மக்கள் வாழும் சேரிக்கு...

ம் பண்டைய இசை முழுக்கப் பக்தி மயமாக இருந்ததில்லை. வள்ளுவனும் கம்பனும் காப்பாகப் பாடியிருக்கிறார்கள். இளங்கோ அப்படிக் கூடப் பாடவில்லை.


ஆனால் கர்நாடக இசை 'பக்தி' என்ற ஒற்றைப் பரிமாண இசையாகவே இன்றுவரை உள்ளது. மக்களைப் பாடுவது என்பது 'நரஸ்துதி' என்று தீட்டு நிலையாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. மக்களைப் பாடிய நம் இசை இன்று மகேசனை மட்டுமே பாடுகின்றது.

மக்களைப் பாடுபொருளாகக் கொள்ளாத எந்தக் கலையும் மக்களைச் சென்றடையாது. கர்நாடக இசை பொதுமக்களிடம் அன்னியப்பட்டு இருக்கும் காரணம் இதுதான்.

பக்தியைக் கர்நாடக இசையிலிருந்து பிரிக்கவே முடியாது என்று கர்நாடக இசைக்காரர்கள் கூறுவதின் அரசியலை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த பக்திதான் நம்மை 2000 ஆண்டுகாலமாக அடிமைத்தனத்தில் ஆழ்த்தியுள்ளது.

5 ஆம் நூற்றாண்டு பக்தி காலத்திலிருந்து இந்த இசை அங்கேயே நின்று கொண்டிருக்கிறது. 20 ஆம் நூற்றாண்டுக்கு இழுத்துவர எத்தனையோ பேர் முயற்சித்திருக்கிறார்கள்.

பூதேவர்களின் தெருக்களிலிருந்து மக்கள் வாழும் சேரிக்கு அந்தத் தேர் நகரவே இல்லை.

'ஓர் இந்திய இசைக் கலைஞன் இசையில் இறைவனுடன் ஒன்ற நினைப்பானே ஒழிய, பக்கத்திலுள்ள இன்னொரு மனிதனுடன் இணைய விரும்ப மாட்டான் என்று ஒருமுறை "யகுதி மெனுகின்" சொன்னார். 

 
நன்றி: திரு.  நா. மம்மது,  தமிழிசை ஆய்வாளர் - மதுரை.

சத்து இருக்கும்போதே செத்துப் போ!

ருபதுகளில்... எழு!
உன் கால்களுக்கு
சுயமாய் நிற்கச் சொல்லிக்கொடு!

ஜன்னல்களை திற்ந்து வை. 
படி... எதையும் படி !
வாத்யாசனம் கூட
காமம் அல்ல, கல்விதான்... படி!

பிறகு, புத்தகங்களை எல்லாம்
உன் பின்னால் எறிந்துவிட்டு
வாழ்க்கைக்கு வா !
உன் சட்டைப்பொத்தான், கடிகாரம்,
காதல், சிற்றுண்டி, சிற்றின்பம் எல்லாம்
விஞ்ஞானத்தின் மடியில் விழுந்துவிட்டதால்
எந்திர அறிவுகொள்!

ஏவாத ஏவுகணையேனும்
அடிக்கப்பட்ட ஆணியே பலம்!
மனித முகங்களை மனசுக்குள் பதிவுசெய்! 
சப்தங்கள் படி!  சூழ்ச்சிகள் அறி!

திருடு... திருப்பிகொடு!
பூமியில் நின்று வானத்தை பார்...
வானத்தில் நின்று பூமியை பார்!

உன் திசையை தெரிவுசெய்!
நுரைக்க நுரைக்க காதலி!
காதலை சுகி...காதலில் அழு!

இருபதுகளின்...
இரண்டாம் பாகத்தில் மணம் புரி!
பூமியில் மனிதன்
இதுவரை துய்த்த
இன்பம் கையளவுதான்...
மிச்சமெல்லாம் உனக்கு!

வாழ்க்கை என்பது
உழைப்பும் துய்ப்பும் என்று உணர்!
உனது அஸ்திவாரத்தை ஆழப்படுத்து!
இன்னும்... இன்னும்...
சூரியகதிர்கள் விழமுடியாத ஆழத்தில்!.

முப்பதுகளில்...
சுறுசுறுப்பில் தேனீயாய் இரு!
நிதானத்தில் ஞானியாய் இரு!.
உறங்குதல் சுருக்கு...உழை...
நித்தம் கலவி கொள்!

உட்காரமுடியாத ஒருவன்
உன் நாற்காலியை
ஒழித்து வைத்திருப்பான்...
கைப்பற்று!

ஆயுதம் தயாரி... பயன்படுத்தாதே!
எதிரிகளை பேசவிடு!
சிறுநீர் கழிக்கையில் சிரி!

வேர்களை,
இடி பிளக்காத ஆழத்துக்கு அனுப்பு!
கிளைகளை,
சூரியனுக்கு நிழல் கொடுக்கும்
உயரத்துக்கு பரப்பு!  நிலைகொள்...
நாற்பதுகளில்...
இனிமேல்தான் வாழ்க்கையின் ஆரம்பம்..
செல்வத்தின் பாதியை
அறிவின் முழுமையை செலவழி!

எதிரிகளை ஒழி!
ஆயுதங்களை
மண்டை ஓடுகளில் தீட்டு!
ஒருவனை புதைக்க
இன்னொருவனை குழிவெட்ட சொல்!
அதில் இருவரையும் புதை...

பொருள் சேர்...
இரு கையால் ஈட்டு!
ஒரு கையாலேனும் கொடு!
பகல் தூக்கம் போடு...

கவனம்... இன்னொரு காதல் வரும்!
புன்னகை வரை போ...புடவை தொடாதே!
இதுவரை இலட்சியம் தானே
உனக்கு இலக்கு,
இனிமேல் லட்சியத்துக்கு
நீதான் இலக்கு!

ஐம்பதுகளில்...
வாழ்க்கை... வழுக்கை...
இரண்டையும் ரசி!
கொழுப்பை குறை!
முட்டையின் வெண்கரு...
காய்கறி, கீரை கொள்!
கணக்குப் பார்!
நீ மனிதனா?
என வாழ்க்கையை கேள்.
லட்சியத்தை தொடு!
வெற்றியில் மகிழாதே!
விழா எடுக்காதே!

அறுபதுகளில்...
இதுவரை வாழ்க்கைதானே
உன்னை வாழ்ந்தது...
இனியேனும்...
வாழ்க்கையை நீ வாழ்ந்து பார்!
விதிக்கப்பட்ட வாழ்க்கையை
விலக்கிவிடு!
மனிதர்கள் போதும்...
முயல் வளர்த்துப் பார்!
நாயோடு தூங்கு...
கிளியோடு பேசு...
மனைவிக்கு பேன் பார்!
பழைய டைரி எடு!
இப்போதாவது உண்மை எழுது!

எழுபதுகளில்...
இந்தியாவில், இது உபரி...
சுடுகாடு வரை நடந்துபோக
சத்து இருக்கும்போதே
செத்துப் போ!

ஜண கண மண!


நன்றி: கவிஞர் வைரமுத்து



வியாழன், 3 பிப்ரவரி, 2011

சொரணையுள்ள விகடன் - காட்டமான தலையங்கம்

'இனி ஒருவரையும் சாகவிட மாட்டோம்... தமிழக மீனவர்கள் கொலையைத் தடுக்க, இலங்கையுடன் புதிய ஒப்பந்தம் போடுவோம்' என்று கொழும்பு செல்லும் வழியில் இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் நிருபமா ராவ் கூறிவிட்டுச் சென்றார்.
இலங்கைக் கடற்படையின் அராஜகத் தாக்குதலில் ஐந்நூறாவது மீனவர் சாகட்டும் என்று காத்திருந்து, அதைக் கொண்டாடவா இந்தப் பயணமும் அறிவிப்பும்? ஒருவரையும் சாகவிடாத அளவுக்கு ஓர் ஒப்பந்தத்தைப் போட முடியும் என்பது உண்மையானால், ஏன் இத்தனை தாமதம்?

இலங்கை - இந்திய அரசுகளுக்கு மத்தியில் நிலவி வரும் விநோதமான நட்பு உணர்வு, சாமானியர்கள் தொடங்கி தலைவர்கள் வரையில் எத்தனையோ உயிர்களுக்குச் சமாதி கட்டியிருக்கிறது. உலகமே கொதித்துக் கண்டித்தபோதும், துளிகூட அலட்டிக்கொள்ளாமல், தோளில் கை போட்டுக்கொண்டு பொருத்தமான பொய்களைச் சொல்லிச் சமாளிப்பதில் இந்த இரு அரசுகளின் ஒற்றுமை உணர்வுக்கு ஈடு இணையே கிடையாது.

இறந்த மீனவரின் குடும்பத்துக்கு நிவாரணத் தொகை, அந்தக் குடும்பத்தில் ஒருவருக்கு அரசாங்க வேலை என்பதுதான் எப்போதும் நிறைவேற்றப்படும் சடங்கு சம்பிரதாயம். இப்போது தேர்தல் நெருக்கம் என்பதால், வீடு தேடிச் சென்று ஆறுதல் சொல்வதும், 'மீனவ சமுதாயத் தலைவர் சிங்காரவேலரின் 151-வது பிறந்த நாள் விழாவை அரசே கொண்டாடும்' என்று அறிவிப்பு செய்வதுமாக, சற்றே விசேஷக் காட்சிகள்கொண்ட அரசியல் நாடகங்கள் அரங்கேறுகின்றன!

தனியார் நிலத்தில் மேய வரும் காட்டு விலங்குகள், மின்வேலியால் தாக்குண்டு இறந்துபோனால், நிலத்தின் உரிமையாளரைக் கைது செய்து, நீதியின் முன் நிறுத்துகிறது அரசாங்கம். வன விலங்கின் உயிர் மீதே இத்தனை அக்கறை இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் நம் அரசு, எல்லை பிடிபடாத கடல் பிரதேசத்தில் மீனவனின் உயிர்கள் தொடர்ந்து பறிக்கப்படுவதை 'இருநாட்டு நல்லுறவு' என்ற பெயரால் இன்னும் எத்தனை காலம் பேடித்தனமாக வேடிக்கை பார்க்குமாம்?

நன்றி: ஆனந்த விகடன் - 09 பிப். 2011





திங்கள், 17 ஜனவரி, 2011

முஸ்லிம்கள் பற்றி செய்தி வெளியிடுவதில் ஊடகங்களின் பொறுப்பின்மை

திருக்குரானின் அடிப்படையிலும், நபிகள் நாயகத்தின் போதனைகளை வைத்தும் 'இஸ்லாம் தீவிரவாதத்தை என்றும் அனுமதிப்பதில்லை' என்று பல அறிஞர்கள் தொடர்ந்து எடுத்துக் கூறி வருகிறார்கள்.

அப்படி இருந்தாலும், தீவிரவாதம் பற்றிய செய்திகள் வரும்போது முஸ்லிம்கள் பெயர் மட்டும் ஹைலைட் செய்யப்படுவது வழக்கமாகி விட்டது. இவ்வாறான செய்திகள் ஊடகங்களில் வெளிவருவதால், உளவியல் ரீதியாக முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் ஒரு விதமான மன அழுத்தம் ஏற்படுகிறது. எனவே, இது ஒரு பொதுவான சமூகப் பிரச்சினை என்று கருதப்பட வேண்டும்! இளம் மனங்களில் சந்தேகமும், குழப்பமும் இருந்தால், அது அவர்களது முன்னேற்றத்தை பெருமளவு பாதிக்கும்.


ஊடக நண்பர்கள் ஒரு கருத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் அல்லாத பல இயக்கங்கள் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுகின்றன. அவ்வாறான சக்திகள் தீவிரவாத செயல்களில் ஈடுபடும்போது, அந்தந்த அமைப்புகள் பெயரில்தானே செய்திகள் வெளியிடப்படுகின்றன? அப்போதெல்லாம், செய்திகளில் அந்த இயக்கங்களின் பெயர்கள் வெளி வருமே அன்றி அவர்கள் சார்ந்த மதம் பற்றி குறிப்பிடப்படுவதில்லை. நம் நாட்டில் காஷ்மீரில் மட்டுமா தீவிரவாதம் இருக்கிறது? அஸ்ஸாமிலும், மேகாலயாவிலும், நாகாலாந்திலும், பீஹாரிலும், ஆந்திராவிலும், மேற்கு வங்கத்திலும் ஏராளமான தீவிரவாத சக்திகள் செயல்படுவதை செய்திகளில் பார்க்கிறோம். திரும்ப திரும்ப இந்த மாதிரியான தவறான செய்திகள் வரும்போது, சாதாரண மக்களும் முஸ்லிம்களைப் பற்றி சந்தேகம் கொள்வது இயற்கையாக நிகழ்கிறது. இது ஒரு ஜனநாயக நாட்டில் நடக்கலாமா? யோசித்துப் பாருங்கள்!

இன்னொரு விஷயத்தை கவனிக்க வேண்டும். தீவிரவாத நாச வேலைகளால் பாதிப்புகள் ஏற்படும்போது எல்லா மதத்தினரும் துன்பப்படுகிறார்கள். உதாரணமாக, காஷ்மீரில் தாக்குதல் நடந்தபோது அங்கே பெரும்பான்மையாக பாதிக்கப்பட்டவர்கள் அங்கே வாழும் முஸ்லிம்கள்தான்.

பாகிஸ்தானுக்கு செல்லும் ரயிலில் குண்டு வைத்தபோதும், ஐதராபாத் பள்ளி வாசலில் குண்டு வைத்தபோதும் அதிக அளவில் இறந்தவர்கள் முஸ்லிம்கள்தானே? எனவே, தீவிரவாதத்தை எதிர்க்கும் அவசியம் முஸ்லிம்களுக்கு பெருமளவு இருக்கிறது. தீவிரவாதம் முஸ்லிம்களுக்கும் ஒரு பெரிய பிரச்சினைதான், மற்றவர்களுக்கு மட்டுமல்ல - என்பதை அனைவரும் உணர வேண்டும்!

அடிப்படையாக நோக்கினால் ஒன்று தெளிவாகப் புரியும் - சிந்தனைகளில் கோளாறு ஏற்படும் நேரங்களில் மனிதன் தீவிரவாதியாக மாறுகிறான். இதில் மதம் பற்றி பேசுவது சற்றும் சரியாக இருக்காது. எந்த மதமும் அந்த மாதிரி மனிதர்களை நியாயப்படுத்துவதில்லை. எனவே தீவிரவாதம் பற்றி கருத்துக்கள் கூறும்போது ஒரு மதத்தைப் பற்றி அவதூறாகப் பேசுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.

"பொறாமை, துவேஷம், வெறுப்பு ஆகியவற்றை இதயத்திலிருந்து அகற்றி அதைத் தூய்மைப்படுத்த வேண்டும். குறிப்பாக ஏழைகள், தேவையுள்ளோர், அனாதைகள் ஆகியோர் மீது கருணை காட்டி அவர்களின் மனதில் மகிழ்ச்சியும் குதூகலமும் நிலவச் செய்ய வேண்டும்" என்று நம்புகிற முஸ்லிம் நல்உள்ளங்களை புண்படுத்தும் செயல் அறவே கைவிடப்பட வேண்டும்!

- தஞ்சை வெங்கட்ராஜ் ( thanjaivenkatraj@gmail)

நன்றி: கீற்று.காம்

அறிந்து கொள்வோம் இவரை: தமிழிசை ஆய்வாளர் நா. மம்மது

மிழிசைக்கு முதன்முதலாக அகராதி எழுதிய மதுரை இசை ஆய்வாளர் நா.மம்மது, தமிழக அரசின் பாரதியார் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழிசை அகராதி என்ற இந்நூலில் 5000 இசைச் சொற்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நூல் இசையாசிரியர்கள், மாணவர்கள், ஆர்வலர்களுக்கு பெரும் வரப்பிரசாதம்.

நூலாசிரியர் நா.மம்மது, ஏற்கனவே "தமிழிசை வேர்கள், தமிழிசை தளிர்கள், இழையிழையாய் இசைத் தமிழாய்' என்ற மூன்று நூற்களை வெளியிட்டுள்ளார்.

நெடுஞ்சாலைத் துறையில் சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மதுரையில் இசை நிகழ்ச்சி நடத்துவது இவரது வழக்கம். இதில், மோகனம், கல்யாணி உட்பட பண்கள் இலக்கியத்தில் எந்த இடங்களில் வருகிறது என்றும், அதை பாடிக்காட்டுவதும் இவரது முக்கியப் பணி.

"கல்லூரி காலத்தில் இருந்தே இசை நூற்களை படிப்பதில் ஆர்வம் உண்டு. எனது குடும்பத்தினர் அனைவரும் இசை ஆர்வம், கருவிகளை வாசிக்கும் திறன் உள்ளவர்களே. நான் கடந்த 10 ஆண்டுகளாக நூற்கள், ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருகிறேன். தற்போது 300 ராகங்களை எடுத்து அவற்றின் வரலாறு, சுரங்கள், பாட்டு எவை என நூல் எழுதி வருகிறேன். ஒவ்வொரு ராகத்திலும் 20 நிமிடங்கள் பாடல்களை பாடி "சிடி' தயாரித்து நூலுடன் வழங்க உள்ளோம். 2012ல் இது வெளிவரும்,' என்கிறார் நா.மம்மது.

தொடரட்டும் அவர் சேவை!

நன்றி: தினமலர் (17.01.2011)

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...