வாக்கு அரசியல் ஆபத்தானது!
முந்தைய காலங்களில், பல்வேறு சவால்களை எதிர்கொண்டு மீண்டுவந்திருக்கிறது கோவை. அந்த ஃபீனிக்ஸ் குணத்தினால்தான் இந்த நகரின் மீது நம்பிக்கைவைத்து, பல நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடு செய்கின்றன. `இந்த நம்பிக்கைகள் எல்லாம் பொய்த்துவிடுமோ?' என்ற ஓர் அச்சம் மீண்டும் உருவாகியிருக்கிறது.
இந்து முன்னணிப் பிரமுகர் கொலைசெய்யப்பட்டதைத் தொடர்ந்து கோவையில் கலவரம் மூண்டதில், வர்த்தக நிறுவனங்கள் தாக்கப்பட்டுள்ளன; வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன; கடைகள் சூறையாடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவங்களால் கோவை மக்கள் பெரும் பீதியில் உறைந்துள்ளனர். காரணம், 1997-98ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒரு கொலையும், அதைத் தொடர்ந்து தலைவிரித்தாடிய கலவரமும், அதற்கு எதிர்வினையாக நடந்த குண்டுவெடிப்புகளின் அதிர்வுகளும் இன்னமும் கோவை மண்ணில் மிச்சம் இருக்கின்றன.
அரசியல் பதற்றத்தை உருவாக்கக்கூடிய கொலைகள் நடைபெறும்போது, அந்த இறுதி ஊர்வலங்களில் கலவரம் வெடிக்கும் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு. அப்படியிருக்க, பதற்றம் மிகுந்த நேரத்தில் 10 கி.மீ தூரத்துக்கு அந்த இறுதி ஊர்வலத்தை நடத்த போலீஸார் எப்படி அனுமதி அளித்தனர்?
`இந்து முன்னணிப் பிரமுகரின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்பதை உளவுத் துறை முன்கூட்டியே ஊகிக்கவில்லையா? கொலை நடந்தபிறகு, ஒரு பெரிய கலவரத்தை நிகழ்த்த ஒரு கூட்டம் திட்டமிடுகிறது என்ற தகவல்கூட, உளவுத் துறையினருக்கு வரவில்லையா? அல்லது உளவுத் துறையினர் கொடுத்த அறிக்கையைப் பார்க்க முடியாத அளவுக்கு, உயர் அதிகாரிகளுக்கு வேறு முக்கிய வேலை கொடுக்கப்பட்டதா?' என்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல இங்கே யாரும் இல்லை.
மோட்டார் நகரம், காட்டன் சிட்டி, தென் இந்தியாவின் மான்செஸ்டர் என, கோவைக்கு நிறைய அடையாளங்கள் உண்டு. `மதக்கலவர பூமி'யாக மீண்டும் அது மாறிவிடக் கூடாது!
சட்டம்-ஒழுங்கு கெடுகிறது, சமூக அமைதி கெடுகிறது, தொடர் குற்றங்கள் அரங்கேறுகின்றன. கொலைக்காகக் கலவரம், கலவரத்தின் பேரில் சூறையாடல் என, அசாதாரணமான சூழல் சர்வசாதாரணமாக நிகழ்வது ஆபத்தானது. சாதி அரசியலை, மத அரசியலை, வாக்கு அரசியலை மனதில்கொண்டு இதுபோன்ற குற்றங்களைக் கைகட்டி வேடிக்கை பார்ப்பது, அதைவிட ஆபத்தானது. அத்தனை குற்றங்களையும் வேரோடு களையவேண்டியது அரசின் கடமை!
நன்றி: விகடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக