புதன், 6 ஜூலை, 2011

ஏழிசை மன்னர், இன்னிசை வேந்தர், தமிழிசை நாயகர் எம்.கே.டி.

ழிசை மன்னர், இன்னிசை வேந்தர், தமிழிசை நாயகர், வெண்கலக் குரலோன் எம் கே தியாகராஜபாகவதர். இசைத்துறையிலும், நாடகத் துறையிலும் திரைத்துறையிலும் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்தவர். மாயவரத்தில் ஒரு பொற்கொல்லரின் குடும்பத்தில் பிறந்த அவர் இளம் வயதிலேயே திருச்சிராப்பள்ளியில் தமது திறமையை வெளிப்படுத்தினார். படிப்பைவிட, பொற்கொல்லர் தொழிலைவிட அவருக்கு பாட்டில்தான் ஆர்வம் இருந்தது. தந்தையின் வற்புறுத்தலுக்கு இணங்காத அவர், வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார். அவரைத் தேடி வந்த தந்தை, சிறுவன் தியாகராஜன் கடப்பாவில் பெரிய ரசிகர் கூட்டத்திற்கு நடுவில் பாடிக் கொண்டிருப்பதை பார்த்தார். திருச்சிக்கு அழைத்து வந்தார்.

அமெச்சூர் நாடகக் கம்பெனி நடத்தி வந்த எஃப் ஜி நடேச ஐயர் பத்து வயது தியாகராஜனின் பாட்டினால் ஈர்க்கப்பட்டு ஹரிசந்திரா நாடகத்தில் அவருக்கு ஒரு வேடம் கொடுத்தார். நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே கர்நாடக இசையிலும் பயிற்சி பெற்றார். இளம் வயதிலேயே தியாகராஜ பாகவதர் எனும் பெயரையும் பெற்றார். 1926-ல் பவளக்கொடி மூலம் தலை சிறந்த நாடக நடிகரானார். நடிகர்களுள் அரசிளங்குமரன் என்றழைக்கப்பட்டார். தென்னிந்தியாவில் மட்டுமின்றி, பர்மா, மலேயா, இலங்கையிலும் இவரது புகழ் பரவியது.

பவளக்கொடி நாடகத்தை திரைப்படமாக்கியபோது பாகவதரும், எஸ் டி சுப்புலக்ஷ்மியும் நடித்தார்கள். இது 1934-ல் வெளிவந்தது. இந்த படம் ஒரு மாபெரும் வெற்றி. அதன் பிறகு பாகவதர் நடித்த அனைத்துமே வெற்றிப் படங்கள்தான். சிந்தாமணியும், அம்பிகாபதியும் ஒன்றுக்கொன்று போட்டிபோட்டன. சிந்தாமணி ஓராண்டுக்கு மேல் ஓடியது., வெளிநாடுகளிலும் ஓடியது. இதை முறியடித்தது, 1944-ல் வெளிவந்த பாகவதரின் ஹரிதாஸ்தான். இது சென்னை பிராட்வே தியேட்டரில் மட்டும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஓடியது.

நாத்திகத்தை பரப்பும் எந்த படத்திலும் நடிக்க அவர் மறுத்துவிட்டார். தமிழ் இசைக்காகவே தம்மை அர்ப்பணித்துக் கொண்டார். ஆதலால் தமிழிசைச் சங்கம் மட்டுமே அவருக்கு மேடை வாய்ப்பு கொடுத்தது. திருவையாறு தியாகராஜ ஆராதனையில்கூட அவர் பங்கெடுத்துக் கொள்ள இயலவில்லை.

1940-களில் அவர்தான் கொடிகட்டிப் பறந்த தமிழ் நடிகர். ஆனால், அப்போது விதி விளையாடியது. லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கில் அவரும் அன்றைய நகைச்சுவை மன்னரான என் எஸ் கிருஷ்ணனும் சிறை வைக்கப்பட்டார்கள். பின்னர் பிரிவி கவுன்சில் வரை சென்று மேல் முறையீட்டில் வெற்றி பெற்றார்கள். 1947-ல் சிறைச்சாலையிலிருந்து வெளியே வந்த பிறகும் பாகவதருக்கு திரைப்படத்துறை முந்தைய ஆதரவை தர மறுத்தது. தாமே சொந்த படங்கள் எடுக்கத் துவங்கினார். மற்றவர்களது ஒருசில படங்களில் தலை காட்டினார். அவற்றில் எதுவும் வெற்றி பெறவில்லை. ஒருவேளை தமிழ் திரைப்பட ரசிகர்கள் அவரைவிட அதிகமாக மற்ற திரைப்படங்களை ரசிக்கத் துவங்கிவிட்டார்களோ என்னமோ!

காரணம் என்னவாக இருந்தாலும் மன்னர்போல வாழ்ந்த தியாகராஜ பாகவதர் மனமுடைந்து, செல்வங்களை எல்லாம் இழந்து, ஆன்மீகப் பாதைக்கு திரும்பினார். யாத்திரை செல்லும் கோயில்களில் மட்டுமே பாடலானார். 1959 நவம்பர் முதல் தேதி அவர் மறைந்தார்.

இருப்பினும் உலகெங்கிலும் இன்றும் எம் கே தியாகராஜபாகவதருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கத்தான் செய்கிறது.

ஒருநாள் ஒருபொழுதாகிலும், சத்துவகுணபோதன், உனைக்கண்டு மயங்காத, தீன கருணாகரணே, பூமியில் மானிட, மனமே நீ!, தியானமே, சொப்பன வாழ்வில் மகிழ்ந்து, வள்ளலைப் பாடும் வாயால், ஞானக்கண் ஒன்று, வதனமே சந்திர பிம்பமோ, அம்மா மனம் கணிந்து, ராதே உனக்கு போன்ற அவரது பாடல்களின் ஒலிப்பேழைகள் இன்னமும் விற்கத்தான் செய்கின்றன. பல நெஞ்சங்களில் இன்றும் வாழ்கிறார் மாமேதை எம் கே டி.

நன்றி:

திரு. ஹெச். ராமகிருஷ்ணன்

சென்னை ஆன்லைன்



கருத்துகள் இல்லை:

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...