செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

கடவுளின் நாக்கு: சந்தையின் தந்திரம்! எஸ்.ராமகிருஷ்ணன்

கிராமப்புறக் கதைகளைப் பொறுத்தவரை அந்தக் கதையை முதலில் சொன்னவர் யார் என்று கண்டறிய முடிவதில்லை. சில நேரம் கதையை உருவாக்கியவரேகூட தன் அடையாளத்தை மறைத்துக்கொண்டு கதை சொல்லக்கூடும். வேறு எங்கேயே கேட்ட, யாரோ சொன்ன கதையைத் திரும்ப சொல்வதாக கேட்பவர்களை அவர்கள் நம்ப வைப்பார்கள். ஆகவே, நதிமூலம் ரிஷிமூலம் போல கதைமூலத்தையும் நாம் கண்டறிய முடிவதில்லை.

அரபுக் கதை ஒன்று மக்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை சுட்டிக் காட்டுகிறது.

கெய்ரோ நகரின் சந்தையில் ஒரு முதியவர் மாதுளம் பழங்களை விற்றுக் கொண்டிருந்தார். ஒரு தினாருக்கு ஐந்து பழங்கள் என கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்தார். அவரிடம் யாரும் பழங்கள் வாங்க வரவே இல்லை.

அதே நேரம் ஓர் இளைஞன் அதே சந்தையில் ஒரு தினாருக்கு ஆறு பழங்கள் என விற்றான். அவனிடம் உள்ள மொத்த பழங்களும் சில நிமிடங்களில் விற்றுப் போயின. முதியவரிடம் ஓர் ஆள் வந்து ’’உனக்கு வியாபார சூட்சுமம் தெரியவே இல்லை. அதோ அந்த இளைஞனிடம் கற்றுக் கொள்!’’ என அறிவுரை கூற, அதற்கு அந்த முதியவர் சொன்னார்: அந்த இளைஞன் என் மகன்தான். நான்தான் அப்படி ஒரு தினாருக்கு ஆறு பழங்களை விற்கும்படி கூறினேன்.

எப்போதும் போட்டி இருந்தால்தான் விற்பனை சூடு பிடிக்கும். யாரோ ஒருவன் நம்மோடு போட்டியிடுவதற்கு பதிலாக நாமே பொய்யாக ஒரு போட்டியை உருவாக்கிவிடலாம் என நடத்திய நாடகம் இது. ஒருவேளை நானே கூட ஒரு தினாருக்கு ஆறு பழங்கள் தருவதாக சொல்லியிருந்தால் நீங்கள் வாங்கியிருக்க மாட்டீர்கள்.

மக்களை ஏமாற்றுவது எளிது. விலை மலிவு எனக் கூறப்படுவது சந்தையின் தந்திரம். விற்காத பொருளையோ அல்லது கூடுதல் விலை வைத்து அதில் தள்ளுபடி தருவதையோ மறைக்கும் வழிமுறை அது. மக்கள் எதையும் ஆராய்வதே இல்லை. சந்தைக்கு வரும் புத்திசாலிகூட எங்கள் பேச்சில் எளிதாக ஏமாந்துவிடுவான்’’ என்றார் முதியவர்.

இந்தக் கதை சந்தையின் சூட்சுமத்தை மக்களுக்கு புரியவைக்கிறது. இதே தந்திரத்தைதான் இன்றைய பன்னாட்டு நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின் றன. ஒரே நிறுவனம்தான் பல்வேறு பெயர்களில் பற்பசை தயாரிக்கிறது. ஒரே நிறுவனம்தான் பல்வேறு நிறங்களில், ருசிகளில் குளிர்பானம் தயாரிக்கிறது. சிப்ஸ் விற்பனை செய்கிறது. கிடைக்கும் லாபம் யாவும் ஒரே நிறுவனத்துக்கே போய் சேருகிறது.

சலுகை விலையில் வாங்கி திறமையாக நடந்துகொண்டுவிட்டதாக பொதுமக்கள் நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஏமாற்றப்படுகிறார் கள். சலுகை என்பது உண்மையில் ஒரு தந்திரம். பரிசு தருகிறார்கள் என்பது வெறும் கவர்ச்சி. தரமான பொருளின் விலை பெரிதாக குறைவதே இல்லை.

இன்று நடைபெற்றுவரும் மிகப் பெரிய மோசடிகளில் ஒன்று பிளாஸ்டிக் முட்டை. பெரியவர்கள், குழந்தைகள், நோயாளிகள் என பலரும் சாப்பிடும் முட்டையை செயற்கையாக பிளாஸ்டிக்கில் செய்து விற்பனை செய்துவருகிறார்கள். வெளியே பார்க்க எந்த வித்தியாசமும் தெரியாது. முட்டையை உடைத்தால் உள்ளே பிளாஸ்டிக் உரிந்து வருகிறது. உள்ளே இருக்கும் மஞ்சள் கரு செயற்கை யான வேதிப் பொருள். சாப்பிட்டால் நோய் வந்து விடும். இப்படி ஒரு மோசடியை ஏன் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது? இக்குற்றத்தில் ஈடுபட்டவர்களில் எவராவது இதுவரை தண்டிக்கப்பட்டிருக்கிறாரா?

எனவேதான் அரபிக் கதையை இப்போது நினைவூட்டவேண்டியிருக்கிறது.
சந்தையில் எதையும் கண்ணை மூடிக் கொண்டு வாங்காதீர்கள். மோசடி செய்பவர்கள் மீது புகார் கொடுங்கள். மோசடிகளைப் பொதுவெளியில் அம்பலப் படுத்துங்கள்.

COURTESY: TAMIL THE HINDU

கருத்துகள் இல்லை:

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...