சனி, 8 ஜனவரி, 2011

படிக்க வேண்டிய தலையங்கம்

ட்டு போட்டு பதவி தந்து, நாட்டைக் காப்பாற்றச் சொன்னால், ஓட்டைப் பிரித்து வீட்டுக்குள் இறங்காத குறையாக மக்களின் வரிப் பணத்தை விழுங்கி ஏப்பம் விடும் அரசியல்வாதிகள் இன்று சைக்கிளுக்குச் சக்கரம் மாதிரி தவிர்க்க முடியாத அம்சம் ஆகிவிட்டார்கள்.


வல்லூறுகளிடம் காயப்பட்ட புறாவாக காவல் நிலையத்தில் முறையிடப் போன அபலைப் பெண்களை, காக்கி ஓநாய்களே வேட்டையாடித் தீர்த்த வேதனைகள் பலதும் பார்த்துவிட்டோம். வயிற்று வலி என்று போகிற இடத்தில்... மயக்க மருந்து கொடுத்து, சிறுநீரகத்தையே தங்கள் கட்டணமாக உருவிக்கொண்ட சில மருத்துவர்களும் இங்கு உண்டு!

சேர்த்த பணத்துக்கு கள்வர்களிடம் இருந்து பாதுகாப்பு தேடி வங்கியிலே போட்டு வைத்தால், வங்கி ஊழியரின் உருவத்தில் உள்ளேயே கொள்ளையன் காத்திருப்பதையும் சில நாட்களுக்கு முந்தைய கைதுச் செய்தியில் கவனித்து இருப்போம். ஆசிரமத்துக்குள் ஆபாசம், கோயிலுக்குள் கும்மாளம், கல்விக் கூடத்தினுள் காமவெறி மட்டுமல்ல... நீதிதேவனுக்கே மிரட்டல் விடுக்கும் கறுப்புக் கோட்டு பற்றியும் ஊடகங்கள் அண்மையில் போட்டுத் துவைத்தன.

இப்படி, குளிக்கப் போகிற இடத்தில் சேற்றைப் பூசிவிடுகிற அவல விதிவிலக்கு களின் வரிசையில்... தனியார் செக்யூரிட்டி நிறுவனம் என்ற போர்வையில், மக்களின் பாதுகாவலர்களாகக் 'கடமை' ஆற்றிக்கொண்டே, பெண்களின் கழுத்துச் செயினை அறுத்துக்கொண்டு இருந்த ஒரு கூட்டத்தை சென்னையில் பிடித்து இருக்கிறது போலீஸ்.

சீருடைகளையே சீரழிப்புக்கான ஆயுதங்களாகப் பயன்படுத்திக்கொள்கிற இந்த அபாய கலாசாரத்தை அடிமட்டத்தில் இருப்பவர்கள் வரை கற்றுக்கொண்டு விட்டார்களே என்ற கவலை பெரிதாக அரிக்கின்றது.

மன்னன் எவ்வழியோ, மக்களும் அவ்வழி என்பார்கள்!

தாய்ப் பாலையே நஞ்சாக்கும் தரங்கெட்ட காரியம் இன்னும் எங்கெல்லாம் ஊடுருவப் போகிறதோ?

நன்றி: ஆனந்த விகடன் - 12 ஜனவரி 2011

கருத்துகள் இல்லை:

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...