வியாழன், 29 செப்டம்பர், 2016

ஆண்பால் பெண்பால் அன்பால்

ஆண்பால் பெண்பால் அன்பால்


கவிஞர் மனுஷ்ய புத்திரன், ஓவியம்: பிரேம் டாவின்ஸி
வாழ்வின் ஆதாரமான ‘ஆண்-பெண் உறவுகளுக்குள் மட்டும் ஏன் இத்தனை வேறுபாடுகள்? தொழில்நுட்பங்கள் வளர வளர, விரிசல்களும் வித்தியாசங்களும் ஏன் இவ்வளவு அதிகரிக்கின்றன? சரிசெய்யவேண்டியது எங்கே? நம் குழந்தைகளுக்கு, ஆண்-பெண் மனங்கள் எப்படி இயங்குகின்றன என்பதை எப்போது கற்றுக்கொடுக்கப்போகிறோம்? காதல், நட்பு, உறவு, பிரிவு... என ஆண்-பெண் இடையே இருக்கும் இந்த இணைப்பைப் பலப்படுத்தும் அந்த ஒன்று எது?' விடைகளுக்கான விகடனின் தேடலே இந்தத் தொடர். வாரம் ஒரு பிரபலம் தங்களுடைய வாழ்வின் வழியே, கற்றலின் வழியே வெளிச்சம் பாய்ச்ச உள்ளனர். 

மாதொருபாகனாக வாழும் கொடுப்பினை, எல்லோருக்கும் வாய்த்துவிடாது. என் மனம், ஒரு பகுதி ஆணாகவும் ஒரு பகுதி பெண்ணாகவும்தான் இருக்கிறது. ஒன்று இன்னொன்றை இடைவிடாமல் கனவு காண்கிறது; அறிய முற்படுகிறது. `என் கவிதைகளில் நான் ஏன் பெண்களைப் பற்றி அல்லது பெண்களின் மன உலகம் பற்றியே அதிகம் எழுதுகிறேன்?' என்ற கேள்வியை அடிக்கடி சந்திக்கிறேன். மறைந்த கவிஞர் ஞானக்கூத்தன், என் கவிதைகளைப் பற்றி குறிப்பிட்டபோது `அது பெண்கள் பால் வைத்த நேயம்’ எனக் குறிப்பிட்டார். 

என் வாழ்க்கையின் எந்தக் காலகட்டத்தை எடுத்துக்கொண்டாலும், அது பெண்களைப் பற்றிய நினைவுகளால் ததும்புகிறது. ஆண்கள் எப்போதும் நிழல்களாக, மங்கிய சித்திரங்களாக இருக்கிறார்கள். பாலூட்டும் பெண்கள் மீது வீசும் பால் வாசனைபோல, என் சொற்களின் இடையே பெண் வாசனை எப்போதும் இருக்கிறது. நான், பெண்களால் வளர்க்கப்பட்டவன்; பெண்களோடு வளர்ந்தவன். 

என் தாத்தா, சிங்கப்பூரில் மதபோதகராக இருந்து இறந்துபோனார். ஐந்து பிள்ளைகள் கொண்ட குடும்பத்தை, தனி ஒருத்தியாக நின்று உருவாக்கியவள் என் பாட்டி. அவள், எங்கள் வயல்களில் ஆட்சி செலுத்தினாள்; பருவத்துக்கு ஏற்ப எதையேனும் பயிரிட்டுக்கொண்டே இருந்தாள். பள்ளிக்குச் சென்றுவிட்டு, மனம் சோர்ந்தபடி வீட்டில் வந்து அமர்ந்திருப்பேன். என்னை, அவள் அப்படியே விடவில்லை. வயலில் பயிரிட்ட மக்காச்சோளக் கதிர்களை எடுத்து வந்து என்னிடம் கொடுத்தாள். என் வீட்டு வாசலில் ஒரு சாக்குப்பையை விரித்து, நான் அவற்றை விற்க ஆரம்பித்தேன். பிறகு, மாமரங்கள் காய்க்கும் காலங்களில் மாங்காய்களையும் மாழ்பழங்களையும் கொண்டுவந்தாள். நிலக்கடலை, சீதாப்பழங்கள் என நான் எங்கள் தெருவின் பிரபலமான வணிகனாக மாறியபோது எனக்கு வயது ஒன்பது. பிறகு, சந்தையில் இருந்து கரும்புக்கட்டுகளை வாங்கிக்கொடுத்தாள். அவற்றை நான் துண்டு போட்டு விற்க ஆரம்பித்தேன். ஆரஞ்சுமிட்டாய், கடலைமிட்டாய், பால்கோவா, கல்கோனா என, என் வர்த்தக சாம்ராஜ்ஜியம் விரிவடைந்தது. பணத்தைக் கையாள அப்போதே கற்றுக்கொண்டேன். 

`ஓர் எழுத்தாளனான நீங்கள் எப்படி ஒரு நிறுவனத்தைச் செயல்படுத்துகிறீர்கள்?' என யாராவது கேட்கும்போது, `என் பாட்டி, எனக்கு மாங்காய்களை விற்கக் கற்றுக்கொடுத்தாள்' என்றுதான் சொல்லியிருக்கிறேன். இது ஒரு தலைமுறை சார்ந்த விஷயம். அடிப்படையில் அவள் கடும் உடல் உழைப்பாளி; ஒரு விவசாயச் சமூகத்தின் பிரதிநிதி. வயலில் வேளாண்மை, வீட்டில் மாடுகளும் கோழிகளும் சூழ்ந்திருந்தன. 

பேரப் பிள்ளைகளுக்கும் பாட்டிகளுக்குமான உறவு, பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையிலான உறவைவிட மேலானது. ஏனெனில், பெற்றோர் - பிள்ளைகள் இடையிலான உறவில் ஓர் அதிகார யுத்தம் நிழல்போல படர்ந்திருக்கும். ஆனால், தாத்தா-பாட்டி உறவில் அது தோழமையின் பெரும் வெளிச்சமாகப் பரவும். எந்த நிலையிலும் வாழ்க்கை சோர்ந்து அமரக்கூடியது அல்ல என்பதை கற்றுத்தந்தவள் என் பாட்டிதான்.

அத்தைகள், மாமிகள், சித்திகள், இளம் பருவத்துத் தோழிகள் என, பெண்களின் வழியே உருவான உணர்வுகள்தான் என் மனதின் பாதைகளை உருவாக்கின. நடை பயின்ற ஒரு வயதில் இருந்து மூன்று வயது வரை யாராவது ஓர் அத்தையையோ சித்தியையோ தேடி ஓடிக்கொண்டேதான் இருந்திருக்கிறேன் என்று அம்மா சொல்லியிருக்கிறாள். 

`ஒருநாள்கூட அவனை வீட்டில் இருக்கவிட மாட்டீங்களா?’ என, என் சித்திகளிடம் அம்மா அலுத்துக்கொண்டிருக்கிறாள். பிறகு, நான் வீட்டிலேயே இருக்கவேண்டிய ஒரு காலம் வந்தபோது, இதை நினைத்து நினைத்து அழுதிருக்கிறாள். 

என் அம்மாவுக்கு நான் கொடுத்தது எல்லாம் துயரத்தின் கரைக்க முடியாத சுமைகள். மருத்துவமனை மருத்துவமனையாக அலைந்தாள். தர்ஹாக்களுக்கு என்னை அழைத்துச்சென்றாள். எனது நினைவுகளில் முதலாவது வேளாங்கண்ணியில் மாதாவின் முன்பாக நான் அமர்ந்திருப்பது. பிறகு, அம்மாவும் நானும் டூரிங் தியேட்டரின் சினிமா இருளுக்குள் உட்கார ஆரம்பித்தோம்.  அம்மா, நான் எதை நினைப்பேனோ, அதுதான் `சரி' என நம்பினாள். ஐந்தாம் வகுப்பில் `நான் இனி பள்ளிக்குச் செல்லப்போவது இல்லை’ என்றபோது, ‘உனக்குப் பிடிக்கலைன்னா விட்டுடு’ என்றாள். 

நான் எழுதிய என்னுடைய முதல் புத்தகம், 16 வயதில் வெளிவந்தது. ஒரு பிற்பகலில் தபால் மூலம் அந்தப் புத்தகத்தின் பிரதிகள் என்னை வந்து சேர்ந்தன. ஏன் எனத் தெரியாமல், அதை அன்று முழுக்க ஒளித்துவைத்திருந்தேன். மாலையில் அதை அம்மாவின் கையில் கொடுத்தேன். பார்த்துக்கொண்டே இருந்தாள். பிறகு, கேவிக்கேவி அழத் தொடங்கினாள். அவளது தோளில் அழுத்திக்கொண்டிருந்த என்னைப் பற்றிய பாரம், அந்தக் கண்ணீரில் கரைந்துகொண்டிருந்தது. 

இப்போதும் எங்கேயாவது உடல் நலம் இல்லாத அல்லது மனநலம் இல்லாத குழந்தையோடு போராடிக்கொண்டிருக்கும் ஓர் அன்னையைக் காணும்போது மனம் கசிந்து நின்றுவிடுகிறேன். அத்தகைய குழந்தைகளுக்காக தன் வாழ்வின் அத்தனை மகிழ்ச்சிகளையும் கனவுகளையும் கைவிட்ட பெண்கள் இருக்கிறார்கள். தங்கள் ஆளுமையை ஒளித்துக்கொண்ட  அன்னையர்கள் இருக்கிறார்கள். என் அம்மா என் நிமித்தமான அத்தனை சிலுவைப்பாடுகளையும் ஏன் ஏற்றுகொண்டாள்? அவளின் வழியே நான் வந்தவன் என்பதாலா? இல்லை, அவள் இயற்கையின் ஓர் அநீதிக்கு எதிராகப் போராடினாள். கைவிட முடியாத ஓர் அறத்துக்காகப் போராடினாள். உடல் நலமற்ற ஒரு குழந்தைக்காகத் தன்னையே ஒப்புக்கொடுப்பது அவளைப் பொறுத்தவரை அறத்துக்கான, நீதிக்கான போராட்டம். அது ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கிற ஆதார குணம். 

நான்காம் வகுப்பு படிக்கும்போது சுமதி என்கிற பெண், எங்கள் வகுப்புக்கு வந்தாள். ஒருநாள் மாலை, வகுப்பறையில் நானும் அவளும் மட்டும் இருந்தோம். அவள் எதையோ எழுதிக் கொண்டிருந்தாள். அவளிடம் முதல் வார்த்தையை எப்படியாவது பேசிவிட வேண்டும் என நினைத்தேன். ``சுமதி’’ என்றேன். அவள் தலையைத் தூக்கிப் பார்த்தாள். 

“எங்க வீட்டுக்கு ஒருநாள் வர்றியா?'' என்றேன். 

“எதுக்கு?’’ என்றாள் சிரித்துக்கொண்டே.

“இல்லை... எங்க அம்மா உன்னைப் பார்க்கணும்னு சொன்னாங்க’’ என்றேன் தடுமாறிக்கொண்டே. 

“எங்க அப்பா திட்டுவாரே!’’ என்று சொல்லிக்கொண்டே, மறுபடியும் எழுத ஆரம்பித்துவிட்டாள். 

அந்தியின் மஞ்சள் வெளிச்சம் அவள் முகத்தில் பிரகாசமாக விழுந்துகொண்டிருந்தது. அதே அந்தியின் வெளிச்சம்தான் இப்போதும் என் மனதில் விழுந்துகொண்டிருக்கிறது. எங்கேயோ அவள் ஏதோ ஒருவிதமாக இருக்கக்கூடும். நான் வாழ்நாள் முழுக்க இப்படித்தான் ஓர் அன்பை, ஒரு ப்ரியத்தை எந்த ஒரு பெண்ணிடமும் சொல்ல முடியாமல் தவித்து நின்றிருக்கிறேன். ஏதோ ஒன்று என் நெஞ்சில் அடைத்துக்கொண்டுவிடும். என் வாழ்க்கையில் இருந்த காதல்கள் அனைத்தும், அந்தப் பெண்கள் என் கன்னத்தில் அறைந்து எனக்குச் சொன்னவைதான். 

பெண் தன் ப்ரியத்தை ஒரு சிலந்தி வலைபோல பின்னுகிறாள். பல்வேறு நுட்பமான இழைகளின் வழியே ஓர் ஆணை ஆட்கொள்கிறாள். இந்த உலகத்தில் ஓர் ஆண் அடையும் அத்தனை துன்பங்களுக்கும் தான் மட்டுமே மருந்து என நம்பவைத்துவிடுகிறாள். அவளுக்கு ஓர் ஆணின் மனதை எடுத்துக்கொள்வதில் எந்தத் தடையும் இல்லை. பல சயயங்களில், ஓர் ஆணை ஒரு பெண் நேசிப்பதற்கான காரணங்கள் எளிதில் அறிய முடியாதவை. திரைப்படங்களில் அல்லது பொதுவான சமூக மதிப்பீடுகளில் தன்னை அடக்கி ஆளக்கூடிய அல்லது தன்னைப் பாதுகாக்கக்கூடிய ஓர் ஆணைத்தான் ஒரு பெண் விரும்புகிறாள் என்ற ஒரு பிம்பம் திரும்பத் திரும்ப முன்வைக்கப்படுகிறது. இது ஆண்களால் இட்டுக்கட்டப்படுகிற பெண்மை குறித்த பொய்யான பிம்பம். உண்மையில் ஒரு பெண், தான் பாதுகாக்கக்கூடிய தன்னைச் சார்ந்திருக்க்கூடிய, தன் நிழலுக்காகப் பரிதவிக்கிற ஓர் ஆணைத்தான் விரும்புகிறாள். அவளிடம் அடைக்கலம் தேடிவருகிற ஓர் ஆணிடம்தான் அவள் சகஜமாகவும் இணக்கமாகவும் இருக்கிறாள்.
ன் 17-வது வயதில், இலங்கை வானொலியில் பி.ஹெச்.அப்துல் ஹமீது நடத்திய ஒலி மஞ்சரி நிகழ்ச்சியில், கவிதைகளும் கதைகளும் எழுதத் தொடங்கினேன். அப்போது அதை வாசிக்கும்போது அப்துல் ஹமீது, எழுத்தாளரின் முழு முகவரியையும் வாசிப்பார். ஒருநாள் ஒலிபரப்பான எனது கதை குறித்து ஒரு நீண்ட கடிதம், ஒரு பெண் கையெழுத்துடன் இலங்கையில் இருந்து வந்தது. ஒரு பெண்ணிடம் இருந்து வந்த முதல் கடிதம். என் கைகள் நடுங்கின. அந்தக் கடிதத்தை எத்தனை நூறு முறை படித்திருப்பேன் எனச் சொல்ல முடியாது. பிறகு, நிறையக் கடிதங்கள் எழுதிக்கொண்டோம்.
நான் 40 பக்கக் கோடு போட்ட நோட்டை வாங்கி, அதில் முழுவதுமாக எழுதி அவளுக்கு அனுப்புவேன். எழுத என்ன இருந்தது என எனக்கு நினைவில்லை. அவள் யுத்தத்தின் கொடுங்கனவுகளை எழுதி அனுப்பினாள்; குண்டு வீச்சுக்குப் பயந்து பதுங்குகுழிகளில் இருந்த தினங்களைப் பற்றி எழுதியிருந்தாள்; இரண்டு வருடங்களுக்குப் பிறகு, என் பிறந்த தினம் ஒன்றில் எனக்கு அனுப்பிய வாழ்த்து அட்டையில் தன் காதலைத் தெரிவித்திருந்தாள். நான் மனம் கசிந்து அழுதேன். அதற்கு என்ன பதில் எழுதுவது என்றுகூட எனக்குத் தெரியவில்லை. நான் முதன்முதலாக என்னை ஒரு முழு மனிதனாக உணந்த தருணம் அது. என் தாழ்வு உணர்ச்சிகளில் இருந்தும் இந்த உலகின் அநீதி குறித்த புகார்களில் இருந்தும் நான் விடுபட்ட தருணம் அது. ஆம், ஒரு பெண் தன் காதலால் ஓர் ஆணை விடுதலை செய்வதுபோல், ஒரு யுகப்புரட்சிகூட விடுதலை செய்வது இல்லை.  

எங்கள் அம்மா தனது 44 வயதில் இறந்துபோனபோது, என் தங்கைக்கு 15 வயது. நான், என் அப்பா, என் அண்ணன், என் தம்பி அனைவரும் திகைத்துநின்றோம். பெண் இல்லாத ஒரு வீடு, உடனடியாக பாழடையத் தொடங்கிவிடுகிறது. நாங்கள் என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்து நின்றபோது, அந்த வயதில் என் தங்கை வீட்டுப் பொறுப்பை எடுத்துக்கொண்டாள். எல்லாவற்றையும் நிர்வகித்தாள்; எல்லா தேவைகளையும் நிறைவேற்றினாள். 

இதுதான் இந்தியக் குடும்பங்களின் வரலாறு. பெண்கள்தான் ஒரு குடும்பத்தின் அச்சாக இருக்கிறார்கள். அந்த அச்சு முறியும்போது, அந்தக் குடும்பம் சிதிலம் அடைய ஆரம்பிக்கிறது. பெண்கள் வகிக்கும் இந்தப் பாத்திரம் காரணமாக பெண்கள் மீது மேலும் மேலும் சுமைகள் ஏற ஆரம்பிக்கின்றன. அவர்கள் தோள்களின் மீது, ஒரு பண்பாட்டு வாழ்க்கையின் அத்தனை பாரங்களும் ஏறிவிடுகின்றன.

90-களின் முற்பகுதி என் தற்கொலைப் பாதைகளின் தடங்களைச் சோதித்துக் கொண்டிருந்த காலம். என்னால் இயலாமையின் கசப்பைக் குடித்து முடிக்க முடியவில்லை. மன அழுத்தத்தின் உச்சங்களில் சூரியன் வராத பல நாட்கள் நீண்டன. அப்போது  திருச்சியில் இருந்து வந்துகொண்டிருந்த `சுட்டும் விழிச்சுடர்’ இதழில் நிறைய எழுதிக்கொண்டிருந்தேன். அதன் ஆசிரியர் சுபத்ரா வழியே லல்லியைச் சந்தித்தேன். அந்தச் சந்திப்பு, என் வாழ்கையை அடியோடு மாற்றி அமைத்தது. வெளி உலகை நோக்கிய என் பாதைகள் லல்லியின் மூலம்தான் தொடங்கின. துவரங்குறிச்சி என்ற ஒரு சிறிய கிராமத்தின் முடிவற்ற அந்திகளின் தனிமையை, நான் உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த காலத்தில் லல்லி என் சொற்களின் பாதைகளின் வழியே என்னைத் தேடிவந்தார்.  எனக்கு முதன்முதலாக ஒரு சக்கர நாற்காலியை  வாங்கிவந்தார், திருநெல்வேலியில் என் மேல் படிப்பைத் தொடர்வதற்கு வழி செய்தார். நான் என் கூட்டுப்புழு பருவத்தில் இருந்து வெளியே வந்தேன். தன்னம்பிக்கை உள்ள மனிதனாக, தனித்து செயல்படும் மனிதனாக  உருவானதற்கு அன்று முதன்மையான காரணம் லல்லியே. அவர் மூலமாக சுந்தர ராமசாமியைப் போய்ப் பார்த்தேன். ச.தமிழ்ச்செல்வன் போன்ற சிறந்த நண்பர்களின் அறிமுகம் கிடைத்தது. சுதந்திர உணர்வும் தனித்த ஆளுமையும் சமூக உணர்வும்கொண்ட ஒரு பெண்ணால்தான் அந்த வலிமையை இன்னொருவருக்குத் தர இயலும்.
லல்லியின் அன்பு மூலம் எனக்கு அதுவரை இல்லாத ஒரு சூழலும் புதிய பாதைகளும் திறந்தன. ஒரு பெண்ணின் வருகையும் இருப்பும் ஓர் ஆணின் கடந்தகால நிழல்கள் அனைத்தையும் அழித்துவிடக்கூடியது என்பதை நான் உணந்துகொண்ட காலம் அது. ஒரு விதத்தில் லல்லியின் மூலம் என் விதியின் சக்கரம் திரும்பியது. 

2000-ல் நான் சென்னை வந்த பிறகு என் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பணி சார்ந்தும் கடும் நெருக்கடிகளைச் சந்தித்தேன். ஒரு புதிய சிநேகத்தின் வழியே, நான் அன்பின் பெரும் கனவுகளை அடைந்து, பிறகு பெரும் வீழ்ச்சியை சந்தித்த தினங்கள் அவை. கடும் மன அழுத்தத்துக்கான மருந்துகள் என்னை ஒரு பொம்மையைப்போல மாற்றிக்கொண்டிருந்தன. நான் என் விளிம்புக்கு வந்துவிட்டேன் என்றே நினைத்தேன். அப்போதுதான் செல்வியை இரண்டாவது முறையாகச் சந்தித்தேன். முதல் சந்திப்பில் சில வருடங்களுக்கு முன்னர் நாகர்கோவிலில் ஒரு நிழலாக அறிமுகமாகி கடந்துசென்றாள். இந்த முறை என் வாழ்க்கையில் ஒரு வெளிச்சமாக ஊடுருவி வந்தாள். நான் பணிபுரிந்த நிறுவனத்தில் இருந்து விலகியபோது அங்கே பணியாற்றிய அவளும் எனக்காகவே விலகினாள். `ஒரு பதிப்பகத்தின் எல்லா செயல்பாடுகளும் எனக்குத் தெரியும். நாம்  ஏதாவது செய்யலாம்’ என்றாள் உயிர்மை பதிப்பகத்தைத் தொடங்கியபோது நாங்கள் இரண்டு பேர் மட்டுமே அதன் சகலமுமாக இருந்தோம். சுஜாதா என்கிற ஒரே ஒரு வெளிச்சம்தான் எங்களை வழிநடத்தியது. நாங்கள் தோற்றுப்போய்விட வேண்டும் என்று விரும்பியவர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை அளித்துவிடக் கூடாது என்று உறுதியாகப் போராடினோம். வைராக்கியம்மிக்க நாட்கள் அவை. செல்வி அவளது வாழ்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் விட்டுக்கொடுக்காமல் போராடி தன்னை உருவாக்கிக்கொண்டவள். எந்த ஒன்றும் நமக்கு சாத்தியம்தான் என்று என்னை உணரவைத்தாள்.  இன்று என் வாழ்கையில் இருக்கும் ஒவ்வொன்றையும் உருவாக்கியதில் அவளது கரங்களும் மனமும் இருக்கின்றன. என்னை போன்ற ஒரு பைத்தியகாரனைப் பாதுகாப்பதன் எல்லா அபாயங்களும் அவளுக்குத் தெரியும்.  நான் என் முட்டாள்தனத்தின் வழியே என் வாழ்க்கையைப் பணயம்வைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவள் என்னை மீட்டிருக்கிறாள்.

ன் வாழ்வில் எத்தனையோ பெண்களுடனான சிறுசிறு வசந்தங்களில் இருந்திருக்கிறேன். நான் யாராவது ஒரு பெண்ணின் கோப்பையில், எப்போதும் நிரம்பிக்கொண்டே இருந்திருக்கிறேன். அவர்கள் எனக்குத் தந்த காதலின் அமுதத்தைப்போலவே, பிரிவின் நஞ்சையும் முழுமையாக அருந்தியிருக்கிறேன். அவர்கள் ஒருபோதும் என் வாழ்க்கையில் இல்லாமல் போகாவண்ணம் என் சொற்களில் அவர்களைப் பாதுகாத்துவைத்திருக்கிறேன். நான் ஒழுங்காகச் சாப்பிடுகிறேனா என, எங்கு இருந்தோ ஒரு சிநேகிதி கேட்கும்போதும், `உன் மரணத்துக்குப் பின்னான உலகை நான் எப்படி எதிர்கொள்வேன்?' என்ற என் கவிதையைப் படித்துவிட்டு ஒருத்தி கண்ணீர்விட்டு அழும்போதும், `என்னை இந்த வாழ்க்கை அழிப்பது அவ்வளவு சுலபம் அல்ல!' எனத் தோன்றும்.

ஒரு பெண்ணை நேசிப்பது பெரிய விஷயம் அல்ல; ஒரு பெண்ணின் நேசத்துக்குத் தகுதி உடையவனாக ஓர்ஆண் தன்னை மாற்றிக்கொள்வதுதான் பெரிய விஷயம். பெரும்பாலான ஆண்கள் ஒரு பெண்ணின் அன்புக்குத் தகுதியற்றவர்களாக தங்களை மாற்றிக்கொள்கிறார்கள். ஒரு பெண்ணை அதிகாரத்தாலோ, பணத்தாலோ, சமூகம் வழங்கும் பண்பாட்டு உரிமைகளாலோ, ஒருபோதும் ஓர் ஆணால் வெல்ல முடியாது. ஒரு பெண்ணை எப்படியாவது அபகரித்துவிடலாம் என நினைப்பவர் எவரும் மூடர்களே. அவளது அன்பின் நெருப்பு, எங்கோ மலை உச்சியில் ஒரு ரகசியக் குகையில் இருக்கிறது. அவளாக மனம் இரங்கினால் ஒழிய அவளிடம் இருந்து ஒரு துரும்பைக்கூட எவரும் பெற்றுவிட இயலாது.

ஒரு பெண்ணின் அன்பு எனும் இதழ்கள் எவ்வளவு சீக்கிரம் மலரக்கூடியதோ, அதே வேகத்தில் மூடிக்கொள்ளவும் கூடியவை. ஒரு பெண் விலகிச் செல்லும்போது ஓர் ஆண் பதற்றம் அடைகிறான். அது தனக்கு இழைக்கப்பட்ட அநீதி எனக் கருதுகிறான். ஆனால், ஒரு பெண்ணின் வாழ்க்கை என்பது, சதுரங்கக் கட்டங்களில் நகரும் ஒரு ராணியினுடையது. அவள் தன்னைப் பாதுகாத்துக்கொள்வது அவ்வளவு எளிது அல்ல. சில சமயங்களில், ஒரு பெண் தன் வாழ்க்கையின் மிகச்சிறந்த ஒன்றை ஏன் விட்டுக்கொடுத்துவிடுகிறாள் என்பதை ஒரு தன்முனைப்பு உள்ள ஆண் மனதால் புரிந்துகொள்ள இயலாது. அதை `துரோகம்' என்றோ, `நாடகம்' என்றோ அவன் நம்ப விரும்புகிறான். ஆனால், வாழ்வின் குரூரமான நாடகங்களில் பெண் எப்போதும் ஒரு பாத்திரமாக இருக்கிறாள். அவள் பெரும் கருணையின் வடிவமாக இருக்கும் அதே சமயத்தில், ஒரு சிறிய கருணைக்காக வாழ்க்கையிடம் எப்போதும் மன்றாடியவண்ணம் இருக்கிறாள்.

இந்த யுகம்... பெண்களின் யுகம்; அவள் தன் உடலையும் மனதையும் வரலாற்றின் நீண்ட தண்டனைகளில் இருந்து விடுவித்துக்கொள்ளும் யுகம்; தனக்கு எல்லாவற்றிலும் ஒரு தேர்வும் முடிவும் இருக்கிறது என அறிவிக்கும் யுகம்; அன்பை, காதலை, காமத்தை, சிநேகிதச் சமத்துவத்தின் அச்சில் சுழலச்செய்யும் யுகம். இது, ஆண்களை ஆத்திரம் அடையவைக்கிறது; அவர்களைக் கண்காணிக்கவைக்கிறது; சொந்த மகள்களையே கொல்வதற்கு ஆள் அனுப்பவைக்கிறது; நேசித்த பெண்ணின் முகத்தில் ஆசிட் ஊற்றவைக்கிறது; நேசிக்க மறுத்த பெண்ணை நடுத்தெருவில் கொலை செய்யவைக்கிறது; மகத்தான விடுதலையின் காலம் இந்த வேதனைகளைக் கடந்துதான் மேல் எழவேண்டியிருக்கிறது.

“நீ அம்முவுக்குத்தான் எப்பவும் சப்போர்ட் பண்ணுவியா?’’ என்று அப்பு எப்போதும் சண்டைபோடுகிறான். என் சிநேகிதிகளின் வரிசையின் கடைசியில் என் சின்ன மகள் என்னைக் கேலிச் சிரிப்புடன் பார்த்தபடி நின்றுகொண்டிருக்கிறாள்! 


பெண் 

மூன்று முறை அணைக்கிறாள்
முதல் முறை
பரம்பரை ஞாபகங்கள்
அவள் மனத்திலிருந்து துகள் துகளாய் உதிரும்படி
அரிக்கும் ஒரு கரையானாக

இரண்டாம் முறை
தாய் புகட்டிய முலைப்பால்
அவன் இரைப்பையிலிருந்து வற்றும்படி
நக்கும் ஒரு பூனையாக

மூன்றாம் முறை
அவள் பிள்ளைகளின் பயணங்களுக்கு
நீர் வேண்டுமென்று திமில் நிறைக்கும்
ஒரு ஒட்டகமாக.

- மகுடேசுவரன்
விடிய விடிய 

உன் அருகில் 
உறங்கிக்கொண்டிருந்தது
ஒரு பெண் 
தலைமுறை சாபங்களினால் 
அவள் கல்லாய் 
சமைந்திருந்தாள் 
ஆனாலும் விடிய விடிய 
உன் அருகில் 
உறங்கிக்கொண்டிருந்ததும்
ஒரு பெண்தான்.

- மாதுமை

காட்சி

முதலில்
நீதான் என்னைக்
கண்டுகொண்டாய்
எனக்குத் தெரியாது
மனிதர்களைப் பார்த்தவண்ணம்
முன்னே வந்துகொண்டிருந்தேன்
உயிருடைய ஒரு முகத்துடன்
பளிச்சிட்டுத் திரும்பினாய்
பின்னர் நடந்தவைக்கெல்லாம்
நான் பொறுப்பல்ல
எந்த ஒரு கணம் என்பார்வை உன் மேல் இல்லையோ
அந்த ஒரு கணம் முழுமையாக என்னைப் பார்ப்பாய்
அதையும் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
மாமன் ஒருவன் உன்னை இடம்பெயர்க்க
காட்சிகள் மாற மாற
நானும் நீயும் ஒரு நாடகத்தை முடிக்கிறோம்.

- ஆத்மாநாம்

மாயம்

நீ
தெரிந்துகொள்ள வேண்டாம்
உனக்காக
நான்
எனக்குப் பிடித்த
காபியிலிருந்து தேநீருக்கு மாறியது
தெரிந்துவிட்டால்
காபி
எனக்குப் பிடிக்காத
தேநீராகவும்
இருக்கும்
மாயம் எனக்கு
மறைந்துபோகும்.

- தேவதச்சன்

பவழமல்லி

கதை கேட்கப் போய்விடுவாள் அம்மா. மாடிக்
கொட்டகைக்குப் போய்விடுவார் அப்பா. சன்னத்
தாலாட்டின் முதல் வரிக்கே குழந்தைத் தம்பி
தூங்கிவிடும். சிறுபொழுது தாத்தாவுக்கு
விசிறியதும் அவரோடு வீடு தூங்கும்

பூக்களெல்லாம் மலர்ந் தோய்ந்த இரவில் மெல்ல
கட்டவிழும் கொல்லையிலே பவழமல்லி

கதை முடிந்து தாய் திரும்பும் வேளை மட்டும்
தெருப்படியில் முழு நிலவில் அந்த நேரத்
தனிமையில் என் நினைப்புத் தோன்றுமோடி?

- ஞானக்கூத்தன்

பாண்டி விளையாட்டின்
முதல் உப்பை நான்
கடவுளுக்குக் கொடுத்தது
கிடையாது

முதல் பல் விழுந்தபோது
சாணியில் பொதிந்து
சொர்க்கம் நோக்கி
எறிந்தது கிடையாது

ஒரே ஒரு தடவைதான்
விட்டில் பூச்சிகளை
பக்கத்துக்கொன்றாய்
நூலில் கட்டி
பரிதவிக்கவிட்டிருக்கிறேன்

மருத மர நிழல்கள் மீட்டாத
தண்டவாளச் சோகங்களை
எனக்கேன் நிரந்தரித்தாய்
சசி.
- கலாப்ரியா

உனக்கென்ன
சாமி பூதம் 
கோவில் குளம் ஆயிரமாயிரம்
ஜாலியாய் பொழுதுபோகும்
வலப்பக்கக் கடல்மணலை
இடப்பக்கம் இறைத்திறைத்து
நகக்கணுக்கள் வலிக்கின்றன
அடியே-
நாளையேனும் மறக்காமல்
வா.

- பாலகுமாரன்
Courtesy: விகடன்

கருத்துகள் இல்லை:

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...