வியாழன், 20 அக்டோபர், 2016

90 - வது ஆண்டில் ஆனந்த விகடன்

90 - வது ஆண்டில் ஆனந்த விகடன்

``எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் 
வேறொன்றறியேன் பராபரமே.’’
நினைத்துப்பார்க்கையில், பெருமிதத்தால் நெஞ்சம் விம்முகிறது!

இத்தனை நீண்டகால வரலாறும் பாரம்பர்யமும் இந்தியாவில் வெகுசில பத்திரிகைகளுக்கு மட்டுமே உண்டு. 90 ஆண்டுகளுக்கு முன்னர் `ஆனந்த விகடன்’ பத்திரிகையோடு தொடங்கிய விகடன் குழுமத்தின் பயணம், இப்போது ஆலமர விழுதுகளைப்போல ஆழ அகல வேர் பதித்திருக்கிறது. 

இந்த நீண்ட நெடிய வரலாற்றில் தமிழ்ச் சமூகம் அடைந்துவந்துள்ள மாற்றங்களும், அதில் விகடன் உருவாக்கிய தாக்கங்களும் ஏராளம். எதற்கும் எப்போதும் எவரிடமும் சமரசம் செய்துகொள்ளாத உறுதிதான் விகடனின் மிகப்பெரிய பலம். நெஞ்சில் உரத்துடன், நேர்மைத் திறத்துடன், துலாக்கோலின் துல்லியத்துடன் தனது எண்ணங்களை முன்வைப்பதுதான் விகடனின் தனித்துவம். அதனாலேயே அரசியல் நிகழ்வுகள் குறித்த பார்வையில் தொடங்கி திரைப்பட விமர்சனம் வரை விகடனின் கருத்து என்ன என்பதை தமிழர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்குகிறார்கள். 
அச்சு ஊடகத்தில் மட்டும் தன்னை இருத்திக்கொள்ளாமல், இப்போது இணைய உலகிலும் தனது பாய்ச்சலை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது விகடன். காலமும் தொழில்நுட்பமும் கைகோத்து, விகடனையும் வாசகர்களையும் இன்னும் நெருக்கமாகப் பிணைத்திருக்கிறது. விகடனின் கிளைகள் அதிநவீனத் தொழில்நுட்பத்தோடு உறவாடினாலும், தமிழர்களின் ரசனையிலும் பண்பாட்டிலும் இரண்டறக் கலந்து நிற்பதுதான் நம் வெற்றியின் ரகசியம்.

விகடன் குழுமத்தின் ஒவ்வொரு காலகட்ட சாதனைகளுக்கும் வாசகர்களின் அன்பும் ஆதரவுமே ஆணிவேர். அதே சமயம் லட்சக்கணக்கான வாசகர்களின் சிந்தனை வீச்சோடும், கருத்தாழத்தோடும், நையாண்டியோடும், வேகத்தோடும் போட்டிபோடுவது மிகப் பெரிய சவால்.  

இது, தொழில்நுட்பத்தின் யுகம். இதழ்கள், நூல்கள், தொலைக்காட்சி, அலைபேசி, இணையம் என எந்த ஊடகத்தின் வழியாக தமிழ்கூரும் நல்லுலகம் வாசிக்க, பார்க்க, கேட்க, பங்கேற்க விரும்பினாலும் விகடன் தயார். வரும் காலத்தில், இந்த ராஜபாட்டையில் வாசகர்கள் படைப்பாளிகளாகவும் விமர்சகர்களாகவும் பங்கேற்க வேண்டும். 

`எல்லோரும் இன்புற்றிருக்க!’ விகடனின் விருப்பம் இதுதான்.

வணங்குகிறோம்... வாழ்த்துங்கள்!

கருத்துகள் இல்லை:

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...