வியாழன், 22 ஜூன், 2017

சர்க்கரை நோய் சிகிச்சையில் மஞ்சளின் பயன்கள்

தகவல் உதவி: தி இந்து தமிழ், Published: July 18, 2015
டைப்-2 சர்க்கரை நோய் சிகிச்சையில் மஞ்சளில் உள்ள ஒரு பொருள் பயன்படுகிறது என்று இந்திய வம்சாவளி அறிவியலாளர் ஒருவரின் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஞ்சளில் உள்ள கர்கியூமின் (Curcumin) என்ற ஒரு பொருளுடன் ஒமேகா-3 கொழுப்பு சேர்த்துக் கொடுக்கப்படும் போது டைப்-2 சர்க்கரை நோய் உருவாவது தாமதமாகும் அல்லது தடுக்கப்படும் சாத்தியக் கூறுகள் அதிகமிருப்பதாக இந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

டைப்-2 சர்க்கரை நோய் என்பது இன்சுலினை நம்பியிராத சர்க்கரை நோயாகும். இது லைஃப் ஸ்டைல் மற்றும் மரபணுக்கூறுகளால் பெரும்பாலும் தீர்மானிக்கப்படுகிறது என்றாலும், கணையத்திசுவினுள் தற்காப்பு செல்கள் என்று அழைக்கப்படும் ‘மேக்ரோபேகஸ்’ என்பது நுழைந்து 'சைட்டோகைன்ஸ்' என்ற அழற்சி உருவாக்கும் புரோட்டீன்களை சுரப்பதால் இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்கள் சேதப்படுத்தப்படுகிறது என்றும் இதனால் டைப் 2 சர்க்கரை நோய் ஏற்படுகிறது என்றும் பல ஆய்வுகள் நிறுவி உள்ளன.

இந்த மேக்ரோபேகஸ் செயல்பாட்டைத் தடுத்தால் டைப் 2 சர்க்கரை நோய் பெருமளவு தடுக்கப்படலாம் என்பது ஆய்வாளர்கள் பலரின் துணிபு ஆகும்.

தற்போது நியுகாசில் நியூட்ராசியூட்டிகல்ஸ் ஆராய்ச்சி குழு, இந்திய வம்சாவளி மருத்துவ ஆய்வாளர் மனோகர் கார்க் தலைமையில் கூடி புதிய ஆய்வை நடத்தியுள்ளனர். இதில் மஞ்சளில் உள்ள கர்கியூமின் என்ற பொருளை ஒமேகா-3 என்ற கொழுப்புடன் சேர்த்துக் கொடுத்து 80 பேரிடம் ஆய்வு நடத்தியுள்ளனர்.

இது குறித்து மனோகர் கார்க் கூறும் போது, “டைப் 2 சர்க்கரை வியாதியின் மூலக்காரணம் உடலில் தானகாவே ஏற்படும் அழற்சிக்கூறுகளாகும். இது இன்சுலின் சுரப்பதை தடுத்து விடுகிறது. இதனால் அழற்சி உருவாக்கத்தை அதன் முளையிலேயே கிள்ளி எறிவது ஒரு வழி.

இதனையடுத்து மஞ்சளில் உள்ள கர்கியூமின் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு ஆகிய இரண்டு அழற்சிக்கு எதிரான மருந்துப் பொருளை இணைத்துக் கொடுத்தால் பலன் இருக்கும் என்று கருதினோம். 

மஞ்சளின் மற்ற மருத்துவ குணங்கள் நாம் அறிந்ததே” என்றார்.

மஞ்சளிலிருந்து பெறப்படும் கர்கியூமின் இஞ்சிக் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். 

“இப்போதெல்லாம் இந்தியாவில் மஞ்சள் அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை, காரணம் மேற்கத்திய துரித உணவு வகைகளுக்கு நாம் அதிகம் பழகத் தொடங்கிவிட்டோம். இதனால்தான் டைப் 2 சர்க்கரை நோய் இந்தியாவில் அதிகம் ஏற்படுகிறது. இந்தியாவில் இது தற்போது அதிகம் காணப்படுவது என்பது விரைவில் நாட்டின் ஒரு சுகாதாரச் சுமையாகவே மாறும் அபாயம் உள்ளது. 

200மி.கிராம் கர்கியூமின் மற்றும் ஒரு கிராம் ஒமேகா-3 கொழுப்பு கொண்ட கேப்சூல்கள் இந்தச் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்டது.

கர்கியூமின் மற்றும் ஒமேகா-3-ன் அழற்சி எதிர்ப்புக் குணங்கள் வேறுபட்டது. எனவே இவை இரண்டும் ஒன்றையொன்று பொருத்திக் கொண்டு செயல்படுகிறதா என்பதை சோதித்துப் பார்த்தோம். 

எங்களைப் பொறுத்தவரை இந்த சேர்க்கை மருந்து பாதுகாப்பானது, பக்க விளைவுகள் அற்றது. சர்க்கரை நோயை நிர்வகிப்பதில் பெரும் பயன் இதற்கு இருக்கிறது என்று கருதுகிறோம்” என்றார் மனோகர் கார்க்.

கருத்துகள் இல்லை:

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...