சனி, 24 ஜூன், 2017

“உலகுக்கு உப்பாக இருங்கள்!” - எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்

ள்ளி நாட்களின்போது தேவாலயச் சுவர் ஒன்றில், இந்த வாசகத்தைப் பார்த்தேன். அந்த வார்த்தைகள் என்னை மிகவும் வசீகரித்தன. ஒவ்வொரு முறையும் மனதுக்குள் சொல்லிப் பார்க்கும்போது சிலிர்ப்பாக இருந்தது. உண்மையில் அது யாரால், எதற்காகச் சொல்லப்பட்டது என அப்போது தெரியாது. ‘ஏன் நான் உலகுக்கு உப்பாக இருக்க வேண்டும்... உண்மையில் ஒருவன் உலகுக்கு உப்பாக இருப்பது எப்படி?’ என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருப்பேன்.   

ஒரு முறை மரண வீடு ஒன்றில் ஒரு பெரியவர் பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது. ‘‘அவன் கொண்டுவந்த உப்பு அவ்வளவுதான். கதை முடிஞ்சி போச்சு’’ என இறந்து போனவரைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். எவ்வளவு அர்த்தமுள்ள வார்த்தைகள்! மனித வாழ்க்கை என்பது உப்புதானா? ஒவ்வொருவரும் தனக்கான உப்பைக் கொண்டு வருகிறார்களா? 

இலக்கியமும் வரலாறும் படிக்கப் படிக்க உப்பின் வரலாறும் பங்களிப்பும் புரியத் தொடங்கியது. உப்புதான் மானுடப் பண்பாட்டின் முக்கியக் காரணி. ஒவ்வொரு குடும்பமும் தனக்கான உப்பின் ருசியைக் கொண்டிருக்கிறது. பைபிளில் உப்பைப் பற்றி 30 இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. உப்பின் பயன்பாட்டை அறிந்திரா விட்டால், மனிதர்கள் நாடோடி வாழ்க்கையை விட்டிருக்கமாட்டார்கள். 

உப்பை நேர்மைக்கும், நீதிக்கும் அடையாளச் சின்னமாகக் குறிக்கிறார்கள். உப்பின் மீது சத்தியம் செய்யும் வழக்கம் நம்மிடம் இருக்கிறது. பிரிட்டிஷ் இந்தியாவில், உப்பு விற்பனையைத் தடுக்க பெரும் உப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தது. இப்படி உப்பின் வரலாற்றை அறிந்து கொண்டபோது ‘உலகுக்கு உப்பாக இருங்கள்’ என்ற இயேசுநாதரின் வாசகம், மனதில் பேரொளியுடன் ஒளிரத் தொடங்கியது.

இயேசுவின் மலைப் பிரசங்கத்தில்தான் இந்த வாசகம் இடம் பெற்றுள்ளது. தன்முன்னே திரண்டிருந்த எளிய மனிதர்களைப் பார்த்து இயேசு இவ்வாறு கூறுகிறார். ஞானம் என்பதே உப்புதானே! உப்பைப் பகிர்ந்து தருதல்தானே அன்பின் முதற்செயல். நம் வாழ்க்கை என்பது நமக்கானது மட்டுமில்லை. உலகுக்கான நமது பங்களிப்பு முக்கியமானது. உப்பு போல நம்மை முழுமையாகக் கரைத்துக்கொண்டு, உலகுக்கு உயிர்ப்புத் தர வேண்டும். உப்பு என்பது வெறும் சுவை மட்டுமில்லை; உயிரின் ஆதாரம். உப்பு மருந்தாகப் பயன்படுகிறது. உப்பு, எல்லாப் பொருள்களையும் பாதுகாக்கக் கூடியது.    
உப்பு நிறம் மாறியிருந்தால் அதைப் பயன்படுத்தத் தயங்குவார்கள். மனிதர் களுக்கும் இது பொருந்தக்கூடியதுதானே. உப்பு எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும். அதில் தூசி கலந்துவிட்டால் குப்பையில் கொட்டி விடுகிறோம். 
உலகுக்கு எழுத்துதானே உப்பாக இருக்கிறது. எழுத்தாளன் என்பவனும் சமூகத்துக்கு உப்பாகத்தானே இருக்கிறான். உப்பு இல்லா விட்டால் சொரணை இல்லாமல் போய்விடும். உப்பு போட்டுச் சாப்பிட்டால் நன்றியுணர்ச்சி இருக்கும் என்பார்கள். எழுத்தும் மனிதர்களின் சொரணையை, மனஎழுச்சியை, உத்வேகத்தை உருவாக்கவே முனைகிறது. 

உலகுக்கு வழிகாட்டிய மகான்கள் தங்களை உப்பாகவே கருதியிருக்கிறார்கள். சமயங்கள் யாவும் அன்பையே வெளிப்படுத்துகின்றன. அன்பை அடையாளப்படுத்தும் பொருளாக எப்போதும் உப்பு இருக்கிறது. இன்றும் புது வீடு குடிபோகிறவர்கள் உப்பைத்தான் கொண்டு போகிறார்கள்.

நூறு வருஷங்களுக்கு முன்பு வரை கிராமத்தில் உப்பு மட்டுமே வெளியிலிருந்து வாங்கப்பட்ட பொருள். உப்பு விற்பவர் ஒற்றை மாட்டு வண்டியில் உப்பை ஏற்றிக்கொண்டு வந்து வீடு வீடாக விற்பனை செய்வார். அப்படி உப்பு வியாபாரி வரும் நாளில், மொத்தமாக தேவையான உப்பை வாங்கி வைத்துக்கொள்வார்கள்.  தானியங்களைக் கொடுத்துவிட்டு உப்பை வாங்கிச் செல்லும் பண்டமாற்று முறையும் இருந்தது.

உப்பைத் தனது ஏகபோக உரிமையாக வைத்திருந்த பிரிட்டிஷ் அரசை எதிர்த்தே, காந்தி சத்தியாக்கிரகம் மேற்கொண்டார். சபர்மதி ஆசிரமத்திலிருந்து தண்டி வரை 386 கி.மீ நடந்து சென்று உப்பை எடுத்தார்.  கையில் ஊன்றுகோலுடன் தனது பாத யாத்திரையைத் துவக்கியபோது காந்திக்கு வயது 61. யோசித்துப் பாருங்கள்... அறுபது வயதில் ஓய்வுபெற்று பூங்காவின் பெஞ்சில் அலுப்பும் சலிப்புமாக சாய்ந்து கிடக்கும் முதியவர்களுக்கு மத்தியில் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து காந்தி நடைபயணம் மேற்கொள்கிறார். உலகுக்கு உப்பாக இருப்பது என்றால் இதுதான்.

பள்ளி நாட்களில் படித்த அந்த வாசகம், மெல்ல மனதில் வேரூன்றி இன்று பெரும் விருட்சமாக மாறியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் எனக்கு நானே ‘உலகுக்கு உப்பாக இருக்கிறேனா’ எனக் கேட்டுக் கொள்கிறேன். இந்த சுயபரிசோதனை முக்கியமானது. 

மகாத்மா காந்தி போராடிப் பெற்ற உப்புக்கான சுதந்திரத்தை இன்று நாம் இழந்துவிட்டோம். பன்னாட்டு நிறுவனங்கள் உப்பை ஏகபோகமாக விற்பனை செய்கின்றன. உப்பு தயாரிக்கும் சிறுவணிகர்கள் முடக்கப்படுகிறார்கள். ‘உங்கள் பேஸ்ட்டில் உப்பு இருக்கிறதா?’ எனக் கேட்கும் பன்னாட்டு வணிக நிறுவனங்கள், நமது சொரணையைத் தேய்த்து மொண்ணையாக்குகின்றன. நம்மைச் சுற்றி நிகழும் அவலங்களைக் கண்டுகொள்ளாமல் ஒதுங்கிப் போவதுத் தவறு. நாம் விழிப்பு உணர்வுடன், சுரணையுடன், பிரக்ஞையுடன் செயல்பட வேண்டியது அவசியம். ஆகவே, ஒவ்வொருவரும் ‘நாம் உலகுக்கு உப்பாக இருக்கிறோமா’ எனக் கேட்டுக்கொள்ளவும், உப்பாக இருக்கவும் வேண்டியிருக்கிறது. 

சந்திப்பு: வெ.நீலகண்டன்
படம்: கே.ராஜசேகரன்
COURTESY: JUNIOR VIKATAN

கருத்துகள் இல்லை:

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...