சனி, 15 ஜூலை, 2017

கவிக்கோ - அஞ்சலி

மலரின் நறுமணம் போகுமிடம் - பழநிபாரதி

ஓவியம் : முரளிதரன் - படம் : கே.ராஜசேகரன்
ங்கே ஒருநாள்
மரணத்தைக் குடித்து
மலரும் ஒரு பூவாக
என்னைக் காண்பீர்கள்
- அப்துல் ரகுமான்

கவிதைக்கு உப்பாக இருந்தவர் கவிக்கோ அப்துல் ரகுமான். கடலுக்குப் பக்கத்தில்தான் அவரது வீடும் இருந்தது. கிழக்குக் கடற்கரைச் சாலையில், பனையூரில் அமைந்த அவரது இல்லத்தில் எங்கள் சந்திப்புகள் அடிக்கடி நிகழ்ந்துகொண்டிருந்தன. அவருடைய பவளவிழா நினைவாக ‘மகரந்த மழை’ என்று அவர் எழுதிவைத்திருந்த பாடல்களை ஒரு தனி இசைத் தொகுப்பாக ‘தமிழ் அலை’ இசாக் வெளியிட நினைத்தார். அதற்காக அண்ணன் அறிவுமதி, இசையமைப்பாளர் தாஜ்நூர், இசாக், நான் நான்கு பேரும் அவரைச் சந்திக்கப்போயிருந்தோம்.

எப்போது அவரைச் சந்திக்கப் போனாலும் அவரை மட்டும் சந்தித்துவிட்டுத் திரும்பமுடியாது. அவரோடு கலீல் ஜிப்ரான் இருப்பார்; வயலார் இருப்பார்; கண்ணதாசன் இருப்பார்; வட இந்திய இசையமைப்பாளர் நௌஷாத், இளையராஜா, மிர்ஸா காலிப், ஜாவீத் அக்தர், ஓஷோ, ரூமி, எஸ்ரா பவுண்ட் எனப் பலரும் வந்து வந்துபோவார்கள். அத்தகைய உரையாடல்கள் கால எந்திரத்தில் பயணம் செய்வதுபோல இருக்கும். படிமங்களாலேயே அடுக்கப்பட்ட மலையாளக் கவி வயலாரின் பாடலொன்றைத் தனது மடிக்கணினியில் தேர்ந்தெடுத்து ஒலிக்கவிடுவார். அதன் அழகையும் அர்த்தத்தையும் தேவராஜனின் இசையையும் சொல்லிச் சொல்லி எங்களை வெகுதூரம் கூட்டிச் சென்றுவிடுவார்.

வாணியம்பாடியில் அவர் பேராசிரியராகப் பணியாற்றிய 30 ஆண்டுகள் (1961-1991) கவிதைக்கு அணி சேர்த்த காலம். அவரிடம் படித்த மாணவர்களில் பெருங்கூட்டம் கவிதையைக் காதலிக்கத் தொடங்கியது. அப்போது ‘கவி ராத்திரி’ என்று அவர் நடத்திய கவிதைக் கலையரங்கம் குறிப்பிடத்தக்கது. ‘குருட்டுப் பிச்சைக்காரனின் பாத்திரத்தில் விழுந்த செல்லாத காசு’, ‘நீருக்குத் தாகம்’, ‘அந்தி சிவப்பதேன்?’ இப்படிப் புதிய தலைப்புகள், பல சுற்றுகள்கொண்ட புதிதான மேடைக்கவி  நிகழ்வு அது. கஸல், கவ்வாலி, முஷைரா போன்ற கவிதையின் பிறமொழி நிகழ்த்துக் கலைகளைக் கவிதைக் காதலர்களுக்கு அறிமுகம் செய்து, தமிழுக்கு அந்தச் சுவையையும் மணத்தையும் அள்ளி அள்ளிக் கொடுத்தவர் அப்துல்ரகுமான். அவரது ஆழ்ந்த கவியுளம் அறிந்து ‘ஜூனியர் விகடன்’ அவருக்கு அளித்த 102 வார இலக்கியத் தொடர், வெகு ஜனங்களை உலக இலக்கியத்தின் அழகுகளை ரசிக்கவைத்தது. உருது, அரபு, சீனம், ஜப்பானியம், ஆங்கிலம், பிரெஞ்சு எனக் கவிக்கோ காட்டிய கவிதையின் திசைகள் வாசகர்களுக்கு ஒரு புதிய தேடலை உண்டாக்கியது.

என் அப்பாவின் நண்பரான அப்துல் ரகுமானை, சிறுவயதில் நான் சந்தித்த சித்திரம் இன்னும் என் நினைவில் நிறம் மாறாமல் இருக்கிறது. வாணியம்பாடியில் இருந்து ஒரு கவியரங்கத்திற்காகச் சென்னைக்கு வந்திருந்தார். தியாகராயர் நகரில் ஒரு விடுதியில் தங்கியிருந்தார். அப்பா என்னை அவருக்கு அறிமுகப்படுத்தினார். பிறகு வந்து கூட்டிச் செல்வதாகப் பக்கத்தில் எங்கோ போயிருந்தார்.

கவிக்கோ என்னுடனான சில வார்த்தைகளுக்குப் பிறகு எழுதுவதில் தீவிரமானார். நான் அவரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு கையில் சிகரெட், இன்னொரு கையில் பேனா, இரண்டிலும் நெருப்பு அணையவே இல்லை. எழுதுவதற்காக ஒரே மாதிரி சின்னஞ்சிறியதாக நறுக்கப்பட்ட தாள்கள், முத்துமுத்தான கையெழுத்து, அவர் வேறோர் உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார். என் அப்பாவிற்குப் பிறகு, எழுதும்போது நான் அருகிருந்து கவனித்த கவிஞர் கவிக்கோதான். அன்று மாலை அந்தக் கவிதையை அவர் மேடையில் பாடியபோது கேட்ட கைத்தட்டல்கள் அவருக்கானதாக மட்டுமே ஒவ்வொரு மேடையிலும் அவரைத் தொடர்ந்து கொண்டிருந்தது.

மேடைக் கவிதை வாசிப்பில் மக்களை ஈர்க்கும் அப்படியான ஒரு காந்தமொழியை அவர்தான் கட்டமைத்தார் என்றால், அது மிகையல்ல. கம்பன் விழாக் கவியரங்கங்கள் அவருக்குப் பெரும்புகழைப் பெற்றுத் தந்தன. ‘ரகுமான்! கவியரங்கங்களில் நீ எப்போதும் பிறரை வெல்வாய்! இன்று உன்னையே நீ வென்றுவிட்டாய்’ என்று தமிழறிஞர் அ.ச.ஞானசம்பந்தன் புகழ்ந்ததையும் ‘கம்பனுக்குத் தோன்றாத கற்பனைகள் ரகுமானுக்குத் தோன்றுகின்றன’ என்று வாகீசக் கலாநிதி கி.வா.ஜ. வியந்ததையும் இங்கே மேற்கோள் காட்டுவது பொருந்தும்.

அப்துல் ரகுமான் புல்லாங்குழலால் கவிதை எழுதுகிறவர் என்று நான் குறிப்பிட்டிருக்கிறேன். இது அலங்கார வர்ணனை அல்ல. குழலின் துளைகளில் சிலவற்றை மூடிச் சிலவற்றைத் திறந்தால்தான் கானம். இது ஓர் அழகான முரண். ‘படைப்புக்குத் தேவை இரு முரண்கள். ஆண்மை - பெண்மை என்ற இரு முரண்கள். முரண் வெறும் உத்தியல்ல; அது பிரபஞ்ச ரகசியம். உண்டும் இல்லையும் சேர்ந்ததே முழு உண்மை’ என்கிறார் அப்துல் ரகுமான். வாழ்வின் இந்த முரண்களுக்கிடையில் முழு உண்மையைத் தேடி நடந்த ஒரு யாத்திரைதான் கவிக்கோவின் கவிதைகள். அவருடைய ‘பித்தன்’ தொகுப்பில் பக்கத்திற்குப் பக்கம் முரண்கள் அப்படி முன்னும் பின்னுமாக மோதுவதைப் பார்க்க முடியும். முகமூடிகள் கழன்று விழுகிற சத்தத்தைக் கேட்கமுடியும். தமிழில் இது ஒரு புதுமையான சித்தர் இலக்கியம்.

பித்தன் கடைத்தெருவில் நின்று ‘அனாதையை ஆதரிப்பார் யாருமில்லையா?’ என்று கூவுகிறான்.

‘யார் அந்த அனாதை?’ என்று கேட்கிறார் கவிக்கோ.

‘உண்மை’தான் அந்த அனாதை என்ற பித்தன், “அதை யாருமே அடையாளம் கண்டுகொள்ளவில்லை’ என்கிறான். ‘ஏன்?’ என்கிறார் கவிக்கோ.

‘நெற்றியில்
திருநீறோ நாமமோ
இல்லை;
மார்பில்
சிலுவை இல்லை;
தலையில்
தொப்பியில்லை
அதனால் அதை
யாருமே
அடையாளம் கண்டுகொள்ளவில்லை’


என்கிறான் பித்தன். ‘நீ மட்டும் எப்படி அடையாளம் கண்டுகொண்டாய்’ என்று கேட்கிறார் கவிக்கோ.

‘யாருமே
அடையாளம்
கண்டுகொள்ளாதிலிருந்து
அதைநான்
அடையாளம் கண்டுகொண்டேன்’


என்கிறான் பித்தன்.
அப்துல் ரகுமானின் வார்த்தைகள் சாதி மதமற்ற அமைதியான ஓர் இடத்தைத் தேடி நகர்ந்துகொண்டே இருந்தன. பூமி புன்னகைப் பூக்களால் நிறைந்திருக்க வேண்டும்; வானம் வெள்ளைப் புறாக்களால் விரிந்திருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.

திராவிட இயக்க ஈர்ப்பு, பொதுவுடைமை இலட்சியம், தலித்தியம், ஆன்மீகப் பற்று, இறைத் தத்துவம் அனைத்தையும் கொண்டாடினார். ‘ஏனிந்த முரண்பாடு?’ என்று அவரிடம் கேட்கமுடியாது. முரண்பாடுகளுக்கிடையில் வலைவீசி அவர் ஒரு முழு உண்மையைக் கையில் வைத்திருப்பார்.

‘தன்னைத்தானே
உடைத்துக்கொண்ட
கண்ணாடி நான்
இப்போது
நான் என்பது
பன்மை’


என்பார். எப்படி மறுக்க முடியும்? ‘நெருப்புக் காய்களால் சதுரங்கமாடும் விரல்கள்’ என்று தன் கவிதை குறித்து அவர் எழுதிய சொற்றொடர் ஒன்று எனக்கு முன்னால் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.

‘திரையை எரி - மர்மச்
செய்திகள் தெரியட்டும்
கரையை உடை - தேக்கக்
கனவுகள் ஓடட்டும்
தரையை விடு - வானத்
தத்துவம் விளங்கட்டும்
உரையை முடி - மௌனம்
உண்மைகள் பேசட்டும்’


வார்த்தைகளை அதீதமாகக் காதலித்து, அதீதமாக வெறுத்து, அவற்றின் இயலாமையைப் புரிந்துகொண்ட ஒரு கவிஞனால்தான் இப்படி வாழ்வின் திரையை விலக்கி அதன் சுயதரிசனத்தைக் காட்ட முடியும்.

‘ஞானிகள் செய்ய முடியாததை
விஞ்ஞானி செய்துவிட்டான்
இதோ
நீயே மழித்துக்கொள்கிறாய்;
நீயே துவைத்துக்கொள்கிறாய்;
ஏன்
கழிப்பறையைக்கூட
நீயே கழுவிவிடுகிறாய்
இனி
யாரைப் பார்த்து
‘எட்டி நில்’ என்பாய்?’
கவிக்கோ ஒரு சூஃபியாக விஸ்வரூபமெடுத்துக் கேட்கிற கேள்வி இது. ‘இறைவா உன்னைக் கேட்கிறேன்... நீ இந்துவா முஸ்லிமா?’ என்று கேட்கிற துணிச்சலும் அதனாலேயே அவருக்குள் இருந்தது.

உலகின் மிகச்சிறந்த நூல்களுள் ஒன்றான ‘மிர்தாதின் புத்தகம்’ பற்றி - ‘இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகம் இது’ என்று ஓஷோ குறிப்பிட்டிருப்பார். அந்த வார்த்தைகளின் நிழல் அப்துல் ரகுமானின் கவிதைகள் மீதும் கவிழ்ந்து பரவி நிற்கிறது.ஆமாம்... இதயத்தால் படிக்கவேண்டிய கவிதைகளையே அப்துல் ரகுமான் எழுதினார். கவிதை என்பது மூளையால் படிக்கவேண்டியது என நினைக்கும் நவீனக் கவிஞர்களின் கண்களை நாம் திறக்க வேண்டியதில்லை. ‘உன் தோட்டத்தில் பூத்திருக்கிறது என்பதற்காக அரளிப் பூவே அழகானது என்கிறாய். வேறு தோட்டத்தில் பூத்திருக்கிறது என்பதற்காக ரோஜாவைப் பூவே இல்லை என்கிறாய்’ என்கிற அவரது வரிகள் அவர்களுக்கு அப்படியே பொருந்தும்.

“அப்துல் ரகுமானோடு உரையாட வாய்ப்பு கிடைத்த ஒருவர், கொஞ்ச நேரத்தில் அவரின் கவிதை குறித்த அறிதல் பரப்பின் அகலத்தையும் புரிதல் குறித்த ஆழத்தையும் எளிதாக உணர்ந்து கொள்ளலாம். ‘கவிதை’ என்ற அந்தப் பேரழகைக் குறித்துத் தவிர வேறு எதையும் தனது உரையாடலில் கலந்துவிட அவர் அனுமதிப்பதில்லை’’ என்று பேராசிரியர் க.பஞ்சாங்கம் சொல்வதைக் கவிக்கோவோடு பழகும் ஒவ்வொரு பொழுதும் நான் உணர்ந்திருக்கிறேன். அதனாலேயே அவர் திரையிசைக்குப் பாடல் எழுத வரவில்லை. இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் இருவரும் அவரை அழைத்தார்கள். அந்த அன்பின் அழைப்பை அதே அன்பின் நெகிழ்வோடு அவர் தவிர்த்தார்.

கவிஞர் முத்துலிங்கத்திற்கு ‘கவிக்கோ விருது’ வழங்கும் விழா சென்னை கவிக்கோ மன்றத்தில் 28.4.2017-ல் நிகழ்ந்தது. விருதை அளித்துச் சிறப்பிப்பதற்காக இசைஞானியை அழைத்திருந்தார் கவிக்கோ.

கவிக்கோவின் கவிதைகள் குறித்து உயர்வாகவும் நெகிழ்வாகவும் உரையாடினார் இளையராஜா. அவரது ‘சுட்டுவிரல்’ தொகுப்பில் உள்ள ஒரு கவிதையின் முதல் நான்கு வரிகளை இரண்டு மெட்டுகளில் இசையமைத்துப் பாடினார். ‘இது அம்மியா சிற்பமா?’ என்று கவிக்கோவைப் பார்த்துக் கேட்டார். பாடல் எழுதுவது குறித்து - ‘அம்மி கொத்தச் சிற்பி எதற்கு?’ என்று கேட்ட அப்துல் ரகுமான், இளையராஜாவின் குரலில் தன் கவிதையைப் பாடலாகக் கேட்டபோது பரவசத்தோடு முகத்தை மட்டும் மேலும் கீழும் அசைத்தார். இருவரும் இணைந்து தமிழுக்குத் தர நினைத்த அந்த முதல் பாடலின் பல்லவி என்னவாக இருக்கும் என்று எழுதாமலேயே எல்லோரையும் யோசிக்கவைத்து மௌனமாகிவிட்டார் கவிக்கோ.

இந்த இடைவெளியில்தான் நண்பர் இயக்குநர் தாமிரா தனது ‘ஆண் தேவதை’ படத்திற்குக் கவிக்கோவின் கவிதையொன்றை இடம்பெறவைக்க விரும்பினார். அதை ஜிப்ரான் இசையமைத்தார். எந்த வார்த்தைகளையும் மாற்றக் கூடாது என்று கட்டளையிட்டிருந்தார் கவிக்கோ.

‘மலரின் நறுமணம் போகுமிடம்
குழலின் பாடல்கள் போகுமிடம்
அணைந்த சுடர்கள் போகுமிடம்
அதுதான் நாமும் போகுமிடம்...’


என்று தொடங்கும் அந்தப் பாடலின் இறுதி வரிகள் இப்படி முடியும்.

‘மதுவும் வண்டும் வேறில்லை
கண்ணீர் புன்னகை வேறில்லை
அதுவும் இதுவும் வேறில்லை
அனைத்தும் ஒன்றே உண்மையிலே’


வரிகளில் மௌனமாகக் கண்ணீர் வழிவதைத் தவிர்க்க முடியவில்லை.

கருத்துகள் இல்லை:

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...