சனி, 15 ஜூலை, 2017

சாரு நிவேதிதா - நேர்காணல்

நன்றி - விகடன் தடம்.

"தமிழன் என்று வெளியே சொல்லிக்கொள்ள முடியவில்லை!” - சாரு நிவேதிதா

சந்திப்பு: வெய்யில் - படங்கள்: வி.பால் கிரகோரி
லக்கியம், சினிமா, அரசியல், ஆன்மிகம், இசை, மொழிபெயர்ப்பு என, தனது 25 வயதிலிருந்து தொடர்ந்து தீவிரமாக எழுதிக்கொண்டிருப்பவர். தமிழில் மட்டுமல்லாது ஆங்கில, மலையாள இதழ்களிலும் விரிவான தளத்தில் இயங்கிவருபவர். பொதுப்போக்குகளின் கருத்துகளுக்கு, ரசனைகளுக்கு எதிரான தடாலடி கருத்துகளை எவ்விதத் தயக்கமும் இன்றி  முன்வைப்பவர். எப்போதும் வெளிச்சத்திலேயே இருக்கும் மிகச் சில தமிழ்ப்  பிரபலங்களில் ஒருவர். சூரியனுக்குக் கீழ் உள்ள எது குறித்தும் யார் குறித்தும் பேசலாம் சாரு நிவேதிதாவிடம்...
“இலக்கிய வாசிப்புக்குள் எப்படி வந்தீர்கள்?”

“ஐந்து வயது வரை நான் வாய் பேசவே இல்லை என்று அம்மா சொல்வார்கள். பிறகு, கலியபெருமாள் கோயிலுக்கு (அரியலூர்) நேர்ந்துகொண்டதற்குப் பிறகு பேசியிருக்கிறேன். பேசிய உடனேயே ‘இதுக்கு இவன் பேசாமலே இருந்திருக்கலாம்’ என்று வீட்டில் உள்ளவர்கள் நினைத்தார்களாம். நான் சிறுவயதில் மிகவும் நோஞ்சானாக இருந்தேன். ஆகவே, எங்கும் விளையாடச் சென்றதில்லை. ஒருமுறை பையன்களோடு விளையாடப்போய் கை உடைந்துவிட்டது. அது முதலே நான் ஆண் நண்பர்களோடு சேர்வதில்லை. பெண்களோடு சேர்ந்து பல்லாங்குழி, தாயம் என விளையாடுவது வழக்கமாகிவிட்டது. பெண்களோடு மட்டும்தான் சகவாசம். இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், ஆண்களோடு விளையாடப் போகாததால், நான் நன்றாகப் படித்தேன். பெண்கள் ஒவ்வொருவராகத் திருமணம் செய்துகொண்டு போனபிறகு, ஒரு கட்டத்தில் ஒருவிதமான தனிமை உணர்வு வந்தது. அப்போது தீவிரமான திராவிட இயக்க எழுச்சிக் காலகட்டம் வேறு. ஊர் ஊராக நூலகங்கள் திறக்கப்பட்டன. அப்பா ஒன்றாம் வகுப்பு ஆசிரியர்; தி.மு.க. வெறியர். வாசிப்பு ஒரு முக்கியக் கலாசாரமாகப் பரவிக்கொண்டிருந்தது அப்போது. எங்கள் ஊரிலும் நூலகம் திறக்கப்பட, அங்கு சென்று வாசிக்கத் தொடங்கினேன். எனக்கு அந்தக் காலகட்டத்தில் பெரியாரும் தெரியாது; அம்பேத்கரும் தெரியாது.  ஆனால், படித்தால் இந்த ஊரைவிட்டுத் தப்பிவிடலாம் என்பது மட்டும்  தெரிந்திருந்தது.”

“என்ன மாதிரியான புத்தகங்கள் வாசித்தீர்கள்?”

“கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ முதல் ஜெயகாந்தன் வரை கிடைத்ததையெல்லாம் வாசித்தேன். பிறகு, பி.யூ.சி-யில் சேர்ந்தேன். ஆரம்பத்தில் ஆங்கிலம் புரியவில்லை. அந்த வயதுக்கே உரிய சேட்டைகள் ஆரம்பித்தன.  வாசிப்பும் குறைந்தது. என் தாய்வழி மாமா இரண்டு பேர், நாகூரில் பெரிய ரெளடிகளாக இருந்தார்கள். அவர்களையே முன்னோடிகளாகக்கொண்டு, இரண்டு வருடங்கள் ஒரு ரெளடித்தனமான வாழ்க்கையை வாழ்ந்தேன். ஒரு சமயம்  ஒருவரை வீடுபுகுந்து தாக்கிவிட்டேன். போலீஸ் கேஸ் ஆகிவிட்டது. போலீஸ் ஸ்டேஷனில் அப்போது ஒரு நல்ல இன்ஸ்பெக்டர் இருந்தார். “ஊருல ஒன்ன நல்ல பையனாச் சொல்றாங்க. ஒரு தடவ உன்மேல எஃப்.ஐ.ஆர். போட்டேன்னா, அப்புறம் உன் வாழ்க்கை மொத்தமா நாசமாயிடும். இனிமே இங்க  இருக்காத, வெளியூர் போயிடு...” என்று சொன்னார். அதைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் திருமணமாகி விவாகரத்து ஆன ஒரு பெண்ணைக் காதலித்துக்கொண்டிருந்தேன்.அவளுக்கு வயது கொஞ்சம் அதிகம். எனக்கு 17-18 இருக்கும். அவளுக்கு 23. ‘திருமணம் செய்துகொள்ள வேண்டுமானால் மதம் மாற வேண்டும்; இல்லையென்றால் கட்டிவைத்து உதைப்போம்’ என்று அந்தப் பெண்ணின் உறவினர்கள் மிரட்ட நான் ஊரைவிட்டு ஓடிவந்தேன். பிறகு போகவே இல்லை.”

“பிறகான வாசிப்பு?”


“திருச்சியில் கல்லூரியில் சேர்ந்ததும் மீண்டும் வாசிக்கத் தொடங்கினேன். ஷேக்ஸ்பியரை வாசிப்பதற்கான அறிமுக நூல்கள், ஆங்கில நாவல்கள் என நிறைய வாசித்தேன். வேறு எதிலும் கவனம் இல்லை. வாசிப்பு வாசிப்பு என்று தீவிரமாக நூலகத்திலேயே கிடந்தேன். ஆங்கிலம் கற்றுக்கொண்டு ஆஸ்கார் ஒயில்டு,ஜான் ஜெனே என வாசிக்க ஆரம்பித்ததும் ஜெயகாந்தன் எனக்குப் போதவில்லை. திருநெல்வேலி, மதுரைக்காரர்களைப் போலல்லாமல் நாகூர் போன்ற ஒரு பகுதியில் வாழ்ந்ததால், அடிப்படையில் ரஷ்ய இலக்கியம் எனக்குப் பரிச்சயமே இல்லாமல் போய்விட்டது. ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச் இலக்கியத்தையே பெரும்பாலும் வாசித்தேன். இந்தச் சமயத்தில் எனக்கு வேலை கிடைத்துவிட, கல்லூரியைத் தொடராமல் டெல்லிக்குச் சென்றேன். டெல்லிக்குப் போனபிறகுதான் ரஷ்ய இலக்கியம் படித்தேன். அதுவும் தஸ்தாயெவ்ஸ்கி மட்டும்தான். டெல்லி வாசிப்புதான் என்னை ஒரு வாசகனாக, எழுத்தாளனாக வடிவமைத்தது. டெல்லியில் சிவில் சப்ளைஸ் துறையில் 12 வருடங்கள் வேலை செய்தேன். ஏழைபாழைகளுக்கு ரேஷன் வழங்கும் துறை. லஞ்சம் தாண்டவமாடும். ‘கலைஞனுக்கு எதுக்குப் பணம்’ எனத் திரிந்த காலம் அது. மாதத்தில் ரெண்டு நாட்கள்தான் வேலைக்குச் செல்வேன். லஞ்சத்தில் பங்குகொடுக்க வேண்டியதில்லை என்பதால், என்னையும் யாரும் கண்டுகொள்வதில்லை. அமெரிக்கன் லைப்ரரி, மேக்ஸ்முல்லர் பவன், சென்ட்ரல் செக்ரட்ரியேட் லைப்ரரி, சாகித்ய அகாடமி லைப்ரரி எனத் தவமாய்க் கிடப்பேன். ஹங்கேரியன் சென்டரில் படம் பார்ப்பேன். மண்டி ஹவுஸ் ஏரியாவில் மட்டுமே அப்போது பத்து லைப்ரரிகள் இருந்தன. லெவிஸ்ட்ராஸ், ஃபூக்கோ, தெரிதா என வாசிப்பு எல்லை முடிவற்று விரிந்தது.”

“சிறுபத்திரிகை வழியாகத்தான் ஆரம்பத்தில் எழுதத் தொடங்கினீர்கள். எந்தக் கட்டத்தில் சிறுபத்திரிகையிலிருந்து விலகினீர்கள், ஏன்?”

“நான் விலகி வரவில்லை. ஒரு கட்டத்தில் சிறுபத்திரிகை இயக்கமே முடிந்து விட்டது. `மணல்வீடு’, `நவீன விருட்சம்’ போன்ற பத்து பத்திரிகைகள் இன்றும் முனைப்போடு வந்துகொண்டிருக்கின்றன.என்றாலும், சிறுபத்திரிகை என்பது ஓர் இயக்கமாக, ஒரு வலுவான கருத்தியல் நம்பிக்கையாக, தீவிரமாக இருந்த காலம் முடிந்துவிட்டது. இப்போது முகநூல், ப்ளாக்ஸ், இணைய தளங்கள், ஆன்லைன் மேகஸீன்ஸ் என யாரும் எதிலும் எழுதலாம் என ஆகிவிட்டது. இணையத்தின் வழியாக உலகம் முழுவதுமான தமிழர்களால் வாசிக்க முடிகிறது. பரீட்சார்த்தமான முயற்சிகளை, மிகவும் தீவிரமான விஷயங்களை அப்போது சிறுபத்திரிகைகள் மட்டுமே பிரசுரித்தன. இன்று அந்தப் பிரச்னை இல்லை. எல்லா இதழ்களும் பிரசுரிக்கின்றன.  பிரசுரிக்கவில்லையானால், அவரவர் இணைய பக்கத்தில் எழுதிவிடுகிறார்கள். ‘காலச்சுவடு,’ ‘உயிர்மை’ போன்ற இதழ்கள் சிறுபத்திரிகைகளாகத் தொடங்கி, மிடில் மேகஸீன்களாக மாறிய காலகட்டத்தை, தேவையைக்கொண்டு இதைப் புரிந்துகொள்ளலாம்.”

“அப்படியானால், சிறுபத்திரிகைகளின் தேவை இனி இல்லை என்கிறீர்களா?”

“ஆமாம். 25 பக்கத்துக்கு நான் ஒரு கதையை எழுதி, அதை ‘நவீன விருட்ச’த்துக்கோ ‘மணல்வீடு’க்கோ அனுப்பி, அதை அவர்கள், லே அவுட் செய்து, அச்சாக்கம் செய்து, இரண்டு மூன்று மாதங்கள் கழித்து வரும். அதையே நான் என்னுடைய இணைய பக்கத்தில் பதிந்துவிட்டால்,  அடுத்த நிமிடமே அமெரிக்காவில் இருக்கிற ஒருவர் வாசிக்க முடியுமே! காலத்துக்கு ஏற்ப மாறித்தான் ஆக வேண்டும். ஜெயமோகன் முழுக்கவே இணையத்தில்தானே எழுதுகிறார்!”

“நவீனத் தொழில்நுட்பங்களை அப்டேட் செய்துகொள்வது தேவைதான். அதே சமயம் சிறுபத்திரிகை  இயக்கத்தின் தீவிரத்தை, கறார் தன்மையை, நாம் அடுத்த தலைமுறைக்குக் கடத்தி இருக்கிறோமா? இளைய தலைமுறையை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“லட்சக்கணக்கில் நீங்கள் பணம் கொடுத்தாலும், லட்சக்கணக்கில் உங்களிடம் கடன்பட்டிருந்தாலும், பஞ்சத்தில் சாகும் நிலைமையில், நீங்கள் சாப்பாடு போட்டிருந்தாலும் சரி; உங்களுடைய கதை நன்றாக இல்லை என்றால், சிறுபத்திரிகைக்காரன் பிரசுரிக்க மாட்டான். அங்கே சமரசமே கிடையாது. அவ்வளவு தீவிரமான காலகட்டம் அது. தன்னுடைய உயிர்மூச்சே எழுத்துதான் என்று நினைத்தார்கள். அதில், எஞ்சி இருக்கிற கடைசி ஆள் நான்தான் என்று நினைக்கிறேன். இப்போது அந்த உணர்வும் தீவிரமான கறார்தன்மையும் குறைந்துதான் போயிருக்கிறது! சிறுபத்திரிகை மரபைச் சார்ந்தவர்கள், நவீனத் தொழில்நுட்பச் சாத்தியங்களைக் கணக்கில்கொள்ள வேண்டும். நவீனப் புதிய தலைமுறை, சிறுபத்திரிகை மரபின் தீவிரத்தையும் நேர்மையையும் தன்னுள் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பரஸ்பர புரிதலைக்கொண்டுதான் இலக்கியத்தை முன்நகர்த்த முடியும். எனவே, சிறுபத்திரிகைகளின் அத்தனை குணங்களோடும் அதை ஓர் இணைய பத்திரிகையாகக் கொண்டுவரலாம் என்கிறேன். சிறுபத்திரிகை இயக்கத்தின் அறமும் தீவிரமும் தொடர வேண்டும்.”
“எது உங்களைத் தொடர்ந்து எழுதவைக்கிறது?”

``எனக்குத் தெரியவில்லை. மூச்சுவிடுவதை எப்படிப் பிரக்ஞாபூர்வமாகச் செய்வதில்லையோ, அதுபோலத்தான் எழுத்தும். எது தன்னுடைய இருப்பை நமக்கு உணர்த்துகிறதோ, அப்போது அங்கே ஏதோ பிரச்னை என்று பொருள். எழுத்து என் இயல்பு. எழுத்து என்னிடம் தன் இருப்பை உணர்த்தியதே இல்லை. அது பாட்டுக்கு  நடந்துகொண்டிருக்கிறது. எழுத முடியாமல் போனால்தான், ‘ஏன் எழுத முடியவில்லை?’ என்று நான் யோசிக்க வேண்டும். 15 வருடங்களுக்கு முன்பு ஒரு மலையாள எழுத்தாளர் என்னிடம் கேட்டார் “Why do you write?” நான் சொன்னேன்: “I write as a bird flies!” குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு, ஒரு விளையாட்டு வீரனுக்கு அவனது உடல் விளையாடத் தகுதியற்றதாகிவிடும். இலக்கியத்தில் அப்படி அல்ல. கைகளால் எழுத முடியாமல் போனாலும் டிக்டேட் பண்ணலாம். மூளை செயலிழந்து போகும் வரை ஓர் எழுத்தாளன் 25 வயது இளைஞனைப்போல எழுதிக்கொண்டே தான் இருப்பான்.’’ 

“புனைவு என்றால் என்ன?”

“நீங்கள் ஒரு விஷயத்தைப் பார்க்கிறீர்கள். பார்த்த விஷயத்தை இன்னொருவரிடம் சொல்கிறீர்கள். சொல்லும்போதே அந்த விஷயம் கதையாகிவிடுகிறது. அதில் புனைவின் அம்சங்கள் கலந்துவிடுகின்றன. அதாவது, ஒரு விஷயத்தைப் பார்த்து அதை ஒரு காட்சியாக, செய்தியாக, கருத்தாக ஒருவர் ‘conceive’ செய்வதே புனைவுச் செயல்பாடுதான். அதை எதைக்கொண்டு எழுதுவீர்கள்? 4,000 வருட மொழிக் கிடங்கிலிருந்து வார்த்தைகளை எடுக்கிறீர்கள். அது, பலர் உழுத நிலம். பலரின் புனைவு. குறிப்பிட்ட அந்தக் காட்சியை எப்படிப் புரிந்துகொள்கிறீர்கள்? அதற்கு எது உதவுகிறது? பிறந்தது முதல் நீங்கள் அடைந்த அனுபவங்களையும் இந்தச் சமூகம் கொடுத்த கருத்துகளையும் கொண்டுதான் ஒரு மரத்தைப் பார்த்துப் புரிந்துகொள்ள முயலும் மூளைக்குள் கார்ல் மார்க்ஸ்,  வள்ளலார்,  தொல்காப்பியன், வேத வியாசன் என எவ்வளவு மனிதர்கள் நம்மை இடையீடு செய்கிறார்கள். புனைவல்லாத விஷயம் என்று என்ன உள்ளது இங்கே? வாழ்க்கையே தன்னளவில் ஒரு புனைவுதான்!”

“எழுத்தாளனை ஒரு சமூகம் ஏன் கொண்டாட வேண்டும்?”

“தி.ஜானகிராமனின் வீட்டுக்கு அவரது நண்பர் வருகிறார். குழந்தை படித்துக்கொண்டிருக்கிறது.  ஜானகிராமனிடம் `குழந்தை என்ன படிக்கிறது?’ என்று கேட்கிறார் நண்பர். ஜானகிராமன் குழந்தையிடம் ‘என்ன படிக்கிறாய் அம்மா?’ என்று கேட்கிறார். இதுதான் எழுத்தாளனின் நிலை;குணம். இந்தத் துறவு நிலையில் வாழ்ந்து எழுதுகிறவன்தான் எழுத்தாளன். உலகின் அனைத்து நல்லது கெட்டதுகளையும் எழுத்தில் பதிந்து, தான் வாழ்கின்ற சமூகத்தை ஆவணமாக்குகிறவன். தேசத்தின் முதுகெலும்பு அவன். நீங்கள் எழுத்தாளனைக் கொண்டாடுவதன் மூலம் உங்களை, உங்கள் சமூகத்தைக் கொண்டாடிக்கொள்கிறீர்கள். தாகூரை மாகாத்மா காந்தி, ‘குருதேவ்’ என்று அழைத்தார். ஒரு கவிஞனை தேசத்தின் மகாத்மா, குருதேவ் என்று அழைத்திருக்கிறார். ஆனால், பாரதியை அன்றைய அரசியல் தலைவர்கள் - பைத்தியம், பித்துக்குளி, பொறுக்கி என்றுதான் அறிந்து வைத்திருந்தார்கள். காந்திக்கு ‘பாரதியும்’ இன்னொரு  குருதேவ் என்று தெரிந்திருக்கிறது. அதனால்தான், ‘இவர் உங்கள் மொழியின் சொத்து. இவரைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். ஆனால், நாம் பார்த்துக் கொண்டோமா?”

“39 ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். படைப்புகளை எடுத்துக்கொண்டாலும் சரி, உங்களது கட்டுரைகளை, கருத்துக்களை எடுத்துக்கொண்டாலும் சரி, அவை தனக்குள்ளேயே ஏராளமான முரண்களைத் தொடர்ந்து வெளிப்படுத்துகின்றன...”

“கால ஓட்டத்தில் மாறுதல்களும் முரண்களும்தான் இயல்பானவை. நான் நதிவழி போகும் இலைபோல. கம்யூனிஸ ஆதரவாளனாக, பெரியாரிஸ்ட்டாக இருந்திருக்கிறேன். கம்யூனிஸக் கனவு தகர்ந்ததுமே அதில் உள்ள ஓட்டைகள் தெரிய ஆரம்பித்தன. அதை நான் எழுதித்தானே ஆக வேண்டும்? பெரியார் நமது பாரம்பர்யத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. நமது பாரம்பர்யத்தில் எவ்வளவு மருத்துவங்களும் கண்டுபிடிப்புகளும் உள்ளன, அவற்றையெல்லாம் பொய் என்கிறார் பெரியார். சாதி, மதம் இரண்டும் முக்கியமான பிரச்னைதான். ஆனால், அதன் மீதான எதிர்ப்பில் நமது பாரம்பர்ய விஷயங்களை முற்றிலுமாக நிராகரித்துவிட்டார். சித்தர்கள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்திருக்கிறார்கள். வள்ளலார் தண்ணீரில் விளக்கு எரித்திருக்கிறார். நான் ஒளியில்தான் மறைவேன் என்று எழுதி வைத்துவிட்டுப் போன வள்ளலாரின் உரைநடைதான், பெரியார் சொன்னதெல்லாம் தப்பு என்பதற்கு ஆதாரம். இதெல்லாம் ஏதோ சித்து விளையாட்டோ, கண்கட்டி வித்தையோ அல்ல. ஐம்பூதங்களைத் தன்னுடைய கட்டுக்குள் வைத்துக்கொள்வதன் வழி செய்ய முடிவது. இதையெல்லாம் கவனிக்காமல், ‘கொசுவுக்காக வீட்டைக் கொளுத்திவிட்டார் பெரியார்’ என்று எழுதியிருக் கிறேன். இப்படியான முரண்பாடுகளுடன்தான் ஒரு படைப்பாளி இயங்க முடியும்.”

“நாத்திகராக இருந்த நீங்கள் எப்படிக் கடவுள் நம்பிக்கையாளராக மாறினீர்கள்? என்ன நடந்தது?”

“ ‘ஒரு யோகியின் சுயசரிதம்’ என்ற புத்தகம் எனக்குள் பல முக்கியமான மாற்றங்களைக் கொண்டுவந்தது. பரமஹம்ச யோகானந்தர் எழுதியது. இவர் இறந்த பிறகும், ஒரு மாதம் வரை அவரது உடல் துர்நாற்றம் இல்லாமல் இருந்ததாம். வாழ்வில் ஓர் அனுபவம் கிடைக்கும் போது, அது உண்மை என்று தெரியும்போது, எப்படிச் சொல்லாமல் இருப்பது; நம்பாமல் இருப்பது? பிரான்ஸில் லூர்து மாதா தேவாலயம் இருக்கிறது. ஸ்பெயின் நாட்டு எல்லைஅது. அங்கு போக வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. நான் அப்போது பிரான்ஸ் சென்றிருந்தேன். நண்பரிடம் சொன்னபோது, ‘அப்படியெல்லாம் போக முடியாது சாரு, மாதா கூப்பிடணும்; அப்பதான் போக முடியும்’ என்றார். சரி என்று விட்டுவிட்டேன்.  இந்தியாவுக்குத் திரும்ப விமான டிக்கெட்டும் பதிவு செய்துவிட்டேன். ‘லா சப்பல்’ என்கிற இடத்தில் ‘அறிவாலயம்’ என்று ஒரு புத்தகக் கடை உண்டு. அங்கு ஒரு நபர் என்னிடம் கைகொடுத்து, ‘உங்கள் எழுத்துகளை வாசித்திருக்கிறேன். கிறிஸ்துமஸ் திருவிழாவுக்கு என் வீட்டிற்கு வர வேண்டும்’ என்று அழைத்தார். நான் பயண ஏற்பாடுகள் குறித்துச் சொன்னேன். அதையெல்லாம் மாற்றி அமைத்துக்கொள்ளலாம் என்று வற்புறுத்தி அழைத்துச் சென்றார். எனக்கும் பயணம் பிடிக்கும் என்பதால் சென்றேன். அவரது வீடு, லூர்து மாதா தேவாலயத்துக்குப் பக்கத்து ஊரில் இருந்தது. கிறிஸ்துமஸ் தினத்தன்று நான் லூர்து மாதாவின் எதிரே மண்டியிட்டுப் பிரார்த்தித்துக்கொண்டிருந்தேன். இரண்டாவது சம்பவம், எனக்கு ஹார்ட் அட்டாக் வந்து மருத்துவமனையில் படுத்திருக்கிறேன். சர்ஜரி செய்ய வேண்டும்.  இரண்டு லட்சம் பணம் வேண்டும். பக்கத்து பெட்டில் ஒருவன் கத்துகிறான். வலியில் அல்ல. அவனுடைய ‘பில்’லைப் பார்த்து. என் மனைவி அவந்திகா வந்தாள். ‘இரண்டு லட்சம் ஆகுமாம். என்ன பண்ணலாம்?’ என்றேன். ‘கவலைப்படாதே... பாபா தருவார், ஜாலியாக இரு!’ என்று சொல்லிவிட்டுப் போகிறாள். ஆன்மிகம் எவ்வளவு நம்பிக்கையைத் தருகிறது பாருங்கள்! சொன்னது போலவே மறுநாள் ஒருவர், இரண்டு லட்சத்துக்கு ஒரு காசோலையைக் கொடுத்துவிட்டுப் போகிறார்.  சர்ஜரி முடிந்து இரண்டு மாதம்  கழித்து அவரைப் பார்க்கப் போனேன். அவர் கேன்சர் வந்து இறந்துவிட்டார் என்று சொன்னார்கள். அந்த இரண்டு லட்சத்துக்கான காசோலை கிடைத்தது இன்றும் ஆச்சர்யம்தான். இப்படியான ஆச்சர்யங்கள் நடக்காத வரை நான் நம்பக் கூடாது என்று இருந்தேன். சாட்சி கிடைத்தது; நம்புகிறேன்.”

“உங்களுடைய ஆரம்பகாலப் படைப்புகளிலிருந்து இன்று வரையிலான எழுத்துகள் வரை பாலியல் சார்ந்த பார்வைகளும் உரையாடல்களும் தொடர்ந்து வருகின்றன. எந்தக் கட்டத்தில் பாலியல் மீதான கவனத்தை அடைந்தீர்கள்?”


“எனக்கு 15–16 வயதிருக்கும். ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயரைச் சொல்லி ‘அந்த சாதியைச் சேர்ந்த பெண்ணை நீ திருமணம் செய்துகொள்ளக் கூடாது. அந்த சாதிப் பெண்கள் ஒழுக்கமாக இருக்க மாட்டார்கள்’ என்று அம்மா சொன்னார்கள். உரையாடல்கள் வழியாக, அனுபவத்தின் வழியாக எனது பதின்வயதிலேயே பாலியல் சார்ந்த விஷயங்கள் எனக்குள் வந்துவிட்டன. எனக்கு மட்டுமல்ல, இந்தியச் சமூகத்தில் வாழும் எல்லோருக்கும் அமைகின்ற பொதுவான அனுபவங்கள்தான் அவை.  பாலியல் அத்துமீறலுக்கு ஆட்படாத ஒரு பெண்ணைக்கூட என் வாழ்நாளில் நான் சந்தித்ததில்லை. ஆண்களுக்கும் இது பொருந்தும். நானே அவ்வகையில் பாதிக்கப்பட்டவன்தான். ஒழுக்கம் என்ற பெயரில் இந்தியச் சமூகத்தில் அடக்கிவைக்கப்படும் காமத்தால் நேர்கின்ற அவலங்கள் இவை. தொடர்ந்து பெண்களைப் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இது குறைய வேண்டுமெனில், பாலியல் தொழிலைச் சட்டபூர்வமாக்க வேண்டும். அதுதான் முதன்மையான வழி. பின், காமம் சார்ந்த புனிதக் கருத்துகளை உடைத்து உரையாட வேண்டும். உடல் சார்ந்த பாலியல் தேவை என்பது மிக இயல்பானது என்பதை பதின் வயதினருக்கு முறையாகக் கற்பிக்க வேண்டும். பாலியல் உணர்ச்சித் தூண்டுதல்களுக்கான புறச்சூழலை, ஊடகங்களைத் திறந்துவைத்துவிட்டு, உணர்வுகளை அடக்கிவைக்கச் சொல்லும்போது பிரச்னையாகிறது. இங்கே நண்பர்கள், காதலர்கள் புழங்குவதற்கு பொதுவெளியே இல்லையே... எங்கும் ஏதோ குற்றவாளியைப் பார்ப்பதுபோல அவ்வளவு கெடுபிடி. என்னத்தைச் சொல்வது?”

“இப்போதும் சாரு நிவேதிதா ஒரு போஸ்ட் மாடர்னிஸ்ட்டா?”

“போஸ்ட் மாடர்னிஸம் என்பது ஒரு காலகட்டமல்ல. அது ஒரு புரிதல். அறிதல் முறை. நான் ஒரு போஸ்ட் மாடர்னிஸ்ட்டாகத்தான் இருக்க முடியும். ஏனென்றால், ஒரு பின்நவீனப் படைப்பு எந்த முன்முடிவுகளுமற்றதாக இருக்கும். என்னுடைய படைப்புகள் அத்தன்மை உடையவைதான். ஓர் ஆணின் போகச் செயல்பாட்டை எடுத்துக்கொண்டால், அதில் ஆரம்பம், உச்சம், முடிவு என்று மூன்று முனைகள்கொண்ட ஒரு முக்கோண வடிவம் வரும். அதில், உச்சம் எனும் மேல்முனைதான் அதிகாரம், மோடி,  டீச்சர், டாக்டர், போலீஸ் கமிஷனர், நம் அப்பா, முதலமைச்சர், ஹிட்லர், படைப்பாசிரியர் எல்லாம். போஸ்ட் மாடர்னிஸம் இந்த வடிவத்தை மறுத்து ஒரு பெண்ணின் போகச்செயல்பாட்டை முன்வைக்கிறது. இதில் மையம் இல்லை. உச்சி முதல் உள்ளங்கால் வரை அனைத்துமே காமவெளிதான். மையம் தவிர்த்த கருத்தியலை முற்றிலுமாக அரசியலில், சிந்தனையில், எழுத்தில் பிரதிபலிப்பதுதான் பின்நவீனம். இலக்கியம், கட்டடம்,நுண்கலைகள் என அனைத்திலும் ஐரோப்பியர்கள் பின்நவீனத்தை முயன்றார்கள். ஆனால், இந்தியாவில் இலக்கியத்தைத் தவிர, வேறு எந்தத் துறையிலும் நிகழவே இல்லை. ஒருவர் போஸ்ட்மாடர்னிஸ்ட்டாக இருக்க, போஸ்ட்மாடர்னிஸம் படிக்க வேண்டும் என்பதில்லை. அது ஒரு பார்வை; அறிதல்முறை. சாரு எப்போதும் போஸ்ட்மாடர்னிஸ்ட் ரைட்டர்தான்!”
“ஆசிரியனின் மரணம், மையம் தகர்த்தல் என்று போஸ்ட் மாடர்னிஸம் பேசிக்கொண்டே ‘சாரு நிவேதிதா வாசகர் வட்டம்’ என்ற ‘மையம்’ சார்ந்த ஒரு வாசக அமைப்பை வைத்திருப்பது முரணாக இல்லையா?”

“பாவம்ங்க! (பலத்த சிரிப்பு) நீங்கள் நினைப்பதுபோல எனக்கு மட்டுமல்ல, வாசகர் வட்டத்தில் யாருக்கும் ஓர் அதிகாரமும் கிடையாது. எல்லாம் மிடில் கிளாஸ் ஆட்கள். சமீபத்தில் ஹார்ட் அட்டாக் வந்தபோது, அவர்கள்தான் ஆளுக்கு ஐயாயிரம், பத்தாயிரம் என்று தந்து உதவினார்கள். நாலு லட்சம் மருத்துவச் செலவுக்குக் கட்டி ஒரு தகப்பனைப்போல என்னைக் காப்பாற்றினார்கள். இல்லை என்றால், செத்துப்போயிருப்பேன். தமிழ் நாட்டில் ஓர் எழுத்தாளனின் நிலை இதுதான்.”

“எப்படிப் பார்த்தாலும் ஓர் அமைப்பு தேவைப்படுகிறது இல்லையா?”

“தேவைதான். ஆனால், அது ஒரு மதம்போல மாறிவிடக் கூடாது. எனது வாசகர் வட்டத்தையே எடுத்துக் கொள்ளுங்களேன். ஆளாளுக்குப் பேசிக்கொண்டிருப்பார்கள். என்னை அதிகமாகத் திட்டுவதே  அவர்கள்தான். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடுவது வழக்கம். கடந்த ஆறு மாதங்களாகக் கூடவே இல்லை. என்னை ‘அதிகார மையம்’ என்று சொன்னீர்கள் அல்லவா? ‘கூடுங்கள் கூடுங்கள்’ என்று சொல்கிறேன். கூடவே மாட்டேனென்கிறார்கள். இவ்வளவுதான் என் அதிகாரம். நான் வாரிசு என்று சொல்கிற அராத்துவை, வட்டத்தில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.  இன்னொரு வேடிக்கை, நான் குடியை நிறுத்தியதும் வாசகர் வட்டமே கலைந்துவிட்டது. சாரு நிவேதிதா வாசகர் வட்டமே ஒரு போஸ்ட் மாடர்னிஸக் குறியீடுதான்.”

“மது அருந்துவதை நிறுத்திவிட்டதற்கு என்ன காரணம்?”

“வேலைகள் நிறைய இருக்கின்றன. நேரம் வீணாகிறது என்பதால், நிறுத்தி விட்டேன். உண்மையாகவே வேறு எந்தக் காரணமும் இல்லை.”

“மது அருந்துவதை நிறுத்திவிட்டாலும் குடிப்பழக்கத்தை ஆதரிப்பவர் நீங்கள். டாஸ்மாக்குக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக நடந்துவருவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”


மக்கள் போராடுவது ஒருபுறம் இருக்கட்டும். எல்லா ஊடகங்களும் ஏதோ சுதந்திரப்போர்போல இதை முன்னிலைப் படுத்துகின்றன. டாஸ்மாக் பிரச்னையை ஒழித்தால், இந்த நாடு சுபிட்சம் பெறும் என்பதுபோல நம்ப வைக்கிறார்கள்.  தொடர்ந்து தர்மாவேசத்தோடு இதை ஒரு போர்ச் செயலாக  செய்து வருகிறார்கள். இந்த விஷயம் தேவைக்கதிகமாகப் பூதாகரப் படுத்தப் படுகிறது என்றே சொல்வேன். இவ்வளவு ஆவேசத்தோடு நடக்கிற இந்த ‘அறப் போராட்டம்’ சமூகத்தின் முக்கியமான மற்ற பிரச்னைகளை முன்னிட்டு ஏன் நடத்தப்படவில்லை? கல்வி மொத்தமாக தனியார்மயமாகிப் பணம் கொழிக்கும் தொழிலாகிவிட்டது. அதைப்பற்றி ஏன் யாருமே பேசுவதில்லை; போராடுவதில்லை? இந்தக் கல்வி முறையில் எல்லோருடைய பிள்ளைகளைப்போலவும் ஒரு துப்புரவுத் தொழிலாளியின் பிள்ளைகளும் கல்வி கற்க வாய்ப்பிருக்கிறதா? எங்கே புரட்சி பண்ண வேண்டுமோ அதை விட்டுவிட்டு, டாஸ்மாக் கடைகளை உடைத்துவிட்டால், எல்லாம் சரியாகிவிடுமா? இவர்கள் நாடுவதெல்லம் தற்காலிக முடிவுகள்... தற்காலிகத் தீர்வுகள்.

சில விஷயங்களைப் பகிங்கரமாகப் பேசினால், நான் கொல்லப்படலாம். ஆனாலும், பேசித்தான் ஆக வேண்டும். இங்கு விற்கப்படுகின்ற மதுவுக்கான ‘லிக்கர்’ தமிழகத்தின் இரண்டு பிரதான ஆளும் கட்சிகளான தி.மு.க, - அ.தி.மு.க -வால்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆட்சியைக் கைப்பற்றும் விஷயத்தில் அவர்களுக்குள் எவ்வளவு பிரச்னை இருந்தாலும் இந்த  ‘லிக்கர்’ உற்பத்தி, வியாபாரம் போன்ற விஷயங்களில் எந்தப் பிரச்னையும் வருவதில்லை. இதில், முக்கியமான விஷயம், இந்த மதுவை வேறு எந்த மாநிலத்திலும் விற்க முடியாது. ஏனென்றால், இது மனிதர்கள் குடிக்கவே லாயக்கில்லாத தரமற்ற மது. உயிருக்கு ஆபத்தான கொடூரமான கலப்பட மது. தாய்ப்பாலைப்போல அவ்வளவு சுவையான, தீங்கில்லாத கள்ளைத் தடை செய்துவிட்டு, கலப்பட மதுவை ஏன் விற்பனை செய்கிறீர்கள் என்று கேட்க இங்கே ஆளில்லை. ‘குடித்துவிட்டு விழுந்து கிடக்கிறான், மனைவியை அடிக்கிறான்’ என்று சொல்கிறார்கள். இந்த மாதிரியான மதுவைக் குடித்தால், நானேகூட என் மனைவியை அடிக்கக்கூடும். அப்படித்தான் ஆகும். ஆக்ரோஷத்தையும் வன்முறையையும் தூண்டுகிற மதுவாக இருக்கிறது இது. நாகரிகமாகவும் ஆரோக்கியமாகவும் உணவில் ஒரு பகுதியாக, அளவாகக் குடிக்கத் தெரியாத சமூகம் இது. முதலில் நாம் எவ்வளவு தூரம் நாகரிகமடைந் திருக்கிறோம் என்பதைப் பற்றி யோசிக்க வேண்டிய நேரம் இது.”

“இந்தி மற்றும் சம்ஸ்கிருத மொழிகளைக் கட்டாயமாக்கும், பரவலாக்கும் முயற்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“பொதுவாக மாணவர்கள் நான்கு மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் பரிந்துரைப்பேன். ஆனால், நம் மாணவர்கள் ஒரு மொழியைக்கூட ஒழுங்காகக் கற்றுக்கொள்வதில்லை. தமிழ் நாட்டில் இருக்கிற ஒரு மாணவர், இங்கிலீஷோடு இந்தி மற்றும் சம்ஸ்கிருதம், உருது, அரபி ஆகிய மூன்றில் ஒன்றையாவது கற்றுக்கொள்ள வேண்டும். பிரெஞ்ச்,  ஸ்பானிஷ், போர்த்துகீசிய மொழிகளில் ஒன்றையும் சேர்த்துக் கற்றுக் கொள்ளலாம். இதுபோலவே இந்தியைத் தாய்மொழியாகக்கொண்ட ஒருவர், தென்னிந்திய மொழி ஒன்றைக் கற்றுக்கொள்ள வேண்டும். இதெல்லாம் தன்னார்வத்தால் நிகழ வேண்டும். திணித்தால் எதையும் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஓர் இந்தியனாக நான் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். அது அவசியமும்கூட. ஆனால், அதைத் திணித்தால் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தத் திணிப்பு பி.ஜேபி-யின் அஜெண்டாக்களில் ஒன்று. அதை ஏற்றுக்கொள்ள முடியாது.”

“மாட்டுக்கறி என்பது உழைக்கும் மக்களின் பிரதான புரதச் சத்துக்கான உணவு. அதன் மீதான தடையை, எதிர்மறையான பிரசாரத்தை எப்படி உணர்கிறீர்கள்?”


“இதை இந்து பாசிஸம் என்றோ, பி.ஜே.பி பாசிஸம் என்றோகூட சொல்ல முடியாது. வாஜ்பாய் இருந்தபோது இவ்வளவு இல்லையே. இதை மோடி பாசிஸம் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு சாதாரண வாக்காளனாக, அப்பாவித் தனமாகத் தேர்தல் சமயத்தில், ஓர் ஊழல் கட்சிக்கு மாற்றாக இருப்பார் என்று மோடியை நம்பினேன். ஆனால், இப்போது மோடிக்கு காங்கிரஸே பரவாயில்லை என்று தோன்றுகிறது. கொடுமையான பாசிஸம்!”

“அம்பேத்கர், பெரியார், காந்தி, மார்க்ஸ் போன்றோரின் கருத்தியல்கள் முன்பைக் காட்டிலும் தீவிரமாக வாசிப்புக்கு உள்ளாவதைக் கவனிக்கிறீர்களா?”

“பெரியாரின் தத்துவம், வெறுப்பின் அடிப்படையில் உருவானதாக நான் புரிந்துகொள்கிறேன். எந்த அரசியல் சித்தாந்தமும் அன்பினால் மட்டுமே கட்டமைக்கப்பட வேண்டும். அந்த வகையில்  காந்தி எனக்கு முக்கியமானவராகப் படுகிறார். ‘ பசு எனக்கு தெய்வம். ஆனால், அதை உணவாகக்கொண்டவர்கள் அதைச் சாப்பிடுவது, அவர்களின் உரிமை. அதை நான் ஒருபோதும் குறைகூற மாட்டேன்’ என்கிறார் காந்தி. இந்த மனோபாவம்தானே இன்றைய தேவை? அவர் பிரிட்டிஷ்காரனை வெறுக்கவில்லை; புரிந்துகொள்ளச் செய்தார். புரிந்துகொண்டான்; ஓடிவிட்டான். இன்றைய சமூகத்துக்கும் அரசியலுக்கும் தேவையான தத்துவார்த்த ஆயுதம் என்று எடுத்துக்கொண்டால், 

காந்தியினுடையதுதான் சிறந்தது; பாதுகாப்பானது. சாத்வீகமான அகிம்சை முறையிலான போராட்டம்தான் இனி சாத்தியப்படும். அதுதான் சரியானதாக இருக்கும்.”

“ ‘கூடங்குளம்’, ‘மெரினா’ போன்ற போராட்டங்கள் மிகுந்த சாத்வீகமான முறையில்தான் நடந்தன. ஆனால், போராட்டத்தின் முடிவுகள் எப்படி இருந்தன என்பதற்கு நாம் அனைவருமே சாட்சி. யதார்த்தத்தில் அகிம்சைப் போராட்ட முறை சாத்தியப்படுகிறதா?”


“என்னைப் பொறுத்தவரை ‘மெரினா போராட்டம்’ வெற்றிகரமானது. கடைசி நாளில் போலீஸ் கலைந்துபோகச் சொன்னபோது கலைந்திருக்க வேண்டும். ஆனால், வேறு சில சக்திகள் உள்ளே புகுந்து, புதிய புதிய கோரிக்கைகளை வைத்து, கடலுக்குள் இறங்கி, கலைய மறுத்து போலீஸை வன்முறைக்குத் தூண்டிவிட்டார்கள். இளைஞர்கள் நடத்தியவரை அது வெற்றிகரமான போராட்டம்தான். அவ்வகையான அகிம்சைப் போராட்டம்தான் சிறந்த வடிவமாக இருக்க முடியும்.”

“இன்றைய இடதுசாரிகளின் நிலைப்பாடுகள் குறித்து?”

“தமிழ்நாட்டில் இடதுசாரிகள் தங்கள் வேலையை ஒழுங்காகச் செய்யவில்லை. கேரளாவில் கம்யூனிஸ்ட்டுகள் செய்ததில் ஒரு சதவிகிதம்கூட இங்கு இவர்கள் செய்யவில்லை. அதனால்தான், இவர்களால் இங்கு பெரிதாக வர முடியாத நிலை நீடிக்கிறது. மனிதனை மனிதன் சுரண்டக் கூடாது என்பதுதான் கம்யூனிஸத்தின் அடிப்படை. அதை கம்யூனிஸத்தின் பெயரைச் சொல்லாமலேயே ஐரோப்பிய நாடுகளில் செய்துகொண்டிருக்கிறார்கள். இங்கு இன்னும் கம்யூனிஸம் உள்வாங்கப் படவே இல்லை.”

“தற்கொலை எண்ணம் வந்ததுண்டா?

“எனக்குத் தற்கொலை எண்ணம் வந்தது பற்றி காமரூபக் கதைகளில் எழுதியிருக்கிறேன். பதிப்பாளரிடம் இருந்து ஒவ்வொரு வருடமும் ‘புத்தக விற்பனை ரிப்போர்ட்’ ஒன்று வரும். ‘எக்ஸைல் - 120 காப்பி’ என்று அதில் பார்க்கும்போது, ‘ஏன்டா இந்த ஊர்ல உட்கார்ந்து எழுதிக்கிட்டிருக்கோம். போய்ச்சேரலாமா...’ என்று நினைத்ததுண்டு (சிரிக்கிறார்). மற்றபடி சீரியஸாகத் தற்கொலை எண்ணம் வந்ததில்லை. டிப்ரஷனே எனக்கு வந்ததில்லை. நானொரு குழந்தையைப் போல வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.”

“வருடா வருடம் புத்தகச்சந்தையில் விற்பனை கூடுவதாகச் சொல்கிறார்களே..?”

“புத்தகக் காட்சி என்பதே அபத்தம். மீடியா உருவாக்கும் கானல் நீர். லட்சக்கணக்கில் விற்பதாக, கோடிக்கணக்கில் விற்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், புத்தகத்தின் ‘சேல்ஸ் ஸ்டேட்மென்ட்’ வாங்கிப் பார்த்தால், 10 பிரதிகள்தான் விற்பனை ஆனதாகக் காட்டுகிறது. பப்ளிஷர்ஸ் பொய் சொல்வதாகச் சொல்லவில்லை. வாசகர்கள் தூக்கிக்கொண்டு போகிற பைகளைத் திறந்து பார்த்தால், எல்லாம் ஆன்மிகம், 

சுயமுன்னேற்றம், சமையல் புத்தகங்கள். புத்தகக் காட்சியில் இலக்கியத்துக்கு இடமே இல்லை என்பதுதான் யதார்த்தம்.”

“நிலையான நண்பர்களே உங்களுக்கு இல்லையே, ஏன்?”


“உதாரணமாக, ஒருவர் அவருடைய இருத்தலின் அடையாளமாக அவரது கவிதைகளை மட்டுமே கருதுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் ஒரு கவிதைப் புத்தகம் போடுகிறார்; நான் வாசிக்கிறேன்; பிடிக்கவில்லை என்றால், ‘சரி, நண்பராயிற்றே’ என்று விட்டுவிடுவேன். ஆனால், அதைச் சொல்லியே ஆக வேண்டும் எனும் நிலை வரும்போது, ‘இது ஒரு குப்பை’ என்று சொல்லிவிடுகிறேன். விமர்சனம் கொல்வதற்கு நிகராகிவிடுகிறது. ஆக, அவர் ஜென்ம விரோதியாகிவிடுகிறார். அவ்வளவுதான். பெரும்பாலும் விமர்சனத்தினால்தான் நட்பு முறிதல்கள் நிறைய ஏற்பட்டுள்ளன. ஒருவகையில் அதை நான் வரவேற்கிறேன். ஏனென்றால், என் எழுத்தைக் குப்பை என்று நினைக்கும் ஒருவரோடு, என்னால் பழகவோ, வாழவோ முடியாது. ‘என் எழுத்தின்மீது உனக்கு எப்போது விமர்சனம் வருகிறதோ, உடனே என்னை விவாகரத்து செய்துவிடு!’ என்று என் மனைவியிடம் நான் சொல்வதுண்டு.”

“ஒரு படைப்பை, சினிமாவை முதலில் சிறப்பானது என்று சொல்லிவிட்டுப் பின் திட்டுவது, முதலில் திட்டிவிட்டு, பின் சிறப்பானது என்று சொல்வது என ஒரு குழப்பம் உங்களிடம் உள்ளதே?”

“இலக்கியத்தில் அப்படி நடந்ததே இல்லை. 19 வயதில் அசோகமித்ரனை தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர் என்று சொன்னேன். இப்போது எனக்கு 64 வயதாகிறது. இப்போதும் அப்படித்தான் சொல்கிறேன். ஒரே ஒரு சினிமாவில் மட்டும் அப்படி நடந்துவிட்டது. ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படம் வெளியான சமயத்தில் மிஷ்கின் மீது மிகுந்த கோபத்தில் இருந்தேன். அதனால், ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ எனக்குப் பிடிக்கவே இல்லை. படம் முழுவதையும் வெறுப்பிலேயே பார்த்தேன். ‘குப்பை’ என்று சொல்லிவிட்டேன். பிறகு நிதானமாகக் கொஞ்சகாலம் கழித்துத் திரும்பப் பார்த்தேன். படம் உண்மையாகவே பிடித்திருந்தது. ‘ஆஹா, மிஷ்கின் நம் நண்பன்டா’ என்று நினைத்துக்கொண்டேன். நம்புகிற உண்மையை எப்போதும் வெளிப்படையாகச் சொல்லிவிடுவது என் இயல்பு. ஒரு சாமியாரைப் பற்றிப் பாராட்டி எழுதியிருந்தேன். பிறகு, அவரைத் திட்டி எழுதுகிறேன் என்றால், அது அவருக்குள் ஏற்பட்ட மாற்றம். அதனால், அப்படி எழுதும்படி ஆனது. அதற்கு நான் என்ன செய்ய முடியும்?”

“ஷோபா சக்தியின் ‘காயா’ சிறுகதை குறித்த விமர்சனத்திலும் இந்தக் குழப்பம் நடந்ததே?”


“ஆமாம். சிவாஜி கணேசன் படம் பார்க்கும்போது அழுதுவிடுகிறோம் இல்லையா? அதுபோல முதல்முறை அந்தக் கதையை வாசிக்கும்போது நடந்துவிட்டது. அடுத்த நாளே மீண்டும் வாசித்தேன். அதிலுள்ள ஏமாற்று வேலைகளைக் கண்டுபிடித்தேன். முதல் நாள் போட்ட ‘அற்புதத்தை’ எடுத்துவிட்டு இந்தக் கதை ஏன் ஏமாற்று வேலை என்பதை விரிவாக எழுதினேன். இதுபோல யாரும் செய்ய மாட்டார்கள். மாற்றி மாற்றிச் சொன்னாலும், எனக்கு உண்மைகளைச் சொல்வதில் எப்போதும் தயக்கமில்லை.”
“நீங்கள் அதிகக்காலமாக வாழ்ந்துகொண்டிருக்கும் நகரம் சென்னை. இந்தியாவின் முக்கிய நகரமான சென்னையைப் பற்றிய உங்களது பார்வை என்ன?”

“சென்னையில் நான் 27 வருடங்களாக வாழ்ந்துவருகிறேன். ஆனால், சென்னையிலேயே நான் இல்லை. இவ்வளவு வருடங்களாகச் சென்னையில் இருப்பதாக நான் உணரவேயில்லை. ஓர் அறையில் இருக்கிறேன்; மாலுக்குப் போகிறேன், வருகிறேன்; பார்க்குக்குப் போகிறேன், வருகிறேன்; அவ்வளவே. சென்னையுடன் நான் உறவாடவே இல்லை. இன்றைக்கு சென்னையில் இருக்கும் ஒரு மேட்டுக்குடிப் பையனுக்கும் தமிழ் மொழிக்குமான உறவு எப்படியோ, அப்படித்தான் சென்னைக்கும் எனக்குமான உறவு. அந்தப் பையனுக்கு எப்படி மிகச் சொற்பமான தமிழ்ச் சொற்கள்தான் தெரிந்திருக்குமோ, அப்படித்தான் எனக்கும் சொற்பமான சென்னைதான் பரிச்சயம். இத்தனை வருடங்களாக சென்னையுடன் நான் இன்ட்ராக்ட் செய்யவே இல்லை. வண்ணாரப்பேட்டை, சௌகார்பேட்டை, எண்ணூர், தண்டையார்பேட்டை - இவையெல்லாம் எங்கே இருக்கின்றன என்றே எனக்குத் தெரியாது. சைதாப்பேட்டை என் வீட்டிலிருந்து 20 நிமிட தூரம்தான்.  ஆனால், சைதாப்பேட்டையின் தெருக்கள் எப்படி இருக்கும் என்று என்னால் கற்பனைகூட செய்ய முடியவில்லை.”

“ஏன் நீங்கள் சென்னையை அறிந்துகொள்ள விரும்பவேயில்லை?”

“இந்த ஊர் எந்த விதத்திலும் என்னுடன் உறவாடவில்லை. நாகூரிலிருந்து டெல்லி போனவுடன் பெரிய சைஸிலான நாகூருக்கு வந்திருப்பதாகத்தான் உணர்ந்தேன். நான் பிறந்தது இந்துக் குடும்பத்தில்தான் என்றாலும், என் வாழ்க்கை இஸ்லாமியக் கலாசாரத்தில் தோய்ந்தது. ஓர் இந்துத் தமிழனுக்குக் காகம் நெருக்கமான பறவையாக இருப்பதுபோல, எனக்கு புறா. ‘எந்த ஊரில் புறா நிறைய இருக்கிறதோ, அந்த ஊர் ஆசீர்வதிக்கப்பட்டது’ என்று `ஸீரோ டிகிரி’யில் ஒரு வரி எழுதியிருக்கிறேன். காரணம், புறாவைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு நான் பிறந்து வளர்ந்த நாகூரின் நினைவு நாஸ்டால்ஜியாக வந்துவிடும். மெரினாவில் விவேகானந்தர்  இல்லத்துக்கு எதிரே ஆயிரக்கணக்கான புறாக்கள் ஒன்றாக எழும்பிப் பறக்கும்போது எனக்கு நாகூரின் நினைவுகள்தான் வருகின்றன. டெல்லி முழுக்கவும் புறாக்கள் மயம்தான். இப்போது அந்த டெல்லியைப் பார்க்க முடியாது. அங்கு முக்கியமான எழுத்தாளர்கள் இருந்தார்கள். தமிழகத்தின் ஆகச்சிறந்த கலைஞர்கள் அனைவரின் பேச்சையும் இசையையும் நாடகங்களையும் அங்குதான் அனுபவித்தேன். ‘காதம்பரி’ என்று ஒரு தியேட்டர் அங்கு உண்டு. வெறும் இரண்டு ரூபாய்தான் டிக்கெட். பாலமுரளி கிருஷ்ணா கச்சேரியை எல்லாம் பத்து முறைக் கேட்டிருக்கிறேன். இப்படி டெல்லி என்பது கலாசாரங்களின் தலைநகராகவும் இருந்தது. சென்னையில் அப்படியான ஒரு கலாசாரப் பிணைப்பு எனக்கு ஏற்படவே இல்லை. எல்லா நகரங்களும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியவையாகவும், உயிர் பயத்தை அளிப்பவையாகவும் மாறி வருகின்றன. அவற்றையும் மீறி ஒரு சர்வதேசக் கலாசாரத்தின் இயங்குதளமாக டெல்லி மற்றவையிலிருந்து வேறுபடுகிறது. சென்னையில் வெறும் அச்சுறுத்தல் மட்டுமே உள்ளது.’’
“பிறகு எப்படி இவ்வளவு காலமாகச் சென்னையில் வசித்துவருகிறீர்கள்?”

“அவந்திகா இந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்த திருவல்லிக்கேணிப் பெண். இந்த ஊரைவிட்டு வரவே முடியாது என்று சொல்லிவிட்டாள். அதனால், இங்கே வாழும்படி ஆகிவிட்டது. இல்லையென்றால் எப்போதோ பாரிஸ் சென்றிருப்பேன். வேறு ஒரு மாநிலத்தில் போய், தமிழன் என்று வெளியில் சொல்லிக்கொள்ள முடியவில்லை. சொன்னால், டி.டி.வி.தினகரனையும், சசிகலாவையும் நம்மோடு சேர்த்துப் புரிந்துகொள்கிறார்கள். சமாதியில் ‘டமார் டமார்’ என்று ஆங்காரமாகச் சத்தியம் செய்த சசிகலாவின் விஷுவல்ஸ்தான் அவர்களின் கண்களுக்குத் தெரியும். தமிழ் செம்மொழி, இந்தியெல்லாம் நேற்றைக்கு வந்தது, தமிழுக்கு நாலாயிரம் வருடப் பாரம்பர்யம் இருக்கிறது என்கிறோம். எல்லாம் சொல்லிவிட்டுக் கடைசியில் ஜெயலலிதா, சசிகலா, தினகரன் மாதிரி ஆள்களின் காலில் போய் விழுகிறோம். மோடி பிரதமராகப் பதவியேற்றபோது, அவருக்கு அடுத்த இருக்கையில் ராஜ்நாத் சிங் கால்மேல் கால்போட்டு உட்கார்ந்திருக்கிறார். இங்கே அப்படி ஒரு காட்சியை நினைத்துப் பார்க்க முடியுமா? தலைவர்கள் தங்கள் கண்களில் இருந்து மறையும்வரைக் குனிந்தவாக்கில்  ஓர் ஆபாச போஸிலேயே நிற்கிறார்கள் அரசியல்வாதிகள். இன்று அனைத்துத் துறைகளிலும் அடிமைப்புத்தி வந்துவிட்டது என்றே சொல்லலாம். தமிழ் சினிமாவிலும் இப்படியான ஆள்கள்தான் வந்துவிட்டார்கள். இப்படியான ஆள்களுடன் இணைந்து எப்படி நான் என்னை அடையாளப்படுத்திக்கொள்ள முடியும்? தஞ்சாவூரிலும் வாழ்ந்திருக்கிறேன். அது ஒரு நிலப்பிரபுத்துவ வாழ்க்கைதான். ஆயிரமாயிரம் மக்களை அடிமையாக்கி வேலை வாங்கிக் கோயில்களெல்லாம் கட்டியிருக்கிறார்கள். தேவதாசிகள், பெண்ணடிமைத்தனம், சாதி என எவ்வளவோ விமர்சனங்கள் இருந்தாலும் அங்கு அந்த மண்ணோடும் மக்களோடும் என்னைத் தொடர்புபடுத்திக்கொள்ள முடிகிறது. தஞ்சாவூரிலும் மதுரையிலும் என்னை இணைத்துக்கொள்ள முடிகிறது. அது சென்னையில் முடியவில்லை. சென்னை, ஒரு மீனவ கிராமமாக இருந்தது. அந்தக் கிராமமும் இப்போது இல்லை. தொழில் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கின்ற காலனிகள் போன்றுதான் இருக்கிறது சென்னை. வஞ்சிரம் மீன் கிலோ 1,400 ரூபாய்க்கு விற்கிறது. விறால் மீனே இங்கு கிடைப்பதில்லை. அவ்வளவு ஏன், ‘ஏழைகளின் விறால்’ என்று சொல்லப்படுகிற ‘தேளி’கூட இங்கே இல்லை. விறால் மீன் இல்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கை. விறால் மீன் கிடைக்காத ஊரெல்லாம் ஓர் ஊரா? அவந்திகாவிடம் அடிக்கடி சொல்வேன்: ‘உனக்காக நான் செய்துகொண்டிருக்கும் மிகப் பெரிய தியாகம் இந்த ஊரில் வசிப்பது!’ என்று. அதுதான் உண்மையும்.’’
“சென்னை வளரவேயில்லை என்கிறீர்களா?”

``சென்னையின் வளர்ச்சி என்பது கேன்சரைப் போன்ற வளர்ச்சிதான். வளர்ச்சி என்றால், அடிப்படையில் சரியான நடைபாதை; உருப்படியான மேம்பாலங்கள்; பாதுகாப்பான போக்குவரத்து போன்றவை இருக்க வேண்டும். சென்னையைப் பார்க்கும்போது ஒரு மாதிரி க்ரேஸியாகத் தெரிகிறது. திடீரென்று காசு வந்துவிட்டால், பெரிது பெரிதாகத் தங்கச் சங்கிலியும் வெள்ளைச்சட்டையும் போட்டுக்கொண்டு அவலட்சணமாகத் திரிவார்களே சிலர்,  அது போலத்தான் இருக்கிறது. ஆனால், மைலாப்பூர் பிடித்திருக்கிறது. ஏனென்றால், இது வேறு உலகம். மாலையில் நோன்புக் கஞ்சி, சூப், மசூதிகளின் புறா, சர்ச், கோயில்களின் மணியோசை என வேறு மாதிரியாக இருக்கிறது. நெருக்கடியாக இருந்தாலும் மைலாப்பூரில் ஒரு வாழ்க்கை இருக்கிறது.”

“தமிழகத்தின் பல்வேறு வட்டாரம் சார்ந்த இலக்கியங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. சென்னை சார்ந்த முக்கியமான இலக்கியங்களாக எதைக் குறிப்பிடுவீர்கள்?”

“சி.சு.செல்லப்பா, புதுமைப்பித்தன், ஜி.நாகராஜன் போன்ற பலர் இங்கே வந்திருக்கிறார்கள். சென்னை சார்ந்து கொஞ்சம் எழுதியும் இருக்கிறார்கள். ஆனால், இங்கிருந்து யாரும் உருவானதாகத் தெரியவில்லை. இது ஒரு ரயில்வே ஸ்டேஷன் போலத்தான் இன்னும் இருக்கிறது. அந்த வகையில் சிறப்பாக எழுதப்பட்ட நகரங்களாக மும்பையையும் டெல்லியையும் சொல்லலாம். ‘சுகேத் மேஹ்தா’ என்பவர் ‘மேக்ஸிமம் சிட்டி’ என்றொரு பெரிய புத்தகம் எழுதியுள்ளார். முழுக்க முழுக்க மும்பையைப் பற்றியது. ஆயிரம் பக்கங்கள். அப்படிப்பட்ட ஒரு நூலைப்போல சென்னையைப் பற்றி யாரும் எழுதவில்லை. இங்கே குதிரைக் கூட்டம்போல எல்லாம் சினிமாவை நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கிறார்கள்.”

“சென்னை குறித்து பல சினிமாக்கள் வந்துகொண்டிருக்கின்றன. அவையெல்லாம் முக்கியமான பதிவுகள்தானே?”

“இங்குதான் சினிமாவே இல்லையென்கிறேனே! அப்படி சினிமாவில் சென்னையைப் பதிவுசெய்ய வேண்டும் என்றால், முதலில் இவர்கள் சினிமா குறித்த நாவலான ‘கரைந்த நிழல்களை’ படமாக்கியிருக்க வேண்டும். அவர்கள் துறை சார்ந்த நாவல்தானே அது. அதுவே நடக்கவில்லையே? ‘மான்சூன் வெட்டிங்’ படம் பாருங்கள். அந்தப் படத்தில் டெல்லி குறித்து நான் குறிப்பிட்ட அனைத்து விஷயங்களும் இருக்கும். ‘மெட்ராஸ்’ படத்தை முக்கியமாகச் சொல்கிறார்கள் . ஆனால், அது வடசென்னையை மட்டும்தானே பிரதிபலிக்கிறது? என்னைப் பொறுத்தவரை தமிழ் சினிமாவில் சென்னை இன்னும் சரியாகப் பதிவாகவில்லை.”

“இன்று தமிழில் எழுதிக்கொண்டிருக்கும் இளைஞர்களின் எழுத்து குறித்து உங்களது கருத்து..?”

“இங்கு வேலை பிரமாதமாக நடந்து வருகிறது. சமீபத்தில் உம்பர்தோ எக்கோவின் ‘தி நேம் ஆப் தி ரோஸ்’ படித்தேன்.  படுமுட்டாள்தனமான நாவல் அது. ஒரு தேவாலயத்தைப் பற்றிப் பக்கம் பக்கமாக விவரிக்கிறார். அந்தத் தேவாலயத்தின் கதவைப் பற்றி மட்டுமே தனியாக ஓர் அத்தியாயம். அதோடெல்லாம் ஒப்பிடுகையில் இங்கு எவ்வளவோ தீவிரமாக இலக்கியம் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது.”
“இலக்கியத்தில் பெண் படைப்பாளிகளின் இயக்கம் எப்படி இருக்கிறது?”

“நான் கவனித்தவரை பெண் படைப்பாளிகள் அதிகமாக வாசிப்பதில்லை. சி.சு.செல்லப்பா, க.நா.சு, தஞ்சை ப்ரகாஷ், அசோகமித்ரன், இந்திரா பார்த்தசாரதி, எம்.வி.வெங்கட்ராம், கு.அழகிரிசாமி, கு.ப.ரா,  தி.ஜானகிராமன்,  கரிச்சான் குஞ்சு இவர்களைப் பற்றியெல்லாம் பெண் படைப்பாளிகள் என்ன நினைக்கிறார்கள் என்றே தெரியவில்லை.  எதைப்பற்றியுமே அவர்கள் எழுதுவதில்லை. கவிதை சுருக்கமாகவும் எழுதுவதற்கு சுலபமாகவும் இருப்பதால், அதிலேயே தேங்கிவிடுகிறார்கள். சல்மா தவிர வேறு யாரும் நாவல்கள், சிறுகதைகள் எழுதுவதில்லை.செளகர்யமான இடத்தில் இருந்துகொண்டு கவிதை எழுதியபடி பாதுகாப்பாக இருக்கிறார்கள். ஒரு படைப்பாளிக்கு உரைநடையில்தானே சவால்கள் இருக்கின்றன? தேன்மொழி தாஸ், லீனா மணிமேகலை, பெருந்தேவி போன்றோருடைய கவிதைகள் எனக்குப் பிடித்தமானதுதான். என்றாலும், உரைநடைக்குவந்து அவர்கள் புதிய சவால்களை எதிர்கொள்வதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்.”

“டெல்லியில் இருக்கும்போது நிறைய நாடகங்கள் பார்த்ததாகக் குறிப்பிட்டீர்கள்.தமிழில் நாடகங்களின் நிலை என்னவாக இருக்கிறது?”


“இன்றைய நவீன நாடக இயக்கம் அவ்வளவு தீவிரமாக இல்லை. எப்படி சோழ மண்டல ஓவியர்களுக்கும் நமக்கும் சம்பந்தமில்லாமல் இருக்கிறதோ, அப்படித்தான் நவீன நாடக உலகமும் இருக்கிறது.”

“ஆரம்பத்தில் நீங்களும் நாடகங்களில் ஈடுபட்டீர்கள் அல்லவா? அந்த நாடக அனுபவம் குறித்துச் சொல்லுங்களேன்...”

“என் வாழ்வில் ஒரே ஒரு நாடகம்தான் போட்டேன். அதோடு சரி, இந்த ஊரில் இனி நாம் நாடகம் போடக் கூடாது என்று முடிவு செய்துவிட்டேன். அந்தப் பிரச்னையின்போது எனக்காகப் பேசிய கே.ஏ.குணசேகரனுக்கும் செம அடி. அதைவிடக் கொடுமை என்னவென்றால், அந்த நாடக வளாகத்தை விட்டு வெளியே வந்தாலும் அடிப்போம் என்று வெளியிலும் ஒரு கும்பல் காத்திருந்தது. ஒருமணி நேரத்துக்கும் மேலாக ஒளிந்திருக்க வேண்டியதாகி விட்டது. இருபது பேரின் பாதுகாப்போடு என்னை வெளியே அனுப்பிவைத்தார்கள்.”

“அப்படி என்னதான் செய்தீர்கள் நாடகத்தில்..?”

“அந்த அரங்கத்தில் சிகரெட் குடிக்கக் கூடாது என்பது விதி. ஆனால், முதல் காட்சியிலேயே சிகரெட்டுடன் மேடையில் நான் அமர்ந்திருப்பேன். டேப் ரெக்கார்டரில் சுப்ரபாதம் ஓடிக்கொண்டிருக்கும். கொலை வெறியாகிவிட்டார்கள். முதல் காட்சியிலேயே குழப்பம் ஆரம்பித்து விட்டது. அடுத்த காட்சி, இரண்டு ஆண்கள் ஜீன்ஸ் அணிந்து வெற்று மார்புடன்  ஓர்  உடல் இன்னொரு உடலை ஈர்க்கிறது என்கிற பாவனையில் நடன அசைவுகளை வெளிப்படுத்துவார்கள். பின்னணியில் சுப்ரபாதம் ஓடிக்கொண்டிருக்கும். மூன்றாவது காட்சி, ‘சிதம்பரம் பத்மினி’ சம்பவத்தை நினைவுகூரும்விதமாக மேடையில் ஒரு பெண் வருகிறாள். அவளின் பிறப்புறுப்பில் போலீஸ்காரன் ஒருவன் கத்தியை வைக்கிறான். அப்போது சில்க் ஸ்மிதா பாடல் ஒன்று ஒலிக்கிறது. நான்காவது காட்சி, ‘டாடி மம்மி வீட்டில் இல்லை’ மாதிரியான அப்போதைய ஒரு பாடலை ஒலிக்கவிட்டோம். அவ்வளவுதான், கூட்டம் மேடையேறி அடிக்கத் தொடங்கிவிட்டது (சிரிக்கிறார்).”

“ஒருபுறம் ‘என்னிடம் காசே இல்லை; நான் ஓர் ஏழை’ என்று எழுதுகிறீர்கள். மறுபுறம் விலை உயர்ந்த மதுவகை, உணவுகள், அதிக செலவாகும் நாய் போன்ற பிராணிகளை வளர்த்துக்கொண்டு ஒரு ‘லக்ஸுரி’ வாழ்க்கை வாழ்கிறீர்கள்... இந்த முரணை எப்படிப் புரிந்துகொள்வது?”
“ஏழ்மை என்பதின் அர்த்தம் ஆளாளுக்கு வேறுபடுகிறது. மணிரத்னம் ஜப்பானில் ஒரு காட்சி எடுக்கவேண்டும் என்றால், தயங்காமல் கிளம்பிப் போவார். காரணம், அவருக்கு இருக்கும் வாய்ப்புகள். ஆனால், சீலேவுக்குப் போக வேண்டும் என பல வருடங்களாக ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்; போய் வரச் செலவாகும்; ஐந்து லட்சம் இல்லை என்று 30 வருடங்களாகச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.  இன்னும் அது சாத்தியமாகவில்லை.  இதைத்தான் ஓர் எழுத்தாளனின் ஏழ்மை என்கிறேன். ஆனால், நான் ஏழ்மை என்று எழுதுவதைச் சிலர் தவறாகப் புரிந்துகொண்டு நான் போனில் அழைத்தால், ‘கட்’ செய்துவிட்டு அவர்கள் அழைக்கிறார்கள். தலையில் அடித்துக்கொள்வதைத் தவிர வேறு என்ன செய்வது?”

“இளையராஜாவின் இசை குறித்துத் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறீர்கள்... நீங்கள் வியக்கும் அளவுக்கான ஒரு சிறப்பம்சம் கூடவா அவரது இசையில் இல்லை?”

``பாப் மார்லியின் இசையைக் குப்பை என்று சொன்னதிலிருந்துதான் இளையராஜா மீது எனக்கு விமர்சனமும் கோபமும் உண்டானது. பாப் மார்லி, ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்துவந்த ஓர் இசைக் கடவுள். அவரை அப்படிச் சொன்னதில் உண்டான என் கோபம் நியாமானதே. அதைத்தான் எழுதினேன். அதேசமயம், ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படம் பார்த்த பிறகு, ‘கடவுளே மனிதனாகப் பிறந்தால் மட்டும்தான், இப்படி இசை அமைக்க முடியும்’ என்று எழுதினேன். உண்மைதான், அவருக்குச் சரியான படங்கள் வாய்க்கவில்லை.”

“ஏதாவது இசைக்கருவி கற்றுக்கொள்ள முயற்சி செய்திருக்கிறீர்களா?”

“நானும் நாகூர் அனிபா மகனும், தினமும் காரைக்கால் போய்   கிட்டாரும் பியானோவும் கற்றுக்கொள்ள முயற்சி செய்தோம். குறைந்தது ஒருநாளைக்கு மூன்று முதல் நான்குமணி நேரம் பயிற்சி செய்ய வேண்டும் என்கிற நிலை. நேரமில்லாததால், நான் விட்டுவிட்டேன். அவர் கற்றுக்கொண்டார்.”

“விருதுகள் குறித்து தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்துகொண்டே இருக்கின்றனவே...” 


“இது என்ன புதிதா? இலக்கியத்திற்கு மதிப்பே இல்லாத ஒரு சமூகத்தில் நமக்கு நாமே விருதுகள் கொடுத்துக்கொள்ள வேண்டியதுதான். நாளைக்கு ஜெயமோகன் எனக்கொரு விருது கொடுப்பார். என்னிடம் காசு வந்தால், நான் ஒரு விருது அமைப்பை உருவாக்கி ஜெயமோகனுக்கு விருது கொடுப்பேன். சமூகம் கவனிக்கவில்லை; கவனிக்காது; நம்மை நாமே கவனித்துக் கொள்ள வேண்டியதுதான்.”

“உங்களைச் சாருவாக மாற்றிய புத்தகங்கள் குறித்துச் சொல்ல முடியுமா?”


“ ‘நீ சராசரி அல்ல; மந்தையோடு மந்தையாகச் செல்லும் ஆடு அல்ல’ என்று உணர்த்தியது ஜெயகாந்தனின் புத்தகங்கள். இன்னும் அதிகம் போகவேண்டும் என்று  தோன்றவைத்தவர்கள் அசோகமித்ரனும் ஆதவனும். இது நமது இடமல்ல, நாம் இயங்க வேண்டிய இடம் வேறு என்று உணரச்செய்தது பிரெஞ்ச் இலக்கியங்கள். அவை எண்ணிக்கையற்றவை, குறிப்பிட்டு இன்ன இன்ன புத்தகங்கள் என்று சொல்ல முடியவில்லை.”

“உங்களின் ஏதாவதொரு நாவலைத் திருத்தி எழுத வேண்டும் என்று விரும்புகிறீர்களா?”

ஆமாம். ‘எக்ஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்சி பனியனும்’ நாவலைத் திருத்தி எழுதப்போகிறேன். அவ்வளவு விஷயங்களை  விட்டிருக்கிறேன். கண்டிப்பாக ஆயிரம் பக்கங்கள் வரும்.”

“முன்பெல்லாம் மிகவும் ஆக்ரோஷமாக இருப்பார் சாரு, இப்போது சாந்தமாகிவிட்டார் என்கிறார்களே... என்ன காரணம்?”


“(சிரிக்கிறார்) பெரிதாக ஒன்றுமில்லை. ‘ரான்சில் 10’ என்று ஒரு மாத்திரை எடுத்துக் கொள்கிறேன். முன்பு, ரத்த அழுத்தம் அதிகம் இருந்தது; கொதித்துக்கொண்டிருந்தேன். இப்போது இந்த மாத்திரையால் சாந்தமாகிவிட்டேன். உடலுக்குள் நடக்கிற கெமிக்கல் ரியாக்‌ஷன்கள்தானே எல்லாம்!”

“உலகத்தின் ஏராளமான படைப்பாளிகள்  ‘கனவுகளை’ முக்கியமானதாகக் கருதுகிறார்கள். படைப்புகள் சார்ந்து அவை உதவுவதாகச் சொல்கிறார்கள். கனவுகள் சார்ந்து உங்களின் அனுபவம்?”

“கலைஞனுக்கு தனியே கனவென்று ஏதும் இல்லை. அவன் எப்போதும் கனவுகளில்தான் வாழ்கிறான். `ஸீரோ டிகிரி’ நாவலே கனவு நிலையில் எழுதப் பட்டதுதான்.” 

“உங்களது எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் எவ்வளவு தூரம்?”

“என் எழுத்துதான் என் வாழ்க்கை. என் வாழ்க்கைதான் என் எழுத்து!”

“தமிழ் இலக்கியத்தில் சாரு என்னவாக நினைவுகூரப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?”

“எப்போதைக்குமான இளைஞர்களின் குரலாக!”

கருத்துகள் இல்லை:

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...