சனி, 15 ஜூலை, 2017

விக்ரமாதித்யன் - நேர்காணல்

‘‘கவிதைகள் சத்தம் போடக்கூடாது!’’ - விக்ரமாதித்யன்

சந்திப்பு : வெய்யில், கதிர்பாரதி - படங்கள் : ஈ.ஜெ.நந்தகுமார்
தமாக சிலுசிலுக்கிறது குற்றாலத் தூறல். மலைமீதுள்ள ஒரு பூங்காவுக்குப்  புறப்பட்டோம். எந்தவித உதவியையும் மறுத்து தானாகவே மலை ஏறுவதாக அடம்பிடிக்கிறார் கவிஞர் விக்ரமாதித்யன். ஒவ்வொரு பதிலுக்குப் பிறகும் `இது ரீடருக்கு கன்வே ஆகிரும்ல?’ என்று கண் சிமிட்டுகிறார். ஒரு மனிதர் இவ்வளவு சிரிப்பதைப் பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. விக்ரமாதித்யனின் முழுமுதல் அடையாளம் அந்தச் சிரிப்பு. இடையிடையே கொஞ்சம் கொஞ்சும் ஆங்கிலம். `எந்த ஒளிவுமறையும் வேணாம் என்னா... என்ன வேணாலும் கேளுப்பா’ என்றவரோடு உரையாடியதிலிருந்து...
``முதலில், உங்களைப் பாதித்த கவிதை வரிகளைப் பற்றிச் சொல்லுங்கள்?’’

``நிறைய இருக்கே. கம்பதாசனின் திரைப்பாடல்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவற்றில் `கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே’, `கல்யாண ஊர்வலம் வரும்... உல்லாசமே தரும்...’ பாடல்கள் ரொம்பப் பிடிக்கும். `மன்னாதி மன்னன்’ படத்தில் கவிஞர் கண்ணதாசனின் `கண்கள் இரண்டும் என்று உன்னைக் கண்டு பேசுமோ...’ போன்ற சில பாடல் வரிகள் என்னில் ஏற்படுத்திய பாதிப்புகள் அதிகம்.’’

``திரைப்பாடல்களில் சரி... கவிதையில்?’’

``நான் வந்தது திரைப்பாடல்களின் வழியே என்பதால், இதை மறைக்காமல் சொன்னேன். அப்படிச் சொல்லித்தானே ஆகவேண்டும்.’’

`` `திரைப்படப் பாடல்கள் பாதிப்பில் கவிஞன் ஆனேன்’ என்று சொன்ன முதல் நவீனக் கவிஞர் நீங்கள்தான்போல?’’

``அப்படி ஒருவன் வந்துதானே ஆக வேண்டும் (சிரிக்கிறார்). இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. கவிதைகளில் என்று வரும்போது, `குறுந்தொகை’ வரியான `சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள் உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.’ செம்புலப் பெயல்நீரார் எழுதிய `யாயும் ஞாயும் யாராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்’ ஆகிய வரிகள் எனக்குப் பிடித்தமானவை. மரண பயம் வந்தால், யம பயம் போக்கும் `மகா ம்ருத்யுஞ்சய மந்திரம்’ வரிகளை வாசிப்பேன். சிலப்பதிகாரத்தில் வரும் `கானல் வரிகள்’ எல்லாம் என்னை வேறு இடத்துக்கு நகர்த்தியவை. கம்பனின் வரிகளும் அப்படித்தான். அப்புறம் கண்ணதாசன் கவிதைகள்... என்னைப் பெரிதும் பாதித்தவை.’’

`` `ஒரு கவிதைக்கான அடிப்படை அம்சமாக இது இருந்தால் நன்றாக இருக்கும்’ என்று நீங்கள் எதைச் சொல்வீர்கள்?’’

``கவிதைக்கு அப்படி ஒரு வரையறையைச் சொல்லிவிட முடியாது.’’

``கவிதையைத் தாண்டி சிறுகதை, நாவல்... என்று பிற இலக்கிய வடிவத்துக்குள் நீங்கள் விரிவாகப் போகாததற்கு என்ன காரணம்?’’

``அடிப்படையில் என்னைப் பெரிய கவிஞனாகவோ, எழுத்தாளனாகவோ நான் கருதிக்கொண்டதில்லை. கவிதைகளில் பெரிய மாஸ்டராக வேண்டும் என்பதெல்லாம் என் லட்சியமும் அல்ல. `நாமும் எழுதினால் என்ன?’ என்ற ஆசையில் எழுத வந்தவன்தான் நான். ஆனால், மிக நல்ல வாசகன். 

சிறுகதைகளை நான் எழுத வரும்போது யதார்த்தவாதம் மலையேறிவிட்டது. ஆனாலும், என்னளவில் நான் எழுதியவை நல்ல கதைகள்தான். சுவாரஸ்யத்துக்காக ஆங்காங்கே சில வர்ணனைகள் சேர்த்திருப்பேன். என் கதைகள் கிட்டத்தட்ட ‘ஆட்டோ பயோகிராஃபிதான். அவற்றுக்கு ஒரு லிட்டரரி மெரிட் இருக்கிறதா, இல்லையா என்றெல்லாம் நான் கவலைப்படுவதில்லை. 70-களில் எழுத வேண்டிய கதைகளை 80-களில் எழுதியது என் தவறுதான். அதில் காலமே ஒரு ‘ரோல்’ செய்துவிட்டது. ஆனாலும், பெருமாள்முருகன் `நிகழ்’ இதழிலும், சா.கந்தசாமி ‘தினமணி கதிர்’ இதழிலும், கந்தர்வன் ‘செம்மலர்’ இதழிலும் என் கதைகள் பற்றி விமர்சனம் எழுதத்தான் செய்தார்கள். அது போதும்.’’

``உங்களுக்கு சினிமா பாடல் எழுதுவதற்கான வாய்ப்பு அமைந்ததா, சினிமா பாடல்கள் மீதான உங்கள் மதிப்பீடு என்னவாக இருக்கிறது?’’

‘`சினிமா பாடல் எழுத எனக்கு பயம். அதை எழுதுவதற்கான ‘ஸ்டாமினா’ என்னிடம் கிடையாது. ஒரு கவிதையை நன்கு எழுதிவிட வேண்டும் என்பதற்காக ஒரு குவார்ட்டர் மது சாப்பிடுபவன் நான். சினிமா பாடல் என்பது எல்லோரையும் திருப்திப்படுத்தவேண்டிய ஒரு விஷயம். அப்படி சினிமாவுக்குப் பாடல் எழுதியிருந்தால்... அவ்வளவுதான், ஒழிந்து போயிருப்பேன். தவிரவும், என் சுபாவத்துக்கு சினிமாவுக்குப் பாடல் எழுதவெல்லாம் வராது. ஏனென்றால், ஒரு விஷயத்தில் ஒருமுறை சறுக்கிவிட்டால், மீண்டும் அதில் முயன்று பார்க்காத சுபாவம் எனக்கு. சினிமா பாடல் எழுதுவதற்கு அந்தச் சுபாவம் கைகொடுக்காது. அப்படி எழுதும் ஆர்வமும் திட்டமும் என்னிடம் எப்போதும் இருந்ததில்லை. என் எனர்ஜி, கவிதை எழுதுவதற்கே போதுமானதாக இருக்கிறது. அதனால்தான் 1991-ம் ஆண்டுக்குப் பிறகு நான் ஈடுபட்டுக்கொண்டிருந்த பத்திரிகை வேலையைக்கூட விட்டுவிட்டேன்’’

`` `கவிதைக்குள் ஏதாவது ஒன்றைக் கொண்டுவரவே முடியவில்லையே, மொழிப்படுத்த முடியவில்லையே’ என உங்களுக்குத் தோன்றியிருக்கிறதா?’’

``இருக்கிறது... அது மரணபயம். மரணம் குறித்து, தற்கொலை உணர்வு பற்றி நிறைய எழுதியிருக்கிறார்கள். ஆனால், இன்று வரைக்கும் தமிழ்க் கவிதைகளில் மரணபயம் பற்றிப் பெரிதாக யாரும் எழுதவில்லை.  மரணபயத்தைப் பார்த்த எழுத்தாளர்கள், கவிஞர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள்கூட அதை எழுதவில்லை. சமீபகாலமாக எனக்கு மரணபயம் வருகிறது. சமீபத்தில் அல்சர் வந்தபோதுகூட அந்த பயத்தை உணர்ந்தேன். ஆனால், அதைப்பற்றி இன்னும் நான் எழுதவில்லை. ஏனென்றால்,  எழுதுவதற்கு அது சவாலானது.’’

``எளிமையாக எழுத வருகிற விஷயம் எதுவும் உண்டா?’’


``என்னைப் பொறுத்தவரை கவிதை எழுதுவது எளிமையானது அல்ல. அது ஒருவகையான வாதை. என் கவிதைகள் அனைத்தும் தானாக அமைபவை. ஏறக்குறைய அருள்வாக்கு வருவது போலத்தான் எனக்கு கவிதை வருவதும். ஆனால், நான் எழுதுவது பூசாரிகளின் அருள்வாக்கு அல்ல.’’

``நன்றாக வராத கவிதைகளைப் பிரசுரத்துக்குக் கொடுக்காமல் கிழித்துப்போட்டது உண்டா?’’

``இல்லை. வைத்திருக்கிறேன். நிறைய வைத்திருக்கிறேன். அவற்றைப் பார்க்கும்போது ரொம்பக் கஷ்டமாக இருக்கும். ஒவ்வொரு கவிஞனிடமும் அப்படியான கவிதைகள் இருக்கத்தான் செய்யும். நான் கொஞ்சம் அதிகமாக எழுதுவதால், என்னிடம் அதிகமாக இருக்கிறது.’’

``பிறகு அவற்றை என்னதான் செய்வீர்கள்?”

``ஏதாவதொரு சமயத்தில் எடுத்துப் பார்க்கும்போது தெறிப்பான இரண்டு, மூன்று வரிகள் தென்படும். அவற்றைக் குறுங்கவிதை ஆக்கிவிடுவேன்.’’

``ஜோதிடத்தின்மீது உங்களுக்கு என்ன அப்படி ஒரு நம்பிக்கை?’’

``ஜோதிடம்... ஏறக்குறைய ஒருவகையான சயின்ஸ்தான். தவிரவும், இது ஓர் அசலான சப்ஜெக்ட். என் அனுபவத்தில் ஜோதிடத்தை அப்படித்தான் சொல்வேன்.  ஏனென்றால், அனுபவத்துக்குச் சரிவராத எதையும் நான் ஏற்றுக்கொண்டதில்லை. ஆரம்பத்தில் ஜோதிடம் சம்பந்தமான புத்தகங்களை வாசித்தபோதே, அந்தக் கலை என்னை ஈர்க்க ஆரம்பித்தது. இன்னொரு விஷயம், `நமக்கு உதவிசெய்ய நினைக்கிற நல்ல மனிதர்கள், நம்மைச் சுற்றி நிறைய பேர் இருக்கிறார்கள், நமக்கு ஏதோ கொஞ்சம் திறமையும் இருக்கிறது, கவிதை எழுதுகிறோம், பத்திரிகையில் வேலை பார்த்திருக்கிறோம், நாலு பெரிய மனிதர்களைத் தெரிந்து வைத்திருக்கிறோம். இருந்தும், லௌகீக வாழ்க்கையில் ஏன் எதுவும் ‘க்ளிக்’ ஆக மாட்டேன் என்கிறது. அதைத் தெரிந்து கொள்வோமே’ என்றுதான் நான் ஜோதிடத்துக்குள் வந்தேன். 

இப்போது  ஜாதகத்தை வைத்து ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரைக்கும் ஏறக்குறைய என்னால் சொல்லிவிட முடியும். கவிதையும் இலக்கியமும் ஒரு புதிய பிரபஞ்சத்தைத்  திறந்துவிடுவதை அனுபவித்துப் பார்த்த எனக்கு, ஜோதிடமும் அதைத் தந்தபோது, நான் அதற்குள் ஆழ்ந்து பயணிக்க ஆரம்பித்தேன். எவன் ஒருவன் ‘மாஸ்டர் பொயட்’ ஆவான் என்பதை அவனது ஜாதகத்தை வைத்து என்னால் சொல்லிவிட முடியும். ஏன் ஒருவன் அரசியல் கவிதை எழுதுகிறான், ஏன் ஒருவன் நையாண்டிக் கவிதை எழுதுகிறான், ஏன் ஒருவன் காதல் கவிதை எழுதுகிறான் என்பதெல்லாம் அவன் ஜாதகத்திலே இருக்கிறது தெரியுமா?’’

``ஆச்சர்யமாக இருக்கிறதே... இப்போது இருக்கிற பத்து இளம் கவிஞர்களின் ஜாதகத்தைக் கொடுத்தால், யார் ‘மாஸ்டர் பொயட்’ ஆவார் என்று உங்களால் சொல்லிவிட முடியுமா?’’


``நிச்சயமாகச் சொல்லிவிட முடியும். ஒருவருக்கு வாக்கு ஸ்தானத்தில் புதன், சுக்கிரன், சூரியன் ஆதிக்கம் இருந்தால் அவன்தான் மாஸ்டர் பொயட்.’’

``உங்கள் வாக்கு ஸ்தானத்தில் இவை எல்லாம் இருக்கின்றனவா?’’

``(குதூகலமாகச் சிரிக்கிறார்) ஆமாம்... எனக்கு அப்படி இருக்கிறது. எனக்கு இருப்பதுபோல இன்னொரு கவிஞரைச் சொல்லட்டுமா? (மர்மப் புன்னகையோடு ரகசியம்போலச் சொல்கிறார்) லக்ஷ்மி மணிவண்ணன். ஆனால், எங்கள் இரண்டு பேருக்கும் லௌகீக வாழ்க்கை சிறப்பாக இருக்காது. இதில் சில விதிவிலக்குகளும் இருக்கின்றன.’’

``வேறு யார் யாரின் ஜாதகங்களைப் பார்த்திருக்கிறீர்கள்?’’
``ஷங்கர்ராமசுப்ரமணியனுக்கு வாக்கு ஸ்தானத்தில் சுக்கிரன் இருக்கிறான்; செவ்வாய் பார்ப்பான். ரொம்பத் தாமதமாகத்தான் ஷங்கருக்கு நான் ஒன்றைச் சொன்னேன்...  அது `நீ பெண்களைப் பற்றி எது எழுதினாலும் சரியா வரும்’ என்பதுதான். அவரின் சக்சஸ்ஃபுல் கவிதைகள் எல்லாம் பெண்களைப் பற்றி எழுதியதுதான். உதாரணம், `மணி பாப்பா’ கவிதை. அப்புறம் `நல்லதங்காள்’, `பிராயநதி’ போன்ற அவரது சக்சஸ்ஃபுல் கவிதைகள் எல்லாம் பெண்கள் பற்றியதுதான். காரணம், அவர் ஜாதகம் அப்படி.’’

``இப்படி ஒவ்வொரு கவிஞருக்கும் அவருக்கான  ‘கவிதை ஏரியாவை’ உங்களால் சொல்லிவிட முடியுமா?’’


``நான் என்று இல்லை... ஜாதகம் பார்ப்பதில் மாஸ்டராக இருக்கும் எந்த ஜோசியக்காரராலும் சொல்லிவிட முடியும். எல்லாவற்றையும்விட, `நீ என்ன செய்ய வேண்டும், எதில் ஜொலிப்பாய்?’ என்பது எல்லாம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டு விட்டது. அதன்படிதான் நடக்கும்.’’
``நம்பிராஜன், விக்ரமாதித்யன் நம்பி, உத்திராடன், அபராஜிதா... போன்ற புனைபெயர்களில் எழுதியிருக்கிறீர்கள். எதற்கு இத்தனை புனைபெயர்கள்?’’

``ம்... மற்ற பெயர்களுக்கு வேறு காரணங்கள் இருக்கின்றன. ஆனால், அபராஜிதா என்பது ஒரு எக்ஸ்ட்ரார்டினரி பியூட்டிஃபுல் கேர்ள்.... (அடக்க முடியாமல் சிரிக்கிறார்).’’ 

``ஓ... உங்கள் காதலியா?’’

``காதலி எல்லாம் இல்லை. சும்மா பார்த்ததுதான். (நீண்ட யோசனை) ஒருவேளை, அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால்... பார்ப்போம். ஆனால், இன்னொன்றையும் சொல்கிறேன். என் ஜாதகக் கணிப்புப்படி, எனக்கு அடுத்த பிறவி என்பது கிடையாது. நான் செய்கிற அனைத்து நல்லது கெட்டதுகளும் இந்தப் பிறவிக்குள்தான். என்னைவிட ஜோதிடத்தில் மாஸ்டர் யாராவது என் ஜாதகத்தைப் பார்த்து, ‘உனக்கு அடுத்த பிறவி உண்டு’ என்று சொன்னால், நன்றாகத்தான் இருக்கும். (வாய்விட்டுச் சிரிக்கிறார்).’’

``புனைபெயர்களில் எழுதுவதற்கும் உங்களின் ஜோதிட நம்பிக்கைக்கும் தொடர்பு இருக்கிறதா?’’

``ஆமாம்... நிறைய இருக்கிறது. என் தசாபுத்திகள் மாறும்போது நான் பெயர்களை மாற்றிக்கொள்வேன். இதைத் திட்டமிட்டுத்தான் செய்கிறேன். என்னுடைய நட்சத்திரம் உத்திராடம். அதனால் `உத்திராடன்’ என்ற பெயரில் எழுதினேன். ஜோதிடப்படி என் எழுத்து, கவிதை புனைபெயர்கள் எல்லாம் முடிவாகின்றன.’’

``உங்களை நிறைய பேர் கலகவாதி என்கிறார்கள். உண்மையாக, உங்களை நீங்கள் கலகவாதி என்று நம்புகிறீர்களா?’’


``அது அன்றைக்குக் குடிப்பதைப் பொறுத்தது. ஆனால், வேண்டும் என்று நான் எதையும் சொல்வதில்லை; செய்வதில்லை.’’ 

``குடியைக் கொண்டாடுகிற கவிஞர் நீங்கள். குடிக்கும் உங்களுடைய கவிதைக்குமான முதல் உறவு எப்படித் தொடங்குகிறது?’’


``தமிழ் ஒரு துடியான மொழி. என் கவிதைகளில் மரபார்ந்த ஒரு சப்தம் இருக்கும். தமிழின் துடியான சப்த நயங்களை, என் கவிதைகளில் கொண்டுவருவதற்கு எனக்கு ஆல்கஹால் துணைசெய்கிறது. `இதற்காக மட்டும்தான் நீங்கள் குடிக்கிறீங்களா?’ எனக் கேட்டால், சத்தியமாக இல்லை. ஏனென்றால், எனக்குக் குடிப்பதும் பிடிக்கும். குடிப்பதை நான் மிகவும் விரும்பியே செய்கிறேன்.’’
``எப்போது முதன்முதலாகக் குடித்தீர்கள்?’’

``கவிஞர் கண்ணதாசனின் ஊரான சிறுகூடல்பட்டிக்குப் பக்கத்து ஊரில்தான் நான் முதன்முதலில் கள் குடித்தேன். அது 1969-ம் ஆண்டு. மேலூர் ஹோட்டல் ஒன்றில் சர்வராகப் பார்த்த வேலையை விட்டுவிட்டு, குன்றக்குடி அடிகளாரிடம் அட்டெண்டராக வேலைக்குச் சேர்ந்தேன். சாமி (குன்றக்குடி அடிகளார்) பட்டிமன்ற நடுவர், பேச்சாளர்... என மாதத்தில் பாதி நாட்கள் வெளியில்தான் இருப்பார். அவரது கார் மடத்தைவிட்டு வெளியே போனதும், குடும்பஸ்தர்கள் வீட்டுக்குப் போய்விடுவார்கள். பேச்சுலர்கள் ரூமுக்குப் போய்விடுவார்கள். 

ஒருநாள், அடிகளார் மடத்தைவிட்டு வெளியூர் நிகழ்ச்சி ஒன்றுக்குக் கிளம்பிப்போனதும்,  ‘செட்’ ஒன்று கூடியது.  ஒருவர், தனது உடல் பிரச்னைக்காக ஒரு மரத்துக் கள்ளை ஒரு மண்டலத்துக்குக் குடித்து ‘சிகிச்சை’ செய்துகொண்டிருந்தார். அவருடன் போய்தான் நான் குடித்தேன். முதன்முதலாகக் குடித்தபோது, ‘ஆஹா... உலகத்துல இது நல்ல விஷயமாத்தானே இருக்கிறது’ என்று நினைத்தேன். இப்போது வரை குடிக்கிறேன். சலித்ததே இல்லை (வெடித்துச் சிரிக்கிறார்).’’ 

`` `நிதானம் தவறும் அளவுக்குக் குடிக்கிறோமே...’ என என்றைக்காவது குற்றஉணர்ச்சி அடைந்தது உண்டா?’’


``குறைவாகக் குடிப்பதில் எனக்கு என்றைக்குமே ஈடுபாடு இருந்தது கிடையாது. நான் குடித்தேன் என்றால்... அவ்வளவுதான். அது வேறு நிலை. அந்த நிலையை எப்படியாவது தொட்டுவிடவே துடித்திருக்கிறேன். சிலர்... தினமும் சிறு அளவு மது எடுத்துக்கொள்பவர்களாக இருப்பார்கள். அவர்களைப் பார்த்தால், `அட, இவர்கள்கூடக் குடிக்கிறார்களா?’ என்று தோன்றும். நான் குடியின் அடிமுடியைத் தேடுபவன். அப்படி இருந்தும் குடி என்றைக்கும் எனக்கு ஒரு பிரச்னையாகவோ, குற்றவுணர்ச்சியாகவோ இருந்தது கிடையாது. ஆனால், தமிழ்ச் சூழலில், வளர்ந்துவிட்ட ஒரு மகனுக்கு, தன் தந்தை நிதானமில்லாத அளவுக்குக் குடிக்கிறார் என்றால், அது எம்பரேஸிங் சிச்சுவேஷனை உண்டாக்கிவிடுகிறது. அவர்கள் சங்கடப்படுகிறார்கள். என் மனைவிக்குக் கடும் துன்பமாகவும் என் குடி மாறிவிட்டிருக்கிறது. அதனால், அவர்கள் கஷடப்படுகிறார்களே என்ற  ‘அவர்களை முன்னிட்ட’ குற்றவுணர்ச்சி எனக்கு இருக்கிறது.

மற்றபடி, குடித்துவிட்டுத் தெருவில் விழுந்துகிடப்பதிலும்கூட எனக்கு ஒன்றுமில்லை. நண்பர்கள்... அதாவது இளைய படைப்பாளிகள், `என் திருமணத்துக்கு வாங்க...’, `வெளியீட்டு விழாவுக்கு வாங்க...’ என்று அழைத்தால்கூட, ‘இதோ பாரு, நான் வந்தா ரொம்பக் குழப்பமாயிடும். நான் வராத வரைக்கும் உனக்கு நல்லது. நல்லா கொண்டாடு’ என்று சொல்லிவிடுவேன்.

சிறுவயதில் திருநெல்வேலியில் இருக்கும்போது சாராயக் கடையைத் தாண்டிப் போவதற்கே பயந்த ஆள்தான் நான். ஊரைவிட்டுப் பிழைப்புக்காக வெளியேறியது, படிக்க முடியாமல் போனது, இளமையில் வறுமை என இளவயதிலேயே மனஅழுத்தம் அதிகமாக இருந்தது. ஆக, ஆரம்பத்திலேயே தப்பான ஒரு தருணத்தில் குடிக்குள் வந்ததால், இப்போது வரைக்கும் அதற்குள்ளேயே இருக்கிறேன்.’’

``தமிழ்நாட்டில் இன்றைக்கு குடிப்பழக்கம் இளைய தலைமுறையை கடுமையாகப் பாதித்திருக்கிறது. அதுவொரு சமூக நோயாகவே நிலைபெற்றுவிட்டது. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

``குடி, சமூக நோயாக மாறிவிட்டது; உண்மைதான். இது தமிழ்நாட்டின் சாபக்கேடுதான். இதில் மாற்றுக்கருத்து இல்லை. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் `மாதத்தின் முதல் நாள், கேரளாவில் சாராயக் கடைகள் எல்லாவற்றுக்கும் விடுமுறை’ என்று சொல்வார்கள். ஒரு குடிமகன் முதல் தேதி வாங்கும் சம்பளத்தை வீட்டுக்குக் கொண்டுபோக வேண்டும். குடியில் கரைத்துவிடக் கூடாது என்கிற கரிசனம்தான் அதற்குக் காரணம். இந்தக் கரிசனம்... அரசாங்கத்துக்கு இருக்க வேண்டும். 

தேவையில்லாத பொருளாதார இழப்பு, உயிர் இழப்பு இதெல்லாம் இருக்கத்தான் செய்கிறது. குடி, கட்டாயம் சமூகச் சீரழிவுதான். அதில் மாற்றுக் கருத்தெல்லாம் எனக்குக் கிடையாது. ஆனால், உடனடியாக மதுவிலக்கைக் கொண்டுவந்தாலும் சிக்கல்தான். அப்படிக் கொண்டுவந்து விட்டால், இங்கே பலர் அரைக்கிறுக்காகச் சுற்றிக்கொண்டு அலைவார்கள். அரசாங்கம் இதையெல்லாம் கவனத்தில் எடுத்துத்தான் செயல்பட வேண்டும்.” 

``நீங்கள் பத்திரிகையாளராகவும் வேலை செய்திருக்கிறீர்கள். இன்றைக்கு இருக்கும் ஊடகங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’

``தமிழ் ஜர்னலிஸம் நன்கு வளர்ந்திருக்கிறது. முன்பைக் காட்டிலும் எண்ணிக்கையிலும் உள்ளடக்கத்திலும் பரந்து விரிந்திருக்கிறது. 

இந்தியச் சுதந்திரத்துக்கு வயது 70 ஆகிவிட்டது. ஆனால், ஏன் இன்றைக்கும் பீகாரிகள் மைகிரேட் ஆகி, கொல்கத்தா வருகிறார்கள். ராமநாதபுரத்தில் இருக்கிறவன் ஏன் பிழைப்புத் தேடி சென்னை வருகிறான்? திருநெல்வேலியில் இருக்கிறவனுக்குப் பிழைப்பு சென்னையில் மட்டும்தான் இருக்கிறதா? ஏன் இந்தத் தலைமுறைக்கு பிறப்பு ஓரிடத்திலும், பிழைப்பு மற்றோர்  இடத்திலும், இறப்பு வேறோர் இடத்திலும் இருக்கிறது? ஒரே காரணம்தான்... அது வெறும் வயிற்றுப்பாடு. 70 வருடங்களாக இந்திய அரசு என்னதான் செய்கிறது? வாழ்வின் நிர்பந்தத்தின்பேரில் நடக்கும் மைகிரேஷன் எவ்வளவு வேதனையானது தெரியுமா? அவனவனுக்கு அவன் வாழ்கிற இடத்திலேயே வாழ வழிசெய்து கொடுக்க முடியாத அளவுக்கு இங்கே என்ன நெருக்கடி வந்துவிட்டது? அரசியல்வாதிகள் எல்லாவற்றிலும் ஏமாற்றுகிறார்கள். நாம் இந்தத் தலைவலிகளோடு வாழப் பழகிக்கொண்டோம். இதை ஏன் எந்த ஊடகமும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதில்லை? இதையெல்லாம் ஊடகங்கள் காத்திரமாக எழுத வேண்டும்.’’

``நவீனம், பின்நவீனம், பின்காலனியம் போன்ற இசங்கள் குறித்து தமிழ்ச் சூழலில் தொடர்ந்து உரையாடல் நடந்துவருகிறது. இசங்கள் சார்ந்த போக்குகள் உங்களை பாதித்திருக்கின்றனவா?’’


``பின்நவீனத்துவம், நல்ல அறிவுஜீவி சமூகத்துக்குத் தேவையான ஒன்றுதான். சமூகக் கரிசனம்கொண்ட, சமூகத்தில் ஓரிடத்தில் குவியும் அதிகாரத்தைக் கட்டுடைக்க, செயல்பாட்டிலும் எழுத்திலும்  இடதுசாரிச் சிந்தனையாளர்கள் முன்னெடுத்த முக்கியப் பங்களிப்பு அது. அதில் நான் எந்தக் குறையையும் காணவில்லை. அதை முன்னெடுத்துச் சொன்னவர்கள் செய்த குழப்பத்தில்தான் என்னைப் போன்றவர்கள் இசங்களைக் கொஞ்சம் சுணக்கமாக அணுகினோம். தமிழில் பின்நவீனத்துவம் பேசியவர்களில் முக்கியமானவர்கள் நாகார்ஜுனன், எம்.டி.முத்துக்குமாரசாமி, பிரேம்-ரமேஷ், எம்.ஜி.சுரேஷ் போன்றவர்கள். இவர்கள்  பின்நவீனத்தைக் கவிதைப் பயிற்சிப் பட்டறையில் வைத்துச் சொல்லிக்கொடுத்தார்கள். அப்படிச் செய்யாமல், அதைப்பற்றி ஒரு புத்தகம் எழுதியிருந்தால், விக்ரமாதித்யன் போன்றவர்களுக்கு இன்னும் அதிகப் புரிதல் வந்திருக்கும். ஆனால், இவர்கள் அதைப் பற்றி பேசிக்கொண்டேதான் இருந்தார்கள்.

இவர்கள் முன்னெடுத்த தத்துவம் சரியானதாக இருக்கும்போது, அதை எதிராளியும் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு எளிமையாகச் சொல்லவேண்டும் அல்லவா... இலக்கியத்தில் புதிய வகைச் சிந்தனைகளை அறிமுகப்படுத்துகிறவர்களுக்கு humbleness வேண்டும். ஆனால், `எனக்கு எல்லாம் தெரியும். உனக்கு இதெல்லாம் தெரியுமா?’ என எதிராளியை  மிரளவைக்கத்தான் பார்த்தார்கள். எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு பின்நவீனத்துவம் குறித்துத் தமிழில் சொல்லத் தெரியவில்லை. காரணம், அவருக்குத் தமிழைக் காட்டிலும் ஆங்கிலம்தான் நன்கு தெரியும். ஆரம்பத்தில் பிரேம்-ரமேஷ் கட்டுரைகளை எல்லாம் படிக்கவே முடியாது. பின்னாளில் அவர்கள் தமிழில் மாற்றம் வந்தது. இங்கே மொழி ரொம்ப முக்கியம். எளிய தமிழில், எல்லோருக்கும் புரியும் வகையில் பின்நவீனத்தை முன்னெடுத்தவர்களுக்குச் சொல்லத் தெரியவில்லை. குறைகள் அவர்களுடையது. எங்களுடையது அல்ல. தவிரவும், இந்த இசங்கள் எதுவும் என்னை பாதிக்கவில்லை.’’ 

``அதே நேரத்தில், ஆங்கிலம் அறிந்த பலர் மேலை இலக்கியங்களிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு மூலம் பல நல்ல பங்களிப்புகளைத் தந்திருக்கிறார்களே?’’

``உண்மைதான். க.நா.சு-வின் பங்களிப்பு அளப்பரியது. நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை என மொழிபெயர்ப்பில் அவர் உலகம் மிகப் பெரியது. அதேபோல வங்க இலக்கியங்களைத் தமிழுக்குத் தந்து மிக முக்கியப் பங்காற்றியவர் ஆர்.சண்முக சுந்தரம். ஒரு பெரிய தொகுப்புப் போடுகிற அளவுக்குப் புதுமைப்பித்தன்கூட கதைகளை மொழிபெயர்த்திருக்கிறார். கவிதைகளில், பிரம்மராஜன், `மீட்சி’ புத்தகத்தில் வெளியிட்ட உலகக் கவிதைகள் முக்கியமான கான்ட்ரிபியூஷன்தான். 

ழாக் ப்ரெவரின் `சொற்கள்’ கவிதைத் தொகுப்பு, தமிழில் சிறந்த கவிஞர்கள் பலரையும் பாதித்தன. லக்ஷ்மி மணிவண்ணன், ஷங்கர்ராமசுப்ரமணியன் போன்றவர்கள், இதைத் தங்கள் புத்தக முன்னுரையில் நேர்மையாகவே பதிவுசெய்திருக்கிறார்கள். 

70-களில் ரஷ்யாவின் இலக்கிய முன்னோடிகள்,  மாயாகோவ்ஸ்கி, புஷ்கின் போன்றோர் இடதுசாரி வட்டத்தில் மிகுந்த பாதிப்பை உண்டாக்கினர். பாப்லோ நெருதாவின் கவிதைகள் சுகுமாரன் போன்றோரைப் பாதித்ததாக அவர்களே சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இவையெல்லாம் எதுவும் என்னைப் பாதிக்கவில்லை. இப்படிச் சொல்வதால், உலக மொழிபெயர்ப்புக் கவிதைகளை நான் ‘சப்பட்டை’ என்று சொல்லவில்லை. முக்கியமானவைதான். 

ஆனால், என் மனது முழுக்க முழுக்க என் மண்ணில்தான் இருக்கிறது. என்னை சங்கக் கவிதைகள் பாதிக்கின்றன. திரிகூடராசப்பக் கவிராயர், பாரதியார், கண்ணதாசன் இவர்களின் கவிதைகள்தாம் கவர்கின்றன. மற்றபடி ஒரு கவிதை வாசகனாக நான் உலகக் கவிதைகளை வாசிக்கிறேன். பிரமிள் ஒருமுறை, `எதிர்க் கவிதை எழுதுவதற்கு பெர்டோல்ட் பிரெக்ட்டின் கவிதைகள் உந்து சக்தியாக இருக்கும். வானம்பாடிக் கவிதைகள் பூர்ஷ்வா அழகியல்தன்மைகொண்டவை. அவை மக்களுக்குத் தேவையில்லை. பெர்டோல்ட் பிரெக்ட்டின் கவிதைகள்தாம் உண்மையான மக்கள் கவிதைகள்’ எனச்  சொன்னார். அது எனக்கு உபயோகமாக இருந்தது. தமிழில் சுயம்புலிங்கத்தை அப்படியான ஒரு கவிஞராகச் சொல்லலாம். அதேநேரத்தில் நம்முடைய தனிப்பாடல் திரட்டு முக்கியமான எதிர்க்கவிதைகள்தான்.

``தமிழில் அரசியல் கவிதைகள், கவிஞர்கள் பற்றிச் சொல்லுங்களேன்?’’

``ரொம்ப அரிதான அபூர்வமான ஒன்றைப் பற்றிக் கேட்கிறீர்களே... (சிரிக்கிறார்). ஸ்பெசிமன் இல்லாத ஒன்று சேலஞ்சிங்காகத்தான் இருக்கும். காதல் கவிதைகளை யார் வேண்டுமானாலும் எழுதிவிடலாம். என்ன... கொஞ்சம் உண்மையாக இருக்க வேண்டும். அதைவிடப் பெரிய கஷ்டம், அது யாயும் ஞாயும்... என்ற சங்கக் கவிதையின் உயரத்துக்குப் போகவேண்டும். அப்படிப் போகாமல், ஒரு காதல் கவிதை தேவையே இல்லை.

பிரச்னை என்னவென்றால், மார்க்ஸிய - லெனினிஸ்ட்டுகளாக முழுமையாகச் செயல்பட்டவர்களால்கூட நல்ல இடதுசாரிக் கவிதைகளை எழுத முடியவில்லை. இங்கே ஒரு முக்கியமான அரசியல் கவிஞர் என யவனிகா ஸ்ரீராமைச் சொல்லலாம். அவர் பேசிக்கலி லெஃப்ட்டிஸ்ட். தமிழ் நவீனக் கவிதைகளில் அவரது அதிகமான பங்களிப்பு, அதன் அரசியல்தான். அதனால்தான் அவர் கவிதைகள் குறித்து ஷங்கர்ராமசுப்ரமணியன், `அது ரஷ்யன் லாங்வேஜ் மாதிரி இருக்கு’ என்கிறார். ஐ ரியலி ஃபீல் இட். 

யவனிகா ஸ்ரீராமுக்கு முன்னர் ஆத்மாநாமின் பல கவிதைகள் அரசியல் பிரக்ஞையோடு எழுதப்பட்டவைதாம். அப்புறம் சுகுமாரனின் ‘கோடைக்காலக் குறிப்புகளில்’ சில கவிதைகள்... அப்புறம் மலைச்சாமியைக் குறிப்பிடலாம், அவர் இயல்பிலேயே ஓர் இடதுசாரி. அவரது கவிதைகள் ரொம்ப டேரிங்காக இருக்காது. இந்த இடத்தில் பிரேம் - ரமேஷின் அரசியல் கவிதைகள் மிகவும் செயற்கையானவை என்பதைச் சொல்லித்தான் ஆக வேண்டும். அவை பின்நவீனத்துவம் உண்டுபண்ணிய கோளாறுகளில் ஒன்று. ஆனால், ரமேஷ் மட்டும் தனியாக வந்து எழுதிய கவிதைகளை மறுபடியும் படிக்க வேண்டும். அதற்குப் பிறகு இந்த அரசியல் கவிஞர்கள் சர்க்கிள் நிறைவடைந்துவிடுகிறது. 

பாலஸ்தீனத்தில் அரசியல் கவிதைகள் இயல்பாகவே எழும்பிவரும்... அங்கே சூழல் அப்படி. போரில் தினமும் உயிர்கள் பலியா கின்றன. ஈழத்தில் அரசியல் கவிதைகள் எழுதுவதற்கான காலச்சூழல் நிலவுகிறது. ஆனால், இந்தியாவில் எம்.எல். மூவ்மென்டைத் தவிர வேறு யாரும் அரசாங்கத்தை, அதன் இறையாண்மையை எதிர்ப்பதில்லை. மாநிலங்களில்கூட 

பொதுமக்களைப் பாதிக்கிற அளவுக்கு பிரளயமான எந்த விஷயங்களும் நடக்கவில்லை. அதனால், என்னளவில் சொல்கிறேன்... அரசியல் கவிதைகள் எழுதுவதற்கான அரசியல் சூழல் இந்தியாவில் இல்லை.’’
``இந்தியாவில் தலித்கள், சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறைகளும் வன்முறைச் சம்பவங்களும் தொடர்கின்றன. பரவலாக இந்தியா முழுக்கப் போராட்டங்கள் சிறிதும் பெரிதுமாக நடந்துவருகின்றன. இந்தச் சூழலில், ஒடுக்கப்பட்ட,  சிறுபான்மை மக்கள் சார்பான அரசியல் நியாயங்களைப் பேசுகிற கவிதைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்... உங்கள் பார்வையில் அவை அரசியல் கவிதைகள் இல்லையா?’’ 

``முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள்... கவிதைகள் சத்தம் போடக் கூடாது. பாலஸ்தீனத்தில் எழுதப்படும் அரசியல் கவிதைகள்கூடச் சத்தம் போடுவதில்லை தெரியுமா? இதில் இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. நேரடியாகக் களத்தில் இறங்கி, துன்பப்பட்டு, நொந்து, களநிலவரம் தெரிந்து எழுதுவது ஒரு வகை. லண்டன், அமெரிக்காவில் பாதுகாப்பாக உட்கார்ந்துகொண்டு எழுதுவது இன்னொரு வகை. இதை அவர்கள் எழுதும் கவிதைகளில் இருந்தே உணர்ந்துகொள்ள முடியும். பாதுகாப்பாக உட்கார்ந்துகொண்டு எழுதுவதில் உக்கிரத்தன்மை அதிகமாக இருக்கும். களத்தில் உழல்பவர்கள் எழுதுகிற கவிதைகளில் அவர்களின் பிரச்னை அமைதியாக, அர்த்தபூர்வமாகப் பேசப்பட்டிருக்கும்.

தமிழ்க் கவிதைகளைப் பொறுத்தவரை அல்ட்டிமேட் கோல், சங்கக் கவிதைகள்தாம். அவற்றைத் தாண்டி முன்னுதாரணங்களே இல்லை. அப்படி வரவும் முடியாது. மொழி சார்ந்தும் கவித்துவம் சார்ந்தும் உச்சபட்ச  சாதனைகள் சங்கக் கவிதைகளில் நிகழ்த்தப்பட்டுவிட்டன. குறிப்பாக, அகப் பாடல்கள்.

புறப்பாடல்களில் அந்தச் சாதனை கொஞ்சம் குறைவுதான்.  அன்றைக்கு ஊரும் நாடும் சின்னதாக இருந்ததால், புறப்பாடல்களில் அவர்களால் அவ்வளவுதான் செய்ய முடிந்தது. அதில்கூட அரசியல் தன்மைகொண்ட கவிதைகள் இருக்கின்றன. அரசனை இடித்துரைக்கிறார் ஔவையார். முடியாட்சியில் அரசனை இடித்துரைப்பதே அந்தக் காலத்தில் பெரிய விஷயம். தலித் கவிதைகளாகட்டும், அரசியல் கவிதைகளாகட்டும்.. சத்தமாக மட்டுமில்லை. அவை துவேஷமானதாகவும் இருக்கின்றன. 

தனிப்பட்ட முறையில் ஒரு மனிதனாக ஒருவன் இன உணர்வோடு, மொழி உணர்வோடு இருப்பதுகூட குற்றமில்லைதான். ஆனால், அந்தத் துவேஷத்தைக் கவிதைகளில் காட்டக் கூடாது என்பது என் அபிப்ராயம். பெரிய அரசியல் கவிஞன் என்று சொல்லப்பட்டாலும் நெருதா அதிகமாகப் பேசப்பட்டது அவரது காதல் கவிதைகளால்தான். ரஷ்யாவில் புஷ்கின், மாயாகோவ்ஸ்கி, மாக்ஸிம் கார்க்கி... என பொலிட்டிக்கலாக எழுதினார்கள் என்றால், அதற்கு ஆதரவான பொலிட்டிக்கல் க்ளைமேட் அங்கே இருந்தது. அதனால் அவர்கள் எழுத்துகள் விரும்பி வாசிக்கப்பட்டன. ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்... காலம் எல்லாவற்றையும் தாண்டி ஒரு ரோல் எடுத்துக்கொண்டே இருக்கும். அதைத்தான் நாம் கன்சிடர் செய்ய வேண்டும்.’’

``அதிகாரத்தால் குரல் நசுக்கப்படுகிற நிலத்திலிருந்து எழுதும் ஒரு கவிஞனின் கவிதைகளில் சத்தம் வரத்தானே செய்யும்? பாரதியின் அரசியல் கவிதைகளில்கூட சத்தம் இருக்கிறது; அறைகூவல் இருக்கிறது. ஆத்மாநாம்கூட... `செய்... ஏதாவது செய்’ என்று சத்தம் போடுகிறாரே?’’


``அவற்றை எல்லாம் யார் கவிதைகளாக கன்சிடர் செய்கிறார்கள்? பாரதி மாபெரும் கவிஞன். அதில் நோ டிஸ்பியூட். ஆனால், அவனின் கவிதைகளில்கூட சில பொயட்ரி லிமிட்டேஷன்ஸ் உண்டு. தவிரவும், பாரதியின் பாடல்களில்கூட பிற்கால யாப்பு, கிளிக்கண்ணி, காவடிச் சிந்து உண்டு.  ஒன்று சொல்லவா..? தமிழில் மிகச் சிறந்த பாடலாசிரியன் பாரதிதான். அவன் ராகம், தாளம் தெரிந்துதான் அந்தச் சப்தத்தை அனுமதித்தான். அது மேடைகளில் பாட, பிரசங்கம் செய்யப் பயன்பட்டது. ஆனால், அதுவல்ல பாரதி. `கண்ணன் பாட்டு’, `பாஞ்சாலி சபதம்’ போன்றவற்றில்தான் பாரதி நிலைத்து நிற்கிறான். அதனால்தான் அவன் மாபெரும் கவிஞன். அப்புறம், கவிதையில் `நீ... வா... போ...’ என்று சொன்னாலே அந்தக் கவிதை டீகிரேட் ஆகிவிடுகிறது. இன்றைக்கு இவ்வளவு ஊடகங்கள் வந்துவிட்டன. விவாதங்கள் பெருகிவிட்டன. `இதைச் செய்யலாம், இதைச் செய்யக் கூடாது’ என்று ஊடகங்கள் விவாதிக்கின்றன. பெஸ்ட் ஸ்காலர்கள் பத்து இருபது பேர் கருத்து சொல்கிறார்கள். அப்படி இருக்கும்போது, `இதை நீ செய்... இதைச் செய்யாதே’ என்று சொல்வதா கவிஞனின் வேலை? முதலில் தமிழில் கவிதைகளை யார் படிக்கிறார்கள்? அதுவே பெரிய பிரச்னையாக இருக்கிறது.

மாக்ஸிம் கார்க்கியின் எழுத்தில் சத்தம் இருக்கும். ஏனென்றால், அவன் உருவாகிவந்த பின்னணிதான் காரணம். அவன் பெரிய கல்வி கற்றவன் இல்லை. ஆனால், டாஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, துர்கனேவ், ஆன்டன் செக்காவ் போன்றோரின் எழுத்துகளில் அந்தச் சத்தம் இருக்காது. காரணம், அவர்கள் கற்ற கல்வி, அவர்களின் குடும்பப் பின்புலம் இவைதாம் அவர்களை மாஸ்டர் ஆக்கக் காரணம். அவர்கள் படைப்பு செவ்வியல் ஆக, அதுதான் காரணம்.’’

‘`மாக்ஸிம் கார்க்கி போன்ற பெரிய கல்வி வாய்ப்பற்ற நாட்டுப்புறத்தானின் குரல் சத்தமாகத்தானே இருக்கும்... அதை எப்படிக் குறைசொல்ல முடியும்? ஒரு படைப்பு நீங்கள் குறிப்பிடும் ‘செவ்வியல்’தன்மையோடு இருந்தாக வேண்டிய கட்டாயம் என்ன?’’

``செவ்வியல் தன்மையோடு இருப்பதுதான் நீண்ட ஆயுளோடு இருக்கும். அதுதான் இலக்கியத்தின் சூட்சுமம். அந்த இடத்தை நோக்கித்தான் நாம் போக வேண்டும். நம் இலக்கியம் போகவேண்டும். வாசகர், விமர்சகர்... இப்படி எவரையும் பற்றி கன்சிடர் செய்யாமல், செவ்வியல் தன்மை நோக்கிப் போவதுதான் ஒரு கவிஞனின் எழுத்தாளனின் அல்ட்டிமேட் நோக்கமாக இருக்க வேண்டும். எங்கேயோ இருக்கிற டால்ஸ்டாய் பற்றி, `சித்தார்த்தன்’ நாவல் எழுதிய ஹெர்மன் ஹெஸ்ஸே பற்றி எதற்குப் பேசுகிறோம்? அதன் செவ்வியல்தன்மைக்கும் ‘வாழ்க்கை என்பது எம்ப்டினெஸ்’ என்று அது சொல்வதற்காகவும்தானே? ஒரு எழுத்தாளன் செவ்வியல்தன்மையை நோக்கிப்போவதுதான் அவன் லட்சியமாக இருக்க வேண்டும் . ஆனால், அது அவ்வளவு எளிது அல்ல. அது  ஒரு சவாலான வேலை.’’

``நாட்டார் மொழியில், சாமானியர்களின் வாழ்வியலை எழுதும் என்.டி.ராஜ்குமார், ஒடியன் லட்சுமணன், மு.ஹரிகிருஷ்ணன், கறுத்தடையான், வா.மு.கோமு... இவர்களின் கவிதைகள் பற்றி உங்கள் கருத்து என்ன?’’

‘`இவர்களில் கறுத்தடையானிடம் நல்ல கவித்துவம் இருக்கிறது. அவர் இன்னும் கொஞ்சம் வாசிக்க வேண்டும். அதற்குள் அவர் சிறுகதை, நாவல் என்று போய்விட்டார். காரணம், அவர் கவிதைகள் பற்றி யாரும் பெரிதாகப் பேசவில்லை என்பதுதான். ஆனால், நான் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அது பிரசுரமாக வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. மற்றபடி வா.மு.கோமு போன்றவர்களிடம் கவிதை சம்பந்தமாக ஏதோ ஒன்று இருக்கிறது. ஆனால், அவர்களுக்குக் கவிதைகள் பற்றிய லேர்னிங் குறைவாக இருக்கிறது.’’

``என்.டி.ராஜ்குமார் போன்றவர்களையும் அப்படிச் சொல்கிறீர்களா?’’

``என்.டி.ராஜ்குமாரின் கவிதை ரசனையை நான் பாராட்டியிருக்கிறேன். அவருடைய  `ஒடக்கு’ கவிதைத் தொகுப்புக்கு நான் கட்டுரை வாசித்திருக்கிறேன். அதற்குக் காரணம், அந்தத் தொகுப்பு முழுக்க அவரது குடும்பம் சம்பந்தப்பட்ட தொழில் சார்ந்த சில தொன்மங்களைக் கவிதையாக்கி யிருந்தார். ஆனால், `ஒடக்கு’ தொகுப்புக்குப் பிறகு வந்த அவரது கவிதைகள் ஒன்றும் சரியில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மொழி சார்ந்த ஒன்றில், பத்து வருடங்களுக்கு ஒருமுறை தன்னைப் புதுப்பித்துக்கொண்டிருக்க வேண்டும். அதை என்.டி.ராஜ்குமார் செய்யவில்லை.
``பெண்கள் எழுதுகிற கவிதைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

``அவர்கள் கவிதைகளிலுமே எனக்கு நிறைய சங்கடங்கள் இருக்கின்றன. சங்கப் பெண் கவிஞர்களான வெள்ளிவீதியார், ஆண்டாள், காரைக்கால் அம்மையார், ஔவையார் போன்றோரை தற்காலப் பெண்கவிஞர்கள் யாரும் தாண்டவே இல்லை. பெண் கவிஞர்களில் மாலதி மைத்ரி, சுகிர்தராணி, பெருந்தேவி, குட்டி ரேவதி... நால்வரும் முக்கியமானவர்கள். இவர்கள் கவிதைகளைக்கூட மொழிதான் தூக்கி நிறுத்துகிறது. கன்ட்டென்ட் புதிதாக இல்லை. பாரதி சொன்ன `சொல் புதிது பொருள் புதிதில்’, இவர்களிடம் சொல் புதிதாக இருக்கிறது. பொருளில் புதிது இல்லையே.
லீனா மணிமேகலை, மேலே சொன்ன நால்வர் வரிசையில் வரக்கூடிய பொட்டென்ஷியல் உள்ள கவிஞர்தான். ஆனால், அவருக்கு வேறு திசைகள் இருப்பதைப் பார்க்க முடிகிறது. கவிதையைப் பொறுத்தவரை `கடமையைச் செய், பலனை எதிர்பாராதே’ என்பதுதான் சரியானதாக இருக்கும். அதற்காக இவர்களை லக்ஷ்மி மணிவண்ணன், சபரிநாதன், பிரான்சிஸ் கிருபா, யவனிகா ஸ்ரீராம் அளவுக்கான கவிஞர்களாக என்னால் ஒப்புக்கொள்ள முடியாது.” 

``உங்கள் கவிதைகளில், கவிதைத் தலைப்புகளில் இந்து மதம் சார்ந்த, தத்துவம் சார்ந்த சொல்லாடல்கள் நிறையவே தென்படுகின்றன. இது உங்களுக்கு பலமா... பலவீனமா?’’


``நான் இந்து மதத்தை ஏற்றுக்கொள்கிறவன் அல்ல. வாழ்க்கையில் மோசமானவனாக இருந்தபோதிலும், ஒரு கவிஞனாக எல்லாவற்றையும் கடந்து, மன அளவில் ஓர் உயர்ந்த நிலையில் இருக்கிறேன். ஆனால், எனக்கு கங்கை பிடித்திருக்கிறது, காசி விஸ்வநாதர் பிடித்திருக்கிறது, சம்ஸ்கிருதத்தின்மீது எனக்கு எந்த மனத்தாங்கலும் இல்லை. எல்லாம் பிடித்திருக்கின்றன. என்னை என்ன பண்ணச் சொல்கிறீர்கள்?”

``சமஸ்கிருதத்தின் மீது எனக்கு எந்த மனத்தாங்கலும் இல்லை என்கிறீர்கள். எதையும் நாம் விரும்பிக் கற்பது வேறு, இந்தித் திணிப்பு போன்ற சூழலை... அதைத் தொடரும் உரையாடல்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

``கலைஞனுக்கு மொழி, இனம் போன்ற எல்லைக்கோடுகள் தேவையில்லை என்பது என் வாதம். ஏக இந்தியாவை ஏற்றுக்கொண்டவர்கள் இந்தியை ஏற்றுக்கொள்வதில் எப்படிக் குறைந்துபோவார்கள்? எனக்கு இந்தி தெரியாததால் என் வடஇந்தியப் பயணத்தை காதுகேட்காத, வாய்பேச இயலாத ஒரு மனிதனைப்போலக் கழிக்க நேர்ந்ததை நினைத்து இப்போதும் வெட்கப்படுகிறேன். ஆனால், இந்தித் திணிப்பு என்பது எப்படி ஓர் அரசியலோ அப்படித்தான் இந்தி எதிர்ப்பு என்பதும். இவற்றுக்குள் நான் சிக்க விரும்பவில்லை.’’ 

``சரி விடுங்கள்... காதல் என்ற உணர்வு அல்லது வார்த்தை உங்களுக்கு எப்போது அறிமுகமானது? இப்போது காதலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’


``அப்போதும் இப்போதும் எப்போதும் மிக நல்ல வார்த்தை என்றால், அது காதல்தான். வாழ்க்கையில் நான் சோற்றுக்காக, படிப்புக்காக, வேலைக்காக ஓடிக்கொண்டே இருந்தேன். என் மனைவியோடு  கணவனாக, பிள்ளைகளுக்குத் தகப்பனாக நான் சேர்ந்து இருந்தது மிகவும் கொஞ்சம் காலம்தான். வயிற்றுப் பாட்டுக்காகவும் குடும்பத்துக்காகவும் ஓடிக்கொண்டே இருந்ததில், காதல்  ‘பாஸிங் கிளவுட்ஸ்’போல சட்டென என்னைக் கடந்துபோய்விட்டது. ஆனால், காதலிக்காமல் எல்லாம் இல்லை. அந்தக் காதல் நிலைக்க, சில வேலைகள் செய்ய வேண்டும். அதைச் செய்கிற அளவுக்கான சொகுசை, நிதானத்தை, வாழ்க்கை எனக்குத் தரவில்லை. மற்றபடி பெண்கள் எப்போதும் எனக்குப் பிடித்தமானவர்களே.’’

``ஒரு கவிஞனாக உங்களை மிகவும் பெருமையாக உணர்ந்த தருணம் எது?’’


``நிறைய தருணங்களில் உணர்ந்திருக் கிறேன். நான்கு நல்ல கவிதைகள் எழுதிவிட்டால் வரும் பாருங்கள் திமிர்... நடக்கும்போதே நடை துள்ளலாக இருக்கும். அதையும் தாண்டி ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னைக் `கவிஞரே...’ என்று இயக்குநர் பாலா முதன்முறை கூப்பிட்டபோதும் உணர்ந்தேன். என் மேட்னெஸ் பிடித்துப்போய் அல்லது வயதின் மூப்பு காரணமாகவோ, அவர் என்னை அப்படி அழைத்திருக்கலாம். ஆனால், அவ்வளவு கூட்டத்துக்கு மத்தியில் ஒரு பிரபல இயக்குநர் அப்படிக் கூப்பிட்டபோது, எனக்குக் கர்வமாகத்தான் இருந்தது. இயக்குநர் கே.ராஜேஷ்வர் என்னை, `கவிஞரே...’ என்றுதான் அழைப்பார். நல்ல கவிதைகள் எழுதும்போதெல்லாம் ஒரு திமிர் வரும் பாருங்க... அது வேற... வேற. (முகத்தில் பெருமை உணர்வு பொங்குகிறது)’’
``உங்கள் முதுமையை எப்படி உணர்கிறீர்கள்?’’

``என்னை நான் தாத்தாவாக உணர்ந்ததே இல்லை. இதில் ஒரு சுயநலமும் உண்டு. ஏனென்றால், நம்மை தாத்தா என நினைத்து விட்டாலே நம்முடைய க்ரியேட்டிவிட்டி அடிபட்டுப்போகும். இந்தியன் பொயட், ரைட்டர்... எல்லாருமே முப்பது முப்பத்தைந்து வயதுக்கு உட்பட்ட வாழ்க்கையைத்தான் எழுதிக்கொண்டிருக் கிறார்கள். எர்னெஸ்ட் ஹெமிங்வேக்கு போர்முனைக்கு ரிப்போர்ட்டராகப் போனது போன்ற வாழ்க்கை எல்லாம் இந்தியன் ரைட்டருக்கு இல்லை. இந்திரா பார்த்தசாரதி... தாத்தா! மூத்தவர் கி.ராஜநாராயணன் தாத்தா! ஆனால், என்றைக்கும் விக்ரமாதித்யன் தாத்தாவாக மாட்டான் (சிரிக்கிறார்). தாத்தாவாகிவிட்டால் ஓய்வுக்குள் போக வேண்டும். ரிட்டையர்மென்ட் ஆகவேண்டும். எனக்கு என்றைக்கும் ரிட்டையர்மென்ட் கிடையாது. இப்போதும் கோவிலனின் `தட்டகம்’ படிக்கிறேன். எம்.முகுந்தனின் `கடவுளின் குறும்புகள்’ படிக்கிறேன். தமிழில் இப்போது எழுதுகிற இளம்கவிஞர்களின் கவிதைகளைப் படித்துவிட்டு, அபிப்ராயம் சொல்லி அறிமுகப்படுத்துகிறேன். பின்னர் எப்படி நான் முதுமையை உணர்வேன்?’’

 ``கவிதைகளில் உங்களுக்குப் பிடித்தவற்றைச் சொல்லுங்களேன்?’’

``நினைவில் இருப்பதைச் சொல்கிறேன். லக்ஷ்மி மணிவண்ணனின், `எதிர்ப்புகள் மறைந்து தோன்றும் இடம்’, சபரிநாதனின், `சனீஸ்வரனிடம் பயிற்சிபெற்ற அம்மாச்சி’, ஷங்கர்ராமசுப்ரமணியனின், `மணி பாப்பா’, ஸ்ரீநேசனின், `வள்ளலார் தெரு’, கண்டராதித்தனின், `பாதாள பைரவி’ இளங்கோ கிருஷ்ணனின், `பெப்பரப்பேக்கள் கதை’, ராணி திலக்கின், `மயில் அடிபடும்’ காட்சி வருகிற ஒரு கவிதை, மாலதி மைத்ரியின் குழந்தை ரிலேட்டடான ஒரு கவிதை (தாய்-மகள் உறவு பற்றி வரும்), வெய்யிலின்  ‘அறத்தடி நீர்’, முகுந்த் நாகராஜன், வே.பாபு, செல்மா பிரியதர்ஸன் கவிதைகள் என இந்தப் பட்டியல் ரொம்பப் பெரிது.’’ 

``கலை சார்ந்த விஷயங்களில் அரசின்  செயல்பாடுகள், ஒரு கவிஞராக உங்களுக்குத் திருப்தியளிக்கின்றனவா?’’

``இலக்கியத்துக்கும் கலைக்கும் இவர்கள் ஒன்றுமே செய்யவில்லை. இந்திய அரசாங்கத்தையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். மத்திய அரசில் நேரு, மொரார்ஜி தேசாய் அரசாங்கம் வரைக்கும் கலைஞர்களுக்கு மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்கத்தான் செய்தன. இந்திரா காந்தியிடம் அதை எல்லாம் எதிர்பார்க்க முடியுமா? சிவாஜிக்கு அப்புறம் கமல் ‘செவாலியே’ விருது வாங்கினார். அதற்குத் தமிழக அரசிடமிருந்து ஒரு வாழ்த்துக் குறிப்புக்கூட பிரஸ் ரிலீஸாக வரவில்லையே... 

சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வாகும் புத்தகங்களில் திராபையாக இருப்பது இரண்டு மொழிகளில்தான். ஒன்று தெலுங்கு; மற்றொன்று தமிழ். மலையாளம், பெங்காலி, கன்னடம் ஆகிய மொழிகளில் தவறு நடக்காமல் விழிப்பாக இருப்பார்கள்.  சாகித்ய அகாடமியில் தமிழைப் பொறுத்தவரை டெமாக்ரஸி கிடையாது. ஒருமுறை அப்துல் ரகுமானுக்குக் கொடுத்தால், இன்னொரு முறை தேவதச்சனுக்குக் கொடு; கலாப்ரியாவுக்குக் கொடு. கொடுக்க மாட்டார்கள்! தமிழக அரசு, கலை குறித்த அறியாமையில் இருக்கிறது. இன்னொரு கொடுமை சொல்லவா... அசோகமித்திரன், வண்ணநிலவன் போன்றவர்கள் தமிழக அரசின் இரண்டாம் பரிசெல்லாம் வாங்கியிருக்கிறார்கள். யாரோ ஒரு அ.தி.மு.க - திமு.க-காரன் முதல் பரிசு வாங்கிட்டுப் போயிருப்பான்.’’

‘` `இவர்கள் எல்லாம் கொண்டாடப்பட வேண்டியவர்கள். ஆனால், கொண்டாடப்படவில்லை’ என்று நீங்கள் ஆதங்கப்படும் படைப்பாளிகள் குறித்து..?’’


``ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான காலம் வரும். கொண்டாடப்படுவார்கள். கொஞ்சம் முன்னே பின்னே ஆகலாம். புதுமைப்பித்தனைப் பற்றிப் பேசுகிறோம்... நாம் பேசுவோம் என்பதற்காகவா அவர் எழுதினார்? லக்ஷ்மி மணிவண்ணன் எழுதிய அளவுக்கு அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இன்னொரு விஷயம்... அவர் கவிதையில் ஒரு காம்ப்ளெக்சிட்டி இருக்கு. அப்படி இருப்பவருக்கு தாமதமாகத் தான் எல்லாம் நடக்கும். தேவதச்சனுக்கும் அதுதான் நடந்தது. அதைத்தாண்டி அவருக்கு ஒரு விஷ்ணுபுரம் விருது கிடைக்கிறது. விளக்கு விருது கிடைக்கிறது. யவனிகா ஸ்ரீராம், பிரான்சிஸ் கிருபா இருவரும் அவர்களின் கவிதைகளின் அளவுக்குக் கொண்டாடப்படவில்லை. சிலர் லாபி பண்றாங்க. அது ஒருவகைத் திறமைதான். ஆனால், அது ஒரு கவிஞனுக்கு வேண்டாமே... அதனால் காலம் வரும் வரை பொறுத்திருப்போம்.’’

`` `விக்ரமாதித்யன் குடியில் சாதி சார்ந்த பேச்சை முன்வைப்பார்’ என்று உங்கள்மீது ஒரு குற்றச்சாட்டை வைக்கிறார்களே... உங்கள் பதில் என்ன?’’

``அப்படி போதையில் நடந்திருக்கலாம். ஆனால், அது என் இயல்பில்லை. என்னை ஓர் இந்து வெள்ளாளன் என்று அரசாங்கம் தரும் சாதிச் சான்றிதழ் சொல்கிறது. அரசு சொன்னால், அதை ஏற்றுக்கொள்வதுதானே நல்ல குடிமகனுக்கு அழகு. (சிரிக்கிறார்) ஒண்ணே ஒண்ணுதான்... சாதி, மத, இன துவேஷம் எப்போதும் யார் செய்தாலும் சரியில்லை.’’

``உங்களுடைய இலக்கற்ற பயணம் எதன் பொருட்டானது?’’


``என்னால் ஓர் அச்சில் வார்த்தாற்போல ஒரே மாதிரி வாழ முடியவில்லை. இன்னும் சொல்வதெனில் எனக்கு அப்படி வாழப் பிடிக்கவில்லை. வாழ்வில் ‘மொனாட்டனஸ்’ என்னை சித்ரவதை செய்கிறது. அதை அவ்வப்போது மீற முயல்கிறேன். நான் மிதமிஞ்சிக் குடிப்பதுகூட இதனால்தான் என்றும் சொல்லலாம். இலக்கற்ற பயணத்தில் நான் எடையற்றுப் போகிறேன். இலவம் பஞ்சுபோல மிதக்கிறேன். ஒரு கலைஞனுக்கு இந்தச் சுதந்திர உணர்வு முக்கியம். வாழ்க்கை என்னை இறுக்கும்போது, அதிலிருந்து விட்டுவிடுதலையாகும் ஓர் ஏற்பாடாக இலக்கற்ற பயணங்கள் இருக்கின்றன. நான் ஒரு கவிஞன் என்பதன் அடையாளம் அது.’’

``வாழ்க்கையில் பணம் எவ்வளவு முக்கியம் என்று நினைக்கிறீர்கள்?’’


``காலையில் டீ சாப்பிட, இட்லி சாப்பிட பாக்கெட்டில் பணம் இருந்தால் போதும். (கொஞ்ச நேரம் மௌனமாக இருக்கிறார்) பிள்ளைகள் கஷ்டப்படாதவாறு படிக்கவைத்து ஆளாக்குவதற்கு நிச்சயமாகப் பணம் வேண்டும். அது ரொம்பவும் முக்கியம்.’’

``தமிழில், ஒரு கவிஞன் கவிதையை மட்டும் நம்பி வாழும் சூழல் இருக்கிறதா?’’


``முடியவே முடியாது... கிடையவே கிடையாது. கவிதைப் புத்தகங்களுக்கு அரசாங்க நூலக ஆணையே கிடைப்பதில்லையே... கவிதைப் புத்தகம் ஐந்நூறுகூட விற்பதில்லையே.’’

``சினிமாவிலும் நடிக்கிறீர்கள். சினிமா என்பது உங்களுக்கு என்னவாக இருக்கிறது?’’


``நல்ல மனிதர்கள் என்மீது பாசமாக இருக்கிற இடம் சினிமா. பாலா, திருக்குமரன், லிங்குசாமி போன்ற இயக்குநர்கள் என்மீது அன்பாக இருக்கிறார்கள். சினிமாவில் நடிக்கும்போது எனக்கு அதிகமான பணம் கிடைக்கிறது. அது என் லௌகீக வாழ்க்கைக்கு நல்லது செய்கிறது. எல்லோருக்கும் என்னை அடையாளம் தெரிவது மகிழ்ச்சியாக இருக்கிறது.’’

``கவிதை இல்லையென்றால், கவிஞனாக இல்லையென்றால் விக்ரமாதித்யன் யாராக இருந்திருப்பார்?’’ 

``நிச்சயம் ஒரு கணக்குப்பிள்ளையாக இருந்திருக்க மாட்டேன். அப்படி ஒரு வாழ்க்கையை வாழக் கூடாது என்ற பிடிவாதம் எனக்குள் உண்டு. எந்தத் தொழிலிலும் நிலையாக இருக்க மாட்டான் விக்ரமாதித்யன். எந்தத் தொழிலும் இவனுக்கு வராது... ஆனால், இவனுக்கான காசு இவனைத் தேடி வரும் என்பதுதான் என் ஜாதகம். ப்ரூஃப் ரீடராக நீடித்து இருந்திருந்தால் இன்னும் மோசமான குடிகாரனாகி, இந்தக் கேள்விக்கே பதில் சொல்லாமல் செத்துக்கூடப் போயிருப்பேன்.’’

``புதிதாக எழுதவரும் கவிஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?’’


``நிறைய படியுங்கள். அந்தந்தப் பகுதிகளில் ஏற்கெனவே எழுதிக்கொண்டிருக்கும் கவிஞர்களின் கவிதைகளைப் படியுங்கள். அவர்களைத் தேடிப்போய்ப் பேசுங்கள். ஒருகாலத்தில் தமிழ் நவீன இலக்கியத்தில் மூத்தோர்களைப் போய்ப் பார்த்துப் பேசுவது பண்பாடாக இருந்தது. இதைக் கூடுமானவரை தொடருங்கள். அது உங்கள் கவிதைகளை நன்றாக எழுதுவதற்கு உதவியாக இருக்கும். சங்க இலக்கியங்களை உரைநூலோடு படியுங்கள். குறுந்தொகை, சிலப்பதிகாரம், குற்றாலக் குறவஞ்சி, நந்திக் கலம்பகம்... எல்லாவற்றையும் படியுங்கள்.அவை உங்களுக்குள் ‘எளிதாகச் சொல்லும்’ முறையை வளர்க்கும். உங்களுக்கு ஆங்கிலம் தெரியும் என்றால், பாப்லோ நெருதாவைப் படியுங்கள். கவிதையோடு சம்பந்தப்பட்டவர் களிடம் உங்கள் கவிதைகளைக் காட்டி அபிப்ராயம் கேளுங்கள்... அவ்வளவுதான். பின்பு அவரவர் திறம்.’’ 

``யாருமில்லாத தனித்தீவுக்கு உங்களை அனுப்பிவைக்கிறார்கள். கையில் ஒரு புத்தகம் மட்டும் எடுத்துச் செல்லலாம் என்றால் என்ன புத்தகம் எடுத்துப்போவீர்கள்?’’


``குறுந்தொகை.’’

``ஏன்?’’


``மனசுக்குப் பிடிச்சிருக்குப்பா. தப்பித்தவறி எனக்கு அடுத்த பிறவி இருந்தால், அப்போதும் நான் கவிஞனாகவே பிறக்க விரும்புகிறேன்... அதுவும், தமிழ்க் கவிஞனாகப் பிறந்து `குறுந்தொகை’ வாசத்தோடு கவிதைகள் எழுத விரும்புகிறேன்.’’

கருத்துகள் இல்லை:

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...