ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

ஹெச்.ஜி.ரசூல்

“வாழ்வதற்கு இன்னும் மிச்சமிருந்தது!” - ஜி.எஸ்.தயாளன்

வேகமாகச் சென்றுகொண்டிருக்கும் பேருந்தில், பின்னாலிருந்து ஒரு முதியவர் “இறங்கணும்... இறங்கணும்” எனச் சன்னமாகக் கத்துகிறார். முன்னிருக்கையிலிருக்கும் நடத்துநருக்குக் காதில் விழத் தாமதமானதால், நிறுத்தம் தாண்டி ரொம்ப தூரம் சென்ற பின் பேருந்து நிற்கிறது. தட்டுத்தடுமாறி இறங்கிப் போகிறார் முதியவர். ‘நிறுத்தச் சொல்லித் தானும் ஒரு குரல் எழுப்பியிருக்கலாம்’ என அங்கலாய்த்துக் கொள்கிறது ஹெச்.ஜி.ரசூலின் ஆரம்பகாலக் கவிதை ஒன்று. அந்த மென்மையான குரல் ரசூலின் அசலான குரலும்தான். ஒலிக்கத் தவித்த அந்தக் குரல் பின்னாள்களில் தன்னுடைய 14 புத்தகங்களிலும் வலுவாக ஒலித்திருக்கிறது.     
ரசூலின் மரணத்தை மனம் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆற்றுநீரைப் பொழிமுகத்தில் எதிர்கொள்ளும் கடல், உடனேயே உள்வாங்காததுபோல். நன்னீரை மெதுவாக உப்பாக்கியே கடல் செரிமானம் கொள்ளும். ஜெயசேகரன் மருத்துவமனையில் அதற்காகத்தான் அவரை அதிகாலை முதல் மாலை வரை வைத்திருந்தார்கள்போலும். ரசூலின் மரணம் ஆற்றுப்பட்டது. அந்தக் கணம் முந்தைய கணம்போலவே இல்லை. கணங்களின் சமன்நிலை குலைந்திருந்தன. அமைப்புரீதியாக ரசூல் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்துக்காரர். மன்றம் ஓர் இடதுசாரி இயக்கம் எனினும், குமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை ஒருவருக்கொருவர் தோழர் என விளிக்கும் வழக்கம் இல்லை. அண்ணன், அண்ணாச்சி எனப் பெயர் சொல்லி அழைத்தல்தான். ரசூல் எங்களுக்கு அண்ணாச்சி. பெயரளவிற்கான அண்ணாச்சி அல்ல என்பது அவரது மாரடைப்புச் செய்தி வந்த கணம் பலத்த அதிர்வாக உணர்த்தியது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் என்னைப்போன்ற சில இளைஞர்களை மன்றத்திற்குக் கொண்டுவந்தவர் ஹாமீம் முஸ்தபா. காந்தமாக ஈர்த்தவர்  சி.சொக்கலிங்கம். அணைத்துக்கொண்டவர் ரசூல். அவருடைய திறந்த வாசிப்பைச் செறிவாக எங்களுக்குப் புகட்டித் தந்தார்.

மன்றத்தில் செவ்வாய்ச் சந்திப்பு, சனி சந்திப்பு, மாதாந்திரக் கூடுகைகள், பொது விழாக்கள் என்று அதிக அளவிலான சந்திப்புகள் நடைபெறுவது உண்டு. படைப்புகளும், விமர்சனங்களும், விவாதங்களும், கிண்டலும் கேலியுமென ஒவ்வொரு சந்திப்பும் தித்திப்புதான். அறையில் சந்திப்பு முடிந்ததும் சாலையோரம் சந்திப்பு தொடரும். முடிந்த அளவு தவறாமல் வருவார் ரசூல். அவரை எங்கேயேனும் எதேச்சையாகப் பார்க்க நேர்ந்தால், அது ஒரு தனி சந்திப்பாகி
விடும். ஒவ்வொரு முறையும் அளவளாவித் தீராதிருக்கும். நேரம்தான் எங்களை வீட்டுக்கு அனுப்பிவைக்கும். கருத்தில் பல மாறுபாடுகள் இருக்கலாம், ஒருமுறைகூட மனத்தாங்கலாக வீட்டுக்குச் செல்ல வேண்டியிருந்தது இல்லை.

ரசூல், உணர்வுபூர்வமானவர். பேசும் மேடைகளில் கண்ணீர் சிந்த அவர் தயங்கியதில்லை. எப்போதும் புன்னகை, எப்போதாவது வெடிச்சிரிப்பு, மிகுந்த நேசம் எனும் மிகை உணர்வுகளின் கூடல். தன்னைப் பரிகசிப்பதை ரசிக்கும் பக்குவம் வாய்ந்தவர். செவ்வாய்ப் படைப்பரங்கத்தில் ஒருநாள் ரசூல் அவருடைய கவிதைகளை வாசிக்கிறார். முடித்ததும், முஸ்தபா சொல்கிறார்  “அண்ணே... இனிக் கவிதைகளை வாசியுங்கோ’’ ரசூலைவிடப் பலமாகச் சிரித்தவர் யாரும் இல்லை. கிண்டலைக் கிண்டலாகவே ஏற்கும் பாங்கை அவரிடமிருந்தே கற்றோம்.

வந்தனம் என்றொரு கலைக் குழுவை வைத்திருந்தோம். ஊர் விழாக்களில் கிராமியப் பாடல்களும் நிஜ நாடகங்களும் நிகழ்த்துவோம். பாடலிலும் நாடகத்திலும் பங்கேற்காதபோதும் எல்லா நிகழ்ச்சிக்கும் உடன்வருவார் ரசூல். நிகழ்ச்சி முடிந்து தக்கலை வந்து சேர, நள்ளிரவு இரண்டு மணி வரை ஆகிவிடுவது உண்டு. பேருந்து நிலையக் கடையில் கட்டன் சாயாவும் பலகாரமும் வாங்கித் தருவார். நேந்திரன் பழம் வேண்டுவோர் எடுத்துக்கொள்ளலாம். ராத்திரி ரெண்டு மணிக்கு அவர் நேந்திரன் பழம் சாப்பிடுவதைக் கிண்டல் செய்வோம். பழத்துடன் கிண்டலையும் ரசித்து உண்ணுவார்.

ரசூல் என்றால் உரையாடல் என்று பொருள். எது குறித்தும் உரையாடலாம்; எவ்விதத்திலும் உரையாடலாம். அவரது வாழ்நெறி மார்க்ஸியமா, இஸ்லாமா, பின்நவீனத்துவமா எனில் ‘உரையாடல்’ என்று சொல்வதுதான் முழுமையாகும். வலைதளங்களிலும், நண்பர்களிடமும், எதிர்க்கருத்து உள்ளோரிடமும், தனக்குள்ளும் அவர் உரையாடிக்கொண்டேயிருந்தார். அவருடைய நண்பர்களில் மது அருந்துபவர்கள் அதிகம். மதுக்கூடுகையிலும் தனி ஆளாகக் குடிக்காதிருந்து விவாதிப்பார். ‘உரையாடலே தீர்வை நோக்கிய திசை’ எனும் தீர்வுக்கு அவர் வந்திருப்பதுபோல் தோன்றும்.    
இஸ்லாத்தில் சாதியின் இருப்பை ரசூல் கேள்விக்குள்ளாக்கினார். வகாபியிசத்தின் வளர்ச்சி இந்திய முஸ்லிம்களுக்கு நன்மை பயப்பதல்ல எனக் கருதினார். மதத் தூய்மைவாதங்களில் அவருக்குப் பிடித்தம் இல்லை. சமூகங்கள் பின்னோக்கி நகர்வதாக வருத்தப்பட்டார். சுயஅடையாளங்களோடு கூடிய புரிந்துணர்வு பொதுமைப்பட வேண்டும் என விரும்பினார். சூஃபியிசம் சார்ந்த பிடிமானத்தைத் தனது எழுத்துகளில் வடிவாக்கினார். எழுத்துக்கும் வாழ்வுக்கும் இடைவெளி இல்லா ஒரு வாழ்வை வாழ்ந்து பார்த்தார்.

கவிதைத் தொகுப்பினில் அவரது முன்னுரை இடம்பெறாத குமரி மாவட்டக் கவிஞர்கள் மிகக் குறைவு. மாவட்டத்துக்கு வெளியிலும் பலருக்கு எழுதியிருக்கிறார். கவிதைகளில் செயல்படும் கவிஞனின் நாடி பிடித்து அறியத் தெரிந்தவர். நிறைகள் அனைத்தும் சேகரமாகும் முன்னுரையில் குறைகளை மழுக்கிச் சொல்வார். கவிஞனைக் கவனப்படுத்தும் விதம் முன்னுரை எழுத்தாக்கமாகும். தடாலடி விமர்சனங்களை அவர் முன்வைப்பதில்லை. மென்மையும் கண்ணியமுமான கலவையின் ஆழமாக எப்போதும் இருக்கும்.

ரசூலுக்கு இரண்டு பாராட்டுக் கூட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. ஒன்று, சில ஆண்டுகளுக்கு முன் ‘முட்டம் கலை முகாமி’ல். மற்றொன்று, அவர் பணிஓய்வு பெற்றபோது. இரண்டுமே நிறைவாக அமையவில்லை என்றே எண்ணுகிறேன். கோட்டோவியச் சித்திரம் முழுமையடைய இன்னும் சில கோடுகள் தேவையிருந்தன. வரையப்படாத கோடுகளிலும் இந்நினைவுக் குறிப்பில் சேர்க்க வேண்டிய வரிகளிலும் ரசூலின் புன்னகை என்றென்றும் நிலைத்திருக்கும். ரசூல் சிற்பங்களை மட்டுமல்ல; சிற்பிகளையும் செதுக்கியவர். மனதில் நிற்கும் அழகிய மனமும் அவருக்கு இயல்பாக அமைந்திருந்தது. வாழ்வதற்கு மட்டுமல்ல; எழுதுவதற்கும் ரசூலிடம் இன்னும் மிச்சமிருந்தன.

“இந்தப் பிரபஞ்சம்
இந்தத் துளியை
இப்போதே
இழந்திருக்க வேண்டியதில்லை.”


ரசூல் தனது நாள்களை முன்னுணர்ந்து எழுதியதைப் போன்ற அவரது இரண்டு நுண்கதைகள்: 

நதியின் தருணம் 

அந்த நதி  அமைதியாகப் பாய்ந்தது. அதன் கரைகளில் நின்று தாகம் தணிப்பதற்கு நீர் குடித்தவர்கள் ஏராளம். கால் நனைத்தும், முகம் தழுவியும் பயணித்தவர்கள் உண்டு. நதியில் மூழ்கி அதனைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்க முயன்றவர்களையும் கண்டதுண்டு.

நாணல் புதர்களை, கைக்கதைகளை, காட்டுப் புன்னகைகளை ஊடுருவி ஓயாமல் பயணித்த நதி, தற்போது ஓய்வெடுத்துக் கொண்டது.

மரணத்தின் சுவையை அறிந்துகொண்ட அந்த நதியின் வாடாத இதழ்களில் இன்னும் தேன் குடிக்கலாம்.

துரத்தப்பட்ட நிழல் 

என் உடலின் உருவத்தைக் கட்டாந்தரையில் வரைந்து பார்த்த ஒலித்திவலைகளுக்கு நன்றி சொல்லி, முன்னே மண்டியிட்டுக் கிடக்கும் உன்னைப் பார்த்துப் புன்னகைத்தேன். பேசும் உயிருள்ள பொம்மையைச் சிநேகிதியாய் பாவித்தும், சோர்வுற்றுத் துக்கத்தில், காற்றின் மிதப்பில் தியானித்திருந்தது நிழல்.

பக்கவாட்டிலும், சில நேரம் முன்தொடர்ந்து செல்லும் அந்த நிழலைக் கொல்வதற்கு துரத்திக்கொண்டுவரும் கட்டாரிகளைப் பார்த்து, திகைத்துக் கைகூப்பி வரங்கேட்டேன். வெறும் நிழலல்ல அது. எனது உடம்பின் கண்ணுள்ள காதுள்ள தரிசனம். இதனை உடனழித்து வேறோர் உருவம் தீட்டவோ அல்லது இந்த உருவத்தையே மறுபடியும் தீட்டிப் பார்க்கவோ எந்த விரல்களாலும் முடியாது. 

கருத்துகள் இல்லை:

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...