ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

எஸ்.ராமகிருஷ்ணன்

"புனைவுகளின் வழியே வரலாற்றை விசாரணை செய்கிறேன்!” - எஸ்.ராமகிருஷ்ணன்

படங்கள் : கே.ராஜசேகரன்சந்திப்பு : தமிழ்மகன், வெய்யில், அதிஷா
லை, இலக்கியம், சினிமா என்றில்லை, அவரிடம் எது குறித்துப் பேசினாலும் எப்போதும் அதே உற்சாகம்தான். உரையாடலை ஒரு கலையாகவே நிகழ்த்துபவர் எஸ்.ராமகிருஷ்ணன். 

``உங்களை `ஒரு பயணி’ என்று அழைப்பதை நீங்கள் விரும்புவீர்கள் என்று நினைக்கிறோம். இந்தியா முழுக்கச் சுற்றியிருக்கிறீர்கள். இந்திய நிலப்பரப்பை எப்படிப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள்?’’ 


``இந்தியா என்பது முதலில் ஒரு சொல்லாக, இந்த நிலத்தின் பெயராக  எல்லோருக்குமே அறிமுகமாகி இருக்கிறது. பின்பு, வாழும் நிலம் சார்ந்து, அவரவர்களின்  பகுதி சார்ந்து சில நிலக்காட்சிகளாக அறிமுகமாகியிருக்கிறது; அவ்வளவுதான். ஆனால், இந்தியா எனும் ஒரு தேசத்தின் முழுமையான காட்சியை பெரும்பாலானவர்கள் பார்த்திருக்க மாட்டார்கள். நம்மில் பலரும் பள்ளிப் பருவத்தில் கோடுகள் நிறைந்த ஒரு வரைபடமாக அதைப் பார்த்திருக்கிறோம். யோசித்துப் பாருங்கள்... வரைபடத்தில் ஒரு சின்னக் கோடாக பிரம்மபுத்திராவைப் பார்த்தவன், பிரமாண்டமாக பரந்து விரிந்து செல்லும் நதியாக அதை நேரில் பார்த்தால், எப்படி இருக்கும்! என் இளவயதில் நான் இந்தியாவை அறிந்துகொள்ள விரும்பினேன். சுற்றித் திரிந்தேன். எவ்வளவு பெரிய நிலப்பகுதி... எத்தனை வகையான மக்கள்... எவ்வளவு வேறுபட்ட பண்பாடுகள்... உலகத்தின் பல நாடுகளில் எதையெல்லாம் நான் பார்த்து வியந்தேனோ, அவை அனைத்தையும் ஒரே இந்தியாவுக்குள் பார்த்தேன்.’’

``இந்த தேசத்துக்கான தனித்த அடையாளமாக எதையேனும் அவதானித்திருக்கிறீர்களா?’’ 


``இந்தியாவின் முக்கிய கலாசாரக் கூறுகளில் ஒன்று, மக்களின் ஒன்றுகூடல். அரசியல், மதம் என ஏதேதோ காரணங்களுக்காக லட்சக்கணக்கில் மக்கள் தொடர்ந்து கூடுவதைப் பார்க்க முடியும். வருடத்தின் எல்லா நாட்களிலும் இந்தியாவில் ஏதோ ஒரு பகுதியில் திருவிழாக்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன. இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் ஒரு குடிமகன் செல்ல, எந்தத் தடையும் இல்லை என்பதுதான் ஒரு பயணியாக நான் சந்தோஷப்படும் முக்கியமான விஷயம். ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக இந்த சுதந்திரம் சுருங்கிக்கொண்டுவருகிறது. பாதுகாப்பான பொது இடம் என ஒன்று இப்போது இல்லை. இரவு வாழ்க்கை குறைந்துகொண்டே வருகிறது. குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு, ஓர் இடத்துக்குச் செல்ல முடிவது இல்லை. சந்தேகத்துக்கு உள்ளாகவேண்டியிருக்கிறது.
நான் எனது 25 வயதில் பயணம் செய்யும்போது, இந்தியா திறந்தவெளியாக இருந்தது. எங்கும் போகலாம்; எதையும் சாப்பிடலாம்; எங்கும் தங்கலாம். இவ்வளவு போலீஸ் கெடுபிடிகள் கிடையாது. இந்தியா ஒரு பெரிய திறந்தவெளிச் சந்தையாக மாறிக்கொண்டு வருவதை, சிதறுண்ட நிலைக்குச் சென்றுகொண்டிருப்பதைப் பார்க்கிறேன். வடகிழக்குப் பகுதியில் என்ன நடக்கிறது என்று நமக்குத் தெரியவில்லை. நமக்கு என்ன நடக்கிறது என்று மத்திய இந்தியாவில் இருப்பவர்களுக்குத் தெரிவது இல்லை. மத்திய இந்தியாவில் என்ன நடக்கிறது என்று வடக்கே தெரியவில்லை. எல்லையோரம் என்ன நடக்கிறது என்று யாருக்குமே தெரிவது இல்லை. இத்தனை வருடங்களில் இல்லாத ஓர் அச்ச உணர்வை சமீபப் பயணங்களில் உணர்கிறேன்.

நாமெல்லாம் 21-ம் நூற்றாண்டில் வாழ்ந்துகொண்டிருப்பதாக நம்புகிறோம். ஆனால், இந்தியாவின் பல கிராமங்கள், மலைப்பகுதிகள் 12-ம் நூற்றாண்டிலும் 6-ம் நூற்றாண்டிலும், சில பகுதிகள் கற்காலத்திலும் இருந்துகொண்டிருக்கின்றன. இந்தியா ஒரு முழுமையான நவீன நாடு அல்ல. இது தனது அன்றாடத்துக்காகப் போராடும் ஏராளமான மக்களைக்கொண்ட நாடு. தனது வாழ்நாள் முழுவதையும் ஒருவர் செலவழித்தாலும் இந்தியாவை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது.’’

``நீங்கள் பயணிக்க விரும்பும் ஒரு கனவுப் பகுதி என்று ஏதாவது உள்ளதா?’’


``பெரும்பாலும் நான் திட்டமிட்டு பயணிப்பவன் இல்லை. முக்கிய இடமெனக் கருதி  பலரும் விரும்பிச்செல்கிற புகழ்பெற்ற இடங்களுக்கு நான் செல்ல மாட்டேன். என் பயணத்தில் தாஜ்மஹாலை 15 முறைக்கும் மேலாகக் கடந்து போயிருக்கிறேன். ஆனால், ஒருபோதும் அதற்குள் போனது இல்லை. யமுனை ஆற்றின் கரைகளில் திரிந்து கொண்டிருக்கும்போது, ஒருநாள் நண்பர் யதேச்சையாக உள்ளே அழைத்துக்கொண்டு போனார். ஆனால், தாஜ்மஹாலைப் பார்க்க வேண்டும் என்று நான் ஒருபோதும் போனது இல்லை. பயணத்தில் போகிற வழியில் தென்படுகிற உலகைப் பார்க்க விரும்புகிறவன் நான். அப்படிப் போகிறபோக்கில், பல அற்புதமான இடங்களைப் பார்த்திருக்கிறேன்.’’
``அப்படிப் பார்த்த இடங்கள் குறித்துச் சொல்லுங்களேன்...’’
``குறிப்பாக, மத்திய இந்தியப் பகுதியான உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம். இந்த மாநிலங்களில் சிற்றூர்களில் தெருக்களும் வீடுகளும் அவ்வளவு அருமையாக இருக்கும். கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமையான ஹரியானா, பஞ்சாப் பகுதிகளின் கோதுமை வயல்கள். நடுவே ஒரு கோடுபோல சாலை. அதில் நீங்கள் மட்டும் நடந்துகொண்டுஇருப்பீர்கள்... மேலும், நான் ஆற்றுவழிகளில் பயணம் செய்வதை பெரிதும் விரும்புகிறவன். ஆகவே, இந்திய நிலத்தின் பல ஆறுகளைக் குறுக்கே கடந்து சென்றிருக்கிறேன். அது ஓர் அலாதியான அனுபவம்.’’

``போரால் சிதைக்கப்பட்ட ஈழ நிலத்தைப் பார்த்துவர வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றியிருக்கிறதா?’’

``இல்லை. நான் பார்க்க விரும்புகிற ஈழம் இப்போது அங்கு இல்லை. அது 25, 30 வருடங்களுக்கு முன்னர் இருந்தது. நாங்கள் ராமநாதபுரத்தில் இருந்தபோது, என் அப்பா அடிக்கடி இலங்கை போய்வருவார். எங்கள் வீட்டில் நாங்கள் புழங்குகிற பல பொருட்கள் இலங்கையைச் சேர்ந்ததாக அன்று இருந்தன. மதுரையில் இருந்து நாடக கம்பெனிகள் அடிக்கடி இலங்கைக்கு நாடகம் போட  கப்பலில் போய்வருவார்கள். அவர்கள் சொல்லக் கேட்ட இலங்கை சார்ந்த ஏராளமான நினைவுகள் எனக்குள் இன்னும் பசுமையாக இருக்கின்றன. இப்போது மிச்சம் இருக்கும் போரின் சிதைவுகளை நான் பார்க்க விரும்பவில்லை. நான் மக்களை அவர்களது மகிழ்ச்சியான வாழிடத்தில் சந்திக்க விரும்புகிறேன். பத்து முறைக்கும் மேலாக இலங்கையிலிருந்து எனக்கு அழைப்பு வந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் நான் ஏதோ ஒரு காரணம் சொல்லி மறுத்திருக்கிறேன். மகிழ்ச்சியாகப் போய் வருவதற்கு இலங்கை இப்போது ஒரு சுற்றுலாத் தளம் இல்லை!’’

``சிலப்பதிகாரக் கண்ணகி பயணித்த தமிழகப் பாதைகளைத் தேடிப் பயணித்தீர்களே... அந்த அனுபவத்தைப் பற்றிச் சொல்ல முடியுமா?’’

``சிலப்பதிகாரத்தை எப்படி வாசிப்பது... சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் நிலப்பகுதி உண்மையிலேயே இருக்கிறதா என்று மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தேடிப் பயணித்தேன். ஆச்சர்யம் என்னவென்றால், சிலப்பதிகாரத்தில் மதுரைக்குச் செல்வதற்கான பாதையாக குறிப்பிடப்படும் திரிசூலம் போன்ற அதே மூன்று வழிகள்தான் இன்றைக்கும் வழக்கத்தில் இருக்கின்றன. கண்ணகியும் கோவலனும் மதுரைக்கு வந்து சேர்கிற இடம் ‘மதிச்சயம்’. அங்கு ஆயர்கள் வாழ்ந்துகொண்டிருந்ததாக சிலப்பதிகாரம் சொல்கிறது. இன்றைக்கும் கோனார்கள்தான் அங்கு அதிகமாக வசிக்கிறார்கள். 

இரண்டாவது முறை, சிலப்பதிகாரக் காட்சிகள் நடக்கிற இடங்களிலேயே அந்தந்தப் பகுதிகளை வாசிப்பது என்று முடிவுசெய்து புறப்பட்டேன். பூம்புகாரில் நின்றுகொண்டு ‘பூம்புகார் போற்றுதும்... பூம்புகார் போற்றுதும்...’ என்று வாசிப்பேன். கதை கும்பகோணத்துக்கு நகரும்போது, நானும் நகர்ந்துவிடுவேன். இப்படியாக சிலப்பதிகாரத்தோடு சிலப்பதிகாரமாக மதுரையை  கண்ணகி எரித்து கொடுங்கல்லூர் போகிறவரை அதன்கூடவே பயணித்தேன். உண்மையிலேயே அது ஒரு சுவாரஸ்யமான அனுபவம்தான். பின்னொரு முறை கண்ணகி என்கிற பிம்பம் எப்படி உருவானது... கேரளாவில், இலங்கையில் அவ்வளவு கோயில்கள் இருக்கும்போது ஏன் தமிழகத்தில் கண்ணகிக்கு ஒரு கோயிலும் இல்லை என்கிற பார்வையில் தேடிப்போனேன். கண்டுபிடித்தேன். மதுரையில் செல்லாத்தம்மன் கோயிலில் கண்ணகிக்கு சிற்பம் இருப்பதைப் பார்த்தேன். 

இப்படி பலமுறை பல கோணங்களில் பயணித்திருக்கிறேன். சிலப்பதிகாரம் ஏன் முக்கியத்துவம் அடைந்தது என்பதை, சமகாலத்தில் பத்தினி என்கிற பிம்பம் உருவாகிற தேவையை, சிலப்பதிகாரத்தை ஒட்டிய தமிழக அரசியலை ஆழமாகப் புரிந்துகொள்ள இந்தப் பயணங்கள் எனக்கு உதவின.’’ 

``நீங்கள் ஏன் அது குறித்து ஒரு புத்தகம் எழுதவில்லை?’’

``எழுதினேன். ஆனால், அதை வெளியிட முடியாது. இந்தப் பயணத்தில் நான் கண்டறிந்த சில கசப்பான அனுபவங்களால், வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.’’

``என்ன விஷயம் என்று சொல்ல முடியுமா?’’ 

(பலமாகச் சிரிக்கிறார்). ``எல்லாம் அரசியல்தான். (அவரது கணிப்பொறியில் இடுப்புக்கு மேற்புறம் ஏதுமற்ற ஒரு சிலையின் படத்தைக் காட்டுகிறார்) இந்த கண்ணகி சிலையின் கீழ்ப்பகுதிதான் இப்போது அந்த இடத்தில் இருக்கிறது. மேல்பகுதி இல்லை. அது எங்கே போனது? அது ஒரு துப்பறியும் கதை. அதை வெளியே சொல்ல முடியாது. இந்நேரம் உலகத்தின் ஏதோவொரு மியூசியத்தில் அது இருக்கக்கூடும். கடந்த பத்து வருடங்களாக தொடந்து அதைத் தேடிக்கொண்டிருக்கிறேன். உலகின் பல்வேறு மியூசியங்களுக்கு இடுப்புக்கு மேலான கண்ணகி சிலையின் அடையாளத்துடன் ஏதேனும் ஒரு சிலை இருக்கிறதா என்று கேட்டு ஆயிரக்கணக்கான மெயில்களை அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.’’ 

``உங்களது பயணங்களைப் பற்றிப் பேசும்போது, கோணங்கியைத் தவிர்க்கவே முடியாது. அவரது எழுத்தின் மீது வைக்கப்படும் புரியாமை குறித்த விமர்சனங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

``தி.ஜா-வின், மௌனியின் கதைகள்கூட சிலருக்குப் புரிவது இல்லை. ஆனால், கொஞ்சம் கூடுதல் முயற்சி செய்தால் புரிந்துகொள்ள முடியும்தான். பழந்தமிழ் இலக்கியங்களைப் படித்தால் புரிந்துகொள்ள முடியாது. ஆனால், உரையாசிரியர்களை அணுகி நாம் அவற்றைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், வாசித்தால் புரியவில்லை அதற்கு விளக்கம் சொல்வதற்கு உரையாசிரியர்களும் இல்லை என்கிற இடத்தில்தான் கோணங்கி எழுத்தில் சிக்கல் உருவாகிறது. இலக்கியம் என்பதை நான் வேறு மாதிரி புரிந்துகொள்கிறேன்; அவர் வேறு மாதிரி புரிந்துகொள்கிறார். மொழித்தளத்திலேயே அவர் அதை உருவாக்க முடியும் என்று நம்புகிறார். நான் மொழியை ஒரு கருவியாகக் கொண்டுதான் அதை உருவாக்க முடியும் என்று நம்புகிறேன். அவரது நம்பிக்கை அவரது சுதந்திரம். அதில் நாம் தலையிட முடியாது. அவரது நம்பிக்கையை நாம் விமர்சிக்க முடியாது. ‘ஏன் எல்லோரும் என்னை வாசிப்பது இல்லை?’ என்று அவர் நம்மிடம் கேட்பது இல்லை. என்றாவது அப்படி அவர் பொது வாசகர்களிடம்  கேட்கும்பட்சத்தில் வேண்டுமானால், நாம் அவரை விமர்சிக்க முடியும். `கோணங்கி எழுத்து புரியவில்லை’ என்று ஆதங்கப்படும் வாசகர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, `புரியவில்லை என்றால் விட்டுவிடுங்கள். உலகில் எவ்வளவோ புரியாத விஷயங்கள் இருக்கின்றன.’ ’’

``ஒரு நாவல் எழுதுவதற்கு உங்கள் அடிப்படைத் தயாரிப்புகள் எப்படியானது?’’

``ஒரு நாவலைத் தொடங்குவதற்கு கதைக் களத்தைவிட, முதலில் மனத்தேடல்தான் முக்கியம். ஒவ்வொரு நாவலுக்கு முன்னரும் இந்த நாவலை நான் ஏன் எழுத வேண்டும் எனக் கேட்டுக் கொள்வேன். உதாரணமாக, ‘சஞ்சாரம்’ என்ற நாதஸ்வரக் கலைஞர்களைப் பற்றிய ஒரு நாவல் எழுதினேன். இந்த நாவலை நான் ஏன் எழுத வேண்டும்? எனது முன்னோடிகள் யாரும் இதைப் பற்றி ஏன் எழுதவில்லை. நாதஸ்வர இசையிலேயே பிறந்து வளர்ந்த தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த எழுத்தாளர்கள்கூட ஏன் எழுதவில்லை? சின்னச்சின்னக் குறிப்புகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஒருசில சிறுகதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அவ்வளவுதான். ‘கொத்தமங்கலம் சுப்பு எழுதியிருக்கிறாரே?’ என்று கேட்கலாம். எழுதியிருக்கிறார்தான். காருக்குறிச்சியை, ராஜரத்தினத்தைக் கேட்ட ஒருவர் இப்படி பொழுதுபோக்குத் தளத்திலா அதை எழுதுவது? ஒருவேளை நாதஸ்வரக் கலைஞர்கள் சாமான்யர்கள் என்பதால், அவர்களையும் அவர்களது கலை குறித்தும் எழுதப்படவில்லையா? இப்படியாக அதைத் தேடிச் செல்கிறேன். காருக்குறிச்சியாரின் இசையைத் தொடர்ந்து கேட்கிறேன். அவர் வாழ்ந்த இடங்களுக்குச் செல்கிறேன். அந்த நிலத்தை, மக்களைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். எப்போதும் என்னுடைய வாழ்விலும் ஒரு நாதஸ்வரம் பின்தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. எங்கேனும் காதில் கேட்டபடி இருக்கிறது. என் பயணங்களில் நாதஸ்வர ஒலி எங்கு கேட்டாலும் அங்கு தமிழர்கள் வாழ்ந்துகொண்டிருப்பதைப் பார்க்கிறேன். நாதஸ்வர இசை, தமிழ் வாழ்வின் ஒரு பிரதான அடையாளம். எப்பொழுது நாதஸ்வரம் கேட்டாலும், அதற்குள்ளிருந்து ஓர் அதிர்வை நான் உணர்கிறேன். அந்த இசை என்னை அவ்வளவு பாதிக்கிறது. இப்போது நான் யோசிக்கிறேன். நான் எதை எழுத வேண்டும்? நாதஸ்வரக் கலையைப் பற்றியா? நாதஸ்வரக் கலைஞர்களைப் பற்றியா? நான் கலைஞர்களைப் பற்றி எழுதத் தீர்மானிக்கிறேன்.  

பலரும் தங்களது வாழ்வனுபவத்தோடு கொஞ்சம் புனைவு கலந்து எழுதுவதை ஒரு முறையாக வைத்திருக்கிறார்கள். ஆனால், நான் இதற்கு அப்படியே நேரெதிராக எழுதுகிறவன். நாம் நம்முடைய அனுபவத்தைத்தான் எழுத வேண்டும் என்று இல்லை. மற்றவர்களுடைய அனுபவத்தையும்கூட எழுதலாம்.’’

``அப்படியானால் ஒரு கலைஞன் அவனது சொந்த வாழ்வனுபவத்தை எழுதுவதில் உங்களுக்கு உடன்பாடு இல்லையா?’’

``எனது வாழ்க்கையை நான் ஏன் ஒரு கதைக்கான பொருளாக எடுத்துக்கொள்ள வேண்டும்? எனது வாழ்க்கை எனக்குக் கிடைத்திருக்கும் ஒரு பரிசு; சுதந்திரம். அதைப் பிய்த்து பிய்த்து நான் ஏன் ஒரு கதையிடம் கொடுக்க வேண்டும்? என்னுடைய வாழ்க்கை எனக்கு மட்டுமேயான ரகசியம். நான் காதலித்துத் திருமணம் செய்தேன். அதைப் பற்றி ஒரு வரி எழுதியிருக்கிறேனா என்ன? எழுத மாட்டேன். எனது வாழ்க்கையை நான் அனுபவிப்பேன். அதை எழுத மாட்டேன். அனுபவத்தைத்தான் எழுத வேண்டும் என்ற ஒரு  தவறான நம்பிக்கை பரப்பப்பட்டுவிட்டது. அனுபவம் என்பதே ஒரு சந்தர்ப்பம்தான். அதை ஒரு முனையிலிருந்து நீங்கள் பார்க்கிறீர்கள். எதிர்முனையிலிருந்து பார்த்தால், உங்கள் அனுபவமே மாறிவிடும்.’’
``ஆனால், பெரும்பாலான எழுத்தாளுமைகள் தங்களது படைப்பை, தங்களது அனுபவத்தைக் கலந்துதானே எழுதியிருக்கிறார்கள்?’’

``ஆமாம். ஆரம்பத்தில் பெரும்பாலானவர்கள் அவர்களது அனுபவத்திலிருந்துதான் எழுதினார்கள். பொதுவாகவே ஒருவருக்கு கச்சாப்பொருள் அவரது வாழ்க்கைதானே? ஆனால், நான் அதற்கு மாறானவன். யாருடைய அனுபவத்தையும் கதையாக எழுதலாம் என்று நினைப்பேன். நான் எதைப் பற்றியும் எழுத முடியும் என்று நினைக்கக்கூடியவன். நான் ஏன் என் கதையை எழுத வேண்டும்?’’

``எல்லாவற்றையும் கதையாக எழுத முடியும் என்பதை விளக்க முடியுமா?’’


``எல்லாவற்றிலும் கதை இருக்கிறது. கதை இல்லாத ஒரு பொருளை நான் இது வரை வாழ்க்கையில் சந்தித்ததே இல்லை. எல்லாவற்றிலும் கதை இருக்கிறது என்றால், நான் அவற்றைப் பற்றி எழுதலாமே? என்னுடைய மேசைக் குண்டூசி, மேலே எரியும் பல்ப், தொழுவத்து மாடு என எதைப் பற்றியும் எழுத முடியும். இதில் எங்கு பிரச்னை வருமென்றால், இதில் எது கதை; இதை எப்படிச் சொல்வது; என்ன மொழியில் சொல்வது என்கிற இடத்தில்தான். ஒரு கதைக்குள் கதை என்று ஏதாவது இருக்கிறதா என்றால், இல்லை. ஒரு கதைக்குள் ஒரு நிகழ்ச்சி இருக்கும்; உணர்வு இருக்கும்; ஓர் அறம் இருக்கும்; என்னென்னவோ இருக்கும். கதை என்னும் ஊடகம் ஒருவகையில் மாயவலைதான். இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், கதை என்பது ஓர் எளிய நினைவூட்டல். மறக்கப்படாமல் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பவற்றைக் கதையாக்கிவிடுங்கள். அது என்றைக்கும் அழியாமலிருக்கும். மறக்கவேண்டும் என்று நினைப்பவற்றையும் கதையாக்குங்கள்; நீங்கள் மறந்துவிடலாம் (சிரிக்கிறார்). மறக்கவும் நினைக்கவும்தான் கதை.’’
``ஓர் எழுத்தாளனுக்கு எழுதுவதற்கான முக்கியமான சோர்ஸ் எதுவென்று நினைக்கிறீர்கள்?’’

``மற்றவர்களுக்கு எப்படி என்று தெரியவில்லை. எனக்கு இரண்டுவிதமான ‘சோர்சஸ்’ இருப்பதாக நினைக்கிறேன். ஒன்று, எனது நினைவுகள். இது எனது வாழ்வனுபவங்களின் வழியானது மட்டுமல்லாமல், கற்றறிதலின் வாயிலாகவும் உருவாகிறது. ஆக, எனது நினைவின் ஒரு பகுதிதான் என்னுடைய அனுபவம் சார்ந்ததாக இருக்கிறது. மற்றொரு பகுதி எனது நிலம், மொழி, புராதனம் என எதுவெதுவெல்லாமோ சேர்ந்த ஒரு திரட்டாக இருக்கிறது.     

இரண்டாவது, மொழி வழியாகக்  சாத்தியமாகும். கற்பனை. கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என எந்த எல்லைகளும் அற்று உருவாக்க இயலும் கற்பனை. எனது அறுபது வயது வாழ்வை இன்றே நான் கற்பனை செய்து எழுத முடியும் அல்லவா? ஆக, நினைவு மற்றும் கற்பனை இந்த இரண்டும் இணையும் புள்ளியில்தான் நான் இலக்கியத்தை உருவாக்குகிறேன். ஒருவகையில் கற்பனை செய்வதின் வழியாகத்தான் உலகின் பல விஷயங்களை நான் புரிந்துகொள்ளவே செய்தேன். ஒரு படைப்பில் எது எழுத்தாளனின் நினைவு, எது கற்பனை என பிரித்தறிய முடியாமல் இருப்பதுதான் ஒரு நல்ல படைப்புக்கான அடையாளம். இரண்டையும் இரு வண்ணங்களைப்போல இணைத்து, எழுத்தாளன் ஒரு புதிய வண்ணத்தை மொழியில் உருவாக்குகிறான்.’’
``கற்பனைக்கும் புனைவுக்குமான இடைவெளியை விளக்க முடியுமா?’’

``புனைவின் சாத்தியங்கள் இது இதுதான் என்று முந்தையவற்றால் பெரும்பாலும் வரையறுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், கற்பனை என்பது புனைவின் முடிவற்ற சாத்தியங்கள். புனைவுக்கு, கற்பனைதான் ஆதார வண்ணங்கள். அந்த வண்ணங்களைக் கொண்டு புனைவு ஒரு விளையாட்டை நிகழ்த்திக்காட்டுகிறது என்று சொல்லலாம். தேவதச்சனின் ஒரு கவிதை வரி உண்டு. ‘கண்ணீர்த்துளி ஒன்றில்  குடியிருக்கும் அந்த அரக்கனைப் பார்க்கப் போகிறேன்’. அது எப்படி கண்ணீர்த்துளி ஒன்றுக்குள் ஒருவன் குடியிருக்க முடியும்? இந்த சாத்தியமேயற்ற சாத்தியங்களை கற்பனை வழியே புனைவு சாத்தியப்படுத்துகிறது.’’

``தமிழக தற்காலப் படைப்புச் சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

``ஏராளமான புதியவர்கள் எழுத வந்திருக்கிறார்கள். எழுதுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேதான் போகிறது. ஆனால், இன்றையவர்கள் இலக்கியத்தைப் பார்க்கும் பார்வை மாறியிருக்கிறது. முந்தையவர்கள், தங்களைத் தனக்கு முன் எழுதியவர்களின் தொடர்ச்சி என்று நம்பினார்கள். ஆனால் இன்றையவர்களின் மனநிலை ‘எனக்கு முன்பும் யாரும் இல்லை; பின்பும் யாரும் இல்லை; நான்தான் ரைட்டர்!’ என்பதாக இருக்கிறது. நாங்கள் உருவாகி வரும்போது, எங்களது முன்னோடிகளின் தொடர்ச்சி என்று எங்களை நம்பினோம். அவர்கள்விட்ட இடத்திலிருந்து இலக்கியத்தைத் தொடங்க வேண்டும் என்று நினைத்தோம். அவர்களைத் தேடிப்போய்ச் சந்தித்தோம்; பேசினோம்; கற்றோம். பாராட்டினார்கள்; விமர்சித்தார்கள்; சிலர் கடுமையாக விமர்சித்தார்கள். அனைத்தையும் எதிர்கொண்டுதான் வந்தோம். ஆனால், இன்றையவர்கள் எந்த விமர்சனத்தையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. சமகாலத்தையும் படிப்பது இல்லை. கடந்த காலத்தையும் படிப்பது இல்லை. மற்றொரு விஷயம், இன்று எழுதுகிறவர்கள் ‘கான்சியஸாக’ எழுதுகிறார்கள். தாம் என்ன எழுதுகிறோம்... எதற்கு எழுதுகிறோம்... அதற்கு பின்னே இருக்கும் அரசியல் என்ன என்பது குறித்தெல்லாம் பகுத்து ஆராய்பவர்களாக இருக்கிறார்கள். இவ்வளவு தெரிகிற இவர்களுக்கு, தாங்கள் ஒரு தொடர்ச்சி என்பதோ, தங்களுக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது என்பதோ புரிவது இல்லை. எழுத்து என்பது ஒரு ரெஸ்பான்ஸிபிலிட்டி!’’

``ரெஸ்பான்ஸிபிலிட்டி என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்?’’ 

``சமூகம் சார்ந்ததாக இருக்கலாம். பண்பாடு சார்ந்ததாக இருக்கலாம். மனித அகத்தை ஆராய்வதுதான் முக்கியம் என்று சொல்லலாம். எதுவாகவோ,  எழுத்தாளனுக்கு ஒரு பொறுப்பு உணர்வு இருக்க வேண்டும். பொறுப்பு உணர்வற்ற கலை என்று எதுவும் இல்லை. இப்போது ஒருவரின் முதல் தொகுதி கவனிக்கப்படவில்லை என்றாலே, அவர் எழுதுவதை நிறுத்திவிடுகிறார். கவனிக்கப்பட்டு விட்டால், உன்னத எழுத்தாளராகிவிடுகிறார். இந்த இரண்டு நிலைகளுமே ஆபத்தானவை.’’ 

``உங்களது ‘பழைய தண்டவாளம்’ என்ற முதல் சிறுகதைக்கே பரிசு கிடைத்தது அல்லவா?’’

``ஆமாம். அன்றையச் சூழலில் நிறையப் பேசப்பட்டது. ஆனால், எனக்குப் பயம்தான் வந்தது. எல்லோரும் அங்கீகரிக்கிறார்களே... நம்மிடம் இன்னும் எதிர்பார்ப்பார்களே... என்று நினைத்ததும் ‘இன்னும் மூன்று வருடங்களுக்கு எழுதக் கூடாது’ என்று நான் முடிவுசெய்தேன். அதுபோலவே மூன்று வருடங்கள் படித்தேன்; என்னைத் தயார்படுத்திக்கொண்டேன். எனது முதல் தொகுப்புக்கும் இரண்டாவது தொகுப்புக்கும் இடையே ஐந்து ஆண்டுகள் இடைவெளி இருந்தது. இன்று குறுகிய காலத்துக்குள்ளாகவே பொறுமை இழக்கிறார்கள்.’’

``இது பலமுறை பலரிடம் கேட்கப்படும் கேள்விதான் என்றாலும்... தமிழில் விமர்சனத் துறை என்னவாயிற்று?’ ’’

``தமிழில் இரண்டுவிதமான விமர்சனப் போக்குகள் இருந்து வந்திருக்கின்றன. ஒன்று, கல்விப்புலம் சார்ந்தவர்களால், பேராசிரியர்களால் எழுதப்படுவது. இது பெரும்பாலும் பல்வேறு வகையான கோட்பாடுகள் சார்ந்து அணுகப்படுவது. இந்த வகை விமர்சனங்கள்தான் அதிகமாக நம்மிடம் இருக்கின்றன. மற்றொன்று, படைப்பாளிகளே தங்களுக்குள் செய்துகொள்ளும் ரசனை சார்ந்த, கருத்தியல் சார்ந்த விமர்சனம். 90-களுக்குப் பிறகு இந்த இரண்டு தரப்புமே தீவிரமான விமர்சனப் போக்குகளைக் கைவிட்டுவிட்டார்கள். கல்விப் புலங்களில் இன்னும் நடக்கின்றன. ஆனால், அவை வெளியில் தெரியாத அளவுக்கு ஒரு சிறிய வட்டத்துக்குள் நடக்கின்றன. சமீபத்தில் என்னைச் சந்தித்த மாணவர் ஒருவர், எனது கதைகளை ஆராய்ச்சி செய்து எம்.பில் வாங்கியிருப்பதாகச் சொன்னார். அவர் சொல்லாவிட்டால், எனக்குத் தெரிவதற்கு வாய்ப்பே இல்லை. ஓர் எழுத்தாளரின் படைப்புகளில் நடக்கும் ஆய்வுகள் குறித்து அந்த எழுத்தாளருக்கே தகவல் தெரிவிக்கப்படுவது இல்லை என்பது எவ்வளவு வேடிக்கையாக இருக்கிறது. முன்பெல்லாம் பத்திரிகைகளிலும் தீவிரமான விமர்சனங்கள் எழுதப்படும். ஆனால், இன்று அதுவும் இல்லை. பெரும்பாலும், `வரப்பெற்றோம்’ என்கிற அளவில்தான் வெளியிடுகிறார்கள்.’’

``புதியவர்களிடம் பாசிட்டிவ்வான விஷயமாக எதை நினைக்கிறீர்கள்?’’

``பல்வேறு பின்புலங்களில் இருந்து எழுத வருவதால் நிறைய புதிய வாழ்வனுபவங்களை எழுதுகிறார்கள். `இவ்வளவு நுண்மையாக தங்களது அனுபவங்களை இந்த வயதிலேயே எழுதுகிறார்களே...’ என்று எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. முந்தைய பதிலில் நான் குறிப்பிட்ட அவர்களின் ‘மனநிலை’ குறித்து எனக்கு வருத்தம் இருப்பதோடு, அவர்கள் மீது அக்கறையும் இருக்கிறது. ஆர்வத்தோடும் அக்கறையோடும்தான் அவர்களைத் தேடித் தேடி வாசிக்கிறேன். அவர்கள் சரியாகப் பயணப்பட்டால், பெரிய உயரங்களைத் தொடுவார்கள் என்று நம்புகிறேன்.’’ 

``சினிமாவுக்கு எழுதுவது எப்படியான அனுபவமாக இருக்கிறது? சினிமா உலகில் உங்களுக்கான அங்கீகாரம் எப்படி இருக்கிறது?’’  

``நான் தமிழ்நாட்டின் ஒரு சிறு நகரத்தில் இருந்து உருவாகிவந்தவன். சினிமாவோடு சினிமாவாக வளர்ந்தவன். நான் பார்க்காத எம்.ஜி.ஆர் படங்களே இல்லை என்று சொல்லலாம். கலைப்படங்களைப் போலவே பொழுதுபோக்கு சினிமாவும் அவசியம் என்று நம்புகிறவன் நான். கோயிலைத் தாண்டி கலைக்கான வெளி நம்மிடம் சினிமாவைவிட்டால் என்ன இருக்கிறது? ஆக, இவ்வளவு மக்களைச் சென்று சேரும் ஓர் ஊடகமான சினிமாவை நான் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். சினிமாவுக்குள் போய் ஒருவேலை செய்கிறேன். இப்போது நானும் ஜெயமோகனும் சினிமாவுக்குள் வந்திருக்கிறோம். எங்களுக்கு முன்னோடிகளாக புதுமைப்பித்தன் சினிமாவுக்கு எழுதினார். சினிமா தயாரிக்க முயற்சித்தார். ஜெயகாந்தன் ஒருபடி மேலே போய் சினிமா எடுக்கவே செய்தார். எல்லா மொழிகளிலும் இது நடந்திருக்கிறது. ஆனால், ‘20 வருடமாக நான் தமிழில் இலக்கியம் எழுதுகிறேன், அதற்கான இடத்தை சினிமாவில் தாருங்கள்’ என்று நான் கேட்க முடியாது. கேட்கவும் மாட்டேன். இலக்கியத்துக்கான இடத்தை இலக்கியத்தில்தான் கேட்பேன். கேட்கவும் முடியும். சினிமாவைப் பொறுத்தவரை நான் புதியவன். இப்போதுதான் பத்து வருட அனுபவம் கிடைத்திருக்கிறது. அதே சமயம் அங்கீகாரம், மரியாதை என்பதெல்லாம் சினிமாவைப் பொறுத்தவரை நீங்கள் வாங்கும் சம்பளத்தைப் பொறுத்து அமையும். பொருளாதாரம்தான் சினிமாவுக்குள் உங்களுக்கான மரியாதையை நிர்ணயிக்கும்.’’ 

``சினிமா இயக்குகிற திட்டம் இருக்கிறதா?’’


``ஆமாம். அதற்குத் தயாராகிவருகிறேன். நிறைய வாய்ப்புகளும் வருகின்றன. என்னுடைய சினிமாவை எடுப்பதற்கான எல்லாவிதமான தயாரிப்புகளையும் மனதளவில் முடித்துவிட்டேன். விரைவில் என்னுடைய படத்தை இயக்குவேன்.’’  

``தமிழ் சினிமா பல்வேறு வகைகளில் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. இன்னும் மாறாத விஷயமாக இது இருக்கிறதே என்று நீங்கள் நினைக்கும் விஷயம் என்ன?’’

``கேமரா, எடிட்டிங், கிராபிக்ஸ், மேக்கப் என சினிமாவின் அனைத்துத் துறைகளிலும் நவீனம் வந்துவிட்டது. ஆனால், சினிமாவின் அடிப்படை விஷயமான கதையில் இன்னும் பெரிய அளவில் மாற்றங்கள் நிகழவே இல்லை. திரைக்கதையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதும் நிகழவில்லை. நான் பார்த்த பல சினிமா இயக்குநர்களின் வீட்டில் ஆயிரக்கணக்கில் சி.டி சேகரிப்பைப் பார்த்திருக்கிறேன். ஆனால், புத்தகச் சேகரிப்பைப் பார்க்க முடிவது இல்லை. அவர்கள், `புத்தகத்தின் மூலமாக சினிமாவைக் கற்றுக்கொள்ள முடியாது’ என்று நினைக்கிறார்கள். ஆனால், சினிமா  மாஸ்டர்கள் பலரும் தீவிரமான இலக்கிய வாசகர்கள்தான். உதாரணத்துக்கு அகிரா குரசோவா. `செவன் சாமுராய்’ படத்தை எடுத்த குரசோவா தஸ்தாயவ்ஸ்கியின் ‘இடியட்’டைப் படமாக எடுத்தார். ஷேக்‌ஸ்பியரின், கார்க்கியின் படைப்புகளைப் படமாக எடுத்தார். டால்ஸ்டாயின், தஸ்தயவ்ஸ்கியின் படைப்புகளை ரஷ்யர்கள் மட்டுமல்ல; உலகம் முழுக்க உள்ள இயக்குநர்கள் படமாக்கி இருக்கிறார்கள். மேற்கில் பெரும்பாலும் வெற்றிபெறுகின்ற, பேசப்படுகின்ற படங்கள் நாவல்களை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்படுபவைதான். அப்படியான முயற்சிகள் தமிழில் உருவாக வேண்டும்.  ஒரு சிலர் இந்த மாற்றங்களையெல்லாம் நிகழ்த்தப் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள் ஆனால், அதற்கு வணிகம் அனுமதிக்க மறுக்கிறது.’’    
``உங்களுடைய கனவுத்திட்டம் என ஏதாவது இருக்கிறதா?’’

``இல்லை. நான் எப்போதுமே என் முன்பாகத் தெரியும் கண்ணுக்கு எட்டிய தூரத்தைக் கடக்க விரும்புகிறவன். ஓடிக் கடந்த பிறகுதான், எனக்கு அடுத்த தூரம் குறித்துச் சிந்திக்க முடியும். பெரிய கனவுகளைச் சுமந்துகொண்டு அதை நோக்கி ஓட வேண்டும் என்கிற அபிப்ராயமெல்லாம் எனக்குக் கிடையாது.’’

``அயல்மொழி இலக்கியங்கள் குறித்து தொடர்ந்து எழுதுபவராக, பேசுபவராக இருந்து வருகிறீர்கள். அயல் இலக்கியங்கள் தமிழகச் சூழலில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதாக நினைக்கிறீர்கள்?’’

``தனது மொழிக்கு வெளியே என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை அறியும் ஆர்வம் ஓர் எழுத்தாளனுக்கு வருவது இயல்புதான். இந்த ஆர்வம் எனக்கு மட்டுமல்ல, இயற்கையாகவே தமிழில் இயங்கிய முன்னோடிப் படைப்பாளிகள் எல்லோருக்குமே இருந்திருக்கிறது. ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், தமிழில்தான் பெரும்பாலான எழுத்தாளர்கள் மொழிபெயர்ப்பாளர்களாகச் செயல்பட்டிருக்கிறார்கள். புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், பி.எஸ்.ராமைய்யா, கு.அழகிரிசாமி... என்று சொல்லிக்கொண்டே போகலாம். பிரெஞ்சு, ஆங்கிலம், ரஷ்யன், ஸ்பானிஷ் என ஏராளமான மொழிசார்ந்த படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள் தமிழில் அறிமுகமானதன் விளைவை நாம் தமிழ்ச் சிறுகதைகளில் பார்க்க முடியும். மாயா யதார்த்தம் என்கிற எழுத்துமுறையை லத்தீன் அமெரிக்க இலக்கியங்களில் இருந்துதானே நாம் பெற்றோம்? ஒரு வகையில் தமிழில் நவீன இலக்கியம் உருவானதற்கே ரஷ்ய இலக்கியம்தான் காரணம் என்று சொல்லலாம். கச்சிதமான கதை சொல்லல் வடிவத்தை ஐரோப்பிய இலக்கியங்களிலிருந்து நாம் எடுத்துக்கொண்டோம். இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும். போர்ஹே, டால்ஸ்டாய், தஸ்தயெவ்ஸ்கி, மார்க்வெஸ் போன்றவர்கள் எல்லாம் இன்று தமிழ் எழுத்தாளர்களுக்கு இணையாக வாசகர்களிடம் பரிச்சயம் மிக்கவர்களாக  இருக்கிறார்கள். ஆனாலும், தமிழுக்கு மொழிபெயர்க்கவேண்டிய படைப்புகள் இன்னும் எராளமாக வெளியே இருக்கின்றன.’’ 

``உலக இலக்கியங்களில் விரிவான வாசிப்புப் பின்புலம் உள்ளவர் என்கிற அடிப்படையில் அயல் இலக்கியங்களை முக்கியத்துவம் சார்ந்து வரிசைப்படுத்த முடியுமா?’’ 

``நான் எப்போதும் ரஷ்ய இலக்கியத்துக்கே முதல்இடம் கொடுப்பேன். ஏனென்றால், நான் அதிலிருந்து உருவான ஒருவன். ஐரோப்பிய இலக்கியங்களை அதன் நவீன பேசுபொருளுக்காகவும் வடிவங்களுக்காகவும் எனக்குப் பிடிக்கும். குறிப்பாக பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிப் படைப்புகள். அப்புறம் கிரேக்க இந்திய இலக்கியங்கள். பெரிய அளவில் வாசிக்கக் கிடைக்காத, ஆனால் முக்கியமான படைப்புகளைக் கொண்ட சீன, ஜப்பானிய இலக்கியங்களும் முக்கியமானவை. சீன, ஜப்பானிய இலக்கியங்களையும், தத்துவங்களையும்தான் கடந்த பத்தாண்டுகளில் நான் அதிகமாக வாசித்திருக்கிறேன். இவற்றுக்கு எல்லாம் பின்னால்தான் நான் அமெரிக்க இலக்கியங்களை வரிசைப்படுத்துவேன். அங்கீகரிக்கப்படுவதிலும் கொண்டாடப்படுவதிலும் பாடத் திட்டங்களில் இடம்பெறுவதிலும் அமெரிக்க இலக்கியங்கள் முன்னணியில் இருந்தாலும், எனக்கு அதில் பெரிய அளவில் ஈடுபாடு இல்லை. ஹெமிங்வே, ஃபாக்னர் போன்ற ஒரு சில எழுத்தாளர்களைத் தாண்டி என்னை யாரும் ஆச்சர்யப்படுத்தவும் இல்லை.’’
``உலக அரங்கில் இந்திய, தமிழ் இலக்கியங்களுக்கான இடம் என்னவாக இருக்கிறது?’’

``உலகின் பல்வேறு மொழிப் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படுகின்றன; வாசிக்கப்படுகின்றன. அவற்றோடு தமிழுலகம் தன்னைத் தொடர்ந்து பரிசீலனை செய்துகொள்கிறது. ஆனால், தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு, மற்ற மொழிகளுக்கு தமிழ்ப் படைப்புகள் குறிப்பிடும்படியாக எடுத்துச் செல்லப்படவில்லை. அப்படி எடுத்துச் செல்லப்பட்ட படைப்புகளின் மீதும்கூட பெரிய அளவில் வெளிச்சம் விழவில்லை. ஒரு படைப்பு அயல்மொழியில் பிரபலமடைவதற்கு, அங்குள்ள நம்மவர்கள் அவற்றைக் குறித்து ஓர் உரையாடலைத் தோற்றுவிக்க வேண்டும். அந்த மொழியின் கல்விப்புலங்களுக்கு எடுத்துச்செல்வது, சந்தைப்படுத்துவது என பல்வேறு விஷயங்கள் இதற்குத் தேவைப்படுகின்றன. இந்தியாவிலிருந்து நேரடியாக ஆங்கிலத்தில் எழுதுகிறவர்களுக்கு இந்த வெளிச்சம் கிடைக்கிறது. இதற்குப் பின்னிருக்கும் அரசியலையும் வணிகத்தையும் நாம் கணக்கில்கொள்ள வேண்டும். ஐரோப்பிய கல்விப்புலங்களில் இருக்கும் வங்காளிகள், தங்களது இலக்கியங்களை அங்கு பெரிய அளவில் கொண்டுசேர்க்கிறார்களே... தமிழுக்கு யார் செய்வது?’’ 

``இதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?’’

``அரசு, பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள், பதிப்பகங்கள் போன்றவற்றுக்கு இதில் முக்கியமான பொறுப்பு இருக்கிறது. ஆனால், அவர்களுக்காகக் காத்திருக்க வேண்டியது இல்லை. அயல்மொழிகள் அறிந்த, தமிழ்மொழி மீது அக்கறையுள்ள இலக்கியத்தின் மீது விருப்பமுள்ள பத்துபேர் இதற்காக முயற்சி செய்தாலும்கூட போதும். இன்றைய தகவல் தொழில்நுட்ப ஊடகங்களைக்கொண்டு பெரிய அளவில் முயற்சிகளைச் செய்ய முடியும் என்று நினைக்கிறேன்.’’

``இதில் படைப்பாளிகளின் மனநிலை என்னவாக இருக்கிறது?’’

``பெரும்பாலான எழுத்தாளர்கள் தங்களை தமிழ்ப்பரப்புக்கு மட்டும் எழுதுகிறவராகத்தான் கருதுகிறார்கள். தமிழோடு தங்களது எல்லையை முடித்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு, `வங்காளத்துக்கோ, ஆங்கிலத்துக்கோ ஏன்   எனது எழுத்து போகவில்லை?’ என்ற எதிர்பார்ப்போ, கேள்விகளோ இல்லை. இதில் அவர்களைக் குற்றம் சுமத்த முடியாது. அவர்கள் எழுதத்தான் முடியும். அதை எடுத்துச் செல்லவேண்டியது சமூகத்தின் பொறுப்பு.’’

``பாப் டிலனுக்கு நோபல் பரிசு வழங்கப் பட்டிருப்பது குறித்து உங்களுடைய கருத்து என்ன?’’ 

``பாப் டிலன் ஒரு சிறந்த பாடகர்; மிக நல்ல பாடல்களை எழுதியவர்; நாட்டார் பாடல்களிலிருந்து இசையில் ஒரு புதிய மரபை உருவாக்கியவர்; எதிர்ப்புஉணர்வு மிக்க பாடல்களை எழுதியிருக்கிறார். நான் அவரது பாடல்களை நிறைய கேட்டிருக்கிறேன். என்னுடைய நண்பர்கள் பலர் அவருடைய ரசிகர்களாக இருக்கிறார்கள். இதெல்லாம் ஒரு பக்கம். ஆனால், இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு அவர் தகுதியானவரா என்று கேட்டால், நான் இல்லையென்றுதான் சொல்வேன். இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு ஒரு மரபு இருக்கிறது. இதுவரை இப்படி யாருக்கும் வழங்கப்பட்டது இல்லை. பெரும்பாலும் எழுத்தாளர், கவிஞர், நாடக ஆசிரியர் போன்றவர்களுக்குத்தான் நோபல் வழங்கப்பட்டிருக்கிறது. விதிவிலக்காக வின்சன்ட் சர்ச்சிலுக்கு மட்டும் கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும்கூட நம்மில் யாராவது சர்ச்சிலை நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் என்கிற அடையாளத்துடனா பார்க்கிறோம்? சர்ச்சிலுக்குக் கொடுத்தது போன்ற விபத்துகள் சில நேரங்களில் நேர்வது உண்டு. அப்படியான ஒரு விபத்துதான் இது. `இலக்கியம் இனி தேவை இல்லை என்று நோபல் கருதுகிறதோ’ என்று எனக்கு சந்தேகமும் உண்டு. நோபலில் மருத்துவம், இயற்பியல் போன்ற துறையில் இதுபோன்று நடப்பது இல்லையே. டிலன் போன்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று விரும்பினால், நோபலிலேயே வேறு ஒரு பிரிவை உருவாக்கிக் கொடுக்க வேண்டியதுதானே? ஓர் இலக்கியவாதி கிராமி விருதை ‘எனக்குக் கொடு’ என்று கேட்கிறானா என்ன? இதன் பின்னால் வணிக, அரசியல் நோக்கங்கள் இருக்கின்றன.’’

``உங்களுடைய `இடக்கை’ நாவல் இந்துத்துவத்துக்கு சார்பாகவும் இஸ்லாமியர்களை தவறாகவும் சித்தரிக்கிறது என்று விமர்சனங்கள் வருகின்றனவே..?’’

``முதலில் இது சமயம் சார்ந்து சித்தரிக்கப்படுகிற நாவலே அல்ல. மலம் அள்ளும் தொழில் திணிக்கப்பட்ட சிவனை ஏற்றுக்கொள்ளாதவர்களைப் பற்றி பேசும் ஒரு நாவல் எப்படி இந்துக்களுக்குச் சார்பாகப் பேசும்? உங்கள் இடக்கையைப் போல அசுத்தத்தையும் புறக்கணிப்பையும் சந்திக்கிற மனிதர்களைப் பற்றியதுதான் இந்த நாவல் என்று அதன் தொடக்கத்திலேயே நான் குறிப்பிட்டிருக்கிறேனே? ஒரு தனி மனிதனிடம் இருக்கும் இரண்டு கைகளிலேயே புறக்கணிக்கப்படுகிற ஓர் இடக்கை இருக்கிறது என்றால், இந்த சமூகத்தின் இடைக்கை யார்? அவர்கள் எப்படி இடக்கை ஆக்கப்பட்டார்கள்? அவர்களை ஏன் நாம் ஒதுக்கி வைக்கிறோம்? ஒரு தேசத்தை நிர்வகிக்கும் ஒரு பெரிய அரசு இயந்திரம் இருக்கிறது என்றால், அதன் இடக்கை எது? என்பதையெல்லாம்தான் இந்த நாவல் கேள்வி கேட்கிறது. `இடக்கை’ என்பதை ஒரு குறியீடாகக் கொண்டு மத்தியக் கால இந்தியாவை நான் ஒருவிதமாக ஆராய்கிறேன். இதில் எங்கிருந்து வருகிறது இந்துத்துவ சார்பு... தவறான இஸ்லாமியச் சித்தரிப்பு?’’ 

``வரலாற்றுப் புனைவுகளில் ஆர்வமுடையவர் நீங்கள். ஒரு வரலாற்றை புனைவாக்கும்போது அதில் இரண்டும் பங்குகொள்ளவேண்டிய அளவு என்ன? அதை எப்படித் தீர்மானிப்பீர்கள்?’’

``வரலாறு என்று நம்மால் நம்பப்படுவதேகூட புனைவுதானே! அந்தப் புனைவு, சில தகவல்களால் வரலாறு என்று நம்பப்படுகிறது. அவ்வளவுதான். வரலாற்றை எழுதியவர்களெல்லாம் அசாத்தியமாக நூற்றாண்டுகளைத் தாவி தாவிச் செல்லும் மிகப் பெரிய புனைவு ஜாம்பவான்கள் (சிரிக்கிறார்). தமிழில் மூன்று நூற்றாண்டுகளை. `களப்பிரர் காலம்... அது இருண்ட காலம்’ என்று சொல்லி வரலாற்றாளர்கள் அநாயாசமாக தாவிச் செல்கிறார்களே... இது எவ்வளவு பெரிய புனைவு? யோசித்துப் பாருங்கள். 

ஓர் எழுத்தாளனாக நான் ஏன் ஒரு வரலாற்றின் மீது சாய்மானம்கொள்ள வேண்டும்? எனக்கு எதற்கு வரலாறு தேவைப்படுகிறது? எனது நிகழ்கால சம்பவங்கள் அனைத்துக்கும் ஒரு கடந்த காலம் இருக்கிறது. எனது கடந்த காலத்தை அறிந்துகொள்ளவும் எதிர்காலத்தைத் தீர்மானிக்கவும் எனக்கு வரலாறு தேவைப்படுகிறது. ஆனால், வரலாறு என்பது என்ன என்று கேட்டால், உறுதியாகச் சொல்ல முடியாது. அது நாம் ஒருநாளில் உரையாடிக் கடந்துவிட முடியாதது. 20, 30 வருடங்களாக நான் வரலாற்றை வாசிக்கிறேன். யோசித்தால் குழப்பம்தான் மிஞ்சுகிறது. நமக்குக் கிடைத்திருப்பதுதான் நாம் நம்பும் வரலாறு. ஆனால், உண்மை அது அல்ல. ஆக, எழுத்தாளனாக நாம் புனைவுகளின் வழியே ஒரு வரலாற்றை விசாரணை செய்கிறோம்; வரலாற்றிலிருந்து கொஞ்சம் தகவல்களை எடுத்துக் கொள்கிறோம்; கொஞ்சம் யூகிக்கிறோம்; கொஞ்சம் கற்பனை செய்கிறோம். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், ஒரு வரலாற்றுப் புனைவில் வரலாறு என்பது ‘உணவில் உப்பு’ அளவு இருக்க வேண்டும்.’’

``நாடகங்களில் இன்னும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறீர்களா?’’

``என்னிடம் குழு இல்லாததால் நாடகங்களை இயக்குவது இல்லை. ஆனால், அவர்களுடன் இணைந்து தொடர்ச்சியாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன். எழுதிக் கேட்கும் பலருக்கும் புது நாடகங்கள் எழுதிக் கொடுக்கிறேன். பல அயல்மொழி நாடகங்களை மொழிபெயர்த்துக் கொடுக்கிறேன். `தியேட்டர் லேப்’ என்றொரு குழு சென்னையில் இருக்கிறது. இந்த 10 வருடங்களுக்குள் எனது 9 நாடகங்களை அவர்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள். சமீபத்தில் நான் தொகுத்த 100 சிறந்த சிறுகதைகளில் 10 கதைகளைத் தேர்வு செய்து நாடகமாக நிகழ்த்தினோம். அதை ஒரு புதுமையான முயற்சியாகச் செய்தோம். இப்போது புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக எழுதிக்கொண்டிருக்கிறேன். பின்னோக்கிப் பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது. சிறுகதை, குறுநாவல், நாவல், நாடகம், கட்டுரை, சிறுவர் இலக்கியம், பயண இலக்கியம், மொழிபெயர்ப்பு, சினிமா, டாக்குமென்டரி, அனிமேஷன் படங்கள் என அனைத்து வடிவங்களிலும் எழுதியிருக்கிறேன். கவிதை மட்டும்தான் எழுதவில்லை. ஆனால், கவிதைகள் குறித்து நிறைய எழுதியிருக்கிறேன்.’’
``கவிதை மட்டும் ஏன் நீங்கள் எழுதவில்லை?’’

``தேவாரம், திருவாசகம், பாரதியார் கவிதைகள் என சிறு வயதிலேயே எனக்கு கவிதை அறிமுகமாகிவிட்டது. என்னையறியாமலேயே அதன் மேல் ஒரு பிரமிப்பு பால்யத்திலேயே உருவாகிவிட்டது. அதுவுமில்லாமல், சங்கக் கவிதைகளிலிருந்து நவீனக் கவிதைகள் வரை ஆழமாக வாசித்திருக்கிறேன். நல்ல கவிதைகளை நிறைய வாசித்திருக்கிறேன் (சிரிக்கிறார்). தெரிந்தோ, தெரியாமலோ கவிதை எழுதக் கூடாது என்ற நல்ல முடிவை அப்போதே எடுத்துவிட்டேன். எனக்கு எப்போதுமே கவிஞர்கள் ஆதர்சமாக இருக்கிறார்கள். எழுதுவதற்கு ஏராளமான ஆதாரங்களை அவர்கள் கவிதையின் வாயிலாக எனக்குக் கொடுக்கிறார்கள். என்னுடைய சகபயணிகளாக நான் கவிஞர்களைத்தான் பார்க்கிறேன். மேலும், நான் கவிஞர்களால் உருவானவன். தேவதச்சன் போன்றோரால் உருவானவன். அவர்கள் என் மாஸ்டர்கள். ஒருபோதும் நான் அவர்கள் ஆக முடியாது.’’

``தற்காலக் கவிதைகளை வாசிக்கிறீர்களா?’’ 

``புதியவர்களைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். முன்பு கவிதையை வாழ்க்கையிலிருந்து, லட்சியத்திலிருந்து எழுதினார்கள். கவிதை என்கிற வடிவத்தின் மீது ஒரு மதிப்பு வைத்திருந்தார்கள். ஆனால், இன்று தனக்குப் பிடித்த கவிதைகளிலிருந்து, அவற்றில் தனக்குக் கிடைக்கும் அனுபவத்திலிருந்தே கவிதைகளை உருவாக்குகிறார்கள். இந்த வட்டத்துக்கு வெளியே சில அசலான கவிஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சங்கர்ராமசுப்பிரமணியன், ஸ்ரீநேசன், கண்டராதித்தன், வெய்யில், நரன், சபரி, அனார் போன்றவர்களை இந்த காலகட்டத்தின் கவிஞர்களாகப் பார்க்கிறேன். அவர்களது கவிதைகளை விரும்பி வாசிக்கிறேன். புதிய குரலோடும் அனுபவங்களோடும் இன்னும் பலரும் எழுதுகிறார்கள். ஆனால், போன தலைமுறை செய்துகாட்டிய பரீட்சார்த்த சவால்களை இவர்கள் குறைவாகத்தான் செய்து பார்க்கிறார்கள்.’’  

``சமீபத்தில் வாசித்ததில் உங்களைப் பாதித்த சிறுகதைகள், நாவல்கள் குறித்து...’’

``நாவல்களில் சோ.தர்மனின் ‘சூல்’ மிக நன்றாக இருக்கிறது. ரொம்ப முக்கியமானதும்கூட. சிறுகதைகளில் ஹசீன், திசேரா போன்றோர் நன்றாக எழுதுகிறார்கள். கட்டுரையில், சபா நக்வி எழுதிய ‘வாழும் நல்லிணக்கம்’, ராமச்சந்திர குஹா எழுதிய ‘வெரியர் எல்வினும் அவரது பழங்குடிகளும்’ இரண்டும் மிகவும் முக்கியமான நூல்கள். மாதத்தில் முக்கால்வாசி நேரம் நான் ஆங்கிலத்தில்தான் வாசிக்கிறேன். கால்வாசிதான் தமிழில் வாசிக்கிறேன். பழகிவிட்டதால், அதுவே எனக்கு இயல்பாகவும் இருக்கிறது. பொதுவாக, ஒரு காலகட்டத்தில் குறிப்பிட்ட ஓர் எழுத்தாளரை முழுமையாக எடுத்துக்கொண்டு வாசிக்கும் பழக்கம் உள்ளவன் நான். அப்படி சமீபத்தில் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் ‘எட்வர்டோ காலியானோ’வின் மொத்த நூல்களையும் வாசித்துக்கொண்டிருக்கிறேன்.’’  

``நீங்கள் தொடர்ந்து வாழ்வில் பின்தொடரும் புத்தகங்கள்...’’ 

``சிலப்பதிகாரம், திருக்குறள், பாரதியாரின் படைப்புகள், டால்ஸ்டாயின் `அன்னா  கரீனினா’, தஸ்தாயெவ்ஸ்கியின் `குற்றமும் தண்டனையும்’, `கரமசோவ் சகோதரர்கள்’, அப்புறம்... புதுமைப்பித்தனுக்கும் எனக்கும் ஏதோ ஓர் அந்தரங்கமான தொடர்பு இருக்கிறது என்றே நம்புகிறேன். எப்போது நேரம் கிடைத்தாலும், திடீரென புதுமைப்பித்தனை வாசிப்பேன். அந்த நேரம் அவ்வளவு சந்தோஷமானதாக இருக்கும்.’’ 

``உங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்திருப்பதாக நினைக்கிறீர்களா?’’

``நான் ஒரு சிறிய கிராமத்திலிருந்து எழுத வந்தவன். நான் எழுதத் தொடங்கிய காலத்தில், என்னைப் பாராட்ட எனது ஊரில் ஒரு ஆள் கிடையாது. மலைச்சாமி மட்டும்தான் இருந்தார். அவரும் நானும் எங்கள் ஊர் மயானத்து வேப்ப மரத்துக்குக் கீழே அமர்ந்து பேசிக்கொண்டிருப்போம். ‘நாம் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் இந்த இலக்கிய விஷயங்களைக் கேட்க பூமிக்குள்ளிருக்கும் இந்த செத்துப் போனவர்களைத் தவிர இங்கு யாரும் இல்லையே’ என்று அவர் விளையாட்டாகச் சொல்வார். எழுதுவதுதான் எனது வேலை. அங்கீகாரங்கள் குறித்து நான் பெரிதும் யோசிப்பது இல்லை. மேலும், ஓர் எழுத்தாளனுக்கான அங்கீகாரம் என்பது அவனைவிட அவனது குடும்பத்துக்கு, அவனைச் சுற்றியிருக்கும் நண்பர்களுக்கு, அவனது வாசகர்களுக்குத்தான் அதிக மகிழ்ச்சியைத் தரும். அவர்களின் ஏக்கத்தைத்தான் இந்த அங்கீகாரங்கள், விருதுகள் நிறைவேற்றுகின்றன. நகுலன் ஒருமுறை கேட்டார், ‘வெறும் பேப்பர்தான் விருது என்றால், யாராவது போட்டியிடுவார்களா?’ எனக்கு விருதுகள் குறித்து எப்போது பேச்சு வந்தாலும் இந்த கேள்வி நினைவுக்கு வந்துவிடும் (சிரிக்கிறார்). 

என்னைப் பொறுத்தவரை எல்லோருக்குமே அவரவர்களுக்கான அங்கீகாரம் கிடைக்கத்தான் செய்கிறது. சிலருக்குத் தாமதப்படலாம். ஆனால், நிச்சயம் கிடைக்கும் என்றே நம்புகிறேன். எழுத்தை நம்புகிற ஒரு சமூகம் எப்போதும் படைப்பாளியைக் கைவிடாது. தமிழ்ச் சமூகம் எழுத்தை நேசிக்கும் சமூகம். ஒருவேளை ஒரு படைப்பாளி அங்கீகரிக்கப்படுவது தாமதப்படலாம். அவன் வாழும் காலத்தில் கொண்டாடப்படாமல் போகலாம். ஆனால், அந்தப் படைப்புக்கான அங்கீகாரம் காலம் கடந்தேனும் அவருக்கு வழங்கப்படும். என்னைச் சந்திக்கும் பல இளைஞர்கள், `எனது அப்பா உங்களுக்கு வாசகர் சார்’ என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். இளைஞர்கள் வாசிப்பதோடு, தங்களது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் வாங்கிக்கொடுக்கும் புத்தகமாக எனது புத்தகங்கள் இருக்கின்றன என்பது என் படைப்புகள் குறித்து நான் சந்தோஷப்படும் விஷயமாக இருக்கிறது. இதையெல்லாம் தாண்டி நோபல் பரிசே வாங்கினாலும்கூட அது ஒரு நாள் கொண்டாட்டம்தான்.’’ 

``முழுநேர எழுத்தாளராக வாழ விரும்பும் ஒரு புதிய எழுத்தாளருக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?’’

``நிச்சயமாக நான் வரவேற்பேன். நான் எழுதவந்த காலத்தோடு ஒப்பிட்டால், இன்று எவ்வளவோ சாதிக்க முடியும். என்னைவிடக் கூடுதலாக முன்னேற முடியும். ஆனால், அவர்களிடம் ஒன்றே ஒன்றை மட்டும் சொல்ல வேண்டும். `உன்னுடைய புகாரை யாரிடமும் சொல்லக் கூடாது. இது உன்னுடைய சாய்ஸ். எழுத்தாளனாக வேண்டுமென்றால், அதை ஒரு பொறுப்பு உணர்வாக ஏற்றுக்கொள்; அது தருகின்ற சிரமங்களை, மகிழ்ச்சியை விரும்பி அனுபவி. உன்னை யாரோடும் ஒப்பிட்டுக்கொள்ளாதே. எந்தச் சூழ்நிலையிலும் தன் இடத்தைவிட்டு ஓடாத தாவரமாக நீ இருந்தால், இது சாத்தியம்!’ ’’ 

கருத்துகள் இல்லை:

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...