உயர்ந்த பீடம் (04.06.1967)
தூயவன்
ஆனந்த விகடன் முத்திரைக்கதை – அன்பளிப்பு ரூ 501 பெறும் முதல் முத்திரைக்கதை –
பொறி கலங்கிப் போயிற்று ஜானகிக்கு. உடலெல்லாம் வெடவெடத்துப் போய்விட்டது. நெற்றி முகட்டில் குபீரென பூத்துவிட்ட வியர்வைத் துளிகளை முன்றானையால் ஒற்றிக்கொடுத்தவாறே மீண்டும் கோவில் முகப்புக்குப் பார்வையைச் செலுத்தினாள்.
அவன்தான்! அவனேதான்! வெள்ளை வேஷ்டியும் நீண்ட ஜிப்பாவும் அவனுக்கு ஒரு பெரியமனுஷத்தனத்தை வழங்கியிருந்தாலும் அவனுடைய உருவம் அப்படியேதானே இருக்கிறது!
’கன்றினுக்குச் சேதா கனிந்திரங்கல் போல எனக்கென்று கருணைப் பராபரமே’ என்கிறார் தாயுமான சுவாமிகள். ‘பிள்ளை நன்றே செய்திடினும் தீதே செய்திடினும் உயர்தன்மை எய்திடினும் தாழ்ந்து கிடக்கினும் எப்படி ஒருதாய் தன் மகன்மீது கருணை காட்டுகிறாளோ, அப்படியே என்மீதும் அருள் புரிவாய் பராபரமே’ என்று அவர் எத்தனை நயமாகக் குறிப்பிடுகிறார்! தாயின் தன்மைக்கு தெய்வத்தை உயர்த்துவது ஏனெனில், பெற்ற பிள்ளை, தாயைப் போற்றினாலும் தூற்றினாலும் அன்னை எப்படி அன்பு செலுத்தத் தவறுவதில்லையோ, அதுபோல் நாஸ்திகர் ஆஸ்திகர் என்று மனிதர்களில் எத்தனை வேற்றுமைகள் இருப்பினும், கடவுள் தன் கருணை மாரியை ஏற்றத் தாழ்வின்றிப் பொழியத் தவறுவதில்லை”.
அவனா இப்படிப் பேசுகிறான்? அவனுக்க்கூடவா இத்தனை ஞானம் வந்துவிட்டது!
ஜானகி திரும்பிப் பார்த்தாள். அவன் வாயிலிருந்து உதிக்கிற ஒவ்வொரு சொல்லையும் செவிமடுத்துக்கொண்டு, சில சமயம் தன்னையும் மீறி ‘அடடா’, என்றும் ‘அபாரம்’ என்றும் முணுமுணுத்தபடி பக்திப்பழமாய் வீற்றிருக்கிறான் சோமநாதன்.
மீண்டும் அவனைப் பார்த்தாள் ஜானகி. முகத்தில் முன்பில்லாத ஒரு களையும் தேஜசும் தெரிந்தன. அந்த விழிகளில் முன்பிருந்த வெறித்தனமும் குரூரமும் மறைந்து ஓர் ஒளி தெரிந்தது. அந்தத் தோற்றத்தில் இப்போது ஆடம்பரமும் அகம்பாவமும் அற்று ஓர் எளிமை தெரிந்தது. எப்படி வந்தது இந்த அசுர மாற்றம்?
அவன் அவளைக் கவனிக்கவில்லை. கவனித்திருந்தால் என்னவாகும் என்பதும் அவளால் ஊகிக்க முடியவில்லை. தன்பாட்டுக்கு ஒரு தீவிரமான உபந்நியாசகரைப்போல் ஓர் ஆவேசத்தோடு அவன் பிரசங்கம் செய்துகொண்டிருந்தான். அந்தப் பிரசங்கத்தின் கம்பீரத்தொனியும் அழுத்தமும் யாரையும் அசையவிடாமல் இருத்தி வைத்திருக்கிற விந்தை அவள் கண்கூடாகக் காணும் ஒரு காட்சிதான். ஒரு தெளிந்த ஞானியைப் போல, ஆழ்ந்த பக்தனைப் போல் எத்தனை நிதானம்! எவ்வளவு நயம்!
ஜானகியால் தன்னிருக்கையில் உட்காரவே முடியவில்லை. இந்த நிலையில் சோமநாதனைக் கிளப்புவதென்பது சாத்தியமில்லாத விஷயம். பக்கத்தில்தான் வீடு. பேசாமல் எழுந்து போய்விட்டாலும் நல்லதுதான்.
பிரசங்கம் செய்துகொண்டிருந்த அவனுடைய பார்வையில் பட்டுவிடாமல் முன்றானையை இழுத்து உடம்பில் நன்றாகச் சுற்றிக்கொண்டு, கோவிலுக்கு எதிரே போடப்பட்டிருந்த அந்தப் பந்தலைக் கடப்பதற்குள் அவளுக்குப் போதும்போதுமென்றாகி விட்டது.
வீட்டுக்குள் வந்து நுழைந்து கட்டிலில் விழுந்தவளுக்குக் கடந்துபோன நாட்களை நோக்கிக் காற்றாய்ப் பறந்த சிந்தனையோட்டத்தைத் தடைசெய்ய முடியவில்லைதான்.
பூதங்குடி கிராமத்துக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டென்றால் அதற்குக் காரணமே அங்கிருக்கும் அம்மன் கோவில்தான். வாராவாரம் வெள்ளிக்கிழமை தோறும் அண்டை அயல் கிராமத்துக் கன்னிப் பெண்களெல்லோரும் அங்குவந்து கூடுவது ஒரு புராதன வழக்கம் எனக்கருதப்பட்டது. அந்த நாட்களில் பூதங்குடி கிராமமே திருவிழாக்கோலம் பூண்டு விளங்கும். இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் காணப் பட்டணத்து மைனர்களும் வந்து வட்டமிடுவதுண்டு.
நரிமணம் கிராமத்துப் பெரிய பண்ணையாருக்கு அம்மன் மீதுள்ள அளவற்ற பக்தியை ஊரே அறியும். கோவில் திருப்பணிகளுக்காக அவர் நிறைய வழங்கியிருக்கிறார். ஆனால் அவருடைய பையனோ தந்தைக்கு நேர் விரோதம். ‘சாமியாவது பூதமாவது’ என்று கிண்டல் செய்வதை ஒரு நாகரீகமாகக் கருதுபவன். வயசுக்கிறுக்கும் வாலிப முறுக்கும் அவனை நாஸ்திகவாதத்தில் முற்றச் செய்திருந்தன.
பண்ணையாரின் மரணத்துக்குப் பின்பு சொத்துக்கள் பங்கிடப்பட்டு, பண்ணையாரின் பையன் சுதந்திரக்காளையாகச் சுற்றத் தொடங்கினான். திடீரென அவன் வாராவாரம் நரிமணத்தை விட்டுப் பூதங்குடிக்கு வரத்தொடங்கியது அனைவரையுமே வியப்பில் ஆழ்த்தியது. ஆனால், அந்த வருகையின் நோக்கம் புரிந்தபோது வெறுப்பில் ஆழ்த்தவும் தவறவில்லை.
வாயில் சிகரெட்டும் வரட்டு ஆடம்பரமுமாய் அவன் கோவில் வாசலில் நின்றுகொண்டு அங்கு நடமாடும் கன்னிப் பெண்களையெல்லாம் வெறித்துக்கொண்டிருப்பது வழக்கமாகிவிட்ட பிறகு அவனைக் கண்டிக்கவும் முடியாமல் விடவும் முடியாமல் அனைவரும் தடுமாறினர்.
அம்மன் கோவிலின் மானேஜிங் டிரஸ்டியும் ஜானகியின் தந்தையுமான வைத்தியநாதன் ஒருநாள் அவனைக் கூப்பிட்டு, “நீ தெய்வத்தை நம்புகிறாயோ இல்லையோ, அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. ஆனால், தெய்வ சந்நிதானத்தில் நின்றுகொண்டு இப்படித் தகாத காரியம் பண்ணிக்கொண்டிருப்பதை நாங்கள் இனிமேலும் அனுமதிக்க முடியாது” என்றுகூறு முடித்தபோது “உங்கள் தெய்வத்துக்கு சக்தியிருந்தால் என் கண்களை அவிக்கட்டுமே” என்று ஏளனம் பண்ணினான் அவன்.
அதற்குப் பிறகு பண்ணையார் பையனோடு நட்புக்கொள்வதை கௌரவமாகக் கருதிய சில இளைஞர்களும் அவனுடைய நாஸ்திகக் கட்சியில் சேர்ந்துகொண்டு, கோவில் சுவர்களில் கிறுக்குவதும் பிள்ளையார் சிலைகளை உடைப்பதும் கோவிலுக்குச் செல்லும் பக்தர்களைக் கேலி பண்ணுவதுமாய் அட்டகாசம் செய்தபோது, கிராமமே திகைத்தது.
இந்தச் சந்தர்ப்பத்தில்தான், ஜானகியை அவனும் அவனை ஜானகியும் பார்க்க நேர்ந்தது. அவனைப் பார்க்காமலேயே அவன் மீது வளர்ந்திருந்த வெறுப்பு, அனுதாபமாயிற்று அவளுக்கு. எதனால் அப்படியோர் அனுதாபம் ஏற்பட்டது என்பது அவளுக்கே தெரியாது.
எத்தனைதான் சிரிப்பும் கும்மாளமுமாய் அவன் கோவிலின் வாசலில் நின்றிருந்தாலும் ஜானகி அவனைக் கடந்து செல்லுகிற அந்தக் கண நேரத்துக்கு அத்தனையும் அடங்கி ஒரு பிரமிப்புடன் அவளை வெறிப்பான் அவன். அவளுடைய லட்சுமிகரமான தோற்றத்தில் ஏற்பட்ட மதிப்போ அவளுடைய அதீதமான அழகில் ஏற்பட்ட பிரமிப்போ அவனை வாயடைக்கச் செய்துவிடும்.
நாளாக ஆக இந்தப் பிரமிப்பு அவனையே ஒரு மாற்றத்துக்குள்ளாக்கி அவள் கோவிலுக்கு வருகிற நேரத்தையும் தண்ணீருக்குப் போகிற நேரத்தையும் எதிர்நோக்கித் தவம் கிடக்கச் செய்கிற அளவுக்குத் திசைதிரும்பி நின்றான் அவன். முன்னைப்போல் நாஸ்திகப் பிரச்சாரம் இல்லாமல் ஒடுங்கி, கேலி கிண்டல் இல்லாமல் அடங்கி, எதற்கோ ஏங்கித் தவம் கிடக்கும் பக்தனைப்போல் திரியலானான் அவன்.
ஜானகிக்கும் நன்றாகத் தெரியும் – தன்னை தினமும் அவன் எப்படி எதிர்பார்க்கிறான் என்பது. எதற்காக எதிர்பார்க்கிறான் என்கிற அளவுக்குப் போகாமல், ஏனோ எதிர்பார்க்கிறான் என்று மேலெழுந்தவாரியான சிந்தனையோடு தன் போக்கில் போய்வந்துகொண்டிருந்தாள் ஜானகி.
தன்னுடைய அழகும் தோற்றமும் பண்ணையார் மகனின் உள்ளத்தில் ஒரு பெரிய புரட்சியை உண்டுபண்ணியிருப்பதையோ, தன்னோடு பேசவும் பழகவும், தன்னுடைய நன்மதிப்பைப் பெறவுமே அவன் நாளெல்லாம் ஏங்கிக்கிடக்கிறான் என்பதையோ அறியாமல், அவன்மீது ஒரு காரணமற்ற அனுதாபத்தை மாத்திரமே செலுத்திவந்த ஜானகிக்கு அவனைப் புரிந்துகொள்ளவும் ஒருநாள் வாய்த்தது.
ஒருநாள் வானம் சிறு தூரலாகத் தூறிக்கொண்டிருந்தது. கோவிலில் தீபாராதனை முடிந்ததும் ஜானகி வெளியே வந்தபோது அவளுக்காகக் காத்திருந்த வானம் சடசடவென்று கொட்டத் தொடங்கிற்று. கோவில் வாசலில் யாருமில்லை. தற்செயலாகப் பின்னால் போகத்திரும்பியவள், அவன் நிற்பதைக்கண்டு அப்படியே நின்றுவிட்டாள். எப்படித்தான் அவனுக்கு அத்தனை துணிச்சல் வந்ததோ? சட்டெனத் தன் கைக்குட்டையை எடுத்து நீட்டினான். திகைத்துப்போன ஜானகி, “பரவாயில்லை” என்றாள்.
அவன் அவளையே பார்த்துக்கொண்டு நின்றான். ஏனோ ஜானகிக்கு உடம்பே கூசுவது போலிருந்தது. அவள் பலருடைய பார்வையில் சிக்கியதுண்டு. ஆனால் லட்சியம் செய்ததில்லை. ஆனால், இந்தப் பார்வை…?
“படிக்கிறீர்களா?” என்று கேட்டான் அவன் கனிவாக, அர்த்தமற்ற கேள்விதான். சட்டென முகத்தை முறித்துக்கொள்ளத் தோன்றவில்லை அவளுக்கு. “இல்லை” என்றாள்.
மேலும் நின்றுகொண்டிருந்தால் இன்னும் கேட்பான் போலத்தோன்றியது. இறங்கிப் போய்விடலாமா என்று நினைத்தவாறே வானத்தை அவள் பார்த்தபோது அவன் பளிச்சென்று, “அதென்ன பிரசாதமா? கொஞ்சம் கொடுங்கள்” என்று கையை நீட்டினான். ஜானகி அயர்ந்து போனாள். ‘நேற்றுவரை நாஸ்திக வாதம் பேசியவனுக்கு ஸ்வாமி பிரசாதம் வேண்டுமாமே’!
அவள் நீட்டிய தட்டிலிருந்து திருநீற்றை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்ட அவன், வேறேதோ கேட்குமுன்பு மழையில் இறங்கிவிட்டாள் அவள்.
இந்தச் சம்பவத்தால் உண்டான தைரியமும் துணிச்சலும் அவனை உற்சாகப்படுத்திவிட்டதில் ஒருநாள் தண்ணீர் எடுக்கப்போன ஜானகியை நிறுத்து உருக்கமாகத் தன் எண்ணத்தை வெளியிட்டான் அவன்.
“எனக்குக் கடவுள்மீது நம்பிக்கை இல்லைதான் – உங்களைப் பார்க்கின்றவரை. இப்போது நம்புகிறேன் என்றால் அதற்குக் காரணம் உங்களின் அளவுகடந்த தெய்வபக்திதான். சுவாமி சந்நிதிக்குப் போய்விட்டு வரும்போது உங்களைப் பார்க்கிறேன் – அதில் ஒரு தேஜோமயமான அமைதியும் சாந்தியும் தெரிகிறது. அந்த அமைதியும் சாந்தியும் உங்களுக்குத் தருகிற ஒரு தெய்வீகமான அழகை நான் விரும்புகிறேன். உங்களிடமுள்ள லட்சுமிகரமான தோற்றத்தை நான் மிகவும் நேசிக்கிறேன்”.
ஜானகிக்கு தூக்கிவாரிப்போட்டது. காதல், நேசம் என்பதையெல்லாம் அவள் கதைகளில்கூடப் படித்ததில்லை. இப்போது அதைக் காதில் கேட்கிறபோது, எந்தவிதமான பாவங்களையும் உணர்ச்சிகளையும் அவளால் வெளிப்படுத்த முடியவில்லை. அவன்மீது தனக்குத் தோன்றிய அனுதாபத்தை எண்ணிப்பார்த்தாள். அது வெறும் அனுதாபம்தான். நிச்சயமாகக் காதல் அல்ல. சக்தியும் கருணையும் மிகுந்த தெய்வத்தின்மீதே நம்பிக்கையற்றிருக்கிறானே என்கிற அனுதாபம். அதை அவனல்ல, ஒரு சாதாரணப் பிச்சைக்காரன் செய்திருந்தாலும் அதே அனுதாபம்தான் அவளுக்கு ஏற்படும். ஆனால், அந்த அனுதாபத்தின் காரணமாக அவன் கேட்கும் அந்தப் பிச்சையை வழங்கிவிட முடியுமா?
அவள் யோசித்தாள். தன்னுடைய அன்பைப் பெறுகிற முயற்சியில் அவன் இப்போது நாஸ்திகனாக இல்லை என்பது உண்மைதான். ஆனால், அதே அன்பை இழக்க நேர்ந்தபின், மீண்டும் அவன் பன்மடங்கு வெறியோடு கடவுளையே தூற்றத் துணிந்தால்?
மீண்டும் ஜானகிக்கு அனுதாபம்தான் ஏற்பட்டது. சொன்னாள்: “எனக்குக் கணவராக வருகிறவரை உண்மையான பக்திமானகவும், தெய்வத்தொண்டு மிகுந்தவராயும்தான் நான் காண ஆசைப்படுகிறேன். அதுவுமல்லாது என்னுடைய தந்தைக்குத்தான் எனக்குத் தகுதியானவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு. வருகிறேன்”!
அதன் பிறகு பெரிய பண்ணையாருக்குச் சொந்தமான மாடி வீடு எரிந்து போனதும், நீண்ட நாட்களாகவே நடந்துகொண்டிருந்த வழக்கொன்றில் இறந்துபோன பண்ணையாருக்குப் பாதகமாய்த் தீர்ப்புச் சொல்லப்பட்டு, பண்னையார் பையன் ‘பாப்பர்’ ஆனதும், ஜானகிக்குக் காதில் விழுந்த செய்திகள்தான். அப்புறம் அவனைக் காணவே இல்லை.
ஜானகிக்குப் பூதங்குடியிலிருந்து இருபது மைல் தள்ளியிருந்த சோழவந்தான் கிராமத்தில் வரன் பார்த்துச் சில நாட்களில் மணமும் செய்து கொடுத்துவிட்டார் அவள் தந்தை. இல்லற வாழ்வில் ஈடுபட்ட பின்பு, அவளுக்கு அவனை அடியோடு மறந்தே போய்விட்டது. அந்த அவன்தான் இப்போது பக்திமானாகவும், தெய்வத்தொண்டு மிகுந்தவனாகவும் அவள் புக்ககம் வந்திருக்கிற இதே ஊருக்கே வந்திருக்கிறான். ஒருவேளை அவளுக்காகவே வந்திருக்கிறானோ?
அவனுடைய வருகை பற்றிய குழப்பமும் கலவரமும் ஜானகியை வெகுநேரம் வரை தூங்கவிடவில்லை. அவனால் தன் வாழ்க்கையில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சினாள். அவன்மீது வெறும் அனுதாபத்தைத் தவிர வேறெதையும் கொள்ளாவிட்டாலும், அந்த அனுதாபத்தின் காரணமாகவே அவள் அவனிடம் கடைசியாகக் கூறியதை அவன் தவறாகப் புரிந்துகொண்டு தனக்கு துரோகம் செய்துவிட்டதாகக் கருதினால்? அதற்காக ஏதாவது பழிவாங்கும் முயற்சியில் ஈடுபட்டால்?
அவளுக்கு உடல் நடுங்கிற்று.
இரவு வெகு நேரம் விழித்துக்கொண்டிருந்ததில் தன்னை மறந்து உறங்கிப் போன ஜானகி, காலையில் திடுக்கிட்டு விழித்தபோது நிலம் நன்றாகத் தெளிந்திருந்தது. பக்கத்துப் படுக்கையைப் பார்த்தபோது, அது காலியாகக் கிடந்தது. இரவு முழுவதும் அவர் வரவேயில்லையா? கண்களைக் கசக்கி விட்டுக்கொண்டு எழுந்தபோதுதான் கவரில் தொங்கவிடப்பட்டிருந்த சோமநாதனின் சட்டை தெரிந்தது. ‘ஓ கோவிலுக்குப் போய்விட்டாரே’!
வழக்கமாய் அவள்தான் முன்னால் எழுந்து வாசலுக்குக் கோலமிட்டு, பற்றுப் பாத்திரங்களைத் தேய்த்து வைத்துவிட்டுத் தண்ணீருக்குப் போய்வருவது வழக்கம். அவள் வீட்டுக்குள் நுழைந்ததும் சோமநாதன் பிரசாதத் தட்டை நீட்டுவான். கணவனின் கையால் நெற்றிக் குங்குமத்துக்கு மேல் துளி திருநீற்றைப் பூசிக்கொண்ட பிறகுதான் அடுத்த காரியம். கடந்த ஏழெட்டு மாதங்களாய் நிகழ்கிற இந்த வாடிக்கையான வழக்கத்தில் இன்று மட்டும் ஏன் ஒரு மாறுதல்?
பரபரப்போடு முகத்தைக் கழுவிக்கொண்டவள், வாசலுக்கு நீர் தெளித்துக் கோலமிட்டுவிட்டு, பற்றுப் பாத்திரங்களைத் தேய்க்க ஆயத்தமானபோது சோமநாதன் இடுப்பில் ஈரத்துண்டோடு பட்டை பட்டையாய் விபூதியைப் பூசிக்கொண்டு உள்ளே நுழைந்தான். ஏனோ ஜானகி, மௌனமாய், ஒரு குற்ற உணர்ச்சியோடு நின்றாள்.
வழக்கம்போல திருநீற்றை அவள் நெற்றியில் பூசிவிட்டுச் சோமநாதன் கேட்டான்: “ஏன் நேற்று இரவு அத்தனை சீக்கிரம் வீட்டுக்கு வந்துவிட்டாய்?”
“தலை வலி”. அவளுக்குத் தடுமாறிற்று. கட்டியவனிடம் முதன்முதலாகப் பொய் பேசுகிற அந்த உணர்வு, நெஞ்சை உறுத்தியது.
“அடடா! இப்படிப்பட்ட பிரசங்கத்தை என் ஆயுளிலும் நான் கேட்டதில்லை. எவ்வளவு ஆவேசம்! எத்தனை பக்தி! வயசு ரொம்பக் குறைவுதான். ஆனால், ரொம்பவும் விசாலமான அறிவு. அவரைப் பார்த்தப்பிறகு உண்மையில் நமக்குத் தெய்வபக்தி பூரணமாக இருக்கிறதா என்ற சந்தேகமே வந்துவிட்டது எனக்கு”! என்றான் சோமநாதன் உணர்ச்சியோடு.
ஜானகிக்கு துணுக்கென்றது…’நீங்கள் நினைப்பதுபோல அவர் ஒன்றும் பெரிய விவேகானந்தர் அல்ல. பயங்கரமான நாஸ்திகர்’ என்று கூறவேண்டும்போல நாக்குத் துடித்தது.
“அவர் என்ன சொன்னார் தெரியுமா? காவியுடையணிந்து, கமண்டலத்தைக் கையிலேந்திக் கொண்டால்தான் துறவறம் என்றில்லை. உண்மையான பக்தியும் உணர்ச்சிப் பூர்வமான வழிபாடும் உள்ளத்திலிருந்தாலே அது துறவறம்தான் என்கிறார். கட்டிய மனைவியையும் தொட்டில் பிள்ளையையும் உதறிவிட்டுக் காட்டுக்கு ஓடிக் கடுந்தவம் புரிவதற்குப் பெயர், வாழ்க்கையில் ஏற்படும் விரக்திதான். எல்லாமிருக்க, எல்லாவற்றையும் அனுபவித்துக்கொண்டு அந்த அனுபவங்களிலெல்லாம் தெய்வத்தை நினைப்பதும், காண்பதும்தான் துறவறம் என்றார். எத்தனை ஆழமான வார்த்தைகள் பார்த்தாயா?”
’இல்லை, நிச்சயமாக இருக்க முடியாது. அத்தனை தூரம் நாஸ்திக வாதத்திலும் மன்மத லீலைகளிலும் ஊறிப்போயிருந்த அவனால் இத்தகைய உயர்ந்த வார்த்தைகளைக் கூறியிருக்கவே முடியாது. எல்லாம் வேஷம்’.
”இன்றைக்குக் காலையில் கோவிலில் பார்த்தேன். அவரோடு நிறையப் பேசவேண்டும்போல் மனம் அடித்தது. இன்றைக்குப் பகல் நம் வீட்டுக்கு விருந்துக்குக் கூப்பிட்டேன். முதலில் மறுத்துவிட்டார். ரொம்பவும் வற்புறுத்தியதன் பேரில் அரை மனதோடு ஒப்புக்கொண்டார். இப்படிப்பட்ட ஞானிகள் நம் வீட்டுக்கு வந்துபோவதே நம்முடைய பாக்கியம்தான். என்ன சொல்கிறாய் ஜானகி?” என்று ஆவலோடு கேட்டான் சோமநாதன்.
ஜானகிக்கு ஒரு நிமிடம் எதுவுமே பேசத்தோன்றவில்லை. தன் கணவரின் வெள்ளை உள்ளத்தை எண்ணிச் சிரிப்பதா, அவனுடைய கபட வேஷத்தைக் கண்டு அழுவதா? யார் தன்னைப் பார்த்துவிடக் கூடாதென்று அஞ்சி நடுங்கினாளோ அவனைத் தன் வீட்டுக்கே விருந்துக்கு அழைத்திருக்கிறான் தன் கணவன். இதன் விளைவு என்னவாகுமோ!
ஜானகிக்குத் தண்ணீர் தளும்பிக்கொண்டு வந்தது.
அதற்குப் பிறகு சமையல் காரியங்களிலும் சரி, கணவனின் கேள்விக்குப் பதிலளிக்கும்போதும் சரி, ஜானகிக்குத் தன் தடுமாற்றத்தைச் சமாளிக்க முடியவில்லை.
சோமநாதன் வியப்போடு கேட்டான். “ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய், ஜானகி?”
பழைய பதிலையே சொல்லிவைத்தாள். “தலைவலி”.
“அடடா! அடுத்த வீட்டு சங்கரிப் பாட்டியைத் துணைக்குக் கூப்பிட்டுக் கொள்ளக்கூடாதா?” என்று நெட்டுயிர்த்தான் சோமநாதன். அந்தச் சொற்களில் தொனித்த பரிவும் அன்பும் அவளை மேலும் வேதனைக்கு உள்ளாக்கின. ‘நம்மீது இத்தனை அன்பையும் அக்கறையையும் பொழியும் இவரிடம் அவன் ஏதேனும் கூறிவிட்டால்? நம்மைப் பழிவாங்கும் எண்ணத்தில் இல்லாததையெல்லாம் கூறிவிட்டால்?’
‘பகவானே’ என்று பெருமூச்செறிவதைத்தவிர ஜானகிக்கு வேறொன்றும் தோன்றவில்லை.
சுமார் பன்னிரண்டரை மணி இருக்கும். அடுக்களையில் கை வேலையாக இருந்த ஜானகிக்கு, உள்ளேயிருந்த வந்த கணவனின் வரவேற்புக் குரலும், உபசார வார்த்தைகளும், ‘அவன் வந்துவிட்டான்’ என்பதை உணர்த்தின.
“ஜானகி” – இதோ சோமநாதன் அவளைக் கூப்பிடுகிறான். என்ன செய்வது என்று கையும் காலும் நடுங்க, நெஞ்சம் படக் படக்கென்று அடித்துக்கொள்ள, அவள் அப்படியே நின்றாள்.
“ஜானகி” – இரண்டாவது அழைப்பு. அவளுக்கு வியர்த்துவிட்டது. இது தவிர்க்க முடியாத நிலை. எப்படித்தான் அவன் கண்களில் படாமல் இருக்க முயன்றாலும் இனியும் அது சாத்தியமாகப் போவதில்லை.
“ஜானகி” – மீண்டும் கூப்பிட்டான் சோமநாதன். இனி தாமதிக்கக் கூடாது. என்னவானாலும் சரி என்ற அசட்டுத் தைரியம் ஒன்றை வலிய வரவழைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள் அவள்.
“நேரமாகிவிட்டது, இலை போட்டுவிடு” என்றான் சோமநாதன். ஜானகி நிமிர்ந்து பார்த்தாள். கோரைப்பாயில் குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தான் அவன். எதிலோ தீவிரமான சிந்தனையைப் போன்ற ஓர் அசைவற்ற நிலை. ஒருவேளை, அவன் நடிக்கிற நாடகமா அது?
பரபரவென்று இலையைப் போட்டுத் தண்ணீர் மொண்டு வைத்தாள். இருவரும் சாப்பிட அமர்ந்தனர். சோமநாதன் அவனை விழுந்து விழுந்து உபசரித்தான். எல்லாவற்றுக்கும் ஒரு புன்னகைதான் பதில். சாந்தமே உருக்கொண்ட தோற்றத்தினனாய் வீற்றிருந்தான் அவன்.
அவனுடைய இலையில் சாதத்தை வைக்கிறபோது கை ஏனோ நடுங்கிற்று. குபீரென வியர்த்து, இலையில் இரு சொட்டுக்கள் விழுந்தன. அவன் பளிச்சென்று நிமிர்ந்தான். ஒருகணம் அவள் விழி பிதுங்க, எல்லை மீறிய கலவரத்தோடு ஒரு ஜடம்போல் மரத்து நின்றாள். அவனுடைய பார்வை இரண்டே விநாடிகள்தான். மீண்டும் குனிந்துகொண்டான்.
அடுப்பிலிருந்த வற்றல் குழம்பை எடுத்துவர ஜானகி உள்ளே சென்றபோது சோமநாதன் அவனிடம் கேட்டான். “இத்தனை இளம் வயதில் உங்களால் எப்படி இத்தனை தூரம் ஆத்மீக ஞானத்தைப் பயில முடிந்தது?”
வாசற்படியிலேயே நின்றுவிட்டாள் ஜானகி.
“அதுவா?” என்று நிதானமாகக் கேட்டுவிட்டு கணீரென்று பதில் சொன்னான் அவன். “அதற்குக் காரணம் ஒரு பெண்தான். என்னுடைய இந்த மாற்றத்துக் காரணமாக இருந்தவை அவளுடைய இரண்டே வார்த்தைகள்தான். உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். தெய்வம் என்று போற்றப்படுகிற விக்கிரகங்களை நான் என்றைக்குமே மதித்ததுமில்லை, மதிப்போம் என நினைத்ததுமில்லை. இல்லாத ஒன்றுக்குக் கடவுள் என்ற பெயரைச் சூட்டிக்கொண்டு, மனிதர்கள் மௌடீகத்தில் வீழ்வதாக நினைத்த பயங்கர நாஸ்திகன் நான். ஆனால், நான் ஒரு பெண்ணைக் காண நேர்ந்தது. அதற்குமுன்பு எத்தனையோ பேரைப் பார்த்திருக்கிறேன். பழகியிருக்கிறேன். ஆனால் அவர்களிடமெல்லாம் என்னால் காணமுடியாத ஒரு அற்புதமான களையும் அமைதியும் அவளிடம் தவழக்கண்டேன். அந்தக் களையைக் கவர்ச்சி என்றோ, அந்த அமைதியை அடக்கமென்றோ, அந்த முகத்தை அழகு என்றோ என்னால் பெயரிட முடியவில்லை. பின் என்ன? அது ஒரு தெய்வீகமான தேஜஸ். லட்சுமிகரமான ஒரு தோற்றம். இப்படித்தான் நினைத்தேன். இந்த இரண்டிலுமே அந்த ‘இல்லாத ஒன்று’ சம்பந்தப்பட்டிருப்பதை உணர்ந்தேன். மனிதர்களிடம் காணமுடியாத ஒரு பண்பையோ, செயலையோ நாம் தெய்வீகம் என்கிறோம். அப்படியானால் அது மனித சக்தியை மீறியது. மனிதத் தன்மையைக் கடந்தது. இல்லையா? அதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில்தான் நான் ரிஷிகேசம் புறப்பட்டேன். அங்கே நான் அதைக்காணவில்லை. அதனோடு கலந்துவிட்டேன். கடவுளை நினைப்பதும், கடவுளுக்காக நல்ல காரியங்களைச் செய்வதும் ஒவ்வொரு அணுவிலும் அவனைக் காண்பதும்தான் உலகத்திலேயே மிகவும் உயர்ந்த – இன்பகரமான லட்சியம் என்பதைக் கண்டுகொண்டேன். எனக்கு இந்த உண்மையைப் புரியவைத்த அவள் இன்றளவும் என் இதயத்தில் ஓர் உயர்ந்த பீடத்தில்தான் அமர்ந்திருக்கிறாள். அது சாதாரண மனிதர்கள் அமரக்கூடிய பீடமே அல்ல.”
உடல் புல்லரித்தது. உள்ளம் புளகித்து, கண்கள் பனித்தன. ஜானகியின் கூப்பிய கரங்களுக்கு முன்னால் அவன்தான் வீற்றிருந்தான். அந்தப் பீடம் சாதாரண மனிதர்கள் அமரக்கூடிய பீடமே அல்ல.
=========
COURTESY: NAGORE RUMI
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக