ஞாயிறு, 29 அக்டோபர், 2017

‘வாழ்க்கையில் கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ - ரஜினிகாந்த்

‘வாழ்க்கையில் கிடைக்கும் வாய்ப்பை
சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ 
‘வாழ்க்கையில் கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’
ரஜினிகாந்த் பேச்சு
அக்டோபர் 29, 2017, 
துபாயில் 2.0 சினிமா பாடல்கள் வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “நமது வாழ்க்கையில் கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
துபாய், 

ஹாலிவுட் படங்களுக்கு இணையாக பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள தமிழ் படம் ‘2.0’. ஷங்கர் இயக்கி உள்ள இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த், நடிகை எமி ஜாக்சன் ஜோடியாக நடித்துள்ளனர். இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாக வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.

தமிழ்பட உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து இருக்கிறது. 3டி தொழில்நுட்பத்தில் 2.0 தயாராகி உள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் உள்பட 15 மொழிகளில் வருகிற ஜனவரி மாதம் 25-ந் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.

பாடல்கள் வெளியீட்டு விழா

‘2.0’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா துபாயில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இந்த பிரமாண்ட விழா துபாயில் டவுன் டவுன் பகுதியில் உள்ள புர்ஜ் பார்க் வளாகத்தில் நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்துகொண்டனர். திரை உலக பிரமுகர்கள் பலரும் நிகழ்ச்சியை காண வந்திருந்தனர்.

விழா நிகழ்ச்சியை நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தமிழிலும், நடிகர் ராணா தெலுங்கு, ஆங்கிலத்திலும், நடிகர் கரன் ஜோகர் இந்தியிலும் தொகுத்து வழங்கினார்கள்.

நடிகர் ரஜினிகாந்த், நடிகை எமி ஜாக்சன், இந்தி நடிகர் அக்‌ஷய் குமார், இயக்குனர் ஷங்கர், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், பட அதிபர் சுபாஸ்கரன் ஆகியோர் மேடைக்கு முன்புறம் பார்வையாளர் வரிசையில் வந்து அமர்ந்தபோது ரசிகர்கள் பலத்த கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்.

2.0 படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் 3 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் 2 பாடல்கள் விழாவில் வெளியிடப்பட்டன. மற்றொரு பாடல் விரைவில் வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. முதல் பாடலான ‘இந்திர லோகத்து சுந்தரி’ என தொடங்கும் பாடலுக்கு நடிகை எமி ஜாக்சன் நடன கலைஞர்களுடன் இணைந்து நடனம் ஆடினார்.

ரஜினிகாந்த் பேச்சு

விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-

நான் பல்வேறு வெளிநாடுகளுக்கு செல்லும்போது துபாய் விமான நிலையம் வழியாகத்தான் சென்றுள்ளேன். ஆனால் துபாய்க்கு வந்ததில்லை. இப்போது தான் துபாய்க்கு முதன் முறையாக வந்து இருக்கிறேன். மத்திய கிழக்கு நாடுகளிலேயே துபாய் நகரம் அமெரிக்காவை போன்று உள்ளது.

2.0 திரைப்படம் அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவரும். நல்ல படங்களை மக்கள் ஆதரிக்க வேண்டும். இந்த படம் ஹாலிவுட் தரத்துக்கு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பெருமையை நானே சொல்லக்கூடாது. மக்கள் பார்த்து விட்டு சொல்வார்கள். நல்ல படங்களை மக்கள் ஆதரிக்க வேண்டும்.

40 வருட சினிமா வாழ்க்கை

உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. இதில் பணம், புகழ் நமக்கு நிம்மதியை தரும் என்று சொல்ல முடியாது. புகழ், பணம் இருந்தாலும் கூட நிம்மதி இருக்காது, நிம்மதி இருக்கும்போது பணம் இருக்காது என்று நான் என்னுடைய 40 வருட சினிமா வாழ்க்கையில் கற்றுக்கொண்டேன். ஆனால் இப்போதுள்ள இளைய சமுதாயத்தினர் நிறையவே மாறிவிட்டனர். அவர்கள் நமது பாரம்பரியம், கலாசாரம் உள்ளிட்டவற்றை கடைப்பிடிக்க வேண்டும். ஆண்டவனின் அனுகிரகமும், மக்களின் அன்பும் என்னை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது.

இளைஞர்கள் தாய்நாடு மற்றும் தாய் மொழியை அதிகமாக நேசிக்கிறார்கள். இதை வரவேற்கிறேன். ஆனால் சிலர் கலாசார வழக்கங்களை மறந்து வருகின்றனர். பணம், பெயர், புகழ் எல்லாமே மற்றவர்கள் பார்ப்பதற்குத்தான் நன்றாக இருக்கும், ஓரளவு தான் மகிழ்ச்சியை கொடுக்கும். ஆரம்பத்தில் இவை சந்தோஷத்தை கொடுக்கும். ஆண்டவன் மேல் நம்பிக்கை இருப்பதால் ரஜினிகாந்த் ஆக இருப்பது சந்தோஷத்தை கொடுக்கிறது. இல்லாவிட்டால் ரொம்ப கஷ்டத்தை கொடுத்திருக்கும்.

இஸ்லாமியர்களின் பங்கு

இஸ்லாமிய சகோதரர்களுக்கும், எனக்கும் ஒரு பந்தம் உள்ளது. எனது வளர்ச்சி, உயர்வில் இஸ்லாமிய சகோதரர்களும் பெரும் பங்கு வகித்துள்ளனர். நான் கண்டக்டராக இருக்கும் போது எனக்கு பல உதவிகளை செய்தவர்கள் என் இஸ்லாமிய நண்பர்கள் தான். சென்னையில் நடிக்க வந்த போது, முதன் முதலாக நண்பர் ஒருவர் வீட்டில் தான் தங்கி இருந்தேன். அந்த வீட்டின் உரிமையாளர் இஸ்லாமியர்.

மேலும் சினிமாவில் பெயர், பணம், புகழ் வந்த பிறகு, தற்பொழுது நான் இருக்கும் போயஸ் கார்டன் வீட்டை எனக்கு விற்றவரும் ஒரு இஸ்லாமியர் தான். ராகவேந்திரா மண்டபத்தின் இடத்தை எனக்கு விற்றவரும் ஒரு இஸ்லாமியர் தான். அனைத்துக்கும் மேல் என் குரு ராகவேந்திரா சுவாமி கோவில் அமைய மந்த்ராலயாவில் இடம் கொடுத்தவரும் ஒரு நவாப் தான். அதற்கும் மேலாக நான் நடித்த படங்களிலேயே ஒரு படத்தின் பெயரை சொன்னால் அதிரும் என்றால் அது பாட்ஷா படம் தான். அதுவும் ஒரு இஸ்லாமியர் பெயர் தான். இப்படி பல வகைகளில் இஸ்லாம் என் வாழ்க்கையில் உள்ளது. இதை நான் குறிப்பிட்டு செய்யவில்லை. தானாக அதுவாகவே நிகழ்ந்ததாகும்.

கிடைக்கும் வாய்ப்பு

நமது வாழ்க்கையில் ஒரு வாய்ப்பு கிடைப்பதென்பது மிகவும் கஷ்டம். அந்த வாய்ப்பு கிடைக்கும் போது அதை சரியாக பயன்படுத்த வேண்டும். அதை சரியாக பயன்படுத்தவில்லை என்றால் நம்மை போல் முட்டாள் யாரும் இல்லை. ஒருவர், பெயர் புகழுடன் இருக்கிறார் என்றால் அது திறமையாலோ, கடின உழைப்பாலோ, மட்டும் அல்ல. அவருக்கு கிடைத்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்தி கொண்டார் என்பதால் தான். வாய்ப்புகள் சிலருக்கு தானாக வரும் அது ஆண்டவன் அருள். அப்படி வரவில்லை என்றால் நாம் தான் அந்த வாய்ப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும்.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

தொடர்ச்சி அல்ல

இயக்குனர் ஷங்கர் பேசும்போது, “ரஜினிகாந்த் சாரிடம் நான் எதாவது படத்தின் கதையை சொன்னால் இதை இப்படி செய்தால் நன்றாக இருக்கும் என எனக்கு அறிவுரை கூறுவார். அதை கேட்டு நானும் அந்த காட்சியை மெருகேற்றிக்கொள்வேன். மேலும் 2.0 படம் எந்திரன் படத்தின் தொடர்ச்சியாக உருவானது அல்ல. இது முழுக்க முழுக்க சமூக கருத்துடன் புதிய திரைக்கதையாக உருவாகியுள்ளது” என்று குறிப்பிட்டார். 

கருத்துகள் இல்லை:

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...