வியாழன், 19 அக்டோபர், 2017

வாழ்வை மாற்றிய புத்தகம்

வாழ்வை மாற்றிய புத்தகம்


``மிகச் சிறந்ததை மட்டுமே தேடிப் பெறு.

உன்னிடத்திலும் நீ செய்யும் செயல்களிலும் நம்பிக்கை கொள்.

உன் இலக்குகளை அடையும் ஆற்றலை வளர்த்துக் கொள்.

கவலைப்படுகிற வழக்கத்தைக் கைவிட்டு, அமைதிக்குப் பழகு.

தனிப்பட்ட வாழ்விலும் மற்றும் தொழில்ரீதியிலும் உறவுகளை மேம்படுத்திக்கொள்.

சூழல்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உனக்குண்டு என நினைத்துக்கொள்.

உன்னிடத்தில் இரக்கம்கொள்.


இப்படி, இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு பத்தியும் பாசிட்டிவிட்டி பேசும். `அடிப்படையில் ரொம்பவே நெகட்டிவிட்டி உள்ள ஒரு மனுஷி நீ. அது தவறு, மாற்றிக்கொள்!’ என எத்தனையோ பேர் எனக்கு அட்வைஸ் செய்தும், என்னால் அந்தக் குணத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லை. இன்று வரையிலும் நான் அப்படித்தான் என நம்பிக்கொண்டிருக்கிறேன்.
ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் என் தோழி `தி பவர் ஆஃப் பாசிட்டிவ் திங்க்கிங்’ புத்தகத்தை எனக்கு வாசிக்கக்கொடுத்தார். முழுவதும் படித்த பிறகும் நான் நெகட்டிவிட்டியிலிருந்து வெளியே வந்ததாக எனக்குத் தோன்றவில்லை. ஆனாலும், நான் 100 சதவிகித பாசிட்டிவ் மனுஷிதான் என்பதை, என் வாழ்வின் பல தருணங்களும் நிகழ்வுகளும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. `வெற்றிகரமான நபராக உன்னை நீயே கற்பனை செய்து பார். அந்த வெற்றி என்பது பொருளாதார ரீதியிலோ, அந்தஸ்திலோதான் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. நீ செய்யும் வேலையில் உனக்கு திருப்தியும் மனநிறைவும் கிடைத்தாலே நீ வெற்றி பெற்றுவிட்டதாகவே அர்த்தம்' என்பார் இந்நூலாசிரியர்.  இதேதான் என் வாழ்க்கை.  நமக்குப் பிடித்து ஒரு வேலையைச் செய்யப் பழகினோமானால் ஆத்மார்த்தமாக அதனுள் நுழைவோம். அது ஒருவித லயிப்பு. அப்படி என் வேலையைத் தொடங்கும்போதே அது எனக்குப் பிடித்துவிடுகிறது.

சினிமாவில் நடிப்பதற்கான கேரக்டர்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருக்கிறேன். படத்துக்குப் படம் 100 சதவிகித உழைப்பைத் தர முனைகிறேன். ஒவ்வொரு படமும் எனக்கு வெற்றிப் படம் என நம்புகிறேன். தேசிய விருதை என் கைகளில் சேர்த்தது முதல் நடிகையாக எனக்குக் கிடைத்திருக்கும் இந்த அந்தஸ்து வரை அனைத்துக்கும் காரணம், என் ஆழ்மனதில் பதிந்த பாசிட்டிவிட்டிதான். எல்லாருக்குமே பிடித்தது வாய்க்குமா என்பது சந்தேகம்.  பிடிக்காதவை வரும்போது அவற்றைக் கையாளும் உத்தியையும் இந்தப் புத்தகம் எனக்குக் கற்றுக்கொடுத்தது.
என் ஃபேஷன் இன்ஸ்டிட்யூட் மாணவிகளோ, வேறு யாரோ என்னிடம் ஏதேனும் குறைகளுடன் பேசும்போது அதே விஷயத்தை பாசிட்டிவாக அணுக கவுன்சலிங் தருகிறேன். `உனக்கொரு குறை வந்தால், அதைக் குறையாகப் பார்க்காதே... அந்தக் குறையுடன் கூடவே அதற்கான நிவர்த்தியையும் கடவுள் கொடுப்பார். நீ ஓர் உதாரணமாக நின்று யாரிடமோ பேச உன்னைத் தயார் படுத்துகிறார் என எடுத்துக் கொள். நீ ஒரு பாசிட்டிவ் உதாரணமாகப் படைக்கப்பட்ட நபர் என நினைத்துக்கொள்’ என்று சொல்வேன். இதைச் சொல்லும்போது அவர்கள் மெள்ள மெள்ள பாசிட்டி விட்டிக்குள் திரும்புவதையும் பார்க்கிறேன்.

`ஹேப்பினெஸ் ஹேபிட்’ என ஒரு டெக்னிக் பற்றியும் இந்தப் புத்தகத்தில் சொல்கிறார் ஆசிரியர். அதாவது சந்தோஷ மான தருணங்களைப் பற்றி அசைபோடுகிற பழக்கத்தை வளர்த்துக்கொள்வது. தினமும் காலையில் நம் வாழ்க்கையில் மகிழ்ச்சியளித்த தருணங்கள், நிகழ்வுகள், நபர்களைப் பற்றி நினைத்துப்பார்ப்பதே அன்றைய பொழுதை அழகாக்கும் என்கிறார்.

என்னுடைய இதயம் கவர்ந்த ஹீரோ என்றால், நடிகர் வடிவேல். `ஐம் இன் லவ் வித் ஹிம்’ என்பேன். என்னைச் சிரிக்க வைக்கிறவர்களை எனக்கு ரொம்பவே பிடிக்கிறது. ஒவ்வொரு நாள் இரவும் தூங்கச்செல்வதற்கு முன் எங்கள் வீட்டில் நானும் என் மகள்களும் பேசிச் சிரிக்கிற சத்தம் எங்கள் தெருவையே அதிரச் செய்யும். அன்றைய நாள் நடந்த நல்ல விஷயங்களைப் பேசிச் சிரிப்போம். அது நல்ல உறக்கத்தையும் கனவுகளையும் தரும். வடிவேல் காமெடியை ரசித்து ரசித்துச் சிரிப்போம். இந்த `ஹேப்பினெஸ் ஹேபிட்'டை தினசரி வாழ்வின் பல விஷயங்களிலும் பின்பற்றுவேன். காலையில் என் இன்ஸ்டிட்யூட் ஆரம்பிக்கும்முன்  `குட் மார்னிங் லேடீஸ்’ எனச் சொல்லிக் கைதட்டுவேன். பல மைல் தூரம் பயணம் செய்து வகுப்புக்கு வரும் பெண்களின் களைப்பெல்லாம் சட்டென மாறும். `எவ்வளவு சத்தமாகக் கை தட்டுகிறீர்களோ, அந்த அளவுக்கு ஆயுள் கூடும்’ என்பேன். அந்தக் கைதட்டலில் எங்கள் ஏரியாவே அதிரும். இவையெல்லாமே பாசிட்டிவிட்டியின் அறிகுறிகள்தாம். யார் அதிக சத்தமாகக் கைதட்டுகிறார் என்பது, எங்கள் வகுப்பின் க்ளாப் சேலன்ஜ்.
`இது நடக்குமா, இதில் நான் வெற்றி பெறுவேனா என்ற சந்தேகங்களுக்கு இடமளிக்காமல், எந்த ஒரு விஷயத்தையும் நூறு சதவிகித நம்பிக்கையுடன் நோக்க வேண்டும்' என்றும் கற்றுக்கொடுக்கிறது இந்தப் புத்தகம். `நினைக்கிற விஷயம் நடக்கும் என்பதற்கு உங்கள் ஆழ்மனத்தைத் தயார்படுத்துங்கள். அதுவே அந்தக் காரியத்தை நிகழ்த்திக்கொடுக்கும்’ என்கிறார்  புத்தக ஆசிரியர்.

என் வாழ்வின் சமீபத்திய நிகழ்வொன்று இதை உறுதிப் படுத்தியது. நயன்தாராவுடன் ஒரு படத்தில் நடிக்கிறேன். அவர் எனக்கு அதற்குமுன் அறிமுகமில்லை. இரண்டாவது நாள்தான் நாங்கள் முதன்முறையாகப் பேசிக் கொண்டோம். அந்த அறிமுகத்தில் என் மகளின் காலேஜ் அட்மிஷன் பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் விஷயத்தை அவரிடம் சொன்னேன். `நிச்சயமா கிடைச்சுடும் மேடம்.  நீங்க வேணா பாருங்க... அடுத்த முறை நாம மீட் பண்ணும்போது `காலேஜ் அட்மிஷன் கிடைச்சிருச்சு’னு சொல்வீங்க’ என்றார். ஏன் சொன்னார் என்றெல்லாம் யோசிக்கவில்லை. அவர் சொன்னதுபோலவே அடுத்த சந்திப்பில் என் மகளுக்கு காலேஜ் அட்மிஷன் கிடைத்த விஷயத்தை அவரிடம் சந்தோஷமாகச் சொன்னேன். `எந்த நேரத்துல அப்படிச் சொன்னீங்கன்னு தெரியலை. அப்படியே நடந்திருச்சு’ என நான் சொன்னபோது, `பாசிட்டிவா பேசறதும் இருக்கிறதும் எனக்கு ரொம்பப் பிடிக்கும் மேடம்... பாசிட்டிவிட்டிதானே லைஃப்’ எனச் சிரித்தார் நயன்தாரா. அவருக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் அது பொருந்தும்.

நான்தான் என்னை நெகட்டிவ் திங்க்கர் எனச் சொல்லிக் கொள்கிறேன். ஆனால், என்னுடன் பழகும் பலரும் நான் பாசிட்டிவிட்டியைப் பரப்புவதாகவே சொல்கிறார்கள். அதைச் சாத்தியப்படுத்தியது இந்தப் புத்தகம்தான் என்றே நம்புகிறேன்.’’

கருத்துகள் இல்லை:

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...