ஞாயிறு, 22 அக்டோபர், 2017

முடிவைப் பற்றிய சிந்தனை

முடிவைப் பற்றிய சிந்தனை மௌலவி எஸ். அப்துல் வஹாப் பாகவி
நீங்கள் மேற்கொண்டிருக்கும் காரியத்தின் முடிவு எப்படி இருக்கும்?
இறைவழியில் நீங்கள் ஆழ்ந்து செல்ல முடியாமல் தடை செய்கிற பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. 
தான் மேற்கொண்டிருக்கும் காரியத்தின் முடிவு நிச்சயமாக நல்லதுதான் என்று தோன்றும்போது மட்டுமே மனிதனுக்குத் தான் செய்யும் காரியத்தில் ஆர்வமும் ஊக்கமும் ஏற்படுகின்றன. காரியத்தின் முடிவைப் பற்றிக் குழப்பமும் அவநம்பிக்கையும் தோன்றும்போது, மேற்கொள்ளப்பட்டிருக்கும் காரியத்திற்கு அவை நிச்சயமாகத் தீங்கு செய்யும் என்பது எல்லாரும் உணர்ந்த ஒன்று.
இறைவழியில் ஈடுபடத் துடிக்கும் உங்களுக்கு, இந்தக் காரியம் முடிவில் நல்லதாக இருக்குமா? என்று குழப்பம் தோன்றினால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? 
அப்படித்தான் இருக்கும், இப்படித்தான் இருக்கும் என்று உங்களுக்கு நீங்களே சமாதானம் செய்து கொள்வதில் பயனில்லை. ஏனெனில் சில வேளைகளில் உண்மைக்கும் அனுமானத்துக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதில்லை.
அப்படியானால் வேறு என்னதான் செய்வது? – அதைத்தான் நாம் ஆராய வேண்டும்.
இறுதி நிலை பற்றிய சிந்தனையைக் கட்டோடு இறைவனிடம் விட்டுவிடுங்கள். உங்கள் சிந்தனைக்கு இங்கு சிறிதும் இடம் கொடுக்காதீர்கள். ஒரு காரியத்தின் இறுதிநிலையைத் தீர்மானிப்பவன் இறைவன். எனவே அதனை அவனிடமே விட்டுவிடுவதைவிடச் சிறந்த காரியம் வேறில்லை.
ஒரு காரியத்தின் முடிவைப்பற்றிய சிந்தனையை இறைவனிடம் ஒப்படைப்பதால் இரண்டு நன்மைகள் ஏற்படுகின்றன.
முதல் நன்மை : நீங்கள் மேற்கொண்டிருக்கும் காரியத்தின் முடிவு குழப்பமானதாகவும் பயனற்றதாகவும் தோன்றுகிறதா? முடிவில் நன்மை ஏற்படுமா – தீமை விளையுமா என்று உங்களுக்குத் தெரியவில்லையா?
இந்த நிலையில் உங்கள் மனம் எப்போதும் அலைமோதிக் கொண்டிருக்கும். குழப்பம், பயம், அதிருப்தி, கவனச் சிதறல் முதலிய துன்பங்களுக்குப் பலியாகித் துடிக்க வேண்டிய நிலைமை உங்களுக்கு ஏற்படும். 
இது நீங்கள் மேற்கொண்டிருக்கும் காரியத்துக்குப் பெரும் இடையூறு என்று உங்களுக்குத் தெரியும். முடிவைப் பற்றிய பிரச்சினையை நீங்கள் இறைவனிடம் விட்டுவிட்டால், உடனுக்குடன் உங்களுக்கு மன அமைதி ஏற்படும். ஆத்மிகத் துறையில் ஈடுபடுகிறவர்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகளில் இதுவும் ஒன்று.
அமைதியற்ற இதயத்தைத் துணைகொண்டு இறைவனை நெருங்கவே முடியாது. நீங்கள் மேற்கொண்டிருக்கும் செயலையும் அதற்குரிய பயனையும் இறைவனின் பொறுப்பில் விடும்போது, உங்களுக்கு நல்லதைத் தவிர்த்து வேறு எதுவும் ஏற்படாது என்று தெளிவாகத் தெரிந்துவிடும்.
எனவே உங்களுக்கு அமைதியும் பாதுகாப்பு உணர்வும் தாமாகவே ஏற்படுகின்றன. இவை மகத்தான பேறுகள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
எமது ஞானாசிரியர் ஒருவர் தமது சபைகளில் கீழ்க்காணூம் வாசகத்தை அதிகமாகக் கூறுவதுண்டு: 

‘வழிவகைகள் கண்டுபிடிப்பதை விட்டுவிடுங்கள். உங்களைப் படைத்தவனிடம் பொறுப்பை விட்டுவிடுங்கள். உங்களுக்கு அமைதி ஏற்படும்!’

இரண்டாம் நன்மை : ஒரு காரியத்தை இறைவனிடம் ஒப்படைக்கும்போது அந்தக் காரியத்தின் முடிவு வரவேற்கத்தக்கதாக அமையும்.
ஒரு காரியம் நல்லதா கெட்டதா என்பதை அதன் முடிவை வைத்தே தீர்மானிக்க வேண்டும். ஆனால் எல்லாக் காரியங்களும் முடிவைப் பொறுத்தவரையில் குழப்பமானவைதான். 
நல்லவை போல் தோன்றுகிற எத்தனையோ காரியங்கள் தீய முடிவைக் கொடுக்கின்றன. அருமையான நல்ல முடிவுகள் பல, தீயவைபோல் தோன்றிய செயல்களிலிருந்து தோன்றியிருக்கின்றன. முடிவு எப்படியாகும் என்று உங்களுக்கு அறவே தெரியாது.
காரியத்தின் முடிவை எப்படியாவது நல்லதாக்கிவிட வேண்டும் எனும் எண்ணத்தில் நீங்கள் எவ்வளவு முயன்றாலும், இறுதி விளைவைப் பற்றித் தீர்க்கமாக எதுவும் கூற முடியாது. உங்களுக்கே தெரியாமல் தீங்கு ஏற்பட்டுவிட முடியும்.
இறுதி நிலையைப் பற்றி உங்களுக்கு நீங்களே தீர்மானம் செய்து கொள்வது, ஆசைக்கு அடிமைப்படுவது முதலான குணங்கள் ஆத்மிகத்துக்கு மகத்தான இடையூறுகளாகும்!
எனவே, எடுத்துக் கொண்ட காரியத்தில் அக்கறையோடு நிற்கும் நீங்கள் அதன் முடிவை இறைவனிட்ம் விட்டுவிட்டால் உங்களுக்கு எது நல்லதோ அதைக் கொடுத்தருளுமாறு அவனிடம் பிரார்த்தனை செய்தால் – இறுதியில் நல்லதைத் தவிர்த்து வேறு எதையும் நீங்கள் சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படாது.
‘காரியத்தின் முடிவை இறைவனின் பொறுப்பில் விட்டுவிட வேண்டும் என்று கூறுகிறீர்களே, எல்லாக் காரியங்களையும் இறைவனிடம் விட்டுவிட வேண்டுமா?’ என்று நீங்கள் கேட்கலாம்.
அப்படியில்லை. சில காரியங்களின் முடிவுகள் தீர்க்கமானவை. அந்தக் காரியங்களினால் நன்மை ஏற்பட முடியாது என்று உங்களுக்கு நிச்சமாகத் தெரியும். இவற்றில் நீங்கள் ஈடுபடவே கூடாது. 
எனவே விளைவைப் பற்றிய பிரச்சினையை இங்கு இறைவனிடம் ஒப்படைக்க முடியாது. இறைவன் தடை விதித்திருக்கிற காரியங்கள் அனைத்தும் இந்தப் பிரிவைச் சேருகின்றன.
வேறு சில காரியங்கள் நல்ல முடிவைக் கொடுக்கக் கூடியவை. இவை நிச்சயமாகத் தீயவிளைவுகளை உருவாக்க முடியாது. இறைவனின் கட்டளையிட்டிருக்கிற காரியங்கள் அனைத்தும் இந்தப் பிரிவைச் சேருகின்றன. 
எனவே இவற்றையும் இறைவனிடம் ஒப்படைக்க முடியாது. ஒவ்வொரு மனிதனும் தான் செய்த செயல்களுக்குரிய நற்பயன்களை அனுபவித்துக் கொள்ளலாம்.
மற்றும் சில காரியங்கள் முடிவைப் பொறுத்தவரையில் குழப்பமானவை. அவற்றினால் நன்மை ஏற்படுமா, தீமை ஏற்படுமா என்று உறுதியாகக் கூற முடியாது. 
‘நப்ஸ்’ என்று குறிப்பிடப்படும் செயல்கள் இந்தப் பிரிவுக்கு வருகின்றன. இவை நல்ல விளைவுகளைக் குறியாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டாலும், சில வேலைகளில் இவை வரவேற்க முடியாத விளைவுகளைத் தோற்றுவித்து விடக்கூடும்.
– இந்தப் பிரச்சினைகளைத்தான் நீங்கள் இறைவனின் பொறுப்பில் விட வேண்டும். இறுதிப் பயனை இறைவனிடம் விட்டுவிட்டுப் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும்.
‘காரியத்தின் முடிவை இறைவனிடம் ஒப்படைப்பது என்றால் என்ன பொருள்?’ என்று கேட்கிறீர்களா? 
குழப்பமும் தீயவிளைவும் ஏற்படலாம் என்று தோன்றுகிற காரியத்தில் இறைவன் உங்களுக்கு நல்ல விளைவைத் தோற்றுவித்துத் தரவேண்டும் என்று நீங்கள் எண்ணினால், உங்கள் காரியத்தை இறைவனிடம் ஒப்படைக்கிறீர்கள் என்று பொருள். 
இப்படி இறைவனிடம் ஒப்படைக்கும் மனப்பக்குவம் எல்லாருக்கும் எளிதில் ஏற்பட்டுவிடும் என்று நான் கூறவில்லை. இது சிரமமானதொரு குறிக்கோள்தான்.எனினும் நீங்கள் அக்கறை எடுத்து முயற்சி செய்தால் இந்த மனப்பக்குவத்தை நீங்கள் உண்டாக்கிக் கொள்ளலாம்.
எல்லாக் காரியமும் குறுக்கீடுகளுக்கும் ஆபத்துகளுக்கும் இலக்கானதுதான் என்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் மேற்கொள்ளும் காரியம் பயனற்றுப் போவதும் தீய பலனைக் கொடுப்பதும் சாத்தியம்தான் என்பதை எண்ணிப் பாருங்கள். 
இப்பட்பட்ட இடையூறுகளிலிருந்து தற்காத்துக் கொள்ளும் தகுதியும் வலிமையும் உங்களுக்குக் கிடையாது என்பதை உணர்ந்து பாருங்கள். உங்கள் பலவீனத்தினால், அறியாமையினால், கவனக்குறைவினால் எந்தத் தீமையும் ஏற்படலாம் என்பதை நினைத்துப் பாருங்கள். இந்த வழியில் நீங்கள் தொடர்ந்து சிந்தனை செய்தால், அனைத்தையும் இறைவனிடம் ஒப்படைக்கும் மனப்பக்குவம் உங்களுக்கு விரைவில் ஏற்பட்டுவிடும்.
‘ஒருவன் தான் மேற்கொள்ளும் காரியத்தின் இறுதி விளைவை இறைவனிடம் ஒப்படைத்துவிட்டான் என்று வைத்துக் கொள்வோம். எல்லாவிதமான விபரீதங்களிலிருதும் அவனுக்குப் பாதுகாப்புக் கிடைக்குமா?’ என்று நீங்கள் கேட்கலாம்.
உலகம் என்பது எல்லாவிதமான துன்பங்களுக்கும் சிரமங்களுக்கும் நிலைக்களனான ஒன்று என்பது உண்மை. இங்கே ஒரு செயல் எந்த விளைவையும் தோற்றுவிக்கலாம். 
ஆனால் பெரும்பான்மையாக நடக்கும் காரியங்களை வைத்து நம்மால் ஒரு முடிவுக்கு வர முடியும். ஒரு மனிதன் தன் காரியங்களை இறைவனிடம் ஒப்படைக்கும்போது அவனுக்கு அனேகமாக நன்மைதான் ஏற்படுகிறது. ஒரு சில வேளைகளில் தீமை ஏற்படுவதுண்டு என்பதும் உண்மைதான். 
இப்படித் தீமை ஏற்படுவது ஒரு சில வேளைகளில்தான் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
நன்றி: ஆபிதீன் பக்கங்கள்
நன்றி : அஃப்சரா பதிப்பகம்.

கருத்துகள் இல்லை:

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...