திங்கள், 17 ஜனவரி, 2011

முஸ்லிம்கள் பற்றி செய்தி வெளியிடுவதில் ஊடகங்களின் பொறுப்பின்மை

திருக்குரானின் அடிப்படையிலும், நபிகள் நாயகத்தின் போதனைகளை வைத்தும் 'இஸ்லாம் தீவிரவாதத்தை என்றும் அனுமதிப்பதில்லை' என்று பல அறிஞர்கள் தொடர்ந்து எடுத்துக் கூறி வருகிறார்கள்.

அப்படி இருந்தாலும், தீவிரவாதம் பற்றிய செய்திகள் வரும்போது முஸ்லிம்கள் பெயர் மட்டும் ஹைலைட் செய்யப்படுவது வழக்கமாகி விட்டது. இவ்வாறான செய்திகள் ஊடகங்களில் வெளிவருவதால், உளவியல் ரீதியாக முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் ஒரு விதமான மன அழுத்தம் ஏற்படுகிறது. எனவே, இது ஒரு பொதுவான சமூகப் பிரச்சினை என்று கருதப்பட வேண்டும்! இளம் மனங்களில் சந்தேகமும், குழப்பமும் இருந்தால், அது அவர்களது முன்னேற்றத்தை பெருமளவு பாதிக்கும்.


ஊடக நண்பர்கள் ஒரு கருத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் அல்லாத பல இயக்கங்கள் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுகின்றன. அவ்வாறான சக்திகள் தீவிரவாத செயல்களில் ஈடுபடும்போது, அந்தந்த அமைப்புகள் பெயரில்தானே செய்திகள் வெளியிடப்படுகின்றன? அப்போதெல்லாம், செய்திகளில் அந்த இயக்கங்களின் பெயர்கள் வெளி வருமே அன்றி அவர்கள் சார்ந்த மதம் பற்றி குறிப்பிடப்படுவதில்லை. நம் நாட்டில் காஷ்மீரில் மட்டுமா தீவிரவாதம் இருக்கிறது? அஸ்ஸாமிலும், மேகாலயாவிலும், நாகாலாந்திலும், பீஹாரிலும், ஆந்திராவிலும், மேற்கு வங்கத்திலும் ஏராளமான தீவிரவாத சக்திகள் செயல்படுவதை செய்திகளில் பார்க்கிறோம். திரும்ப திரும்ப இந்த மாதிரியான தவறான செய்திகள் வரும்போது, சாதாரண மக்களும் முஸ்லிம்களைப் பற்றி சந்தேகம் கொள்வது இயற்கையாக நிகழ்கிறது. இது ஒரு ஜனநாயக நாட்டில் நடக்கலாமா? யோசித்துப் பாருங்கள்!

இன்னொரு விஷயத்தை கவனிக்க வேண்டும். தீவிரவாத நாச வேலைகளால் பாதிப்புகள் ஏற்படும்போது எல்லா மதத்தினரும் துன்பப்படுகிறார்கள். உதாரணமாக, காஷ்மீரில் தாக்குதல் நடந்தபோது அங்கே பெரும்பான்மையாக பாதிக்கப்பட்டவர்கள் அங்கே வாழும் முஸ்லிம்கள்தான்.

பாகிஸ்தானுக்கு செல்லும் ரயிலில் குண்டு வைத்தபோதும், ஐதராபாத் பள்ளி வாசலில் குண்டு வைத்தபோதும் அதிக அளவில் இறந்தவர்கள் முஸ்லிம்கள்தானே? எனவே, தீவிரவாதத்தை எதிர்க்கும் அவசியம் முஸ்லிம்களுக்கு பெருமளவு இருக்கிறது. தீவிரவாதம் முஸ்லிம்களுக்கும் ஒரு பெரிய பிரச்சினைதான், மற்றவர்களுக்கு மட்டுமல்ல - என்பதை அனைவரும் உணர வேண்டும்!

அடிப்படையாக நோக்கினால் ஒன்று தெளிவாகப் புரியும் - சிந்தனைகளில் கோளாறு ஏற்படும் நேரங்களில் மனிதன் தீவிரவாதியாக மாறுகிறான். இதில் மதம் பற்றி பேசுவது சற்றும் சரியாக இருக்காது. எந்த மதமும் அந்த மாதிரி மனிதர்களை நியாயப்படுத்துவதில்லை. எனவே தீவிரவாதம் பற்றி கருத்துக்கள் கூறும்போது ஒரு மதத்தைப் பற்றி அவதூறாகப் பேசுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.

"பொறாமை, துவேஷம், வெறுப்பு ஆகியவற்றை இதயத்திலிருந்து அகற்றி அதைத் தூய்மைப்படுத்த வேண்டும். குறிப்பாக ஏழைகள், தேவையுள்ளோர், அனாதைகள் ஆகியோர் மீது கருணை காட்டி அவர்களின் மனதில் மகிழ்ச்சியும் குதூகலமும் நிலவச் செய்ய வேண்டும்" என்று நம்புகிற முஸ்லிம் நல்உள்ளங்களை புண்படுத்தும் செயல் அறவே கைவிடப்பட வேண்டும்!

- தஞ்சை வெங்கட்ராஜ் ( thanjaivenkatraj@gmail)

நன்றி: கீற்று.காம்

அறிந்து கொள்வோம் இவரை: தமிழிசை ஆய்வாளர் நா. மம்மது

மிழிசைக்கு முதன்முதலாக அகராதி எழுதிய மதுரை இசை ஆய்வாளர் நா.மம்மது, தமிழக அரசின் பாரதியார் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழிசை அகராதி என்ற இந்நூலில் 5000 இசைச் சொற்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நூல் இசையாசிரியர்கள், மாணவர்கள், ஆர்வலர்களுக்கு பெரும் வரப்பிரசாதம்.

நூலாசிரியர் நா.மம்மது, ஏற்கனவே "தமிழிசை வேர்கள், தமிழிசை தளிர்கள், இழையிழையாய் இசைத் தமிழாய்' என்ற மூன்று நூற்களை வெளியிட்டுள்ளார்.

நெடுஞ்சாலைத் துறையில் சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மதுரையில் இசை நிகழ்ச்சி நடத்துவது இவரது வழக்கம். இதில், மோகனம், கல்யாணி உட்பட பண்கள் இலக்கியத்தில் எந்த இடங்களில் வருகிறது என்றும், அதை பாடிக்காட்டுவதும் இவரது முக்கியப் பணி.

"கல்லூரி காலத்தில் இருந்தே இசை நூற்களை படிப்பதில் ஆர்வம் உண்டு. எனது குடும்பத்தினர் அனைவரும் இசை ஆர்வம், கருவிகளை வாசிக்கும் திறன் உள்ளவர்களே. நான் கடந்த 10 ஆண்டுகளாக நூற்கள், ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருகிறேன். தற்போது 300 ராகங்களை எடுத்து அவற்றின் வரலாறு, சுரங்கள், பாட்டு எவை என நூல் எழுதி வருகிறேன். ஒவ்வொரு ராகத்திலும் 20 நிமிடங்கள் பாடல்களை பாடி "சிடி' தயாரித்து நூலுடன் வழங்க உள்ளோம். 2012ல் இது வெளிவரும்,' என்கிறார் நா.மம்மது.

தொடரட்டும் அவர் சேவை!

நன்றி: தினமலர் (17.01.2011)

செவ்வாய், 11 ஜனவரி, 2011

இயற்கை உணவு - என் அனுபவம்: ஜெயமோகன்

April 7th, 2008

தினைந்து வருடம் முன்பு ஆற்றூர் ரவிவர்மாவின் நண்பர் ஒருவர் என்னிடம் ஒரு தமிழ் நூலை மலையாளத்திற்கு மாற்றித்தர முடியுமா என்று கேட்டார்.அது ராமகிருஷ்ணன் என்பவர் எழுதிய ‘நோயின்றி வாழ முடியாதா?’ என்ற சிறுநூல். இயற்கை மருத்துவம் பற்றிய நூல் அது. மருத்துவமல்ல இயற்கை உணவு முறை. உணவுமுறை மட்டுமல்ல வாழ்க்கை முறை.

அதைப்படித்துப் பார்த்தபோது ஒருவகை சுய ஏமாற்று என்றுதான் அதைப்பற்றி எண்ணினேன். அதேசமயம் அந்த விஷயத்தில் உள்ள பிடிவாதமும் என்னைக் கவர்ந்தது. அத்தகைய பிடிவாதங்கள் மேல் எப்போதுமே எனக்கு மதிப்பும் கவற்ச்சியும் உண்டு. ஆகவே நான் ஒருநாள் திடீரென்று கிளம்பி கொல்லம் வழியாக திருநெல்வேலி போய் அங்கிருந்து அம்பாசமுத்திரம் போய் அங்கிருந்து சிவசைலம் என்ற ஊருக்குப்போய் ‘நல்வாழ்வு ஆசிரமத்தை கண்டுபிடித்தேன்.அங்கே தாடியுடன் மெலிந்த கோலத்தில் இருந்த வெள்ளைவேட்டி மனிதரை அறிமுகம்செய்துகொண்டேன். அம்பாசமுத்திரத்தில் தமிழாசிரியராக வேலைபார்த்தவர் அப்போது வேலையை விட்டுவிட்டிருந்தார். அவரை அப்பகுதியில் தேங்காப்பழச் சாமியார் என்றார்கள்.

ஆனால் அவர் தன் மனைவியுடன் அங்கே வாழ்ந்து வந்தார். மலையடிவாரத்தில் அவரே கடுமையாக வேலைபார்த்து ஒரு காய்கறி பழத்தோட்டத்தை உருவாக்கியிருந்தார். அங்கே அவரும் மனைவியும் ஒரு மகனும் வாழ்ந்துவந்தனர். அம்மூவரும் இயற்கை உணவுமட்டுமே அருந்துபவர்கள். அதிலும் அவரது மகன் பிறந்தது முதல் இயற்கை உணவு மட்டும் உண்டு வாழ்பவர். அங்கே தங்கும்போது இயற்கை உணவு மட்டுமே உண்னவேண்டும். அங்கேயே பறித்து உண்ணலாம். பணமேதும் அளிக்கவேண்டியதில்லை. அங்கேபல வட இந்தியர்களும் சில வெள்ளையரும் தங்கியிருந்தார்கள்.

ராமகிருஷ்ணன் சென்னையில் வாழ்ந்த தமிழறிஞரான பாண்டுரங்கனார் அவர்களிடமிருந்து இயற்கை உணவு முறையின் அடிப்படைகளைக் கற்றுக் கொண்டார். அதில் அவரே பலவிதமான சோதனைகளைச் செய்து முன்னோடியாக விளங்கினார். அப்போது அவருக்கு உலகமெங்கும் மாணவர்கள் உருவாகியிருந்தார்கள். அவரை சாமியார் என்று எல்லாரும் அழைத்தாலும் அவருக்கு மதநம்பிக்கையோ இறை நம்பிக்கையோ இல்லை. தனித்தமிழ் ஆர்வம் இருந்தது. அத்துடன் அவர் ஈ.வே.ரா அவர்களின் மீது பெருமதிப்பு கொண்டிருந்தார். திருக்குறள், மணிமேகலை ஆகிய நூல்களை அதிகம் மேற்கோள்காட்டினார்.

நான் அவரிடம் என் வருகை அவருடைய முறையை சோதனை செய்து பார்ப்பதுதான் என்றேன். அது அவருக்கு மகிழ்ச்சியை அளித்தது. அவநம்பிக்கை மிக முக்கியமான அறிவடிப்படை என்ரு சொல்லி தமிழ்நாட்டில் ‘அவநம்பிக்கை’யை உருவாக்கியதே ஈ.வே.ரா அவர்களின் முதன்மைப் பங்களிப்பு என்றார். என் உடலையே நான் சோதனைக்களமாக்கிக் கொள்ள வேண்டும் என்றார்.

நான் பல வடஇந்தியப் பயணங்களில் கண்டபடி நீர் அருந்தி கடுமையான அமீபியாஸிஸ் நோயால் அவதிப்பட்டுவந்த காலம் அது. அலோபதி மருந்துகள் சாப்பிடுவேன். உடனே குணமாகும். நாலாவது நாளே மீண்டும் ஆரம்பிக்கும். திரிச்சூரில் ஒரு வயிறுநோய் நிபுணரிடம் மனம் விட்டு கேட்டேன், இதை குணமாக்க முடியுமா முடியாதா என்று. ‘உண்மையைச் சொல்லப்போனால் முடியாது’ என்றார் அவர். அமீபா குடலுக்கு மருந்து போகும்போது வெளியேறிவிடும். அதன் முட்டைகள் மீண்டும் முளைக்கும். ‘தொடர்ந்து மருந்து சாப்பிட்டால் காலப்போக்கில் குணம் தெரியும்’ என்றார். ‘அப்படி மருந்து உண்பதனால் சிக்கல் உண்டா?’ என்றேன். ‘அமீபாவுக்கு அளிக்கபப்டும் மருந்துகக்ள் பொதுவாக சிறுநீரகத்துக்கு கடுமையான பாதிப்பை அளிப்பவை’ என்றார். ‘நீங்கள் வேண்டுமென்றால் ஆயுர்வேதம் பரிசீலித்துப் பார்க்கலாமே’ என்றார்

அதை நான் ராமகிருஷ்ணன் அவர்களிடம் சொன்னேன். ‘என் சிக்கல் இயற்கை உணவால் தீருமா?’ என்றேன். ‘இந்த சாதாரண சிக்கலுக்கெல்லாம் முழுமையான இயற்கை உணவு கூட தேவையில்லை. சிறிய அளவிலான பயிற்சியே போதும்’ என்றார். என் நோய் குணமானால் நூலை நான் மொழிபெயர்க்கிறேன் என்று எண்ணிக் கொண்டேன்.

இயற்கை உணவுமுறைக்கு உடனடியாக முழுமையாக மாறக்கூடாது என்பது விதி. முதலில் நான் இரவில் மட்டுமே ப்ழங்கள் உண்ண ஆரம்பித்தேன். பகலில் எளிமையான சைவ உணவு. பின்னர் காலையிலும் இயற்கை உணவுக்கு மாறினேன். மதியம் மட்டுமே சாதாரணமான சமைத்த உணவு. என்னை ஆச்சரியப்படுத்தியபடி ஆறே மாதத்தில் என் நோய் முற்றாக நீங்கியது. அத்துடன் என்னை அவ்வப்போது கடுமையாக படுத்திவந்த மூச்சுத்திணறலும் முழுமையாக் அகன்றது, இன்றுவரை மீளவரவுமில்லை.மூச்சுத்திணறல் அமீபாவின் விளைவாக இருக்கலாம். நான் உடனே ராமகிருஷ்ணன் அவர்களின் அந்நூலை மலையாளத்துக்கு மொழிபெயர்த்தேன். சில வருடங்கள் கழித்து திருமணம் செய்துகொண்டபோது மீண்டும் சாதாரண உணவுப்பழக்கத்துக்கு வந்தேன். அருண்மொழி நான் ‘விரதங்கள் பிடிப்பதை’ விரும்பாமல் அடம்பிடித்தாள். என்னால் அதிகநாள் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்பதே உண்மை. ஆனாலும் நீங்கிய நோய் மீண்டும் வரவில்லை

பல வருடங்கள் கழித்து என் நாற்பத்து மூன்றாம் வயதில் மீண்டும் இயற்கை உணவை தொடரத் தீர்மானித்தேன். தொடர்ச்சியான எழுத்து வாசிப்பு காரணமாக எனக்கு பல வித உபாதைகள். தூக்கமின்மை, செரிமானச் சிக்கல்கள், மலச்சிக்கல். எடையும் அதிகரித்தது. என் குடும்பத்தில் எல்லாருமே தொப்பையர்கள். ஆகவே இரவுக்கு மட்டும் பழ உணவு உண்ண ஆரம்பித்தேன். எதிர்பார்த்தது போலவே எல்லா சிக்கல்களும் இல்லாமலாயின. சோதனைகளில் எனக்கு எந்தவிதமான நோய்களும் இதுவரை குறிப்பிடப்படவில்லை. இன்றுவரை அதுவே தொடர்கிறது.

இயற்கை உணவின் அடிபப்டைக் கோட்பாடுகளை ராமகிருஷ்ணன் இவ்வாறு சொல்கிறார். மனிதன் ஒருவகை குரங்கு. பரிணாமத்தில் மூளையையும் இன்னும் பல உடல்சிறப்புகளையும் வளர்த்துக் கொண்டாலும் அவனது வயிறும் குடலும் இன்னமும் குரங்குக்கு உரியனவாகவே உள்ளன. குரங்குகள் மிக அபூர்வமாக , உணவுத்தட்டுப்பாடு வரும்போது மட்டுமே மாமிசம் உண்பவை. அவற்றின் இயல்பான உணவு சமைக்கப்படாத காய்களும் கொட்டைகளும் கிழங்குகளும் கனிகளுமேயாகும். அவற்றைச் செரிப்பதற்கான திறனே மனிதக் குடலுக்கு உள்ளது. மனிதக்குடலில் மாமிசத்தைச் செரிப்பதற்கான அமிலத்தன்மை இல்லை. மாமிசத்தைச் சமைத்து செரிமானப் பொருட்கள் பல சேர்த்துத்தான் சாப்பிடமுடிகிறது.

மனிதக் குடலின் நீளம் அதிகம். ஆகவே உணவானது பலநிலைகளில் அதிகநேரம் குடலில் நிற்க நேர்கிறது. ஆகவே நார்ச்சத்து கொண்டவையும் எளிதில் குடலில்நகரும் வழவழப்புத்தன்மை கொண்டவையுமான உணவே மனிதக்குடலுக்கு ஏற்றது. அது சமைக்காத தாவர உணவே. அசைவ உணவு உண்பதனால் செரிக்காத எச்சம் குடலில் நெடுநேரம் தங்கி இறுகி மலச்சிக்கலை உருவாக்குகிறது. இன்றைய மனிதனின் பெரும்பாலான நோய்களுக்குக் காரணம் மலச்சிக்கலே.

மனிதக்குடல் அதற்குள் சென்று சேரும் சாதாரணமான நுண்ணுயிர்களையும் பிற ஒவ்வாப்பொருட்களையும் அழிக்கும் திறனையும் சேர்த்தே செரிமான சக்தியாகக் கொண்டுள்ளது. எளிதில் செரிக்காத உணவை அதிகமாக உண்பதனால் மனிதக்குடலுக்கு அதிகச்சுமை ஏற்படுகிறது. நுண்ணுயிர்களும் ஒவ்வாப்பொருட்களும் உடலுக்குள் சென்று நோயை உருவாக்குகின்றன.

உணவைச் சமைக்கும்போது அதில் உள்ள உயிர்த்தன்மை அழிகிறது. அன்னம் அன்னத்தையே உண்ண வேண்டும் என்பது தொன்மையான ஞானம். ஆகவே உயிருள்ள உடலானது உயிருள்ள உணவையே உண்ண வேண்டும். வேகவைக்கப்பட்ட உணவு செத்துப்போன ஒன்று. அதை உண்பது சாவை உண்பதுதான். அதில் நமக்குத் தெரிந்தும் தெரியாமலும் உள்ள பல்வேறு நுண்கூறுகள் இல்லாமலாகிவிடுகின்றன. வேகவைக்கபப்ட்ட உணவு உணவுக்கு இன்றியமையாததான வழுவழுப்புத்தன்மையை இழக்கிறது. மாவுபோல ஆகி குடலை அடைக்கிறது. அதன் செரிமானத்தன்மை மிகக்குறைகிறது.’சமைத்து உண்பது சாவை அழைப்பது’ என்பது ராமகிருஷ்னன் அவர்களின் கோட்பாடு.

இயற்கை உணவுக் கோட்பாட்டாளர்கள் பொதுவாக உணவை மூன்று கூறுகளாகப் பிரிக்கிறார்கள். மாவுணவு[ஸ்டார்ச்], ஊன் உணவு[புரோட்டீன்], கனியுணவு [வைட்டமின்கள்,மினரல்கள்]. நமது உணவு இவற்றின் சரிவிகிதமாக இருக்கவேண்டும். கிழங்குகள், முளைவிட்ட பச்சைத்தானியங்கள் கொட்டைகள் ஆகியவற்றில் மாவும் ஓரளவு ஊனும் உண்டு. தேங்காய் ஊனுணவுக்கு மிக மிக ஏற்றது. காய்கள் கனிகள் கனியுணவு மிக்கவை. கனிகளிலும் காய்களிலும் பொதுவாக எவையுமே விலக்கு இல்லை. நோயுற்ரால் அதற்கு ஏற்ப சில காய்கனிகளை விலக்கலாம். இவற்றை ஒவ்வொருநாளும் கலந்து உண்ண வேண்டும். ராமகிருஷ்ணன் அவர்களைப் பொறுத்தவரை தேங்காயும் வாழைப்பழமும் கலந்தால் மூன்றுசத்துக்களும் ஏறத்தாழக் கலந்த உணவாகிவிடுகிறது. இதனால்தான் அவருக்கு தேங்காப்பழச் சாமி என்று பெயர் வந்தது.

நோய் என்பதும் உடலின் ஓர் இயல்பான நிலை என்பதனால் பொறுமையுடன் நோயை அனுபவித்து அதைக் குணப்படுத்திக்கொள்ள உடலுக்கு அவகாசம் அளிப்பதே சிறந்தது என்பது இயற்கை உணவுக் கோட்பாடு. மருந்து உண்ணலாம். ஆனால் அம்மருந்தும் உணவாகவே இருக்க வேண்டும். உணவல்லாத எதையுமே உண்ணலாகாது.

உணவே பெரும்பாலும் மனநிலைகளை உருவாக்குகிறது என்பது இயற்கை உணவுக் கோட்பாட்டின் கொள்கை. நல்ல உணவு அமைதியை அளிக்கும். நல்ல சிந்தனைகளை அளிக்கும். மிதமிஞ்சிய புலன்நாட்டத்தை அளிக்காது. ஆகவே பதற்றமும் வேகமும் உற்சாகமும் சோர்வும் மாறிமாறி வரும் நிலை இருககது. இதனால் நரம்புநோய்கள் ஏற்படுவதில்லை. நல்ல தூக்கமும் நல்ல பசியும் கழிவகற்றமும் நல்ல சிந்தனைகளும் இருந்தால் இயல்பாகவே நல் வாழ்வு அமையும்.

அப்படிப்பார்த்தால் ராமகிருஷ்ணன் தீவிரமான பொருள்முதல்வாதி. மனிதவாழ்க்கையின் துயரங்களுக்கு வாழ்க்கையின் யதார்த்தத்திலேயே விடை தேடியவர். மனிதனை மீறிய எதையுமே நம்பாதவர். அவருக்கு அற்புதங்களிலும் அபூர்வ சக்திகளிலும் எந்த நம்பிக்கையும் இல்லை. தன் ஐம்பதிரண்டாவது வயதில் வாழ்ந்த வாழ்க்கை போதும் என்ற நிறைவை அடைந்து வடக்கிருந்து உயிர்துறந்தார்.

நான் இப்போதும் இரவு பழங்கள் மட்டுமே உண்கிறேன்.வயிற்றை ஏதாவது ஒன்றுக்குப் பழக்கப்படுத்த பத்துநாள்வரை ஆகும். அதுவரை இரவில் பழம் மட்டும் உண்டால் நள்ளிரவில் வயிறு பேய்ப்பசியாக பசிக்கும். கடாமுடா என்று இருக்கும். ஆனால் பழகியபின்னர் அதைப்போல நல்ல தூக்கத்துக்கு உறுதியளிப்பது வேறு இல்லை. வயிறு எந்தச் சிக்கலும் இருப்பதில்லை என்பதுடன் எப்போதாவது இரண்டு தோசை சாப்பிட்டால்கூட அது கனமாகவே தோன்றும்.

பழ உணவு காலையில் அசாதாரணமான புத்துணர்ச்சியை அளிக்கிறது. பகலில் உண்ட உணவில் உள்ள செய்ற்கைப்பொருட்களின் பாதிப்பைகூட அது இல்லாமலாக்குகிறது. வயிற்றில் சரிவர செரிமானமாகாத உணவு இருப்பது காலையில் ஒருவித கனத்தையும் சோர்வையும் அளிக்கும். அது இப்போது இருப்பதில்லை. அனைத்தையும் விட மலச்சிக்கல் முழுமையாக இல்லாமலிருப்பது சாதாரணமாக நம் முகத்திலேயே தெரியும்.

பழங்களில் நல்ல பழம் மோசமான பழம் என ஏதுமில்லை என்பதே என் அனுபவம். பழகாத பழம் சில சமயம் சற்றே ஒவ்வாமை அளிக்கலாம். இரவில் கடும்புளிப்பு உள்ள அன்னாசி போன்ற பழங்களை அதிகமாகச் சாப்பிடாமலிருக்கலாம். சிலசமயம் இரவில் உணவுக்குழாய் எரிச்சல் ஏற்படக்கூடும். பழங்களை சூடு குளிர்ச்சி என்று பிரிக்கும் ஒரு போக்கு நாட்டுப்புறமருத்துவத்தில் உண்டு. அதுபெரும்பாலும் அடிப்படை அற்றது. கார அம்சம் உள்ள பழம் அமில அம்சம் அதிகமுள்ள பழம் என்று மட்டும் பிரிக்கலாம். இரண்டையும் சரிசமமாக சாப்பிடுதல் நல்லது.

நான் தனிப்பட்ட முறையில் இம்மாதிரி மாற்றுப் பண்பாட்டு ஆய்வுகளைப் பற்றி கூர்ந்த அவதானிப்பு கொண்டவன். நம் சமூக அமைப்பில் உள்ள பல பிழைகள் நம்மை நோயாளிகளாகவும் மனம்பிறழ்ந்தவர்களாகவும் ஆக்குகின்றன என்று நம்புகிறவன். இம்மாதிரி முயற்சிகள் நம் பிழைகளைக் கண்டுபிடித்து களைவதற்கான பல கோணங்களிலான முயற்சிகள். இவற்றினூடாகவே மனித இனம் தன்னை முன்னகர்த்துகிறது.

இயற்கைமருத்துவத்தின் கோட்பாடுகளைச் சார்ந்து நான் வாதாட விரும்பவில்லை. ஆனால் என் உடல்நலப் பிரச்சினைகளுக்கு இன்றுவரை அதுவே நிலையான தீர்வை அளித்துள்ளது என்பதை மட்டும் சொல்ல விரும்புகிறேன். என்னுடைய சலியா ஊக்கத்திற்கான காரணங்களில் ஒன்றாகவும் அதைக் காண்கிறேன். அதை என்னால் முழுமையாக கடைப்பிடிக்க முடியவில்லை. பயணங்கள் நிறைந்த வாழ்க்கை. அதைவிட நாக்கின் ஈர்ப்பு. ஆனால் கடைப்பிடித்தவரை அது பயனளித்திருக்கிறது. அதை எப்போதும் நண்பர்களுக்கும் பரிந்துரைப்பேன்.யாருமே கடைப்பிடித்தது இல்லை. வாழ்க்கைமுறையை மாற்றுவது எளிய செயல் அல்ல.

நன்றி: எழுத்தாளர் ஜெயமோகன்

திங்கள், 10 ஜனவரி, 2011

வேலிக்கு அடியில் நழுவும் வேர்கள்: இஸ்லாமிய புனைவுகள் குறித்த ஓர் ஆய்வு- மு.நஜ்மா

ஸ்லாமியச் சமூகம் குறித்து எழுதும் இஸ்லாமியரல்லாதோர், சில சமயம் இஸ்லாமியர்களும்கூட ‘அது ஒரு இறுக்கமான வாழ்க்கை முறையைக் கொண்ட சமூகம்’ என்று அடையாளப்படுத்துவர். கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்தே தனக்கான இருப்பை இம்மண்ணில் அடையாளப்படுத்திக்கொள்ள முயற்சிக்கும் இச்சமயம் குறித்தும் இம்மக்கள் பண்பாடு குறித்தும் மிக மேலோட்டமான புரிதலே இருந்து வருகின்றது. மற்ற சமூகத்தவர் எவரும் எளிதில் உள்புக முடியாத அளவிற்கு இஸ்லாமியச் சமூகத்தை வேறுபடுத்திக் காட்டுவது எது என்ற கேள்விக் கான விடையை / தருக்கத்தை அம்மக்கள் பண்பாட்டிற்குள்ளிருந்தே தேட முடியும். இத்தகைய சூழலில் இஸ்லாமியப் புனைகதை வாசிப்பு என்பது அம்மக்கள் பற்றிய புரிதலை ஏற்படுத்த வேண்டும். மாறாக, அச்சமூகத்தின் மீது பல்வேறு கேள்விகளை எழுப்புவதற்கான களமாக இப்புனைகதைகள் விளங்குகின்றன.


1885 ஆம் ஆண்டு சித்தி லெப்பை என்பவரால் எழுதப்பட்ட ‘அசன்பே சரித்திரம்’ என்னும் நாவலிலிருந்தே இஸ்லாமிய நாவல் வரலாறு தொடங்குகிறது. ஆரம்ப கால இஸ்லாமிய நாவல்கள் பிரச்சார தொனியிலானவை. 1940களில் வரலாற்று நாவல்கள் பெரும்பான்மையாக எழுதப்பட்டன. 1980களுக்குப் பிறகு புனைகதைகளில் பொருண்மை சார்ந்து பல மாற்றங்கள் ஏற்பட்டன. தோப்பில் முகம்மது மீரானின் ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ (1988) நாவலிலிருந்து இம்மாற்றத்தைக் காண முடியும். இவருடைய முதல் நாவல் கூனன் தோப்பு. இந்நாவல் அவர் எழுதி 25 ஆண்டுகள் கழித்தே (1993) வெளிவந்தது. முகம்மது மீரானின் நான்கு நாவல்களும் இவரின் சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்ட, தேங்காய்பட்டணம் பகுதியைக் களமாகக் கொண்டவை. ஆளுர் ஜலால், ஜே.எம்.சாலி, கருணை மணாளன், புன்னியாமீன் அப்துல் ஸமது, ஜுனைதா ஷெரீப், சல்மா, மீரான் மைதீன், ஜாகிர் ராஜா, அர்ஷியா என்று புனைகதையாளர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

ஒவ்வொரு சமூகத்திற்குள்ளும் இனம், மதம், சாதி என்று ஏதோ ஒருவகையில் ‘ஒடுக்குமுறை’ என்பது நிகழ்ந்தேறிக் கொண்டேயிருக்கின்றது. இஸ்லாமியச் சமூகத்திற்குள் உயர்வு X தாழ்வு மதிப்பீடு என்பது பொருளாதார அடிப்படையில் கட்டமைக்கப்படுகின்றது என்ற கருத்தைத் தோப்பில் முகம்மது மீரான் முன்வைக்கின்றார். உயர்ந்த அந்தஸ்து உடையவர்களாகக் காட்டப்படும் முதலாளி வர்க்கத்தினர் பொருளாதார ரீதியில் வீழ்ச்சி அடையும்போது அலட்சியப்படுத்தப்படுகின்றனர்; என்றாலும் அவர்கள் மீதான மதிப்பீடு எந்த வகையிலும் தளர்ந்து போவதாகத் தெரியவில்லை. ‘கடலோர கிராமத்தின் கதை’யில் அகமது கண்ணு, ஜாகிர் ராஜாவின் ‘துருக்கித் தொப்பி’யில் (2008) கேபிஷே ஆகியோர் பொருளாதார வீழ்ச்சி அடைந்தாலும் முதலாளிகளாகவே உள்ளனர். தொழிலாளி வர்க்கத்தைச் சேர்ந்தவன் பொருளாதார முன்னேற்றம் காண்பதன் மூலம் உயர் மதிப்பைப் பெறுகிறான் என்று முகம்மது மீரான் நாவல் குறிப்பிடுகின்றது. ஆனால் ஜுனைதா ஷெரீபின் ‘மூன்றாம் பிறை’ நாவலிலும் அப்துல் ஸமதின் ‘பனிமலர்’ நாவலிலும் கல்வி / பதவியில் முன்னேறி வந்தாலும் குடும்பத் தொழிலைச் சொல்லிக் கேவலப்படுத்தும் நடைமுறைகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. எனவே, பொருளாதாரம்தான் இந்த உயர்வு X தாழ்வு மதிப்பீட்டிற்குக் காரணமா என்ற கேள்வி எழுகிறது. எனில் யார் இந்த முதலாளிகள்? அவர்களின் கீழ் வேலை செய்யும் தொழிலாளிகள் யார்? என்பதைக் காணவேண்டும்.

ஒரு கடலோர கிராமத்தின் கதையில் முதலாளியாக வரும் அகமது கண்ணு ஊர்த் தலைவராக, பள்ளிவாசலின் நிர்வாகத் தலைவராக அதிகாரம் செலுத்துபவர். ‘’துருக்கித் தொப்பி’யில் வரும் கே.பி.ஷே ஊரில் வரும் பிரச்சனைகளுக்குத் தீர்ப்பு சொல்லும் நாட்டாமையாகக் காட்டப்படுகிறார். ‘துறைமுகம்’ (1991) நாவலில் ஒரு பிரச்சினையைப் பேசி முடிவெடுப்பதற்காகப் பள்ளிவாசலில் ஜமாத் கூடுகிறது. ‘குடும்பக்காரெல்லாம் நில்லுங்கோ மத்தவங்க போங்கோ’ என்று அறிக்கை விடப்படுகிறது. அதனைத் தொடர்த்து ‘பொருள் வசதி படைத்தவர்களும் நிலங்களுக்குத் தீர்வை செலுத்துவோருமான வெள்ளை நிறத் தோற்றமுள்ள முதலாளிகள் வலிய பள்ளியின் ஹாலில் எஞ்சினர்’ என்று குறிப்பிடுவதன் மூலம் ஜமாத்தின் அங்கமாக இருப்பவர்களும் தலைமை அதிகாரம் கொண்டவர்களும் யார் என்பதை விளங்கிக்கொள்ள முடிகிறது. இம்முதலாளிகள் ஜமாத் தலைவர்கள் என்பதால் சமய அடையாளத்தோடு கூடிய அதிகாரத்தில் இயங்குபவர்களாக உள்ளனர். எனவே இவர்களை ஏற்க மறுப்பது / எதிர்ப்பது ஜமாத்தை நிராகரிப்பதாகவும் அதுவே சமயத்தை நிராகரிப்பதாகவும் ஆகிவிடுகிறது. “முதலாளியை மதிக்காதவன் உண்மை முஸ்லிம் அல்ல” என்று கூறி முதலாளியை எதிர்த்ததற்காக மஹ்மூது தண்டிக்கப்படுகிறான். அவனுடைய சந்தோஷ / துக்க காரியங்களில் ஜமாத் கலந்துகொள்ளாது என்று மதரீதியான தண்டனை வழங்கப்படுகின்றது. இவ்வாறு ஜமாத்தை எதிர்த்த காரணத்தால் ஊர் விலக்கம் பெறுவது, சமய விலக்கம் பெறுவது போன்ற பல சம்பவங்கள் இன்றளவும் நடக்காமல் இல்லை.

ஊர்த்தலைவர்களின் அதிகாரத்திற்குச் சமயத் தலைவர்கள் பக்க பலமாக உள்ளனர். நேரடியாகச் செலுத்த முடியாத ஆளுமையைச் சமயத் தலைவர்கள் மூலம் நிறைவேற்றிக்கொள்கின்றனர். மக்களின் மனநிலையை மதம் சார்ந்த நம்பிக்கையின் மூலம் கட்டுப்படுத்துகின்றனர். வெள்ளிக் கிழமை ஜும்ஆ தொழுகை முடிந்து நடக்கும் மத போதனைக் கருத்துக்கள் பெரும்பாலும் நரகத்தைப் பற்றிய பயத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். அந்த பயமே சமய நம்பிக்கையை வலுவூட்டக் கூடிய காரணியாக மாற்றப்படுகிறது. சமய நம்பிக்கை வலுப்படும்போது மத போதகர்கள் மீதான மதிப்பீடு உயர்கின்றது. இந்தச் சூழலை முதலாளிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இஸ்லாமியச் சமூகத்தில் காணப்படும் படி நிலைகளைப் பொருளாதார அடிப்படையில் கட்டமைக்கும் தோப்பில் முகம்மது மீரான் ஒருபுறமிருக்க வேறு ஒரு உலகைப் படம்பிடித்துக் காட்டுகின்றார் ஜாகிர் ராஜா. இவரின் ‘மீன்காரத்தெரு’ (2006) நாவலில் வரும் பங்களா தெரு மக்கள், ‘துருக்கித் தொப்பி’ நாவலில் வரும் வடக்குத் தெரு மக்கள் உயர்சாதி இசுலாமியர்களாகவும் அவர்களுக்குப் பணிவிடை செய்பவர்கள் தாழ்ந்த சாதி இஸ்லாமியர்களாகவும் காட்டப்பட்டுள்ளனர். இதனை, “மீன்காரத் தெருக்காரர்கள், ஆட்டுக்கறி சாப்பிடும் ராவுத்தர்கள், மாட்டுக்கறி சாப்பிடும் லெப்பைகள் அவர்களுக்குள்ளிருக்கும் மேல்-கீழ் மனோபாவம் பற்றி உள்ளார்ந்த வலியுடன் பேசுகிறார்” என்று ஜாகிர் ராஜா நாவல்களின் உயிர் நாடியை விளக்குகிறார் நாஞ்சில் நாடன் (2008:8). இசுலாமியர்களில் ராவுத்தர்கள், மரைக்காயர்கள் அதன் கீழ் லெப்பைகள் அதற்கும் கீழ் ஒசாக்கள் (நாவிதர்), வண்ணார், மீன்பிடி தொழில் செய்வோர், துப்புரவு தொழில், நெசவு, கசாப்புக் கடை வியாபாரம், தர்காக்களில் வாழும் முஸாபர்கள் என்று சாதி வாரியாகப் பிரிந்து கிடக்கின்ற சமூகத்தை அடையாளம் காட்டுகிறார். மேல் வர்க்கத்தினரின் பொருளாதார, பாலியல் சுரண்டல்களையே கதைக்கருவாகக் கொண்டவை இவரது நாவல்கள்.

மீன்காரத் தெரு நாவல் பற்றிக் கூறும்போது, “அடித்தள முஸ்லிம்களைக் கலாச்சார ரீதியாக ஒடுக்குமுறை செய்யும் வைதீக மனோபாவம் கொண்ட முஸ்லிம் குடும்பங்கள் கதைப் பிரதிக்குள் நடமாடும் அதே வேளையில் நாசுவர், பறையர், சக்கிலியர், குறவர் சமுதாயங்களைக் கீழானதாகப் பார்க்கும் நைனாவின் கதாபாத்திர அணுகுமுறையும் தனது பாலியல் அதிகாரச் செயல்பாட்டிற்கு இப்பெண்களைப் பயன்படுத்த முனையும் வேகம் கொண்டதாகவும் இக்கதைப் பிரதிகளின் இரண்டாம் அர்த்த உருவாக்கம் நிகழ்ந்துள்ளது.” (2007:305) என்று ஹெச்.ஜி.ரசூல் குறிப்பிடுவதன் மூலம் ஒடுக்கப்படும் சாதிகளும் வேறு சூழலில் ஒடுக்கும் சாதியாக விளங்குகின்றது என்பதை விளக்குகின்றார்.

ஜாகிர் ராஜா அடையாளப்படுத்தும் இச்சாதியக் கட்டமைப்பு இஸ்லாமியச் சமூகத்திற்குள் எவ்வாறு நுழைந்தது என்ற கேள்வி எழக் கூடும். இந்தியாவில் உள்ள மதத் தலைவர்கள் பலர் சாதிய அமைப்பிற்குத் தவறாக இஸ்லாமியத்தன்மை வழங்குவதன் மூலம் அல்லது மத ரீதியில் இசைவாணை வழங்குவதன் மூலம் சாதியத்தை நியாயப்படுத்துகின்றனர் என்கிறார் மசூது ஆலம் பலாஹி (2007:5). இந்திய அரசவைகளில் இருந்த மதத் தலைவர்கள் கீழ்சாதி மக்களின் குழந்தைகள், தன் முன்னோரின் பரம்பரைத் தொழிலையே பார்க்க வேண்டும் என்று கூறினர். தம் பிள்ளைகளுக்கு கல்வி கொடுக்க முயன்றால் தண்டனை வழங்கப்படும் என்று வலியுறுத்தினர். குர் ஆன், தொழுகை, நோன்பு ஆகிய அடிப்படைகளைத் தவிர அம்மக்கள் வேறு எதையும் பெற்று விடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தனர்.

“சையத் ஜலாலுதீன் புகாரி என்ற பிரபலமான சூபி மது அருந்துபவர்கள், கந்து வட்டிக்காரர்கள் மட்டுமின்றி நாவிதர்கள், பிணம் கழுவுபவர்கள், சாயத் தொழிலில் ஈடுபடுபவர்கள், தோல் பதனிடுபவர்கள், செருப்பு தைப்பவர்கள், வில் செய்பவர்கள், சலவைத் தொழிலாளிகள் முதலானோருடன் சேர்ந்து மேல் சாதி முஸ்லிம்கள் உணவருந்தக் கூடாது என்று வலியுறுத்தினார்” (2007:8-9). தீண்டத்தகாத சாதிகளிலிருந்து இஸ்லாத்திற்கு மதம் மாறியவர்கள் பள்ளி வாசலுக்குள் நுழையவோ, பொது மையவாடியைப் (இடுகாடு) பயன்படுத்தவோ முடியாதபடிக்குத் தடை செய்யப்பட்டனர். கடலோர கிராமத்தின் கதையில் இதைப் பற்றிய குறிப்பு கிடைக்கின்றது. தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்ந்த பகுதியை மற்ற மக்களின் குடியிருப்புகளில் இருந்து பிரிக்கக் குத்துக்கல் நாட்டப்பட்டிருந்தது. இக்கல்லுக்குக் கிழக்கே உள்ளவர்களுக்கான குளத்துப் பள்ளி வாசலில் மேட்டுக்குடி மக்கள் கால்வைப்பதில்லை. எனவே தங்களுக்கெனத் தனி பள்ளிவாசல் கட்டியிருந்தனர். ஆனால் இவர்கள் பொதுப் பள்ளிவாசலில் தொழுவதை யாராலும் தடுக்க முடியவில்லை என்பதாக நாவல் சித்திரிக்கின்றது. வட இந்தியப் பகுதியில் உள்ள ஒடுக்குமுறை குறித்து மசூது ஆலம் பலாஹி விரிவாகப் பேசியுள்ளார். தென் பகுதியில் தமிழகத்தில் காணப்படும் ஒடுக்குமுறை குறித்து மீரான் மைதீன், ஜாகிர் ராஜா நாவல்கள் விளக்குகின்றன.

இஸ்லாமியச் சமூகத்தில் காணப்படும் இந்தப் படிநிலைகளுக்கு இந்தியச் சாதி மனோபாவமே காரணம் என்று கூற நிறையவே இடம் உள்ளது. ஆனால் இந்திய முஸ்லிம் பண்பாட்டு ஆய்வாளர் யோகிந்தர் சிக்கந்த் தெற்காசிய முஸ்லிம் சமூகங்களில் இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தான், வங்காள நாடுகளிலும் சாதீயக் கட்டமைப்பு உள்ளதாகக் குறிப்பிடுகிறார். (2008:2) அரபு நாடுகளிலும் இன அடிப்படையிலான படிநிலைகள் காணப்படுகின்றன. எனவே, ஏற்கனவே உள்ள படிநிலை அமைப்பு இந்தியப் பகுதியில் நுழையும் போது இங்குள்ள சாதியச் சூழலுடன் எளிதில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டது.

கி.பி. 18 ஆம் நூற்றாண்டில் அரபு நாட்டில் வாழ்ந்த முகம்மது இப்னு அப்துல் வகாபின் பெயரால் உருவானது ‘வகாபிசம்’. வகாபியக் கொள்கை திருக்குர்ஆன் மற்றும் நபி மொழி தொகுப்பான ஹதீதுகளையும் மட்டும் அடிப்படையாகக் கொண்டது. சவுதி அரேபியாவில் இஸ்லாமிய சமயம் வேறு கலாச்சார உள்வாங்கல்களாலும் சூபியச் சிந்தனைகளாலும் தீட்டுப்பட்டுவிட்டது என்று கூறி அதற்கெதிரான செயல்களில் இவ்வியக்கம் ஈடுபட்டது. தூய்மைவாதம் பேசும் இவர்கள் தர்கா பண்பாட்டிற்கு எதிரானவர்கள். அடக்கத்தலங்களை மையப்படுத்தி வழிபாடு செய்வது அல்லாவுக்கு இணை வைப்பது என்று கூறி நபிகளாரின் மகளுடைய அடக்கத்தலத்தையும் வேறு பலருடைய அடக்கத் தலங்களையும் இடித்துத் தகர்த்தனர். இந்தியாவிற்குள்ளும் இவ்வியக்கம் பரவியது. தூய்மைவாதக் கொள்கையான வகாபியம் இங்குள்ள பிராமணீயத்தோடு சேர்த்து அடையாளம் காணப்பட்டது.

இஸ்லாமிய அடித்தள மக்களின் பண்பாட்டுச் சின்னமாகத் தர்காக்கள் தோற்றம் பெறுவதை ஜாகிர் ராஜாவின் மீன்காரத்தெரு விளக்குகின்றது. இங்குள்ள சிறுதெய்வ வழிபாட்டிற்கான மதிப்பீட்டைத் தர்கா கலாச்சாரத்தோடு சேர்த்துக் காணமுடியும். இந்த அடக்கத் தலங்களைப் புனிதச் சின்னங்களாக ஒரு சிலர் கருதுவதும் வேறு சிலர் அதற்கு முரண்படுவதும் ஒருபுறமிருக்க இவை இரண்டிற்கும் இடையில் அடக்கத் தலங்களை/தர்காக்களை வியாபார தலங்களாக மாற்றுவோரும் உள்ளனர். மீன்காரத் தெருவில் மேல் சாதியினரால் மறுக்கப்பட்ட வள்ளி என்கிற ஒடுக்கப்பட்ட பெண்ணின் அடக்கத்தலம், வள்ளிபீவியின் கபுறாக உருவாகும் சூழலும் ஒரு கடலோர கிராமத்தின் கதையில் ‘ஸையிதினி முகம்மது முஸ்தபா இம்பிச்சி கோயா தங்ஙன்’ பள்ளிவாசல் உருவாக்கப் படும் சூழலும் முற்றிலும் வேறானவை. அஸனார் லெப்பை என்பவர் தன்னுடைய பிழைப்புக்காக ஸையதினா முகம்மது தங்ஙள் மீது அதீத சக்திகளைப் புனைந்து அவர் பேரில் பள்ளிவாசலையும் கூடவே பச்சைத் துணி போர்த்தப்பட்ட உண்டியலையும் உருவாக்குகிறார். இஸ்லாமிய நாவல்கள் தர்காக்களின் உருவாக்கத்தை இந்த இரண்டு அடிப்படைகளிலும் படம் பிடித்துக் காட்டுகின்றன.

வாழ்க்கை முறையை வடிவமைப்பதில் பொருளாதாரம் முக்கியப் பங்கு வகிக்கின்றது. பெரும்பாலான இஸ்லாமியர்களின் பொருளாதாரச் சூழல் வெளிநாட்டு வேலைகளை நம்பியுள்ளன. ஆரம்ப காலத்தில் பொருளாதாரத் தேவையாகக் கருதப்பட்ட நிலைமாறிப் பின்பு தகுதியாகக் கருதப்பட்டது. ‘வெளிநாட்டு மாப்பிள்ளை’ என்பது இன்றளவும் பெரிய அந்தஸ்தாகக் கூறப்படுகின்றது. மீரான் மைதீனின் ‘ஓதி எறியப்படாத முட்டைகள்’ (2003) இந்த வெளிநாட்டு மோகத்தின் முகத்திரையைக் கிழித்தெறிகின்றது. அரபு நாட்டு விசாவிற்காக வாழ்வை அடமானம் வைத்தும் மனதிற்கு ஒவ்வாத செயல்களில் ஈடுபட்டும் வாழ்வில் ஏமாற்றங்களும் அவமானங்களும் மட்டுமே மிஞ்சிப் போவதாகக் குறிப்பிடுகின்றார். ஊர் அமைப்புகளைப் பற்றிப் பேசும்போது சாதிவாரிக் குடியிருப்புகளை விளக்குகின்றார். வெளியூர் வேலைகளுக்குச் செல்வது குடும்ப விரிசல்களுக்கு வழிவகுக்கும் என்பதை ஜாகிர் ராஜாவின் துருக்கி தொப்பி நாவல் குறிப்பிடுகின்றது. வெளிநாடுகளுக்குச் சென்று வேலைசெய்பவர்கள் பணம் விளைவிக்கும் இயந்திரமாகக் கருதப்படுகின்றனர். விடுமுறைக் காலத்து வாழும் அவசர வாழ்க்கை ஏற்படுத்துக்கின்ற அதிருப்தியும் நாவல்களில் பேசப்படுகின்றது. வெளிநாட்டு வாழ்க்கைக் குறித்து நாகூர் ரூமியின் கப்பலுக்குப் போன மச்சான் (2002) நாவலும் விளக்குகின்றது.

வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்யப் பொருளாதாரம் ஒரு காரணமாக இருந்தாலும் அதற்குள் கல்வி குறித்த உரையாடலும் உள்ளது. கல்வி என்பது அறிவு சார்ந்த தேவையாக இருந்தாலும் பொருளாதாரத் தேவையை நிறைவு செய்வதில் கல்வி முக்கிய இடத்தைப் பெறுகின்றது. இந்தத் தேவை இஸ்லாமியர்கள் வாழ்வில் வேறு வகையில் நிறைவு செய்யப்பட்டது. உயர்கல்வி கற்பதற்கு முன்பாகவே வெளிநாட்டு வேலைகளில் அமர்த்தப்படுகின்றனர். பத்தாம் வகுப்பு வரை படித்த இஸ்லாமியர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த சதவிகிதத்திலேயே காணப்பட்டதாகச் சிறுபான்மைக் குழு 1990களில் அறிக்கை வெளியிட்டது. ஆங்கிலக் கல்வியை இஸ்லாமியர்கள் மறுத்ததற்கு வேறு பல காரணங்களும் உள்ளன.

1857இல் சிப்பாய் புரட்சியில் முஸ்லிம்கள் பங்கேற்றதற்காய் வட இந்திய முஸ்லிம்களின் பொருளாதாரம் திட்டமிட்டு அழிக்கப்பட்டது. 1857இல் டில்லியிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்கள் 1859 வரை அனுமதிக்கப்படவில்லை. சிப்பாய் கலகத்திற்கு உதவிய காரணத்திற்காகத் தன் சொத்தில் 35% தண்டமாகப் பெற்ற பின்பே பிரிடிஷ் அரசாங்கம் அவர்களை அனுமதித்தது. கிலாபத் கிளர்ச்சியின்போது நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். இதில் கைது செய்யப்பட்டவர்கள் திருச்சூரிலிருந்து கோயம்புத்துருக்குச் சரக்கு இரயிலில் காற்று புக முடியாத பெட்டியில் அடைக்கப்பட்டு மூச்சுத் திணறி 55 இஸ்லாமியர்கள் இறந்ததாக தி. இண்டிபெண்டன்ட் பத்திரிக்கை 1921 செப்டம்பர் ஒன்றாம் தேதியில் அறிக்கை வெளியிட்டது. இவை போன்ற அடக்குமுறைகள் பிரிடிஷ் மீதான வெறுப்பிற்குக் காரணமாகியது. அவை மொழி மீதும் ஆங்கில கலாச்சாரத்தின் மீதும் பிரதிபலித்தன. இவைதான் காரணம் என்பதைவிட இஸ்லாமிய கிறித்தவர் முரண்பாடு ஆரம்பகால வரலாறுகளிலேயே காணப்பட்டவைதான். நேரடியான பாதிப்புகள் அதன் வீரியத்தை அதிகரிக்கச் செய்தன. எனவே ஆங்கிலேயர் சமயமும் அவர் மொழியும் ஹராம் (விலக்கப்பட்டது) என்று கருதப்பட்டது. ஆங்கிலேயக் கல்விக்கு எதிராக இஸ்லாமியர்கள் செயல்பட்டதை ஒரு கடலோர கிராமத்தின் கதையும் துறைமுகம் நாவலும் விளக்குகின்றன. ஆங்கிலக் கல்வியை எதிர்த்த இஸ்லாமியர்கள் யார் என்பதைக் காணும் போது அதற்குள் நிகழ்ந்த வேறு ஒரு அரசியல் பிடிபடுகின்றது.

ஆங்கிலக் கல்வி அனைவருக்கும் பொதுவாக வழங்கப்பட்டது. இதனால் தொழிலாளியாக இருப்பவர்கள் விழிப்படைகின்றனர் என்று முதலாளிகள் கருதினர். எனவே ஆங்கிலக் கல்விக்கு எதிராகக் கொடி பிடிப்பது என்பதைவிட முதலாளிகளின் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியாக இதனைப் பார்க்கலாம். “இங்கிலீசு படிச்சா ஜஹன்னம் என்கிற நரகத்திலே போவோம்” (ஒரு கடலோர கிராமத்தின் கதை: ப:87 ) என்று மதத்தை இதற்கு ஆயுதமாகப் பயன்படுத்தினர். ஆனால் ஆங்கிலக் கல்வி தனக்கான விடுதலைக்கு வழி வகுக்கும் என்று அடித்தள மக்கள் பிரதிநிதியாக மஹ்மூது சித்திரிக்கப்படுகிறான். துறைமுகம் நாவலும் இச்சிக்கல்களை விளக்குகின்றது. நவீனக்கல்வி ஒடுக்குமுறைக்கு எதிரான ஆயுதம் என்பதை, புன்னியாமீனின் அடி வானத்து ஒளிர்வுகள், ஜுனைதா ஷெரீபின் சரித்திரம் தொடர்கிறது, மூன்றாம் பிறை, அப்துல் ஸமதுவின் பனிமலர் ஆகிய நாவல்களும் குறிப்பிடுகின்றன.

இறுக்கமான வாழ்வைக் கொண்டுள்ள இஸ்லாமியச் சமூகத்திற்குள் ‘பெண்கள்’ பற்றிய மிக நீண்ட உரையாடலை வெளிப்படையாகப் பதிவு செய்ததில் சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை நாவல் (2004) முக்கியப் பங்கு வகிக்கின்றது. அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகள் சந்தர்ப்பம் வாய்க்கும்போது விசையுடன் வெளிப்படும் என்பதை நாவல் முழுவதும் காணலாம். ‘பேச்சு சுதந்திரம்’ என்பது பாலியல் பேச்சுக்களை வெளிப்படையாகப் பேசுவதாகவும் அதிலும் ஆண்களின் உடல் உறுப்புக்களைக் கேலி செய்வதன்மூலம் திருப்தி அடைவதாகவும் காட்டப்பட்டுள்ளது.

"
வேலிக்கு வெளியே
தலையை நீட்டிய
என் கிளைகளை வெட்டிய
தோட்டக்காரனே!

வேலிக்கு அடியில்
நழுவும் என்வேர்களை
என்ன செய்வாய்?"

என்னும் அப்துல் ரகுமானின் கவிதையை இந்நாவல் நினைவு கூர்கிறது. பெண் சுதந்திரம் என்பது பாலியல் தாண்டிப் பல்வேறு தளங்களைக் கடக்க வேண்டியுள்ளது.

பெண்களின் மீதான உழைப்புச் சுரண்டலையும் பாலியல் ரீதியான உடல் சுரண்டலையும் குறித்துப் பல நாவல்கள் பேசுகின்றன. அதற்குப் பெண்களே உறுதுணையாக உள்ளனர் என்பதை ‘மீன்காரத் தெரு’ நாவல் சுட்டிக்காட்டுகின்றது. பங்களாத் தெருவிற்குப் பெண்களை ஏற்பாடு செய்யும் ரமீஜா என்னும் கதை மாந்தர் வழி இதனை விளக்குகின்றார்.

பெண்களுக்குச் சொத்துரிமை உள்ளது என்று தனது சொத்தைச் சமமாகப் பிரித்து ஒரு பங்கைத் தன் மகளுக்கும் மற்ற பங்கை ஏழாகப் பிரித்து 7 ஆண்களுக்கும் கொடுப்பதாக உருவாகும் ‘ஏழரைப் பங்காளி’ வகையறா நாவல் உருது முஸ்லிம்கள் பற்றிய முதல் நாவலாகக் கூறப்படுகின்றது.

பெண் சொத்துரிமை அடிப்படையில் உருவான ஏழரைப் பங்காளி வகையறாவில் பிந்தைய தலைமுறையில் அதைப் பற்றிய குரல் எழுப்பவே இல்லை. ஆணின் ஊதாரித்தனத்திற்குப் பலியாகும் பெண்கள், கைவிடப்பட்ட பெண்கள், அனாதைகள் முதலியோருக்கு ‘தர்கா’ அடைக்கலம் தரும் இடமாக உள்ளதைக் குறிப்பிட்டுள்ளார் எஸ்.அர்ஷியா. இஸ்லாமியச் சமூகத்திலிருந்து வெளி உலகில் சுதந்திரமாக, சஞ்சரிக்கும் ‘அலிமா’ என்னும் கதை மாந்தரை மையமாகக் கொண்டது ஜாகிர் ராஜாவின் வடக்கே முறி அலிமா. விளிம்பு நிலைப் பாத்திரங்களை மையமாக்கும் ஜாகிர் ராஜாவின் நாவலில் மனநிலை பிறழ்ந்த பெண்ணாக அலிமா உலவி வருகிறாள். ‘வாழ்க்கை உன்னை ஏன் இப்படி அலைக்கழிக்கின்றது, அல்லது வாழ்க்கையை நீ பழிவாங்குகிறாயா’ என்று அலிமாவை நோக்கி கேட்கப்படும் ஒரே கேள்வியில் கதையைக் கூறிவிட முடியும். அலிமாவை மனநிலை பிறழ்ந்தவளாகக் கொள்வதைவிடக் கட்டுப்பாடுகளை மீறித் தான் நினைப்பதை மிக எதார்த்தமாக வெளிப்படுத்தும் தன்மைகொண்டவளாகப் புரிந்துகொள்ளலாம்.

‘பத்து வயசு சென்டா பறையண்ட கைலயாலும் பிடிச்சு குடு, ஏனென்டா பருவமான பெண்ணை வச்சிக்கிறது அவ்வளவு பாவம்’ (பனிமலர் : 62-63) என்று சாதியைக் காட்டிலும் பெண்ணின் கற்பு பாதுகாக்கப்படக் கூடிய ஒன்றாகக் காட்டப்பட்டுள்ளது. மீன்காரத் தெரு நாவலில் வேறு சாதி ஆண்களைவிட இஸ்லாமானவன்கிட்ட போயிக்கலாம் என்கிற தொனி மேலிடுகிறது.

இஸ்லாமியத்தில் இல்லாத வரதட்சணைப் பழக்கம் குறித்துப் பெரும்பாலான நாவல்கள் பேசுகின்றன. ஜுனைதா ஷெரீபின் காட்டில் எரிந்த நிலா, சாணைக் கூறை, அவளுக்கும் ஓர் இதயம், மூன்றாம் பிறை, ஜே.எம்.சாலியின் பணவிலங்கு, ஹிமானா சையதின் புயலில் ஒரு பூ, பசுமைப் பூக்கள், கருணை மணாளனின் வெள்ளை ரோஜா, மாமியார் முதலிய நாவல்கள் குறிப்பிடத்தக்கன.

இஸ்லாமியச் சமூகத்துப் பெண்கள் என்னும் போதே நினைவுக்கு வருவது ‘பர்தா’. முகத்திரையிடுதல் மற்றும் பர்தா முறை குறித்து எந்தவித குறிப்பையும் திருக்குர்ஆனில் காணமுடிவதில்லை (ஹெச். ஜி. ரசூல்: 2006:17) இதைக் குறித்து குர்ஆனில் கூறப்பட்டதாவது, “நபியே! இறை நம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறும். அவர்கள் தங்களுடைய பார்வைகளைப் பேணிக் கொள்ளட்டும். தங்களுடைய வெட்கத் தலங்களைப் பாதுகாக்கட்டும். தங்களுடைய அழகை வெளியில் காட்டாதிருக்கட்டும். அதிலிருந்து தாமாக தெரிகின்றவற்றைத் தவிர மேலும் தங்களுடைய மார்புகள் மீது தங்கள் முந்தானையைப் போட்டுக் கொள்ளட்டும். (அந்நூர் அத்தியாயம் 24: வசனம் 31)” (மேலது). அரபு நாட்டில் பழங்குடி இன மக்கள் மேலாடை அணியும் வழக்கமற்றிருந்தனர். இந்நிலையில் உடல் முழுவதும் ஆடை அணிதல் ஒழுக்க விதியாகவும் உரிமை குறித்த பிரச்சனையாகவும் பேசப்பட்டதாக “இஸ்லாமியப் பெண்ணியம்” என்னும் நூலில் ஹெச். ஜி. ரசூல் குறிப்பிடுகின்றார். எனவே எந்த ஒரு விதியும் / ஒழுக்கமும் எத்தகைய சூழலில் உருவாக்கப்பட்டது, அதன் நோக்கம் என்ன என்பது குறித்த புரிதலின்றிச் சடங்காகச் சிலவற்றைப் பின்பற்றுகின்ற சூழல் உள்ளது. இஸ்லாமியப் புனைகதைகளில் பெண் ஆடைக் கலாச்சாரம் குறித்து விரிவாகப் பேசப்படவில்லையெனினும் ஆங்காங்கே காணமுடிகிறது. பெரும்பாலான பெண் கதைமாந்தர்கள் பர்தாக்கள் இல்லாமலேயே உலவி வருகின்றனர்.

பெண்குறித்த அடிப்படைச் சட்டங்கள் ஒன்றாக இருக்க அவை நடைமுறையில் ஆணாதிக்க/அதிகார மையத்திற்குள் வரும்போது வேறு வகையாக அர்த்தப்படுகின்றன. ஆண் சமூகத்திற்கேற்றவாறு நெகிழ்த்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன. வெளியுலகில் மற்ற ஆண்களிடமிருந்து முழுமையாக விலக்கப்படும் பெண்கள் தன்னுடைய சமூகத்து ஆண்களுக்குள் எவ்வாறு சஞ்சரிக்கிறாள் என்பதை இரண்டாம் ஜாமங்களின் கதை நாவல் சித்திரிக்கின்றது. திருமண விலக்கு பெற்ற பெண்கள் குறித்தும் அவர்களின் வாழ்க்கை ஒழுக்க விதிகளால் சுருக்கப்படுவதையும் விளக்குகின்றது. மேலும் இஸ்லாமியச் சமூகத்தில் ஆண்கள் வெளிநாடு செல்வதும் அவர்கள் வீட்டுப் பெண்கள் மற்ற ஆடவரோடு உறவு கொள்வது குறித்தும் இரண்டாம் ஜாமங்களின் கதையும் துருக்கி தொப்பி நாவலும் பேசுகின்றன.

பலதார மணம் என்பது போர்க் காலத்து விதவைகளாகவும் அநாதைகளாகவும் ஆக்கப்படும் பெண்களின் வாழ்க்கை நலன் கருதி உருவாக்கப்பட்ட சட்டமாகும். ஆனால் பிற்காலத்தும் அது தொடர்ந்து நடைமுறையாக்கப்பட்டது. பலதார மணமுறையும் வெளிநாட்டு வாழ்க்கையும் பெண்களை, தனிமைக் காலத்தில் சிக்கவைக்கும் சூழலை உருவாக்கின. இத்தனிமைக் காலம் இவர்களை மீறல்களுக்கு உள்ளாக்கும் என்பதாலேயே இறுக்கமான விதிகளும் மிகுந்த ஒழுக்கக் கட்டுப்பாடுகளும் பெண்களின் மீது சுமத்துவதற்குக் காரணமாயின என்று எண்ணத் தோன்றுகிறது. பெண்ணுக்கான சுதந்திரத்தை இஸ்லாமிய அடிப்படைச் சட்டங்கள் வழங்கினாலும் எதார்த்த வாழ்க்கை முறையில் அவை பேணப்படுவதில்லை. எனவே பெண் சுதந்திரம் என்பது குர்ஆனின் மேற்கோள்களால் மட்டுமே சாத்தியமாகிவிட முடியாது.

இஸ்லாமிய நாவல்களில் நாட்டார் வழக்காற்றுக் கூறுகள் மிகுதியாகப் பேசப்பட்டுள்ளன. தொன்மக் கதைகள், வட்டார வழக்குகள், சடங்குசார் நிகழ்வுகள் என்று பலவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. உருது முஸ்லிம்களின் சடங்குகளை விரிவாகப் பேசுவதாக அர்ஷியாவின் ‘ஏழரைப் பங்காளி வகையறா’ நாவல் உள்ளது. தொன்மக் கதைகள், பேய் பற்றிய நம்பிக்கைகள் குறித்து மீரான் மைதீன் ‘ஓதி எறியப்படாத முட்டைகள்’ நாவலில் காணலாம். சமயங்களின் மீயியற்கை நிகழ்வுகள் எதை நோக்கியதாக உள்ளன? அவற்றை யார் அதிகம் பேசுகின்றனர்? என்று காணும் போது சமய போதகர்கள் கதை உருவாக்கத்திலும் (கடலோர கிராமத்தின் கதையில்) அடித்தள மக்கள் அதன் பரவலாக்கத்திலும் ஈடுபடுகின்றனர். ஜாகிர் ராஜாவின் கருத்த லெப்பை நாவலில் நாட்டார் வழக்காற்றுப் பாடல்களைப் பதிவு செய்துள்ளார்.

இத்தகைய உள்ளூர்க் கலாச்சாரங்கள் இஸ்லாமியத்தின் மைய நீரோட்டத்திலிருந்து விலகியவையாக இருந்தாலும் இஸ்லாமியப் பண்பாடாகவே இவை அடையாளப்படுத்தப் படுகின்றன / பதிவு செய்யப்படுகின்றன. இஸ்லாமிய நாவல்கள் சித்திரிக்கும் இஸ்லாமியப் பண்பாடு தூய்மைவாதத்திற்கு எதிரான பிரதேச கலாச்சார உள்வாங்குதலைக் கொண்ட மிக எதார்த்தமான மக்களின் வாழ்க்கை முறையைச் சித்திரிக்கின்றன. இவர்களின் பண்பாட்டிற்கான வேர்களைச் சுற்றியுள்ள மற்ற பண்பாட்டிலும் சேர்த்துக் கண்டடைய வேண்டியுள்ளது.


துணை நூற்பட்டியல்:

1. பின் நவீனத்துவ வாசிப்பில் இஸ்லாம் பிரதிகள், ஹெச் ஜி. ரசூல், மருதா வெளியீடு, 2009.

2. இஸ்லாத்தில் மனுவாதிகள், மசூது ஆலம்ஃபலாஹி அளித்த நேர்காணல், கீழைக்காற்று, 2006.

3. இஸ்லாமியத் தமிழ்ப் புதினங்கள் சித்திரிக்கும் அறியப்படாத வாழ்வும் பண்பாடும், மு. அப்துல் சமது, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2004.

4. பின் காலனிய சூழலில் அடித்தள முஸ்லிம்கள் குறித்த உரையாடல், ஹெச்.ஜி.ரசூல், puthuvisai.com/ja08/rasool.php

5. அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய ஏழாம் மாநாடு, ஆய்வுக் கோவை, அப்துல் ரகுமான் (தொகு), இஸ்லாமிய இலக்கியக் கழகம், 2007.

6. கருத்த லெப்பை, ஜாகிர் ராஜா, மருதா வெளியீடு, 2007.

7. வடக்கே முறி அலிமா, ஜாகிர் ராஜா, மருதா வெளியீடு,2009.

8. ஒரு கடலோர கிராமத்தின் கதை, தோப்பில் முகம்மது மீரான், காலச்சுவடு பதிப்பகம், 1988.

9. இஸ்லாமியப் பெண்ணியம், ஹெக். ஜி.ரசூல், பாரதி புத்தகாலயம், 2006.

(கட்டுரையாளர், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறை முனைவர் பட்ட ஆய்வாளர். மானுடவியல் கோட்பாட்டுப் பின்னணியில் சங்க இலக்கிய ஆய்வை மேற்கொண்டு வருகிறார்.)

நன்றி: கீற்று

சனி, 8 ஜனவரி, 2011

படிக்க வேண்டிய தலையங்கம்

ட்டு போட்டு பதவி தந்து, நாட்டைக் காப்பாற்றச் சொன்னால், ஓட்டைப் பிரித்து வீட்டுக்குள் இறங்காத குறையாக மக்களின் வரிப் பணத்தை விழுங்கி ஏப்பம் விடும் அரசியல்வாதிகள் இன்று சைக்கிளுக்குச் சக்கரம் மாதிரி தவிர்க்க முடியாத அம்சம் ஆகிவிட்டார்கள்.


வல்லூறுகளிடம் காயப்பட்ட புறாவாக காவல் நிலையத்தில் முறையிடப் போன அபலைப் பெண்களை, காக்கி ஓநாய்களே வேட்டையாடித் தீர்த்த வேதனைகள் பலதும் பார்த்துவிட்டோம். வயிற்று வலி என்று போகிற இடத்தில்... மயக்க மருந்து கொடுத்து, சிறுநீரகத்தையே தங்கள் கட்டணமாக உருவிக்கொண்ட சில மருத்துவர்களும் இங்கு உண்டு!

சேர்த்த பணத்துக்கு கள்வர்களிடம் இருந்து பாதுகாப்பு தேடி வங்கியிலே போட்டு வைத்தால், வங்கி ஊழியரின் உருவத்தில் உள்ளேயே கொள்ளையன் காத்திருப்பதையும் சில நாட்களுக்கு முந்தைய கைதுச் செய்தியில் கவனித்து இருப்போம். ஆசிரமத்துக்குள் ஆபாசம், கோயிலுக்குள் கும்மாளம், கல்விக் கூடத்தினுள் காமவெறி மட்டுமல்ல... நீதிதேவனுக்கே மிரட்டல் விடுக்கும் கறுப்புக் கோட்டு பற்றியும் ஊடகங்கள் அண்மையில் போட்டுத் துவைத்தன.

இப்படி, குளிக்கப் போகிற இடத்தில் சேற்றைப் பூசிவிடுகிற அவல விதிவிலக்கு களின் வரிசையில்... தனியார் செக்யூரிட்டி நிறுவனம் என்ற போர்வையில், மக்களின் பாதுகாவலர்களாகக் 'கடமை' ஆற்றிக்கொண்டே, பெண்களின் கழுத்துச் செயினை அறுத்துக்கொண்டு இருந்த ஒரு கூட்டத்தை சென்னையில் பிடித்து இருக்கிறது போலீஸ்.

சீருடைகளையே சீரழிப்புக்கான ஆயுதங்களாகப் பயன்படுத்திக்கொள்கிற இந்த அபாய கலாசாரத்தை அடிமட்டத்தில் இருப்பவர்கள் வரை கற்றுக்கொண்டு விட்டார்களே என்ற கவலை பெரிதாக அரிக்கின்றது.

மன்னன் எவ்வழியோ, மக்களும் அவ்வழி என்பார்கள்!

தாய்ப் பாலையே நஞ்சாக்கும் தரங்கெட்ட காரியம் இன்னும் எங்கெல்லாம் ஊடுருவப் போகிறதோ?

நன்றி: ஆனந்த விகடன் - 12 ஜனவரி 2011

செவ்வாய், 4 ஜனவரி, 2011

மன்மோகன்சிங் என்னும் கல்லுளிமங்கன் - 'வினவு' கட்டுரை

“பிரதமர் நாற்காலியின் கவுரவத்தை குலைத்து விடாதீர்கள்” என்று எதிர்க்கட்சிகளை எச்சரித்திருக்கிறார் அன்னை சோனியா.


நாற்காலி என்ற அஃறிணைப் பொருளுக்கு கவுரவம் ஏது என்று நீங்கள் குழம்ப வேண்டாம்.

“வி வாண்ட் ஜே.பி.சி” “வி வாண்ட் ஜே.பி.சி” என்று கடந்த பல நாட்களாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அலைகடலாகக் குமுறிக் கொந்தளிப்பதையும், ஆழ்கடலின் அமைதியும் புன்னகை மாறாத முகமும் கொண்ட அவைத்தலைவர் மீரா குமார், அமைதி அமைதி என்று 4 முறையும், இருக்கைக்கு செல்லுமாறு 2 முறையும் மென்மையாக கையசைத்து விட்டு, பிறகு அவையை ஒத்தி வைப்பதாக கூறி ஒரு முறை கைகூப்பி வணக்கம் சொல்வதுடன் படம் முடிவதை அன்றாடம் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். அரங்கம் நிறைந்த காட்சியாகத் தொடங்கி, மெல்ல மெல்ல கூட்டம் குறைந்து, .. நேற்றோடு படம் தூக்கப்பட்டுவிட்டது.

நடந்து முடிந்த இந்தக் களேபரத்தை ஆடாமல் அசையாமல், அலட்டிக் கொள்ளாமல் எதிர்கொண்டவை நாடாளுமன்றத்தில் இருந்த இரண்டு பொருட்கள் மட்டுமே. முதலாவது நாடாளுமன்ற நாற்காலி. இரண்டாவது மன்மோகன்சிங்.

எனவே, “நாற்காலியின் கவுரவத்தை குலைத்து விடாதீர்கள்” என்று அன்னை இரு பொருள்படவே கூறியிருக்க வேண்டும். பிரதமரை இழிவு படுத்துவது நமது நோக்கமல்ல. தனது கூற்றை சோனியாவே தெளிவு படுத்தியிருக்கிறார். ”Ms.Gandhi complimented the Prime minister on ‘his wise leadership’, on his ‘remaining calm amidst the storm” என்று சோனியா சொன்னதாக எழுதியிருக்கிறது இந்து பத்திரிகை. “பிரதமருடைய இந்த ‘முயற்சி‘ யில் காங்கிரசு கட்சி அவருக்குப் பின்னால் உறுதியாக நிற்கும்” என்றும் அன்னை சோனியா அறிவித்திருக்கிறார்.

இன்று நாம் காணும் நாடாளுமன்றக் காட்சிகளைப் போன்ற காட்சிகளை முன்னர் தமிழக சட்டமன்றத்திலும் நாம் கண்டிருக்கிறோம். ஊழல் வழக்குகளின் காரணமாக அன்னை ஜெயலலிதாவால் அமர முடியாத முதல்வர் நாற்காலியில், ஒரு ஓரத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஒண்டிக் கொண்டிருந்தபோது தமிழக சட்டமன்றத்திலும் இதுதான் நடந்தது.

முதல்வர் நாற்காலியாக இருந்தாலென்ன, பிரதமர் நாற்காலியாக இருந்தாலென்ன, அஃறிணைப்பொருட்கள் என்ற வகையில் அவையிரண்டும் சமமே. அதே நேரத்தில் அவற்றில் அமர்ந்திருந்த மன்மோகன் சிங்கும் பன்னீரும் சமம் என்று கூறிவிடமுடியாது.

பன்னீர் அமைச்சராவதற்கு முன் டீக்கடை முதலாளி. மன்மோகன் சிங்கோ உலக வங்கி அதிகாரி. பன்னீருக்கு விவரம் பத்தாது என்பதால் பேசுவதில்லை. மன்மோகன் சிங் ரொம்ப விவரமறிந்தவர் என்பதால் பேசுவதில்லை. மவுனமாக இருப்பதனால் முட்டாளும் அறிவாளியும் சமமாகி விட முடியாதில்லையா? அதனால்தான் ‘அறிவார்ந்த தலைமை’ என்று அன்னை சோனியா அழுத்திக் கூறியிருக்கிறார்.

”நம்முடைய அரசாங்கத்திடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை, நாம் பயப்படுவதற்கும் எதுவும் இல்லை” என்றிருக்கிறார் சோனியா. உண்மைதானே. தேசிய நெடுஞ்சாலைகளின் கப்பிக்கல் முதல் கான்கிரீட் தூண்கள் வரை அனைத்திலும் கமல்நாத்துக்கு கழிவுத்தொகை 15 சதவீதம் என்பது வெளிவந்து விட்டது. முகேஷ் அம்பானிக்கு கொடுக்கப்பட்ட 91,000 கோடி வரிச்சலுகை ரகசியம் வெளிவந்து விட்டது. ராஜா மட்டுமல்ல, கமல்நாத், ஆனந்த் சர்மா, பிரபுல் படேல் முதலான அமைச்சர்கள் யார் யாருடைய சிபாரிசின் பேரில் பதவியைப் பெற்றார்கள் என்பது ராடியா டேப்பில் வெளிவந்துவிட்டது. மற்ற அமைச்சர் பெருமக்களின் நியமனம் குறித்த ரகசியங்கள் பாக்கி உள்ள டேப்புகள் ஒலிபரப்பாகும்போது தெரியவரக் கூடும்.

அமைச்சர்களை நியமிப்பவர் பிரதமர். டேப்புகளில் பேசியிருக்கும் பிரமுகர்கள் எல்லோரும் “மேலிடத்தில் பேசிவிட்டேன்” என்று சொல்லும்போது, பிரதமரிடம் பேசிவிட்டதாகத்தான் அதற்கு நாம் பொருள் கொள்ள முடியும். தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரியாக ராஜாவை நியமிக்க பிரதமரிடம் சிபாரிசு செய்த டாடா மாட்டிக் கொண்டு விட்டார். சிபாரிசை அமல்படுத்திய மன்மோகன் மவுனம் சாதிக்கிறார். லாபியிங் செய்த ராடியா மீது விசாரணை. விசாரணையை நடத்துவது லாபியிங்குக்கு இடம் கொடுத்து மடமும் கொடுத்த மன்மோகன் சிங் அரசு. இந்தக் கேலிக்கூத்தை எங்கே போய் சொல்ல?

எந்த மந்திரிக்கு எந்த கார்ப்பரேட் சிபாரிசு என்று இப்போது தெரிந்து விட்டது. பிரதம மந்திரியாக மன்மோகன் சிங்கை நியமிக்க யார் யாருக்கு சிபாரிசு செய்திருப்பார்கள்? மேற்படி உண்மை ராடியா டேப்பில் வருமா என்று சொல்ல முடியாது. அது ஒருவேளை விக்கி லீக்ஸில் வெளிவரக்கூடும். ஏனென்றால், பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங்கை சிபாரிசு செய்தவர்கள் உலக வங்கியும், அமெரிக்க முதலாளிகளுமாயிற்றே.

அந்த ரகசியம் வெளியில் வந்துவிட்டாலும் மன்மோகன் சிங் பேசமாட்டார். அன்னை சோனியா சொல்லியிருப்பது போல காங்கிரசு கட்சியும் அதற்கெல்லாம் பயந்து விடாது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று அத்தனை கட்சிகளின் அம்மணப் படங்களும்தான் ராடியா டேப்பில் ஓடுகின்றன. யாரைப் பார்த்து யாரும் கூச்சப்படுவதற்கோ தலை குனிவதற்கோ என்ன இருக்கிறது? “இன்று நீ நாளை நான்” என்று டவுசர் கழட்டப்பட்டவர்களும், கழட்டப்பட இருப்பவர்களும் ஒருவரை ஒருவர் பார்த்து புரிந்துணர்வுடன் புன்னகை பூத்துக் கொள்ளலாம். அவ்வளவுதான். பயப்படுவதற்கு வேறெதுவும் இல்லை.

இந்த இரைச்சல்கள் கூச்சல்களெல்லாம் சிறுபிள்ளைத் தனமானவை என்பதை மன்மோகன்சிங் அறிவார். அதனால்தான் நாடாளுமன்ற அமளி துமளிகளைக் கண்டு அவர் அதிரவில்லை. மவுனமாகப் புன்னகை பூக்கிறார். இது முற்றும் உணர்ந்தவரின் மவுனம். அறிவார்ந்த மவுனம்.

இதற்கு முன் எத்தனை ராடியா டேப்பை அவர் பார்த்திருக்கிறார்?

1994 இல் நாட்டுக்கும், நாடாளுமன்றத்துக்கும் தெரியாமலேயே காட் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடவைத்தார் மன்மோகன் சிங். அன்றைக்கும் நாடாளுமன்றம் சலசலக்கத்தான் செய்தது. அறிவாளி மன்மோகன் சிங் அசைந்து கொடுக்கவில்லை.

2005 இல் அமெரிக்காவுக்கு கிளம்பிய மன்மோகனிடம், “ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தாகப் போகிறதா?” என்று கேள்வி எழுப்பினார்கள் இடதுசாரிகள். “இல்லவே இல்லை” என்று சாதித்தார் மன்மோகன். வாஷிங்டனிலிருந்து வெளிவந்த பிரணாப்-ரம்ஸ்ஃபீல்டு, மன்மோகன்-புஷ் கூட்டறிக்கைகள் இந்தப் பொய்யை அம்பலமாக்கின. இராணுவ, அணுசக்தி ஒப்பந்தங்கள் இறுதியாக்கப்பட்டிருந்தன.

பிறகு அணுசக்தி ஒப்பந்தத்தின் மீதான நாடாளுமன்ற விவாதம் வந்தது. “ஹைட் சட்டமா, நான் கேள்விப்பட்டதே இல்லையே” என்றார் பிரதமர். அமெரிக்க செனட் உறுப்பினர்கள் குட்டை உடைத்தனர். நாடாளுமன்றத்தில் கூச்சல். அன்றும் மவுனமாய் இருந்தே சாதித்தார் மன்மோகன்சிங்.

இன்று ஐயப்பன் பஜனையைப் போல அரசியல் முச்சந்திகள் தோறும் அலறுகிறது ராடியா டேப். அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் ராடியாவுடன் தொடர்பு கொண்டிருந்த பிரபலங்கள் அனைவரும் “டேப்பில் என்னுடைய குரலை மட்டும் அழித்து விடு இறைவா” என்று மனதுக்குள் மன்றாடுகின்றனர். கோட்டு சூட்டு போட்ட கார்ப்பரேட் கனவான்கள் ” நீ 50,000 கோடி, நீ 10,000 கோடி” என்று ரோட்டில் கட்டி உருளுகின்றனர். அரசியல் வாதிகளை டிவியில் உரித்தெடுக்கும் ஊடக நட்சத்திரங்களெல்லாம் உளறுகின்றனர். ஊரே அமர்க்களப்படுகிறது.

உத்தமர் மன்மோகன்சிங் மட்டும் மவுனம் சாதிக்கிறார். இந்த மவுனத்தின் பொருள்தான் என்ன? இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று. வாய் திறந்து பேசினால் அந்த வார்த்தைக்கு ஒரு அர்த்தம்தான். மவுனமோ இரவைப் போன்றது. அதற்கு ஆயிரம் அர்த்தங்கள். பல்லாயிரம் பொழிப்புரைகள்.

“நடப்பது எதுவும் அவருக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் அவர் மவுனமாக இருக்கிறார்.”

“அவர் ஊழல் என்ற சொல்லைக்கூட உச்சரித்து அறியாத உத்தமர். தன்னைச் சுற்றி இத்தனை ஊழலா என்ற அதிர்ச்சியில் ஊமையாகிவிட்டார்.”

“பதவியே வேண்டாம். என்னை விட்டு விடுங்கள் என்று சோனியாவிடம் விக்கி விக்கி அழுதும் பயனில்லாததால் விக்கித்து நிற்கிறார்.”

- மன்மோகனின் மவுனத்துக்குத்தான் எத்தனை விளக்கங்கள்!

மற்றவர்களையெல்லாம் விடுங்கள். “பிரதமரைப் பேசச் சொல்” என்று சுப்ரீம் கோர்ட்டில் பெட்டிசனே போட்டார் ஒரு ஆசாமி. அந்த சு.சாமியே சொல்கிறார்: பிரதமர் நல்லவர்.

நல்லவருக்கு அடையாளம்தான் என்ன?

அடிஅடின்னு அடிச்சாலும், டமாரம் வச்சி அடிச்சாலும் கல்லுளி மங்கனாட்டம் கம்முன்னு இருக்காரே, அதிலேர்ந்தே தெரியல, அவரு ரெம்ப ..நல்லவரு.

ஓ. பன்னீரை விட, வடிவேலுவை விட, ரெம்ப….ரெம்ப நல்லவரு!

நன்றி: வினவு

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...