உங்களை_உங்களுக்கு_தெரியுமா?
இந்த உலகில் வாழும் நீங்கள் கூட ஒரு தனி உலகம், தெரியுமா?
இந்த உலகில் வாழும் நீங்கள் கூட ஒரு தனி உலகம், தெரியுமா?
மனிதர்களாகிய நாங்கள் அனைவருமே, இந்த உலகில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். அது சரி தானே? ஆனால் இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும், உண்மையில் ஒரு தனி உலகம் என்பது உங்களுக்குத் தெரியுமா? அடடா, வழக்கம் போல் உங்களைக் குழப்ப ஆரம்பித்துவிட்டேன் என்று யோசிக்கின்றீர்களா? சரி சரி, குழப்பம் ஒன்றும் வேண்டாம், இதற்குப் பின்னால் அப்படி என்ன தான் மறைந்து இருக்கின்றது என்பதைத் தெரிய வேண்டுமென்றால் தொடர்ந்து படியுங்கள்.
ஒவ்வொரு மனிதனும் ஒரு தனி உலகம் என்று கூறியிருந்தேன். ஆனால் அது யாருக்கு உலகமென்று தெரியுமா? ஒவ்வொரு மனிதனிலும் நமது கண்களுக்கே தெரியாமல் நுண்ணுயிரிகள் எனப்படும் Microorganisms வாழ்ந்து வருகின்றன. இவை நுண்ணோக்கியின், அதாவது Microscopeஇன் உதவியுடன் மட்டும் தான் பார்க்கக் கூடிய, தனிக் கலம் (Single Cell) அல்லது கூட்டுக் கலங்களால் (Multicellular) ஆன உயிரினங்கள் ஆகும். இவற்றைத் தீ நுண்மம் (Virus), கிருமி (Bacteria), பூஞ்சை (Fungi) மேலும் மூத்தவிலங்கு (Protozoa) என்று முக்கிய நான்கு வகையாகப் பிரிக்கலாம். பெரும்பாலான நுண்ணுயிரிகள் ஆபத்தானவை என்றாலும், அவற்றுள் சில, மனிதனுக்குப் பயனுள்ளதாகவும் இருக்கின்றன. உதாரணத்திற்கு வைரசுகள் மற்றும் கிருமிகள் பலவிதமான நோய்களுக்குக் காரணமாக இருந்தாலும், மனித உடலில் வாழும் அனைத்துக் கிருமிகளும், நமது உடலின் செயல்பாட்டுக்கு மட்டும் இல்லாமல், நாம் உயிர் வாழ்வதற்கும் உதவுகின்றன என்றால் நம்புவீர்களா?
சரி, நமது உடலில் எத்தனை நுண்ணுயிரிகள் வாழ்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் நினைப்பது போல் நூறு அல்லது ஆயிரம் இல்லை. பல கோடி கோடி (> 1.000.000.000.000.000) நுண்ணுயிரிகள் நமது உடலில் மற்றும் உடலினுள் வாழ்கின்றன என்பது தான் உண்மை! குறிப்பாகக் கிருமிகளை எடுத்துக்கொண்டால், புவியில் காணப்படும் கிட்டத்தட்ட 3.000.000 கிருமி வகைகளில், நமது உடலில் குறைந்தது 10.000 கிருமி வகைகள் வாழ்கின்றன! உதாரணத்திற்கு நமது வாயினுள் மட்டுமே 10 கோடிக்கும் அதிகமான கிருமிகள் வசிக்கின்றன. இதனுடன் ஒப்பிடும் போது, நமது குடலில் வாழும் கிருமிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கின்றது. இதில் வியப்பூட்டும் விஷயம் என்ன தெரியுமா? நமது உடலின் 99,9 சதவீதமான இடங்களில் நுண்ணுயிரிகள் காணப்படுகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். நமது உடலில் வாழும் இந்த அனைத்துக் கிருமிகளையும் ஒன்றாக எடுத்து, ஒரு தராசில் வைத்துக்கொண்டால், அதன் நிறை 2kg ஆக இருக்கும். நம்பவே முடியவில்லை அல்லவா?
சரி, இந்த நுண்ணுயிரிகள் பற்றிய தகவலை அறிந்ததும் உங்களுக்குத் தற்போது என்ன தோன்றுகின்றது? பயமாக இருக்கிறதா அல்லது அருவருப்பாக இருக்கிறதா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக