21/01/2017 அன்று வெளியான ஹிந்து நாளிதழில்
"பேலியோ டயட் - சர்வ ரோக நிவாரணியா?"
என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது.
அதற்கான மறுப்பு / விளக்கமாக இக்கட்டுரை.
Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
கட்டுரையின் கருத்துகளில் நான் மாறுபடும் விசயங்களை கூறுகிறேன்.
பேலியோ சில மூடநம்பிக்கைகள்
எனும் சிறு தலைப்பின் கீழ்
// பேலியோ பல நோய்களை கட்டுப்படுத்தும் . சில நோய்களை வரவழைக்கும்// என்று கூறப்பட்டுள்ளது.
ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த உணவு முறை என்பது நமது முன்னோர்கள் பல லட்சம் வருடங்களாக உண்டு வந்த உணவு முறை.
இடையில் பத்தாயிரம் வருடங்களாகத் தான் சர்க்கரை, அரிசி, கோதுமை வந்தன. அதிலும் கடந்த நூற்றாண்டில் தான் ரீபைன்டு செய்யப்பட்ட தானியங்கள் , சீனி, குளிர்பானங்கள் உள்ளே வந்தன.
இதையெல்லாம் உண்ணாத மனிதன் நீண்ட காலம் ஆரோக்கியத்தோடு வாழ்ந்தான். ஆகவே நவீன கால உணவு முறை நமது ஜீன்களில் தேவையற்ற ஊறு செய்யும் மாற்றங்களை ( mutations) கொண்டு வந்து, நம்மை நோய்களின் கூடாரமாக்கிவிட்டன.
மீண்டும் நாம் முன்னோரின் உணவியலை ஏற்று நடக்கும் போது நாகரீக மனிதனின் பல நோய்கள் குணமாகின்றன.
இது உண்மை.
பல நோய்கள் பேலியோவால் வருகின்றன என்ற கூற்றில் நிச்சயம் உண்மை இல்லை.
ஏனெனில் கொழுப்பை மனித இனம் அறவே ஒதுக்கியது கடந்த அரை நூற்றாண்டு காலமாய்த்தான்.
கொழுப்பு உணவை ஒதுக்கி வைத்து விட்டு நாம் சாதித்தது ஒன்றுமில்லை.
அது ஒரு பூச்சாண்டி வேலை என்பது மெல்ல மெல்ல இப்போது தான் தெரிய ஆரம்பிக்கிறது.
நம் உணவு முறையில் கொழுப்பு பிரதானமாகவும் புரதச்சத்து தேவையான அளவும் மாவுச்சத்து குறைவாகவும் உள்ளது.
இப்படி உண்ணும் போது நம் உடல் பொலிவுடன் இளமைத்துடிப்புடன் செயல்படுவதை அனைவரும் உணர்ந்துள்ளனர்.
இதை வாழ்க்கையில் நடைமுறை படுத்தாத மக்கள் தான் தேவையற்ற கருத்துகளை பரப்பிவருகின்றனர் என்பது திண்ணம்.
//மேலும், இந்த கட்டுரையில் டைப் 2 டாயபடீஸ் மக்கள் தான் இந்த டயட்டால் பயனடைவார்கள். டைப் 1 க்கு இதனால் தீர்வில்லை என்று கூறியுள்ளார்//
தவறு.
நீரிழிவில் இருவகை .
ஒன்று டைப் 1 - இவர்களுக்கு பிறவியில் இருந்தே இன்சுலின் சுரப்பு நிகழாது அல்லது மிக மிக குறைவான அளவு சுரக்கும்
இவர்களுக்கு நாம் வெளியில் இருந்து இன்சுலின் கொடுக்க வேண்டும்.
டைப் 2 - இது வாழ்கையின் ஓட்டத்தின் பாதியில் நம்மை வந்து அடைவது. இதில் இன்சுலின் நன்றாக சுரந்தாலும் வேலை செய்யாது( insulin resistance) அல்லது இன்சுலின் சுரக்கும் செல்கள் பழுதாகி அதனால் இன்சுலின் போதிய அளவு இல்லாமை. ( beta cell failure)
பேலியோ டயட் இவர்கள் இருவருக்கும் நன்றாக வேலை செய்யும். எப்படி?
டைப் 1 நபர்களுக்கு நாம் வெளியில் இருந்து கொடுக்கும் இன்சுலினின் தேவையை மூன்றில் ஒரு பங்காக குறைத்து விடும். மேலும், நீண்ட நாள் ஓட்டத்தில் சர்க்கரையை அருமையாக கன்ட்ரோல் செய்து நீரிழிவின் நீண்ட நாள் பிரச்சனைகளான சிறுநீரக அழற்சி, ரெடினோபதி போன்றவை வராமல் தடுக்கும்.
HbA1C ( மூன்று மாத சராசரி சர்க்கரை அளவு) தொடர்ந்து நல்ல நிலையிலேயே மெய்ட்டெய்ன் ஆகும்.
ஆகவே டைப் 1க்கு நண்பன் இந்த பேலியோ டயட்.
// சிறுநீரகங்களிலும் கல்லீரலிலும் பிரச்சனை இருந்தால் பேலியோ டயட்டை எடுக்க முடியாது. மருத்துவரின் ஆலோசனைப்படிதான் எடுக்க வேண்டும்//
உண்மை. நமது முந்தை அதிகமான மாவுச்சத்து உணவு முறையால் கல்லீரலில் கொழுப்பு படிந்து fatty liver இருக்கலாம், அல்லது hepatitis B போன்ற வைரஸ் தொற்று கல்லீரலில் இருக்கலாம். கிட்னிகள் பிரச்சனையாக இருக்கலாம்.
இந்த பிரச்சனைகளை மனதில் கொண்டு தான், பேலியோ தொடங்கும் முன் ஒரு ரத்த பரிசோதனை அவசியம் என்கிறோம்.
மேலும் பிரச்சனைகளின் தீவிரத்தை பொறுத்து இந்த உணவு மாற்றம் தேவையா இல்லையா என்பதை தெரிவிக்கிறோம்.
சிறுநீரக பிரச்சனையை medical renal disease என்கிறோம் . இதில் நீரிழிவால் ஏற்படும் சிறுநீரக நோயை diabetic nephropathy என்கிறோம்.
இந்த diabetic nephropathyக்கு முக்கிய காரணம் - ரத்ததில் சர்க்கரை அளவுகள் தொடர்ந்து அதிகமாக இருப்பது.
இதை பேலியோ சரி செய்யும்.
எனவே கிட்னிகள் மீண்டும் குணமாகும்.
ஆனால் , அது கிட்னிகள் எந்த அளவு சேதாரத்துக்கு உட்பட்டிருக்கிறது என்பதைப்பொறுத்தது.
ஆரம்ப கட்ட பிரச்சனையாக இருப்பின் சரியாகும். End stage renal diseaseஐ சரி செய்ய எந்த மருத்துவ முறையாலும் இயலாது என்பதே இப்போதைய நிலை.
சிறுநீரகத்தின் வடிகட்டும் திறனை ஆராய்ந்து அதைப்பொறுத்து protocol வகுக்கப்பட்டு புரதச்சத்தின் அளவுகளை குறைத்து கொடுக்கிறோம். ஆகவே கிட்னிகள் மேற்கொண்டு பிரச்சனைக்கு உள்ளாக்கப்படுவதில்லை.
கல்லீரல் பிரச்சனைகளில் fatty liver எனும் கல்லீரலில் கொழுப்பு படிந்து காணப்படும் நிலை என்பது பின்னாளில் கல்லீரல் சுருக்க நோயக்கு வழிவகுக்கலாம். பேலியோ உணவு முறையில் fatty liver ரிவர்ஸ் ஆகிறது. குணமாகிறது.
Hepatitis B carrierகளாக உள்ளவர்களுக்கு உள்ளே வைரஸ் இருப்பதாலும் அது நோய் கிருமி தொற்று வகையில் வருவதாலும் அதற்கு பேலியோ தீர்வு தராது.
Hepatitis B உள்ளவர்கள் அதற்குரிய மருந்துகளை எடுக்கவேண்டும்.
// பேலியோ புற்று நோயை எல்லாம் குணப்படுத்த வாய்ப்பே இல்லை//
தவறு. புற்று நோயை உண்டாக்கும் செல்கள் தாங்கள் வளர தீனியாக விரும்பி உண்பது க்ளூகோஸை மட்டும் தான்.
நாம் பேலியோவில் க்ளைசீமிக் இண்டெக்ஸ் அதிகமான உணவுகளை உண்ணாமல் இருப்பதால், ரத்ததில் க்ளூகோஸ் அளவுகள் மிகவும் குறைவாகவே இருக்கும்.
மேலும், நாம் கீடோன்களில் இயங்குவதால் நமக்கு க்ளூகோஸ் தேவையும் படாது.
க்ளூகோஸ் இன்றி கேன்சர் செல்கள் பட்டினி கிடந்து உயிர்விடும். பல்கிப்பெருகுவது நின்று விடும்.
மேலும், ரத்தத்தில் சர்க்கரை அதிகமாக இருந்தால்(hyperinsulinemia) இன்சுலின் அதிகம் சுரந்து கொண்டே இருக்கும்.
இன்சுலின் அதிகமாக சுரந்தால் கேன்சர் வரும் வாய்ப்பு அதிகம் என்கிறது ஆய்வு.
//பேலியோவில் பிரதானமாக புரதம் தான் வலியுறுத்தப்படுகிறது. 65 சதவிகிதம் புரதம். 30 சதவிகிதம் கொழுப்பு/ 5 சதவிகிதம் மாவுச்சத்து என்று கூறப்பட்டுள்ளது//
தவறு. பேலியோவில் 60-70 சதவிகிதம் கொழுப்பு , 25 சதவிகிதம் புரதம், 5 சதவிகிதம் கார்போஹைட்ரேட்டை வலியுறுத்துகிறோம்.
புரதச்சத்தை ஒருவருக்கு அவரது எடைக்கு ஏற்ப எவ்வளவு தேவையோ அதை மட்டுமே உண்ணச்சொல்கிறோம்.
( ஒரு நபருக்கு அவரது எடையில் ஒவ்வொரு கிலோகிராமிற்கும் 1 முதல் 1.5 கிராம் புரதச்சத்து தினசரி கட்டாயத் தேவை)
புரதச்சத்து நிரம்பிய உணவுகள்
1. மாமிசம்
2. முட்டை
3. கொட்டைகள்
4. பனீர்
5. சீஸ்
அசைவர்களுக்கு மாமிசம் உண்பதால் புரதம் கிடைத்து விடுகிறது.
முட்டை உண்ணும் சைவர்களுக்கு தினமும் முட்டைகள் எடுப்பதால் புரதம் கிடைத்து விடுகிறது.
முட்டை கூட உண்ணாத சைவர்களுக்கு , பாதாம் போன்ற மரக்கொட்டைகள், பனீர், சீஸ் போன்ற பொருட்களின் மூலம் புரதச்சத்து கிடைக்கிறது.
மிருகங்களின் மூலம் கிடைக்கும் புரதச்சத்தை animal protein என்கிறோம்.
மாமிசம், முட்டை , பால் போன்றவை மிருக புரதச்சத்துகள்.
தாவரங்கள் மூலம் கிடைப்பவை plant proteins .
இதில் animal proteins தான் நமது உடலில் நல்ல முறையில் செரிமானம் ஆகி உடலில் சேருகிறது . இதை bio availability என்போம். Plant proteins கள் குறைந்த பயோ அவாய்லபிலிட்டி கொண்டவை . அதனால் தான் பேலியோவில் மாமிசம், முட்டை, பால் பொருட்கள் வலியறுத்தப்படுகின்றன.