நம்பிக்கை... இதுதான் நேர்மையான, உண்மையான கேரக்டர் உள்ள கார்
டிரைவர்களின் மூலதனம். காரில் பயணிக்கும் எஜமானர் தன் உயிரையே நம்பி ஒப்படைக்கிறார். அவரது குடும்பத்தினரின் உயிர்களுக்கு டிரைவர்தான் காப்பாளர். ஆட்டோ, டாக்ஸி, பஸ்களிலும் தன்னை நம்பி வந்தவர்களுக்கு டிரைவர் காட்டும் அக்கறையும் லேசுப்பட்டதல்ல!
எத்தனையோ நல்ல டிரைவர்கள் இருக்கும் போது, நம்பிக்கை மோசடி செய்யும் சில கயவர்களும் அந்தப் போர்வையில் இந்த சமூகத்தில் நடமாடுகிறார்கள். பணியில் தாங்கள் தனது கூட்டாளிகளுக்கு துப்புக் கொடுத்து குற்றச் செயல்களில் ஈடுபடவைப்பது ஒரு ரகம்! பணியைவிட்டு நீக்கப்பட்ட டிரைவர்கள், நீண்ட இடைவெளிக்குப் பிறகுஅந்த குடும்பத்திடமே கைவரிசை காட்டுவது அடுத்த ரகம்!
கார் உரிமையாளர்களின் வீட்டில் இருக்கும் சிறுவர்கள், தனியாக இருக்கும் முதியவர்கள், பெண்கள்... இவர்கள்தான் க்ரைம் எண்ணம் கொண்டவர்களின் எளிய இலக்கு.
சிறுவர்களைக் கடத்தி பிளாக்மெயில் செய்து பணம் பறிக்கிறார்கள். முதியவர்கள் என்றால், அவர்களை எதிர்ப்பின்றித் தாக்கிக் கொன்று... வீட்டில் உள்ள நகை, பணத்தைக் கொள்ளை அடிக்கிறார்கள். பணக்கார வீட்டுப் பெண் பிள்ளைகள் என்றால் காதல் வலை வீசி, வெளியூருக்கு அழைத்துச் சென்று சீரழித்து... அதன்பின் தங்கள் பிளாக்மெயிலைத் தொடரு கிறார்கள். மானத்துக்கு பயப்படுகிறோம் என்ற பெயரில் இது போன்ற விதிவிலக்கான கயவர்களிடம் பணத்தைக் கொடுத்து, போலீஸ§க்குக்கூட தெரிவிக்காமல் பெண்களை மீட்டிருக்கிறார்கள் பல குடும்பங்களில்.
திருமணமான பெண் என்றால், வீட்டில் ஆண் இல்லாத நேரம் எது என்று நன்றாகத் தெரிந்து வைத்திருந்து... குடும்பக் கஷ்டங்களைச் சொல்லி பண உதவி பெறுவதுபோல் நடித்து, பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற சம்பவங்களும் உண்டு.
எத்தனையோ குடும்ப ரகசியங்கள், ஆபீஸ் ரகசியங்கள்... இதையெல்லாம் தனிஅறையில் உட்கார்ந்து பேசும் அளவுக்கு காரில் போகும்போது பேசுவதும் நடக்கிறது. 'நம்ம டிரைவர் நல்லவர்' என்று நம்புவது இயல்புதான்! சகலத்தையும் காது கொடுத்துக் கேட்கும் எல்லா டிரைவர்களுமே நல்லவர்களாக இருந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. பெரும் தொகை பற்றிய உரையாடல்கள், பின் ஸீட்டில் அரங்கேறும் பலவீனங்கள் போன்றவை பல சமயங்களில் நல்லவர்களைக்கூட தப்பு வழிக்குத் தூண்டிவிடுவது உண்டு.
நில விஷயங்கள், நகை, பணம்பற்றி பயணங்களின் போது விலாவாரியாகப் பேசும் பழக்கத்தை நம்மவர்கள் தவிர்க்க பழகவேண்டும்.
முன்பெல்லாம் செல்வந்தர்களும், சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களுமே சொந்த கார் வாங்குவார்கள். நிகழ் காலத்தில் நடுத்தரவாசியின் அன்றாட அத்தியாவசியத் தேவைகளில் காரும் ஒன்றாகி விட்டது. அடுத்துத் தேடுவது - டிரைவரை! நல்ல கேரக்டர் உள்ள பையன்... குடிக்காதவன்... திருமணம் ஆனவன் என்கிற பாயின்ட்களை அலசி ஆராய்ந்து அவனது முழு ஜாதகங்கத்தையும் புரட்டிவிட்டுத்தான் வேலைக்கே அமர்த்த வேண்டும். கார்களின் எண்ணிக்கை அதிகமானதே தவிர, அவற்றை ஓட்ட முறையான பயிற்சியும் நிதானமும் பெற்ற டிரைவர்கள் எல்லோருக்கும் கிடைப்பதில்லை.
சென்னை மட்டுமல்ல... தமிழகத்தின்அனைத்து ஊர்களிலும் பார்த்தால், சொந்த கார் வைத்திருப்பவர் களில் கணிசமானவருக்கு டிரைவிங் தெரியாது. இவர் களுக்குப் பெரும் தலைவலி - டிரைவர் தேவை! இங்குதான்... க்ரைம் சம்பவங்களுக்கான அடித்தளம் விரிவாகிறது.\
1990களில் அடையாரைச் சேர்ந்த பிரபல தொழிலதி பரின் மகன் ஸ்ரீராமை கடத்திக் கொன்றவனும் அவர்கள் வீட்டு கார்டிரைவர்தான். இதேபோல்தான் நாகர்கோவிலிலும் நடந்தது... திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் வயதான தன் மனைவியுடன் வசித்து வந்தார். அவரது டிரைவரின் நடத்தை சரியில்லை என்று விலக்கிவிட்டார். சில மாதங்களுக்குப் பிறகு, கெஞ்சிக்கூத்தாடி மீண்டும் வேலைக்குச் சேர்ந்தவன், பணத்தைக் கொள்ளையடிக்க திட்டம்போட்டு, அந்த முதியவரைக் கொன்று விட்டான். உடல்நிலை சரியில்லாத அவர் மனைவியை காரில் கட்டிப்போட்டு, விக்கிரவாண்டி அருகே ரோட்டு ஓரத்தில் கொன்று எரித்துவிட்டான். கொஞ்ச நாளில், கொலைகார டிரைவரையும், அவனது கூட்டாளிகளையும் நாங்கள்பிடித்துவிட்டோம்.
சென்னையில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி சரவணன்... அவர்மனைவி மற்றும் வேலைக்காரப் பெண்மணி ஆகியோர் படுகொலையான விவகாரத் திலும் ஒரு டிரைவரின் தொடர்பை நாம் அறிவோம்! பல்வேறு பிசினஸ், சமுதாயத்தின் உயர்ந்த அந்தஸ்தில் இருந்தவர் சரவணன். சொந்தமாக கார் வைத்திருந்த அவர், தேவைப்படும் போது, அருகில் உள்ள டிராவல்ஸ் ஆபீஸ§க்கு போன்பண்ணி டிரைவரை வரவழைத்துக் கொள்வார். 10, 15 டிரைவர்கள் பல்வேறு காலகட்டங்களில் சரவணன் காரை ஓட்டி இருக்கிறார்கள். அவர்களில் ஒருவன்தான் படுகொலை யின் மையப் புள்ளி. சென்னை மாநகர காவல்துறையின் சிறப்பாக விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்துள்ளனர்.
பொதுவாக ஐ.டி. மற்றும் மல்டி நேஷனல் கம்பெனிகள் தங்களிடம் வேலை பார்க்கும் பணியாளர்களை அழைத்து வரவும், வீட்டில் கொண்டுபோய் விடவும் கார் அனுப்புவது வழக்கம். பெங்களூருவில் சமீபத்தில் ஒரு சம்பவம். அங்குள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்த இளம் பெண்ணை ஏற்றிச் சென்ற காரின் டிரைவர் நடுவழியில் நிறுத்தி, அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டான்.
தமிழகத்திலும் ஏராளமான வேன்கள், ஆட்டோக்கள், கார்களை தனியார் கம்பெனிகள் பயன்படுத்தி வருகின்றன. ஐ.டி. கம்பெனிகள் பெரும்பாலும் இரவு வேளைகளில்தான் செயல்படுகின்றன. படித்த இளம் பெண்கள்தான் அதிகம் வேலை பார்க்கிறார்கள். ஆபீஸ் காரை அனுப்பி ஊழியர்களை வீட்டில் இருந்து அழைத்து வரும்போது, முதல் ஆளாக இளம் பெண் பயணிக்கக் கூடாது. அதேபோல், நிறுவனத்தில் இருந்து வேலையை முடித்துவிட்டுப் போகும்போது, கடைசி ஆளாக இளம் பெண் காரில் இருக்கக் கூடாது. இதற்கெல்லாம் அந்தந்த நிறுவனங்கள்தான் பொறுப்பேற்று கவனிக்க வேண்டும்.
''எல்லாவற்றையும் சந்தேகப்படு!'' என்பது போலீஸ் மூளை.
இன்றைய நாட்டு நடப்பில் பொதுமக்களுக்கும் அதுவேதான் விதி!
இப்படிக்கு: கே.ராதாகிருஷ்ணன் ஐ.பி.எஸ்.
(தமிழக சட்டம் - ஒழுங்குப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக