அதிகாரத்துக்கு எதிராக அஞ்சாமல் போராடும் துணிச்சல்காரர், அருந்ததி ராய்!
காஷ்மீர், ஈழம், மாவோயிஸ்ட்டுகள்... என அனலடிக்கும் பிரச்னைகள் அனைத்திலும் நேர்மையின் பக்கம் நிற்கும் எழுத்துப் போராளி!
மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் 1961-ம் வருடம் நவம்பர் 24-ம் தேதி பிறந்தவர். கேரள அம்மாவுக்கும் பெங்காலி அப்பாவுக்கும் பிறந்தவரின் இளம் பருவம் முழுக்க ஆலப்புழாவில் இருக்கும் 'அய்மெனம்' (Ayemenem) எனும் அழகிய கிராமத்தில் கழிந்தது!
அய்மெனம் கிராமத்தில் கம்யூனிசத்தின் தாக்கம் அதிகம். இதைப்பற்றி, 'அப்போது எல்லாம் அடுத்த வாரம் புரட்சி வந்துவிடும் என்பதுபோலவே இருக்கும்' என்று புன்னகையுடன் குறிப்பிடுகிறார் தனது நூலில்!
கோட்டயத்தில்தான் பள்ளிப் படிப்பு. ஊட்டி லவ்டேலில் இருக்கும் லாரன்ஸ் பள்ளியிலும் சில வருடங்கள் படித்தார். 16 வயதில் டெல்லிக்குச் சென்று கட்டடக் கலை படிப்பில் சேர்ந்தார்!
டெல்லியில் உடன் படித்த சீனியர் ஒருவரைக் காதல் மணம் புரிந்துகொண்டார். ஆனால், நான்கே வருடங்களில் அந்தத் திருமணம் விவாகரத்தில் முடிந்தது!
1997-ல் புக்கர் பரிசு வென்ற இவருடைய 'The God of Small Things' விற்பனையிலும் செம ஹிட். மே மாதம் வெளியான நாவல் ஜூன் மாதமே விற்றுத் தீர்ந்தது. அட்வான்ஸாக மட்டும் அருந்ததி ராய்க்குக் கிடைத்த தொகை 5 லட்சம் பவுண்ட்!
தனது 40-வது வயதில் புக்கர் பரிசு வென்றார் அருந்ததி ராய். இப்போது வரை புக்கர் பரிசு வென்ற ஒரே இந்திய எழுத்தாளர் ராய்தான்!
'The God of Small Things' நாவலை 97-ம் வருடத்தின் உலகின் தலை சிறந்த ஐந்து புத்தகங்களில் ஒன்றாகத் தேர்வு செய்தது 'டைம்' பத்திரிகை. நாவல் வெளியாகி உலகமே கொண்டாடிக்கொண்டு இருக்க... மீண்டும் டி.வி. சீரியலுக்கு திரைக்கதை எழுத வந்தார் அருந்ததி ராய். The Banyan Tree என்ற சீரியலின் திரைக்கதை ராய் எழுதியதே!
புக்கர் பரிசு வென்றதும், 'இது ஐந்து நீதிபதிகளின் தீர்ப்பு. ஒருவேளை வேறு ஐந்து பேர் நீதிபதிகளாக இருந்திருந்தால், வேறு ஒரு புத்தகம் தேர்வாகி இருக்கும். அதனால், என் புத்தகம் மட்டும்தான் சிறந்தது என்று நான் கருதவில்லை!' என்பது அருந்ததியின் பதில் மரியாதை!
நாவல் எழுதிப் புகழ் பெறும் வரை, டெல்லி ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் எடுத்த ஏரோபிக்ஸ் வகுப்புகள் மூலம் கிடைத்தது மட்டுமே வருமானம்!
நர்மதா அணைத் திட்டத்தால் பாதிக்கப்படும் ஆதிவாசிகள், விவசாயிகளின் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர், புக்கர் பரிசு மூலம் தனக்குக் கிடைத்த பணத்தில் 30 ஆயிரம் டாலரை 'நர்மதாவைக் காப்பாற்றுவோம் அமைப்பு'க்கு வழங்கினார்!
பொக்ரானில் இந்தியா அணுகுண்டு வெடித்துச் சோதித்தபோது, 'வல்லரசின் முதல் படி' என்று தேசமே கொண்டாடியது. ஆனால், 'அணு ஆயுத அரசியல் மிக மோசமானது!' என்று 'The end of imagination' எனும் கட்டுரையில் வெடித்தார் அருந்ததி ராய்!
1985-ல் வெளியான Massey Sahib என்ற திரைப்படத்தில் அருந்ததி ஒரு கிராமத்துப் பெண்ணாக நடித்தார். அந்தப் பட இயக்குநர் பிரதீப்பை இரண்டாவ தாகத் திருமணம் செய்துகொண்டார்!
பிரதீப் இயக்கிய In Which Annie Gives It Those Ones படத்துக்கு அருந்ததி திரைக்கதை எழுதினார். இதற்கு சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது கிடைத்தது!
சேகர் கபூரின் 'பண்டிட் குயின்' திரைப்படத்தைக் கடுமையாக விமர்சித்தார். The Great Indian Rape Trick என்ற தலைப்பில் கட்டுரை எழுதியவர், 'உயிருடன் இருக்கும் பூலான்தேவியின் வாழ்க்கையை அவருடைய அனுமதி இன்றி சினிமாவாக எடுத்தது தவறு!' என்று கடும் கண்டனம் தெரிவித்தார்!
நர்மதா அணை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை, 'நாகரிக வன்முறை' என்று விமர்சித்தார். இதற்காக இவர் மீது 'நீதிமன்ற அவமதிப்பு' வழக்குப் பதிவு செய்தது நீதிமன்றம். அதற்காக வருத்தமோ, மன்னிப்போ கேட்க மறுத்தார் ராய். அதனால், அடை யாளமாக ஒருநாள் சிறைத் தண்டனையும், 2,000 அபராதமும் விதிக்கப்பட்டது. ஒரே ஒருநாள் சிறை சென்று வந்தார் அருந்ததி ராய்!
2003-ம் வருடம் நியூயார்க் நகரில் 'ஏகாதிபத்திய ஜனநாயகம் - உடனடித் தயாரிப்பு' என்ற தலைப்பில் அமெரிக்காவை விமர்சித்து, அருந்ததி ராய் ஆற்றிய நீண்ட உரை உலகப் புகழ் பெற்றது!
2006-ம் வருடம் ஜார்ஜ் புஷ் இந்தியா வந்தபோது, 'War Criminal' என்று சாடி கட்டுரை எழுதினார் ராய்!
கேரளாவின் முத்தங்கா காடுகளில் ஆதிவாசி மக்கள் கொடூரமாக அடித்துத் துரத்தப்பட்டபோது, உடனடியாக அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தவர், 'உங்கள் கைகளில் ரத்தக் கறை படிந்திருக்கிறது' என்று கேரளாவின் அப்போதைய முதல்வர் ஏ.கே.அந்தோணிக்குக் கடிதம் எழுதினார்!
இலங்கையில் யுத்தம் நடந்தபோது, எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள் பலரும் கள்ள மௌனம் சாதித்தபோது, 'இலங்கையில் நடப்பது ஓர் இனப் படுகொலை' என்று வெளிப்படையாகக் கட்டுரை எழுதியவர் ராய்!
தண்டகாரண்யா காட்டில் இந்திய அரசு நடத்தி வரும் போரை 'இந்தியாவின் இதயத்தின் மீதான போர்' என்று வர்ணித்துக் கட்டுரை எழுதிய அருந்ததி ராய், 10 நாட்களுக்கும் மேல் நேரில் சென்று காட்டுக்குள் தங்கி இருந்து திரும்பினார். அந்த அனுபவத்தை 'தோழர்களுடன் ஒரு பயணம்' என்று நீண்ட கட்டுரையாக எழுதினார். மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை 'இந்தப் போரின் C.E.O' என்றே குறிப்பிடுகிறார் ராய்!
2004-ம் வருடம் வன்முறைக்கு எதிரான செயல்பாடுகளுக்காக அருந்ததி ராய்க்கு 'சிட்னி அமைதி விருது' வழங்கியது ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகம். The Algebra of Infinite Justice என்ற கட்டுரைத் தொகுப்புக்காக 2006-ம் ஆண்டு இந்திய அரசு சாகித்திய அகாடமி விருது அறிவித்தது. ஆனால், அதைப் பெற்றுக்கொள்ள மறுத்து விட்டார்!
இரட்டைக் கோபுரத் தாக்குதலின்போது 'ஒசாமா பின்லேடன், ஜார்ஜ் புஷ் இருவருமே கிரிமினல்கள்தான். ஒரே ஒரு வித்தியாசம், பின்லேடனை மக்கள் யாரும் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கவில்லை!' என்று இவர் வெளியிட்ட கருத்து, பலரையும் அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்க்கவைத்தது!
1997-ம் வருடமே அடுத்த நாவல் எழுத ஆரம்பித்துவிட்டதாக அறிவித்தார். ஆனால், அதன்பிறகு அரசியல் கட்டுரைகள்தான் அதிகம் எழுதினார். இன்னும் நாவல் எழுதவில்லை. சமீபத்தில் வெளியான அருந்ததி ராயின் Field Notes on Democracy:Listening to Grasshoppers புத்தகமும் அரசியல் விமர்சனக் கட்டுரைகள் நிறைந்ததே!
Come September என்ற தலைப்பில் நியூ மெக்சிகோவில் அருந்ததி ராய் 64 நிமிடங்கள் பேசினார். அதிகாரம், ஆயுதம் மற்றும் கார்ப்பரேட் உலகின் அரசியலை அம்பலப்படுத்தும் அந்தப் பேச்சை அடிப்படையாக வைத்து, நியூஸிலாந்தைச் சேர்ந்த ஒருவர் WE என்ற பெயரில் டாக்குமென்ட்டரி எடுத்தார். ஏராளமான பணம் செலவழித்து, இணையத்தில் அந்தப் படத்தை இலவசமாகக் கிடைக்கச் செய்த அந்த நபர், கடைசி வரை தன்னை வெளிப்படுத்திக்கொள்ளவே இல்லை!
'மற்றொரு மாற்று உலகம் சாத்தியமானது மட்டுமல்ல, நான் அதை நோக்கிப் பயணித்துக்கொண்டு இருக்கிறேன். ஓர் அமைதியான நாள் ஒன்றில், என் பயணத் தின் மூச்சுக் காற்றை நான் உணர்கிறேன்' ராயின் நம்பிக்கை வார்த்தைகள் இவை!
நன்றி: ஆனந்த விகடன் - அருந்ததிராய் 25
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருமந்திரம்
ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே. மத்த...
-
Guiding light Jayanthi Somasundaram A fading signpost reads ‘Rayavaram 6 km’, directing visitors to a muddy lane. The nondescript, d...
-
தமிழ்க் கவிதைகளுக்கு வெகுகாலமாக வழங்கப்படாமல் இருந்த சாகித்திய அகாடமி விருதை முதன் முறையாக பெற்ற பெருமைக்குரியவர். பால் வீதி என்கிற கவிதைத்...
-
“வாழ்வதற்கு இன்னும் மிச்சமிருந்தது!” - ஜி.எஸ்.தயாளன் வே கமாகச் சென்றுகொண்டிருக்கும் பேருந்தில், பின்னாலிருந்து ஒரு முதியவர் “இறங்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக