உலகத்தில் பிறந்த அத்தனை ஜீவன்களும் சுகமாய் இருக்கவே விரும்புகின்றன. ஒவ்வொரு உயிரும் தன்னிடத்திலேயே மிகப் பிரியமாக இருக்கிறது. இந்தப் பிரியம் ஒரு சுகம். அந்தச் சுகத்தை நித்திரையின்போது மனம் நன்றாக அனுபவிக்கிறது. தனக்குள் ஒடுங்கி தன்னை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறது. நன்றாகத் தூங்கினேன் என்கிற சந்தோஷத்தோடு எழுந்திருக்கிறது. விழித்திருக்கிற நிலையில் தன்னில் தான் ஒடுங்குதல், தன்னை அறிதல் என்பது நிகழ வேண்டும்.
'நான் யார்' என்கிற கேள்வியைக் கேட்டுப் பதில் பெறுவதே இதற்கு எளிமையான வழி. உங்களைக் கேட்டுக்கொள்ளுங்கள்... 'நான் யார்? நான் யார்? உடம்பா? உடம்பு எனில், தூங்கும்போது இந்த உடம்பு எங்கே இருந்தது? அதைப் பற்றிய அறிவு எங்கே இருந்தது? வேறு ஏதோ ஒன்று தூங்கி, வேறு ஏதோ ஒன்று ஒடுங்கி உள்ளே இருந்ததல்லவா! உடம்பைப் பற்றிய நினைவு முற்றிலும் மறந்ததல்லவா?
அப்படியானால் 'நான்' என்பது உடம்பல்ல. எனில், புலன்களாலும், புலன்களின் அனுபவத்தாலும் மூளையின் ஞாபக சக்தியாலும் ஏற்பட்ட மனம்தான் 'நானா'? மனம் என்ன செய்யும்? ஏதாவது நினைத்துக் கொண்டிருக்கும். தூங்கும்போது கனவு காணும்; கனவில் சண்டை போடும்; சந்தோஷப் படும்; ஏறும்; இறங்கும்; அலையும். ஆனால், கனவில்லாத நேரமும் இருந்ததே! கனவில்லாத தூக்கத்தைதானே நல்ல தூக்கம் என்கிறோம்; ஆனந்தமாகத் தூங்கினோம் என்று சொல் கிறோம். அப்படியானால், விழித்திருக்கும் போது அலையும் மனமும், கனவின்போது அலையும் மனமும் நானல்ல. வேறு ஏதோ ஒன்று ஆனந்தமாகத் தூங்கியது. அது எது?
'நான்' யாரென்று தெரியாமல் விழித்து நிற்கிறேனே... அது நானா? இல்லை; அதுவும் நீ இல்லை. அது இல்லை நான்... இது இல்லை நான்... என்று ஒவ்வொன்றாக, எதை நான் என்று நினைத்திருக்கிறோமோ அதையெல்லாம் புறந்தள்ளி, தள்ளமுடியாமல் எது மீதி நிற்கிறதோ, அதுவே 'நான்'.
உன் அறிவால், உன் அனுபவத்தால் இந்த உலகத்தைப் பற்றி ஏதோ நினைத்துக் கொண் டிருக்கிறாய். இந்த உலகம் நல்லது என்றும், கெட்டது என்றும் நீயாக ஒரு முடிவுக்கு வருகிறாய். உண்மை என்ன என்று உன்னால் பார்க்க முடியவில்லை. எந்த விஷயத்திலும் அதன் உண்மையை, அதன் சத்தியத்தை உன்னால் அறியமுடிவதில்லை.
உதாரணமாக, இரவில் ஒரு தாம்புக் கயிற்றைப் பாம்பு என்று நினைத்துப் பதறி ஓடி அலைகிறாய். உன் ஆத்ம நண்பன் உன்னை நிலைநிறுத்தி, அதைப் பார் என்று சொல்லி, தன் கையால் அதைத் தூக்கி, கயிறு என்று காண்பித்த பிறகு, 'பாம்பு' உடனே காணாமல் போய், 'அட, கயிறு!' என்ற நிம்மதி தொற்றிக்கொள்கிறது. எல்லாம் உனது கற்பனை!
நன்றி: பாலகுமாரன் - "சக்திவிகடன்"
2 கருத்துகள்:
பகிர்வுக்கு நன்றி
பெரியவர் மிகவும் நல்லவர். அனைவாராலும் நேசிகப்பட்டவர். அவரது நல்ல கருத்தான கட்டுரை காண மகிழ்ச்சி
கருத்துரையிடுக