சனி, 27 நவம்பர், 2010

நான் யார்?

லகத்தில் பிறந்த அத்தனை ஜீவன்களும் சுகமாய் இருக்கவே விரும்புகின்றன. ஒவ்வொரு உயிரும் தன்னிடத்திலேயே மிகப் பிரியமாக இருக்கிறது. இந்தப் பிரியம் ஒரு சுகம். அந்தச் சுகத்தை நித்திரையின்போது மனம் நன்றாக அனுபவிக்கிறது. தனக்குள் ஒடுங்கி தன்னை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறது. நன்றாகத் தூங்கினேன் என்கிற சந்தோஷத்தோடு எழுந்திருக்கிறது. விழித்திருக்கிற நிலையில் தன்னில் தான் ஒடுங்குதல், தன்னை அறிதல் என்பது நிகழ வேண்டும்.

'நான் யார்' என்கிற கேள்வியைக் கேட்டுப் பதில் பெறுவதே இதற்கு எளிமையான வழி. உங்களைக் கேட்டுக்கொள்ளுங்கள்... 'நான் யார்? நான் யார்? உடம்பா? உடம்பு எனில், தூங்கும்போது இந்த உடம்பு எங்கே இருந்தது? அதைப் பற்றிய அறிவு எங்கே இருந்தது? வேறு ஏதோ ஒன்று தூங்கி, வேறு ஏதோ ஒன்று ஒடுங்கி உள்ளே இருந்ததல்லவா! உடம்பைப் பற்றிய நினைவு முற்றிலும் மறந்ததல்லவா?

அப்படியானால் 'நான்' என்பது உடம்பல்ல. எனில், புலன்களாலும், புலன்களின் அனுபவத்தாலும் மூளையின் ஞாபக சக்தியாலும் ஏற்பட்ட மனம்தான் 'நானா'? மனம் என்ன செய்யும்? ஏதாவது நினைத்துக் கொண்டிருக்கும். தூங்கும்போது கனவு காணும்; கனவில் சண்டை போடும்; சந்தோஷப் படும்; ஏறும்; இறங்கும்; அலையும். ஆனால், கனவில்லாத நேரமும் இருந்ததே! கனவில்லாத தூக்கத்தைதானே நல்ல தூக்கம் என்கிறோம்; ஆனந்தமாகத் தூங்கினோம் என்று சொல் கிறோம். அப்படியானால், விழித்திருக்கும் போது அலையும் மனமும், கனவின்போது அலையும் மனமும் நானல்ல. வேறு ஏதோ ஒன்று ஆனந்தமாகத் தூங்கியது. அது எது?

'நான்' யாரென்று தெரியாமல் விழித்து நிற்கிறேனே... அது நானா? இல்லை; அதுவும் நீ இல்லை. அது இல்லை நான்... இது இல்லை நான்... என்று ஒவ்வொன்றாக, எதை நான் என்று நினைத்திருக்கிறோமோ அதையெல்லாம் புறந்தள்ளி, தள்ளமுடியாமல் எது மீதி நிற்கிறதோ, அதுவே 'நான்'.

உன் அறிவால், உன் அனுபவத்தால் இந்த உலகத்தைப் பற்றி ஏதோ நினைத்துக் கொண் டிருக்கிறாய். இந்த உலகம் நல்லது என்றும், கெட்டது என்றும் நீயாக ஒரு முடிவுக்கு வருகிறாய். உண்மை என்ன என்று உன்னால் பார்க்க முடியவில்லை. எந்த விஷயத்திலும் அதன் உண்மையை, அதன் சத்தியத்தை உன்னால் அறியமுடிவதில்லை.

உதாரணமாக, இரவில் ஒரு தாம்புக் கயிற்றைப் பாம்பு என்று நினைத்துப் பதறி ஓடி அலைகிறாய். உன் ஆத்ம நண்பன் உன்னை நிலைநிறுத்தி, அதைப் பார் என்று சொல்லி, தன் கையால் அதைத் தூக்கி, கயிறு என்று காண்பித்த பிறகு, 'பாம்பு' உடனே காணாமல் போய், 'அட, கயிறு!' என்ற நிம்மதி தொற்றிக்கொள்கிறது. எல்லாம் உனது கற்பனை!

நன்றி: பாலகுமாரன் - "சக்திவிகடன்"

திங்கள், 22 நவம்பர், 2010

ஆயுளை நீட்டிப்போம், புகைப்பதை தவிர்ப்போம்...: நுரையீரல் காப்போம்!

நீர், உணவு இல்லாமல் சில நாட்கள் வாழலாம். ஆனால் மூச்சுக்காற்று இல்லாமல் மனிதன் உயிர்வாழ முடியாது. மூன்று நிமிடங்களுக்கு மேல் ஆக்சிஜன் செல்வது தடைபட்டால் மூளை செயலிழந்து உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

சுவாசம்: மூச்சுக்குழல், நுரையீரல், உதரவிதானம், காற்று நுண்ணறைகள், மூச்சுக்கிளை சிறுகுழல்கள் இணைந்தது சுவாச மண்டலம்.

* உதரவிதானம் சுருங்கி விரியும் போது சுவாசம் நிகழ்கிறது. உதாரவிதானம் சுருங்கி ஆக்சிஜன் உள்ளிழுக்கப்படுகிறது. விரியும்போது கார்பன்-டை ஆக்சைடு வெளியேற்றப்படுகிறது.

* ஒரு நுரையீரலில் 30 ஆயிரம் சிறு மூச்சுக்குழல்கள் உள்ளன.

* 600 மில்லியன் காற்று நுண்ணறைகள் உள்ளன.

* வல நுரையீரல் எடை 620 கிராம், இட நுரையீரல் 560 கிராம்.

* நுரையீரல்களில் தசைகள் இல்லை. மார்பில் உள்ள தசைகளே நுரையீரலை இயக்குகிறது.

* சுவாசத்தின் போது காற்று உள்சென்று வெளிவரும் அளவை ஸ்பைரோ மீட்டரால் கணக்கிடலாம்.

* நுரையீரல்களின் மொத்த காற்றின் கொள்ளளவு 4.5 லிட்டர். சுவாசத்தின் போது அரை லிட்டர் காற்று உள்ளே செல்கிறது.

*முழுமையாக காற்றை இழுத்தால் தான் உடலில் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்சிஜன் செல்லும்.

பாதிப்பு: நுரையீரல் பாதிப்பால் ஆஸ்துமா, சுவாச ஒவ்வாமை, நுரையீரல் உயர் ரத்த அழுத்த நோய், நுரையீரல் அடைப்பு நோய், புற்றுநோய் ஏற்படும்.

புகை பிடித்தல், வீட்டிற்கு வெளியே - உள்ளே மாசு, நோய் எதிர்ப்பு குறைவு, ஒவ்வாமை ஆகியன இதற்கு காரணம்.

தடுக்க வழி: புகைப்பதால் வரும் புகையில் மூன்றில் ஒரு பங்கு புகைபிடிப்போரையும், 2 பங்கு சுற்றியுள்ளோரையும் பாதிக்கிறது. நாம், நம்மை சுற்றியுள்ளோர் புகைக்காமலும் தடுப்பது அவசியம்.

* தொற்று வியாதிகளில் 80 சதவீதம் கைகளால் பரவுகிறது. எனவே கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

* கார் என்ஜினை தேவையின்றி ஓட்டக்கூடாது.

* திறந்த வெளியில் பொருட்களை எரிக்க கூடாது.

* மாசு தடுப்பு குறித்த சட்டங்களை பின்பற்ற வேண்டும்.

* புகையில்லா அடுப்பை பயன்படுத்தவும், மின் உபகரணங்களை முறையாக பராமரிக்க வேண்டும்.

* வீட்டை சுற்றிலும் கழிவுநீர் தேங்க விடக்கூடாது.

* சோபா, மிதியடி, மெத்தை, நாற்காலிகளில் தூசி படிய விடக்கூடாது.

* உடன் பணிபுரிபவருக்கு ஆஸ்துமா, நுரையீரல் புற்றுநோய் இருந்தால் நாம் முக மூடியும், தடுப்பு உடையும் அணிவது அவசியம்.

வேண்டாம் சிகரெட்: சிகரெட்டில் உள்ள புகையிலையில் நிக்கோடின் என்ற போதை பொருள் உண்டு. ரத்தத்தில் நேரடியாக கலந்தால் மனிதரை கொல்லத்தக்கது நிகோடின். புகையிலையில் நூற்றுக்கணக்கான வேதிபொருள் உள்ளது. புகைக்கும்போது தோல், நுரையீரலின் உட்பகுதியில் இவை ஒட்டுகிறது. மூச்சுக்குழலில் ஒட்டும் நுண் கிருமிகளையும், தூசிகளையும் அகற்ற முடியாது. இதனால் நாளடைவில் நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய் உருவாகும். துர்நாற்றம் வீசும் தலைமுடி, கறைபடிந்த பற்கள், இதயநோய், துர்நாற்றம் வீசும் வாய், தோல் சுருக்கமும் ஏற்படும்.ஆழ்ந்த சுவாசம்: மனிதன் ஒரு நிமிடத்தில் 14-15 முறை மூச்சை இழுக்கிறான். உணர்ச்சிவசப்படும் போது இவ்வேகம் அதிகரிக்கும். உடல் நலம் கெடும். சிகரெட் பிடிப்பதை நிறுத்த வேண்டும்.சரியான பயிற்சியால் மூச்சு இழுப்பதை 6-4 முறை என குறைக்கலாம். நுரையீரல் எனும் இயந்திரத்தை நோயிலிருந்து காக்கலாம். நீண்ட நாள் வாழலாம்.

ஆயுளை நீட்டிப்போம், புகைப்பதை தவிர்ப்போம்...: நுரையீரல் காப்போம்!

நன்றி: தினமலர்

சனி, 20 நவம்பர், 2010

குழந்தைகள் - கலீல் கிப்ரான்

ங்கள் குழந்தைகள்

உங்கள் குழந்தைகள் அல்ல

அவர்கள்

உங்கள் வாழ்க்கைக்கான ஏக்கத்தின்

புதல்வர்களும் புதல்விகளும்;

அவர்கள்

உங்கள் மூலம் இந்த உலகிற்கு

வந்துள்ளார்களே தவிர

உங்களில் இருந்து அல்ல

அவர்கள்

உங்களுடனேயே இருந்தாலும்

அவர்கள்

உங்களுடையவர்கள் அல்ல.

அவர்களுக்கு

உங்கள் அன்பை வழங்கலாமே தவிர

உங்கள் சிந்தனையை வழங்கவே முடியாது.

ஏனெனில்

அவர்கள் அவர்களுக்கான

சிந்தனையை வழங்கப்பட்டுள்ளார்கள்.

அவர்களின்

தேகங்களுக்கு ஒரு இல்லத்தை

நீங்கள் வழங்கி இருக்கலாம் ;

ஆன்மாக்களுக்கு அல்ல.

ஏனெனில்

அவர்களின் ஆன்மா

கற்பனையிலும் உங்களால்

பிரவேசிக்க முடியாத

நாளை எனும் வீட்டினில்

ஜொலிக்கிறது.

நீங்கள்

அவர்களை போன்றிருக்க முயற்சிக்கலாம்;

ஆனால் உங்களை போன்று அவர்களை

ஆக்கிட முயற்சிக்காதீர்கள்.

ஏனெனில்

வாழ்க்கை என்பது

பின்னோக்கி செல்வதுமல்ல;

நேற்றைய தினத்தோடு

தேங்கிநின்று விடுவதுமல்ல

- கலீல் கிப்ரான்


நன்றி: இந்நேரம். காம்

வியாழன், 18 நவம்பர், 2010

ஆஹா... அருந்ததி ராய்

திகாரத்துக்கு எதிராக அஞ்சாமல் போராடும் துணிச்சல்காரர், அருந்ததி ராய்!

காஷ்மீர், ஈழம், மாவோயிஸ்ட்டுகள்... என அனலடிக்கும் பிரச்னைகள் அனைத்திலும் நேர்மையின் பக்கம் நிற்கும் எழுத்துப் போராளி!

மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் 1961-ம் வருடம் நவம்பர் 24-ம் தேதி பிறந்தவர். கேரள அம்மாவுக்கும் பெங்காலி அப்பாவுக்கும் பிறந்தவரின் இளம் பருவம் முழுக்க ஆலப்புழாவில் இருக்கும் 'அய்மெனம்' (Ayemenem) எனும் அழகிய கிராமத்தில் கழிந்தது!

அய்மெனம் கிராமத்தில் கம்யூனிசத்தின் தாக்கம் அதிகம். இதைப்பற்றி, 'அப்போது எல்லாம் அடுத்த வாரம் புரட்சி வந்துவிடும் என்பதுபோலவே இருக்கும்' என்று புன்னகையுடன் குறிப்பிடுகிறார் தனது நூலில்!

கோட்டயத்தில்தான் பள்ளிப் படிப்பு. ஊட்டி லவ்டேலில் இருக்கும் லாரன்ஸ் பள்ளியிலும் சில வருடங்கள் படித்தார். 16 வயதில் டெல்லிக்குச் சென்று கட்டடக் கலை படிப்பில் சேர்ந்தார்!

டெல்லியில் உடன் படித்த சீனியர் ஒருவரைக் காதல் மணம் புரிந்துகொண்டார். ஆனால், நான்கே வருடங்களில் அந்தத் திருமணம் விவாகரத்தில் முடிந்தது!

1997-ல் புக்கர் பரிசு வென்ற இவருடைய 'The God of Small Things' விற்பனையிலும் செம ஹிட். மே மாதம் வெளியான நாவல் ஜூன் மாதமே விற்றுத் தீர்ந்தது. அட்வான்ஸாக மட்டும் அருந்ததி ராய்க்குக் கிடைத்த தொகை 5 லட்சம் பவுண்ட்!

தனது 40-வது வயதில் புக்கர் பரிசு வென்றார் அருந்ததி ராய். இப்போது வரை புக்கர் பரிசு வென்ற ஒரே இந்திய எழுத்தாளர் ராய்தான்!

'The God of Small Things' நாவலை 97-ம் வருடத்தின் உலகின் தலை சிறந்த ஐந்து புத்தகங்களில் ஒன்றாகத் தேர்வு செய்தது 'டைம்' பத்திரிகை. நாவல் வெளியாகி உலகமே கொண்டாடிக்கொண்டு இருக்க... மீண்டும் டி.வி. சீரியலுக்கு திரைக்கதை எழுத வந்தார் அருந்ததி ராய். The Banyan Tree என்ற சீரியலின் திரைக்கதை ராய் எழுதியதே!

புக்கர் பரிசு வென்றதும், 'இது ஐந்து நீதிபதிகளின் தீர்ப்பு. ஒருவேளை வேறு ஐந்து பேர் நீதிபதிகளாக இருந்திருந்தால், வேறு ஒரு புத்தகம் தேர்வாகி இருக்கும். அதனால், என் புத்தகம் மட்டும்தான் சிறந்தது என்று நான் கருதவில்லை!' என்பது அருந்ததியின் பதில் மரியாதை!

நாவல் எழுதிப் புகழ் பெறும் வரை, டெல்லி ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் எடுத்த ஏரோபிக்ஸ் வகுப்புகள் மூலம் கிடைத்தது மட்டுமே வருமானம்!

நர்மதா அணைத் திட்டத்தால் பாதிக்கப்படும் ஆதிவாசிகள், விவசாயிகளின் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர், புக்கர் பரிசு மூலம் தனக்குக் கிடைத்த பணத்தில் 30 ஆயிரம் டாலரை 'நர்மதாவைக் காப்பாற்றுவோம் அமைப்பு'க்கு வழங்கினார்!

பொக்ரானில் இந்தியா அணுகுண்டு வெடித்துச் சோதித்தபோது, 'வல்லரசின் முதல் படி' என்று தேசமே கொண்டாடியது. ஆனால், 'அணு ஆயுத அரசியல் மிக மோசமானது!' என்று 'The end of imagination' எனும் கட்டுரையில் வெடித்தார் அருந்ததி ராய்!

1985-ல் வெளியான Massey Sahib என்ற திரைப்படத்தில் அருந்ததி ஒரு கிராமத்துப் பெண்ணாக நடித்தார். அந்தப் பட இயக்குநர் பிரதீப்பை இரண்டாவ தாகத் திருமணம் செய்துகொண்டார்!

பிரதீப் இயக்கிய In Which Annie Gives It Those Ones படத்துக்கு அருந்ததி திரைக்கதை எழுதினார். இதற்கு சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது கிடைத்தது!

சேகர் கபூரின் 'பண்டிட் குயின்' திரைப்படத்தைக் கடுமையாக விமர்சித்தார். The Great Indian Rape Trick என்ற தலைப்பில் கட்டுரை எழுதியவர், 'உயிருடன் இருக்கும் பூலான்தேவியின் வாழ்க்கையை அவருடைய அனுமதி இன்றி சினிமாவாக எடுத்தது தவறு!' என்று கடும் கண்டனம் தெரிவித்தார்!

நர்மதா அணை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை, 'நாகரிக வன்முறை' என்று விமர்சித்தார். இதற்காக இவர் மீது 'நீதிமன்ற அவமதிப்பு' வழக்குப் பதிவு செய்தது நீதிமன்றம். அதற்காக வருத்தமோ, மன்னிப்போ கேட்க மறுத்தார் ராய். அதனால், அடை யாளமாக ஒருநாள் சிறைத் தண்டனையும், 2,000 அபராதமும் விதிக்கப்பட்டது. ஒரே ஒருநாள் சிறை சென்று வந்தார் அருந்ததி ராய்!

2003-ம் வருடம் நியூயார்க் நகரில் 'ஏகாதிபத்திய ஜனநாயகம் - உடனடித் தயாரிப்பு' என்ற தலைப்பில் அமெரிக்காவை விமர்சித்து, அருந்ததி ராய் ஆற்றிய நீண்ட உரை உலகப் புகழ் பெற்றது!

2006-ம் வருடம் ஜார்ஜ் புஷ் இந்தியா வந்தபோது, 'War Criminal' என்று சாடி கட்டுரை எழுதினார் ராய்!

கேரளாவின் முத்தங்கா காடுகளில் ஆதிவாசி மக்கள் கொடூரமாக அடித்துத் துரத்தப்பட்டபோது, உடனடியாக அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தவர், 'உங்கள் கைகளில் ரத்தக் கறை படிந்திருக்கிறது' என்று கேரளாவின் அப்போதைய முதல்வர் ஏ.கே.அந்தோணிக்குக் கடிதம் எழுதினார்!

இலங்கையில் யுத்தம் நடந்தபோது, எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள் பலரும் கள்ள மௌனம் சாதித்தபோது, 'இலங்கையில் நடப்பது ஓர் இனப் படுகொலை' என்று வெளிப்படையாகக் கட்டுரை எழுதியவர் ராய்!

தண்டகாரண்யா காட்டில் இந்திய அரசு நடத்தி வரும் போரை 'இந்தியாவின் இதயத்தின் மீதான போர்' என்று வர்ணித்துக் கட்டுரை எழுதிய அருந்ததி ராய், 10 நாட்களுக்கும் மேல் நேரில் சென்று காட்டுக்குள் தங்கி இருந்து திரும்பினார். அந்த அனுபவத்தை 'தோழர்களுடன் ஒரு பயணம்' என்று நீண்ட கட்டுரையாக எழுதினார். மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை 'இந்தப் போரின் C.E.O' என்றே குறிப்பிடுகிறார் ராய்!

2004-ம் வருடம் வன்முறைக்கு எதிரான செயல்பாடுகளுக்காக அருந்ததி ராய்க்கு 'சிட்னி அமைதி விருது' வழங்கியது ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகம். The Algebra of Infinite Justice என்ற கட்டுரைத் தொகுப்புக்காக 2006-ம் ஆண்டு இந்திய அரசு சாகித்திய அகாடமி விருது அறிவித்தது. ஆனால், அதைப் பெற்றுக்கொள்ள மறுத்து விட்டார்!

இரட்டைக் கோபுரத் தாக்குதலின்போது 'ஒசாமா பின்லேடன், ஜார்ஜ் புஷ் இருவருமே கிரிமினல்கள்தான். ஒரே ஒரு வித்தியாசம், பின்லேடனை மக்கள் யாரும் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கவில்லை!' என்று இவர் வெளியிட்ட கருத்து, பலரையும் அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்க்கவைத்தது!

1997-ம் வருடமே அடுத்த நாவல் எழுத ஆரம்பித்துவிட்டதாக அறிவித்தார். ஆனால், அதன்பிறகு அரசியல் கட்டுரைகள்தான் அதிகம் எழுதினார். இன்னும் நாவல் எழுதவில்லை. சமீபத்தில் வெளியான அருந்ததி ராயின் Field Notes on Democracy:Listening to Grasshoppers புத்தகமும் அரசியல் விமர்சனக் கட்டுரைகள் நிறைந்ததே!

Come September என்ற தலைப்பில் நியூ மெக்சிகோவில் அருந்ததி ராய் 64 நிமிடங்கள் பேசினார். அதிகாரம், ஆயுதம் மற்றும் கார்ப்பரேட் உலகின் அரசியலை அம்பலப்படுத்தும் அந்தப் பேச்சை அடிப்படையாக வைத்து, நியூஸிலாந்தைச் சேர்ந்த ஒருவர் WE என்ற பெயரில் டாக்குமென்ட்டரி எடுத்தார். ஏராளமான பணம் செலவழித்து, இணையத்தில் அந்தப் படத்தை இலவசமாகக் கிடைக்கச் செய்த அந்த நபர், கடைசி வரை தன்னை வெளிப்படுத்திக்கொள்ளவே இல்லை!

'மற்றொரு மாற்று உலகம் சாத்தியமானது மட்டுமல்ல, நான் அதை நோக்கிப் பயணித்துக்கொண்டு இருக்கிறேன். ஓர் அமைதியான நாள் ஒன்றில், என் பயணத் தின் மூச்சுக் காற்றை நான் உணர்கிறேன்' ராயின் நம்பிக்கை வார்த்தைகள் இவை!

நன்றி: ஆனந்த விகடன் - அருந்ததிராய் 25

திங்கள், 8 நவம்பர், 2010

தமிழ்ச் சினிமா - பாவேந்தர் பாரதிதாசன்

ருவினையும் ஒலியினையும் ஒன்றாகச் சேர்த்தே

ஒளிபெருகத் திரையினிலே படங்காட்டும் கலையைத்

திருவிளைக்கும் நல்லறிஞர், ஐரோப்பியர்கள்

தெரிந்துவெளி யாக்குகின்றார் எனக்கேட்ட நாளில்

‘இருவிழியால் அதுகாணும் நாள் எந்த நாளோ,

என்நாடும் அக்கலையில் இறங்குநாள் எந்நாள்,

இருள் கிழித்துத் தமிழ்நாடாம் நிலவுதனை, உலகின்

எதிர்வக்கும் நாள்எந்நாள்' என்றுபல நினைத்தேன்.



ஒலியுருவப் படம் ஊரில் காட்டுவதாய்க் கேட்டேன்

ஓடினேன்; ஓடியுட்கார்ந்து தேன்இரவில் ஒருநாள்

புலிவாழும் காட்டினில் ஆங்கிலப்பெண் ஒருத்தி

புருஷர்சக வாசமிலாப் புதுப்பருவ மங்கை

மலர்க்குலத்தின் அழகினிலே வண்டுவிழி போக்கி

வசமிழந்த படியிருந்தாள்! பின்பக்கம் ஒருவன்

எலிபிடிக்கும் பூனைபோல் வந்தந்த மங்கை

எழில் முதுகிற் கைவைத்தான்! புதுமை ஒன்றுகண்டேன்.



உளமுற்ற கூச்சந்தான் ஒளிவிழியில் மின்ன,

உயிர் அதிர்ந்த காரணத்தால் உடல் அதிர்ந்து நின்றே.

தெளிபுனலின் தாமரைமேற் காற்றடித்த போது

சிதறுகின்ற இதழ்போலே செவ்விதழ் துடித்துச்

சுளைவாயால் நீயார்என் றனல்விழியாற் கேட்டாள்

சொல்பதில்நீ என்றதவள் சுட்டுவிரல் ஈட்டி!

களங்கமில்லாத காட்சி, அதில் இயற்கை யெழில்கண்டேன்!

கதைமுடிவில் 'படம்' என்ற நினைவுவந்த தன்றே!



என்தமிழர் படமெடுக்க ஆரம்பஞ் செய்தார்;

எடுத்தார்கள் ஒன்றிரண்டு பத்துநூறாக!

ஒன்றேனும் தமிழர்நடை யுடைபா வனைகள்

உள்ளவாய் அமைக்கவில்லை, உயிர்உள்ள தில்லை!

ஒன்றேனும் தமிழருமை உணர்த்துவதாயில்லை!

ஒன்றேனும் உயர்நோக்கம் அமைந்ததுவா யில்லை!

ஒன்றேனும் உயர்நடிகர் வாய்ந்ததுவா யில்லை!

ஒன்றேனும் வீழ்ந்தவரை எழுப்புவதா யில்லை!



வடநாட்டார் போன்றஉடை, வடநாட்டார் மெட்டு!

மாத்தமிழர் நடுவினிலே தெலுங்குகீர்த் தனங்கள்!

வடமொழியில் ஸ்லோகங்கள்! ஆங்கில ப்ரசங்கம்!

வாய்க்குவரா இந்துஸ்தான்! ஆபாச நடனம்!

அடையும்இவை அத்தனையும் கழித்துப்பார்க் குங்கால்!

அத்திம்பேர் அம்மாமி எனுந்தமிழ்தான் மீதம்!

கடவுளர்கள், அட்டைமுடி, காகிதப் பூஞ்சோலை

கண்ணாடி முத்துவடம் கண்கொள்ளாக் காட்சி!



பரமசிவன் அருள்புரிய வந்துவந்து போவார்!

பதிவிரதைக் கின்னல்வரும் பழையபடி தீரும்!

சிரமமொடு தாளமெண்ணிப் போட்டியிலே பாட்டுச்

சிலபாடி மிருதங்கம் ஆவர்த்தம் தந்து

வரும்காதல்! அவ்விதமே துன்பம்வரும், போகும்!

மகரிஷிகள் கோயில்குளம் - இவைகள் கதாசாரம்.

இரக்கமுற்ற படமுதலா ளிக்கெல்லாம் இதனால்

ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சியது லாபம்!



படக்கலைதான் வாராதா எனநினைத்த நெஞ்சம்

பாழ்படுத்தும் முதலாளி வர்க்கத்தின் செயலால்,

படக்கலையாம் சனியொழிந்தால் போதுமென எண்ணும்!

பயன்விளைக்கும் விதத்தினிலே பலசெல்வர் கூடி

இடக்ககற்றிச் சுயநலத்தைச் சிறிதேனும் நீக்கி

இதயத்தில் சிறிதேனும் அன்புதனைச் சேர்த்துப்

படமெடுத்தால் செந்தமிழ் நாடென்னும் இளமயிலும்

படமெடுத்தா டும்;தமிழர் பங்கமெலாம் போமே!

சனி, 6 நவம்பர், 2010

இஸ்லாமியச் சட்டங்கள் காட்டுமிராண்டித்தனமானவையா?

ஹாஜா முஹயதீன். ஜே என்பவரின் பதிவை  இங்கு தருகிறேன். என் எண்ணங்களை அப்படியே பிரதிபலிப்பதனால்! கோவையில் நடந்த கொடூரம் (இரு குழந்தைகள் கடத்திக்கொலை) அறிந்து மனம் பதறி இரண்டு நாட்களாய்த் தூக்கம் வராமல் தவித்தேன். என் ஆதங்கம் இவரின் எழுத்துக்களில் பிரதிபலிக்கிறது.


ம் நாட்டில் இன்று தினசரி நடக்கும் கொலைகளைக் கண்டு யாரும் சட்டை செய்வதில்லை. எங்கோ யாருக்கோ நடக்கிறது. செய்திப் பத்திரிக்கைகள் முனதினம் நடந்த குற்றங்களை பெயர், ஊர், வயது, போட்டோ எல்லாம் போட்டு அடுத்த நாள் காலையில் நமக்கு தெரிவித்துவிடுகிறது. மேலதிக விவரங்களை தர துப்பறியும் பத்திரிக்கைகள் (து!!) காத்திருக்கின்றன.

வாரம் ஒரு முறை வந்துக் கொண்டிருந்த இந்த மாதிரி பத்திரிக்கைகள் குற்றங்கள் பெருகிவருவதால் திணறிப்போய் சமூக சேவையை விரிவு படுத்தி வாரம் இருமுறை ஆக்கிவிட்டன.

இப்படி தினசரி குற்றங்களைக் கேட்டு படித்து பழகிவிட்டதால் ஒரு கிறுகிறுப்பே இல்லாமல் போய்விட்டது. பத்தோடு பதினொன்றாக சொத்துக்கள், பணம் சம்பந்தப்பட்ட கொலைகள் நடப்பதால் நமக்கு அது ஒரு நிறைவைத் தருவதில்லை.

அடுத்து வந்த கள்ளக்காதல், கற்பழிப்பு முதலான பெண்கள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் இன்னும் கொஞ்சம் இன்ட்ரஸ்டாக இருந்தன. இதைப் புரிந்து கொண்ட பத்திரிக்கைகள் யார் யாரை வைத்திருந்தான் அது யாருடைய மனைவி எப்படி விஷயம் லீக் அவுட் ஆனது கத்தியால் குத்தினானா? கல்லைத்தூக்கிப் போட்டாளா? போன்று நேரில் பார்த்து (பார்த்தது போலத்தான்!!) விளக்கமாக எழுதி புண்ணியம் தேடிக் கொண்டன.

இன்றைக்கும் இந்த மாதிரி பலான மேட்டர் இல்லாத பத்திரிக்கைகள் பொட்டலம் கட்டத்தான் லாயக்கு. யாரும் வாங்குவதில்லை. முக்கியமான விஷயம் என்னவென்றால் செக்ஸ் புக்கை பத்திரமாக துணிக்கு அடியிலும் பெட்டுக்கு அடியிலும் போட்டு வைத்து யாரும் இல்லாதபோது ரகசியமாக எடுத்து படிக்க வேண்டும். இல்லாவிட்டால் அப்பா நம் முதுகில் டின் கட்டுவார் இந்த மாதிரி பத்திரிக்கைகள் வெளியில் போடடு வைக்கலாம் அந்த வகையில் நமக்கு ஒரு வாய்ப்பு.

அது போகட்டும்.

இந்தப் பதிவு பத்திரிக்கைகள் பற்றியல்ல.

இப்படி கொலை கொள்ளை கற்பழிப்பு ஊழல் லஞ்சம் என்று பத்திரிக்கைகள் நமது மூளைக்குள் ஏற்றி ஏற்றி எல்லாமே சாதாரண நிகழ்வாகிவிட்டது. இது மாதிரி எதைக் கேள்விப்ட்டாலும் நம் ரத்தம் கொதிப்பதில்லை.

ஆனால் சிறிது இடைவெளிக்குப் பிறகு சில நாட்களுக்கு முன்னால் நம் ரத்தம் கொதித்தது. நம் கண்ணில் நீர் வழிந்தது. கோவையில் பணத்துக்காக இரண்டு பிஞ்சு பாலகர்களை நீரில் மூழ்கடித்து கொலை செய்த செய்தி கேட்டு நெஞ்சம் துடித்தது.

"இழுத்து வச்சி அறுக்கணும் முதல் தலையை கொய்யணும்" வரை எல்லாருடைய ஆவேசமும் ஒரே மாதிரி இருந்தன.

பதற வேண்டாம்.

குழந்தைகளை பலாத்காரம் செய்து நீரில் மூழ்கடித்து கொன்றது மென்மையான செயல். கை வெட்டுதல், தலையை சீவுதல் போன்ற அரபு நாட்டு இஸ்லாமிய சட்டங்கள் காட்டுமிராண்டித்தனமானவை.

அனாவசியமாக குற்றவாளியை கொன்று அவன் திருந்தி வாழ உள்ள வாய்ப்பை கெடுத்துவிட வேண்டாம்.

நம் நாட்டு சட்டம் அதன் கடமையைச் செய்யும். சிறிய தண்டனை கூட கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

அதன் பிறகு அவன் நம்முடன் ஒன்றாக திருந்தி வாழ்வான். அவன் மட்டும் அல்ல. இதைவிட் மோசமான குற்றம் செய்தவனையும் நம்முடன் திருந்தி வாழ அனுமதிப்போம்.

இன்னும் நிறைய குழந்தைகள் மிச்சமிருக்கின்றன.

நம் முறை வரட்டும்.

அப்போது நிதானமாக பதறுவோம்.

நன்றி: ஹாஜா முஹயதீன். ஜே
http://kanavuoonjal.wordpress.com/

''எல்லாவற்றையும் சந்தேகப்படு!''

ன்றாக வாகனம் ஓட்டத் தெரிந்திருந்தால் மட்டும் போதுமா?
நம்பிக்கை... இதுதான் நேர்மையான, உண்மையான கேரக்டர் உள்ள கார்
டிரைவர்களின் மூலதனம். காரில் பயணிக்கும் எஜமானர் தன் உயிரையே நம்பி ஒப்படைக்கிறார். அவரது குடும்பத்தினரின் உயிர்களுக்கு டிரைவர்தான் காப்பாளர். ஆட்டோ, டாக்ஸி, பஸ்களிலும் தன்னை நம்பி வந்தவர்களுக்கு டிரைவர் காட்டும் அக்கறையும் லேசுப்பட்டதல்ல!

எத்தனையோ நல்ல டிரைவர்கள் இருக்கும் போது, நம்பிக்கை மோசடி செய்யும் சில கயவர்களும் அந்தப் போர்வையில் இந்த சமூகத்தில் நடமாடுகிறார்கள். பணியில் தாங்கள் தனது கூட்டாளிகளுக்கு துப்புக் கொடுத்து குற்றச் செயல்களில் ஈடுபடவைப்பது ஒரு ரகம்! பணியைவிட்டு நீக்கப்பட்ட டிரைவர்கள், நீண்ட இடைவெளிக்குப் பிறகுஅந்த குடும்பத்திடமே கைவரிசை காட்டுவது அடுத்த ரகம்!

கார் உரிமையாளர்களின் வீட்டில் இருக்கும் சிறுவர்கள், தனியாக இருக்கும் முதியவர்கள், பெண்கள்... இவர்கள்தான் க்ரைம் எண்ணம் கொண்டவர்களின் எளிய இலக்கு.

சிறுவர்களைக் கடத்தி பிளாக்மெயில் செய்து பணம் பறிக்கிறார்கள். முதியவர்கள் என்றால், அவர்களை எதிர்ப்பின்றித் தாக்கிக் கொன்று... வீட்டில் உள்ள நகை, பணத்தைக் கொள்ளை அடிக்கிறார்கள். பணக்கார வீட்டுப் பெண் பிள்ளைகள் என்றால் காதல் வலை வீசி, வெளியூருக்கு அழைத்துச் சென்று சீரழித்து... அதன்பின் தங்கள் பிளாக்மெயிலைத் தொடரு கிறார்கள். மானத்துக்கு பயப்படுகிறோம் என்ற பெயரில் இது போன்ற விதிவிலக்கான கயவர்களிடம் பணத்தைக் கொடுத்து, போலீஸ§க்குக்கூட தெரிவிக்காமல் பெண்களை மீட்டிருக்கிறார்கள் பல குடும்பங்களில்.

திருமணமான பெண் என்றால், வீட்டில் ஆண் இல்லாத நேரம் எது என்று நன்றாகத் தெரிந்து வைத்திருந்து... குடும்பக் கஷ்டங்களைச் சொல்லி பண உதவி பெறுவதுபோல் நடித்து, பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற சம்பவங்களும் உண்டு.

எத்தனையோ குடும்ப ரகசியங்கள், ஆபீஸ் ரகசியங்கள்... இதையெல்லாம் தனிஅறையில் உட்கார்ந்து பேசும் அளவுக்கு காரில் போகும்போது பேசுவதும் நடக்கிறது. 'நம்ம டிரைவர் நல்லவர்' என்று நம்புவது இயல்புதான்! சகலத்தையும் காது கொடுத்துக் கேட்கும் எல்லா டிரைவர்களுமே நல்லவர்களாக இருந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. பெரும் தொகை பற்றிய உரையாடல்கள், பின் ஸீட்டில் அரங்கேறும் பலவீனங்கள் போன்றவை பல சமயங்களில் நல்லவர்களைக்கூட தப்பு வழிக்குத் தூண்டிவிடுவது உண்டு.

நில விஷயங்கள், நகை, பணம்பற்றி பயணங்களின் போது விலாவாரியாகப் பேசும் பழக்கத்தை நம்மவர்கள் தவிர்க்க பழகவேண்டும்.

முன்பெல்லாம் செல்வந்தர்களும், சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களுமே சொந்த கார் வாங்குவார்கள். நிகழ் காலத்தில் நடுத்தரவாசியின் அன்றாட அத்தியாவசியத் தேவைகளில் காரும் ஒன்றாகி விட்டது. அடுத்துத் தேடுவது - டிரைவரை! நல்ல கேரக்டர் உள்ள பையன்... குடிக்காதவன்... திருமணம் ஆனவன் என்கிற பாயின்ட்களை அலசி ஆராய்ந்து அவனது முழு ஜாதகங்கத்தையும் புரட்டிவிட்டுத்தான் வேலைக்கே அமர்த்த வேண்டும். கார்களின் எண்ணிக்கை அதிகமானதே தவிர, அவற்றை ஓட்ட முறையான பயிற்சியும் நிதானமும் பெற்ற டிரைவர்கள் எல்லோருக்கும் கிடைப்பதில்லை.

சென்னை மட்டுமல்ல... தமிழகத்தின்அனைத்து ஊர்களிலும் பார்த்தால், சொந்த கார் வைத்திருப்பவர் களில் கணிசமானவருக்கு டிரைவிங் தெரியாது. இவர் களுக்குப் பெரும் தலைவலி - டிரைவர் தேவை! இங்குதான்... க்ரைம் சம்பவங்களுக்கான அடித்தளம் விரிவாகிறது.\

1990களில் அடையாரைச் சேர்ந்த பிரபல தொழிலதி பரின் மகன் ஸ்ரீராமை கடத்திக் கொன்றவனும் அவர்கள் வீட்டு கார்டிரைவர்தான். இதேபோல்தான் நாகர்கோவிலிலும் நடந்தது... திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் வயதான தன் மனைவியுடன் வசித்து வந்தார். அவரது டிரைவரின் நடத்தை சரியில்லை என்று விலக்கிவிட்டார். சில மாதங்களுக்குப் பிறகு, கெஞ்சிக்கூத்தாடி மீண்டும் வேலைக்குச் சேர்ந்தவன், பணத்தைக் கொள்ளையடிக்க திட்டம்போட்டு, அந்த முதியவரைக் கொன்று விட்டான். உடல்நிலை சரியில்லாத அவர் மனைவியை காரில் கட்டிப்போட்டு, விக்கிரவாண்டி அருகே ரோட்டு ஓரத்தில் கொன்று எரித்துவிட்டான். கொஞ்ச நாளில், கொலைகார டிரைவரையும், அவனது கூட்டாளிகளையும் நாங்கள்பிடித்துவிட்டோம்.

சென்னையில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி சரவணன்... அவர்மனைவி மற்றும் வேலைக்காரப் பெண்மணி ஆகியோர் படுகொலையான விவகாரத் திலும் ஒரு டிரைவரின் தொடர்பை நாம் அறிவோம்! பல்வேறு பிசினஸ், சமுதாயத்தின் உயர்ந்த அந்தஸ்தில் இருந்தவர் சரவணன். சொந்தமாக கார் வைத்திருந்த அவர், தேவைப்படும் போது, அருகில் உள்ள டிராவல்ஸ் ஆபீஸ§க்கு போன்பண்ணி டிரைவரை வரவழைத்துக் கொள்வார். 10, 15 டிரைவர்கள் பல்வேறு காலகட்டங்களில் சரவணன் காரை ஓட்டி இருக்கிறார்கள். அவர்களில் ஒருவன்தான் படுகொலை யின் மையப் புள்ளி. சென்னை மாநகர காவல்துறையின் சிறப்பாக விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்துள்ளனர்.

பொதுவாக ஐ.டி. மற்றும் மல்டி நேஷனல் கம்பெனிகள் தங்களிடம் வேலை பார்க்கும் பணியாளர்களை அழைத்து வரவும், வீட்டில் கொண்டுபோய் விடவும் கார் அனுப்புவது வழக்கம். பெங்களூருவில் சமீபத்தில் ஒரு சம்பவம். அங்குள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்த இளம் பெண்ணை ஏற்றிச் சென்ற காரின் டிரைவர் நடுவழியில் நிறுத்தி, அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டான்.

தமிழகத்திலும் ஏராளமான வேன்கள், ஆட்டோக்கள், கார்களை தனியார் கம்பெனிகள் பயன்படுத்தி வருகின்றன. ஐ.டி. கம்பெனிகள் பெரும்பாலும் இரவு வேளைகளில்தான் செயல்படுகின்றன. படித்த இளம் பெண்கள்தான் அதிகம் வேலை பார்க்கிறார்கள். ஆபீஸ் காரை அனுப்பி ஊழியர்களை வீட்டில் இருந்து அழைத்து வரும்போது, முதல் ஆளாக இளம் பெண் பயணிக்கக் கூடாது. அதேபோல், நிறுவனத்தில் இருந்து வேலையை முடித்துவிட்டுப் போகும்போது, கடைசி ஆளாக இளம் பெண் காரில் இருக்கக் கூடாது. இதற்கெல்லாம் அந்தந்த நிறுவனங்கள்தான் பொறுப்பேற்று கவனிக்க வேண்டும்.

''எல்லாவற்றையும் சந்தேகப்படு!'' என்பது போலீஸ் மூளை.

இன்றைய நாட்டு நடப்பில் பொதுமக்களுக்கும் அதுவேதான் விதி!

இப்படிக்கு: கே.ராதாகிருஷ்ணன் ஐ.பி.எஸ்.
                       (தமிழக சட்டம் - ஒழுங்குப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி.)


நன்றி: ஜுனியர் விகடன்

செவ்வாய், 2 நவம்பர், 2010

காஷ்மீர்: என்ன நடக்கிறது அங்கே?

ழகொளிர் காசுமீரத் தேசத்தின் மேனியெங்கும் குருதி பூத்துக் கிடக்கிறது. நான்கு மாதங்களாகத் தொடர்ந்து வரும் காசுமீரத்து மக்களின் பேரெழுச்சிக்கு இந்திய அரசும் அதன் முகமையாகிய சம்மு-காசுமீர் மாநில அரசும் துப்பாக்கிக் குண்டுகளாலேயே விடையளித்துள்ளன. இளைஞர்களும் பெண்களும் சிறுவர் சிறுமியருமாக இதுவரை கொல்லப்பட்டவர்களின் தொகை 105 என்பது அரசின் கணக்கு. உண்மைத் தொகை இதைப் போல் பல மடங்கு இருக்கும் என்பதை எளிதில் உய்த்துணரலாம்.

காயமுற்றவர்களால் மருத்துவமனைகள் நிறைந்து வழிகின்றன. ஆயிரக் கணக்கானவர்கள் கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எந்த அடக்குமுறைக்கும் பணியாது விடுதலைக்காகப் போராடும் காசுமீரத்து மக்கள் நம் வணக்கத்துக்குரியவர்கள். அடக்குமுறையால் சிதையுண்டு மீண்டெழுந்து போராடத் தவித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு மக்களினத்திற்கும் காசுமீரத்துப் போராட்டம் ஒரு கலங்கரை விளக்கம்.
அடக்குமுறைக்குப் பணியாத காசுமீரத்து மக்களை ஆசை வார்த்தைகளால் மயக்கும் முயற்சியில் இந்திய வல்லாதிக்கம் இப்போது ஈடுபட்டுள்ளது.

காசுமீரத்துக்கு உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு ஒன்று சென்றது. இடதுசாரிகளாகவும் வலதுசாரிகளாகவும் திராவிடவாதிகளாகவும் பல்வேறு பெயர்களில் இந்திய வல்லாதிக்கத்துக்கு வக்காலத்து வாங்கும் கூட்டத்தினர் சிறிநகர் சென்றனர். அவர்களது இந்தியவாதம் எதுவும் காசுமீரிகளிடம் கிஞ்சிற்றும் எடுபடவில்லை. மக்கள் அனைவரும் விடுதலைக் குறிக்கோளில் உறுதியாகவும், இந்திய அரசின் கொலைகார அடக்குமுறை குறித்து சீற்றங்கொண்டும் இருப்பதை அவர்கள் கண்டு திரும்பினர்.
இந்தக் குழுவினர் இந்திய அரசிடம் அறிக்கையளித்ததைத் தொடர்ந்து இந்திய அரசு எட்டுக் கூறுகள் கொண்ட தீர்வுத் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

முதலாவதாக, காசுமீரிகளிடம் பேச்சு நடத்துவதற்காக ஒரு பிரமுகர் குழு அமைக்கப்படுமாம். இரண்டாவதாக, கடந்த நான்கு மாத காலத்தில் தளைப்படுத்தப்பட்ட இளைஞர்களையும் மாணவர்களையும் விடுதலை செய்யுமாறும், வழக்குகளை விலக்கிக் கொள்ளுமாறும் மாநில அரசை இந்திய அரசு வலியுறுத்துமாம். பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி தளைப்படுத்தப்பட்டவர்கள் குறித்து மறுஆய்வு செய்யப்படுமாம். மைய அரசுப் படைகளைப் பணியில் ஈடுபடுத்துவது, மையக் காவல் சாவடிகளின் எண்ணிக்கையைக் குறைப்பது, கலவரப் பகுதி ஆணையை மறுஆய்வு செய்வது ஆகியவை குறித்து மைய அரசு மாநில அரசுடன் பேச்சு நடத்துமாம். வன்முறையில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 இலட்சம் வீதம் உதவிநிதி வழங்கப்படுமாம். சம்மு, லடாக் வட்டாரங்களுக்குத் தனித்தனிச் சிறப்புப் பணிக்குழுக்கள் அமைத்து, வளர்ச்சித் திட்டங்கள் வகுக்கப்படுமாம். மூடப்;பட்டுள்ள கல்வி நிறுவனங்கள் உடனடியாகத் திறக்கப்படுமாம். கல்வி தொடர்பான அடிப்படைக் கட்டுமானப் பணிகளுக்குக் கூடுதல் சிறப்பு உதவியாக மாநில அரசுக்கு 100 கோடி ரூபாய் வழங்கப்படுமாம்.


காசுமீரத்து மக்களைப் பார்த்து இப்படியொரு திட்டத்தைச் சொல்வதற்குத் தில்லி ஆட்சியாளர்கள் ஒன்றும் தெரியாத மூடர்களாகவோ எல்லாம் தெரிந்த ஏமாற்றுப் பேர்வழிகளாகவோதான் இருக்க வேண்டும். ஏனென்றால் காசுமீரத்து மக்கள் போராட்டத்தின் அடிப்படைக் குறிக்கோளுக்கோ உடனடிக் கோரிக்கைகளுக்கோ இந்தத் தீர்வுத் திட்டம் விடை சொல்லவே இல்லை. அவற்றை அறவே கண்டுகொள்ள மறுக்கும் அரச அணுகுமுறையில் எவ்வித மாற்றமும் இல்லை.

காசுமீரத் தேசத்தில் ஒரு பகுதியை இந்தியாவும், மறு பகுதியை பாகிஸ்தானும் கைப்பற்றி வைத்துள்ளன. இந்தியாவும் வேண்டாம், பாகிஸ்தானும் வேண்டாம், எங்களுக்கு விடுதலை வேண்டும் என்பதே அறுபதாண்டுகளுக்கும் மேலாகக் காசுமீரத்து மக்களின் ஒற்றைக் குறிக்கோள். இதற்காக அவர்கள் எல்லா வகையிலும் எல்லா வடிவத்திலும் போராடியிருக்கிறார்கள். ஆனால் இந்திய அரசும், அதன் ஊதுகுழல்களும் காசுமீரம் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவுடன் இருப்பதா, பாகிஸ்தானுடன் இணைவதா, அல்லது தனிநாடு என்ற பழைய தகுநிலையை மீட்டுக் கொள்வதா என்ற சிக்கலுக்கு முடிவு காணும் தன்-தீர்வுரிமை காசுமீரத் தேசத்தின் பிறப்புரிமையாகும். காசுமீரம் இந்தியாவுடனேயே இருக்க வேண்டும், அதுதான் நல்லது எனக் கருதுவோர் அதைக் காசுமீர மக்களிடமே எடுத்துச் சொல்லி அவர்களின் ஆதரவைத் திரட்டுவதற்கு எந்தத் தடையுமில்லை. அதை விடுத்துப் படைவலிமையைக் கொண்டும் அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டும் காசுமீரத்தைக் கட்டாயப்படுத்திக் கைப்பற்றி வைத்துக் கொண்டிருப்பது எவ்வகையான சனநாயகம்? காசுமீரத்தை இந்தியாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தத்திலும், ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுப் பேரவையிலும், சிறிநகரத்துச் செஞ்சதுக்கத்தில் பண்டித நேரு ஆற்றிய உரையிலும் அளித்த வாக்குறுதிகள் என்னாயின? 'காசுமீரை இழக்க மாட்டோம், இழக்கவே மாட்டோம்' என்று மன நோயாளிகளைப் போல் வெறிக்கூச்சல் போடுவதால் இந்த வரலாற்று உண்மைகளை மறைத்;து விட முடியும் என்று இந்தியவாதிகள் நினைக்கிறார்கள்.

காசுமீரத்து மக்களில் 95 விழுக்காட்டுக்கு மேற்பட்டவர்கள் விடுதலையை விரும்புகின்றனர் என்பதை நடுநிலை நோக்கர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். காசுமீர மக்களில் பெரும்பான்மையினர் விடுதலை கோருகின்றனர் என்பதை இந்திய அரசாலோ, அதன் இடதுசாரி வலதுசாரிச் சாமரங்களாலோ கூட மறுக்கவியலாது. பெரும்பான்மை மக்கள் விரும்பினாலும் விட்டுவிட முடியாது என்பதே இவர்களின் பிடிவாதமான நிலைப்பாடு. அப்படியானால் 1974-75இல் சிக்கிமை இந்தியா தன்னுடன் இணைத்துக் கொண்ட போது சொல்லப்பட்ட நியாயம் காசுமீரத்துக்குப் பொருந்தாதா? அப்போது என்ன சொன்னார்கள்? சோகியால் அரச வம்ச ஆட்சியில் சிக்கிம் தனிநாடாகத் திகழ்ந்தது. மன்னராட்சிக்கு எதிராக மக்கள் சனநாயக உரிமைகளுக்காகப் போராடினார்கள். அங்கு நடைபெற்ற தேர்தலில் சிக்கிம் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆளும் கட்சி இந்தியாவுக்கு ஆதரவாய் இருப்பதைப் பயன்படுத்தி 1974இல் அதனை இந்தியாவின் இணை மாநிலம் ஆக்கினார்கள். அடுத்த ஆண்டே முழு மாநிலம் ஆக்கி விட்டார்கள். சிக்கிம் மக்கள் இந்தியாவுடன் இணைவதை விரும்பியதாகவே வைத்துக் கொள்வோம். அந்த விருப்பத்தின் அடிப்படையில் சிக்கிமை இந்தியாவுடன் இணைத்தது நியாயம் என்றால் அதே மக்கள் விருப்பத்தின் அடிப்படையில் காசுமீர் தனிநாடாவதை அனுமதிப்பதுதானே நியாயமாக இருக்க முடியும்?

இந்திய அரசு இந்தியாவின் எந்தப் பகுதியையும் யாருக்கும் எப்போதும் எந்நிலையிலும் விட்டுக் கொடுக்காது என்றால், தமிழ்த் தேசத்திற்குச் சொந்தமான கச்சத்தீவை எந்தத் தமிழனிடமும் அனுமதி கேட்காமலேயே சிங்கள அரசுக்கு விட்டுக் கொடுத்தது எப்படி? கொடுத்தது கொடுத்ததுதான், திருப்பிக் கேட்க மாட்டோம் என்று இப்போதும் எஸ்.எம். கிருட்டிணா அறுதியிட்டு உரைக்கிறாரே, இது எப்படி?

இந்திய விடுதலை குறித்து உரியவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு ஒரு கட்டத்தில் பிரித்தானிய ஆட்சியாளர்கள் முன்வந்தார்கள். அதிகாரக் கைமாற்றத்திற்கான வழிவகைகள் குறித்து ஆராய்வதற்காக ஆணையங்கள் அமைக்கவும் செய்தார்கள். இந்தியா தொடர்பாகப் பிரித்தானியர் செய்ததைக் காசுமீரம் தொடர்பாக இந்தியர் செய்தால் என்ன? குடியா முழ்கிப் போகும்? விடுதலை என்ற சொல்லை உச்சரித்தாலே இந்த வீம்பர்களின் நாக்கு அழுகியா போகும்?

அடிப்படைக் குறிக்கோள் ஒரு புறமிருக்க, காசுமீரத்து மக்களின் உடனடிக் கோரிக்கைகளை நிறைவேற்றவும் பேச்சுவார்த்தைக்கு ஏற்ற அமைதிச் சூழலை ஏற்படுத்தவும் செய்ய வேண்டியது என்ன? இந்தியப் படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும். ஆயுதப் படைகள் தனியதிகாரச் சட்டம், பொதுப் பாதுகாப்புச் சட்டம், கலவரப் பகுதிகள் சட்டம் போன்ற வெறுப்புக்குரிய கறுப்புச் சட்டங்களை விலக்கி;க் கொள்ள வேண்டும். போராட்டம் தொடர்பாகச் சிறைப்பட்டுள்ள அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும். வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். மோதல்' கொலைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும். மக்களுக்கு எதிராகக் குற்றம் புரிந்த படையினரைத் தளைப்படுத்திக் கூண்டிலேற்றித் தண்டிக்க வேண்டும்.

இப்படியெல்லாம் செய்யாமல் புற்றுநோய்க்குப் புனுகு தடவுவது போல் எட்டுக் கூறுகள் கொண்ட கூறுகெட்டத் திட்டத்தை வெளியிட்டுள்ளது இந்திய அரசு, ஏன்? இப்படியொரு பஞ்சுமிட்டாய்த் திட்டத்தைக் கடைக்கோடி காசுமீரி கூட ஏற்க மாட்டார் என்பது இந்தியாவுக்கு நன்கு தெரியும். அப்படியானால் இந்தத் திட்டத்திற்கு வேறு உள்நோக்கம் இருக்க வேண்டும். “நாங்கள் அனைத்துக் கட்சிக் குழுவை அனுப்பினோம், சமரசத் திட்டம் அறிவித்தோம், எதற்கும் அவர்கள் ஒத்துவரவில்லை” என்று சொல்லி, தனது வன்முறையை மறைத்து, காசுமீர் மக்களை வன்முறையாளர்களாகக் காட்டி, உளவுத் துறையின் மூலம் சில நிகழ்ச்சிகளை அரங்கேற்றி, காசுமீரத்து மக்கள் தலைவர்கள் மீது பழிசுமத்தி, அரச பயங்கரவாத அடக்குமுறையை ஏவுவது, மக்களின் உரிமைப் போராட்டத்தைக் குருதிச் சேற்றில் அமிழ்த்துவது… இதுவே இந்திய அரசின் சூழ்ச்சித் திட்டமாக இருக்க வேண்டும் என ஐயுறுகிறோம்.

இது குறித்து காசுமீரத்து மக்களும் அவர்களுக்கு ஆதரவான சனநாயக ஆற்றல்;களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஈழத்தில் நடந்தது போல் இன்னோர் இனப்படுகொலை எங்கும் நிகழ விடாமல் விழிப்புடன் இருக்க வேண்டும்.

காசுமீரத்து மக்களின் போராட்டத்துக்கு ஆதரவான இயக்கங்களை எங்கெங்கும் நடத்துவதும் அதற்காக மக்களைத் திரட்டுவதுமே இந்தியாவின் சூழ்ச்சித் திட்டங்களை முறியடிக்கப் பயன்படும். வியத்நாமின் போராட்டத்தை நம் போராட்டமாகவே பார்த்தோம். காசுமீரப் போராட்டத்தையும் நம் போராட்டமாகவே பார்க்க வேண்டும். என் பெயர் வியத்நாம், உன் பெயர் வியத்நாம், நம் பெயர் வியத்நாம் என்று முழங்கியதைப் போல், என் பெயர் காசுமீர், உன் பெயர் காசுமீர், நம் பெயர் காசுமீர் என்று முழங்குவோம்.

நன்றி: தேசத்தின் குரல்
சமூகநீதித் தமிழ்த்தேசம்
கீற்று.காம்

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...