வியாழன், 3 பிப்ரவரி, 2011

சொரணையுள்ள விகடன் - காட்டமான தலையங்கம்

'இனி ஒருவரையும் சாகவிட மாட்டோம்... தமிழக மீனவர்கள் கொலையைத் தடுக்க, இலங்கையுடன் புதிய ஒப்பந்தம் போடுவோம்' என்று கொழும்பு செல்லும் வழியில் இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் நிருபமா ராவ் கூறிவிட்டுச் சென்றார்.
இலங்கைக் கடற்படையின் அராஜகத் தாக்குதலில் ஐந்நூறாவது மீனவர் சாகட்டும் என்று காத்திருந்து, அதைக் கொண்டாடவா இந்தப் பயணமும் அறிவிப்பும்? ஒருவரையும் சாகவிடாத அளவுக்கு ஓர் ஒப்பந்தத்தைப் போட முடியும் என்பது உண்மையானால், ஏன் இத்தனை தாமதம்?

இலங்கை - இந்திய அரசுகளுக்கு மத்தியில் நிலவி வரும் விநோதமான நட்பு உணர்வு, சாமானியர்கள் தொடங்கி தலைவர்கள் வரையில் எத்தனையோ உயிர்களுக்குச் சமாதி கட்டியிருக்கிறது. உலகமே கொதித்துக் கண்டித்தபோதும், துளிகூட அலட்டிக்கொள்ளாமல், தோளில் கை போட்டுக்கொண்டு பொருத்தமான பொய்களைச் சொல்லிச் சமாளிப்பதில் இந்த இரு அரசுகளின் ஒற்றுமை உணர்வுக்கு ஈடு இணையே கிடையாது.

இறந்த மீனவரின் குடும்பத்துக்கு நிவாரணத் தொகை, அந்தக் குடும்பத்தில் ஒருவருக்கு அரசாங்க வேலை என்பதுதான் எப்போதும் நிறைவேற்றப்படும் சடங்கு சம்பிரதாயம். இப்போது தேர்தல் நெருக்கம் என்பதால், வீடு தேடிச் சென்று ஆறுதல் சொல்வதும், 'மீனவ சமுதாயத் தலைவர் சிங்காரவேலரின் 151-வது பிறந்த நாள் விழாவை அரசே கொண்டாடும்' என்று அறிவிப்பு செய்வதுமாக, சற்றே விசேஷக் காட்சிகள்கொண்ட அரசியல் நாடகங்கள் அரங்கேறுகின்றன!

தனியார் நிலத்தில் மேய வரும் காட்டு விலங்குகள், மின்வேலியால் தாக்குண்டு இறந்துபோனால், நிலத்தின் உரிமையாளரைக் கைது செய்து, நீதியின் முன் நிறுத்துகிறது அரசாங்கம். வன விலங்கின் உயிர் மீதே இத்தனை அக்கறை இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் நம் அரசு, எல்லை பிடிபடாத கடல் பிரதேசத்தில் மீனவனின் உயிர்கள் தொடர்ந்து பறிக்கப்படுவதை 'இருநாட்டு நல்லுறவு' என்ற பெயரால் இன்னும் எத்தனை காலம் பேடித்தனமாக வேடிக்கை பார்க்குமாம்?

நன்றி: ஆனந்த விகடன் - 09 பிப். 2011





4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

சூப்பர் நெத்தியடி

பெயரில்லா சொன்னது…

ஓட்டு போட்டாச்சி

பெயரில்லா சொன்னது…

400 மீனவர்கள் இறந்தபின் அவசர அவசரமாக இப்போது இலங்கைக்கு ஓடியதன் காரணம் தேர்தல் சூடு. இல்லாதிருந்தால் 500 வது மீனவர்களின் மரணத்திற்கு இலங்கையும் இந்தியா அரசுகளும் இணைந்து விழா கொண்டியிருப்பார்கள். இப்போது போனதும் ஒருநாடகமே. போய் கொலைவெறியனின் கால்களை நக்கிவிட்டு கைகுலுக்கி விட்டு வந்திருப்பார்கள். தேர்தல் முடிந்தபின் மறுபடியும் தொடரும்.

பெயரில்லா சொன்னது…

400 மீனவர்கள் இறந்தபின் அவசர அவசரமாக இப்போது இலங்கைக்கு ஓடியதன் காரணம் தேர்தல் சூடு. இல்லாதிருந்தால் 500 வது மீனவர்களின் மரணத்திற்கு இலங்கையும் இந்தியா அரசுகளும் இணைந்து விழா கொண்டியிருப்பார்கள். இப்போது போனதும் ஒருநாடகமே. போய் கொலைவெறியனின் கால்களை நக்கிவிட்டு கைகுலுக்கி விட்டு வந்திருப்பார்கள். தேர்தல் முடிந்தபின் மறுபடியும் தொடரும்.

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...