வியாழன், 17 பிப்ரவரி, 2011

'பாரத் ரத்னா' பண்டிட் பீம்சேன் ஜோஷி: நினைவலைகள்

பீம்சேன் ஜோஷி மறைந்துவிட்டார். நீண்ட ஆயுள்தான்! புகழின் உச்சத்தையும் கடந்துவிட்ட வாழ்வுதான்! இயற்கை நியதிதான்! எல்லோர்க்கும் ஓர் நாள் வருவதுதான்! ஆனாலும் இந்த மரணம் ஏனோ அழுத்தமாக வருத்துகிறது.

கர்நாடக மாநிலம், தார்வாட் மாவட்டம், "கடக்' என்ற இடத்தில் 1922-ம் ஆண்டு உற்பத்தியான ஒரு சங்கீத மஹாநதி, ஜனவரி 24, 2011ல் இறைவனோடு சங்கமமாகிவிட்டது.

அவரது "நாத சரீரம்' (மட்டுமே) தகனமாகியிருக்கிறது. அந்த கம்பீரமான நாதம்....? அது வெந்தணலால் வேகிற விஷயமா? விஞ்ஞான வளர்ச்சியின் சாதக அம்சங்களில் ஒன்றான "பதிவுக் கலை'யில் பீம்சேன் ஜோஷியின் இசை வாழ்வு, சூரியனுள்ளவரை தொடர்ந்து கொண்டுதானிருக்கும்.

பிறகேன் அவரது மரணம், அழுத்தமான வருத்தத்தை ஏற்படுத்த வேண்டும்? காரணம் இருக்கின்றது. அதைப் புரிந்து கொள்வதற்கு 'அபங்கம்' பற்றிய ஒரு சிறு அறிமுகம் தேவையாக இருக்கிறது. அதற்கு முன் இந்திய இசை பற்றிய ஒரு சிறிய அலசலும் அவசியம்.

இறைவனைப் பற்றி அடியார்கள் பாடிய அத்தனைப் பாடல்களுமே பக்தி கீதங்கள்தாம்.  ஜயதேவர், பத்ராசல ராமதாஸர், திருவையாறு தியாக பிரம்மம், கர்நாடகத்தை சேர்ந்த புரந்தர தாஸர், தமிழிசை வேந்தர்கள் மூவர், அருணாசல கவிராயர், ஆனந்த தாண்டவபுரம் கோபாலகிருஷ்ண பாரதி போன்ற பலர் - தங்கள் பாடல்களை, அதற்கேற்ற ராகங்களுடனேயே பாடியருளினார்கள்.

இவர்களனைவருக்கும் காலத்தால் மூத்தவர்களான திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தர மூர்த்தி நாயனார் ஆகியோர் பாடிய தேவாரப் பாடல்களும் தொன்மையான தமிழ்ப் பண்ணமைப்பிலேயே அருளப்பட்டன.

இவர்களைப்போல் பிரம்மானந்தர், ஸுர்தாஸ், மீராபாய், கபீர் தாஸ் போன்ற ஏராளமான ஞானியர்களும் பாடல்களை இயற்றியுள்ளனர். அவை இன்றளவும் உயிர்த் துடிப்புடன் விளங்குகின்றன. ஆனால் இன்று புழக்கத்தில் உள்ள ராகங்களில்தான் அந்தக் கீதங்கள் அவர்களால் இயற்றப்பட்டன என்று கூறுவதற்கில்லை. காலப்போக்கில் இசையின் போக்கும் மாறியிருக்க நிறையவே வாய்ப்புள்ளது.

"காந்தர்வ வேதம்' என்ற இசைக் கலை, நீண்ட பல நூற்றாண்டுகளாய் இந்த மண்ணில் இருந்து வந்துள்ளது. வேதத்தின் ஒரு பகுதியான, "சாம வேதம்' இசையோடுதான் ஓதப்படுகிறது. "வேத காலம் இதுதான்' என்று நிர்ணயிப்பதில் ஆய்வாளர்களிடையே தீர்மானமான முடிவு எட்டப்படவில்லை. இதில் மொழி, இனம், மதம் ஆகிய குறுக்கீடுகளைக் கடந்து நியாயமாக ஆய்வு செய்பவர்களும் அதிகம் பேரில்லை. உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழிலும் "பண்ணமைப்பு' உண்டு என்பதை ஏற்கெனவே பார்த்தோம். முகமதியர்கள் பாரதத்தை ஆண்ட காலத்தில் "பெர்ஷியன் இசை'யின் தாக்கமும் இந்திய சங்கீதத்தில் கலந்ததாகச் சில இசை வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த எல்லா இசை நெறிகளையும் கூட்டிக் கழித்துப் பார்க்கையில், இன்றைய பாரதத்தில் ஜீவனோடிருப்பவை கர்நாடக சங்கீதமும், ஹிந்துஸ்தானி இசையும்தான்! ஆனால் இந்த இரண்டு பிரிவுக்கும் இடையே ஒரு கற்பனைக் கற்சுவர், ஏனோ ஏற்பட்டுவிட்டது. மிகப் பெரும்பாலான இசை மேதைகள், தமது எல்லைகளை மீறி அடுத்த வட்டத்தின் ஆழத்தைக் காண பெரிதாகப் பிரயத்தனப்பட்டதில்லை என்பதே உண்மை. அந்த விஷயத்தில் "தெக்கத்தி' கர்நாடக சங்கீத வித்வான்களைக்கூட குறை சொல்ல முடியாது. அவர்கள் துணிந்து, தெளிவாக, பிழையின்றி "ஹிந்துஸ்தானி' ராகங்களில் புகுந்து விளையாடி விடுகின்றனர். ஆனால் ஹிந்துஸ்தானி இசையில் ஊறியவர்களில் மிகப் பலர், கர்நாடக இசையின் நுட்பங்களையும் அறிந்துகொண்டு அவற்றையும் பாட, அதிக ஆர்வம் காட்டுவதில்லை என்பதே உண்மை. இதில் விதி விலக்குகள் மிகச் சிலரே! அப்படிப்பட்ட வித்தியாச இசைக் கலைஞர்களில் பீம் சேன் ஜோஷிக்கு முக்கிய இடமுண்டு. "ஆக இதுதான் அவரது பெரும்புகழுக்கு முக்கியக் காரணமா?' என்று நீங்கள் ஆர்வமாகக் கேட்டால், "இல்லை, அபங்கங்கள் பாடியதுதான்' என அழுத்தமாகச் சொல்ல வேண்டிய அவசியம் நேரிடும்.

"அபங்கத்தைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகம் தேவையாக இருக்கிறது' என்று இரண்டாவது "பாரா'விலேயே எழுதிவிட்டு, இத்தனைத் தூரம் வந்துவிட்டதை வாசகர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். அபங்கங்களின் பெருமையைச் சொல்ல இவ்வளவு பலமான அஸ்திவாரம் தேவையாக இருக்கிறது.

கி.பி.12-ம் நூற்றாண்டை, அன்றைய பரந்த மராட்டிய (இன்றைய கர்நாடகம், கொங்கண் போன்றவற்றை உள்ளடக்கிய) மாநிலத்தின் "பக்தி இயக்க மறுமலர்ச்சிக் காலம்' என்று ஐயமின்றி சொல்லலாம். ஒரே குடும்பத்தில் நிவ்ருத்தி நாதர், ஞானேஸ்வரர், சோபான தேவர், முக்தா பாய் என்ற நால்வர், அந்தக் காலகட்டத்தில் தோன்றினர்; மராட்டியத்தில் ஒரு புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தினர். "பரமன் மேல் கொள்ளும் சுயநலமற்ற அன்பே பக்தி' என்பதனைப் பிரகடனப்படுத்தினர். அது பாமரன் வரைக்கும் சொந்தம் என நிரூபித்தனர். இவர்கள் நால்வரில் - நூல்கள் பல எழுதியும், "அபங்கம்' என்னும் கீதங்களைப் பாடியும், "பிள்ளையார் சுழி' போட்டவர் ஞானேஸ்வரர். இவரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட அபங்க வெள்ளம், 16-ம் நூற்றாண்டில் தோன்றிய துகாராம் வரை பொங்கிப் பாய்ந்தது. துகாராமின் சீடர்களான நீல்கண்ட் குல்கர்ணி, பஹிணா பாய் ஆகியோரின் அபங்கங்களும் "காதா' எனப்படும் புனித நூல் வரிசையில், ஆன்றோரால் ஏற்கப்பட்டன. இவர்களது காலத்துக்குப் பின் பாடப்பட்ட அபங்கங்களை "காதா'வில் சேர்க்காமல் "பக்தி கீதம்' எனப் பிரித்து வைத்து, அபங்கங்களின் தனித் தன்மையை இன்றளவும் மராட்டியர்கள் பேணிப் பாதுகாத்து வருகின்றனர்.

"அபங்கம்' என்பது, இசைக்கப்படும் கீதம்தான் எனினும், அவையும் நமது "தேவாரம்' போலவே இலக்கண அமைப்புக்கு உட்பட்டவை என்பது பலருக்கும் தெரியாத சேதி. மேலோட்டமாகக் கேட்டுப் பார்க்கும்போது அபங்கங்களில் "சந்தஸ்' (யாப்பு) இருப்பது புரியாது; நுட்பமாகக் கவனிக்கும் அறிஞர்களுக்கே அதன் இலக்கண அமைதி தெரிய வரும். ஞானேஸ்வரரின் சம காலத்தில் வாழ்ந்த நாமதேவர், பல்லாயிரம் அபங்கங்கள் பாடியிருக்கிறார். அவற்றில், "அபங்காசீ களா நாஹீ மீ நேணா! த்வரா கேலி ப்ரீத கேசீ ராஜே' எனத் துவங்கும் பாடலில், "அபங்க இலக்கணம்' முழுமையாகவும், தெளிவாகவும் விவரிக்கப்பட்டுள்ளது.

சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மராட்டிய அடியார்கள் பாடிய அபங்கங்களின் எண்ணிக்கை பற்பல பத்தாயிரங்களைத் தாண்டி நிற்கும் என்பது, பல இசை விற்பன்னர்களே கேள்விப்படாத விஷயமாக இருக்கலாம். சீக்கியர்களின் "குரு கிரந்த ஸôஹேப்' என்ற புனித நூலிலும், நாமதேவரின் அபங்கங்கள் இடம் பெற்றுள்ளன.

இத்தனைச் சிறப்புகளை அபங்கங்கள் பெற்றிருந்தும் ஏனோ அவை மராட்டிய வார்கரீ கலாசாரத்தைப் பின்பற்றும் பக்தர்களோடும், இந்தியாவின் ஏனைய பகுதிகளில் வாழ்ந்த "நாம சங்கீர்த்தனம்' செய்யும் பாகவதர்களோடும் மட்டுமே பல நூற்றாண்டுகளாய் ஐக்கியப்பட்டிருந்தன. இந்த வட்டத்துக்கு அப்பால் வாழ்ந்த வெளியுலகினருக்கு அபங்கங்களின் அருமை புரியாமலேயே இருந்தது ஒரு வினோதமே!

இந்தச் சூழ்நிலையில்தான், "மாஜே மஹேர பண்டரி' என்று சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியில் சிங்கமாய் மேடைகளில் முழங்கத் தொடங்கினார் பண்டிட் பீம்சேன் ஜோஷி. இந்த ஒரு அபங்கம் மட்டும்தானா? "ஸôவளே ஸýந்தர' "கஸô மலா' "ஜேகா ரஞ்ஜலே காஞ்ஜலே' என்று சர வெடிகளாக அபங்கங்களை ஜோஷி அரங்கேற்றம் செய்யச் செய்ய, அகில உலகின் கவனமும் அபங்கங்களின் மேல் விழத் தொடங்கியது.

இத்தனைக்கும் வாசுதேவ் படார்கர், குமார் கந்தர்வ், கிருஷ்ணா ஷிண்டே போன்ற ஜாம்பவான்கள் ஏற்கெனவே அபங்க இசை விற்பன்னர்களாக ஜோஷியின் காலத்திலேயே ஒளி வீசிக் கொண்டுதான் இருந்தனர். ஆயினும் தேசிய அளவில் மட்டுமின்றி, சர்வதேச அளவில் அபங்கங்களை மிகப் பிரபலமாக்கியவர் பீம்சேன் ஜோஷி ஒருவரே!

இன்று நமது கர்நாடக இசை விற்பன்னர்களான அருணா சாய்ராம், ஓ.எஸ். அருண் போன்ற பலர் - தங்கள் இசை நிகழ்ச்சிகளில் அபங்கங்கள் பாடுகின்றனர். தமிழ்நாட்டிலும், கேரளா, கர்நாடகம் போன்ற பல மாநிலங்களிலும் "அபங்க மேளா'க்கள் நடக்கின்றன. முறையான கர்நாடக இசைப் பயிற்சி இல்லாமல், சம்பிரதாயமாக பாடப்படும் ராகங்களில் அபங்கங்களைப் பாடுவதையே முழு நேரத் தொழிலாக்கிக் கொண்டுள்ளவர்களும் தற்போது உருவாகிவிட்டனர். இவர்களால் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஏன் துபாய் போன்ற நாடுகளில் வாழும் இந்தியர்கள் அனைவரின் மத்தியிலும்கூட அபங்க முழக்கம் கேட்கத் துவங்கிவிட்டது.

"இதற்குக் காரணம் இறைவனது இச்சை' என்று பொதுவாகக் கூறிவிடலாம். ஆனால், "அந்த இச்சையை நிறைவேற்றிக் கொள்ளக் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர்' என்று பீம்சேன் ஜோஷியை மட்டுமே குறிப்பிடத் தோன்றுகிறது.

அவர் ஒரு சங்கீத பிதாமகர்! எத்தனையோ இசை மேதைகள் இருப்பினும், "அபங்க வல்லுநர்' என்ற சிறப்புத் தகுதி, அவரை நட்சத்திர மண்டலத்துக்கு நடுவே முழு நிலவாய் ஒளி வீச வைத்தது. அந்த நிலவின் கிரணங்களைப் பற்றியபடி சஞ்சய் நட்கர்ணி போன்ற பல நட்சத்திர இசைக் கலைஞர்கள் உருவாகிவிட்டனர்.

அவரது பாணியை அப்படியே பின்பற்றாவிடினும் அஜித் கட்கடே, கோதாவரி பாய், சுரேஷ் வாட்கர், கிஷோரி அமோல்கர், ரமேஷ் புவா, காசிராம் இட்லிகர், கோலே காவ்ங்கர், கல்யாண், ஜிதேந்திர அபிஷேகி போன்ற இசை மாமேதைகளும், "ஜோஷி ஒரு பிதாமகர்' என்பதை ஒளிவு மறைவின்றி ஒப்புக் கொள்ளத்தான் செய்வார்கள்.

இப்போது சொல்லுங்கள்... "ஜோஷியின் மறைவு, ஒரு அழுத்தமான வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது' என்று நாம் இந்தக் கட்டுரையை ஆரம்பித்ததில் நியாயம் இருக்கத்தானே செய்கிறது? என்ன செய்வது? ஒரு இசை வெள்ளம் 90 வருடங்களைத் தொடப் போகிற நேரத்தில் கால தேவனுக்கு, "போதும்' என்று தோன்றிவிட்டது! இந்த விதி, அவனைப் பொறுத்தவரையில் நியாயமானதாகக்கூட இருக்கலாம். நமக்கென்னவோ, பீம்சேன் ஜோஷி போன்ற மாமேதைகளுக்கு மட்டுமாவது "ஆரோக்கியத்துடன் கூடிய இரு நூறு வருடங்கள்' என்று ஆயுளை நிர்ணயிக்கத் தெரியாத கால தேவன் மீது கோபம்தான் வருகிறது. யார் கண்டது? தர்ம தேவனுக்கே ஜோஷியின் அபங்க கீதத்தை நேரில் கேட்டு ரசிக்க ஆசை வந்திருக்கலாம்! அல்லது அந்தப் பரம்பொருளே தனது ஆஸ்தான இசைக் கலைஞர் பதவிக்காக அவரை அழைத்துக் கொண்டிருக்கலாம். எது எப்படியோ! நாம் கொடுத்து வைத்தது இவ்வளவுதான்! இனி காலம் நம் கணக்கை முடிக்கும்வரை ஜோஷியின் இசைப் பதிவுகளை சுவாசித்தபடியே நாட்களை ஓட்ட வேண்டியதுதான். அதுவொன்றே சோகத்தை மறக்க சுகமான வழி. இந்த வழியில் வேறொரு பெரிய பலனும் இருக்கிறது. அபங்கங்களைக் கேட்பதால் இங்கேயும் - அங்கேயும் நிரந்தர ஆனந்தமும் கிடைக்குமல்லவா? அதை நம்பி நாமும் பாடுவோம்...""மாஜே மாஹேர பண்டரி!''

நன்றி: சினிமா எக்ஸ்பிரஸ்

1 கருத்து:

அருள் சேனாபதி (பவானி நம்பி) சொன்னது…

நன்றி !!!

மிக அருமையான தகவல்கள் 'அபங்' பற்றி!!!

நான் O.S.Arun நின் 'அபங்'க்கு அடிமை !!!

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...