திங்கள், 28 பிப்ரவரி, 2011

ஆழ்நிலை தியானத்தை கொடுக்கும் ஆற்றல், புத்தகங்களுக்கு மட்டுமே உள்ளது: ரவி தமிழ்வாணன்

"மக்கள் தொகை எண்ணிக்கை பெருகிவிட்டது; மனிதர்கள் குறைந்து விட்டனர். இதற்கு, முக்கிய காரணம், இயந்திர வாழ்க்கையை பின்பற்றுவது தான். ஆரம்பத்தில், அச்சு துறையில், எழுத்துக்களை கையில் கோர்க்கும் முறை இருந்தது. கணினி வளர்ச்சியால், ஆயிரம் பக்கங்களை நான்கு நாட்களில் உருவாக்கும் அளவிற்கு, அச்சு துறை முன்னேற்றம் கண்டுள்ளது. புத்தகங்கள் தான், கற்பனை சக்தியை வளர்க்கும் மிகப் பெரிய கருவி.

கணினி வளர்ச்சியில், அனைத்து தகவலும் விரல் நுனியில் கிடைத்தாலும், புத்தகத்தை படித்து பெரும் அனுபவம் வேறு எதிலும் கிடைக்காது. புத்தகம் படிப்பதில் அதிக நேரம் செலவிடுவது போய், "டிவி' நிகழ்ச்சியில் அதிகம் நேரம் செலவிடுவது அதிகரித்து உள்ளது.புத்தகங்களை தொடர்ந்து படிக்கும் பழக்கம் மூலம், "டிவி' யில் அதிகம் நேரம் செலவிடுவது குறையும்.

ஒரு சில புத்தகங்கள், வாழ்க்கை மாற்றத்தை ஏற்படுத்தும். புத்தகங்களை தேடி படிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. துரோகம் செய்யாத, கைமாத்து கேட்காத, மிகச் சிறந்த தோழன் புத்தகங்கள்தான். குறைந்தது ஒரு நாளைக்கு அரை மணி நேரமாவது புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்த்து கொள்ள வேண்டும். புத்தக படிப்பில் உள்ள ஆர்வம் காரணமாக, பல வெளிநாடுகளில் உள்ள நூலகங்களுக்கு சென்றிருக்கிறேன். பதிப்பாளன் என்பதால், அரசை பாராட்டுவதாக எண்ண வேண்டாம். தமிழகத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் போல், வேறு எந்த நாட்டிலும் நூலகம் கிடையாது. புத்தகங்களுக்கு கொடுக்கப்பட்ட அங்கீகாரமாக, அண்ணா நூலகம் அமைந்துள்ளது.ஒரு முறையாவது, அந்த நூலகத்தை அனைவரும் பார்வையிட வேண்டும்.

இன்று, தாய்மொழி, புத்தகம் இந்த இரண்டிலும் இருந்து, இளைஞர்கள் விலகியுள்ளனர். ஆழ்நிலை தியானத்தை கொடுக்கும் ஆற்றல், புத்தகங்களுக்கு மட்டுமே உள்ளது. பெற்றோர்கள், அடுத்த தலைமுறைக்கு, புத்தகங்களை சொத்தாக கொடுக்க வேண்டும்".

நன்றி: தினமலர் 28.2.2011

சனி, 26 பிப்ரவரி, 2011

'சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா?' - லலிதா ராம்

லலிதா ராம்
னக்கு கல்லூரியில் சங்கர் என்று ஒரு நண்பன் உண்டு. 'அரியலூர் அர்னால்ட்' என்று கல்லூரி முழுவதும் பிரபலமான அவனுக்கு, சென்னையைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று ஆசை. முதல் வருட விடுமுறையின் போது, எழும்பூர் இரயிலடியில் காத்துக்கொண்டிருந்த அவன் முகத்தை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். களிப்பென்றால் அப்படி ஒரு களிப்பு. கடற்கரை, பார்த்தசாரதி கோயில், மஹாபலிபுரம் என்று ஒரு இடம் விடாமல் ஐந்து நாள் சுற்றிவிட்டு அவன் ஊருக்கு திரும்புகையில், "உங்க "கூவாரம்பட்டி" நமக்கு ஒத்து வராது சாமி, காவேரி தண்ணிய குடிச்சுபுட்டு உங்க ஊரு க்ளோரின் தண்ணிய மனுஷன் குடிப்பானா.." என்று அடுக்கிக் கொண்டே போனான். அவன் ஐந்து நாள் அடித்த கூத்தையெல்லாம், ஒரு ஐந்து நிமிடப் பாடலுக்குள் படம் பிடித்துக்காட்டிவிட்டார் ராஜா.

(கி)ராமராஜன் படம் என்றாலே பாடல்கள் நன்றாக இருக்கும் என்பது உறுதி. 'ஊரு விட்டு ஊரு வந்து' பாடலில் வரும் 'சொர்க்கமே என்றாலும்' பாடலில், மேற்சொன்ன சூழலை அழகாக கண்முன் கொண்டுவந்து நிறுத்திவிடுகிறார் ராஜா. இந்த பாடல் அமைந்த ராகம் 'ஹம்ஸநாதம்'. தியாகராஜர், 'உன் அவையில் ஏதாவது சேவகம் செய்யும் பாக்கியத்தை எனக்களிப்பாய் ராமா' என்று இந்த ராகத்தில் அமைந்த 'பண்டுரீதி' பாடல் மூலம் வேண்டுகிறார். இந்த ராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்களைக் கேட்கும்போது "அட! இந்த ராகத்தை இப்படியெல்லாம் கூட உபயோகிக்க முடியுமா" என்று பிரமிப்பாக இருக்கிறது.

பாடலின் முன்னிசையை கவனியுங்கள். வெளிதேசத்தில் இறங்கிய ஒரு கிராமத்தான், 'பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்து' பிரம்மிப்பது போன்ற உணர்வை மிக அழகாக வெளியிடுகிறது. இளையராஜாவின் குரல் பாடலின் சூழ்நிலைக்கு அற்புதமாய் பொருந்தியுள்ளது. பாடலின் பல்லவி, கிராமிய இசைக்கும், கர்நாடக இசைக்கும் இடையே நடக்கும் ஒரு அழகான சம்பாஷணையைப்போல் அமைந்துள்ளது. முதல் 'இடையிசையில்' வயலினும், கீ-போர்டும் வாத்திய-அமைப்பை நன்றாக அலங்கரிக்கின்றன. தன் ஊரை விட்டு வந்த கிராமத்து ஆசாமியின் வெவ்வேறு ஏக்கங்களை பாடலின் சரணங்கள் பட்டியலிடுகின்றன. "தாகம் தீர ஏது மோரு" என்ற வரியை உற்று கேளுங்கள். அது இந்த ராகத்தின் 'typical' பிரயோகமாகும். இரண்டாவது இடையிசையில், ஜானகி கிராமிய இசையில் பாட, அதற்கு மேற்கத்திய வாத்தியங்கள் மூலம் அழகாக பதிலளித்திருக்கிறார் ராஜா. கங்கை அமரனின் வரிகள் பாடலுக்கு மெருகு சேர்க்கிறது. இதை போன்று அழகாய் பாடல் எழுதக்கூடியவரை, அவர் அண்ணன் கூட 'ஓ ரங்கா, ஸ்ரீலங்கா' போன்ற பாடல்கள் எழுதவே அதிகம் பயன்படுத்தியது வருத்தத்திற்குரியது.

இந்த ராகத்தில் வேறு சில பாடல்கள் மூலம், பல்வேறு சூழ்நிலைகளை வெளிப்படுத்தியுள்ளார் ராஜா. "தென்றல் வந்து என்னைத் தொடும்" பாடலில் காதல் ரசத்தை குழைத்திருக்கிறார். "இசையில் தொடங்குதம்மா" பாடலில் இந்த ராகத்தின் ஹிந்துஸ்தானி வடிவத்தை காட்டியிருக்கிறார். "ஓம் நமஹ" பாடலில் ஒரு 'meditative mood' உருவாக்கியுள்ளார்.

ராஜாவைத் தொடர்ந்து பரத்வாஜ், 'பூவேலி' படத்தில், 'ஒரு பூ எழுதும் கவிதை' என்ற அற்புதமான ஹம்ஸநாதத்தை அளித்திருக்கிறார். 'அன்பே சிவம்' படத்தில் வரும் "பூ வாசம்" பாடலை வித்யாசாகர் சொக்க வைக்கும் வண்ணம் இந்த ராகத்தில் அமைத்துள்ளார். இங்கு குறிப்பிட்ட அனைத்துமே அற்புதமான பாடல்கள்தான். எனினும், ராகத்தின் அடிப்படையில் பெரும்பாலும் மெலடிகளைத்தான் உருவாக்க முடியும் என்ற பொதுவான அபிப்ராயத்தை 'சொர்க்கமே என்றாலும்' பாடல் உடைப்பதால், அதனை விரிவாக எழுதினேன்.

நன்றி: தமிழோவியம் - இசையோவியம்



இசைஞானி இளையராஜாவும் மாயாமாளவகௌளை ராகமும் - லலிதா ராம்


லலிதா ராம்
ள்ளியில் எப்படி முதன்முதலில் ஆனா – ஆவன்னாவில் பாடத்தைத் தொடங்குவோமோ, அதுபோல் சங்கீதத்தில் பாலபாடங்கள் அனைத்தும் மாயமாளவகௌளை ராகத்தின் அடிப்படியிலேயே இருக்கும். அந்த பாரம்பரியத்தைப் பின்பற்றி, நம் கட்டுரைக் கச்சேரியையும் துவக்குவோம்.

திரையிசையில் காலம்கால்மாய் உபயோகமாகும் ராகங்களில் மாயமாளவகௌளை முக்கியமானது 'கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா'வில் துவங்கி, 'வத்திக்குச்சி பத்திக்காதுடா' வரையில் எறக்குறைய அனைத்து இசையமைப்பாளர்களாலும் கையாளப்பட்ட ராகம் இது !

பதினைந்தாவது மேளகர்த்தா ராகமாகிய இந்த ராகத்தில், தியாகராஜரின், 'துளசிதள முலசே' என்ற பாடல் மிகவும் பிரசித்தமானது ('உன்னால் முடியும் தமிபி'யில் ரமேஷ் அரவிந்த், ஜெமினி கணேசனைக் கவர இந்தப் பாடலைத்தான் பாடுவார்; 'How to Name It' ஆல்பத்தின் 'Study of Violin' பகுதியில் இப் பாடல் முழுவதும் வரும்). திரையிசையில் இந்த ராகம் பல்வேறு சூழ்நிலைகளைச் சித்தரிக்க பயனாகியிருக்கிறது.

இசையமைப்பாளர்களுக்கு இந்த ராகம் இறைவன் கொடுத்த வரம் என்று கூறினால் இந்த ராகத்துக்குக் கிடைத்த வரமாக இசைஞானி இளையராஜாவைச் சொல்லலாம் அந்த அளவுக்கு மாயமாளவகௌளையின் ஆதிமூதல் அந்தம்வரை அலசித் தள்ளியிருக்கிறார் ராஜா. அவற்றுள் எந்த ஒன்றை உதாரணமாய் எடுப்பது என்று முடிவுசெய்வதற்குள் கிருஷ்ணா நதி நீர் சென்னைக்கு வந்துவிடும் போலிருக்கிறது. ஒரு பாடலைத் தேர்ந்தெடுத்தால், குறைந்தது 15 பாடல்களாவது என்னை முறைப்பதுபோல் ஒரு பிரம்மை ! ஒரு வழியாக, சாட்டிலைட் தொலைக்காட்சிகளின் வழியில் குலுக்கல் முறையைப் பின்பற்றி, 'கோபுர வாசலிலே' திரைப்படத்தில் வரும், 'காதல் கவிதைகள் படித்திடும் நேரம்' எனும் பாடலைத் தேர்வு செய்தேன்.

'Yes, I love this Loveable Idiot' என்ற அறைகூவலுடன் துவங்கும் பாடலின் முன்னோட்ட இசையிலேயே சூழ்நிலையின் முழுத் தாக்கத்தையும் சித்தரிக்கிறார் ராஜா, காதாநாயகி உணர்ச்சிவசப்பட்ட நிலையில், உலகே அத்ர்ந்திட தன் காதலை வெளிப்படுத்தும்போது மடைதிறந்த வெள்ளமெனப் பொங்கும் உணர்வுகளை சில நூறு வயலின்களின் ஆக்ரோஷமான வெடிப்பின் மூலம் மனக்கண் முன் அழகாய் நிறுத்துகிறார் ! பாடலை நன்கு கவனித்தால், 'இடம் மாறும்', 'பரிமாறும்', 'வழிந்தோடும்', 'கலந்தாட' என்ற வார்த்தைகளெல்லாம் ஒரு வித அசைவைக் குறிக்கும் சொற்கள், இந்த அசைவை, அதன் முந்தைய வார்த்தைகளான (முறையே) 'இதயம்', 'இளமை', 'அமுதம்', 'அழகில்' ஆகிய சொற்களில் ஒருவித அசைவைக் கொடுத்து வெளிப்படுத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் சந்தேகமானால் இந்த நான்கு வரிகளையும் அந்த அசைவு இல்லாமல் பாடிப்பாருங்கள் பாடலின் ஜீவனே போனதுபோல் தோன்றும். மிகவும் அனுபவித்து சிந்தித்தாலன்றி இவ்வாறு அமைத்திருக்கமுடியாது !

இந்த அசைவை 'கமகம்' என்று சொல்லுவார்கள். இந்த கமகம், இந்திய பாரம்பரிய இசைக்கு மட்டுமே உரிய தனிச்சிறப்பாகும்.

பாடலின் இடையிசையில் வயலினும், குழலும் மாறிமாறி இருவரின் சம்பாஷணையைப் போல் அமைந்திருக்கிறது – மொத்த பாடலும் ஒருவித பரவச நிலையை அழகாக சித்தரிக்கிறது. பாடல் முழுவதும் மேற்கத்திய இசையும், கர்நாடக இசையும் அற்புதமாய் பின்னிவருவது தனிச்சிறப்பு ! உன்னதமான வாத்திய அமைப்போடு பாலு மற்றும் சித்ராவின் சர்க்கரைக் குரல்களில் இழையல் குழையல்களும், வாலியின் அற்புதமான பாடல் வரிகளும் இப்பாடல் சோபிக்க முக்கியக் காரணங்களாகும்.

இதே ராகத்தில் அமைந்த வேறு சில பாடல்கள்

* பூங்கதவே தாள் திறவாய் : நிழல்கள்

* ஏ ஷப்பா – கர்ணா

* பூவ எடுத்து ஒரு மாலை – அம்மன் கோவில் கிழக்காலே

* சொல்லாயோ சோலைக்கிளி – அல்லி அர்ஜுனா

நன்றி: தமிழோவியம் - இசையோவியம்



ராகத்தை எப்படி புரிந்து கொள்வது? - லலிதா ராம்

லலிதா ராம்
ப்பொழுது ஒரு ராகத்தை எப்படி புரிந்து கொள்வதென்று பார்ப்போம். ஒரே ராகத்தில் அமைந்த திரைப்பாடல்களை எடுத்துக்கொள்ளுங்கள். வெவ்வேறு சூழ்நிலைகளில் அமைந்த இரு பாடல்களை எடுத்துக்கொண்டு கவனமாகக்கேளுங்கள். இரண்டிற்கும் சம்பந்தமே இல்லாமல் தோன்றினால் ரொம்ப நல்லது. இரண்டும் ஒரே ராகத்தின் இரு பிரயோகங்களை படம் பிடிக்கின்றன என்று அர்த்தம். இப்பொழுது மூன்றாவதாக அதே ராகத்தில் ஒரு பாடலைக் கேட்டுப்பாருங்கள். நிச்சயமாக ஏதோ ஒரு இடத்தில் முன்னால் கேட்ட பாடல்களுக்கும் இந்த பாடலுக்கும் ஒரு ஒற்றுமை தோன்றும். (ஒருநாள் கேட்டுவிட்டு "அட போய்யா எல்லாம் கட்டுக்கதை" என்று சொன்னால் ஒன்றும் செய்ய்ய முடியாது. பொறுமையாக கேளுங்கள். காலப்போக்கில் இந்த "pattern matching" சூட்சுமம் நிச்சயம் கைவர ஆரம்பிக்கும்).

பல ராகங்கள் முதல் முறை கேட்கும்போது ஒரே மாதிரிதான் தோன்றும். உதாரணமாக, ஆபேரிக்கும் சுத்ததன்யாசிக்கும் என்ன வித்தியாசம் என்று விளங்கவில்லையெனில் யாரேனும் சங்கீதம் நன்றாய் தெரிந்தவரிடம்போய் கேட்டு விடாதீர். "ஓ!!!இதென்ன பெரிய விஷயம்!!! சுத்தன்யாசில 'ரி' வராது" என்று எதாவது கூறிவைப்பார். ஏண்டா கேட்டோம் என்று ஆகிவிடும் (சொந்த அனுபவம் ஐயா!!). முதலில் இரண்டு ராகங்கள் ஒரே மாதிரி இருக்கிறது என்று தெரிந்தாலே 'moral victory'-தான். நிறைய கேட்க கேட்க வித்தியாசம் தானே புரிபடும்.

சரி இவ்வளவு நேரம் அடிப்படை விஷயமெல்லாம் அலசியாகிவிட்டது. நல்ல உணவிற்கு முன்பு கொஞ்சம் சூப் குடிப்பது போலத்தான் இதெல்லாம். சூப் குடித்தால் நல்லது அதற்காக சூப் இல்லாவிடில் சாப்பிடவே முடியாது என்று எதாவது உண்டா என்ன? அதைப்போலத்தான் இந்த theoretical சமாச்சாரங்களும். இனி வாரம் ஒரு ராகம் என எடுத்துக்கொண்டு அதில் கொஞ்சம் ஆழம் சென்று பார்ப்போம்.

இப்பொழுது ரசிப்பது போலவே திரையிசைப்பாடல்களை ரசித்தால் போதாதா? இந்த ராகத்தையெல்லாம் தெரிந்து கொண்டு என்ன ஆகப்போகிறது என்று நீங்கள் கேட்கலாம். உதாரணத்திற்கு "உன்னால் முடியும் தம்பி" படத்தை எடுத்துக்கொள்வோம். அதில் கதாநாயகனின் அண்ணி "பொறுப்புள்ள பையனாக வா" என்று கூறியவுடன் கமல்ஹாசன் ஒட்டுமீசை வைத்துக்கொண்டு படியில் இறங்கி வருவது போல ஒரு காட்சி. அதில் வரும் பின்னணியிசையை நன்றாக கவனியுங்கள். அது பிலஹரி ராகத்திலமைந்தது. மீசை வைத்ததும் அவன் தந்தையைப்போலத் தோன்றுகிறான் (படத்தில் ஜெமினி கணேசனின் பெயர் பிலஹரி) என்பதை மறைமுகமாக கூறுகிறது அந்த இசை. இதை எத்தனைப்பேர் உணர்ந்து ரசிக்க முடியும்? அதே படத்தில், 'இதழில் கதையெழுதும் நேரமிது' என்றொரு பாடல். கதாநாயகியின் பெயர் லலிதா. இந்த பாடல் அந்த லலிதாவை நோக்கிப் பாடுவதற்குப் பொருத்தமாக லலிதா ராகத்திலேயே இசையமைத்திருகிறார் ராஜா. இப்படி எத்தனையோ படங்களில் எத்தனையோ நுணுக்கங்களுடன் எவ்வளவோ இசையமைப்பாளர்கள் அமைத்த இசையை நாம் அங்கீகரிக்க வேண்டாமா? உண்மையான சந்தோஷம் என்ன அவர் வாங்கிய சம்பளத்திலா இருக்கிறது? அவர்கள் கஷ்டப்பட்டதிற்கு பெரியதாக பாராட்ட வேண்டாம், லேசாக புருவம் உயர்த்திப்பார்த்தால் கூடப்போதும் அதுவே அவர்களுக்கு ஒரு பெரிய சந்தோஷம் !!

நன்றி: தமிழோவியம் - இசையோவியம்



ஸ ரி க ம ப த நி - லலிதா ராம்

லலிதா ராம்
சென்ற வாரம் எழுதியதை கர்நாடக சங்கீதம் என்றால் கிலோ எவ்வளவு என்றும் கேட்கும் நண்பனிடம் காட்டினேன். படித்துவிட்டு அவன், "எல்லாம் சரிடா, ஆனால் இந்த ஸ்வரம் ஸ்வரம்-னு அடிக்கடி வருதே! அப்படினா என்ன" என்று கேட்டான். அவனுக்கு பொறுமையாக விளக்கியவுடன் "அட! நம்ப ஸரிகமபதனிஸ !!!, இதை சொல்லவா இவ்வளவு ரவுசு விட்ட?" என்றான். ஆக சங்கீதம் தெரிகிறதோ இல்லையோ எல்லொருக்கும் ஸ ரி க ம ப த நி தெரிந்துதான் இருக்கிறது. இதை இவ்வளவு பிரபலமாக்கிய பள்ளிக்கூட பாடலாசிரியர்களைப் பற்றி இரண்டு வார்த்தையேனும் கூறாவிடில் நான் பெரும்பாவத்திற்கு ஆளாவேன். என் பள்ளி பருவத்தில் என் தந்தைக்கு அடிக்கடி மாற்றல் இருந்ததால், பல பள்ளிகள் மாற வேண்டியிருந்தது. ஒவ்வொரு பள்ளியிலும் சொல்லிவைத்தார்ப்போல் வருட ஆரம்பத்திலிருந்து கடைசி வரையில் அதே ஸரிகமபதனி-தான். இதில் வேறு இந்த பாட்டு வாத்தியார்களை காலை assembly-யில் பாடச் சொல்லிவிடுவார்கள். mic-ஐ பார்த்தவுடன் இவர்களுக்கு என்னமோ music academy-யில், ரேடியோவில், டிரான்சிஸ்டரில் எல்லாம் கச்சேரி செய்வது போல ஒரு நினைப்பு வந்து விடும். தேசிய கீதத்தைக்கூட ஏதோ சங்கராபரண கீர்த்தனையைப் போல கமகம் பிருகாவெல்லாம் கொடுத்து 5-நிமிடத்துக்குப் பாடுவார்கள். தாலி என்றால் என்னவென்றே தெரியாத இளைஞன் தமிழ்நாட்டின் எல்லா கிராமங்களிலும் இருப்பது போல இந்த மாதிரி பாட்டு வாத்தியார்கள் எல்லா பள்ளிகளிலும் உண்டு. அப்படி யாரும் எங்கள் பள்ளியில் இல்லை என்று கூறுபவர்களூக்காகவே பார்த்திபன் படமெடுத்து ஸரிகமபதநி புகழை கோபால் பல்போடி புகழ் அளவுக்குப் பரப்பி விட்டார்.

ஏழு ஸ்வரம், ஏழு ஸ்வரம் என்று அடிக்கடி பல பாடல்களில் வருவதைக் கேட்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் இருப்பது 12 ஸ்வரங்கள் (7-ஐ ஸ்வரம் என்றும், 12-ஐ ஸ்வரஸ்தானம் என்றும் கூறுவர்.). ஸ்வரங்கள் என்னமோ ஸ ரி க ம ப த நி தான் என்றாலும் இதில் ஸா மற்றும் பா-வைத்தவிர மற்ற எல்லா ஸ்வரங்களும் double action கதாநாயகிகள். இந்த 12 ஸ்வரங்களை வைத்துக்கொண்டு வெவ்வேறு விதமான ஸரிகமபதநி-க்களை உருவாக்க முடியுமல்லவா? (various combinations). அப்படி உருவாகும் 72 ஸரிகமபதநி-க்களைத்தான் மேளகர்த்தா ராகங்கள் என குறிக்கிறோம். ஒவ்வொரு மேளகர்த்தா ராகத்திலிருந்தும் பல கோடி ராகங்கள் உருவாக முடியும். அந்த ராகங்களுக்கு ஜன்ய ராகங்கள் என்று பெயர்.

"என்னைய்யா நீ!! ஏதோ கணக்கு பாடம் போல அடுக்கிக்கிட்டே போற? இந்த விஷயமெல்லாம் விளங்கினால்தான் ராகம் எல்லாம் புரியுமா" என்று கேட்டால், அதற்கான பதில், "நிச்சயமாக இல்லை" என்பதாகும். (எனக்கு விஷயம் தெரியும்னு காட்டிக்கொள்ள வேண்டுமில்லையா) உண்மையைச் சொல்லப்போனால் எனக்கு ராகம் எல்லாம் ஒரு அளவுக்கு புரிய ஆரம்பித்தவுடன்தான் இந்த விஷயம் எல்லாம் விளங்கியது. இந்த சமாச்சாரமெல்லாம் புரிந்தால் ரொம்ப நல்லது, அப்படி புரியாவிடினும் பெரிய பாதகமில்லை.

நன்றி: தமிழோவியம் - இசையோவியம்





திரையிசையும் கர்னாடக இசையும் - லலிதா ராம்

லலிதா ராம்
சென்னைக்கு அருகிலிருக்கும் "Ashok Leyland" நிறுவனத்தில் ஒரே நாளில் தயாராகும் 3 வண்டிகளை தொடருங்கள்.  ஒன்று தட்டுமுட்டுச்சாமான்கள் ஏற்றிச்செல்லும் லாரியாக மாறும். ஒன்று குளிர்பதனவசதி கொண்ட டூரிஸ்ட்டு பஸ் ஆகும். இன்னொன்று எப்பொழுதும் தாமதமாய் வரும் பல்லவன் பேருந்தாகும். அதைப்போலத்தான் திரையிசையும் கர்னாடக இசையும்.

திரைப்படங்களில் தாலாட்டுப்பாட்டு, காதல் பாட்டு, காதலியை காதலன் கிண்டல் அடிப்பது, கதாநாயகன் நயாகராவுக்குச்சென்று தமிழ் குடியின் தொன்மையை பற்றி பாடுவது, பக்திப்பாடல், ரயிலில் தவிறிப்போன இரு சகோதரர்களை இணைக்கும் குடும்பப்பாடல். தத்து(பித்து)வப்பாடல் என்று பலவிதமான சூழ்நிலைக்கேற்ப பாடல் அமைக்கிறார்கள். ஒவ்வொறு பாடலையும் கேட்கும்போதே அந்த சூழ்நிலை நம் மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.

உதாரணமாக "பருவமே புதிய பாடல் பாடு" என்ற பாடலை கேட்கும் பொழுதே இருவர் காலை வேளையில் "jogging" செல்வது போன்ற உணர்வு மனதில் எழுகிறது. இதைத்தான் கர்நாடக இசையில் ராகங்கள் செய்கின்றன. ஒவ்வொரு ராகமும் ஒரு குறிப்பிட்ட ஸ்வர வரிசையில் அமைக்கப்பெற்றது. நம் வாழ்வில் உள்ளதுபோல் ராகங்ளுக்கும் ஏறுமுகம், இறங்குமுகம் உண்டு. ஏறுமுகத்தை ஆரோஹனம் என்றும் இறங்கு முகத்தை அவரோஹனம் என்றும் குறிக்கிறோம். ஆக சூழ்நிலைக்கு ஏற்றவாறு அந்த அந்த ராகங்களை பயன்படுத்திதான் இசையோவியம் வரைகின்றனர் நம் இசையமைப்பாளர்கள். உதாரணமாக மோகனம் ராகத்தை எடுத்துக்கொண்டால், பெயர் சொல்வதைப் போலவே அது சந்தோஷத்தை குறிக்கும் ராகம். (இதற்காக இருமல் சூரண விளம்பரமெல்லாம் கரஹரப்ரியா ராகமா என்று கேட்டுவிடாதீர்கள்).

திரையிசையில் பிரபலமான இந்த ராகத்தில் உதாரணத்திற்க்காக "ஆஹா இன்ப நிலாவினிலே, ஓஹோ ஜகமே ஆடிடுதே" என்ற பாடலை எடுத்துக்கொள்வோம். தலைவனும் தலைவியும் உல்லாசமாய் படகு சவாரி செய்து கொண்டு சல்லபமாய் பாடுவது போன்று படமாக்கப்பட்ட பாடல். பாடலை கேட்கும்போதே நம் முன் காட்சி தோன்றுகிறது இல்லையா. மற்றொறு சந்தோஷத்தை குறிக்கும் ராகமான பிலஹரியில்தான் பாரதியார் "விடுதலை விடுதலை" என்று அரைக்கூவலிட்ட பாடலை மெட்டமைத்திருந்தார். (பாரதியார் அமைத்த ராகத்திலேயே இன்றும் பாடப்படும் சொர்ப்பமான பாடல்களுள் இதுவும் ஒன்று. சிந்து பைரவி படத்தில் தியாகராஜர் அமைத்த ராகத்தின் மெட்டை மாற்றி அமைத்துவிட்டார் என்று இளையராஜாவின் மேல் பாய்ந்தவர்கள் பாரதியின் ராகங்களை மாற்றிப் பாடுபவர்களை ஏன் ஒன்றும் செய்யாமல் இருக்கிறார்கள் என்று எனக்கு இது நாள் வரை விளங்கவில்லை.)

இப்பொழுது உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். ஒரே ராகத்தில் அமைந்த பாடல்கள் வெவ்வேறு சூழ்நிலையில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றனவே. அப்படியெனில், நாம் முன்பு கூறியது தவறென்றல்லவா ஆகிறது? ஒன்று செய்யுங்கள், உங்கள் வீட்டு அம்மையாரையும் அடுத்த வீட்டு அம்மையாரையும் ஒரே விதமான சாமான்களை கொடுத்து எதேனும் ஒரு பதார்தத்தை செய்யச் சொல்லுங்கள். வெகு நிச்சயமாக கூறுகிறேன், இரண்டிற்கும் குறைந்த பட்சம் ஆறு வித்தியாசமாவது கூறிவிடலாம். அதே போலத்தான் ஒரு ராகம் என்பது ஸ்வரங்களின் கூட்டமைப்பு. ஒரு ராகத்தை பாடும்போது அவர் அவர் விருப்பம் போல ஸ்வரங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அதாவது அவர் அவர் கற்பனைக்கேற்ப வெவ்வேறு முறைகளில் ஸ்வரங்களைக் கோர்க்கலாம். அப்படி பல வகையான ஸ்வரக்கோர்ப்புகளின் பெயரே "பிரயோகங்கள்". ஒரே ராகத்தின் வெவ்வேறு பிரயோகங்கள் வெவ்வேறு உணர்வுகளை பிரதிபலிக்கக்கூடும். இதுவே ஒரே ராகத்தில் அமைந்த இரு பாடல்கள் நமக்கு வித்தியசமாய் ஒலிக்கக் காரணம். இதுவரை உபயோகப்படுத்தப்படாத எத்தனையோ பிரயோகங்கள் இன்னும் இருப்பதால்தான் புதிது புதிதாய் பல பாடல்கள் வந்துகொண்டிருக்கிறது.

நன்றி: தமிழோவியம் - இசையோவியம்



கர்நாடக சங்கீதம் ஒன்றும் கம்பசூத்திரம் அல்ல - லலிதா ராம்

லலிதா ராம்
ண்ணகி மதுரை நகரை எரித்த காலம் முதல் கண்ணகி சிலை அருங்காட்சியகம் சென்ற காலம் வரை உள்ள தமிழர் சரித்திரத்தை எடுத்துப்பார்த்தால்,தமிழர் வாழ்வில் இசை இரண்டறக் கலந்துதான் உள்ளது. பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒவ்வொரு வகையான பாடலைக்கொண்டுதான் தன் மகிழ்ச்சியையோ, துக்கத்தையோ அல்லது வேறேதும் ஒரு உணர்வையோ தமிழன் வெளிப்படுத்துகிறான்.

அப்படிப்பட்ட தமிழனிடம் இன்று போய் "நீ கர்நாடக சங்கீதம் கேட்பதுண்டா" என்று கேட்டால்,பெரும்பாலானவர் கூறும் பதில் "அட!அதுக்கெல்லாம் ரொம்ப அறிவு வேணுமையா! நான் நிறைய பாட்டு கேப்பேன் ஆனால் எல்லாம் சினிமா பாட்டுதான்" என்பது.

இப்படி ஒரு பதிலை கேட்க நேரிடும்போதெல்லாம் எனக்கு சிரிப்புதான் வரும். அதற்கான காரணத்தை பிறகு சொல்கிறேன் முதலில் கர்நாடக இசை நம்மிலிருந்து அந்நியப்பட்டு போனதற்கு என்ன காரணம் என்பதை பார்ப்போம். காலை வேளையில் கலர் கலராய் கனவு கண்டு கணக்கு டீச்சரை கட்டி வைத்து உதைக்கும் கணத்தில் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி தன் தேன் மதுரக் குரலால் கனவை கலைத்து விடுவார். அன்று விழும் இந்த இசையின் மீதுள்ள வெறுப்பிற்கான முதல் விதை. அப்படி அதிகாலையை விட்டுவிட்டால் யாராவது பெரிய மனிதர் மண்டையைப் போட்ட அன்று நாம் விரும்பிப் பார்க்கும் தொலைகாட்சி மெகா சீரியல்களை ரத்து செய்துவிட்டு லால்குடி ஜெயராமனின் சுபபந்துவராளியை ஒளிபரப்பிவிடுவார்கள். ஆக.. நேரம்கெட்ட நேரத்தில் வந்து நம் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொள்ளும் விஷயமாகவே கர்நாடக சங்கீதம் உள்ளது.

சரி விஷயத்திற்கு வருவோம். ஒரு சராசரி தமிழ் வீட்டின் இல்லத்தரசியிடம் போய் "உங்களுக்கு ரசம் சமைக்கத் தெரியுமா?" என்று கேட்டு,அதற்கு அவர் "ஐயோ! அதற்கெல்லாம் ரொம்ப அறிவு வேண்டும் எனக்கு சாம்பார்தான் சமைக்கத் தெரியும்" என்று கூறினால் உங்களுக்கு சிரிப்பு வருமா? வராதா?

சாம்பார் வைக்க உபயோகப்படும் அதே பருப்பு, பொடி, கடுகு ஆகியவைதானே ரசம் வைக்கவும் உபயோகிக்கிறோம்! அப்படியிருக்க, இந்த பெண்மணி ஏன் ரசம் வைக்க computer science படிக்க வேண்டும் என்கிறாள் என்று நினைக்கத்தோன்றும் அல்லவா! அதே போலத்தான் கர்நாடக இசையும் திரையிசையும் ஒரே அடிப்படையில்தான் உள்ளது. இன்னும் சொல்லப்போனால் உலகின் எல்லா வகை இசைக்கும் அடிப்படை ஒன்றுதான். ஒரு குழந்தையிடம் அச்சிலிட்ட வடிவான கற்கண்டையும், கரடுமுரடான கற்கண்டையும் கொடுத்தால்,அது கரமுரடானதை சுவைக்காமலே எனக்கு வேண்டாம் என்பதுபோல், வெளிப்பார்வைக்கு கரடுமுரடாய் தெரியும் கர்நாடகயிசையை நாம் அந்நியப்படுத்திவிட்டோம்.

தமிழருக்கு கர்நாடக சங்கீதம் பிடிக்காதெனில் 'சிந்து பைரவி' என்ற படம் மூலைமுடுக்கெல்லாம் கொடிகட்டிப் பறந்ததெப்படி? வேற்று பாஷைப் பாடல்களெனினும், "சங்கராபரணம்" படத்தின் பாடல்கள் தமிழகம் முழுவதும் பரவியது எப்படி? அட! அவ்வளவு ஏன்? உங்கள் வீட்டில் எவரேனும் பெரியவர் இருந்தால் அவருக்குப்பிடித்த திரைப்பாடலை சொல்லச் சொல்லுங்கள். அவர்கூறும் M.K.T அல்லது K.B.S பாடிய பாடல் எங்கிருந்து வந்தது? எல்லாம் கர்நாடக இசைதானே!!

கர்நாடக சங்கீதம் அடிப்படையில் பக்தியை வெளிப்படுத்தும் இசை. ஆனால் திரைப்படங்களில் அனுதினம் நடக்கும் யதார்த்தங்களைக்காட்ட வேண்டியிருப்பதால், அதற்கேற்றார்போல இசையையும் சற்று மாற்றியமைக்கின்றனர்,அவ்வளவே!.

நன்றி: தமிழோவியம் - இசையோவியம்

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

பெருமைமிகு இந்தியர் - 'பத்மபூஷண்' டாக்டர். ரெட்டி

ருந்து தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருபவரும், இந்திய மருந்து ஆராய்ச்சி துறையின் முன்னோடிகளில் ஒருவருமான அஞ்சி ரெட்டிக்கு பத்மபூஷண் விருது கிடைத்துள்ளது. இந்திய மருந்தியல் துறையில் புதுமைகளையும், சாதனைகளையும் படைத்துள்ளதற்காக, இந்த விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டது புகழ் தரும் விஷயமாகும்.

ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்தவரான அஞ்சி ரெட்டி, விவசாய குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை மஞ்சள் பயிரிடும் விவசாயி. டாக்டர் ரெட்டி, குண்டூர் கல்லூரியில் அறிவியல் துறையில் பட்டம் பெற்றார். மும்பை பல்கலையில் மருந்தியல் துறை பட்டப் படிப்பை முடித்தார். இதன்பின், புனேயில் உள்ள தேசிய வேதியியல் ஆய்வக மையத்தில் வேதியியல் இன்ஜினியரிங் துறையில் ஆராய்ச்சி பட்டம் பெற்றார். கடந்த 1984ல், டாக்டர் ரெட்டி என்ற பெயரில் ஆய்வகத்தை துவக்கினார். துவங்கிய சில காலத்திலேயே, இந்திய மருந்தியல் துறையில் அபார வளர்ச்சியை இந்நிறுவனம் எட்டியது. 1990களில், இந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மருந்துகள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. கடந்த 2005ல் இந்தியாவின் பிரபலமான மருந்து தயாரிக்கும் நிறுவனங்களின் பட்டியலில் டாக்டர் ரெட்டியின் நிறுவனம், இரண்டாவது இடத்தை பிடித்து சாதித்தது.

இவரது நிறுவனத்தின் வெற்றிக்கு தாரகமந்திரமாக இருந்தது, விலை குறைவான மருந்துகள் தான். நோய் எதிர்ப்பு சக்தி போன்றவற்றுக்கு மற்ற மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், மிக அதிக விலையில் மருந்துகளை விற்பனை செய்து வந்த காலத்தில், அதில் பாதியளவு விலை நிர்ணயித்து, இந்நிறுவனம் மருந்துகளை விற்பனை செய்தது. ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கும், மிக குறைந்த விலையில் இந்நிறுவனம் மருந்துகளை தயாரித்து விற்பனை செய்தது. தற்போது மருந்தியல் துறையை விட, சேவை செய்வதில் தான், டாக்டர் ரெட்டி அதிக ஆர்வமாக உள்ளார். இதற்காகவே, அதிகமான நேரத்தை அவர் செலவிடுகிறார். தன் வருவாயின் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஏழை மக்களின் பசியை போக்குவதற்கும், ஏழை குழந்தைகளின் கல்விக்காகவும் செலவிடுகிறார். இதற்காக அறக்கட்டளை ஒன்றையும் அவர் அமைத்துள்ளார்.

நன்றி: தினமலர்




திங்கள், 21 பிப்ரவரி, 2011

அமரர் மலேசியா வாசுதேவன்: நினைவலைகள்


கோட்டு ஓவியம் : முரளி

இசை விமர்சகர் ஷாஜியின் 16 ஆகஸ்டு,2010 தேதியிட்ட கட்டுரை

மலேசியா வாசுதேவன்: மகத்தான திரைப்பாடகன் தினாறு வருடங்களுக்கு முந்தைய ஒரு பிற்பகல் நேரம். சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள பாடல்பதிவு கூடம் ஒன்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. 'இன்றும் புதிது' என்று பெயரிடப்பட்டிருந்த இசைத் தொகை ஒன்று அங்கு பதிவு செய்யப்பட்டு கொண்டிருந்தது. சில சிறந்த பழைய தமிழ் திரைப் பாடல்களை தேர்ந்தெடுத்து அதை தற்க்காலத்தில் பிரபலமாயிருக்கும் பாடகர்களை பாடவைத்து, நவீன தொழில்நுட்பத்துடன் ஒலிப்பதிவு செய்து வெளியிடும் முயற்ச்சி அது. நான் பணிபுரிந்து கொண்டிருந்த நிறுவனம் தான் அதைத் தயாரித்தது. ஆகவே மேற்ப்பார்வைக்காக நானும் அங்கிருந்தேன். டி எம் எஸ் பாடிய ஓரிரு பழைய பாடல்களை பாடகர் மலேசியா வாசுதேவன் பாடுவதாக இருந்தது. அவருக்காக எல்லோரும் காத்துக் கொண்டிருந்தனர். வரும் வழியிலே அவரை பார்த்துவிடவேண்டும் என்ற எண்ணத்தில் ஆர்வத்தோடு நான் வெளியே நின்றுகொண்டிருந்தேன். நான் அவரை அதற்கு முன் நேரில் சந்தித்திருக்கவில்லை.



அந்த கட்டடத்தின் முன்னால் இருந்த சந்தில் வெள்ளை ஒளி நிரப்பி ஒரு வெள்ளைநிற சொகுசுக் கார் உள்ளே நுழைந்தது. அதிலிருந்து மலேசியா வாசுதேவன் இறங்கினார். ஐம்பது வயது இருக்கும். திடகாத்திரம். நீள்வடிவ முகம், கூர்மையான கண்கள். சாயங்காலச் சூரியன் அவருடைய மூக்குக் கண்ணாடியில்ப் பட்டு எதிரொளித்தது. மேலே என் பக்கத்தில் அவரை வரவேற்க நின்று கொண்டிருந்த மாணிக்க விநாயகத்தைப் பார்த்து கைகளை அசைத்தார். அவர் உள்ளே நுழைய எல்லோரும் வணக்கம்
சொல்லி கைகூப்பினர். அவரும் பதிலளித்தவாறு உள்ளே வந்தார். நானும் வணக்கம் சொன்னேன். ஆனால் அவருக்கு பழக்கமான பலருக்கு
மத்தியில் புதிதாய் நின்று கொண்டிருந்த என்மீது கவனம் செலுத்தாமல் சென்றுவிட்டார்.

ஏற்கனவே தாமதமாகியிருந்ததால், நேரடியாக குரல் பதிவுக்கூடத்துக்கு சென்று ஹெட்ஃபோனை எடுத்து மாட்டிக்கொண்டார். பாடல்
வரிகளையும், இசைக்குறிப்புகளையும் கொடுப்பதற்காக மாணிக்க விநாயகமும் உடன் சென்றார். அந்த ஒலிப்பதிவின் இசை நடத்துனரும் ஒருங்கிணைப்பாளருமான மாணிக்க விநாயகம் பிறகு புகழ்பெற்ற பாடகர் ஆனார். எனது அபிமான பாடகரான மலேசியா வாசுதேவநனிடம் என்னை அறிமுகப்படுத்தி வைக்காமல் இருந்ததற்காக அன்று மாணிக்க விநாயகத்தின் மீது எனக்கு கடுமையான வருத்தம்!

சிறிதுநேர ஆயத்தங்களுக்குப் பிறகு இசைத்தடம் ஒலிக்கத்துவங்க மலேசியாவின் குரல் ஒலிபெருக்கியில் தெளிந்து முழங்கியது."நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே..." நான் சிறுவனாக இருந்தபோது எனது செவியேறிச்சென்ற அதே குரல். எங்கள் பக்கத்து மலையடிவார
கிராமத்தில், தென்னங்கீற்று வேய்ந்த சினிமாக்கொட்டகையில் இருந்து எதிரொலித்த அதே குரல்! மீண்டும் மீண்டும் கேட்டு ரசிக்க நான் ஏங்கிய மலேசியா வாசுதேவனின் பல பாடல்களின் நினைவுகளுக்குள் முற்றிலுமாக மூழ்கிப்போனேன். மனம் எனது பால்யகாலங்களுக்கு சட்டென்று தாவிப்போனது.

பனிரெண்டு அல்லது பதிமூன்று வயதிருக்கும் அப்போது எனக்கு. அந்த சினிமாக்கொட்டகையில் வாரயிறுதி நாட்களில் பிற்பகல் மூன்று
மணிக்கு ஒரு காட்சி இருக்கும். யாருமறியாமல் வீட்டை விட்டு சீக்கிரமாகவே கிளம்பிவிடுவேன். சிறிய உருவம் கொண்டிருந்த எனக்கு மலைப்பாதைகளின் வழியாக நடந்து சென்று சினிமாக்கொட்டகையை அடைவதற்கு ஒருமணி நேரம் ஆகிவிடும். முன்னதாகவே சென்று சேர்ந்து பாடல்கள் ஒலிக்கத்துவங்கும் நேரத்திற்காக வாசலிலே காத்திருப்பேன். சரியாக ரெண்டேகால் மணிக்கெல்லாம் அங்கிருந்த இரண்டு சாம்பல்நிறமான கூம்புவடிவ ஒலிபெருக்கிகளிலிருந்து பாடல்கள் ஒலிக்கத்தொடங்கிவிடும். "ஏய்... முத்து முத்தா மொட்டு விட்ட வாசமுல்லே..." உச்சஸ்தாயியில் ஒலிக்கும் மலேசியா வாசுதேவனின் குரல் சூழ்ந்திருக்கும் மலைமுகடுகளில் எதிரொலித்து சமவெளியெங்கும் பரவி நிறையும். அது எல்லாவற்றையும் மறக்க்ச் செய்து ஒரு கனவு உலகத்துக்கு என்னை அழைத்துச் செல்லும்.

என் விருப்பத்திற்குரிய பல தமிழ், மலையாளம், ஹிந்தி பாடல்கள் ஒலிக்க கொட்டகையை ஒட்டியுள்ள வளைவான சாலையின் வழியே மெல்ல மெல்ல பக்கத்து கிராமங்களிலிருந்து மக்கள் கூட்டம் வந்து நிறையத்தொடங்கும். வரிசையில் நின்று, கஸேரா 4.00ரூ, சாரு பென்ச் 3.00ரூ, பென்ச் 2.00ரூ, தறா1.00ரூ என்று எழுதியிருக்கும் குறுகிய அரைவட்டமான திறப்பின் வழியே கையை நுழைத்து அனுமதிச் சீட்டைப் பெற்றுச் செல்வார்கள். விரைவில் கொட்டகையின் கூரையில் கட்டப்பட்டிருக்கும் ஒலிபெருக்கியில் பாடல்கள் நிறுத்தப்பட்டு உள்ளே இருக்கும் ஒலிபெருக்கியில் மட்டும் கேட்கும்.

சினிமாக்கொட்டகையின் அருகே நெருங்கிச் சென்று உள்ளேயிருந்து ஒலிக்கும் பாடல்களைக் கேட்டுக முயர்ச்சி செய்வேன். உள்ளே சென்று சினிமாவில் வரும் பாடல்களையும், இடைவேளையில் ஒலிக்கும் எனது விருப்பமான பாடல்களையும் கேட்க நினைப்பேன். ஆனால் பெரும்பாலும் என் பையில் ஒரு காசுகூட இருந்ததில்லை. பாடல்கள் முடிந்து படம் ஆரம்பித்ததும் வீட்டை நோக்கி மலைப்பாதையில் நடக்க ஆரம்பிப்பேன். கேட்டுக்கொண்டிருந்த பாடல்கள் உள்ளுக்குள் மீண்டும் மீண்டும் ஒலிக்க தலையை தாளகதியோடு அசைத்துக் கொண்டு அலுப்பை உணராமல் நடந்து செல்வேன்.

சினிமாக் கொட்டகைக்கு செல்ல முடியாத நாட்களில் வீட்டுக்கு அருகே இருக்கும் மலைக்குன்றில் ஏறிநின்று தூரத்திலிருந்து ஒலிக்கும் அந்த பாடல்களைக் கேட்டுக்கொண்டிருப்பேன். குன்றின் உச்சியில் இரைந்து வீசும் காற்று சிலநேரம் பாடல்களின் பல வரிகளைக் கொண்டு போய்விடும். எனினும் அங்கு நின்று கொண்டு தூரத்திலிருந்து மிதந்து வரும் பாடல்களைக் கேட்பது ஓர் அற்புதமான அனுபவம்.

மலேசியா வாசுதேவனின் பாடல்களைக் கேட்பதில் அப்போது என்ன காரணம் என்று விளங்காத வினோதமான மோகம் ஒன்றை கொண்டிருந்தேன். 'அவரது ஒத்த ரூபா ஒனக்கு தாரேன்', 'ஆட்டுக்குட்டி முட்டையிட்டு', 'வெத்தல வெத்தல வெத்தலையோ', 'பட்டு வண்ண ரோசாவாம்', கூடையிலே கருவாடு போன்ற பாடல்கள் எல்லாம் எனக்கு உவகையையும் உற்சாகத்தையும் தந்தது. இப்பாடல்கள் பாடப்படிருந்த விதத்தின் மீது நான் ஒருவகையான காதலையே கொண்டிருந்தேன். 'தண்ணி கறுத்திருச்சி' பாடலைக் கேட்கும் போதெல்லாம் ஏற்பட்ட விவரிக்கமுடியாத உற்சாகம் இன்னும் நினைவினுள் இருக்கிறது. இன்றும் ஒவ்வொரு முறை கேட்கும்போதும் அப்பாடல் என்னைப் புல்லரிக்கச் செய்கிறது!

'செவ்வந்திப் பூமுடிச்ச', 'பொதுவாக எம்மனசு தங்கம்' போன்ற பாடல்கள் கூட துள்ளலான தொனியில் அவர் பாடியிருக்கும் விதத்திற்காக எனக்கு பிடித்திருந்தது. 'நிலா காயுது நேரம் நல்ல நேரம்', 'கண்ணத்தொறக்கணும் சாமி', 'வா வா வாத்தியாரே வா', 'ஆசை நூறுவகை' போன்ற பாடல்கள் அவரது பாடல்களின் மீதான எனது விருப்பத்தை முழுமைப்படுத்தியது. மலேசியா வாசுதேவனின் பாடும்முறையில் இருந்த இயல்பான ஆற்றலும், நேர்மையான பாங்கும் தான் அவரது பாடல்களின் மீதான மோகத்தை எனக்குள் ஏற்ப்படுத்தியது என்று பலகாலம் கழிந்து தான் எனக்குத் தெரிய வந்தது.

கேரளத்தில் பிரபலமடைந்த அவருடைய பெரும்பாலான பாடல்கள் வேகமான துள்ளிசையோடு கூடிய டப்பாங்குத்துப் பாடல்களே. எனவே அவருடைய மெல்லிசைப் பாடல்களையும், வேறுவகையான இசை பாணிகளிலமைந்த பாடல்களையும் கேட்கும் சந்தர்ப்பம் அப்போது எனக்கு வாய்க்கவில்லை. பிறகு 'இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது' (சிகப்பு ரோஜாக்கள்), 'மலர்களே நாத ஸ்வரங்கள்' மற்றும் 'கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ' (கிழக்கே போகும் ரயில்), 'வான்மேகங்களே வாருங்கள் (புதிய வார்ப்புகள்), 'மலர்களிலே ஆராதனை' (கரும்பு வில்), 'பூவே இளைய பூவே' (கோழி கூவுது), 'பருவ காலங்களின் கனவு' (மூடுபனி), 'அடி ஆடு பூங்கொடியே'
(காளி), 'பட்டுவண்ண சேலைக்காரீ' (எங்கேயே கேட்ட குரல்), 'கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல' (உனக்காகவே வாழ்கிறேன்) போன்ற பாடல்களைக் கேட்ட பின்னர், நமது காலத்தின் திறமைமிகுந்த தமிழ் சினிமா பிண்ணனிப்பாடகர் மலேசியா வாசுதேவனே என்ற முடிவுக்கு வந்தேன். பல்வேறுவகையான உணர்ச்சிகளை மிகை இல்லாமல் யதார்த்தமாக வெளிப்படுத்தி வெகு இயல்பாக பாடும் திறன் கொண்டிருந்தவர். எத்தனையோ ஆண்டுகள் கழித்தும் மீண்டும் அவரது பல பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் அவ்வெண்ணம் எனக்குள் மேன்மேலும் உறுதிப்படவே செய்கிறது.

டி எம் எஸ்ஸைப் போலவே, மலேசியா வாசுதேவனும் தமிழில் மட்டுமே அதிகம் பிரபலமடைந்த பாடகர். மற்ற மொழிகளில் பாடுவது இவரது பலமாக இருந்ததில்லை. தனது தாய்மொழியான மலையாளம் உட்பட மற்ற மொழிகளின் உச்சரிப்பையும், நுணுக்கங்களையும் தன்னால் கிரகித்துக் கொள்ள முடியவில்லை என்பதை அவர் நன்றாகவே அறிந்திருந்தார். எனவே பிறமொழிகளில் பாடும் வாய்ப்புகளை அவர் மறுத்துவிட்டார். ஆனால் நிர்ப்பந்தம் காரணமாக பத்துக்கும் குறைவான மலையாளப் பாடல்களையும், ஏறத்தாழ இருபது கன்னடப் பாடல்களையும், தெலுங்கில் ஓரிரு பாடல்களைப் பாடியிருக்கிறார். உச்சரிப்புப் பிழைகளையும் கடந்து மலையாளத்திலும், கன்னடத்திலும் அவர் பாடிய பெரும்பாலான பாடல்கள் பெரும் வெற்றியை அடைந்திருக்கின்றது. உதாரணத்திற்கு, பிரலயாந்தகா எனும் கன்னடப் படத்தில் இடம்பெற்ற 'நாளே பருவே நன்னா கொடுவே' என்ற நையாண்டிப்பாடல். இப்பாடலில் அவரது குரல் உருவாக்கிய இயல்பான துள்ளலும் பித்தும் கன்னடத்தில் கொடிகட்டிப்பறந்த மற்ற பல பாடகர்களைக் காட்டிலும் மிகுந்த திறமை வாய்ந்தவர் அவர் என்பதை நமக்குணர்த்தும்.

சோகமான தத்துவப்பாடல்களில் ஆரம்பித்த மலேசியா வாசுதேவனின் திரையிசைப் பயணம் மென்மையான காதல் ஜோடிப்பாடல்கள், வலுவான கிராமியப்பாடல்கள், நெஞ்சையள்ளும் காதல்ப் பாடல்கள், பாசப் பாடல்கள், நகைச்சுவைப் பாடல்கள், டி எம் எஸ், சி.எஸ்.ஜெயராமன், திருச்சி லோகநாதன் போன்றோரின் குரலை நகல்செய்து பாடிய பாடல்கள், முற்றிலும் மேற்கத்திய இசையிலமைந்த பல பாடல்கள் போன்றவற்றின் வழியே தொடர்ந்தது. ஆனால் துர்ப்பாக்கியமாக அவரது குரல் டப்பாங்குத்துப் பாடல்களுக்கே அதிகமாக பொருந்தும் என்று எப்படியோ முடிவு கட்டப்பட்டுவிட்டது. இவ்வாறாகவே மலேசியா வாசுதேவனுடைய பல்வகையான, பல்சுவையோடு பாடும் திறன் பலரால் கவனிக்கப்படாமலே போய்விட்டது.

அவர் பாடிய எத்தனையோ நல்ல பாடல்களைக் காட்டிலும் டப்பாங்குத்து வகைப் பாடல்களே தமிழ்நாட்டிலும் மிகவும் பிரபலமடைந்தது. ஆகவே அவருக்கு ஒரு குத்துப் பாடகர் என்ற முத்திரை குத்தப்பட்டுவிட்டது. தீவிர தமிழ் திரை இசை ரசிகர்கள் சிலர் கூட இன்றுவரை மலேசியா வாசுதேவன் ஒரு 6-8 (டப்பாங்குத்து தாளக்கட்டின் இசைச்சொல்) பாடகன் மட்டும் தான் என்றே நினைக்கின்றனர். தரமும் ஆழமும் குறைந்த இத்தகைய பாடல்களையே சங்கர் கணேஷ் போன்ற இசையமைப்பாளர்கள் அவருக்கு தொடர்ந்து வழ்ங்கி வந்தனர். ஆனால் எத்தகைய பாடல்களை வழங்கினாலும் மலேசியா வாசுதேவன் மிகுந்த அர்ப்பணிப்புடன் அவற்றை பாடி வெளிப்படுத்தினார் என்பதே உண்மை. அவர் ஒரு குத்துப்பாடகர் என்ற முத்திரை விழுவதற்க்கு இதுவும் காரணமாயிற்று. இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் சில பாடல்கள் இசையின் தரத்தில் மேன்மையானதாக இல்லாவிட்டாலும், அவற்றை அவர் உண்மையோடும், துள்ளலோடும் பாடியிருக்கும் விதத்தைத் தான் நாம் கவனித்தாக வேண்டும்.

முப்பது வருடத்திற்கும் மேலாக திரையிசையிலும், பிறவகையான இசை முயற்சிகளிலும் மலேசியா வாசுதேவனின் பல்லாயிரம் பாடல்கள் அவருக்கே உர்¢ய ஆற்றலோடு வெளிவந்திருக்கின்றன. வணிக வெற்றிகளை மட்டும் குறிக்கோளாக கொண்ட உலகின் போக்குகளில், குறிப்பாக சினிமா உலகின் போக்குகளில் அறியாமை நிரம்பியவராக இருந்த மலேசியா வாசுதேவன் மெதுவாகப் பேசும் குணம் கொண்ட மிக அன்பான மனிதர். எதையும் அடைவதற்காகவோ, உயர்ந்த நிலைக்குச் செல்வதற்காகவோ, ஒருபோதும் தன்னை முன்னிறுத்தி சந்தைப்படுத்தாமல் இருந்தவர் அவர். அதனாலேயே ஒரு பாடகராக அவருடைய தமிழ் சினிமாப் பங்களிப்புகள் புகழப்படாமலும், பரிசீலிக்கப்படாமலும் இன்றுவரை பலரால் முற்றிலும் குறைத்து மதிப்பிடப்பட்டிருக்கின்றது. மலேசியா வாசுதேவனின் வாழ்க்கையும் இசையும் கடந்து வந்த வழிகள் வியப்பூட்டுபவை.

ஏழைகளுக்கு வாழ்வதற்கு யாதொரு வழியும் புலப்படாமலிருந்த 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில், வெள்ளையரின் சென்னை மாகாணத்துக்கு உட்பட்டிருந்த கேரளாவின் பாலக்காடு பகுதியிலிருந்து, பல குடும்பங்கள் வாழ வழி தேடி மலேசியாவுக்கு கப்பலேறிச் சென்றது. ஒற்றப்பாலம் பகுதியைச் சேர்ந்த பதினேழு வயதான சாத்து நாயரும் குடும்பத்தினரும், பொல்ப்புள்ளி கிராமத்தைச் சேர்ந்த பனிரெண்டு வயதான அம்மாளு அம்மையும் அவரது குடும்பத்தினரும் மலேசியாவுக்கு இடம்பெயர்ந்த இந்த கூட்டத்தில் இருந்தனர். அக்குடும்பங்களுக்கு மலேசியாவில் க்ளாங் பள்ளத்தாக்குப் பகுதியில் இருந்த ரப்பர் காடுகளில் வேலை கிடைத்தது. சில ஆண்டுகளுக்குப்பிறகு குடும்பத்தினரின் ஏற்பாட்டில் சாத்து நாயரும் அம்மாளு அம்மையும் திருமணம் செய்து, எட்டு குழந்தைகளின் பெற்றோர்களாயினர். அவர்களது எட்டாவது குழந்தையாக1944 ஜூன் 15ல் வாசுதேவன் பிறந்தார்.

தமிழர்கள் நிறைந்து வாழும் பகுதியாக க்ளாங் பள்ளத்தாக்கு இருந்ததனால் அவருடைய குடும்பத்தினரின் தொடர்பு மொழியாக தமிழ் மொழி ஆகிவிட்டிருந்தது. ஆகவே, தமிழே வாசுதேவனுடைய வளர்ப்பு மொழியாகவும் விருப்பமொழியாகவும் இருந்தது. பள்ளியிலும் தமிழ்வழிக்கல்வியே பயின்றார். சாத்து நாயர் இசையில் நாட்டம் கொண்டவராகவும், ஓரளவு இசையறிவு கொண்டவராகவும் இருந்தார். அவருக்குத் தெரிந்த இசையை குழந்தைகளுக்கு போதித்தார். அவருடைய எல்லாக் குழந்தைகளும் பாடவும், இசையை புரிந்துகொள்ளவும் கூடியவர்களாக இருந்தனர். சிறுவயதிலேயே வாசுதேவன் இசையிலும் நடிப்பிலும் அதிக ஆர்வமுடையவராக இருந்தார். தனது எட்டாவது வயதிலேயே பார்வையாளர்கள் முன் பாடத்தொடங்கினார்.

ரப்பர் தோட்டங்களில் வேலைசெய்பவர்களுக்காக ஊர் ஊராக சென்று தமிழ் சினிமா போட்டுக்காட்டும் வழக்கம் அங்கே நிலவி வந்தது. தொழிலாளர்கள் பாய் படுக்கையோடு சென்று சினிமா பார்ப்பவர்களாக இருந்தனர். தொலைதூர ரப்பர் தோட்டங்களுக்கு நண்பர்களுடன் சைக்கிளில் சென்று அங்கு காண்பிக்கப்படும் சினிமாக்களையும் பார்த்துக் கொண்டிருந்தார் வாசுதேவன். அந்த சினிமாக்களின் தாக்கத்தால் பாடவும் நடிக்கவுமான ஆசை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனது அவருக்கு. நடிகர் சிவாஜி கணேசன் மற்றும் பாடகர் டி.எம்.எஸ்ஸின் தீவிர ரசிகராக மாறினார். வாசுதேவனின் விருப்பமான இசையமைப்பாளர் எம்.எஸ்.வி. இவர்கள் மூவரையும் ஒரு முறையேனும் சந்திக்க வேண்டும் என்பதே அவரது உக்கிரமான லட்சியமாக அப்போது இருந்தது.

வளர்ந்த பிறகு மலேசியாவில் இருந்த சில தமிழ் நாடகக் குழுக்களில் பாடக நடிகராக இணைந்துகொண்டார். இவ்வகையில், தமிழ் நாடக-சினிமாவின் பாடி நடிக்கும் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர் தான் வாசுதேவன் என்று சொல்லலாம். 1967ல், தனது 23 ஆவது வயதில் அவர் நடித்த 'ரத்த பேய்' எனும் நாடகத்தை சினிமாவாக எடுக்க ஒரு மலேசிய தயாரிப்பு நிறுவனம் முன்வந்தது. அப்படத்தை சென்னையில் படமாக்க திட்டமிட்டிருந்தனர். அந்த படப்பிடிப்பு குழுவில் இணைந்து, முதன் முதலாக வாசுதேவன் தன் தாய்நாட்டுக்கு 1968 ல் வந்திறங்கினார் வாசுதேவன். அப்படத்தில் நடிக்கவும், ஜீ கே வெங்கடேஷின் இசையமைப்பில் பாடவும் அவருக்கு வாய்ப்பும் கிடைத்தது.

படம் முடிந்ததும் தயாரிப்புக்குழு மலேசியா திரும்பிச்செல்ல, வாசுதேவன் சென்னையிலே தங்கியிருந்து சினிமாவில் பாடும் வாய்ப்புக்காக முயற்சி செய்ய முடிவெடுத்தார். அன்றிலிருந்து வாய்ப்புக் கேட்டு அலைந்து திரிந்த அவரது போராட்டம் பத்துவருட காலம் நீண்டது. தெரியாத ஊர், தெரியாத மக்கள், யாதொரு தொடர்புமில்லை, உதவி செய்யவும் யாருமில்லை! பாடுவதற்கு வாய்ப்புக் கேட்டு இசையமைப்பாளர்களையும், சினிமா கம்பெனி முதலாளிகளையும் சென்று பார்த்தார்.

தன்னை முன்னிறுத்தத் தெரியாதவராக இருந்ததனால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நடிக்கவும் பாடவும் வாய்ப்புத் தேடி மலேசியாவிலிருந்து வந்திருப்பதாகச் சொல்லும்போது, இங்குள்ளவர்களுக்கே வாய்ப்பில்லை அதனால் அங்கேயே திரும்பிப் போகும்படி பெரும்பாலானோர் சொல்லியிருக்கின்றனர். சென்னையில் தொடர்ந்து இருக்க வழியில்லாத நிலை வந்தபோதெல்லாம் மலேசியாவுக்கே திரும்பிப் போய்விடலாம் எனும் எண்ணம் பலமுறை வந்திருக்கிறது அவருக்கு. ஆனால் திரும்பிச் செல்லும் முன்னர் ஏதேனும் ஒரு நல்ல சினிமாவில் ஒரேயொரு பாடலாவது பாடிவிட்டுத்தான் செல்லவேண்டும் என்று உறுதியாய் இருந்தார்.

இசையமைப்பாளர் ஜீ கே வெங்கடேஷின் அலுவலகத்துக்கு தொடர்ந்து சென்று பார்த்துக்கொண்டிருந்த காலத்தில் அவரிடம் உதவியாளராக இருந்த இளையராஜாவைச் சந்தித்தார். இருவரும் நண்பர்களானார்கள். இளையராஜாவும் அவரது சகோதரர்களான கங்கை அமரனும் ஆர் டி பாஸ்கரும் சேர்ந்து பாவலர் சகோதரர்கள் என்ற பெயரில் இசைக்குழு வைத்திருந்தது. டி.எம்.எஸ் பாடல்களைப் பாடுபவராக அக்குழுவில் இணைந்து கொண்டார் வாசுதேவன். எம்.ஜி.ஆரால் அடிமைப்பெண் (1969) படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம், தன் முதல் பாடலே பெரும் வெற்றிபெற்று, ஒரு நட்சத்திரப் பாடகராக முன்வரத் தொடங்கியிருந்தார் அப்போது. அவரும் இளையராஜா சகோதரர்களின் குழுவில் பாடிக்கொண்டிருந்தார். பாரதிராஜா, கங்கை அமரன், ஆர்.டி.பாஸ்கர், இளையராஜா, எஸ் பி பி போன்றவர்களின் நண்பர்கள் குழுவில் ஓர் அங்கமாக மலேசியா வாசுதேவன் மாறிய காலமும் அதுவே.

பாட வாய்ப்புக்கிடைக்கும் முதல் படமே பெரிய நிறுவனத்தைச் சேர்ந்ததாக அமைந்து, எம் ஜி ஆர் போன்ற ஒரு உச்ச நட்சத்திரத்தின் நடிப்பில் அப்பாடல் பெரும் வெற்றி அடையும்போது, அப்பாடகரின் எதிர்காலத்தை, ஏறுமுகத்தைப் பற்றி சொல்லவே வேண்டியதேயில்லை! எஸ் பி பி யின் வளர்ச்சியைப் பார்த்தால் இது புரியும். மலேசியா வாசுதேவனை விட எஸ் பி பியின் வணிகரீதியான உயர்வுக்கும், புகழின் வளர்ச்சிக்கும் முக்கிய காரணம் அவர் எம் ஜி ஆரால் அறிமுகம் செய்யப்பட்டு அவரது ஆதரவை தொடர்ந்து பெற்றார் என்பதே. மலேசியா வாசுதேவனுக்கோ தமிழ் சினிமாவின் என்றென்றைக்குமான உச்ச நட்சத்திரம் எம் ஜி ஆரின் படங்களுக்கு பாடும் வாய்ப்பு கிடைக்கவேயில்லை! 'உன்னை விட மாட்டேன்' என்று ஒரு எம் ஜி ஆர் படம் இளையராஜாவின் இசையமைப்பில் வருவதாக திட்டமிடப்பட்டு இருந்தது. அதில் மலேசியா வாசுதேவன் பாடி பதிவு செய்யப்பட்ட நம்பிக்கையூட்டும் ஒரு பாடலும் இருந்தது. ஆனால் அந்தப் பாடலோ, படமோ கடைசிவரை வெளியாகவேயில்லை!

மலேசியா வாசுதேவனுக்கு முதல் பாடும் வாய்ப்பு விளம்பரங்களில் தான் கிடைத்தது. ஏ.வி.ரமணன் போன்றவர்கள் உருவாக்கிய சில விளம்பரப்படங்களில் பாடினார். ஒலிப்பதிவுக்கூடத்தின் ஒலிவாங்கிகளில் பாடிப்பழகும் பயிற்சிக்களமாக இது அவருக்கு அமைந்தது. அப்பாடல்களை மீண்டும் மீண்டும் கவனித்துக் கேட்டு ஒலிப்பதிவுக்கு ஏற்ப பாடும் பயிற்சியைப் பெற்றார். தனது குறைகளைத் திருத்திக்கொள்ளவும் செய்தார்.

இளையராஜா குழுவின் ஓர் மேடை நிகழ்ச்சியைக் கண்ட எம்.எஸ்.வி, வாசுதேவனின் சிறப்பான பாடும் முறையைப் பாராட்டி அவருக்கு வாய்ப்பளிப்பதாக வாக்குறுதியளித்திருந்தார். ஆயினும் எதுவும் நடக்கவில்லை. பலமுறை அவரை நேரில் கண்டு வாய்ப்புக் கேட்டிருந்தும்
எம்.எஸ்.வியிடமிருந்து யாதொரு அழைப்பும் இல்லை. எம்.எஸ்.வியின் சொந்த ஊரான எலப்புள்ளி, வாசுதேவனின் தாயாரின் ஊரான பொலப்புள்ளியின் பக்கத்து கிராமமே. வாசுதேவன், எஸ் ஜானகி போன்ற அற்புதமான பாடகர்களை எம்.எஸ்.வி பெரிய அளவில் கண்டுகொள்ளாமல் இருந்ததும் அதே நேரத்தில் எஸ்.பி.பி மற்றும் வாணி ஜெயராம் போன்றவருக்கு அதிக அளவில் வாய்ப்புகளை வழங்கியதும் ஒரு புரியாத புதிராக இருக்கிறது.

1972 ஆம் ஆண்டின் மத்தியில் வாசுதேவனுக்கு சினிமாவில் பாட முதல் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது அவர் பொள்ளாச்சி ரத்னம் என்ற தயாரிப்பாளருக்கு தெரிந்தவராக இருந்தார். அவரின் மூலமாகவே அந்த வாய்ப்புக் கிட்டியிருந்தது. ஜெய்சங்கர் ஹீரோவாக நடித்த 'டெல்லி டூ மெட்ராஸ்' என்ற சிறிய படத்தில் இடம்பெற்ற நகைச்சுவைப்பாட்டு. 'பாலு விக்கிர பத்மா உன் பாலு ரொம்ப சுத்தமா?' என்ற அந்த பாடலுக்கு வி.குமார் இசையமைத்திருந்தார்.

1973ல் 'பாரதவிலாஸ்' படத்தில் வந்த 'இந்திய நாடு என்வீடு' என்ற டி.எம்.எஸ் பாடிய பாடலின் இடையில் வரும் சில வரிகளைப்பாடவைத்தார் எம்.எஸ்.வி. அதுவும் ஹிந்தி மற்றும் பஞ்சாபியில் அமைந்த வரிகள்! இதே படத்தில் தான் 'சக்கபோடு போடு ராஜா, உன் காட்டில மழை பெய்யுது' பாடலை டி.எம்.எஸ் பாடியிருந்தார். அதே வருடம் எம்.எஸ்.வியின் இசையில் தலைப்பிரசவம் எனும் படத்தில் 'மாலையிட்டு பூமுடித்து' என்ற பாடலை பாடினார் வாசுதேவன். ஆனால் அந்த வாய்ப்பும் பொள்ளாச்சி ரத்னத்தின் ஆதரவினால் கிடைத்ததேயாகும்.

வயலின் வித்வான் குன்னக்குடி வைத்தியநாதனின் இசையமைப்பில் குமாஸ்தாவின் மகள் (1974) எனும் படத்தில் 'காலம் செய்யும் விளையாட்டு' என்ற பாடலைப் பாடும் வாய்ப்புக் கிட்டும் வரை பெயரில்லாத, முகமில்லாத ஒரு பாடகராகவே வாசுதேவன் இருந்தார். அப்படத்தின் இயக்குனர் ஏ.பி.நாகராஜன் வாசுதேவனை 'மலேசியா வாசுதேவன்' என்று பெயர்மாற்றி படத்தின் டைட்டில் கார்டில் பெயர் வெளிவரவும் செய்தார். சிவக்குமார் நாயகனாகவும், கமல்ஹாசன் எதிர்நாயககனாகவும் நடித்த படம் அது.

தன் ஆதர்ச இசையமைப்பாளர் எம்.எஸ்.வியின் இசையில் பல சிறந்த பாடல்களைப் பாடிவிட வேண்டும் என்பது பெரிய கனவாக மிஞ்சியிருந்தது. இக்கனவு அவருக்கு முழுமையாக நிறைவேறிவிட்டது என்று ஒருபோதும் சொல்லிவிட முடியாது. அவரது ஒட்டுமொத்த திரையிசைப் பயணத்தில் 15க்கும் குறைவான பாடல்களையே எம் எஸ் வியின் இசையில் பாடியிருக்கிறார். அதில் பில்லா (1980) படத்தில் இடம்பெற்ற 'வெத்தலையப் போட்டேண்டி' என்ற பாடலே பெரிதும் ரசிக்கப்பட்டது. ஒரு டப்பாங்குத்து ஆயிருந்தும் அப்பாடலை அபூர்வமான சுவையோடு பாடியிருப்பார்.

சமீபத்தில் வெளிவந்த பில்லா படத்தில் 'வெத்தலையப் போட்டேண்டி' ரீமிக்ஸ் பாடலைக் கேட்கும்போது சராசரிக்கும் மேலான ஒரு பாடகர் பாடுவதற்கும், ஒரு மேதை பாடுவதற்குமான வித்தியாசத்தை நம்மால் உணரமுடியும். புதிய தலைமுறைப் பாடகர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது, மலேசியா வாசுதேவன் சாதாரணமாக நகலெடுக்கப்பட முடியாத ஒரு பாடகர். அவரது பாடல்களைப் பாடி மறு உருவாக்கம் செய்ய முயன்று உங்களை நீங்களே கேலிக்குரிக்குரியவர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டாம் என்பதே!

எம்.எஸ்.வி - வாசுதேவன் கூட்டணியில் உருவான 'எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை' (சரணாலயம்) அற்புதமான ஒரு இசை அனுபவம். இதுவரை இப்பாடலைக் கேட்டிருக்காவிட்டால் உடனே கேட்டுப்பார்க்கவும். வாசுதேவனின் ஒப்பிடவியலாத மெல்லிசை பாடும் ஆற்றலை நிரூபிக்கும் அற்புதமான பாடல் இது என்பதை அறிய முடியும். இதே கூட்டணியில் அமைந்த மற்றுமொரு அருமையான பாடல் 'எண்ணியிருந்தது ஈடேற' (அந்த ஏழு நாட்கள்). துணைவி படத்தில் வரும் 'முத்து மாணிக்க கண்கள்' மிக அழகாக மலேசியா வாசுதேவன் பாடிய இன்னுமொரு எம் எஸ் வி பாடல். "இப்பாடல்கள் வேறு யாராலையும் இப்படி அற்புதமாகப் பாட இயலாது" என எம்.எஸ்.வியே வாசுதேவனைப் புகழ்ந்திருக்கிறார்!

1975-76 ம் வருடங்களில் அவருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. 1976 ல் அவருடைய நண்பர் இளையராஜா 'அன்னக்கிளி' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தனது நெருங்கிய நண்பர் இசையமைப்பாளராக அறிமுகமாகும்போது தனக்கும் ஒரு வாய்ப்புக்கிடைக்கும் என்று நிச்சயமாக அவர் நம்பியிருந்திருக்கலாம். என்ன காரணத்தினாலோ அது கிட்டவில்லை. ஆனால் தனது இரண்டாவது படத்தில் இளையராஜா அவருக்களித்த 'ஒத்த ரூபா ஒனக்குத் தாரேன்' (பத்ரகாளி) என்ற பாடல் இன்றும் ரசிக்கவைக்கும், தமிழ்மண்ணின் கிராமிய உணர்ச்சிமிகுந்த பாடலாக இருக்கிறது.

இளையராஜா இசையமைக்க ஆரம்பித்த காலங்களில் அவரோடு அமர்ந்து இசையமைப்புப் பணிகளில் உதவியாக இருந்திருக்கிறார் வாசுதேவன். இளையராஜாவின் முதல் 14 படங்களில் 'உறவாடும் நெஞ்சம்' என்ற படத்தில் 'டியர் அங்கிள்' எனத்தொடங்கும் சூழ்நிலைப் பாடல் ஒன்று வாசுதேவனுக்குக் கிடைத்தது. குழந்தைகளோடு சேர்ந்து பாடும் ஒரு பாடல் அது. எனினும் தனது வரிகளை மிகவும் உணர்வுபூர்வமாக பாடியிருப்பார். 'அவர் எனக்கே சொந்தம்' என்ற படத்தில் ஏற்கனவெ அனைவருக்கும் பரிச்சயமான 'சுராங்கனி சுராங்கனி' என்ற பைலா பாடலை பாடவைத்தார் இளையராஜா.

ரஜினிகாந்த் நடித்த 'புவனா ஒரு கேள்விக்குறி', சிவாஜிகணேசன் நடித்த 'தீபம்' படங்களுக்கு இளையராஜா இசையமைத்த பொழுது தனக்கும் வாய்ப்புக் கிடைக்கும் என்று நம்பியிருந்திருக்கலாம், எனினும் பல காரணங்களால் அந்த வாய்ப்புகள் தரப்படவில்லை. தனது ஆதர்சமான நடிகர் சிவாஜிக்கு பிண்ணனி பாடவேண்டும் என்ற கனவும் அப்போது நனவாகவில்லை. ஆனால் பிறகு தனது எல்லாப் பாடல்களையும் மலேசியா வாசுதேவனே பாடவேண்டும் என்று சிவாஜி கணேசன் வற்புறுத்திய கதையும் நடந்தது. அதேபோல் பின்னர் ரஜினிகாந்துக்காக மலேசியா வாசுதேவன் பாடிய பாடல்கள் அனைத்துமே அவரது குரலுக்கும் நடிப்புப் பாணிக்கும் மிகப்பொருத்தமாக அமைந்தது.

தனது 'துர்காதேவி', 'துணையிருப்பாள் மீனாட்சி' படங்களிலும் சில பாடல்களை வாசுதேவனுக்கு வழங்கியிருந்தார் இளையராஜா.1978ல் வாசுதேவனின் அப்போதைய மற்றொரு நெருங்கிய நண்பரான பாரதிராஜா '16 வயதினிலே' என்ற தனது முதல்படத்தை இயக்கினார். அப்படத்தில் இடம்பெற்ற மற்ற பாடல்களுடன் 'ஆட்டுக்குட்டி முட்டையிட்டு' மற்றும் 'செவ்வந்திப்பூ முடிச்ச சின்னக்கா' தமிழ்கம் முழுவதும் புகழின் உச்சத்துக்குச் சென்றது. உண்மையில் 'ஆட்டுக்குட்டி முட்டையிட்டு' ஜெயசந்திரனுக்கும் 'செவ்வந்திப்பூ முடிச்ச' எஸ் பி பிக்குமாக ஒதுக்கப்பட்டிருந்த பாடல்கள்! ஆனால் இப்படலகள் வழியாக தமிழ்சினிமாவின் ஆளுமைமிக்க பாடகராக வாசுதேவன் உருவானார். 16 வயதினிலே பாடல்கள் வெற்றிபெறும் வரை தானொரு பிண்ணனிப்பாடகராக வெற்றியடைவேன் என்று நம்பவே இல்லை என்று பின்னர் குறிப்பிட்டிருக்கிறார் வாசுதேவன்!

இளையராஜாவைப் பற்றி மலேசியா வாசுதேவன் எப்போதுமே "இளையராஜா எனக்கு பெரும் உதவிகள் செய்திருக்கிறார். புகழ்பெற்ற
பாடகனாக என்னை உருவாக்கியது அவரே. நான் நட்சத்திரப் பாடகனாக வரும்வரை எனக்கு பின்பலமாக இருந்தார். பல சந்தர்ப்பங்களில் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் எனது திறமையை சந்தேகித்தபோது அவர்களிடம் என்னை தீவிரமாகப் பரிந்துரைத்தவர் இளையராஜா தான். எனது பிண்ணனிப்பாடகராகும் போராட்ட வாழ்வில் நான் அடைந்த எல்லா வெற்றிக்கும் இளையராஜாவே காரணகர்த்தாவாக இருந்தார். எல்லாவகையான பாடல்களையும் பாடுவதற்கான வாய்ப்பு எனக்களித்தார். ரஜினிகாந்த் நடித்த 'மாவீரன்', 'அதிசயப்பிறவி' போன்ற படங்களில் வந்த எல்லாப்பாடல்களையும் எனக்கே அளித்தார். சிவாஜி நடித்த 'ராஜரிஷி' படத்தில் டி.எம்.எஸ் குரல் வேண்டுமென்று வற்புறுத்தப்பட்டும், எனது பெயரை உறுதியாக பரிந்துரைத்தவர் இளையராஜா" என்றவாறெல்லாம் மிகவும் நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

"இளையராஜா இசையமைத்த, உங்கள் குரலில் வந்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கக் கூடிய பல பாடல்கள் மற்ற பாடகர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறதே" என்ற கேள்விக்கு, "எஸ்.பி.பிக்கு சென்றிருக்க வேண்டிய 'இந்த மின்மினிக்கு', 'வான் மேகங்களே', கோவில் மணியோசை', 'வா வா வசந்தமே' போன்ற பாடல்கள் எனக்கும் வழங்கப்பட்டிருக்கிறதே" என்று பதிலளித்திருந்தார். ஒருபோதும் யாரையும் குறைசொல்லாத வாசுதேவன், தன் வெற்றிகளுக்காக இளையராஜாவை புகழ்ந்திருந்தாலும் அவருடைய குரலின் தீவிர ரசிகர்கள் பலரின் அபிப்ராயம் என்னவென்றால், முக்கியமான இன்னும் பல பாடல்களைப் பாட இளையராஜா அவருக்கு வாய்ப்பளித்திருக்கலாம் என்பதே. இளையராஜாவின் அணியில் இருந்த மிகச்சிறந்த பாடகர் இவரே என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.

தான் பாடிய எல்லா கிராமியப் பாடல்களிலும் கிராமிய உணர்வின் துடிப்பும் வண்ணங்களும் வெளிப்படுத்தினார் வாசுதேவன். மேற்கூறப்பட்ட பல பாடல்கள் மட்டுமல்லாமல் 'ஏறாத மலை மேல (முதல்மரியாதை), 'ஏத்தமய்யா ஏத்தம்' (நினைவே ஒரு சங்கீதம்), 'தாலாட்ட நான் பிறந்தேன்' (தூறல் நின்னுபோச்சு), 'உன்னப்பார்த்த நேரம்' (அதிசயப்பிறவி), 'அரிசிகுத்தும் அக்காமகளே' (மண்வாசனை), 'சொக்குப்பொடி கக்கத்தில' (மாவீரன்), 'ஆப்பக்கடை அன்னக்கிளி' (பாயும் புலி) 'ஆளானும் ஆளு' (பாலைவனச் சோலை) போன்ற பல பாடல்களை அவர் பாடியிருக்கும் விதத்தில் நாம் தமிழ்க் கிராமியப்பாடல்களின் துள்ளல்களையும் உணர்வுகளையும் துல்லியமாய் உணரமுடியும்.

சமீபத்தில் வெளிவந்த 'ஆளானாலும் ஆளு' பாடலின் வடிவத்தை கேட்கநேர்ந்தால் துள்ளலான கிராமியப்பாடல்களை அதன் இயல்பான
பாவங்களுடன் பாடுவதற்கு அசாதாரணமான பாடும் திறமைகொண்ட வாசுதேவன் போன்ற ஒரு பாடகன் வேண்டும் என்பது உறுதியாகிவிடும். மலேசியா போன்ற நவீன பிரதேசத்தில் வளர்ந்த ஒருவருக்கு தமிழ்நாட்டு கிராமியப்பாடல்களைப் பாடுவதில் இருந்த ஆற்றல் என்பது ஆச்சரியமான ஒன்றே. சிறுவயதில் ரப்பர் தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பாடிய சில கிராமியப்பாடல்களை கேட்டுக்கொண்டிருந்தும், சென்னை வந்தபிறகு கங்கை அமரனும், இளையராஜாவும் மதுரையின் வட்டார வழக்கையும் பாடல் வகைகளையும் சொல்லிக்கொடுத்தும் கற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார். கூர்மையாக அவதானித்து கற்றுக்கொள்வதும் பாடப்படும் உணர்வின் ஜீவனுக்குள் அகழ்ந்து செல்லும் மேதமையும் அவரிடம் இயல்பாக இருந்தது என்பதே நிதர்சனமாகும்.

நாட்டுப்புறப் பாணியில் அமைந்த மென்மையான பாடல்களான 'பொன்மானைத் தேடி' (எங்க ஊர் ராசாத்தி), 'பட்டுவண்ண சேலைக்காரி (எங்கேயே கேட்ட குரல்), 'குயிலுக்கொரு நெறம் இருக்கு' (சொல்லத் துடிக்குது மனசு), 'ஆத்து மேட்டிலே' (கிராமத்து அத்தியாயம்), 'ஆகாயம் பூமி என்றும் ஒன்றா' (சாமந்திப்பூ), 'கம்மாக்கரை ஓரம்" (ராசாவே உன்னை நம்பி), 'பெத்து எடுத்தவதான்' (வேலைக்காரன்), 'தானந்தனா கும்மி கொட்டி' (அதிசயப்பிறவி), 'தென்கிழக்குச் சீமையில' (கிழக்குச்சீமையிலே), 'வெட்டிவேரு வாசம்' (முதல் மரியாதை) போன்றவற்றில் வெளிப்படும் உணர்ச்சிகளின் உயரத்தை அவர்காலத்தைச் சேர்ந்த எந்த ஒரு பாடகராலும் நெருங்க முடிந்ததில்லை. உதாரணத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைப்பில் வந்த 'பட்டுவண்ண ரோசாவாம்' (கன்னிப்பருவத்திலே) பாடலையும் இளையராஜா இசையமைப்பில் எஸ் பி பி பாடிய 'உச்சி வகிர்ந்தெடுத்து' (ரோசாப்பூ ரவிக்கைக்காரி) பாடலையும் உன்னிப்பாகக் கேட்டுப்பாருங்கள். இரண்டு பாடல்களுமே ஒரே கிராமியப்பாடலின் மெட்டில் அமைந்திருந்தும், ஏறத்தாழ ஒரே வகையான் ஏக்க உணர்வுகளை கொண்டிருந்தும், பாடப்பட்டிருக்கும் பாவத்தை ஒப்பிட்டு நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

தனக்குக் கிடைத்த குறைவான செவ்வியல் இசை அடிப்படையில் அமைந்த பாடல்களையும் மேலான ஆர்வத்துடன் அனாயாசமாக பாடியிருக்கிறார் மலேசியா வாசுதேவன். ராஜரிஷி படத்தின் 'புயல் என எழுந்ததடா', 'சங்கரா சிவ சங்கரா' பாடல்களும், மாவீரன் படத்தின் 'அம்மா அம்மா', பாட்டுக்கு ஒரு தலைவன் படத்தின் 'இசையாலே நான் வசமாகிறேன்', ஒருவர் வாழும் ஆலயம் படத்தில், 'மலையோரம் மயிலே', மணிப்பூர் மாமியார் படத்தில், 'ஆனந்த தேன்காற்று' (இதில் சி.எஸ்.ஜெயராமன் குரலைப் போல்), மருமகளே வாழ்க படத்தில் 'அல்ங்காரம் அபிஷேகம்', ஸ்ரீ ராகவேந்திரா படத்தில் 'கதிரவன் எழுந்தான்', கரும்பு வில் படத்தில், 'மலர்களிலே ஆராதனை', தணியாத தாகம் படத்தில் 'பூவே நீ யார் சொல்லி' போன்ற பாடல்கள் எல்லாம் கர்நாடக இசையின் ராக அடிப்படையில் அமைந்தவையாகும்.

சற்றும் வலிந்து பாடாமல் சிறப்பாகவே வெளிப்படுத்தியிருக்கிறார் இப்பாடல்களை அவர். இவற்றில், ஏ.ஏ.ராஜ் இசையமைப்பில் 'பூவே நீ யார் சொல்லி' பாடலின் 'பூவே' எனதொடங்கும் வார்த்தையின் முடிவில் வரும் சிறிய ஆனால் கடினமான சங்கதியை அனாயாசமாக அவர் பாடியிருக்கும் விதம் அவரது பாடும் மேதமைக்கு சான்று.

உச்சக்குரலில் பாடும் பல பாடல்களை எவ்வித தடுமாற்றங்களும், வீழ்ச்சிகளும் இல்லாமலே வெளிப்படுத்தியிருக்கிறார். மேற்சொன்ன ராஜரிஷி, மாவீரன் பாடல்களும், 'எழுகவே' (மாவீரன்), 'மனிதன் மனிதன்' (மனிதன்), 'ஒரு தென்றல் புயலாகி' (புதுமைப்பெண்), 'மாமாவுக்கு குடுமா' (புன்னகை மன்னன்) போன்ற இன்னும் பல பாடல்களும் அசாதாரணமான உச்சஸ்தாயியில் அமைந்த பாடல்கள் ஆகும். 'மாமாவுக்கு குடுமா குடுமா' ஒரு மிகச்சிறந்த நையாண்டிப் பாடல். அதன் ஒவ்வொரு அடியையும் மிகவும் உற்சாகமான தொனியில் அனுபவித்துப் பாடியிருப்பார்.

மேற்கத்திய இசைப்பாணியில் அமைந்த பாடல்களை அற்புதமாக பாடுவதில் வல்லவராக இருந்தார் வாசுதேவன். வேறு யாரால் 'கோடைக் காலக் காற்றே' (பன்னீர் புஷ்பங்கள்), 'தேடினேன் புதியசுகம்' (சங்கர் லால்), 'இந்த மின்மினிக்கு' (சிகப்பு ரோஜாக்கள்), 'பாட்டு இங்கே' (பூவிழி வாசலிலே), 'பருவ காலங்களின் நினைவு' (மூடுபனி), 'ஏய் மைனா' (மாவீரன்) போன்ற பாடல்களை, இந்திய பாணியின் சாயல் துளி கூட இல்லாமல் இவ்வளவு துல்லியமாகப் பாடமுடியும்? 'தேடினேன்' பாடலில் கிஷோர் குமாரின் பாடும்முறையில் சிலசமயம் வருவது போன்ற துலக்கமான மேற்கத்திய இசையுணர்வை அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார். இது போன்ற பாடல்களைப் பாடும் முறையில் வாசுதேவனின் ஆற்றலை மதிப்பிடுவதற்கு யேசுதாஸ் பாடிய 'லோல ராக காற்றே' என்ற மலையாளப் பாடலைக் கேட்கவேண்டும். இது 'கோடைக் காலக் காற்றே' பாடலின் மலையாள வடிவமாகும்!

இதயத்தில் ஓரு இடம் எனும் படத்தில் இடம்பெற்ற 'காலங்கள் மழைக்காலங்கள்' எனும் பாடலில் வலிமையான அவர் குரல் மென்மையான காதல் உணர்வை பரவச்செய்வதைக் கேட்டுணரலாம். 'கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல' (உனக்காகவே வாழ்கிறேன்) எனும் பாடல் கடினமான தாளக்கட்டில் அமைந்த ஒன்று, எனினும் அதை மிகவும் உணர்வுபூர்வமாகவும் மென்மையாகவும் அவர் பாடியிருக்கிறார். 'கண்ணத்தொறக்கனும் சாமி', 'வா வா வாத்தியாரே வா', 'நிலா காயுது' போன்ற பாடல்களில் காம உணர்வு அற்புதமாக வெளிப்பட்டிருக்கும். 'ஒரு தங்க ரதத்தில்' (தர்மயுத்தம்) பாடலில் சகோதர பாசத்தின் கதகதப்பை நாம் உணரமுடியும். 'அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா' (படம்- நன்டு) பாடலை அவர் பாடும் விதமும் அதில்னவர் வெளிப்படுத்தும் பாவங்களும் கஸல் மேதை மெஹ்தி ஹஸனின் பாடும்முறைக்கு நிகரானது என்றே சொல்வேன்!

இன்றுபோய் நாளைவா படத்தில் 'பல நாள் ஆசை' பாடலில் வரும் "இது மாலை சூடும் நேரம், இனி காண்போம் ராஜயோகம்" என்ற வரிகளை பாடியிருக்கும் விதத்தைக் கேட்கும் போது அது நம்மை பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தும். தைப்பொங்கல் படத்தில் 'பனிவிழும் பூ நிலவே' பாடல் அவர் பாடிய மிகச்சிறந்த காதற்பாடலில் ஒன்றாகும். ராக அடிப்படையில் அமைந்த 'மலர்களே நாத ஸ்வரங்கள்' (கிழக்கே போகும் ரயில்) பாடலில் முதல் வார்த்தையான "மலர்களே" என்பதை அவர் வெளிப்படுத்தியிருக்கும் விதமே அப்பாடலில் பலநாள் லயித்திருக்கப் போதுமானது. மைக்கேல் மதன காமராஜன் படத்தில் வந்த 'பேர் வச்சாலும் வைக்காமப் போனாலும்' பாடலை எப்போது கேட்டாலும் ஆனந்தமே. இப்பாடலில் சரணத்தில் வரும் 'மந்தாரைச் செடியோரம் கொஞ்சம் மல்லாந்து நெடுநேரம்' போன்ற இடங்களில் அசாதாரணமான ஒரு பாவத்தை தொட்டு வெளிப்படுத்தியிருப்பார். 'வெட்டி வேரு வாசம்' பாடலில் வரும் "வேருக்கு வாசம் உண்டோ மா..னே" எனும் வரிகளில் மா....னே என விளிக்கும் இடத்தில் வரும் உணர்ச்சியின் வெளிப்பாட்டின் அருகில் சாதாரணமாக எந்த ஒரு பாடகராலும் நெருங்கிச் செல்ல இயலாது.

முதல் மரியாதை படத்தில் இரண்டு வேறுவிதமான உணர்வுகள் ஒரே பாடலில் சங்கமிக்கும்படியாக அமைக்கப்பட்டிருந்த "பூங்காற்று திரும்புமா" பாடல் உணர்ச்சி வெளிப்பாட்டின் உச்சத்தை தொட்ட அவரது மற்றுமொரு பாடல். ஒரே மெட்டிலும், இசையமைப்பிலும் அமைந்திருந்த அப்பாடல் ஆரம்பிக்கும் போது வரும் சோகமான மனநிலையிலிருந்து பாடலின் இறுதியில் சந்தோஷமான மனநிலைக்கு மாறும் ரசவாதம் நிகழ்ந்திருக்கும். பாடல் வரிகளாலும் வாசுதேவன் பாடும் முறையாலும் தான் அந்த மாற்றம் நிகழும். அதிசயப்பிறவி படத்திந் 'ஒன்னப் பார்த்த நேரம்' மற்றும் 'தானந்தன கும்மி கொட்டி' பாடல்கள் முழுதும் சந்தோஷம் பொங்கிப் பரவும். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அவர் பாடிய ஒரே முக்கியமான பாடல் 'தென்கிழக்குச் சீமையிலே' மட்டுமே. சாதாரணமான மெல்லிசையில் அமைந்த ஒரு பாடலை திறன்மிக்க பாடகர் ஒருவரால் எவ்வளவு உச்சத்துக்கு கொண்டுபோக முடியும் என்பதற்கு முத்தான உதாரணம் இந்தப் பாடல்.

இதுபோன்ற நூற்றுக்கணக்கான உதாரணங்களைச் சொல்ல முடியும். மலேசியா வாசுதேவனின் பாடும் விதத்தைப் பற்றி விரிவாக சொல்லவேண்டுமென்றால் ஒரு தனிப்புத்தகமே எழுத வேண்டி வரும்.

அவருக்கு மிகவும் தனித்துவமான குரல் இருந்தும் டி.எம்.எஸ் போலவும் மற்ற பாடகர்களைப் போலவும் நகலெடுத்து அற்புதமாகப் பாடுவார். ஆனால் அவரது தனிப் பாணியை மற்றவர்கள் நகல் செய்து பாடுவது மிகவும் கடினமான காரியம். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், தற்போது பிரபலமாக இருக்கும் க்ரிஷ் என்ற பாடகர் "பூவே இளைய பூவே" பாடலை மலேசியா வாசுதேவன் முன்னிலையிலே மிகமோசமாக பாடுவதை காணநேர்ந்தது! நீங்கள் ஒரு பாடகராக இருந்தால், "கோடை காலக் காற்றே" பாடலில் மலேசியா வாசுதேவன் வெளிக்கொணர்ந்த அதே உணர்ச்சியோடு பாடிக்காட்டுங்கள் பார்க்கலாம்! யேசுதாஸால் கூட அது முடியவில்லை!

மலேசியா வாசுதேவன் ஒருபோதும் போலியான கச்சிதத்தையோ, செயற்கையான இனிமையையோ தனது பாடலில் உருவாக்குவதில்லை. அவருடைய சமகாலத்தைச் சேர்ந்த மற்ற சில பாடகர்களைப் போல வலிந்து பாடப்படும் சங்கதிகளையோ, பாடலின் இடையிடையே தேவையில்லாமல் முனகுவது, முக்குவது, சிரிப்பது, அழுவது போன்ற செயற்கைகளையோ நாடியதில்லை. பாடும்போது ஏற்படும் இயல்பான மனிதக் குறைகளை அவர் பொருட்படுத்தியதுமில்லை. ஆனால் பாடலின் உணர்ச்சிக்கேற்றவாறு இயல்பாக பாடிச்சென்று நுட்பமான உச்சத்துக்குச் செல்ல ஒருபோதும் தவறியதுமில்லை. மெஹ்தி ஹஸன், நுஸ்ரத் ஃபதே அலிகான், கிஷோர் குமார், முகம்மது ரஃபி, டி.ஆர்.மகாலிங்கம், ஏ.எம்.ராஜா போன்ற மகத்தான பாடகர்களின் பாடும் முறையும் இவ்வாறானதாகவே இருந்தது எனபதை நாம் கவனிக்க வேண்டும்.

தனது விருப்பமான பாடகர்களாக லதா மங்கேஷ்கர், முகம்மது ரஃபி, கிஷோர் குமார், டி.எம்.எஸ், திருச்சி லோகநாதன், பி.சுசீலா, எஸ்.ஜானகி, யேசுதாஸ் ஆகியோரைக் குறிப்பிட்டிருக்கிறார் மலேசியா வாசுதேவன். ஆனால் ஆண் அல்லது பெண் ஜோடிப் பாடல்களில் பெரும்பாலும் சேர்ந்து பாடுபவர்களை விட சிறப்பாக பாடியிருக்கிறார் வாசுதேவன். எஸ்.ஜானகியைத் தவிர மற்றவர்களால் பலசமயம் இவருக்கு இணையாகப் பொருந்திப் போக முடிந்ததில்லை. 'என்னம்மா கண்ணு' பாடலாகட்டும், 'நண்பனே எனது உயிர் நண்பனே' பாடலாகட்டும் அல்லது அவரது எந்த ஒரு ஆண் ஜோடிப்பாடலாக இருக்கட்டும், அடுத்த முறை கேட்கும் போது இரண்டு பேர் பாடுவதையும் கூர்ந்து கவனியுங்கள், நான் இங்கு என்ன சொல்லவருகிறேன் என்பது நன்றாகப் புரியும்.

முன்சொன்னது போல தற்போது நிகழ்ந்து வரும் ரீமிக்ஸ் கலாச்சாரத்தில் இரக்கமேயில்லாமல் தாக்கப்பட்ட பாடகர் மலேசியா வாசுதேவன். 'வெத்தலையப் போட்டேண்டி', 'ஆளானாலும் ஆளு' பாடல்களின் உதாரணத்தையும் மேலே சொல்லியிருக்கிறேன். டி.இமானின் இசை 'அமைப்புத் தவறில்' 'என்னம்மா கண்ணு' பாடலை எப்படி படுகொலை செய்திருந்தனர் என்பதை நாம் எல்லாரும் அறிவோம். தற்போதைய இளைய தலைமுறைப் பாடகர்களுக்கு இசை என்பது சுரங்களின் தொகுப்பு மட்டுமே என்றாகிவிட்டது போல் தோன்றுகிறது!

என்னை மிகவும் வருந்தியழவைத்தை கொடூரமான ரீமிக்ஸ் "தண்ணி கறுத்திருச்சி" பாடல்தான். பாடகனே அல்லாத சிம்பு அற்புதமான அந்தப்பாடலை கடைசித் துணுக்கு வரை கொத்திக் குதறியிருந்தார். இந்த புதிய தலைமுறை குப்பையர்கள் (junkies) எப்போதைக்குமான அந்த அர்புதப் பாடலை வன்புணர்ந்து கொலைசெய்து விட்டது போல் உணர்ந்தேன். எரியிற நெருப்பில் எண்ணெயூற்றுவது போல இடையிடையே மலேசியா வாசுதேவனின் குரலையும் அசல் பாடலிலிருந்து வெட்டி, ஒலிக்குறிப்பை மாற்றி கோரமாக ஒலிக்க ஒட்டியிருக்கின்றனர். 'ஆசை நூறுவகை' ரீமிக்ஸ் பாடலில் யுவன் சங்கர் ராஜாவும் மலேசியாவின் குரலை தனது தந்தையின் களஞ்சியத்திலிருந்து எடுத்து பயன்படுத்தியிருக்கிறார். நவீனம் என்ற பெயரில் கடந்த காலத்தின் இசைப்போக்குகளையே மாற்றியமைத்த பல பாடல்களின் மீது வெட்கங்கெட்ட வகையில் இந்த ரீமிக்ஸ் அநீதி இழைக்கப்பட்டுகொண்டேயிருக்கிறது!

சாமந்திப்பூ, இதோ வருகிறேன், பாக்கு வெத்தல, கொலுசு, உறவுகள் மற்றும் ஆயிரம் கைகள் போன்ற படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் வாசுதேவன். இவற்றிலிருந்து சாமந்திப்பூ படத்தின் மூன்று பாடல்கள் மட்டுமே எனக்குக் கிடைத்து. இவற்றை வைத்து அவரது இசையமைக்கும் ஆற்றலை மதிப்பிட்டால், அவரை சிறந்ததொரு இசையமைப்பாளராகவே மதிப்பிடுவேன். ஏற்கனவே குறிப்பிட்ட "ஆகாயம் பூமி இரண்டும் ஒன்றா" என்ற பாடலை அவரே பாடியிருக்கின்றார். "மாலை வேளை." பாடலை எஸ் பி பியும், "கனவுகளே ஊர்கோலம் எங்கே" பாடலை எஸ்.ஜானகியும் பாடியிருக்கிறார்கள். மூன்றுமே அற்புதமான மெல்லிசைப் பாடல்கள். ஏறத்தாழ 85 படங்களில் நடிகராகவும் தோன்றியிருக்கிறார் வாசுதேவன். ஆனால் பாடகர் மலேசியா வாசுதேவன் தான் எட்டாத உயரத்தில் நிற்கிறார்.

தமிழ்ச்சினிமா இசையின் போக்குகள் மாறத்தொடங்கிய பின்னர், அவருக்கு பாடும் வாய்ப்புகளும் குறைந்துவிட்டன. இந்த பின்னணியில்1989ம் ஆண்டு "நீ சிரித்தால் தீபாவளி" என்ற படத்தை அவர் தயாரித்தார். அப்படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது. சொந்த வீடு உட்பட எல்லா பணத்தையும் இழந்தார். அதன்பின்னர் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில பாடல்களைப் பாடினார். அதில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் "தென்கிழக்குச் சீமையிலே" பாடலும் அடங்கும். 1997ல் வந்த ரஹ்மானின் மின்சாரக் கனவு படத்தில் 'பூ பூக்கும் ஓசை' என்ற பாடலில் 'ஹில்கோரே... ஹில்கோரே' என்று அவரை கத்த வைத்ததையும் நாம் கேட்டோம்! அதற்க்குப் பிறகு அவரைப் பற்றி அதிகம் நாம் கேள்விப்படவேயில்லை.

ஒரு பேட்டியின் போது "எனது காலத்தின் எல்லா இசையமைப்பாளர்களையும் நான் மிகவும் மதிக்கிறேன், ஆனால் வாய்ப்புக்காக அவர்களிடம் சென்றதில்லை. பிறருடைய வாய்ப்புகளைத் தள்ளிவிட்டு எனக்கு கிடைக்கவேண்டும் என்றும் நினைத்ததுமில்லை. யாரிடமும் எதையும் எதிர்பார்த்ததில்லை அதனால் வருத்தங்களும் இல்லை" என்று குறிப்பிட்டார். "ஒன்றிரண்டு பாடல்கள் சினிமாவில் பாடிவிட்டால் போதும் என்ற கனவோடுதான் இந்தியா வந்திறங்கினேன். ஆனால் ஏறத்தாழ ஐயாயிரம் பாடல்களைப் பாடிவிட்டேன். வெற்றி, புகழ், பணம் எல்லாம் பார்த்து விட்டேன். அதனால் வருத்தங்களோ வழக்குகளோ இல்லை. எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறவில்லையே என்ற குறை உணர்ச்சி எனக்கில்லை, பழனி மலையில் ஏறியிருக்கிறேன் என்ற நிறை தான் இருக்கிறது. அதுவே போதும். இவ்வாழ்வில் பெருமைப்படுவதற்கும் பெரிதாய் ஒன்றுமில்லை, வருத்தப்படுவதற்கும் ஒன்றுமில்லை. வாழ்க்கை போய்க்கொண்டேயிருக்கிறது. என்னிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்து திருப்தியடையும் ஆள்தான் நான்." என்று அவர் சொன்னார்.

"பாடல்பதிவுக்காகவோ, மேடை நிகழ்ச்சிகளுக்காகவோ தரப்படும் பணத்தை நான் ஒருபோதும் எண்ணிப் பார்த்ததே இல்லை. மனிதர்களை நம்பினேன். சிலர் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாக இருந்தார்கள், பலர் அப்படி இல்லை" என்றும் குறிப்பிட்டிருந்தார். பிரகு மேடை நிகழ்ச்சிகளையே வாழ்வின் இருப்பிற்காக நம்பி இருந்த காலத்தில் கூட சுத்தமாக பணமே வாங்காமல் அல்லது அரைகுறையாக வாங்கிக் கொண்டு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார்!

2003 ஆம் ஆண்டில் மேடைநிகழ்ச்சிகளுக்காக மலேசியாவில் இருந்தபோது மூளையில் ஏர்பட்ட கோளாறினால் கடுமையான பக்கவாதத்தால் தாக்கப்பட்டு அவரது உடம்பு செயலிழந்தது. சினிமாத் துறையினரிடமிருந்து எஸ் பி பாலசுப்ரமணியத்தையும் கங்கை அமரனையும் தவிர ஆதரவான எந்த ஒரு குரலும் அவரை அழைக்கவே இல்லை. எந்தத் துறையில் பல பதிற்றாண்டுகள் பணியாற்றி அங்கு பலருக்கும் உதவி செய்திருக்கிறாரோ, அங்கிருந்து நலம் விசாரிக்கக் கூட எவரும் இல்லை. புகழின் உச்சியில் இருந்தபோது அவர் வீடு எப்போதும் விருந்தினர்கள், உறவினர்கள், ரசிகர்கள் என நிரம்பியிருக்கும். ஆனால் அவர் பொருளாதார ரீதியில் விழுந்து, புகழின் இறங்குமுகத்தில் இருந்தபோது எல்லோரும் மாயமாய் மறைந்துவிட்டிருந்தனர். அவரது உடல்நலமும் பாதிக்கப்பட்ட போது முற்றிலுமாக அவரைப் புறக்கணித்து தனிமையில் விட்டனர். மலேசியா வாசுதேவன் என்ற உச்சநட்சத்திரப் பாடகர் மறக்கப்பட்ட ஒருவராக ஆகிவிட்டார். அவரைப் பற்றி எந்தச் செய்தியும் இல்லாத நிலையில் அவரது ரசிகர்களும் கூட அவரைப் பற்றிச் சிந்திப்பதை நிறுத்திவிட்டார்கள்.

ஒருவழியாக கைவசம் இருந்த எல்லாச் செல்வங்களையும் செலவு செய்து கொஞ்சம் நலத்திற்கு மீண்டுவந்து அவ்வப்போது ஓரிரு மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வாழ்வு நகர்ந்தது. துரதிருஷ்டவசமாக மீண்டும் 2008 லும், 2009 லும் மீண்டும் நோயின் தாக்குதலுக்கு ஆளானார். நடக்கவோ, பேசவோ இயலாத நிலைக்கு தள்ளப்பட்டார். மாதக்கணக்கில் அவசர சிகிச்சைப் பிரிவிலேயே இருந்தார். தொடர்ந்த சிகிச்சை மற்றும் உடர் பயிற்சியின் காரணமாக சிரமத்துடன் நடக்கவும், சிரமமில்லாமல் பேசவும் முடிகிறது இப்போது. இடது கை மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு சிறிய வரியைக்கூட, ஒரு சுரத்தைக் கூட அவரால் இப்போது பாட முடியவில்லை.

தன் வாழ்க்கையே இசைக்கு அர்ப்பணித்த ஒரு மகத்தான பாடகனுக்கு இதைவிட என்ன பெரிய துயரம் நிகழ முடியும்? உயர் சிகிச்சைகள் மீண்டும் நலத்தை கொண்டுவரக்கூடும். ஆனால் எப்படி? இதுவே அவர் தர்போது கேட்டுக் கொள்ளும் கேள்வியாக இருக்கும் எனப்படுகிறது.

நவீன தமிழ் சினிமா இசையின் மிகவும் அபூர்வமான பாடகர்.. மிதமிஞ்சிச் செல்லாத உணர்ச்சிகளோடும், இசையின் மீதான தீராத வேட்கையுடனும் ஆச்சரியகரமான முறையில் தனது பாடல்களை வெளிப்படுத்திய பாடகர்... திரைப்படப்பாடல்களைக் கேட்டுக்கொண்டே இருக்கும் நமது கலாச்சாரத்தில் எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர்... மலேசியா வாசுதேவன். அவரது இசையும் வாழ்வும் இதுவே...

எல்லோரும் பொறந்தோம்

ஒண்ணாக வளர்ந்தோம்

என்ன கொண்டு போகப்போறோம்?

கடைசியில எங்கே கொண்டு வைக்கப்போறோம்?

இது அகல்விளக்கு படத்தில் அவர் பாடிய பாடல் வரிகள்...

நன்றி: ஷாஜி (musicshaji.blogspot)

தமிழில்: முபாரக்

கோட்டு ஓவியம் : முரளி



வியாழன், 17 பிப்ரவரி, 2011

'பாரத் ரத்னா' பண்டிட் பீம்சேன் ஜோஷி: நினைவலைகள்

பீம்சேன் ஜோஷி மறைந்துவிட்டார். நீண்ட ஆயுள்தான்! புகழின் உச்சத்தையும் கடந்துவிட்ட வாழ்வுதான்! இயற்கை நியதிதான்! எல்லோர்க்கும் ஓர் நாள் வருவதுதான்! ஆனாலும் இந்த மரணம் ஏனோ அழுத்தமாக வருத்துகிறது.

கர்நாடக மாநிலம், தார்வாட் மாவட்டம், "கடக்' என்ற இடத்தில் 1922-ம் ஆண்டு உற்பத்தியான ஒரு சங்கீத மஹாநதி, ஜனவரி 24, 2011ல் இறைவனோடு சங்கமமாகிவிட்டது.

அவரது "நாத சரீரம்' (மட்டுமே) தகனமாகியிருக்கிறது. அந்த கம்பீரமான நாதம்....? அது வெந்தணலால் வேகிற விஷயமா? விஞ்ஞான வளர்ச்சியின் சாதக அம்சங்களில் ஒன்றான "பதிவுக் கலை'யில் பீம்சேன் ஜோஷியின் இசை வாழ்வு, சூரியனுள்ளவரை தொடர்ந்து கொண்டுதானிருக்கும்.

பிறகேன் அவரது மரணம், அழுத்தமான வருத்தத்தை ஏற்படுத்த வேண்டும்? காரணம் இருக்கின்றது. அதைப் புரிந்து கொள்வதற்கு 'அபங்கம்' பற்றிய ஒரு சிறு அறிமுகம் தேவையாக இருக்கிறது. அதற்கு முன் இந்திய இசை பற்றிய ஒரு சிறிய அலசலும் அவசியம்.

இறைவனைப் பற்றி அடியார்கள் பாடிய அத்தனைப் பாடல்களுமே பக்தி கீதங்கள்தாம்.  ஜயதேவர், பத்ராசல ராமதாஸர், திருவையாறு தியாக பிரம்மம், கர்நாடகத்தை சேர்ந்த புரந்தர தாஸர், தமிழிசை வேந்தர்கள் மூவர், அருணாசல கவிராயர், ஆனந்த தாண்டவபுரம் கோபாலகிருஷ்ண பாரதி போன்ற பலர் - தங்கள் பாடல்களை, அதற்கேற்ற ராகங்களுடனேயே பாடியருளினார்கள்.

இவர்களனைவருக்கும் காலத்தால் மூத்தவர்களான திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தர மூர்த்தி நாயனார் ஆகியோர் பாடிய தேவாரப் பாடல்களும் தொன்மையான தமிழ்ப் பண்ணமைப்பிலேயே அருளப்பட்டன.

இவர்களைப்போல் பிரம்மானந்தர், ஸுர்தாஸ், மீராபாய், கபீர் தாஸ் போன்ற ஏராளமான ஞானியர்களும் பாடல்களை இயற்றியுள்ளனர். அவை இன்றளவும் உயிர்த் துடிப்புடன் விளங்குகின்றன. ஆனால் இன்று புழக்கத்தில் உள்ள ராகங்களில்தான் அந்தக் கீதங்கள் அவர்களால் இயற்றப்பட்டன என்று கூறுவதற்கில்லை. காலப்போக்கில் இசையின் போக்கும் மாறியிருக்க நிறையவே வாய்ப்புள்ளது.

"காந்தர்வ வேதம்' என்ற இசைக் கலை, நீண்ட பல நூற்றாண்டுகளாய் இந்த மண்ணில் இருந்து வந்துள்ளது. வேதத்தின் ஒரு பகுதியான, "சாம வேதம்' இசையோடுதான் ஓதப்படுகிறது. "வேத காலம் இதுதான்' என்று நிர்ணயிப்பதில் ஆய்வாளர்களிடையே தீர்மானமான முடிவு எட்டப்படவில்லை. இதில் மொழி, இனம், மதம் ஆகிய குறுக்கீடுகளைக் கடந்து நியாயமாக ஆய்வு செய்பவர்களும் அதிகம் பேரில்லை. உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழிலும் "பண்ணமைப்பு' உண்டு என்பதை ஏற்கெனவே பார்த்தோம். முகமதியர்கள் பாரதத்தை ஆண்ட காலத்தில் "பெர்ஷியன் இசை'யின் தாக்கமும் இந்திய சங்கீதத்தில் கலந்ததாகச் சில இசை வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த எல்லா இசை நெறிகளையும் கூட்டிக் கழித்துப் பார்க்கையில், இன்றைய பாரதத்தில் ஜீவனோடிருப்பவை கர்நாடக சங்கீதமும், ஹிந்துஸ்தானி இசையும்தான்! ஆனால் இந்த இரண்டு பிரிவுக்கும் இடையே ஒரு கற்பனைக் கற்சுவர், ஏனோ ஏற்பட்டுவிட்டது. மிகப் பெரும்பாலான இசை மேதைகள், தமது எல்லைகளை மீறி அடுத்த வட்டத்தின் ஆழத்தைக் காண பெரிதாகப் பிரயத்தனப்பட்டதில்லை என்பதே உண்மை. அந்த விஷயத்தில் "தெக்கத்தி' கர்நாடக சங்கீத வித்வான்களைக்கூட குறை சொல்ல முடியாது. அவர்கள் துணிந்து, தெளிவாக, பிழையின்றி "ஹிந்துஸ்தானி' ராகங்களில் புகுந்து விளையாடி விடுகின்றனர். ஆனால் ஹிந்துஸ்தானி இசையில் ஊறியவர்களில் மிகப் பலர், கர்நாடக இசையின் நுட்பங்களையும் அறிந்துகொண்டு அவற்றையும் பாட, அதிக ஆர்வம் காட்டுவதில்லை என்பதே உண்மை. இதில் விதி விலக்குகள் மிகச் சிலரே! அப்படிப்பட்ட வித்தியாச இசைக் கலைஞர்களில் பீம் சேன் ஜோஷிக்கு முக்கிய இடமுண்டு. "ஆக இதுதான் அவரது பெரும்புகழுக்கு முக்கியக் காரணமா?' என்று நீங்கள் ஆர்வமாகக் கேட்டால், "இல்லை, அபங்கங்கள் பாடியதுதான்' என அழுத்தமாகச் சொல்ல வேண்டிய அவசியம் நேரிடும்.

"அபங்கத்தைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகம் தேவையாக இருக்கிறது' என்று இரண்டாவது "பாரா'விலேயே எழுதிவிட்டு, இத்தனைத் தூரம் வந்துவிட்டதை வாசகர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். அபங்கங்களின் பெருமையைச் சொல்ல இவ்வளவு பலமான அஸ்திவாரம் தேவையாக இருக்கிறது.

கி.பி.12-ம் நூற்றாண்டை, அன்றைய பரந்த மராட்டிய (இன்றைய கர்நாடகம், கொங்கண் போன்றவற்றை உள்ளடக்கிய) மாநிலத்தின் "பக்தி இயக்க மறுமலர்ச்சிக் காலம்' என்று ஐயமின்றி சொல்லலாம். ஒரே குடும்பத்தில் நிவ்ருத்தி நாதர், ஞானேஸ்வரர், சோபான தேவர், முக்தா பாய் என்ற நால்வர், அந்தக் காலகட்டத்தில் தோன்றினர்; மராட்டியத்தில் ஒரு புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தினர். "பரமன் மேல் கொள்ளும் சுயநலமற்ற அன்பே பக்தி' என்பதனைப் பிரகடனப்படுத்தினர். அது பாமரன் வரைக்கும் சொந்தம் என நிரூபித்தனர். இவர்கள் நால்வரில் - நூல்கள் பல எழுதியும், "அபங்கம்' என்னும் கீதங்களைப் பாடியும், "பிள்ளையார் சுழி' போட்டவர் ஞானேஸ்வரர். இவரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட அபங்க வெள்ளம், 16-ம் நூற்றாண்டில் தோன்றிய துகாராம் வரை பொங்கிப் பாய்ந்தது. துகாராமின் சீடர்களான நீல்கண்ட் குல்கர்ணி, பஹிணா பாய் ஆகியோரின் அபங்கங்களும் "காதா' எனப்படும் புனித நூல் வரிசையில், ஆன்றோரால் ஏற்கப்பட்டன. இவர்களது காலத்துக்குப் பின் பாடப்பட்ட அபங்கங்களை "காதா'வில் சேர்க்காமல் "பக்தி கீதம்' எனப் பிரித்து வைத்து, அபங்கங்களின் தனித் தன்மையை இன்றளவும் மராட்டியர்கள் பேணிப் பாதுகாத்து வருகின்றனர்.

"அபங்கம்' என்பது, இசைக்கப்படும் கீதம்தான் எனினும், அவையும் நமது "தேவாரம்' போலவே இலக்கண அமைப்புக்கு உட்பட்டவை என்பது பலருக்கும் தெரியாத சேதி. மேலோட்டமாகக் கேட்டுப் பார்க்கும்போது அபங்கங்களில் "சந்தஸ்' (யாப்பு) இருப்பது புரியாது; நுட்பமாகக் கவனிக்கும் அறிஞர்களுக்கே அதன் இலக்கண அமைதி தெரிய வரும். ஞானேஸ்வரரின் சம காலத்தில் வாழ்ந்த நாமதேவர், பல்லாயிரம் அபங்கங்கள் பாடியிருக்கிறார். அவற்றில், "அபங்காசீ களா நாஹீ மீ நேணா! த்வரா கேலி ப்ரீத கேசீ ராஜே' எனத் துவங்கும் பாடலில், "அபங்க இலக்கணம்' முழுமையாகவும், தெளிவாகவும் விவரிக்கப்பட்டுள்ளது.

சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மராட்டிய அடியார்கள் பாடிய அபங்கங்களின் எண்ணிக்கை பற்பல பத்தாயிரங்களைத் தாண்டி நிற்கும் என்பது, பல இசை விற்பன்னர்களே கேள்விப்படாத விஷயமாக இருக்கலாம். சீக்கியர்களின் "குரு கிரந்த ஸôஹேப்' என்ற புனித நூலிலும், நாமதேவரின் அபங்கங்கள் இடம் பெற்றுள்ளன.

இத்தனைச் சிறப்புகளை அபங்கங்கள் பெற்றிருந்தும் ஏனோ அவை மராட்டிய வார்கரீ கலாசாரத்தைப் பின்பற்றும் பக்தர்களோடும், இந்தியாவின் ஏனைய பகுதிகளில் வாழ்ந்த "நாம சங்கீர்த்தனம்' செய்யும் பாகவதர்களோடும் மட்டுமே பல நூற்றாண்டுகளாய் ஐக்கியப்பட்டிருந்தன. இந்த வட்டத்துக்கு அப்பால் வாழ்ந்த வெளியுலகினருக்கு அபங்கங்களின் அருமை புரியாமலேயே இருந்தது ஒரு வினோதமே!

இந்தச் சூழ்நிலையில்தான், "மாஜே மஹேர பண்டரி' என்று சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியில் சிங்கமாய் மேடைகளில் முழங்கத் தொடங்கினார் பண்டிட் பீம்சேன் ஜோஷி. இந்த ஒரு அபங்கம் மட்டும்தானா? "ஸôவளே ஸýந்தர' "கஸô மலா' "ஜேகா ரஞ்ஜலே காஞ்ஜலே' என்று சர வெடிகளாக அபங்கங்களை ஜோஷி அரங்கேற்றம் செய்யச் செய்ய, அகில உலகின் கவனமும் அபங்கங்களின் மேல் விழத் தொடங்கியது.

இத்தனைக்கும் வாசுதேவ் படார்கர், குமார் கந்தர்வ், கிருஷ்ணா ஷிண்டே போன்ற ஜாம்பவான்கள் ஏற்கெனவே அபங்க இசை விற்பன்னர்களாக ஜோஷியின் காலத்திலேயே ஒளி வீசிக் கொண்டுதான் இருந்தனர். ஆயினும் தேசிய அளவில் மட்டுமின்றி, சர்வதேச அளவில் அபங்கங்களை மிகப் பிரபலமாக்கியவர் பீம்சேன் ஜோஷி ஒருவரே!

இன்று நமது கர்நாடக இசை விற்பன்னர்களான அருணா சாய்ராம், ஓ.எஸ். அருண் போன்ற பலர் - தங்கள் இசை நிகழ்ச்சிகளில் அபங்கங்கள் பாடுகின்றனர். தமிழ்நாட்டிலும், கேரளா, கர்நாடகம் போன்ற பல மாநிலங்களிலும் "அபங்க மேளா'க்கள் நடக்கின்றன. முறையான கர்நாடக இசைப் பயிற்சி இல்லாமல், சம்பிரதாயமாக பாடப்படும் ராகங்களில் அபங்கங்களைப் பாடுவதையே முழு நேரத் தொழிலாக்கிக் கொண்டுள்ளவர்களும் தற்போது உருவாகிவிட்டனர். இவர்களால் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஏன் துபாய் போன்ற நாடுகளில் வாழும் இந்தியர்கள் அனைவரின் மத்தியிலும்கூட அபங்க முழக்கம் கேட்கத் துவங்கிவிட்டது.

"இதற்குக் காரணம் இறைவனது இச்சை' என்று பொதுவாகக் கூறிவிடலாம். ஆனால், "அந்த இச்சையை நிறைவேற்றிக் கொள்ளக் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர்' என்று பீம்சேன் ஜோஷியை மட்டுமே குறிப்பிடத் தோன்றுகிறது.

அவர் ஒரு சங்கீத பிதாமகர்! எத்தனையோ இசை மேதைகள் இருப்பினும், "அபங்க வல்லுநர்' என்ற சிறப்புத் தகுதி, அவரை நட்சத்திர மண்டலத்துக்கு நடுவே முழு நிலவாய் ஒளி வீச வைத்தது. அந்த நிலவின் கிரணங்களைப் பற்றியபடி சஞ்சய் நட்கர்ணி போன்ற பல நட்சத்திர இசைக் கலைஞர்கள் உருவாகிவிட்டனர்.

அவரது பாணியை அப்படியே பின்பற்றாவிடினும் அஜித் கட்கடே, கோதாவரி பாய், சுரேஷ் வாட்கர், கிஷோரி அமோல்கர், ரமேஷ் புவா, காசிராம் இட்லிகர், கோலே காவ்ங்கர், கல்யாண், ஜிதேந்திர அபிஷேகி போன்ற இசை மாமேதைகளும், "ஜோஷி ஒரு பிதாமகர்' என்பதை ஒளிவு மறைவின்றி ஒப்புக் கொள்ளத்தான் செய்வார்கள்.

இப்போது சொல்லுங்கள்... "ஜோஷியின் மறைவு, ஒரு அழுத்தமான வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது' என்று நாம் இந்தக் கட்டுரையை ஆரம்பித்ததில் நியாயம் இருக்கத்தானே செய்கிறது? என்ன செய்வது? ஒரு இசை வெள்ளம் 90 வருடங்களைத் தொடப் போகிற நேரத்தில் கால தேவனுக்கு, "போதும்' என்று தோன்றிவிட்டது! இந்த விதி, அவனைப் பொறுத்தவரையில் நியாயமானதாகக்கூட இருக்கலாம். நமக்கென்னவோ, பீம்சேன் ஜோஷி போன்ற மாமேதைகளுக்கு மட்டுமாவது "ஆரோக்கியத்துடன் கூடிய இரு நூறு வருடங்கள்' என்று ஆயுளை நிர்ணயிக்கத் தெரியாத கால தேவன் மீது கோபம்தான் வருகிறது. யார் கண்டது? தர்ம தேவனுக்கே ஜோஷியின் அபங்க கீதத்தை நேரில் கேட்டு ரசிக்க ஆசை வந்திருக்கலாம்! அல்லது அந்தப் பரம்பொருளே தனது ஆஸ்தான இசைக் கலைஞர் பதவிக்காக அவரை அழைத்துக் கொண்டிருக்கலாம். எது எப்படியோ! நாம் கொடுத்து வைத்தது இவ்வளவுதான்! இனி காலம் நம் கணக்கை முடிக்கும்வரை ஜோஷியின் இசைப் பதிவுகளை சுவாசித்தபடியே நாட்களை ஓட்ட வேண்டியதுதான். அதுவொன்றே சோகத்தை மறக்க சுகமான வழி. இந்த வழியில் வேறொரு பெரிய பலனும் இருக்கிறது. அபங்கங்களைக் கேட்பதால் இங்கேயும் - அங்கேயும் நிரந்தர ஆனந்தமும் கிடைக்குமல்லவா? அதை நம்பி நாமும் பாடுவோம்...""மாஜே மாஹேர பண்டரி!''

நன்றி: சினிமா எக்ஸ்பிரஸ்

திங்கள், 14 பிப்ரவரி, 2011

காதல்: ஒரு வித்தியாசமான விளக்கம் - சத்குரு ஜக்கி வாசுதேவ்

'நான்கு அரியர்களை வைத்துஇருக்கும் என் மாணவன், யாரோ ஒரு பெண்ணுக்காக மூன்று மணி நேரம் தெருவில் காத்திருப்பதைக் கவனித்தேன். நன்றாகப் படிக்க வேண்டும், வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டும் என்ற ஆர்வத்தைவிட, ஒரு பெண் பின்னால் சுற்றும் ஆர்வம்தானே அவனுக்கு அதிகமாக இருக்கிறது? இன்றைக்கு இளைஞர்களைச் செலுத்தும் ஒரே சக்தி காதலாக இருப்பது ஆரோக்கியமான நிலையா? ஒரு துறவியிடம் கேட்கிறேனே என்று தப்பாக நினைக்காதீர்கள்!' என்று அண்மையில், கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்னிடம் கேட்டார்.

'நான் துறவி அல்ல; முழுமையான காதலன்!' என்று சிரித்தேன். நான் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தபோது, எங்களுக்கு ஓர் ஆசிரியை இருந்தார். ஆங்கிலக் கவிதைகள் பற்றிப் பாடம் நடத்துவார். சரியாகப் புரிந்துகொள்ளாத மாணவர்களைப் பார்த்து, 'காதல் இல்லாமல் கல்லைப்போல் உட்கார்ந்தால், கவிதை எப்படிப் புரியும்? போய், மகாராணி காலேஜ் முன்னால் நின்று பாருங்கள். காதல் வந்தால் கவிதையும் தானே வரும்' என்பார்.

ஈஷா நடத்தும் பள்ளிக்கூடத்தில், ஜூன் மாதத்தில் திடீர் என்று மழை பிய்த்துக்கொண்டு கொட்டியது. பள்ளி ஆசிரியர்கள் பெரிய பெரிய பாடத் திட்டங்களுடன் வந்து என்னைச் சந்தித்தார்கள்.

'நான் ஒரு குழந்தையாக இருந்தால், இப்படி எல்லாம் வகுப்பு நடத்தும் பள்ளிக்குப் போகவே மாட்டேன். குழந்தைகளைச் சும்மா காட்டுக்குள் கூட்டிப்போங்கள். ஆற்றில் விளையாடட்டும். மழையில் நன்றாக நின்று நனைந்து ஊறட்டும். அதன் பிறகு அழைத்து வாருங்கள்' என்றேன்.

குழந்தைகள் குதூகலமாக மழையில் விளையாடினார்கள். போதும் என்று தோன்றிய பிறகு, உள்ளே வந்தார்கள். இப்போது அவர்களிடம் மழை பற்றி உணர்வுபூர்வமாக ஓர் ஆர்வம் வந்துவிட்டது. மழையின் மீது பிறந்த காதல், அதுபற்றிய விஞ்ஞானத்தை அறிந்துகொள்வதிலும் வந்துவிட்டது. மழையின் புவியியல் பின்னணி என்ன? உயிர்களுக்கும் மழைக்குமான தொடர்பு என்ன? மழையை வைத்து நம் நாட்டின் வரலாறு, கலாசாரம், பொருளியல், ரசாயனம், சமூகவியல் என்று அனைத்தைப்பற்றியும் அவர்களிடம் பேச முடிந்தது.

எதன் மீதாவது ஆர்வம் வந்துவிட்டால், அதுபற்றி அறிந்துகொள்ளாமல் தூங்க முடிவது இல்லை. அந்த ஆர்வத்தைத் தூண்டிவிடாமல், பாடப் புத்தகங்களை எழுதினால், தொட்டுப் பார்க்கவே பிடிக்காமல் போகிறது. தொட்டுத் திறந்தாலே... தூக்கம்தான் வருகிறது.

இது எப்படி மாணவனின் தப்பாகும்? பாடப் புத்தகத்தை ஒரு காதல் கதை மாதிரி எழுதி இருந்தால், ஏன் படிக்காமல் தவிர்க்கப்போகிறார்கள்? அறிவியலையும், வரலாற்றையும், கணிதத்தையும் காதலுக்குரிய சுவாரஸ்யத்தோடு எழுதக் கூடாதா? காதலை கெமிஸ்ட்ரி என்பவர் கள், கெமிஸ்ட்ரியைக் காதலாகத் தர முடியாதா? பாடத்தின் மீது காதல் பிறப்பதுபோல் அமைக் காத கல்வி முறையின் மீதுதானே அடிப்படைத் தவறு?

கொஞ்சம் ஆழமாகப் பார்த்தீர்கள் என்றால், காதல் என்பது ஒரு மனிதனுக்கு ஆழமான, மகிழ்ச்சியான, ஆனந்தமான உணர்வாக இருக்கிறது. இந்த உணர்வை ஏதோ ஒரு காரணம் தூண்டிவிடுகிறது.

ஆங்கிலத்தில் அழகாக 'Falling in Love’ என்று சொல்வார்கள். காதலில் ஏற முடியாது, இறங்க முடியாது. நிற்க முடியாது, பறக்க முடியாது. விழத்தான் முடியும். 'நான்' என்ற தன்மை கொஞ்சம் நொறுங்கிக் கீழே விழுந்தால்தான், காதல் பிறக்க முடியும்.

சென்ற கணம் வரை உங்கள் வாழ்க்கையில் நீங்கள்தான் ஹீரோ. காதல் வந்துவிடட்டுமே, உங்களைவிட இன்னொருவர் முக்கியமாகி விடுகிறார். எப்போது இன்னோர் உயிர் நம்மை விட முக்கியமாக ஆகிவிட்டதோ, அதற்குப் பெயர்தான் காதல்.

கல்லூரி நண்பர்கள் சிலர் பல வருடங்கள் கழித்து தங்கள் புரொஃபசர் வீட்டில் சந்தித்தனர். எங்கெங்கோ சுற்றிவிட்டு பேச்சு அவர்களுடைய காதல் வாழ்வு பற்றித் திரும்பியது. ஒவ்வொரு நண்பரிடத்திலும் ஏதோ ஓர் ஏமாற்றம், ஏதோ ஒரு வருத்தம்.

புரொஃபசர் ஒரு ஜாடியில் தேநீர் கொண்டுவந்து வைத்தார். 'அந்த அலமாரியில் நிறையக் கோப்பைகள் இருக்கின்றன. உங்களுக்குப் பிடித்த கோப்பையில் தேநீரை எடுத்துக்கொள்ளுங்கள்' என்றார்.

பீங்கான் கோப்பை, கண்ணாடிக் கோப்பை, வெள்ளிக் கோப்பை என்று விதவிதமான கோப்பைகள். நண்பர்கள் ஆளுக்கு ஒரு கோப்பையை எடுத்து தேநீர் நிரப்பி அமர்ந்ததும், புரொஃபசர் சொன்னார்...

'சாதாரணமான மண் கோப்பைகளை யாரும் எடுக்கவில்லை. விலை உயர்ந்த அழகான கோப்பைகளைத்தான் நீங்கள் எல்லோரும் எடுத்திருக்கிறீர்கள் என்பதைக் கவனித்தீர்களா? கோப்பையைக் கையில் வைத்திருக்கப்போகிறீர்கள். அவ்வளவுதான். தேநீர்தான் உள்ளேபோய் உங்களுடன் ஒன்றாகப்போகிறது. ஆனால், உங்கள் கவனம் கோப்பையில் நின்றுவிட்டது.

எனக்கு என்ன கிடைத்தது, அடுத்தவருக்கு எந்தக் கோப்பை போய்விட்டது என்பதில் சிந்தனை போய்விட்டதால், தேநீரின் உண்மை யான ருசியைக் கவனிக்கத் தவறுகிறீர்கள். காதலும் அப்படித்தான். அந்த அற்புதமான உணர்வு கொண்டுவரும் ஆனந்தத்தை வெளித் தோற்றங்களுடன் தொடர்புபடுத்தி, ருசிக்கத் தவறுகிறீர்கள்... வேதனையில் அல்லாடுகிறீர்கள்!’

உண்மைதான். மாட்டுக்குக்கூடக் காதல் இருக்கிறது. கழுதைக்குக்கூடக் காதல் இருக்கிறது. புழு, பூச்சிக்கும் காதல் இருக்கிறது. காதலிக்கத் தெரியாதவர்கள் அதற்கும் கீழே இருப்பவர்கள். காதல் என்பது மிக ஆழமான ஈடுபாடு. துறவறம் பூணுபவர்கள் காதல் அற்றவர்கள் அல்ல... குறிப்பிட்ட நபரோடு மட்டும் பிரியத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல், அவர்களுக்கு எல்லாவற்றின் மீதும் காதல் வந்துவிட்டது என்று அர்த்தம்.

வாழ்க்கை என்றாலே காதல்தான். நீங்கள் சுவாசிக்கும் காற்றைக் காதலோடு கவனியுங்கள். நமக்குள் போய், நம்மில் ஒரு பாகமாகவே மாறும் உணவைக் காதலோடு புசியுங்கள்.

காதலாக இருக்கும்போது, உங்களுடைய உணர்வு இனிப்பாக இருக்கிறது. உயிர் போனாலும் சரி என்ற ஆனந்த உணர்வு நிறைகிறது. ஒரே ஒருவராலேயே இவ்வளவு கிடைக்கும் என்றால், எல்லா ஜீவராசிகளிடமும், ஜீவனுக்கு மூலமாக இருக்கிற காற்றிடமும், மண்ணிடமும், கல்லிடமும், செடியிடமும் காதல்கொண்டால், எப்பேர்ப்பட்ட அளவில்லாத ஆனந்தம் கிடைக்கும் என்று கற்பனை பண்ணிப் பாருங்கள். மலை, நதி, பூ, புல்வெளி, பட்டாம்பூச்சி, ஆடு, மாடு என்று காணும் ஒவ்வொன்றின் மீதும் காதல்கொள்ளலாம்.

காதலிப்பது கையில் கிடைக்க வேண்டும் என்று நினைத்தால்தான், பிரச்னை. அதைத் தவிர்த்துவிட்டால், கடலின் மீதும், ஆகாயத்தின் மீதும், நிலவின் மீதும்கூட உண்மையான காதல்கொள்ளலாமே? அந்த உணர்வை உங்களிடம் இருந்து யாரால் தட்டிப் பறிக்க முடியும்?''

தமிழாக்கம்: எழுத்தாளர்கள் சுபா

நன்றி: ஆனந்த விகடன்





ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

மன்னிக்க முடியாத மனித குல விரோதிகள்..!

லிய உடற்கட்டு
வண்ணச் சீருடை
கொலை ஒன்றே குறிக்கோளாய்
போர்ப் பயிற்சி..!

எல்லைக்கோட்டை
தாண்டி நிற்பவன்
எதிரியாவான்..
ஒரு போதும்
மனிதனாக மாட்டான்..!

கருவறுத்தல்
கடமையென்போம்..!
சிந்திய இரத்தம்
சிம்மாசனமாக..
அதிகாரத்தின் முன்னால்
ஆயுள் இழப்போம்..!

அன்பைக் கொன்று
அணுசக்திப் படைப்போம்
நிர்வாணத்தை நெய்து
தேசியக் கொடிகள் செய்வோம்..!

பசித்த குழந்தைகளின்
பரிதாப மரணத்தை மறக்க
ஆயுதங்கள் வாங்கி
ஆனந்தக் கூத்தாடுவோம்..!

உணவுக்கும் வழியின்றி
உருக்குலைந்து நிற்பவர்களுக்கு
வல்லரசுக் கனவுகளை
வாரி வழங்குவோம்..!

பண்டிகை கொண்டாட
பரிசளிப்போம்
எதிர்கால சந்ததிகளுக்கு
மெய்த் துப்பாக்கிகளை..!

குற்ற உணர்வுகள்
குறுக்கிடாமல் கொண்டாட
கொஞ்சம் மது
எப்போதும்
நிறைந்த போதைக்கு
தேசப் பக்தி

தேசப் பக்தர்கள் -
மன்னிக்க முடியாத
மனித குல விரோதிகள்..!

- கவிஞர் அமீர் அப்பாஸ்
( israthjahan.ameer@gmail.com)







தியானம் செய்வது எப்படி? - பாலகுமாரன்

தோழனே! தியானம் என்பது மந்திரமல்ல, ஒரு மதத்தின் கோட்பாடும்
இல்லை. யாரோ பொழுது போகாதவர்களின் வேலையும் அல்ல. இது சும்மா இருத்தலின் ஆரம்ப நிலை.

சும்மா இருத்தல் என்பது சோம்பி இருத்தல் அல்ல. எந்த செயலும் செய்யாது ஏதோ கற்பனையில் மூழ்கி இருத்தலும் அல்ல. ஒரு விஷயத்தை விருப்பு வெறுப்பின்றி பார்த்தலே சும்மா இருத்தல். இது துறவிகளுக்கான விஷயமல்லவா என்று கேள்வி வரும். எல்லோருக்கும் தேவைப்படும் நிலை அது. எவரெல்லாம் வெற்றி பெற விரும்புகிறாரோ, அவருக்கு உண்டான ஆதார சக்தி இது.

எவரால் சும்மா இருக்க முடிகிறதோ, அதாவது எவரால் ஒரு விஷயத்தை விருப்பு வெறுப்பின்றி பார்க்க முடிகிறதோ, அவர் அந்த விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ள முடியும். ‘தியானம் பண்ணா பக்கத்து வீட்டு விஷயம் பளிச்சுன்னு சினிமா மாதிரி தெரியுமா?’ பேராசை இது. விருப்பு தலை விரித்தாடும் புத்தி இது. அடுத்த வீட்டை ஏன் பார்க்க வேண்டும் என்கிற கேள்வி தனக்குள் இல்லாத ஆவல் இது, உன் வீட்டை பார். உன்னை உற்றுப்பார், உன்னிலிருந்து துவங்கு.

தன்னையே விருப்பு வெறுப்பின்றி பார்ப்பவருக்கு அடுத்த வீடு பற்றி அதிக அக்கறை இல்லாது போகும். அங்கே யார் என்ன பேசுகின்றார்கள். என்ன செய்கின்றார்கள் என்ற ஆவல் இல்லாது போகும். அந்தரங்கம் தெரியும். பேராசையற்றுப் போகும். அவர்களும் நம்மைப் போல் நல்லதும், கெட்டதும் நிறைந்தவர்கள் என்கிற விருப்பு வெறுப்பற்ற நிலை வரும்.

இந்த நிறை வர அடுத்த வீடு என்ன என்பது எளிதாய் புரியும். அழகிய பெண் இருக்கிறாள் என்று ஆசைப்படாமல், அவலமான குடும்பம் என்று வெறுப்பு கொள்ளாமல் மனித சுபாவங்களை உணரமுடியும். அப்போது சிநேகம் எதிர்பார்ப்பின்றி இருக்கும். எதையும் எதிர்பார்க்கவில்லை என்று அவர்களுக்கு புரிய, உள்ளத்தைத் திறந்து தானே உன்னிடம் கொட்டுவார்கள். அப்போது சலனமற்று பேச அடி ஆழத்தில் உள்ளதெல்லாம் வெளியே வரும். அடுத்த வீடு பற்றி சகலமும் புரியும். நான் மனிதர்களை புரிந்து கொள்ளும் விதம் இதுவே.

விருப்பு வெறுப்பற்ற மனம் எப்படி வரும்? ஏகப்பட்ட விருப்பங்கள் உள்ளனவே, கண்டபடிக்கு வெறுப்பு இருக்கிறதே, மேலும் கேள்வி வரலாம். எனக்கும் இருந்தது தோழா, மெல்ல மெல்ல மாறினேன். சொடுக்கு நேரத்தில் இது கை கூடாதய்யா. சொல்லிக் கொடுத்து விட்டால் வராது தம்பி. கற்றுக்கொடுப்பதில் விசேஷம் இல்லை. கற்றுக் கொள்வதில்தான் காரியம் உண்டு. நீச்சல் தரையிலா சொல்லித் தர முடியும். தியானத்தை புத்தகத்திலா எழுதி காட்ட முடியும். ஆர்வம் தூண்டலாம். ஒன்று இரண்டு மூன்று என்று விதிகள் எழுதலாம், படித்து விட்டு நீச்சல் குளம் தேடிப்போய் நீரில் இறங்க வேண்டும். குளிரக் குளிர நனைய வேண்டும். நீச்சல் விதிகள் மறந்து சும்மா தரையைப் பிடித்துக் நீச்சலடிக்கிறவர்களை வேடிக்கை பார்க்கும் புத்தி வரும். அதை விலக்கி கம்பியை பிடித்து உடம்பு லேசாக்கி கால் மட்டும் தூக்கிப் போட்டு பயிற்சி துவங்க வேண்டும். உடம்பு அசைக்காமல் வெறுமே முடிந்த வரை மிதக்க வேண்டும். இடைவிடாது நீச்சல் வரும் வரை செய்ய வேண்டும்.

ஏதோ ஒரு கணம் நீச்சல் வந்து விடும். என்ன காரணம்? தெரியாது. இது போலவே தியானமும். ‘தியானம் பண்றேன் மச்சி, நீயும் பண்ணு’ செய்து பழகும் முன்னே செயல்முறை பற்றி தம்பட்டம் அடிக்கத் தோன்றும். இந்த அலட்டல் தியானத்திற்கு எதிர் விஷயம், உடனே நிறுத்தி விடவேண்டும். இரண்டு நாள் செய்துவிட்டு முகம் மாறியிருக்கா என்று கண்ணாடி முன்பு பார்க்க தோன்றும். இது பொய், விலக்க வேண்டும். ‘இடுப்பு நோவுது, கால் மரத்தது போல் ஆகுது, இருபது நிமிஷம் சீக்கிரம் ஆயிட்டா நல்லா இருக்கும்’ இந்த வன்முறை வேண்டாம். இயலவில்லையெனில் எழுந்து உலவிவிட்டு மறுபடி உட்காருதல் நலம்.

கண்ணை மூடிக்கொண்டு தியானம் வந்துவிட்டது போலவும், பாலகுமாரன் போல் தாடி குங்குமம் வைத்து கொண்டது போலவும், ஊர் உறவு எல்லாம் காலில் விழுந்து விபூதி வாங்கிக் கொள்வது போலவும் கற்பனை வரும். இது சுகம். ஆனால் விஷம். தவிர். இனியனே, பொய்யற்று இரு. உலகத்தாரிடையே பொய் சொல்வதை தவிர்க்க முடியாதிருக்கலாம், உனக்கு நீயே சொல்லலாமா. இதில் உபயோகம் உண்டா, யாரை ஏமாற்றப் பொய். உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளப் போகிறாயா, ஆமெனில் அழிவு நிச்சயம்.

கடும் உண்மையோடு இரு. கண்டிப்பான உண்மையோடு இரு. எதற்கு எனக்கு தியானம் என்று கேள்வி கேள், விடை கண்டுபிடி. எனக்கு ஒரு குழப்பமும் இல்லை, சும்மா தெரிஞ்சுக்கலாமென்னு தான். தப்பா? ஏகப்பட்ட குழப்பம் சார், எவனை நம்பறதுன்னே தெரியலை, எது பண்ணாலும் தப்பு வருது. குத்தம் சொல்றாங்க, ரொம்ப அப்செட் ஆய்ட்டேன் சார், தூக்கமே வரலை; என்னைப் புரிந்துகொள்ள என் மனசின் உண்மையான நிலை பற்றி அறிய ஆவல். என்னை அறிய, எல்லாம் அறியமுடியும் என்கிற நம்பிக்கை. எல்லாம் கற்றுக் கொள்ள எண்ணம் தியானம் அதில் ஒன்று அவ்வளவே.

இதில் எதுவாயினும் உங்கள் பதிலாய் இருக்கலாம். எதற்கும், எந்த பதிலுக்கும் வெட்கப்படத் தேவையில்லை. ஏனெனில், இது உங்களைத் தவிர வேறு எவருக்கும் தெரியப் போவதில்லை. எதுவாயினும், எந்த காரணம் இருந்தாலும் உண்மையானதாய் இருக்கட்டும். உள்ளுக்குள்ளே பொய்யில்லாது இருக்கட்டும். பொதுவாய் பேசுவதை விடுத்து, தியானம் பற்றி என்னிலிருந்து என் அனுபவத்திலிருந்து பேசுகிறேன்.

ஏனெனில் இந்த கட்டுரையின் நோக்கம் தியானம் செய்ய ஆர்வம் ஊட்டுதலே, தியானத்தில் தெளிவது உங்கள் கையில் இருக்கிறது. உங்கள் உறுதியைப் பொறுத்து அமைவது. அந்த உறுதி எங்கிருந்து வரும் என்பதை என் அனுபவமாக சொல்ல நினைக்கிறேன்.

நன்றி: திரு. கிருஷ்ண துளசி
http://balakumaranpesukirar.blogspot.com/





செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

தமிழ் சினிமா - வசூல் சாதனை செய்த டாப் 10 படங்கள்


நன்றி: குமுதம்

100 சிறந்த தமிழ்ப் புத்தகங்கள் - எஸ். ராமகிருஷ்ணன்

பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் சிபாரிசு செய்யும் 
100 சிறந்த தமிழ்ப் புத்தகங்கள் பட்டியல்:

1)அபிதாம சிந்தாமணி – சிங்காரவேலு முதலியார்

2) மகாபாரதம் – கும்பகோணம் ராமானுஜ ஆச்சாரியார் பதிப்பு. 16 தொகுதிகள்

3) தேவாரம் – திருவாவடுதுறை ஆதினப்பதிப்பு

4) நாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும்

5) கம்பராமாயணம்– மர்ரே ராஜம் பதிப்பு

6) திருக்குறள் – மூலமும் உரையும்

7) திருஅருட்பா – மூலமும் உரையும்

8)சிலப்பதிகாரம் – உ.வே.சாமிநாதய்யர் நூலகம் வெளியிடு

9) மணிமேகலை – மூலமும் உரையும்

10) சங்க இலக்கியங்கள் – நியூ செஞ்சரி புத்தகவெளியீடு 14 தொகுதிகள்

11) யாழ்நூல் – விபுலானந்த அடிகள்

12) தமிழக வரலாறு – தமிழக அரசு வெளியீடு 2 தொகுதிகள்

13)பாரதியார் – கவிதைகள் கட்டுரைகள் முழுதொகுப்பு

14)பாரதிதாசன் கவிதைகள்.

15)ஆனந்த ரங்கம்பிள்ளை நாட்குறிப்பு – 12 தொகுதிகள்

16)பெரியார் சிந்தனைகள் – ஆனைமுத்து தொகுத்தவை.

17)திருப்பாவை – மூலமும் உரையும்

18)திருக்குற்றாலகுறவஞ்சி – மூலமும் உரையும்

19)சித்தர் பாடல்கள்– மூலமும் உரையும்

20)தனிப்பாடல் திரட்டு.

21)பௌத்தமும் தமிழும்– மயிலை சீனி வெங்கடசாமி

22) புதுமைப்பித்தன் சிறுகதைகள் முழுதொகுப்பு

23)கு.அழகர்சாமி சிறுகதைகள் முழுதொகுப்பு

24)மௌனி கதைகள்

25)சுந்தர ராமசாமி சிறுகதைகள் முழுதொகுப்பு

26)ஜெயகாந்தன் சிறுகதைகள் முழுதொகுப்பு

27) கி.ராஜநாராயணன் சிறுகதைகள் முழுதொகுப்பு

28) வண்ணநிலவன் சிறுகதைகள் முழுதொகுப்பு

29)வண்ணதாசன் சிறுகதைகள் முழுதொகுப்பு

30)பிரபஞ்சன் சிறுகதைகள் முழுதொகுப்பு

31)அசோகமித்ரன் சிறுகதைகள் முழுதொகுப்பு

32)ஆதவன் சிறுகதைகள் முழுதொகுப்பு

33)லா.ச.ராமமிருதம் சிறுகதைகள் முழுதொகுப்பு

34)தி.ஜானகிராமன் சிறுகதைகள் முழுதொகுப்பு

35)ஆ.மாதவன் சிறுகதைகள் முழுதொகுதி

36)விடியுமா குப.ராஜகோபாலன் சிறுகதைகள்

37)ராஜேந்திரசோழன் சிறுகதைகள்

38)நீர்மை ந.முத்துசாமி சிறுகதைகள்

39)சிறகுகள் முறியும் அம்பை சிறுகதைகள்

40)பாவண்ணன் சிறுகதைகள் முழுதொகுப்பு

41)சுஜாதா சிறுகதைகள் முழுதொகுப்பு

42)பிச்சமூர்த்தி சிறுகதைகள் இரண்டு தொகுதிகள்

43)முத்துலிங்கம் சிறுகதைகள் முழுதொகுப்பு

44)கந்தர்வன் சிறுகதைகள் முழுதொகுப்பு

45)சுயம்புலிங்கம் சிறுகதைகள்

46)மதினிமார்கள் கதை – கோணங்கி

47)வெயிலோடு போயி – தமிழ்செல்வன்

48)இரவுகள் உடையும் பா.செயப்பிரகாசம்

49)கடவு – திலீப்குமார் சிறுகதைகள்

50)நாஞ்சில்நாடன் சிறுகதைகள் முழுதொகுப்பு

51)புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம்

52)புளியமரத்தின் கதை சுந்தர ராமசாமி

53)கரைந்த நிழல்கள் – அசோகமித்ரன்

54)மோகமுள் – தி.ஜானகிராமன்

55)பிறகு – .பூமணி

56)நாய்கள் நகுலன்

57)நித்யகன்னி – எம்.வி.வெங்கட்ராம்

58)இடைவெளி – சம்பத்

59)ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஜெயகாந்தன்

60)வாசவேஸ்வரம் – கிருத்திகா

61)பசித்த மானுடம் கரிச்சான்குஞ்சு

62)கோபல்லகிராமம் – கி.ராஜநாராயணன்

63)தலைமுறைகள் – நீல பத்மநாபன்

64)பொன்னியின் செல்வன்– கல்கி

65)கடல்புரத்தில் – வண்ணநிலவன்

66)நாளை மற்றும் ஒரு நாளே – ஜீ.நாகராஜன்

67)சாயாவனம் சா.கந்தசாமி

68)கிருஷ்ணபருந்து – ஆ.மாதவன்

69)காகித மலர்கள் ஆதவன்

70)புத்தம்வீடு. – ஹெப்சிபா யேசுநாதன்

71)வாடிவாசல் -சி.சு.செல்லப்பா

72)விஷ்ணுபுரம் – ஜெயமோகன்

73)உபபாண்டவம் – எஸ்.ராமகிருஷ்ணன்

74)கூகை – சோ.தர்மன்

75)ஆழிசூழ்உலகு– ஜோசப் டி குரூஸ்

76)ம் – ஷோபாசக்தி

77)கூளமாதாரி – பெருமாள் முருகன்

78)சமகால உலகக் கவிதைகள் – தொகுப்பு பிரம்மராஜன்

79)ஆத்மநாம் கவிதைகள் முழுதொகுப்பு

80)பிரமிள் கவிதைகள் முழுதொகுப்பு

81)கலாப்ரியா கவிதைகள் முழுதொகுப்பு

82)கல்யாண்ஜி கவிதைகள்

83)விக்ரமாதித்யன் கவிதைகள் முழுதொகுப்பு

84)நகுலன் கவிதைகள் முழுதொகுப்பு

85)ஞானகூத்தன் கவிதைகள் முழுதொகுப்பு

86)தேவதச்சன் கவிதைகள் முழுதொகுப்பு

87)தேவதேவன் கவிதைகள் முழுதொகுப்பு

88)ஆனந்த் கவிதைகள் முழுதொகுப்பு

89)பழமலய் கவிதைகள் முழுதொகுப்பு

90)சமயவேல் கவிதைகள் முழுதொகுப்பு

91)கோடைகால குறிப்புகள் சுகுமாரன்

92)என்படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் – மனுஷ்யபுத்திரன்

93) நீ இப்பொழுது இறங்கும் ஆறு -சேரன் கவிதைகள்

94) ரத்த உறவு– . யூமா வாசுகி

95)மரணத்துள் வாழ்வோம் – கவிதை தொகுப்பு

96)சொல்லாத சேதிகள் கவிதை தொகுப்பு- மௌ.சித்ரலேகா.

97)தமிழக நாட்டுப்புறக் கதைகள் தொகுப்பு.– கி.ராஜநாராயணன்

98)தமிழக நாட்டுபுறபாடலகள் – நா.வானமாமலை

99)பண்பாட்டு அசைவுகள்– தொ.பரமசிவம் கட்டுரைகள்

100)கண்மணி கமலாவிற்கு – புதுமைபித்தன் கடிதங்கள்

இவை சென்னை நியூபுக்லேண்ட்ஸ் வடக்கு உஸ்மான் சாலை தி நகர் கடையிலும் கோவை ராஜவீதியில் உள்ள விஜயா பதிப்பகத்திலும் கிடைக்க்கூடும்.

நன்றி: எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்






திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...