வியாழன், 14 அக்டோபர், 2010

நல்ல கட்டுரை

வாசிப்பின் நேசிப்பை அறிவோம்!

வாழ்க்கையில் சாதிக்க வேண்டியவை நிறையவே உள்ளன. இந்த 21-ம் நூற்றாண்டிலும் நம்மில் மண்டிக்கிடக்கும் சீர்கேடுகள் இன்னும் களையப்படாதது வேதனையளிக்கிறது. கலை, இலக்கியம், கலாசாரம் போன்றவற்றைப் பேணிக்காத்தது ஒரு காலம், இன்று இலக்கிய உலகம் என்றாலே தீண்டத்தகாதவை போல பார்க்கப்படுகிறது.

நிறையப் படைப்பாளிகள் வெறித்தனமாக எழுதித் தள்ளியது ஒரு காலம். இன்றோ அந்த நிலை மாறிவிட்டது. இதற்குக் காரணம் வாசிப்புத் திறன் குறைவா அல்லது வெறுப்பா என ஆராய்ச்சியில் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இளைஞர்கள், யுவதிகள் எல்லாம் கையில் புத்தகங்களோடு அலைந்ததை மறக்கமுடியவில்லை. தினமும் ஒரு பத்திரிகை, நாவல், புதிய இதழ்கள் என சக்கைப்போடு போட்டது.

நூலகங்களில் நிறையப் பேர் ஆர்வமாகப் படித்ததெல்லாம் இன்று எங்கே போயிற்று? இப்படியே போனால் படைப்பாளன் என்ன ஆவான்? சிந்தனைவாதிகள் என்ன ஆவார்கள். இளைய சமுதாயத்துக்கு வழிகாட்டல் என்பதே இல்லாமல் போய்விடுமா என்ற பயம் ஏற்பட்டுள்ளது.

இத்தகு நிலைக்கு காரணம் என்ன? பெருகிவரும் சினிமாவும். சின்னத்திரைகளும் என்றால் மிகையில்லை. பொழுதுபோக்கு என்பது வேறு, வாசிப்பு என்பது வேறு. ஆனால், இன்று வாசிப்பின் நேசிப்பு மறந்துபோயிற்று. மாறாக இயந்திரத்தனமாக சினிமா மாயை தொற்றிக்கொண்டுவிட்டது.

புதிய படம் வெளியானால் யாருக்கு லாபம்? தயாரிப்பாளர், நடிகர்,நடிகைகளுக்குத்தான். ஆனால், ரசிகர்களுக்கோ செலவுதான். சிறிதுநேர மகிழ்ச்சி கானல் நீராகி விடுகிறது. உலகிலேயே அதிகமான சினிமா ரசிகர்களும், கண்மூடித்தனமான ஆதரவாளர்களும் தமிழகத்தில்தான் இருப்பார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை. பல கோடி செலவில் வெளியாகும் படத்துக்காக, பல நூறு ரூபாய் செலவழிக்கத் துணியும் ரசிகனுக்கு புத்தகங்களை வாங்க ஏன் மனம் வரவில்லை என்பதே நமது ஆதங்கம்.

வாசிப்பதால் வரும் இன்பம், ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதால் வந்துவிடுமா என்பதை உணர யாருமில்லை. இன்னும் கனவுகளிலேயே வாழ்க்கையைத் தொலைப்பவர்கள்தான் அதிகமாக உள்ளனர்.

சுமார் 30 ஆண்டுகால இலக்கிய உலகை பின்னோக்கிப் பார்த்தோமானால் தமிழில் நம்பமுடியாத அளவுக்கு புதிய உத்வேகம், புதிய படைப்பாளர்கள், சிந்தனைவாதிகள் என பலர் மிளிர்ந்தனர். ஆனால் இன்று விரல்விட்டு எண்ணும் அளவிலேயே எழுத்தாளர்கள் உள்ளனர்.

நகைச்சுவை, குழந்தை இலக்கியம், நாவல் எழுதுவதற்கு யாராவது இருக்கிறார்களா என்றால் விடை ஜீரோதான். இந்த இடைவெளிக்கு என்ன காரணம். ஊக்குவிப்பவர்கள் யாரும் கிடையாது. வணிக நோக்கில் பத்திரிகைகள், பருவ இதழ்கள் தங்களது வளர்ச்சியில் கவனம் செலுத்துகின்றன. இன்றைக்குப் பிரபலமாகப் பேசப்படும் எழுத்தாளர்களை ஊக்குவித்த பல ஜாம்பவான்கள் மறைந்து விட்டனர். அவர்களின் தாராள மனப்பான்மை, தட்டிக்கொடுக்கும் தன்மை இன்று யாருக்கும் கிடையாது. அனைத்துமே பொருளாதார ரீதியான பலன்களைப் பார்ப்பதில்தான் இருக்கிறது.

சிறந்த படைப்பாளனை வெளிக்கொணர இன்று யார் இருக்கிறார்கள்? சரி, அதுகூடப் பரவாயில்லை. கதைகள், தொடர்கதைகள், நாவல்களை யாராவது பிரசுரிக்கிறார்களா? அல்லது புதியவர்களுக்குத்தான் அந்த வாய்ப்புகள் தரப்படுகின்றனவா, ஏதோ துக்கடா துணுக்குகளும், நகைச்சுவைச் துணுக்குகளும்தான் பத்திரிகைகளில் காணப்படுகின்றன. இல்லாவிட்டால் டிவிட்டர் கதைகள், கால்பக்க கதைகள் ஏதோ பெயரளவுக்கு வெளியாகின்றன.

5 அல்லது 6 பக்கக் கதைகளை வாசிக்க முடிகிறதா? நிச்சயமாகக் கிடையாது. அந்த 6 பக்கத்தில் யாராவது ஒரு பாலியல் மருத்துவர் அல்லது ஜோதிடர் என விளம்பரக் கட்டுரைகள். அதுவும் இல்லாவிட்டால் ஆன்மிகம் என பக்கத்தை நிரப்புவதில் கவனமாக இருக்கின்றனர். முன்பெல்லாம் தொடர்கதைகளுக்காகவும்,சிறுகதைகளுக்காகவுமே பத்திரிகைகள் படித்தவர்கள் ஏராளம். இன்றோ கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிவிட்டது. போதாக்குறைக்கு, சின்னத்திரையில் காலை 9 மணிமுதல் இரவு 11 மணிவரையில் மெகா தொடர்கள், இரவில் தூங்கப்போகும்போது சிரித்தவர்களின் காலம் மலையேறிவிட்டது.

சோகம், அழுகையுடன் தொடர் முடிகிறது. இதனால் மன அழுத்தம், விரக்தி, பழிவாங்கும் உணர்ச்சிகள் மோலோங்கிவிடுகின்றன. அப்புறம் இரவில் மனதில் எப்படி மகிழ்ச்சி பெருகும். குழந்தைகளைக் கண்டால் எரிந்து விழுவதும், கணவரை விரட்டி அடிப்பதுமாகப் பொழுது கழிகிறது. இந்த சினிமா, சின்னத்திரைகளை ஓரங்கட்டிவிட்டு தரமான நூல்கள், புத்தகங்களை வாசிக்கும்போது அனைத்து உணர்வுகளும் நம்மை கட்டிப்போடும். சினிமா, தொடர் நாடகங்களை புறந்தள்ளி வாசிக்கும் பழக்கத்தை இல்லத்தரசிகள் தொடங்க வேண்டும். இதனால் புதிய சிந்தனைகள், மனநிம்மதி, அலட்டல் இல்லாத வாழ்க்கை நிச்சயம்.

இதற்காக சினிமா, சின்னத்திரையை அறவே புறக்கணிப்பதாக அர்த்தம் கொள்ளத் தேவையில்லை. எதுவும் அளவாக இருக்கட்டும். மேலும், இளைய சமுதாயத்தின் எழுத்துத்திறமை, வாசிக்கும் பழக்கம் மறந்து போகாமல் இருக்க உதவ வேண்டியது படித்தவர்களின் கடமை. இன்னும் இதேநிலை நீடித்தால் பழைய எழுத்தாளர்களின் படைப்புகளை மறுபிரசுரம் செய்ய வேண்டிய அபாயகட்டம் பத்திரிகைகளுக்கு நேரிடும். எனவே புதியவர்களை வளர்க்க உதவுங்கள். அல்லது வழிகாட்டுங்கள் என்பதே நமது ஆதங்கம்.
 
கட்டுரையாளர்: எஸ்.ரவீந்திரன்
நன்றி:                     தினமணி

கருத்துகள் இல்லை:

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...