புதன், 13 அக்டோபர், 2010

சீனாவில் 10 கோடி பேருக்கு மனநிலை பாதிப்பு

சீனாவில் சமீபகாலமாக மனநிலை பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் 10 கோடிக்கு மேற்பட்டோர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

சீன குடிமக்களில் எட்டு பேரில் ஒருவர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பல்வேறுவிதமான மனநோய்களால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மனநிலை பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் 40-54 வயதுக்கு இடைப்பட்டவர்கள். இதில் அதிகப்படியானோர் குறைந்த வருமானம் உடையவர்களாகவும், வேலையில்லாதவர்களாகவும் இருக்கின்றனர் என்பதும் அந்நாட்டைச் சேர்ந்த சமத்துவ மற்றும் நீதி கண்காணிப்பு என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மனநிலை பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீதம் பேருக்கு ஒழுங்கான சிகிச்சை கிடைக்கவில்லை. குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு முற்றிலும் சிகிச்சையே அளிக்கப்படவில்லை. இதற்கு, மனநிலை சிகிச்சைக்கு ஆகும் மருத்துவச் செலவு அதிகமாக இருப்பதும், மனநிலை மருத்துவ சிகிச்சை மையங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதுவுமே காரணம்.

மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில் சீனாவில் மனநோய்க்கு சிகிச்சை அளிக்க 20-ல் ஒருபங்கே செலவாகிறது. இருப்பினும் இந்த அளவுத் தொகையைக்கூட பெரும்பாலான குடும்பங்களால் செலவழிக்க முடியவில்லை.

சீனாவில் மனநிலை பாதிப்பு பெரிய சமூகப் பிரச்னையாக உருவெடுத்தாலும் அதற்கு தீர்வுகாண அந்நாட்டு அரசு முனைப்பு காட்டுவதாய் தெரியவில்லை. அந்நாட்டின் பட்ஜெட்டில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்த அளவு நிதியையே மனநிலை பாதிப்போரின் சிகிச்சைக்காக ஒதுக்குகிறது. இந்த நிதியும் முறையாக செலவிடப்படுவதில்லை.

சில பணக்காரக் குடும்பங்களை சேர்ந்தவர்கள்கூட மனநிலை பாதிக்கப்பட்டால் அவர்கள் குடும்பத்தால் புறக்கணிக்கப்படுகின்றனர். வீட்டில் தனியறையில் போட்டு பூட்டிவிடுகின்றனர். மனநிலை பாதித்தவர்கள் மீது சமுதாயத்தில் பிரச்னையை ஏற்படுத்துவர்கள் என்ற முத்திரையைக் குத்தி தனிமைப்படுத்தி விடுகின்றனர். அரசுக்கும் இதில் அக்கறை இல்லை. இதனால் சீனாவில் மனநிலை பாதித்தவர்கள் பரிதாபமான நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

நன்றி: தினமணி

கருத்துகள் இல்லை:

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...