திங்கள், 18 அக்டோபர், 2010

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் நாத்திகரா?

ருபதாம் நூற்றாண்டின் மாபெரும் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன். அவரின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் உலகையே பிரம்மிக்கவைத்து விட்டது. விஞ்ஞான உலகில் புகழ் பெற்று விளங்கிய நியூட்டனின் கண்டு பிடிப்புகளைக் கேள்விக்கு உட்படுத்தி, அதைத் தவறு என நிரூபித்துக் காட்டிய மேதை. அவருடைய வாழ்க்கை வரலாறு, அவருடைய கண்டுபிடிப்புகள் என்பவையெல்லாம் ஒரு வியக்கவைக்கும், பிரம்மிக்க வைக்கும் பகுதிகள். அப்படிப்பட்ட ஓர் அறிவியல் மேதை கடவுள் கோட்பாட்டில் என்ன நிலை எடுத்தார் என்பதை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

இவருடைய வரலாறு பற்றி எழுதியவர்கள் பலர் உண்டு. அப்படி எழுதியவர்களில் கடவுள் நம்பிக்கையாளராக இருந்தால், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மத நம்பிக்கையாளர், கடவுள் நம்பிக்கையாளர் என்று எழுதி விடுவதும், மேலும் சில கடவுள் நம்பிக்கையாளர்கள் அவரை கடவுள் நிந்தனையாளர், மத எதிர்ப்பாளர் என்று தூற்றியும் உள்ளனர். அதேபோது கடவுள் மறுப்பாளர்கள் அவரை அப்பட்டமான நாத்திகர் என்றோ, மத எதிரி என்றோ சொல்லுவதில்லை. மேலும் சிலரிடம் அவர் பற்றி மேலும் பல குழப்பங்களும் உண்டு.

சிறந்த எழுத்தாளர் - அண்மையில் காலமாகி விட்ட சுஜாதா, ஐன்ஸ்டைன் பற்றி கூறுகிற போது, ‘மனித சரித்திரத்தில் அறிஞர்கள் பெரும்பாலா னோருக்கு கடவுள் நம்பிக்கை இருந்திருக்கிறது. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கடவுள் சொக்கட்டான் ஆடுவதில்லை என்ற போது, கடவுள் ஒருவர் இருப்பதாகத்தான் எண்ணினார், ஆனால் அவரது கடவுள் பிரபஞ்சத்தைப் படைத்ததாகச் சொல்லப்படும் நவசக்திப் பிள்ளையாரோ, முப்பாத்தம்மனோ, அஹுராமாஸ்தாவோ, பரமபிதாவோ, அல்லாவோ இல்லை’ என்று சுஜாதாவுக்கே உரிய பாணியில் எழுதியுள்ளார்.

மேலும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பிரபஞ்சம் முழுவதும் பரவியுள்ள உருவமற்ற கடவுள்- இருப்பதாக ஏற்றுக் கொண்டவர் என்றும் சுஜாதா முடிவுக்கு வருகிறார். கடவுளைப் பற்றிய சுஜாதாவின் சொந்த கருத்து என்ன? அவர் பல கட்டங்களில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து ‘கடவுள்’ என்ற தலைப் பில் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளார். அந்தப் புத்தகம் பூராவும் பல்வேறு காரண, காரியங்களை விஞ்ஞான அடிப்படையில், புராண நூலின் அடிப்படையில், திறமையாக விவாதம் செய்து ஏதோ ஒரு சக்தி, விளக்க முடியாத ஒரு சக்தி, விஞ்ஞானமும் கண்டு பிடிக்க முடியாது திணறும் அளவுக்கு ஒரு சக்தி இருப்பதாகத்தான் முடிவுக்கு வருகிறார்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எந்தக் குழப்பமும் இல்லாமல் தன் கருத்தை வெளியிட்டிருக்கிறார். I do not try to imagine a personal God, it suffices to stand in awe at the structure of the world, in so far as it allows our inadequate senses to appreciate it”. “கடவுளைத் தனிநபர் போல் கருதி நான் கற்பனை செய்ய முயலவில்லை. இந்த உலகக் கட்டமைப்பை முழுமையாக அறிய முடியாத நிலையில் நமது அறிவு எந்த அளவிற்கு புரிந்து கொள்ள முடிகிறதோ அந்த அளவிற்கு வியந்து மதித்து நின்றால் அதுவே போதும்” என்கிறார்.

இதன் பொருள் மிக ஆழமானது. இந்த உலகை- இயற்கையை எவ்வளவு தூரம் புரிந்து கொள்ள முடியுமோ, அந்த அளவு இதை வியந்து போற்றலாம், மதிக்கலாம், மேலும் மேலும் நமது அறிவால் இயற்கையின் புதுமைகளைப் புரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் அந்த அளவுக்கு மேலும் பூரிப்போடு மதிக்கலாம்,. போற்றலாம், அறிவின் கண்டு பிடிப்பு எல்லை முடிந்து விடவில்லை, அப்படி எல்லையும் இல்லை என்பதாகும். நேரில் கண்டதை, புரிந்ததை தெரிந்து கொண்டதை, மதிக்கிறேன் மாயையை, அரூபத்தை, அறிவால் அறிய முடியாததை மதிப்பதில்லை, போற்றுவதில்லை என்பது இதன் பொருளாகும். இவர்தான் கடவுள், அவர்தான் கடவுள். இவர் தேவதூதர், அவர் ஆண்டவனின் அவதாரம் என்று சொல்வதையெல்லாம் ஏற்க முடியாது என்கிறார்.

புகழ் பெற்ற பிரிட்டிஷ் நாத்திகரான Douglas Adams “Is there an Artifical God? (செயற்கையாக கடவுள் ஒருவர் இருக்கிறாரா?) என்ற பொருள் பற்றி அருமையான சொற்பொழிவு ஒன்றை ஆற்றியுள்ளார். அதில் “அறிவியல் முறையில் கேள்வி கேட்கப்படாத, கேள்வி கேட்கக்கூடாத கடவுள் ஒருவர் ஏன் தேவைப்படுகிறார் என்பதைத் தெளி வாக அலசியிருக்கிறார்” என்று சுஜாதா தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். உண்மைதான். உலகில் மக்களை நம்ப வைக்க ஆத்திகர்களுக்கு செயற்கையான ஒரு கடவுளை, இல்லாத ஒரு கடவுளை, இயற்கையான கடவுள் போல் நம்ப வைக்க ஏன் அவசியம் ஏற்பட்டது என்பதையும், மேலும் கடவுள் பற்றி உருவான நம்பிக்கை களையும், வரலாற்று ரீதியாகவும் ஆடம்ஸ் விளக்குகிறார்.

ஆனால், டக்லஸ் ஆடம்ஸ் கடவுள் பற்றி கேட்டு விட்டுச் சென்ற கேள்வி இன்னமும் பலமாகவே ஒலித்துக் கொண்டிருக்கிறது. ‘‘Is it not enough to see that a garden is beautiful without having to believe that there are fairies at the bottom of it too?’’

ஒரு தோட்டத்தைப் பார்க்கிற போது அந்தத் தோட்டத்தின் கீழ் ஒரு அமானுஷ்ய உயிர்கள், தேவதைகள் உள்ளதாக நம்பாமல், அந்தத் தோட்டத்தின் அழகை மட்டும் பார்ப்பது போதாதா என்று டக்லஸ் ஆடம்ஸ் கேட்கிறார். தோட்டத்தை ரசிக்கலாம், வர்ணிக்கலாம், அதற்கு மேல் எல்லாம் வல்ல ஒரு அபூர்வ சக்தி ஒன்று இயங்குகிறது என்று எண்ண வேண்டுமா? என்கிறார்.

மேலும் சுஜாதா ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பற்றி பேசுகிற போது அவர் Cosmic Religious Feeling உள்ளவர் என்கிறார். பொதுவாக Cosmic என்பது பிரபஞ்சத்தின் ஒழுங்கான, முறையான, சீரான இயக்கம் பற்றி சொல்லுவது. அதன் ஒழுங்கு மீறாதா, விதி மீறாத இயல்பினைப்பற்றி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எண்ணி வியந்து மெய் மறந்து விடுகிறார். இப்படி ஒருவித அமைதியான உணர்வுக்கு ஆளாகிறார், இதைத்தான் Cosmic Religious Feeling என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் சொல்கிறார் என்கிறார். இதுபற்றி நாம் விளக்க மாகப் பார்க்க வேண்டும்.

மதம் பற்றி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் என்ன சொல்லுகிறார்?

நாம் இயற்கையின் பயன்களை அனுபவிக்கிறோம். புதிய புதிய உண்மைகளைக் கண்டறிந்து, பூரிப்படைகிறோம். ஆனால் நம்மால், மனத்தால் இன்னமும் புரிந்து கொள்ள இயலாத ஏதோ ஒன்று இருக்கிறது. அதனுடைய அழகும், மேன்மையும், மறைமுகமாக மங்கலாக பிரதிபலிக்கிறது. இந்த உணர்வுதான் மதத்தன்மை கொண்டது. இந்தப் பொருளில் நான் மதம் சார்ந்தவன் - என்று கூறுகிறார். இதைத்தான் Cosmic Religious Feeling என்றும் சொல்லுகிறார். இந்தக் கூற்று இப்போது உள்ள எந்த மதத்தையும் சார்ந்தது அல்ல, எந்த மதத்தையும் அவர் சார்ந்தவர் அல்லர்.

கடவுளை தனியர் போல் (Personal God) கருதி நான் கற்பனை செய்ய மாட்டேன் என்று அவர் கூறியதற்கு கடுமையான எதிர்ப்பு வந்து, உங்கள் மதம்தான் என்ன என்று கேட்டபோது அதற்குத் தந்த பதில் இது : “கடவுள் அன்றாடம் குறுக்கிடுகிறார், தலையிடுகிறார், அற்புதங்களைச் செய்கிறார், தப்பு செய்கிறவர்களை தண்டிக்கிறார், தன்னை வணங்கு கிறவர்களை ரட்சிக்கிறார்” என்றெல்லாம் சொல்லுகிற மதத்தைச் சார்ந்தவர் அல்ல அவர். அப்படிப்பட்ட கடவுளை அவர் ஏற்கவில்லை.

ஆகவேதான், அவர் கடவுள் சொக்கட்டான் ஆடுபவர் அல்லர் என்கிறார்.சொக்கட்டான் விளையாடுவது என்பது இயற்கை விதியோடு சேர்ந்தது அல்ல, அதிர்ஷ்டம் என்கிறார்களே; குருட்டுப்பயன் என்கிறார்களே, Luck என்கிறார் களே, அதைத்தான் சொக்கட்டான் ஆடுவது என்கிறார். இதில் ஒருவர் திறமையாக விளை யாடலாம், ஆனால் அவரையும் தோற்கடிக்க இன்னொருவர் வருவார். ஆனால் இயற்கை விதி என்பது அப்படி அல்ல, முறைப்படி ஒழுங்குரீதியாக நடப்பது, ஆகவேதான் God does not play dice என்கிறார்.

இப்படி அவர் சொன்னதற்கே மதவாதிகள் அவரைக் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். உதாரணமாக, அமெரிக்காவின் கத்தோலிக்கப் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர், டாக்டர் புல்டன் ஜே.ஷுன் என்பவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டனை கிண்டல் அடிக்கிறார். பிரபஞ்சத்தைக் கடவுளாகக் கருதும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மதத்தில் (Cosmical religion) எஸ் என்னும் எழுத்தைக் கூடுதலாகச் சேர்த்து விட்டார் என்று கேலி பேசுகிறார். அதாவது Cosmical religion என்று இருக்க வேண்டும், S எழுத்தைத் தவறாகச் சேர்த்து விட்டதால் Cosmic Religion என்று வந்து விட்டதாம்.

ஓக்லஹொமாவில் உள்ள கல்வாரி ஆலயச் சங்கத்தை நிறுவிய ஓர் அமெரிக்கர் எழுதிய கண்டனக் கடிதம் : “பேராசிரியர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அவர்களே, அமெரிக்க நாட்டில் உள்ள ஒவ்வொரு கிறித்துவனும், எங்களுடைய கடவுளிடத்திலும், அவருடைய மகன் யேசு கிறித்து விடத்திலும் எங்களுக்கு உள்ள நம்பிக்கையை விட்டுவிட மாட்டோம். இந்நாட்டு மக்களின் கடவுளிடத்தில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை யெனில், நீங்கள் எங்கிருந்து வந்தீர்களோ, அங்கேயே திரும்பிப் போகலாம் என்றுதான் உங்களுக்குச் சொல்லுவார்கள். இஸ்ரேலியருக்கு (யூதருக்கு) நல்லதாக அமையும் வகையில் என் சக்திக்குத் தகுந்த அளவு செய்திருக்கிறேன். இந்நிலையில் யூதராகிய நீங்கள் தெய்வத்தைப் பழிக்கும் ஓர் அறிக்கையை வெளியிடுகிறீர்கள். இஸ்ரேலியரை நேசிக்கும் கிறித்துவர்கள் (அவர்களுடைய) செமிடிக் இனத்திற்கு எதிரான உணர்வை எங்கள் நிலத்திலிருந்து துடைத்து எறியப் பல முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அந்த முயற்சிகளையெல்லாம் மிஞ்சும் வகையில் உங்களுடைய மக்களுக்கு (இஸ்ரேலியர்களுக்கு) ஊறு செய்யும் வகையில் நீங்கள் வெளியிட்டுள்ள அறிக்கை இருக்கிறது.”

பேராசிரியர் ஆல்பர்ட் ஐன்ஸ்டன் அவர்களே, அமெரிக்க நாட்டின் ஒவ்வொரு கிறித்தவ னும், உங்களுக்கு உடனடியாகச் சொல்லும் மறுமொழி உங்களுடைய கிறுக்குத்தனமான, பொய்யான(உயிர்களின்) படிநிலை வளர்ச்சிக் கோட்பாட்டை (பரிணாமக்கொள்கையை-Theory of evolution) உங்களுடன் எடுத்துக் கொண்டு, நீங்கள் புறப்பட்டு வந்த ஜெர்மனிக்கே திரும்புங்கள், அல்லது சொந்த நாட்டிலிருந்து விரட்டப்பட்டது போல உங்களுக்கு வரவேற்பு நல்கிய மக்களின் நம்பிக்கையை குலைக்கும் முயற்சியை நிறுத்துங் கள் என்பதாகும். கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின.

நியூஜெர்சியைச் சேர்ந்த வரலாற்றுக்கழகம் ஒன்றின் தலைவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டனுக்கு ஒரு கடிதம் எழுதினார் : “டாக்டர் ஆல்பர்ட் ஐன்ஸ்டன் அவர்களே, உங்களுடைய மேதமையை நாங்கள் மதிக்கி றோம். ஆனால் ஒரு விஷயத்தை நீங்கள் கற்றதாகத் தெரியவில்லை. கடவுள் ஓர் ஆவி(Sprit) மூளையைப் பகுப்பாய்வதன் மூலம் எவ்வாறு எண்ணத்தையும், மனக்கிளர்ச்சியையும் அறிய முடியாதோ, அவ்வாறே தொலைநோக்கியைக் கொண்டோ, நுண்பெருக்காடியைக் கொண்டோ கடவுளைக் காண முடியாது. மதம் நம்பிக்கையின் மீது அமைந்தது என்றும், அறிவின் மீது அல்ல என்றும் ஒவ்வொருவரும் அறிவர். சிந்திக்கக்கூடிய ஒவ்வொருவரும் சில நேரங்களில் மதத்தைப் பற்றிய அய்யங்களுக்கு ஆளாகிறார்கள். என்னு டைய நம்பிக்கை பல நேரங்களில் தடுமாற்றத் துக்குள்ளாகி இருக்கிறது. ஆனால் என்னுடைய மதம் சார்ந்த (அ) ஆவிகள் நம்பும் வழுவல்களே இரண்டு காரணங்களுக்காக வெளிப்படுத்துவது இல்லை. 1. மத நம்பிக்கையில் எனக்கு அய்யம் ஏற்பட்டிருக்கிறது என்பதைச் சிறிது வெளிப் படுத்தினாலும் அதனால் நான் சார்ந்த மக்களில் சிலருடைய வாழ்வும், நம்பிக்கையும் குலைந்து பாழ்படும். 2. மற்றவருடைய நம்பிக்கையை அழிப்பவர் எவராயினும் அவரிடம் இழிதன்மை இழையோடும்” என ஓர் எழுத்தாளர் சொல்லி யிருப்பதற்கு நான் உடன்படுகிறேன்.

“டாக்டர் ஆல்பர்ட் ஐன்ஸ்டன் அவர்களே, உங்களுடைய கருத்தைத் தவறாக வெளியிட் டுள்ளனர் எனக் கருதுகிறேன். உங்களுக்குப் பெருமை சேர்க்க விரும்பும் அமெரிக்க மக்கள் மகிழும்படியாக இனியேனும் எதையேனும் நீங்கள் சொல்வீர்கள் என நம்புகிறேன்” என முடிக்கிறார். (எடுத்தாளப்பட்ட நூல் : கடவுள் ஒரு பொய் நம்பிக்கை(The God Delution - Richard Dahkins) தமிழாக்கம் பெரியார் பேருரையாளர் கு.வெ.கி. ஆசான், திராவிடர்க் கழக வெளியீடு).

இன்னும் இதுபோன்ற ஏராளமாக ஆல்பர்ட் ஐன்ஸ்டனைத் தூற்றியும், கண்டித்தும் எழுதப்பட்டன. ‘ஆல்பர்ட் ஐன்ஸ்டன் தான் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசுகிறார். அவர் ஒரு துறையில் மேதாவியாக இருக்கலாம். அதனால் எல்லா துறைகள் பற்றியும் கருத்துத் தெரிவிக்கலாம் என்று எண்ணுவது அறியாமையில் பேசுவது’ என்றெல்லாம் கூட தூற்றியுள்ளார்கள். மேலே எடுத்துக்காட்டப்பட்ட தூற்றுதல் களுக்கு கீழ்க்கண்ட வகையிலும் பதில் கூறலாம்:

“என் தாயை நான் மதிக்கிறேன், தாய்மை புனிதமானது, போற்றத்தக்கது. என்னைத் தன்னுயிராய் எண்ணி பாலூட்டி சீராட்டி வளர்த்த என் தாய்தான் எனக்குக் கடவுள் மற்றவற்றை நான் தெய்வமாக ஏற்க மாட்டேன்” என்று சொன்னால், அதில் என்ன தவறு இருக்கிறது? அவர் இறைவனுக்கு எதிரி, மதத்துக்குத் துரோகி என ஏசுவது எங்கனம் பொருந்தும்? ஏசுநாதரை ஏசுவதாக ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்?

அவர் இயற்கையின் மகிமையில் மயங்கிப் போனார், இந்தப் பிரபஞ்சத்தில் அடங்கி உள்ள அத்தனைக்கும் உள்ள தொடர்பை, உறவைக் கண்டு களிப்புற்றார். அனைத்துமே ஒரு ஒழுங்கில், ஒரு பொதுவான விதிக்கு உட்பட்டு இயங்குவதைக் கண்டார். இயற்கையில் மறைந்து கிடக்கும், ஒளிந்து கிடக்கும் இரகசியங்கள் நிறையவே உண்டு என்றும் பிரமித்துப் போனார். அப்படிப்பட்ட வியக்கத்தக்க இயற்கையை - அதன் சக்தியை மதித்தார். போற்றினார். அதுதான் என் மதம் என்றார், அதுதான் என் தெய்வம் என்றார். மற்றவையெல்லாம் மதங்கள் அல்ல, தெய்வங்கள் அல்ல என்றார். ஆகவே அவர் கடவுள் மறுப்பாளர். மத எதிர்ப்பாளர் எனத் தூற்றுப்பட்டார்.

அவரின் புகழ்பெற்ற வாசகம் “கடவுள் சொக்கட்டான் விளையாடவில்லை” என்ற வாசகத்துக்கு முன்னால் இரண்டு வரிகள் உண்டு. அதுவும் அர்த்தமுள்ள வாசகங்கள்தான்.


“கடவுள் நுட்பமாக செயல்பட்டு வருகிறார் என்று சொல்கிறார். கடவுளை ஒரு நபராக ஆக்கி, அதாவது சூப்பர் நபராக ஆக்கி அந்தக் கடவுள் நுட்பமாகச் செயல்படுகிறார் என்று சொல்ல வில்லை.” இயற்கையின் நுட்பமான விளையாட்டு களை, அதன் விளைவுகளை, அந்த எல்லையற்ற பரந்து விரிந்த பிரபஞ்சங்களின் நாட்டியங்களைத் தான் கடவுள் நுட்பமாக செயல்படுகிறார் என்கிறார். இயற்கையின் விதிகளை வேறு பெயரில் அதாவது ஆங்கிலத்தில் Synonym என்பார்களே அப்படிச் சுட்டுகிறார்.

அவர் மேலும் ஒரு வரி சேர்க்கிறார். அவர் சொல்லும் ‘கடவுள் கெட்ட எண்ணம் உடையவர் அல்ல’- என்கிறார். மனிதர் நடத்தும் யுத்தம் மட்டும்தான் கொடுமையான செயலா? மனித வரலாற்றில் மதச்சண்டைகள், மதங்களின் பேரால் நடந்த போர்கள், ராணுவம் நடத்திய போர்களை விட அதிகமாகவே மக்களைப் பலி வாங்கியுள்ளன. மதத்தின் பேரால் எவ்வளவு மோசடிகள், ஏமாற்றுவேலைகள், பொய்மைகள், அடிமைத் தனங்கள். இவைகளையெல்லாம் எண்ணித்தான் அவர் கடவுள் கெட்ட எண்ணம் கொண்டவரல்ல என்கிறார்.

இப்படி அவர் சொன்ன மூன்று வரிகளையும் இணைத்தால், ‘கடவுள் நுட்பமாகச் செயல்படுகிறவர் ஆனால் கெட்ட எண்ணம் உடையவர் அல்லர். கடவுள் சொக்கட்டான் விளையாடுவதில்லை’ என்று இணைத்துப் பேசினார்.

பிரபஞ்சத்தைப் படைத்ததில் கடவுளுக்கு மாற்று ஏதேனும் இருந்ததா? என்று ஐன்ஸ்டைன் ஒரு வினா தொடுத்தார். இதற்கு என்ன பொருள் கொள்வது? இதுபற்றி நாத்திகர் ரிச்சர் டாகின்ஸ் சொல்வது : பிரபஞ்சம் வேறு ஏதேனும் வழியில் தொடங்கியிருக்க முடியுமா?- என்பதைத்தான் ஐன்ஸ்டைன் கேள்வியாகப் பிரதிபலித்தார் என்கிறார். இந்தக் கூற்று சரியானதுதான். நாத்திகர் டாகின்ஸ் ஐன்ஸ்டைனை விமர்சன ரீதியில் பார்ப்பவர்தான். இருப்பினும் ஐன்ஸ்டைனின் உட்பொருளை நன்றாகவே குறிப்பிட்டுள்ளார்.

சிலரை ஓர் இயற்கை இறைக்கோட்பாட் டாளர் என்று கணிக்கலாம். “இயற்கையே இறை” என்போரின் (Pantheists) கடவுள், பேரண்டத்தின் விதிகளைக் குறிக்கும் உருவக அல்லது கவித்துவ மறுசொல். இயற்கை இறைக்கோட்பாடு (Pantheism) பாலியல் உள்ள (Sexed up) நாத்திகம். தெய்வ நம்பிக்கை Deism) என்பது நீர்த்துப் போன (Theists) ஆத்திகம் என்று நாத்திகர் ரிச்சர்ட் டாக்கின்ஸ் துல்லியமாக விளக்கினார்.

தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள் இயற் கைக்கு மேல் ஒரு பெரும் சக்தி இயற்கையை இயக்கிக் கொண்டிருக்கிறது என்றும், எல்லாம் அதற்குள் அடங்கியதுதான் என்றும் பறைகிறார்கள். அப்படியானால் இயற்கை இறைக் கோட் பாட்டாளர்கள் மரத்தின் முன்னால் மண்டியிட மாட்டார்கள். மழையைக் கண்டு பக்தி மழை பொழிய மாட்டார்கள், நெருப்பைக் கண்டு அதை ஆண்டவனுக்கு சமமாக மனநெகிழ்வு கொள்ள மாட்டார்கள். ஐன்ஸ்டைன் அந்த வகையில் ஒரு நாத்திகர்.

அதனால்தான் அவர் சொல்லும் இறை விளக்கம், மதவிளக்கம் எல்லா மதங்களுக்கும் நேர்மாறாக கடவுள்களுக்கும் இருக்கிறது. ஆம், நேர்மாறானதுதான். ஆகவேதான், அவர் இந்த விஷயத்தில் ஏராளமான பகையைச் சம்பாதித்துக் கொண்டார். யூதர்களின் மதகுரு ராபி என்பவரிடம் (நியூயார்க்) ஐன்ஸ்டைன் பற்றி கேட்டபோது, ‘அவர் ஒரு பெரிய விஞ்ஞானிதான், ஆனால் அவருடைய மதக்கொள்கை யூதர்களின் மதத்திற்கு (Judism) எதிர்மாறானது’. கிறித்துவ குருமார்களும் இப்படித்தான் வர்ணிக்கிறார்கள். அமெரிக்க கத்தோலிக்க வழக்குரைஞர் இவரைப்பற்றி என்ன கடிதம் எழுதினார் என்று பார்க்க வேண்டும்.

‘கடவுள் ஒரு தனி நபர் என்று சொல்லி கிண்டல் செய்து நீங்கள் விட்ட அறிக்கை எங்கள் மனதை வருத்துகிறது. ஜெர்மனியிலிருந்து யூதர் களை வெளியேற்ற இட்லருக்கு ஏதேனும் ஒரு காரணம் இருக்கும் என்று மக்கள் நினைக்குமாறு செய்ய கடந்த பத்தாண்டுகளில் உங்களுடைய அறிக்கையைத் தவிர வேறு எதுவும் இல்லை. உங்களுக்குப் பேச்சுரிமை இருக்கிறது என்பதை ஏற்கிறேன், அதேநேரத்தில் அமெரிக்காவில் மிகப் பெரிய அளவில் மனமுரண்பாடு ஏற்படுவதற்கு உங்களுடைய அறிக்கை ஆதாரமாக விளங்குகிறது எனவும் சொல்லுவேன்’ என்றார். இந்தக் கத்தோலிக்க வழக்கறிஞரின் கடிதம் இட்லரை நியாயப்படுத்தும் அளவிற்குப் போகிறது.

சில விஞ்ஞானிகள் கடவுளிடம் மன்னிப்பு கேட்பார்கள், காரியம் கைகூட வேண்டும் என்று பிரார்த்திப்பார்கள், காரியம் கைகூடி விட்டால் நேர்த்திக்கடன் செய்வார்கள், சில விஞ்ஞானிகள் ஏவுகணை பரிசோதனை செய்வதற்கு முன்பாக ஆண்டவனிடம் கற்பூரம் ஏற்றி பூஜை போட்டு வேண்டிக் கொண்டபிறகுதான் ‘பட்டன்’ அழுத்துவார்கள்.

தலைசிறந்த டாக்டர்கள்கூட ஒரு நோயாளி யின் வயிற்றை, நெஞ்சை அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பாகக் கைகூப்பி ஆண்டவனை வணங்கி விட்டுத்தான் கத்தியைக் கையில் எடுப்பார்கள். இவர்களும் படித்தவர்கள்தான், அறிஞர்கள்தான், விஞ்ஞானிகள்தான், இவர்களை எந்த ரகத்தில் சேர்ப்பது? இவர்களை இறைப்பற்றாளர்கள் (Theists) என்று கூறலாம். ஆனால் ஐன்ஸ்டைன் ஏற்கனவே குறிப்பிட்டது போல அவர் சொல்லும் கடவுள் இந்தப் பிரபஞ்சத்தின் விதிமுறைகளை உருவகப்படுத்தச் சொல்லும் ஒரு வியப்பு, ஒரு பிரமிப்பு, ஒரு கவித்துவக் குறிப்பு.(Poetical reference)

ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுடைய மற்றொரு கூற்றும் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது. அதாவது, ‘மதமற்ற அறிவியல்’ நொண்டியானது, அறிவியலற்ற மதம் குருடானது’ என்று சொன்ன கூற்றை இன்னமும் ஆத்திகவாதிகள் விமர்சிக் கிறார்கள், குழப்பமான கூற்று என்கிறார்கள். ஆண்டவனைக் கண்டவர்கள் சொன்ன தில்லை; சொன்னவர்கள் கண்டதில்லை; என்று ஆத்திகர்கள் சொல்லும் கூற்றை விட இது குழப்பமானது அல்ல.

ஐன்ஸ்டைன் சொல்லும் மதம் வேறானது. இயற்கைக்கு அப்பால் ஒரு சக்தி- பிரபஞ்சத்திற்கு அப்பால் ஒரு சக்தி இருந்து கொண்டு இயற்கையை, அந்தப் பிரபஞ்சத்தை இயக்குகிறது என்று சொல்லும் மதம் அல்ல ஐன்ஸ்டைன் குறிப்பிடுவது. அதுபற்றி அவரே சொல்லி இருப்பது : ‘மதத்தைப் பற்றி நான் சொன்ன கருத்தாக மற்றவர்கள் படிப்பது பொய்யானது, மறுபடியும் மறுபடியும் அதையே கட்டுப்பாடாக சொல்லுகிறார்கள். தனி நபராக கடவுளைக் கருதுகிற போக்கில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் மதத்தைப் பற்றி சொன்ன என் கருத்தை நான் என்றும் மறுத்ததில்லை. அதற்கு மாறாக மேலும் தெளிவாக சொல்லியுள்ளேன். நம்முடைய விஞ்ஞானம் நமக்கு வெளிப்படுத்தும் அளவிற்கு பிரபஞ்சத்தின் கட்டமைப்பை அளவு கடந்த முறையில் நான் அதிசயத்து போற்றுகிறேன். எனக்குள் இருக்கும் எதையேனும் மதம் சார்ந்தது எனச் சொல்ல வேண்டுமானால் அது இதுதான். அவரின் இந்தக் கூற்று தனிச்சிறப்பானது. இயற்கைக்கு அப்பால் ஒரு சக்தி உண்டு என்று கூறி அதை நம்புவது பொய்யானது. ஐன்ஸ்டைன் கூறும் ‘மதம்’ இயற்கையின் வினைகளை, செயல்படும் விதிகளை வியந்து பாராட்டும் ஒரு உணர்வைக் கூறுகிறார். அவர் அதுதான் என் மதம் என்கிறார்.

ஆழமான மதம் சார்ந்த கடவுள் நம்பிக்கை எனக்கு இல்லை , நான் சொல்லும் மதம் அது ஒரு வகையான புதிய மதம் என்கிறார். இயற்கைக்கு ஒரு குறிக்கோள் இல்லை, ஓர் இலக்கு இல்லை. அப்படி ஏதேனும் ஒரு குறிக்கோளோ, இலக்கோ இயற்கைக்கு இருக் குமா? என அறிய மானுடக்கூறுகளை வைத்து சாதிக்க முடியும் என்றும் நான் சொல்லவில்லை. இயற்கையிடம் நான் ஓர் அறிய கட்டமைப்பைக் காணுகின்றேன். அதை மிகவும் குறைந்த அளவில் நம்மால் அறிய முடியும். அந்த அறிதல் சிந்திக்கக்கூடிய ஒவ்வொரு நபரின் உள்ளத்திலும், பணிவிற்கு உரிய ஓர் உணர்வை உருவாக்குகிறது. இது ஓர் உண்மையான மத உணர்வாகும். (Cosmic religious feelings) இதற்கும் மற்ற மதவாதிகள் கூறும் மர்மமான, புரியமுடியாத, விளக்கமில்லாத ஆழ்மன அறிதலுக்கும் (cosmic relligious feelings) எந்தவித உறவுமில்லை - என்கிறார்.

இப்போது புரியும் அவர் சொன்ன கூற்றான ‘மதமற்ற அறிவியல் நொண்டியானது, அறிவிய லற்ற மதம் குருடானது’ என்பது. ஒரு மதம் என்றால் அது கற்பனைக் கோட்டையில் இயங்கக்கூடாது, அறிவு பூர்வமான அடிப்படையை ஆதாரமாகக் கொண்டதாக இருக்கவேண்டும். அதேபோல அறிவியல் என்பது கூட அறிவார்ந்த மதத்தைச் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று ஐன்ஸ்டைன் கூறுகிறார்.

Religion connected with cosmic intelligence and science connected with intelligent religion. இந்த இடத்தில்தான் சுஜாதா அவர்கள் கட்டுரையில் சற்று விலகிப் போகிறார். ஐன்ஸ்டைன், பாலி, ஹைசன்பாக், ஷ்ரோடிங், எடிங்டன், ஜீன்ஸ் போன் றோர் - இப்படிப்பட்ட பெரும் சிந்தனையாளர்கள் விளக்க முடியாத ஒருவித உணர்வில் (Mystical knowledge) மூழ்குகிறார்கள், ஒருவித வினோதமான அமைதி பெறுகிறார்கள் என்கிறார்.

ஐன்ஸ்டைன் சொல்வது, விளக்கமுடியாத உணர்வல்ல, ஒரு விநோதமான அமைதி அல்ல, அவர் சொல்வது : இயற்கையிடம் நான் ஒரு அதிசய கட்டமைப்பைக் காணுகிறேன். அதை மிகவும் குறைந்த அளவில் புரிந்து கொள்ள முடியும். அந்தப் புரிதல் சிந்திக்கக்கூடிய ஒவ்வொரு நபரின் உள்ளத்திலும் பணிவிற்குரிய ஒரு உணர்வை உண்டாக்குகிறது.இது ஒரு உண்மையான மத உணர்வாகும். இதற்கும் மதவாதிகள் கூறும் மர்மமான ஆழ்மனப் புரிதலுக்கும் சம்பந்தமில்லை என்கிறார்.

ஆகவே ஐன்ஸ்டைன் கூற்றை, ரிக்வேத, நம்மாழ்வார் வேத கூற்றுக்களோடு ஒப்பிட்டு தரிசனம் காட்ட வேண்டும் என்ற பதைப்பில், பதட்டத்தில் சுஜாதா சற்று விலகிப் போகிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், தன் பேச்சில் எழுத்தில் கடவுள் என்ற வார்த்தையை அடிக்கடி ஏன் குறிப்பிட வேண்டும், அவருக்கு கடவுள் நம்பிக்கை இருப்பதனால்தான் கடவுள் பெயரை உச்சரிக் கிறார் என்றுகூடக் கேட்கிறார்கள். ஐன்ஸ்டைன் என்ன, பல மேதைகள் இப்படி அடிக்கடி குறிப் பிடுவது உண்டு. O My God, God forgive him, God only knows” என சொல்லுவார்கள். இது பேச்சு வழக்கில் உள்ள ஒரு வார்த்தை. சில நேரங்களில் இதற்கு அர்த்தமே இருக்காது.

இயக்கஇயல் பொருண்மைவாதி கார்ல் மார்க்ஸ் கூட தன் நூல்களில் சில இடங்களில் God என்னும் வார்த்தையைப் பயன்படுத்தி இருக் கிறார். பேச்சு வாக்கில் அட கடவுளே, அட ராமா என்று சில உணர்வுகளை வெளியிட அப்படிக் கூறுவது உண்டு, அதற்கு மேல் அதற்கு வேறு ஏதும் அர்த்தம் கிடையாது.

கேரளாவில் இ.எம்.எஸ் முதலமைச்சராக இருந்தபோது, பத்திரிகையாளர்கள் ஏதோ ஒன்றைக் கேட்க, அதற்கு அவர் சட்டென God only knows வை என்று சொல்லி விட்டார். உடனே பத்திரிகையாளர்கள் அவரை மடக்கி விட்டார்கள். அப்படியானால் உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா? எனக் கேட்டு விட்டார்கள். அவர் சிரித்துக் கொண்டே, God means Nobody, So Nobody knows வை என்ற அர்த்தத்தில் சொன்னேன் என்றார். எல்லோரும் நகைத்தவாறே போய் விட்டார்கள் . இவையெல்லாம் அவ்வளவு ஒரு சீரியஸ் விஷய மல்ல. பேச்சுவழக்கில், பழக்கத்தின் அடிப்படை யில் வருகிற நேர் அர்த்தம் தொனிக்காத சொற்கள்.

உதாரணமாக, ஐன்ஸ்டைனிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது : உங்கள் கொள்கை வெற்றி அடைகிறபோது சரி, தோற்றுவிட்டால், உங்கள் கொள்கை தவறு என்று நிரூபிக்கப்பட்டு விட்டால்...?

இதற்கு ஐன்ஸ்டைன் சொல்லும் பதில், ‘அது பற்றி கடவுள் அல்லவா வருந்த வேண்டும்’ என்றார். இதற்கும் கடவுளுக்கும் சம்பந்தமில்லை, கடவுள் ஒருவர் எங்கோ மறைந்திருந்து பார்ப்பவரும் அல்லர், அப்படி ஒருவர் இல்லை என்பது அவர் கொள்கை! அவர்தான் அப்படிப் பட்ட கடவுள் அல்லவா வருந்த வேண்டும், என்னைப் பொறுத்தவரை நான் தெளிவாகத்தான் இருக்கிறேன் என்றார். இப்படிப் பேச்சு வழக்கத் தில் வருகிற சொல்லான கடவுள் என்பதைப் பயன்படுத்தினால், இதை ஆத்திகர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதில் எந்தப் பயனும் இல்லை.

ஸ்பினோசா என்னும் தத்துவ மேதை, யூத மதத்தைச் சேர்ந்தவர். ஆனால் இவர் சுயமாக சிந்தித்து பிரபஞ்சம், ஆண்டவன் பற்றியெல்லாம் புதிய கருத்து சொன்னபோது, இவர் யூத மதத்திலிருந்து நீக்கப்பட்டார். இது நடந்த ஆண்டு 1656. அப்படி என்ன சுயமாகச் சிந்தித்தார்?

தேவதைகள் என்று உண்மையில் கிடையாது, அவை வெறும் மனத் தோற்றமே என வெடி போட்டார். ஆத்மா என்பது உயிர்தான். ஆத்மாவுக்கு அழிவு இல்லை என்பதை அவர் ஏற்கவில்லை.

பிரபஞ்சம் அனைத்திலும் பொருள்தான் அடித்தளத்தின் உண்மை என்றும் பேசினார். இவரின் பிரபஞ்சம் விரவிய கடவுள் தத்துவம் ஐன்ஸ்டைனால் அங்கீகரிக்கப்பட்டது. மக்களின் விதிகளைப் பற்றியும், மக்களின் செயல்களில் கவனம் செலுத்தும் ஒரு கடவுளைப் பற்றியும் நான் நம்பவில்லை. இயற்கையில் என்ன இருக்கிறதோ, அதன் ஒழுங்கமைவில், ஒத்திசைவில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் ஸ்பினோசாவின் கடவுளை நான் நம்புகிறேன் என்றார்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஒரு தலைசிறந்த மனிதாபிமானி. இது பற்றிய அவரின் கருத்து.

‘இந்தப் பூவுலகில் நம் சூழல் நூதனமானது. நாம் ஒவ்வொருவரும் ஒரு குறுகிய காலம்தான் வாழ வருகிறோம். எதற்காக வாழ வருகிறோம் என்பது தெரியாது. இருப்பினும் சில நேரங்களில் அவற்றுக்கான அவசியமும் உணர முடிகிறது. ஆனால் அன்றாட வாழ்வு பற்றி நினைக்கின்ற போது ஒன்றை நன்றாக அறிந்து கொள்கிறோம்; ஒரு மனிதர் மற்ற மனிதர்களுக்காக வாழ்கிறார். குறிப்பாக யாருடைய நல்வாழ்வும், புன்னகையும் நம்முடைய மகிழ்ச்சியைச் சார்ந்திருக்கிறதோ, அவர்களுக்காக நாம் வாழ்கிறோம்’ என்பது ஐன்ஸ்டைனின் கருத்து.

மனித வாழ்வின் ரகசியம் பிற மக்களின் இன்ப வாழ்விற்காகத்தான் என்பது ஓர் உயர்ந்தபட்ச சமூக நோக்கு. 20ம் நூற்றாண்டின் உயர்ந்த பீடத்தைப் பெற்ற விஞ்ஞானி ஓர் உயர்ந்தபட்ச மனிதாபிமானியாய் வாழ்ந்துள்ளார்.

பெரிய சோதனைக்கூடம், பெரிய டெலஸ்கோப், சோதனைக்குழாய்கள், ஜாடிகள் என்று எதுவுமே இல்லாது வெறும் வெள்ளைத்தாள், பேனாவோடு கணக்கின் மூலமே பெரிய பெரிய விஞ்ஞான உண்மைகளை, அதிசயங்களை வெளிக்கொணர்ந்தார். அவர் சொன்னது உண்மைதானா என்று சோதிக்க பல விஞ்ஞானிகள் ஒன்று கூடி பல விஞ்ஞான சாதனங்களை வைத்துக் கொண்டு பல நாட்கள் மூளையை கசக்கிக் கொள்வார்கள்; பிறகு ஆம் உண்மைதான் என பெருமூச்சு விடுவார்கள்.

இருநூறு ஆண்டுகளாகக் கொடி கட்டிப் பறந்த விஞ்ஞானி நியூட்டனின் கூற்றுகள் சிலவற்றை தவறு என நிரூபித்துக் காட்டிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் இயற்கை இறையியல் கொள்கையர் என்பதை நாம் அறிவோம். இயற்கைக்கு மேற்பட்ட ஒரு சூப்பர் நேச்சுரல் சக்தி இல்லை என்பதில் உறுதியாக நின்றவர். இதில் நியூட்டன் நேர்மாறான கொள்கைக் கொண்டவர். எல்லாம்வல்ல சக்தி இயக்குகிறது என்றார். ‘பிரபஞ்சம், இயற்கை ஓர் ஒழுங்கமைந்த விதியின்படி இயங்குகிறது’ என்கிற அற்புதத்தைக் காணும் ஐன்ஸ்டைன் அதை ஏன் மதம் என்கிறார்; பணிவுடன் மதிக்கிறார்.

சிலர் அன்புதான் என் மதம், அன்பே சிவம் என்பார்கள். சிலர் எல்லோரும் இன்புற்று வாழ்வதே என் மதம் என்பார்கள். சிலர் எல்லோருக்கும் சோறு கிடைக்க வேண்டும், அதுதான் சொர்க்கம் என்பார்கள். கடவுளைச் சார்ந்த மதம்தான் எல்லாம், மதத்தைச் சார்ந்த கடவுள்தான் அனைத்தும் என்று சொல்லும் கருத்துக்கு எதிராகச் சொல்லும் கொள்கைதான் அன்பே சிவம், சோறே சொர்க்கம், எல்லோரின் இன்பமே இறை என்பது. எளியமுறையில் புரிய அதைப் போன்றதுதான் ஐன்ஸ்டைன் மதம்,கடவுள் கொள்கை. அவரோடு இருந்த பழகிய கடவுள் நம்பிக்கையுடைய மற்ற விஞ்ஞானிகள் அவரை நாத்திகர் என்றுதான் குறிப்பிட்டார்கள்!

கட்டுரையாளர்: தே.இலட்சுமணன்
நன்றி: செம்மலர்

கருத்துகள் இல்லை:

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...