தமிழில் கஜல் கவிதைகள், மற்றும் ஹைக்கூ கவிதைகள் இவரால் அறிமுகம் செய்யப்பட்டவை. ”அம்மிக் கொத்த சிற்பி எதற்கு?” என திரைப்பாடல்களை மறுத்தவர். கவிக்கோ. அப்துல் ரகுமான் அவர்களை நேர்காணலுக்காக சந்தித்தோம்.
அமீர் அப்பாஸ்:- உங்களை கவிதையின் பக்கம்.. கவனம் கொள்ள செய்த காலம் எது? உங்களை கவிஞராக எப்போது முதலில் உணரத் தொடங்கினீர்கள்?
கவிக்கோ: - என்னுடைய கல்லூரி நாட்களில் என்னை மிகவும் பாதித்தவர்கள் கவிஞர் கம்பதாசன் மற்றும் உவமைக்கவிஞர் சுரதா. இன்று பல பேருக்குத் தெரியாது. ஒரு காலத்தில் திரைப்படத் துறையில் கொடி கட்டிப் பறந்தவர் கம்பதாசன்.
கணையெனக் கட்டி அணைய வாராள்
பாட்டாளி மகனென நானிருந்தால்-அவள்
பட்டினி வயிரென ஒட்ட வாராள்..!”
கழுதை இளைப்பாறிட துறையுமுண்டு
பண் இளைப்பாறிட தாளமுண்டு-எங்கள்
பசி இளைப்பாறிட உண்டோ இடம்?”
சோஷலிச கருத்துக்களையும் மார்க்சிய அழகியலையும் பாடிய கம்பதாசன் என்னை பாதித்த பெருங்கவிஞன். அவரை போலவே என் இளமைக் காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் சுரதா.
குளிந்த இரவு என்பதை ”தண்ணீர் இரவு” என்பார் சுரதா. water night- என்று ஆங்கில பெருங்கவிஞன் டென்னிசன் பாடியுள்ளார். ஆங்கிலம் அறியாத சுரதா அவருக்கு இணையாக பாடியது என்னை வியப்பில் ஆழ்த்தியது. பூக்கள் என்றால் ”கொட்டாவி விடும் பூக்கள்” என்று கூறுவார்.
நான் மதுரை தியாகராசர் கல்லூரியில் இளங்கலை மாணவனாக படிக்கும் போது அவர் தலைமையில் கவியரங்கம் நிகழ்ந்தது. கண் என்றால் இமைச் சிப்பிக்குள் இருக்கும் “முத்து” என்றும், நெல் என்றால் மஞ்சள் சிப்பிக்குள் இருக்கும் “முத்து” என்றும், கண்ணீர் என்பது ”விழிகளின் வியர்வை” என்றும் பாடினேன்.
”நீ மிகப் பெரிய ஆளாக வருவாய்..!” என வாழ்த்தினார் சுரதா. காதல் சார்ந்த அக இலக்கியம், தலைவன் தலைவி.. பெயரை வெளிப்படையாக கூறக்கூடாது என்பது இலக்கணம். இந்த இலக்கணத்தை மீறிய காரணத்தால் காதல் கவிதையொன்று புறநானூற்றில் சேர்க்கப்பட்டது. இது குறித்து நான் ஒரு கவிதை எழுதினேன்.
“வீர வாள் வசிக்கின்ற வைர உறையில்
ஈர மலர்களை இடுவது போல”
என்று பாடினேன். நீண்ட நாள் கழித்து சந்தித்த போது கூட இந்த வார்த்தைகளை மறக்காதவராக உவமைக்கவிஞர் சுரதா இருந்தார். என்னை ஒரு கவிஞனாக அடையாளம் கண்டவர் சுரதா.
அமீர் அப்பாஸ்:- புதிதாக எழுத வருபவர்கள் முதலில் கவிதையைத் தான் தேர்ந்தெடுக்கிறார்கள். அது ஏன்?
கவிக்கோ:- கவிதை என்பது ஆதிக்கலை. அக்காலத்தில் எல்லா கதைகளும் கருத்துக்களும் கவிதைகளாக மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. செய்யுள் வடிவம் தாண்டி அச்சுக்கலை வந்ததற்கு பின்னால் தான் உரைநடை இலக்கியம் தோன்றியது. ஆகவே தமிழனின் மரபணுக்களில் இயல்பாகவே கவிதை இருக்கிறது.
அமீர் அப்பாஸ் :- உலக இலக்கியம் குறித்த உங்கள் பார்வை.. மற்றும் தங்களின் பன்மொழிப் புலமையைக் குறித்து சொல்லுங்கள்?
கவிக்கோ :- தொடக்க காலத்தில் தாகூர் என்னை மிகவும் பாதித்தார். ஆனால் என் எழுத்துக்களுக்கு மிகவும் தாக்கமாக இருந்தது.. கலீல் ஜிப்ரானின் எழுத்துக்கள். ஆங்கிலக் கவிஞர்களில் ஷெல்லி, கீட்ஸ் போன்றவர்களின் கவிதைகளில் மூழ்கிக் கிடந்தேன். எந்த துறையில் இறங்கினாலும்.. அதன் வேர் வரை சென்று ஆழக் கற்பது, எனக்கு இயல்பாகவே இருந்தது. அதனாலேயே ஆங்கில இலக்கியத்தை மிகவும் விரும்பிப் படித்தேன்.
ஸ்பானிஷ் கவிஞன் பாப்லோ நெருடா, நோபல் பரிசு பெற்ற இலத்தீன் அமெரிக்கக் கவிஞர் ஆக்டோவியா பாஸ், ஜெர்மனி கவிஞர் குண்ட்டர் கிராஸ் என்னை மிகவும் கவர்ந்தவர்கள் ஆவர். உருதுக்கவிஞர் இக்பால், மிர்ஸா காலிப் கவிதைகளில் மூழ்கிக்கிடந்தேன். எனக்கு தாய்மொழி உருது. அதனால் இந்தி கற்பது எனக்கு எளிதாக இருந்தது.
சிறு வயது முதல் குர்ஆன் படிப்பதற்காக அரபி கற்றேன். அதன் பயனாக மஹ்மூத் தர்வேஸ், முத்தனஃபி போன்றோரின் அரபிக்கவிதைகள் படித்தேன். உமர்கய்யாம், ஜலாலுதீன் ரூமி போன்றோரின் கவிதைகளை.. இரசிப்பதற்காக பாரசீகம் கற்றேன். சமஸ்கிருதம் ஒரளவுக்குத் தெரியும்.
அமீர் அப்பாஸ்:- விகடன் போன்ற வெகுஜன இதழ்களில்.. நீங்கள் எழுதிய தொடர்களின் வாயிலாக.. சிறந்த கட்டுரையாளராகவும்.. ஒரு சிறுகதையாளராகவும் சாதித்து இருக்கிறீர்கள். இருந்தும்.. உங்கள் படைப்பாற்றலுக்கு கவிதையை ஏன் தேர்ந்தெடுக்கிறீர்கள்?
கவிக்கோ :- கவிதை தான் என்னை தேர்ந்தெடுத்தது. நான் கவிஞனாக இல்லாமல் வேறு யாராகவும் இருக்க முடியாது.
அமீர் அப்பாஸ்:- திரைப்படத்துறையை ஏன் புறக்கணித்தீர்கள்? ”அம்மி கொத்த சிற்பி எதற்கு” என்பது கர்வம் இல்லையா?
கவிக்கோ :- அந்த கர்வம் தான் மோசமான திரைப்பாடல்களின் பக்கம் என்னைப் போக விடாமல் தடுத்தது. திரைப்படத்துறை பெரும்பாலும் மோசமானவர்கள் கையில் உள்ளது. இன்றைய வணிகச் சூழலுக்கு.. வளைந்து கொடுத்து.. சமரசம் செய்து கொள்ள வேண்டி வரும். இவை யாவும் என் இயல்புக்கு பொருந்தாது.
கண்ணதாசன் காலத்திலேயே பாடல் எழுதுவதற்கான வாய்ப்பு என்னைத் தேடி வந்தது. “தைப்பிறந்தால் வழி பிறக்கும்” என்ற மிகப்பெரிய அன்றைய காலத்தின் வெற்றிப் படத் தயாரிப்பாளர், இயக்குநர் ஏ.கே.வேலன் அவர்கள், நான் படிக்கும் கல்லூரி விழாவிற்கு வந்தார். என் கவிதைகளை விழாமேடையில் கேட்டு இரசித்து.. பாடல் எழுத அழைப்பு விடுத்தார். பின்னாளில் இயக்குநர் மணிரத்னம், பம்பாய் படத்திற்கு வசனம் எழுத அழைத்தார். எல்லா கால கட்டத்திலும் ஒரே மன உறுதியோடு.. வந்த வாய்ப்புக்களை மறுத்து விட்டேன்.
அமீர் அப்பாஸ்: ஒரு காலத்தில் எழுதுவதென்பது மேதைத்தனத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது. தங்கள் ஆளுமையை வெளிப்படுத்துவது என்கிற நிலை மாறி.., தற்போது எழுத்து என்பது சமூகக்கட்டமைப்பை மறுப்பது, எல்லா ஆதிக்கங்களுக்கும் எதிரானது என்கிற நிலை வந்து விட்டது. கவிஞன் என்பவன் யார் பக்கம்? ஆதிக்க சக்திகளுக்கு பின்னால் நிற்பவனா? அடித்தட்டு மக்களின் குரலாய் ஒலிப்பவனா?
கவிக்கோ:- புல்லாங்குழல் இசைக்கிறது. செவி உடையவன் எல்லாரிடத்தும் போய் சேருகிறது. அந்த இசையை இரசிப்பவன் அடிமையாகவும் இருக்கலாம். ஆட்சியாளனாகவும் இருக்கலாம். புல்லாங்குழலின் இசை அனைவருக்கும் பொதுவானது. அது யார் பக்கம்? என்று யாரும் சொல்லமுடியாது.
அமீர் அப்பாஸ்: அப்படியானால் கலை கலைக்காகவா?
கவிக்கோ: சோப் என்ன சோப்பிற்காகவா? குளிப்பதற்காக இல்லையா? பயன்பாடற்ற எதுவும் நிலைக்காது.
அமீர் அப்பாஸ்: திராவிட இயக்கத்தின் கவிஞராக அறியப்பட்டிருக்கிறீர்கள். அதே சமயம் பெரியாரை பின்பற்றிய பாரதிதாசனைப் போல ஒரு நாத்திகனாக இல்லை. ஒரு ஆன்மீகவாதியாக இருக்கிறீர்கள். ஏன் இந்த முரண்பாடு?
கவிக்கோ:- பெரியார் ஒரு வேளை பிறக்காமல் போயிருந்தால் கூட.. நான் ஒரு பகுத்தறிவாதியாகத் தான் இருந்திருப்பேன். என் தந்தையார் மஹதி அவர்கள்.. பெரியாரை மதுரைக்கு அழைத்து பல கூட்டங்கள் நடத்தி இருக்கிறார். பெரியாரின் சமூகச் சீர்திருத்தங்களை மட்டும் உள்வாங்கிக் கொண்டேன். அதே சமயம் கடவுள் நம்பிக்கையை கைவிடவில்லை. சாதி மறுப்பையும் மதவாதத்தால் ஏற்படும் தீமைகளையும் மறுப்பதில் நான் உடன்படுகிறேன். அதற்காக கடவுளை மறுக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை.
அமீர் அப்பாஸ் :- சமூக நலன் கருதி கொள்கைக்காக பாடுவது, தன் எழுச்சியாய் விருப்பங்களைப் பாடுவது, இதில் கவிதையின் இயங்கு தளம் எப்படி இருக்க வேண்டும்?
கவிக்கோ :- படைப்பு என்பது உணர்வு தளத்தில் இயங்க வேண்டும். அதில் போலித்தனத்திற்கு இடம் இருக்கக் கூடாது. கொள்கை, இயல்பாகவே இருப்பவர்கள் அதை கவிதையாக்கிக் கொள்ளலாம். செயற்கையாக வலிந்து பேசக் கூடாது. ” ரோஜாப்பூச்செடியிடம் மிளகாய் காய்த்தால் நல்லாயிருக்கும்..!” என்று எதிர்பார்க்கக் கூடாது. ”மிளகாய்ச் செடியிடம்.. ரோஜாப்பூவை நீ பூத்தால் எவ்வளவு அழகாய் இருக்கும்?” என எதிர்பார்ப்பதைப் போன்றது தான், இயல்பை மீறிய முரண்பாடுகள். இளமைக்காலம் முழுக்க தத்துவ கவிதைகள் எழுதிய நான், என் 65 ஆவது வயதில் தான், முதல் காதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டேன். படைப்பு மனம் இப்படித் தான் இயங்க வேண்டும் என யாரும் கட்டளையிட முடியாது.
அமீர் அப்பாஸ் :- குடும்பம் என்கிற அமைப்பு தான் பெண்ணடிமைத்தனத்தைப் பாதுகாக்கிறது. எனவே, குடும்பம் என்கிற அமைப்பே பெண்களுக்கு எதிரானது... என்று பெண்ணியவாதிகள் கருதுகிறார்கள். நீங்கள் அவர்களின் படைப்புகளை விமர்சிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், தனி மனித வாழ்வு வரைக்கும் விமர்சனம் செய்கிறீர்கள். இது சரியா? திருமணச் சடங்கைப் புறக்கணிப்பதன் மூலமாக சேர்ந்து வாழ்பவர்கள் {Living together} இயல்பாகவே சாதி மறுப்பு, மத அடையாளங்களைப் புறக்கணிப்பது போன்றவற்றில் முற்போக்குவாதிகளாக இருக்கிறார்கள். இவர்களை ஏன் நீங்கள் விமர்சிக்க வேண்டும்?
கவிக்கோ ;- பெண்ணுக்கென்று பல சிறப்பான இயல்புகள் இருக்கின்றன. தாய்மை என்பது இயற்கை அவர்களுக்கு தந்த சிம்மாசனம்..! பிரசவிப்பதற்காகவே பெண்கள், மென்மையாக படைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆணைப் போன்ற கடுமையான உடலமைப்போடு அவள் இருந்தால் பிரசவிக்க இயலாது.
போருக்கு இலக்கணம் வகுத்த பழந்தமிழன், பெண்களை போர் செய்ய அனுமதிக்கக் கூடாது என்கிறான். அதற்குக் காரணம், பெண்கள் வீரமற்றவர்கள் என்ற அர்த்தத்தினால் அல்ல. போர் செய்யும்போது, பெண்கள் எதிர்ப்படையால் பிடிபட நேர்ந்தால்.. பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவார்கள். இதனைத் தவிர்ப்பதற்காகவே போரில் பெண்கள் ஈடுபடக் கூடாது... என்று பழந்தமிழ் மரபு அவர்களைத் தடுத்திருக்கிறது.
கூடி வாழ்தல் என்கிற நிலையில் இருந்த மனிதன், குடும்பம் என்கிற அமைப்பிற்குள் வருவதற்கு பல நூற்றாண்டுகள் ஆகியிருக்கின்றன. முல்லை நிலத்தில் தான் இந்த குடும்ப அமைப்பு வந்ததாக இலக்கிய வரலாறு கூறுகிறது.
கற்பு எனப்படுவது ஒரு பெண் இவருடன் வாழ்கிறேன் என்று தானே கற்பித்துக் கொள்வதில் இருந்து உருவாகியது. குடும்பம் என்கிற அமைப்பை கற்பித்தல் என்கிற சூழலில் தான், கற்பு என்கிற சொல்லாடல் பிறந்ததாகக் கூறப்படுகிறது. குடும்பம் என்கிற அமைப்பில் இல்லாமல் நாடோடிக் குழுக்களாய் அலைந்து இன்பம் துய்ப்பதால், முறை கெட்டு அழிந்து போன மனித இனங்கள் உண்டு. அதை அங்கீகரிக்க இயலாது.
விவாகம் என்கிற சமஸ்கிருத சொல் கூட பெண்ணைத் தன் விருப்பத்திற்கு தூக்கிச் செல்வது என்பதிலிருந்து தான் தோன்றியது. தாய்-தந்தையர் சம்மதித்தால் மண முடிப்பது அல்லது உடன்போக்கு என்று சொல்லப்படுகிற மரபு, தமிழ்ச் சமூகத்தில் இருந்திருக்கிறது. காட்டுமிராண்டி கால வழக்கத்தை மீட்டெடுப்பது ஒரு போதும் நவீனமாகாது. இதனை ஆதரிப்பவர்கள் நான் அறிந்த வரை.. நடைமுறை வாழ்வில் மனச்சிதைவுக்கு ஆளானவர்கள் என்று உணர்கிறேன்.
அமீர் அப்பாஸ் :- தமிழக முதல்வர் கலைஞரின் நண்பராகவும், அவரது கவியரங்கத்தில் பாடுபவராகவும் இருந்த நீங்கள், யாரும் எதிர்பாராத சூழலில் வக்பு வாரியத் தலைவராகப் பொறுப்பேற்று இருக்கிறீர்கள்..! இதன் பிண்ணனி என்ன? பதவி ஆசை, உங்களையும் விட்டு வைக்கவில்லையா?
கவிக்கோ :- பதவியை நான் ஒரு போதும் விரும்பியவன் இல்லை. விரும்பியிருந்தால் 1967 கால கட்டத்தில் இருந்து நான் அமைச்சராக இருந்திருப்பேன். மூன்று முறை தேர்தலில் போட்டியிட தேடி வந்த வாய்ப்புக்களை மறுத்திருக்கிறேன். துணை வேந்தர் பொறுப்பையும் வேண்டாம் என மறுத்திருக்கிறேன். ஆனால், இந்த சூழலில் மட்டும் வக்பு வாரியத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டேன். ஏனெனில், இஸ்லாமிய சமூகம் மிகவும் பின்தங்கிய மோசமான இக்கால கட்டத்தில் கவிஞனாக மட்டுமே ஒதுங்கிக் கொள்ள விருப்பம் இல்லை. மொத்தம் 13 சதவீதம் இஸ்லாமியர்களில் 11 சதவீதம் பேர், தலித்துக்களை விடவும் பின்தங்கிய நிலையில் கல்வி அறிவற்று, வறுமை நிலையில் அடித்தட்டு மக்களாக ஒடுக்கப்பட்டுள்ளனர். மீதமிருக்கிற 2 சதவீதம் பேர் வசதியான வணிகச்சூழலில் இருக்கின்றனர். அவர்களை முன்னிறுத்தி 11 சதவீதம் பேரின் அவலம் பேசப்படவே இல்லை. இதை என்னால் ஆன வரை மாற்றும் முயற்சியே இந்த முள்கிரீடம்.
நேர்காணல்: அமீர் அப்பாஸ் ( jibran.abb@gmail.com)
(நன்றி: “கிழக்கு வாசல் உதயம்” இலக்கிய மாத இதழ்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக